"அடுத்த பொங்கலுக்கு உயிரோட இருக்க மாட்ட", "அடுத்த தீபாவளிக்குள்ள உனக்கு கைகால் விளங்காம போயிடும்" - கிராமங்களில் பண்டிகை நாட்களில் சண்டை போட்டுக்கொண்டால் இப்படித் திட்டிக கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம் குறித்து இப்போதே யோசிப்பதும் கடந்த ஆண்டுகளில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை அசைபோடுவதும்கூட பண்டிகைக் கொண்டாட்டங்களின் பகுதியாகவே இருக்கிறது. தீபாவளியின் போது கடந்த ஆண்டு சொதப்பிய மைசூர் பாகோ, கை முறுக்கோ, பொங்கல் அன்று சென்ற வருடம் நடந்த ஏதாவது ஒரு சின்ன சண்டையோ பேசுபொருளாக இருக்கும். புத்தாண்டு தினமும் கடந்த வருட நினைவுகளும் புதுவருடத் தீர்மானங்களுமாகக் கழியும்.
டிடியில் 'இளமை இதோ இதோ'வில் தான் புத்தாண்டு பிறக்கும். 'Wish You Happy New Year' என்று முதல் வரி மட்டும் வைத்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்துக்கு 'சகலகலா வல்லவனை'ப் பற்றிப் பாடும் அந்த பாடல் எப்படி இத்தனை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து ஒலிக்கிறது என ஆச்சரியமாக இருக்கும்.
கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம். அப்படியே ஒரு இரண்டு மூன்று மணி நேரம் ஆடிவிட்டு மொத்தமாக ஒரு குளியலைப் போட்டு மீண்டும் 'ஏதாவது' ஒரு பட்த்தைப் பார்த்து புது வருடத்தை வரவேற்போம்.
புத்தாண்டு சீசனில் கடைகளில் விழாக்கால சலுகைகள் மட்டுமில்லாமல் ஓட்டல்களிலும் பஃபே வைப்பார்கள். அங்கும் போய் நம் கைவரிசையைக் காட்டாவிட்டால் எப்படி? கல்லூரிக்கு பக்கத்திலேயே 'ஆர்த்தி ட்ரைவ் இன்' என்று ஒரு ரெஸ்டாரெண்ட். எவனாவது ட்ரீட் கொடுத்தால் மட்டுமே அங்கு செல்வோம். சாதாரண நாட்களில் அந்த ஓட்டலுக்கு எதிரில் இருக்கும் பரோட்டா கடையை அட்டாக் செய்வோம்.
எங்களைப் பற்றித் தெரியாமல் ஒரு புதுவருட சீசனில் அந்த ஓட்டலில் பஃபே வைத்தார்கள். அதுவும் 80 ரூபாய்க்கு. விடுவோமா? முதலில் ஆறு பேர் போனோம். நாங்க ஆரம்பிக்கும்போதே இன்னும் ஏழெட்டு பசங்க வந்தாங்க. சூப் குடிச்சு முடிக்கும்போது கிட்டத்தட்ட 20 பசங்க. அப்படியே வரிசையா சூப், இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், பட்டர் நான், நூடுல்ஸ், தயிர்சாதம், ரெண்டு மூனு ஸ்வீட்டுன்னு டேபிள்ல வரிசையா வச்சிருந்ததை உள்ள தள்ளிக்கிட்டே வந்தோம்.
ஒரு மணி நேரத்துக்கு மேல நாங்க கஷ்டப்பட்டு கடமையை ஆத்திக்கிட்டிருந்தா பக்கத்துல ஒரு பேமிலி ஆளுக்கு ரெண்டு இட்லி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்காங்க. 'ரெண்டு இட்லி சாப்பிட இவிங்க எதுக்குடா பஃபேக்கு வராங்க'ன்னு சொல்லிகிட்டே அவங்க ப்ளேட்டை தட்டிவிடப் போன நண்பனை அவன் வாயில ஒரு முழு இட்லியை அடைச்சு இந்த பக்கம் கூட்டிட்டு வந்தோம். அங்க இன்னொரு உயிர்காப்பான் கைல ப்ளேட்டோட சின்ன பசங்க விளையாட வச்சிருந்த ஊஞ்சல்ல ஆடிட்டிருந்தான். கேட்டா ஆடி ஆடி கொஞ்சம் ஜீரணமாக்கி வயித்துல இடம் சேமிக்கறானாம்.இப்படியாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாம சேர்த்துவச்சு சாப்பிட்டோம்.
எல்லாருக்கும் சாப்பிட்டு போரடிக்கவே ஐஸ்க்ரீம் பக்கம் போனோம். வென்னிலா ப்ளேவர் எனக்கு புடிக்காதுன்றதால மூனே ரவுண்டுல நிறுத்திடலாம்னு மூனாவது தடவை வாங்கப் போனா கொடுக்க முடியாதுன்னுட்டான். வந்துச்சே எங்களுக்கு கோவம். 'பஃபே'ன்னா எல்லாம் அன்லிமிட்டட் தானே ஏன் கொடுக்க முடியாதுன்னு தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அவன் 'மத்ததெல்லாம் அன்லிமிட்டட்..ஆனா ஐஸ்க்ரீம் ஒரு தடவை தான்'ன்னு பதில் சொல்றான். 'அப்ப அதை போர்ட்ல போட வேண்டியது தானே...இது தெரிஞ்சா நாங்க வந்தே இருக்க மாட்டோம்'னு டயலாக். உடனே அந்தாளு போய் அங்க வச்சிருந்த போர்ட்ல் ஐஸ்கீரிம்க்கு நேரா '50 கி'ன்னு கிறுக்கிட்டு வந்துட்டான்.
ஐஸ்க்ரீம் கொடுக்காத கோவத்தை அங்க பதிவு செஞ்சே ஆகனும். என்ன பண்ணலாம்னு யோசிச்சா எதிர்ல சூப்பு கப்பு வாயைப் பொளந்துட்டு இருக்கு. இன்னைக்கு இவனுங்களை விடறதில்லன்னு ஆளுக்கு ஒரு கப்பை எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு கப் சூப்பை அடிச்சா மத்தவங்களெல்லாம் பக்கத்துல வரவே பயந்துபோய் எங்களைப் பார்க்கறாங்க. அந்த பயம் இருக்கட்டும்னு அந்த சூப்போட பஃபேயை முடிச்சுட்டு ஓட்டல்காரங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி அவங்க அடிக்க வரதுக்கும் முன்னாடி எஸ்கேப் ஆனோம்.
இப்படி ஒவ்வொரு புதுவருஷத்துக்கும் பண்டிகை நாட்களுக்கும் அசைபோட ஏதாவது ஒரு விஷயம் இருந்துட்டுதான் இருக்கு.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! ;)
கொசுவத்தி & வாழ்த்துக்கள்
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை, பொது
மாண்டி'வீடியோ'
ஆரம்பிச்சுட்டாங்கய்யா. இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க. டிசம்பர் 8-ம் தேதி 'La Noche de las Luces'-ன்ற பேர்ல ஒளி இரவு நடத்தினாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு வான வேடிக்கை. இந்த நிகழ்ச்சிதான் இவங்க கோடைக்கால கொண்டாட்டங்களுக்குத் துவக்கமாம். கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள்(இந்த ஊர் மக்கள்தொகையில் மூன்றிுல ஒரு பங்கு) பீச்சை நிரப்பிட்டாங்க. இரவு 10 மணிக்கு நடந்த இந்த ஒளிவிருந்துக்கு மதியம் 2 மணியில் இருந்தே பீச்சில் மக்கள் குவிய ஆரம்பிச்சாச்சு. மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டுக் கிடந்தாங்க.
சும்மாவே இப்படி பட்டையைக் கிளப்பறாங்களே கிறிஸ்துமஸுக்கும் இப்படி தூள் கிளப்புவாங்கன்னு பார்த்தா ஏமாற்றமா போயிடுச்சு. நள்ளிரவு 12 மணிக்கு வெடி வெடிச்சாங்க. ஊர் முழுக்க எல்லாரும் ஒரே நேரத்துல ராக்கெட் விட்றது பத்தாவது மாடில இருந்து பார்க்க வண்ணமயமா அருமையா இருந்தது. ஆனா அவ்வளவுதான் இவங்க கிறிஸ்துமஸ் போல. கிறிஸ்துமஸ் அன்னைக்கு தெருவில ஒரு ஈ,காக்கா இல்ல. பொதுவா லீவ் நாளாச்சுன்னா பீச்சுக்கு வந்து வெயில்ல படுத்து கிடக்கற கூட்டத்தையும் காணோம். சினிமா தியேட்டரல் கூட நேத்து ராத்திரி ஷோ மட்டும்தான் ஓட்டினாங்க. இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே :))
ஒளி இரவு வீடியோ:
கப்பி | Kappi 5 பின்னூட்டங்கள்
மூன்று
Final Cut:
தற்செயலாகத் தொலைக்காட்சியில் பார்த்த திரைப்படம். சற்றும் எதிர்பாராத கதைக்களம் ஆரம்பத்திலேயே ஆவலை அதிகப்படுத்துகிறது. கதாநாயகன் ஜூட் இறந்துவிட அவரின் இறுதிச்சடங்குகளுக்காக கூடியிருக்கும் நண்பர்களுக்கு ஜூட்டின் மனைவி, ஜூட்டின் கடைசி ஆசை எனக் கூறி, ஒரு விடியோவைத் திரையிடுகிறார். ஜூட் இரண்டு வருடங்களாக தன் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொறுத்தி தன் நண்பர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியாமல் படம்பிடித்து வைத்திருக்கிறார், காண்டிட் கேமரா நிகழ்ச்சி போல். நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அடுத்தவரைப் பற்றி புறம் கூறியவை, கள்ளத் தொடர்புகள், போதை பழக்கங்கள் என அவர்களுடைய ரகசியங்கள் அம்பலமாகின்றன. ஒவ்வொருவரைப் பற்றிய காட்சிகள் வரும்போதும் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் விவாதங்களுமாக படம் நகர்கின்றது.
இறுதியில் ஜூட் இறந்ததற்கான காரணமும் அந்த வீடியோவின் மூலமாக வெளிவர அவரின் மரணத்திற்குக் காரணமானவரை கைது செய்வதோடு படம் முடிகின்றது. அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருப்பதையும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளையும் படம்பிடிக்கும் காமிராவை நோக்கி கதாப்பாத்திரங்கள் கோபத்தில் கத்துவது நல்ல காமெடி.
ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியம் அம்பலமாகும்போதும் மற்றவர்களின் ரியாக்ஷனும் குற்றம் சுமத்துபவர் அதை நியாயப்படுத்துவதும் சுவாரசியம். ஆனால் படம் முழுக்க இதே தான் எனும்போது சிறிது சலிப்பு ஏற்படுகிறது. வித்தியாசமான முயற்சி. ஒருமுறை பார்க்கலாம்.
El viaje hacia el mar(Seawards Journey):
கடலை நோக்கிப் பயணம். உருகுவேயின் லவஷேஹா(Lavalleja) மாவட்டத்திலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கடலைக் காண்பதற்காக கதாபாத்திரங்கள் பயணிப்பதே கதை. இவர்களைக் கூட்டிச் செல்பவரைத் தவிர வேறு யாரும் அதுவரைக் கடலைப் பார்த்தது கிடையாது. ஐந்து பேரின் பயணத்தில் அவர்களுக்கு அறிமுகமில்லாத அன்னியன் ஒருவரும் இனைந்துகொள்கிறார்.
மிகவும் மெதுவாக நகரும் படம். மிகப் பழைய வேன் மணல் சாலைகளில் ஓடும் வேகத்திலேயே படமும் நகர்கிறது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், வாழ்க்கையை வெறுத்து சாவிற்காகக் காத்திருக்கும் முதியவர், நடப்பது நடக்கட்டும் என எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு முதியவர், இவர்களை கடல் பார்க்க அழைத்துச் செல்வதே வீண் என நினைக்கும் ஓட்டுனரின் நண்பர், தற்செயலாக இவர்களுடன் பயணம் செய்யும் இளைஞன் என படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்.
இதற்கு முன் பார்த்த உருகுவே திரைப்படங்களை(Whisky,25 Watts) விட தொழில்நுட்ப ரீதியில் வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. ஆனால் திரைக்கதையின் வேகம் நம்மை சலிப்படையச் செய்கிறது. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனங்கள் அடுத்து ஏதாவது சுவாரஸ்யமாக நடக்குமென எதிர்பார்க்க வைத்தாலும் கடைசிவரை அதே வேகத்தில் படம் நகர்கிறது.
கடலைச் சென்றடைந்ததும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடலை ஒவ்வொரு விதத்தில் உருவகிப்பதோடு படம் முடிகின்றது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரசியமான திரைப்படமாக வந்திருக்கும். உருகுவேயின் நிலப்பரப்பைப் பார்க்க வேண்டுமானால் இந்த படத்தைப் பார்க்கலாம்.
Misdemeanor:
பதினைந்து நிமிடக் குறும்படம். இதுவும் தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்த்தது. பசியில் தவிக்கும் ஒரு ஏழை இளம்பெண் திருட எத்தனிக்கிறாள். ஆனால் ஒவ்வொருமுறை அவள் திருட முயலும்போதும் அவளுடைய உள்ளுணர்வு தடுக்கிறது. சூப்பர் மார்கெட்டில் திருட முயல்கிறாள். அதே கடையின் முதலாளி பூங்காவில் தன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திருட முயல்கிறாள். இறுதியில் திருடக்கூடாது என முடிவெடுத்துத் திருந்துவதாய் பதினைந்து நிமிடத்தில் அழகான சிறுகதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.
வசனம் எதுவுமில்லாமல் காட்சியமைப்புக்கு ஏற்றவாறான பின்னணி இசையுடன் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். பதினைந்து நிமிடங்களில் படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களும் மிக்ச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். சமயத்திற்கு ஏற்றவாறு மாறும் மனித இயல்பை அருமையான குறும்படமாக சொல்லியிருக்கிறார்கள்.
கப்பி | Kappi 28 பின்னூட்டங்கள்
வகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா
கால் போன போக்கில்
யார் அந்த டினா?
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery
ஏதாவது வெளியூருக்குச் சென்றுவந்தால் திரும்பிவந்ததுமே அம்மாவை உட்காரவைத்து பஸ் ஏறியதிலிருந்து வீட்டிற்கு திரும்பியதுவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வது என் அப்பாவின் வழக்கம். பல சமயங்களில் எனக்கு இது எரிச்சல் ஊட்டினாலும் ஒவ்வொரு முறையும் அவர் விரிவாக எல்லாவற்றையும் சொல்வது ஆச்சரியமாக இருக்கும். நானோ முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துவிடுவேன். அவராக ஒன்றுவிடாமல் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார். இப்போது பொய்னொஸ் ஐரிஸ் பயணம் குறித்து மூன்று பகுதிகளாக பதித்துக் கொண்டிருக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.
ரிகொலெதா கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த பூங்காவில் மேப்பை விரித்து உட்கார்ந்தேன். குறிப்பாக எந்த இடத்திற்கும் செல்லும் திட்டமில்லை. அங்கிருந்த சாலையோரக் கடைகளை வேடிக்கைப் பார்த்துவிட்டு சுரங்க ரயிலில் பயணம் செய்து பார்க்கலாமென முடிவெடுத்துக் கிளம்பினேன்.
பொய்னொஸ் ஐரிஸில் பெரும்பாலான பகுதிகளில் தெருவோரக் கடைகள் நிறைந்திருக்கின்றன்ன. கைவினைப் பொருட்களும், மலிவான விலையில் துணிகளும் கிடைக்கின்றன. டேங்கோ நடனமாடுவது போல் சிறு சிலைகளும், அந்த நடனத்திற்கேற்ற ஆடைகளும், இசைத் தட்டுகளும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சில கடைக்காரர்கள் கிடார் வாசித்துக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள்.
மத்திய நூலகம், பல்கலைக்கழக கட்டிடங்கள், கட்டிடக்கலை கண்காட்சியகம் ஆகியன இருந்த சாலையின் வழியாக நடந்து சாண்டா ஃபே (Santa Fe) அவென்யூவிற்கு வந்தேன். இந்த தெரு முழுதும் துணிக்கடைகள்தான். அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா ஃபே மாகாணம் சே குவேரா பிறந்த மாகாணம் என்று எங்கோ படித்த நினைவு.
சாண்டா ஃபேயில் இருந்த ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் நுழைந்தேன். 'Subte' என்றழைக்க்கப்படும் சுரங்க ரயில் பாதைகள் 1913-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் எங்கே வாங்குவதென்று தெரியாமல் அருகிலிருந்தவரிடம் கேட்க, அவர் நான் எந்த பக்கம் ரயில் போகும் எனக் கேட்டதாக நினைத்துக்கொண்டு ரயில் செல்லும் திசையைக் காட்டினார். எதிர்ப்புற நடைமேடையில் சில கடைகள் இருந்ததால் அங்கு சென்று விசாரித்தேன். நான் கேட்ட கடையிலேயே டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
ரயிலில் திடீரென்று ஒருவர் சிறிய கிருஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துச் சென்றார். நான் வேண்டாமென சொல்வதற்கு முன் என் கையில் திணித்துவிட என்ன செய்வதென சுற்றும் முற்றும் பார்க்க, அடுத்த நிறுத்தத்தில் அவரே மீண்டும் வந்து வாங்கிச் சென்றார். ஓரிருவர் அந்த பொம்மைகளை காசு கொடுத்து வாங்கினர். மாண்டிவிடியோவிலும் பேருந்துகளில் மிட்டாய்களும், புத்தகங்களும் விற்கிறார்கள், நம்மூரைப் போலவே.
அங்கிருந்து ப்ளாசா இத்தாலியா (Plaza Italia) என்ற ரயில் நிலையம் வரை சென்றேன். அங்கு ஒரு தாவரவியல் பூங்கா இருந்ததை வரைபடத்தில் பார்த்து வைத்திருந்தேன். அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ப்ளாசா இத்தாலியாவை அடைந்தேன். அங்கு உயிரியல் பூங்காவும் தாவரவியல் பூங்காவும் அருகருகில் உள்ளன. நான் தாவரவியல் பூங்காவில் சிறிது நேரம் அமரலாம் என உள்ளே சென்றேன். அமைதியான அந்த பூங்காவில் அமர்ந்து கையோடு எடுத்துச் சென்றிருந்த 'The Green Mile' நாவலை சிறிது நேரம் வாசித்தேன். அருகிலிருந்த மைதானத்தில் ஏதோ கண்காட்சி நடந்துகொண்டிருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் சுரங்க ரயில் மூலமாக நகரின் மையப் பகுதிக்கு வந்தேன். ரயிலில் ஒரு பெண்மணியும் அவரின் மகனும் ஸ்டிக்கர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
மீண்டும் லவாஷே(Lavalle), ப்ளோரிடா(Florida) வீதிகளில் நடந்து, மெக்டொனால்ட்ஸில் பசியாற்றி பொழுது கழிந்தது. பொய்னொஸ் ஐரிஸ் சாலைகளில் பல்வேறு இன மக்களைக் காண முடிகிறது. காவல் துறையினரும் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் இருக்கின்றனர்.
மழைமேகம் திரண்டதால் விரைவாகத் துறைமுகம் சென்றடைந்தேன். அங்கு ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாண்டிவிடியோ நோக்கிப் பயணம். இரவு நேரமானாதாலோ என்னவோ கடலில் அலைகள் பெரிதாக இருந்ததால் கப்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.ஒருவேளை பின்னால் உட்கார்ந்ததால் தான் அதிகமாக ஆடுகிறதோ என்று பார்த்த்தால் முன்னால் இருப்பவர்களும் தள்ளாடியபடிதான் இருந்தனர். கலோனியா வந்தடைந்ததும் இரண்டு மணி நேரப் பேருந்துப்பயணத்தில் மாண்டிவிடியோ.
இயற்கை எழில் கொஞ்சும் தென்னமெரிக்க நிலப்பரப்புகளைத் திரைப்படங்களிலும் இணையத்திலும் பார்த்து, படித்து இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டுமென ஆவலாய் இருக்கிறது. பார்ப்போம்.
கப்பி | Kappi 15 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பயணம்
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery
யார் அந்த டினா?
"நான் இதுவரை இப்படியொரு கல்லறைத் தோட்டத்தைப் பார்த்ததில்லை. மின்னசோட்டாவிலுள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் பெரிய கல்லறைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கல்லறைகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். நேற்று மாலை முழுக்க நான் அங்குதான் செலவழித்தேன்" - நகரச் சுற்றுலா முடிந்து ஓட்டலுக்குள் நுழையும்போது மில்லர் என்ற சக அமெரிக்கப் பயணி ரிகொலெதா கல்லறைத் தோட்டத்தைப்(Recoleta Cemetery) பற்றி சொன்னார். நகரின் வரைபடத்தில் வழி காட்டியதுடன் பேருந்து தடத்தையும் தந்தார். அடுத்த நாளுக்கு முதல் இலக்காக அந்த கல்லறைத் தோட்டத்தை வைத்துக்கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க மீண்டும் நகரைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.
பொய்னொஸ் ஐரிஸில் இந்திய உணவகம் இருப்பதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். முகவரி எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும் சிலவற்றை மறந்துவிட்டு பின்னர் நொந்துகொள்வது எல்லாப் பயணங்களிலும் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஓட்டல் வரவேற்பாளரிடம் கேட்டதற்கு ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் அது பிட்ஸா கடை(Pizzeria) தான். அவருக்கு என்ன புரிந்ததோ, ஏதோ ஒரு உணவகத்திற்கு வழி காண்பித்துவிட்டார். நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்திய உணவகத்தின் முகவரி கேட்கும் அளவு வாய்க்கு பசி எடுக்காததால் அங்கேயே வயிற்றுப் பசியைத் தணித்துக்கொண்டு மீண்டும் கொர்ரியெந்தெஸ் அவென்யூவில் நடக்க ஆரம்பித்தேன்.
கொர்ரியெந்தெஸ் அவென்யூ முழுக்க சினிமா, நாடக அரங்கங்களும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான அரங்குகளில் நகைச்சுவை நாடகங்கள்தான் நடக்கின்றன. இளம்பெண்கள் கோமாளிகள் போல் வேடமனிந்து பாதசாரிகளை நாடகம் பார்க்க அழைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் எல்லா அரங்க வாசல்களிலும் கூட்டமிருந்தது. சனிக்கிழமை இரவு என்பதும் காரணமாக இருக்கலாம்.
புத்தக கடைகளில் ஸ்பானிஷ் புத்தகங்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டனின் சில நாவல்களும் வேறு சில நாவலாசிரியர்களின் ஃபிக்சன் நாவல்களுமே கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கிடைக்குமென தேடிச்சென்ற எனக்கு ஏமாற்றம்.
அங்கிருந்து லவாஷே(Lavalle) என்ற தெருவிற்கு வந்தேன். இதுவும் ப்ளோரிடா தெருவைப் போலவே வணிக வளாகங்களும் திரையரங்குகளும் நிறைந்த தெரு. இந்த தெருவில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு தென்னிந்திய முகம் தெரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவரின் மனைவி கடையில் இருந்து வெளியே வர எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசலாமா என்ற யோசித்தபடியே அவர்களை நோக்கி நடக்கையில் வேறு ஏதோ கடைக்குள் சென்று கண்ணில் இருந்து மறைந்துவிட்டார்கள்.
இவ்வாறு கடைகளையும் சாலைகளையும் மக்களையும் வேடிக்கைப் பார்த்தவாறே இரவு பதினொரு மணி வரை நடந்துகொண்டிருந்தேன். சிறிது உடல் அயற்சி ஏற்பட்டதால் ஓட்டலுக்குத் திரும்பினேன்.
வெள்ளிக்கிழமை இரவு பொய்னொஸ் ஐரிஸில் ஷகிராவின் இசை நிகழ்ச்சி இருந்திருக்கிறது. ஒரு நாள் முன்னதாகச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம். சாலையோர பேனர்களிலும் , எப்.எம் ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஷகிராவின் ராஜ்ஜியம். தொலைக்காட்சியில் சிறிது நேரம் ஷகிராவின் இசைநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்குத் தயாரானேன்.
காலையில் தூங்கி எழுந்ததும் சிற்றுண்டி அருந்திவிட்டு ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ரிகொலெதா கல்லறைத் தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
உலகின் புகழ்பெற்ற கல்லறைத் தோட்டங்களில் ஒன்றான ரிகொலெதா கல்லறைத் தோட்டம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அர்ஜெண்டின அதிபர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் எனப் பலரின் கல்லறைக் கோபுரங்கள்(Mausoleum) அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு கோபுரமும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் ஆன பலகையில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் இறந்த நாள் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை.
சில கல்லறைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெருக்களைப் போல் அகலமான இடைவெளிகள் விட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன.
கல்லறைத் தோட்டத்தினுள் பூனைகள் அதிகமாக உலாவுகின்றன.
கல்லறைத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்ததும்....அடுத்த பதிவில்.
கப்பி | Kappi 15 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பயணம்
யார் அந்த டினா?
உருகுவே வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்க விடாத விசா விதிமுறைகள். ஆறு மாதம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால் அன்று மாலையே திரும்பிவந்தாலும் பரவாயில்லை. இப்படியான விதிமுறைகளின் ஓட்டைகள் வழியே சென்ற வாரம் அர்ஜென்டினா தலைநகர் பொய்னொஸ் ஐரிஸ்(Buenos Aires) பயணம்.
மாண்டிவிடியோவில் இருந்து விமானத்தில் சென்றால் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்பே லேண்ட் ஆகும் தூரம் தான். நான் சென்றது கப்பலில். மாண்டிவிடியோவில் இருந்து கலோனியா என்ற ஊர் வரை இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். கலோனியா வெள்ளி ஆற்றின்(Rio de La Plata) கரையில் இருக்கும் உருகுவேயின் மிகப் பழமையான நகரம். ஆற்றின் அந்தப் பக்கம் அர்ஜெண்டினா. 'Rio de La Plata' உருகுவே ஆறும்(Uruguay River) பரானா ஆறும்(Paraná River) இணைந்து உருவான கயவாய். கலோனியா பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக.
கலோனியாவில் இருந்து 'Buquebus' என்றழைக்கப்படும் கப்பல்வழிப் பயணம். பயணத்தின்போது மேல்தளத்திற்கு செல்ல அனுமதி இல்லை. முதலிலேயே கப்பலில் ஏறிவிட்டதால் ஜன்னலோர சீட்டைப் பிடித்து கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்க்க முடிந்தது. கடல் காற்றை அனுபவிக்க முடியவில்லை.
இமிக்ரேஷன் வேலைகளெல்லாம் கப்பலில் ஏறுவதற்கு முன் கலோனியாவிலேயே முடித்து அனுப்பிவிட்டதால் டாக்ஸியைப் பிடித்து ஓட்டலுக்குச் சென்றேன். செக்-இன் செய்துவிட்டு நகரை சுற்றிப் பார்க்க ஏதேனும் சிட்டி டூர் சேவை இருக்கிறதா என ஓட்டலில் கேட்டதற்கு இரண்டு மணிக்கு நேரம் குறித்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரம் எதற்கு ஓட்டல் அறையில் வெட்டியாக இருக்க வேண்டுமென ரிசப்ஷனில் வைக்கப்பட்டிருந்த ஓசி மேப்பை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன்.
முதலில் கண்ணில் பட்டது ஓபெலிஸ்க் கோபுரம்(The Obelisk). உலகின் மிக அகலமான சாலையான ஜூலை 9 சாலையின்(Nueve de Julio) நடுவிலுள்ள 220 அடி கோபுரம். நான்கு வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டதாக விக்கி சொல்கிறது. அந்த தெரு முனையில் இருந்த மெக்டொனால்ட்ஸில் 'Sin carne, sin pollo' என்று அரைகுறை ஸ்பானிஷில் பேசி ஒரு பர்கர் வாங்கி வயிற்றை நிரப்பிக்கொண்டு அந்த சாலையின் அடுத்த முனைக்கு நடக்க ஆரம்பித்தேன்.
கொர்ரியென்தெஸ் அவென்யூ(Corrientes Avenue) வழியாக ப்ளோரிடா தெருவை(Florida Street) அடைந்தேன். ப்ளோரிடா தெரு பொய்னொஸ் ஐரிஸ் நகரத்தின் பழமையான தெருக்களில் ஒன்று. நகரின் பழமையான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன. இப்போது முழுக்க முழுக்க வணிக வளாகங்களும் சிறு கடைகளும், தெருவோர இசை,ஓவியக் கலைஞர்களுமாக எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கிறது. ஒரு கலைஞர் மிகவும் இனிமையாக புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் நின்று கேட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.
ப்ளோரிடா தெருவில் இருந்து மே சதுக்கம்(Plaza de Mayo) நோக்கி நடந்தபோது மணி ஒன்றே கால் ஆகிவிட்டிருந்தது. இரண்டு மணிக்கு ஓட்டலில் இருக்க வேண்டுமென்பதால் ஓட்டல் நோக்கி நடந்தேன்.
சரியாக இரண்டு மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டலில் இருந்து ஒவ்வொரு ஓட்டலாக சென்று காத்திருந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்ப அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. முதல் நிறுத்தம் நான் விட்ட இடத்திலேயே. மே சதுக்கம்.
இங்கிருக்கும் காஸா ரோசாதா(Casa Rosada) என்றழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அர்ஜெண்டின அதிபரின் அலுவலகம் இருக்கிறது. அதன் அருகில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கதீட்ரல் தேவாலயமும் உள்ளது.
அன்று அங்கு ஊர்வலம் ஏதோ இருந்ததால் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அங்கிருந்த் கிளம்பிவிட்டோம். அங்கிருந்து நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற தெருக்களின் வழியாக தெற்குப்பகுதிக்கு வந்தோம்.
அடுத்த நிறுத்தம் லா போகா(La Boca). போகா ஜூனியர்ஸ்(Boca Juniors) என்ற புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியின் குகை. டேங்கோ நடனக் கலைஞர்களும் ஓவியர்களும் பெருமளவில் வாழும் பகுதி.
பெரும்பாலான வீடுகள் அருகிலுள்ள துறைமுகங்களில் இருந்து கப்பல்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்புத் தகரங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் பத்து குடும்பங்கள் வரை ஒன்றாக சேர்ந்து வசிப்பார்களாம். வீட்டுச் சுவர்களில் ஓவியங்களும் , பல நாட்டு தேசியக் கொடிகளும் வரையப்பட்டு வண்ணமயமாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு பலகணியிலும் சுண்ணாம்பினால் செய்த பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்.
அங்குள்ள கமினிதோ(Caminito) என்ற தெரு புகழ்பெற்றது. டேங்கோ நடன அரங்கங்கள் நிறைந்த தெரு. கைவினைப் பொருட்களும் ஓவியங்களும் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. நகரின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.
கமினிதோ தெருவை படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது டேங்கோ நடனக் காஸ்ட்யூமில் குறுக்கே வந்த ஒரு பெண் மூன்று அர்ஜெண்டினோ பீசோ(1 அமெரிக்க டாலர்) கொடுத்தால் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றபடி வந்தார். நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர அவருடன் இருந்த மற்ற டேங்கோ கலைஞர்களிடம் ஸ்பானிஷில் ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்தார். அவர்கள் சொன்னது புரியவில்லை என்று நான் கேட்டதும் அவர் விளக்க அதுவும் புரியாமல் மையமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.
அங்கிருந்து நகரின் வடக்குப் பகுதியிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும், தெருக்களையும், பூங்காக்களையும் காட்டிவிட்டு ஏழு மணிக்கு ஓட்டலில் இறக்கிவிட்டனர்.
அரை மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அன்றைய இரவு குறித்தும் ரிகொலெதா கல்லறைத் தோட்டம்(Recoleta Cemetery) குறித்தும் அடுத்த பதிவில்.
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பயணம்
பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
சினிமாவில் ஆசிரியர்களாக நடிக்கும் கதாநாயகர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போதோ கெட்ட மாணவனை அடித்து திருத்தும்போதோ விடும் டயலாக் 'நானும் ஒரு காலத்துல ஸ்டூடண்ட் தான்'. அதே மாதிரி நேத்து குழந்தைகள் தினம்னு ஞாபகம் வந்ததும் 'நானும் ஒரு காலத்துல குழந்தைதான்'ன்னு பஞ்ச் டயலாக் தோன்றியது. இப்பவும் மனசால குழந்தைதான் என்ற உண்மையை சொன்னா அடிக்க வருவீங்க. என்னை பெத்தவங்களே 'இன்னும் நீ திருந்தலையா?'ன்னு பாவமா பார்ப்பாங்க. அதனால அந்த உண்மையை மனசுக்குள்ள பொத்தி வச்சிகிட்டு இந்த பிஞ்சு மனசுல பதிஞ்ச பசுமரத்தாணிகள் சில:
* இரண்டாவது படிக்கும் போது எங்க சி செக்சனுக்கும் ஏ செக்சனுக்கும் லஞ்ச் பிரேக்ல சண்டை நடக்கும். எங்க க்ரூப்புக்கு ஞானசம்பந்தம்ன்ற குட்டையன் தான் லீடர். ரெண்டாவது படிக்கும்போது எல்லாருமே குட்டையா தானேடா இருப்பீங்கன்னு கேட்கக்கூடாது. அவன் எங்களை விட குட்டை. ரெண்டு செக்ஷனும் அடிக்கடி அடிச்சிப்போம். அதில்லாம சிமெண்ட் தரையில் ஸ்கேட்டிங் போட்டி வேற நடக்கும்.
* மூணாவது படிக்கும்போதே கிரவுண்ட் பக்கம் போனாலும் நாலாவது படிக்கும்போதுதான் எங்க தெரு அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கிட்டாங்க. அதுவும் ஜோக்க்ராகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோதான்.
* ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது தாத்தா இறந்துட்டார். அவர் இறந்த அடுத்த நாள் வீட்டுல இருக்கவங்க எல்லாம் வருத்தத்தோட வரவுசெலவு கணக்கு பார்த்திட்டிருக்கும்போது தெருவில விளையாடிட்டு குதிச்சு குதிச்சு ஓடி வந்து தாழ்வான வாசல்படியில மண்டையை உடைச்சுக்கிட்டேன். ரத்தம் வழியறதுகூட தெரியாம ஒன்னும் ஆகலைன்னு சொல்லிகிட்டே எழுந்தா எல்லாரும் ஓடி வந்து தலையை அழுத்திபிடிச்சுட்டு தூக்கிட்டு எங்க ஊர் பேமிலி டாக்டர்கிட்ட போனாங்க. அவர் கைல கிடைச்ச ஊசி,நூல்ல ஒரு ஏழெட்டு தையல் போட்டுவிட்டார். அடுத்தநாள் காஞ்சிபுரத்துக்கு வந்து நல்ல டாக்டர்கிட்ட காமிச்சா 'இந்த நூல்ல இது வரைக்கும் பாலியஸ்டர் துணு தைக்க பயன்படுத்திதான் பார்த்திருக்கேன். இதை வச்சு யாரு தையல் போட்டது?'ன்னு கேட்டார்.
* 'சாட் பூட் த்ரீ', 'இங்கி பிங்கி பாங்கி' மாதிரி 'பிஸ்கட் பிஸ்கட்'ட்டும் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கறேன். தெரியாத அப்பாவிகளுக்கு
பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி
'பன்ருட்டி' சில சமயம் 'பொண்டாட்டி'யாகவும் மாறும்.
* நாங்க குடியிருந்த மேட்டுத் தெருதான் காஞ்சிபுரத்துல பட்டு சேலைக் கடைகள் எல்லாம் இருக்கும் தெரு. அந்த தெருவில சாயங்காலம் என்ன டிராபிக் இருந்தாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஐஸ்பாய் விளையாடலைனா எங்களுக்கெல்லாம் தூக்கம் வராது. எல்லா கடைகளுக்குள்ளேயும் போய் ஒளிந்துகொள்ள எங்களுக்கு சிறப்புரிமை உண்டு.
* ஐஸ்பாய் மாதிரியே கல்லா மண்ணா, நாடு புடிக்கற ஆட்டம் இதெல்லாமும் இப்போதெல்லாம் பசங்க விளையாடறதில்லையாமே. ரொம்ப வருத்தமா இருக்கு :(. பல்லாங்குழி, தாயம், நொண்டிக்கெல்லாம் இன்னும் மவுசு இருக்குன்னு நினைக்கறேன்.
* மொதமொத தெரு டீம்ல பெளலிங் கொடுத்தப்போ என் பெளலிங் ஸ்டைலை பார்த்துட்டு 'ஏண்டா மாவாட்டற மாதிரி கையை சுத்திட்டு ஓடி வர?'ன்னு கேட்ட அண்ணனால என் பெளலிங் செம்மைபட்டது.
* பக்கத்து வீட்டு வாசல்ல காகித பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது ஏறி வந்து ஷாட் அடிக்க முயற்சி செய்து தாழ்வாரத்துல உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் மண்டையை பேட்டால் உடைத்திருக்கிறேன். பாட்டிக்கு 12 தையல். எங்கப்பா எனக்கு கொடுத்த அடி பலம்னாலும் தையல் போடற அளவு சீரியஸ் ஆகலை.
* ஒரு கிரிக்கெட் மேட்சில கைக்கு வந்த கேட்சை விரல் வழியாக கப்பைவிட ஸ்டிச் பால் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்குமிடையிலுள்ள தசையை கிழித்துவிட்டது.ஆழமான காயம். வீட்டிற்கு சென்று கமுக்கமாக உட்கார்ந்திருக்கும்போது அம்மா சமைக்க ஆரம்பிச்சாங்க. கேரட் சீவித்தர்றேன்னு சீவல்மணையை வாங்கி இரண்டு நிமிஷத்தில் சீவல் மணை கையைக் கிழிச்சிடுச்சுன்னு ஒரு ஆக்ட் விட்டு அந்த காயத்தை காண்பித்தேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் கட்டு போட்டு வெளியே வந்ததும் அம்மா 'ஒழுங்கா மரியாதையா எப்படி அடிபட்டுச்சுன்னு சொல்லு. விளையாடும்போதா இல்ல எங்கயாவது விழுந்துவாறினயா??' என்று கேட்டதும் கையெல்லாம் ரத்தம் முகமெல்லாம் அசடு. அன்றிலிருந்து அம்மாவிடம் பொய் சொல்வதில்லை. அப்பாவிடம் மட்டும் தான்.
* பத்தாவது முடிச்சு டிசி வாங்கறதுக்கு எங்கப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன போது பிரின்சிபால் நல்லா போட்டு குடுத்துட்டார். 'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு எங்கப்பா கிட்ட பத்த வச்சிட்டார். இன்னைக்கும் அப்பாகிட்ட ஏதாவது எதிர்த்து பேசினா 'அப்பவே உங்க பிரின்சிபால் சொன்னாரேடா..நீ திமிர் பிடிச்சவன்னு' என என்னை ஆஃப் செய்துவிடுவார்.
'என்னடா சின்னபுள்ளத்தனமா வெட்டிக்கதை சொல்லிட்டிருக்க'ன்னு யாராவது வந்து காதைத் திருகறதுக்கு முன்னாடி எல்லா குழந்தைகளுக்கும், மனசால குழந்தைகளா இருக்கற மத்தவங்களுக்கும் பிலேட்டட் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சொல்லி அப்பீட் ஆகறேன் :)
கப்பி | Kappi 69 பின்னூட்டங்கள்
தாமோதரனின் கடிதம்
திருவாளர் திருடன் அவர்களுக்கு,
சென்ற வாரம் சனிக்கிழமை ஜீவா நகரில் தாங்கள் கொள்ளையடித்த வீட்டின் உரிமையாளன் தாமோதரன் எழுதிக் கொள்வது, எப்படியும் இந்த கடிதம் உங்களைச் சேரப் போவதில்லை. ஆனாலும் என் மனதிலுள்ள சோகங்களை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும். என் மனைவி ஏற்கனவே பேயடித்தது .போல் இருக்கிறாள். என்னிடம் சண்டை பிடிப்பதற்கு அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவளை எதிர்த்துப் பேசி சலித்துவிட்டது. எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு இப்போது குறைந்துபோய்த்தான் இருக்கிறது.
நீங்கள் எங்கள் வீட்டில் திருட வந்த அன்று குலதெய்வத்திற்கு பூஜை செய்ய சொந்த ஊருக்குச் சென்றிருந்தோம். அன்றே கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. ஆனால் என்ன செய்வது ஏற்கனவே செய்வதாக ஒத்துக்கொண்டாகிவிட்டது. நானும் தட்டிக்கழிக்க முயன்றேன்.முடியவில்லை.
இந்த செலவு போதாதென்று பூஜையின் போது அம்மாவுடன் வேறு சண்டை போட்டாகிவிட்டது. என்னுடன் இங்கு வந்துவிடு என்று சொன்னாலும் கேட்பதில்லை. கட்டை சாயும் வரை ஊரிலேயே இருப்பதாக சொல்லிக்கொண்டு தனியாக இருக்கிறார். அவருக்கே மாதாமாதம் மருந்து, மளிகை சாமான் என செலவுக்குத் தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இது போதாதென்று இப்போது டிவி வேண்டுமாம். இத்தனை நாள் பக்கத்து வீட்டு அத்தை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது வயதான காலத்தில் தெருவில் இருக்கும் அனைவருடனும் சண்டையாம். அத்தையுடனும் போன வாரம் சண்டை போட்டிருக்கிறார். திடீரென்று டிவி வேண்டுமென்று கேட்டால் நான் எங்கு போவது? இப்போது தான் இந்த கோயில் செலவே நான்காயிரம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு வாங்கிக் கொடுப்பதாக இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறேன்.
நான் ஏன் வாங்கித் தர வேண்டும்? எல்லா சொத்தையும் தம்பி பெயரில் எழுதி வைத்தார்களே அவனிடம் கேட்க வேண்டியது தானே. கூட இருந்தே எல்லா பணத்தையும் திருடியவன் தானே அவன். எனக்கென என்ன செய்திருக்கிறார்கள்? ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்போது பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்குக்கூட ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று அப்பாவுடன் சண்டை போட வேண்டும். படித்து வேலை தேடிக்கொண்டிருந்தபோதும் என்ன உதவி செய்துவிட்டார்கள்? நானாக இந்த வேலை தேடி, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.
என் தம்பி அவர்களுடனேயே இருந்து எல்லா பணத்தையும் அடித்துவிட்டான். அப்பா நோய்வாய் பட்டிருந்தபோது மருத்துவ செலவுகள் பார்க்கிறேன் என்று ஏகத்துக்கும் அவன் பொது பணத்தை சுருட்டியது தெரியாதா? என் அப்பா இன்ஷ்யூரன்ஸ் கட்டியதாக ஞாபகம். ஆனால் இப்போது அதையெல்லாம் அவனிடம் கேட்கமுடியுமா?
சொத்து பிரிக்கும்போதும் அவனுக்கு வீட்டை எழுதி வைத்துவிட்டு எனக்கு காலி நிலத்தைத் தானே கொடுத்தார்கள். அவனுக்கு நல்ல தண்ணீரோடு எட்டு ஏக்கர், எனக்கு பாறை கிணறுடன் மூன்று ஏக்கர். கேட்டால் நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேனாம். நானாக கஷ்டப்பட்டு இந்த நிலையில் இருக்கிறேன். அவர்களா உதவினார்கள்? இவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் சொத்து பிரிக்கும்போது என் மாமனாரையும் சகலையையும் கூட்டிச் சென்றேன். அவர்கள் இவர்களுக்கு மேல். நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். பெற்றவர்களும் சரியில்லை. இவர்களும் சரியில்லை.
இவர்கள் மட்டும் எனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கல்யாணத்தின்போது 20 சவரன் போடுவதாக சொல்லிவிட்டு 15 சவரன் தான் போட்டார்கள். ஆனால் இவளின் தங்கைக்கு 30 சவரன் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் என் சகலைக்கு ரைஸ் மில் வைக்க பணம் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு பண உதவி செய்வது எனக்குத் தெரியாதென நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவளுக்கு நாலு தம்பிகள், அவர்களுக்கு கல்யாணம், குழந்தை பிறப்பது, காது குத்துவது என எத்தனை செலவுகள். இவற்றுக்கெல்லாம் கணக்கு போட்டால் நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் எனக்கென இவர்கள் எனன் செய்தார்கள்?
இதையெல்லாம் கேட்டால் என் மனைவி என்னிடம் சண்டை போடுவாள். இந்த வீட்டைக் கட்ட 50000 ரூபாய் கொடுத்தார்களே எனக் கேட்பாள். பெற்ற மகளுக்கு இது கூட கொடுக்கக்கூடாதா?? நான் கூடத்தான் என் மச்சான் 5000 கடனாக வாங்கியதை விட்டு வைத்திருக்கிறேன்.
இவர்கள் தொல்லைதான் இப்படியென்றால் அலுவலகத்தில் இதற்கு மேல் பிரச்சனை. நான் லஞ்சம் எதுவும் வாங்காதபோதே என் மேல் மொட்டை கடுதாசி எழுதுகிறார்கள். இதற்கு முன்னாவது பரவாயில்லை. கொஞ்சம் வருமானம் வரும் சீட். இப்போது அதுவும் இல்லை. சீட்டை மாற்றி பழி வாங்கிவிட்டார்கள்.
எல்லாரும் பொறாமை பிடித்தவர்க்களாக இருக்கிறார்கள். எனக்கென யாரும் எதுவும் செய்ததில்லை. எல்லாருக்கும் நான் தான் அழுதுகொண்டிருக்கிறேன். நான் எல்லோரிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதை என் மனைவி குறையாகச் சொல்கிறாள். உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?
இந்த நிலையில் என் போதாத நேரம் நீங்கள் என் வீட்டைத் தேர்ந்தெடுத்து திருடியிருக்கிறீர்கள். 20000 ரூபாய் ரொக்கம், 22 சவரன் நகை. போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாகிவிட்டது. ஆனால் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. சும்மா செய்துவிடுவார்களா என்ன? அவர்களும் பணம் கறக்கப் பார்க்கிறார்கள்.
இப்போதிருக்கும் என் மனநிலையில் பாதி பணம் திரும்பக் கிடைத்தாலே போதும் என்றிருக்கிறது. உங்களை சந்திக்க முடிந்தால் பாதியை நீங்கள் வைத்துக்கொண்டு பாதி தந்தால் சரி என்று கூட ஒத்துக்கொண்டுவிடுவேன்.
இதுவரையில் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் யாருக்கும் எதுவும் செய்துவிடுவதில்லை. இப்படி புலம்பியபடியே என் வாழ்க்கை முடியப்போகிறது. எனக்கு யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. விட்டுத் தள்ளுங்கள். என் மனைவி சாப்பிட அழைக்கிறாள். உப்புசப்பில்லாமல் எதையாவது சமைத்துவைத்திருப்பாள். சண்டையில்லாமல் சாப்பிட்டு உறங்கச் செல்ல முயல்கிறேன்.
வணக்கத்துடன்,
தாமோதரன்.
கப்பி | Kappi 52 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
சினிமா! சினிமா!! சினிமா!!! - 2
சினிமா! சினிமா!! சினிமா!!! - 1
சினிமா வாய்ப்பு தேடிய, தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் சிலர் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்தே வாய்ப்பு தேடி வருகிறார்கள். சில நண்பர்கள் படிப்பு முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தபின் சினிமாத்துறையால், அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தவர்கள். சில நண்பர்கள் ஓரிரு மாதங்களில் அத்துறையின் நிதர்சனத்தை உணர்ந்து வேறு வேலையில் சேர்ந்தார்கள். சிலரின் நம்பிக்கை மட்டும் அசைக்க முடியாததாக இருக்கிறது.
*******************************************
கோகுலகிருஷ்ணன். சொந்த ஊர் போடி. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் கணிப்பொறியில் பட்டயப் படிப்பு. நாங்கள் வைத்த பெயர் 'கொம்பு'. ஆரம்பத்தில் அவரின் சினிமா ஆசையைப் பல முறை கிண்டலடித்திருக்க்கிறோம். ஆனால் காலப்போக்கில் அவர் காட்டிய உத்வேகமும் அவர் பட்ட கஷ்டங்களும் எங்கள் மனதை மாற்றின. அவர் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.
படிப்பு முடிந்து கணிணித்துறையில் வேலை தேட சென்னைக்கு வந்தவர் சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். செலவுக்காக வீட்டிலிருந்து வாங்கும் பணம் அனைத்தையும் புகைப்படம் எடுக்கவும் ஆல்பம் தயார் செய்யவும் செலவு செய்துவிடுவார். அறை நண்பர்களுடனும் அவ்வளவாக பேச மாட்டார். அவருக்கு அறிவுரை சொல்லும் தோரணையில் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுவார்.
ஆரம்பத்தில் சிறு வேடங்கள் கிடைத்தபோது அவற்றை நிராகரித்தவர் நாட்கள் செல்லச் செல்ல சிறுசிறு துண்டு வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தலை காட்டினார்.
இரண்டு வருடங்கள் முனைப்பாக இருந்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வாய்ப்பும் வராமல் பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தரவு உள்ளீட்டுத் (Data Entry) துறையில் தற்காலிகமாக வேலை செய்தபடி சினிமா வாய்ப்புகள் தேடினார். அடுத்த ஆறு மாதத்தில் உண்மை நிலையை உணர்ந்து சினிமாவைத் துறந்து இப்போது அதே வங்கியில் நிரந்தர பணியில் சேர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
*******************************************
கோகுலகிருஷணனின் அறை நண்பர் சங்கர். இவரும் மதுரை பாலிடெக்னிக்கில் படித்தவர் தான். சென்னையில் ஒரு சிறு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவரது கனவு திரைப்பட இயக்குனராவது.
பொதுவாக புதிதாக ரிலீசாகும் படங்களை முதல் நாளிலோ முதல் வாரத்திலோ உதயம், கமலா,நேஷனல் அல்லது கருமாரி காம்ப்ளெக்ஸில் பார்த்துவிடுவது வழக்கம். இவருடன் படம் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள், எப்படி எடுக்கலாம் என சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஏரியாவில் எந்த படப்பிடிப்பு நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவார்.
தொழில்நுட்பம் குறித்து பெரிதாகத் தெரியாது எனினும் இயக்குனராகும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர். திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசையிருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கைவிட்டவர். இவருக்கு பிடித்த இயக்குனர் பாலா. அதற்கு அவர் சொல்லும் காரணம் இயக்குனர் பாலா மட்டுமே திரைப்படக் கல்லூரியில் பயிலாதவர்களையும் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வாராம். நண்பர் வேலை செய்துகொண்டே இயக்குனராகும் முயற்சியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
*******************************************
வடபழனி செந்தில் ஆண்டவர் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் அதற்கு முன்னர் நடிகர் பாலா சிங் தங்கியிருந்தாராம். வேறொரு வீட்டிற்கு மாறிப் போனதில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் மீண்டும் அங்கு குடி வர கேட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் எங்களிடம் சொன்னார். திரைப்படத்துறையில் உள்ளவர்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.
கப்பி | Kappi 35 பின்னூட்டங்கள்
ச்சும்மா...ச்சும்மா!!
ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா!!?? ;))
பாசக்கார பய!
இனமடா நீ!
தலயின் சிஷ்யகேடி!
இதை மெயில்ல அனுப்பின புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லாயிரு..நல்லாவே இரு! ;)
கப்பி | Kappi 21 பின்னூட்டங்கள்
யாருடா நீங்க?!
இந்த ஊர்க்காரங்க எங்களைப் பார்த்து இன்னும் இது ஒன்னு தான் கேட்கல.
சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி நேரத்துக்கு ராக்கெட், புஸ்வானம்னு மாத்தி மாத்தி விட்டு தீபாவளி கொண்டாட்டத்துல மாண்டிவிடியோவை கலக்கிப்புட்டோம்ல. இங்க கூட வேலை பார்க்கறவனுங்க தயவுல வெடி விக்கற இடம் தெரிஞ்சு மொத்தமா வாங்கியாச்சு. சனிக்கிழமை பீச் ஓரமா எல்லாரும் ஒன்னுகூடி எல்லாத்தையும் கொளுத்தி கரியாக்கிட்டு வந்தாச்சு. போலிஸ்,ஃப்யர் என்ஜின்னு எவனாவது கூப்பிட்டுட போறாங்கன்னு பயந்துகிட்டே வெடிக்க ஆரம்பிச்சோம்...எவனும் கூப்பிடல..எல்லாம் நல்லவனுங்களா இருக்கானுங்க.
நம்ம ஊர்லயே ராத்திரி 10 மணிக்கு மேல வெடிக்கக்கூடாதே, இங்க வெடிக்கலாமான்னு யோசிக்கவே தேவையில்ல..ஏன்னா இந்த ஊர்ல இருக்க புண்ணியவானுங்க சனிக்கிழமையானா தூங்கவே மாட்டானுங்க...
அப்புறம் இரண்டு வாரத்துக்கு முன்ன உருகுவே கல்ச்சுரல் கவுண்டின்னு ஒரு அமைப்பு இசை நிகழ்ச்சி ஒன்னு நடத்தினாங்க. செல்டிக் நடனம், பேக் பைப்பர்ன்னு வாசிச்சு கலக்கிட்டாங்க. அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அதுவும் எங்க நாலு பேருக்காக ஸ்பானிஷ் மட்டுமில்லாம ஆங்கிலத்துல தனி அறிவிப்பெல்லாம் செஞ்சாங்க.
இந்த குழுவில இருக்க நாலு பேரும் ஒரே குடும்பத்தினராம். கடைசியா எல்லாரும் சேர்ந்து ட்ரம்ஸ் வாசிச்சாங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு.
இந்த வெள்ளைக்கார அம்மா இங்கிலாந்துகாரங்களாம். ஒரே பீட்டர் பாட்டு. ஒரு வார்த்தையும் புரியல. ஆனா இனிமையான குரல். உச்சஸ்தாயில சூப்பரா பாடினாங்க
.
இந்த குழு தான் இங்க ரொம்ப புகழ்பெற்ற குழுவாம். 16 பேர் பேக்பைப்பர், வயலின், செல்டிக் நடனம்ன்னு கலக்கிட்டாங்க.
அடுத்து இங்க இருக்க ப்ரிட்டிஷ் காலேஜ்காரங்க கிரிக்கெட் மேட்ச் விளையாட கூப்பிட்டிருக்காங்க. அங்கயும் போய் நம்ம கொடியை நாட்டிட வேண்டியது தான்.
கப்பி | Kappi 53 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
இரு பயணங்கள்
பயணம் தரும் அனுபவங்களும் அதன் தாக்கமும் என்றும் ஆச்சரியமூட்டுபவை. புது ஊர்களும் மனிதர்களும் அவர்கள் குறித்த நினைவுகளும் எளிதில் மறக்க முடிவதில்லை. எந்த பயணமும் திட்டமிட்டபடி நிறைவேறியதுமில்லை. பயணங்கள் நம் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போடும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. கதாபாத்திரங்களின் பயணங்களின் வழியே பல அருமையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வாரம் இரண்டு ஸ்பானிஷ் திரைப்படங்களைப் பார்த்தேன். இரண்டு படங்களுமே கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டவையே. இரண்டு படங்களும் லத்தீன் அமெரிக்காவின் இருவேறு முகங்கள். இந்த இரு திரைப்படங்களைக் குறித்தும் அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவாக எழுத முடியுமா என்ற சந்தேகத்துடனேயே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Y tu mamá también ( And your mother too )
ஹூலியோ, டெனோக் என்ற இரு மெக்ஸிக இளைஞர்கள் லூயிசா என்ற நடுத்தர வயது பெண்ணுடன் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு பயணிக்கிறார்கள். பயணத்தினூடே அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களும் கற்றுக்கொள்ளும் பாடங்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நகைச்சுவை படம் என்றோ, உடலுறவு காட்சிகள் விரவிக் கிடக்கும் செக்ஸ் படம் என்றோ, மணமுறிந்த ஒரு பெண்ணைப் பற்றிய மென்சோகக் கதை என்றோ, மெக்ஸிகோவின் சமூக, வாழ்க்கை முறையைக் காட்டும் படம் என்றோ வகைப்படுத்த முடியாது. இப்படம் இவையெல்லாம் கலந்த கலவையே.
டெனோக் ஒரு பணக்கார இளைஞன். அவன் தந்தை அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ள செல்வந்தர். ஹூலியோ நடுத்தர வர்க்க இளைஞன். டெனோக்கின் உறவினர் மனைவி லூசியா. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறியும் லூயிசா அவனிடமிருந்து பிரிகிறாள். அவளிடம் ஈர்க்கப்படும் இரு நண்பர்களூம் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு அழைத்து செல்வதாகச் சொல்லி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றனர்.
பயணம் நெடுகிலும் கதாபாத்திரங்களின் செய்கைகள் சரி/தவறு என்று எந்த முன்முடிவுகளும் இன்றி அதன் போக்கில் படமாக்கப் பட்டுள்ளன. சில உரையாடல்களும் காட்சி அமைப்புகளும் அதிர்ச்சியூட்டுகின்றன. படம் நெடுகிலுமே வசனங்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. சாலை நெடுகே மெக்ஸிகோவின் கிராமங்களும் காவல் கட்டுப்பாடுகளும் மக்களின் வாழ்வுமுறையும் காட்டப்படுகிறது.செக்ஸ் மட்டுமே வாழ்க்கையென இருக்கும் இரண்டு இளைஞர்கள் பயணத்தின் முடிவில் முதிர்ச்சியடைவது அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உறவுகள் கேள்விக்குறியதாகின்றன. எதிர்பாராத முடிவு படத்தை மெதுவாக மனதில் அசைபோடவைக்கிறது.
படத்தில் சில காட்சிகளினூடே பின்னணியில் கிளைக்கதைகள் சொல்லப்படுகின்றன. நடைபாதையை உபயோகிக்காத பாதசாரி, ஹூலியோவின் கம்யூனிஸ்ட் சகோதரி, மெக்ஸிக ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகும் லாரி, கடற்கரையில் உதவ வரும் மீனவன், கடற்கரை பன்றிகள் என பின்னனியில் சொல்லப்படும் கதைகள் மனதில் நிற்கின்றன.
கதாபாத்திரங்களின் நுன்னிய உணர்வுகளையும் முகபாவங்களையும் தவறவிடாமல் மெதுவாக நகரும் காட்சிகள்,மெல்லிய பின்னணி இசை, அழகான காட்சியமைப்புகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. இந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கவர்கிறார்கள். அருமையான வெளிப்பாடு.
இந்த திரைப்படம் ஒரு கலாச்சார அதிர்வை அளிக்கலாம். ஆனால் மனித உணர்வுகளை அருமையாக படம் பிடித்த திரைப்படம்.
இரண்டாவது திரைப்படம் இலத்தின் அமெரிக்க வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு புரட்சிப் பயணம்.
Diarios de motocicleta (The Motorcycle Diaries)
எர்னெஸ்ட் குவேரா தன் நண்பர் அல்பெர்டோ க்ரேனெடோவுடன் 1950களில் மேற்கொண்ட இலத்தீன் அமெரிக்கப் பயணம் குறித்த திரைப்படம். சே குவேரா உலகை மாற்றியதற்கு முன் உலகம் அவரை மாற்றிய கதை. எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் இரு நண்பர்களின் பயணத்தை அருமையாக காட்டியிருக்கிறார்கள். பயணம் நெடுக சந்திக்கும் மக்களும் அவர்களது வறுமையும் இரு இளைஞர்களிடம் ஏற்படுத்தும் மன மாற்றங்கள் அருமையாக படம்பிடிக்கப் பட்டுள்ளது.
இருபத்தி மூன்று வயது இளைஞன் எர்னெஸ்டோ தன் நண்பன் அல்பெர்டோவுடன் தென் அமெரிக்க பயணத்திற்குக் கிளம்புகிறான். அர்ஜெண்டினா, சிலெ, பெரு, கொலம்பியா வழியாக வெனிசுலாவில் பயணம் முடிகிறது. வழி நெடுக பயணத்தில பல இன்னல்களையும் முதலாளித்துவத்தால் மக்கள் படும் துன்பத்தையும், வறுமையையும் தொழுநோயாளிகளின் நிலையையும் கண் கூடாகக் காணும் நண்பர்கள் எப்படி மாறினார்கள் என்பதே இப்படம்.
பயணத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கிளம்பும்போதும் அவர்களின் ஆரம்பகட்ட பயணமும் பழைய மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் படும் பாடும் நகைச்சுவையுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அல்பெர்டோ தன் முகபாவங்கள் மற்றும் செய்கைகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.
தென் அமெரிக்க நிலவெளிகளின் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நம்மையும் அந்த நிலவெளிகளில் பயணிக்க வைக்கிறார்கள். வழியில் சந்திக்கும் சுரங்கப் பணியாளர்கள் எர்னெஸ்டோவின் மனதில் முதல் விதையாக விழுகிறார்கள். அதன் பின்னர் சிலேயிலும் பெருவிலும் பூர்வீக மக்களை சந்திக்கும் நண்பர்களின் மனம் மாற்றமடைகிறது. தொழுநோய் மருத்துவமனையில் இளைஞர்கள் இருவரும் தங்கி சேவை செய்வதும், எர்னெஸ்டோ நோயாளிகள் மீது காட்டும் அன்பும் பரிவும் நம்மைக் கலங்க வைக்கிறது.
தொழுநோயாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக நள்ளிரவில் அமேசான் நதியை எர்னெஸ்டோ நீந்திக் கடப்பதைக் காணும்போது உண்மையிலேயே சே குவேரா இப்படி செய்தாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பயணத்தின் முடிவில் அல்பெர்டோ வெனிசுலாவில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துவிட எர்னெஸ்டோ தனியாக அர்ஜெண்டினா திரும்புகிறான். பின்னணியில் சே குவேராவின் வரலாறு சொல்லப்படுகிறது.
இரண்டு நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சே குவேராவாக நடித்த கெய்ல் கார்சியா பெர்னால் சிறப்பாக கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. பயணத்தினூடே இரு நண்பர்கள் தங்களின் சுயமறிதல் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
சில படங்கள் பொழுதுபோக்குவதற்கு. சில படங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு. இது இரண்டாவது வகை.
இந்த இரண்டு படங்களைப் பார்த்ததும் மனதிலுள்ள சில கேள்விகளுக்கு விடை கிட்டினாலும் மேலும் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன, சில பயணங்களைப் போலவே.
கப்பி | Kappi 24 பின்னூட்டங்கள்
வகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா
நரகாசுரன்
கிருஷ்ணகுமார் தன் பெயரை மாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் மாற்ற விரும்பும் காரணம் நியூமராலஜியோ, ஜோதிடமோ இல்லை. அவன் அப்பா ராஜேந்திரன் தான். படித்து முடித்து இரண்டு வருடம் ஆகியும் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கும் அவனை சதா சர்வகாலமும் அவனை திட்டிக் கொண்டிருந்த அப்பாவின் மீது அவனுக்கு வெறுப்பு வந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான். காலை எழுந்ததில் இரவு வரை இவனை பார்க்கும்போதெல்லாம் திட்டாவிட்டால் அவன் அப்பாவிற்கும் உறக்கம் வராது. இவனும் அவரை எப்படியெல்லாம் கோபம் கொள்ள வைக்கமுடியுமோ அப்படியெல்லாம் செய்துவந்தான். அதில் ஒன்று தான் பெயர் மாற்றும் படலம்.
பெயரை மாற்றுவது என்று முடிவு செய்ததும் கிருஷ்ணகுமார் என்று பெயர் வைத்துக்கொண்டு தான் பட்ட பாட்டையெல்லாம் நினைவில் கொண்டுவந்தான். வீட்டில் குமார் என்று கூப்பிட்டாலும் தெருவில் மற்ற சிறுவர்களும் பள்ளியிலும் அவன் கீயான். இந்த பெயரை அவனுக்கு வைத்தது அவனது நிரந்தர எதிரி முத்து. பள்ளிக் காலத்தில் இருந்தே முத்து இவனுக்கு நேரெதிர் தான். ஐந்தாம் வகுப்பில் ஒரு சண்டையின் போது இவன் கையை உடைத்தது, இவனைப் பற்றி வீட்டில் போட்டுக் கொடுப்பது, முதல் ரேங்க் வாங்குவது, இதோ இப்போது படித்து முடித்த உடனே நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிப்பது என எப்போதுமே முத்து கிருஷ்ணகுமாருக்கு எதிரியாகவே இருந்தான். இந்த பெயரை மாற்றினால் கீயான் என்ற பட்டப்பெயரும் தன்னைவிட்டு போகும் என்பதில் கிருஷ்ணகுமாருக்கு கூடுதல் மகிழ்ச்சி.
கல்லூரியில் இவன் எல்லாருக்கும் கிறுக்குகுமார் தான். தெரியாத்தனமாக இவன் தன் பெயரை ஸ்டைலாக எழுதுவதாக நினைத்து Krk Kumar என்று எங்கோ எழுதிவைக்க அதை ஒருவன் கிறுக்குகுமார் என்று படித்துவைக்க, அன்றிலிருந்து இன்று வரை கல்லூரி நண்பர்களுக்கு கிறுக்குகுமார் தான்.
பெயரை முறைப்படி மாற்றுவதற்கான வழிமுறைகள் அனைத்தையும் விசாரித்து தெரிந்துகொண்டான். ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அஃபிதாவித் வாங்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அதற்கு முன் ஒரு நாளிதழில் விளம்பரம் கொடுத்து அந்த விளம்பரத்தின் பிரதியையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டுமாம். இதற்கு ஒரு வக்கீலைப் பிடித்தால் வேலை எளிதாகிவிடும். எப்படியும் குறைந்தது ஐயாயிரம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கு போட்டு தன் தந்தையிடமிருந்து எப்படி அவ்வளவு பணத்தை அடிப்பது என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.
பெயரை மாற்றுவதாக முடிவெடுத்த பின்னும் அவனுக்கு சரியான பெயர் சிக்கவில்லை. முக்கியமாக அவன் தந்தையை எரிச்சலூட்டும் வகையில் பெயர் சிக்கவில்லை. நண்பர்களிடம் கேட்கலாம் என்றால் குழந்தை பெற்று அதற்கு பெயர் வைக்கும் வயதில் எதற்கு பெயர் மாற்றுகிறான் என அவனைத் திட்டுவார்கள்.
பெயர்களைப் பட்டியல் போட்டால் எளிதாக தேர்ந்தெடுக்கலாம் என பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் கிருஷ்ணகுமார் என்ற பெயருக்கு எதிர்மறையான பெயராக வைக்கவேண்டும். கிருஷ்ணனுக்கு எதிரிகள் என்று இதிகாசங்கள் கூறும் கம்சன், நரகாசுரன், துரியோதனன் போன்ற பெயர்களில் ஏதாவது ஒன்று வைத்துக்கொள்ளலாம என யோசித்தபோது நரகாசுரன் அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. ராஜேந்திரன் என்ற தன் தந்தையின் பெயருக்கு நரகாசுரன் சரியாக இருக்கும் என முடிவு செய்துகொண்டான். இந்த இந்திரனை நரகாசுரனை வைத்து அடக்கப் போவதாக சபதம் செய்துகொண்டான்.
இந்த பெயரை வைத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்றும் யோசிக்கத் தொடங்கினான். இத்தனை நாட்களாக கிறுக்கு என்று கூப்பிட்டவர்கள் நரகாசுரனை நருக்கு என்று கூப்பிட்டால் கோபமாக நறுக்கென பதில் சொல்லி அவர்கள் மூக்கறுக்க வேண்டுமென முடிவுசெய்தான்.
பெயர் மாற்ற குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாயாவது தேவைப்படும். இதற்கும் ராஜேந்திரன் மடியில் தான் கை வைக்கவேண்டும். என்ன காரணம் சொல்லி வாங்குவது என குழம்பினான். பேசாமல் பெயர் மாற்றப்போகும் விஷயத்தை சொல்லிவிட வேண்டியது தான். ஆனால் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நண்பன் எவனிடமாவது கடன் வாங்கலாம் என்றால் ஐயாயிரம் ரூபாய் என்றாலே அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது என கை விரித்துவிடுவார்கள்.
அன்று அவன் தாத்தாவின் திதி. தாத்தாவின் படத்திற்கு படையல் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். அவரின் தாத்தாவைப் பற்றிய பேச்சு வந்தது. தொன்னூறு வயது வரை திடகாத்திரமாக வாழ்ந்தவர். ராஜேந்திரனுக்கு அவர் தந்தை மீது பெரிதாக பாசம் கிடையாது. அவர் இறந்தபோது கூட பெரிதாக வருத்தம் கொள்ளவில்லை. அவர் அம்மா இறந்தபோது இவர் கதறியதைக் கண்டவர்கள் அப்போது பெரிதாக ஆச்சரியம் அடைந்தனர்.
"என் அப்பா மேல எனக்கு பெருசா பாசமெல்லாம் இருந்ததில்லை. சின்ன வயசுல இருந்தே என்னை அடிச்சுத்தான் வளர்த்தார். இந்த வேலையில்யும் நானாத்தான் சேர்ந்து கஷ்டப்பட்டு இந்தளவு வந்திருக்கேன். டிபார்ட்மெண்ட் எக்ஸாம்லாம் எழுதி ப்ரோமஷன் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். அவர்கிட்ட இருந்து ஒரு காசு வாங்கல. படிச்சு முடிச்சு வேலை தேடிட்டு இருந்தப்ப கூட அவர் பெருசா சப்போர்ட் பண்ணல. எப்பவும் திட்டு தான். சமயத்துல அவர் மேல பயங்கர வெறுப்பு வரும். என்னடா வாழ்க்கைன்னு இருக்கும். ஆனா நானும் அவரை எப்படியெல்லாம் வெறுப்பேத்த முடியுமோ அப்படியெல்லாம் நடந்துப்பேன். அவரைக் கோப்பட வைக்கிற விஷயமா தேடித் தேடி செய்வேன். அவர் என்னை ராஜேந்திரான்னு கூப்பிடும்போதெல்லாம் ஒரு ரெள்த்திரம் வரும். சில சமயம் அவர் வச்ச பேரையே மாத்தி வச்சுக்க்லாமான்னு யோசிச்சிருக்கேன். இந்திரன்ன்னு பேரு வச்சவரை கடுப்பாக்க இரண்யகசிபு,இர ாவணன், நரகாசுரன் இது மாதிரி அசுரன் பேரா வச்சுக்கலாம்னு.ஒரு நாள் நரகாசுரன்னு பேரை மாத்த முடிவு செஞ்சு விண்ணப்பம் எல்லாம் எழுதிட்டேன். வக்கீலை பார்க்க போகலாம்னு இருந்த அன்னைக்கு இந்த வேலைக்கான இண்டர்வியூ வந்தது. அப்படியே விட்டாச்சு. இப்ப நினைச்சு பார்த்தா சிரிப்பாத்தான் இருக்கு. நான் எங்கப்பா மாதிரி இல்ல. உன்னை ஆசையாத்தான் வளர்த்தேன். என்ன இப்ப படிச்சு முடிச்சு வேலை இல்லாம இருக்கறதைப் பாக்கறப்போ பெத்த மனசுல வருத்தம்.அது கோவமா வருது. உன் மேல நம்பிக்கை இருக்குப்பா. காலம் கடந்துபோகறதுக்கு முன்னாடி ஒரு வேளையை வாங்கி செட்டில் ஆகப் பாரு. நீ எங்களுக்கு சம்பாதிச்சு போடனும்னு நாங்க எதிர்பார்க்கல. உன் எதிர்காலத்துக்குத்தான் எல்லாம்". மூச்சுவிடாமல் பேசிய ராஜேந்திரன் கைகழுவிவிட்டு அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.
பெயர் மாற்றும் படலத்தை கைவிட்ட கிருஷ்ணகுமார் அடுத்த கம்பெனியின் பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தான்.
கப்பி | Kappi 40 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா
"நான் ஹீரோ வொர்ஷிப் பற்றியெல்லாம் தீர்ப்பு வழங்கத் தயாராக இல்லை. என் அளவில் நான் பேசுகிறேன். நான் இப்படியெல்லாம் வழிபடுவதற்குத் தகுதி உடையவன் அல்ல."
"என்னை வியக்க வைத்த இசையமைப்பாளர் சந்தேகமில்லாமல் இளையராஜா தான்! அந்த ஒருவரைப் பார்த்துத்தான் தினமும் வியந்துகொண்டிருக்கிறேன். ஒன்றும் தெரியாத இவனிடமிருந்து எப்படி இவ்வளவு விஷயங்கள் வருகின்றன என்று வியக்கிறேன். விஷயம் தெரிந்தவர்கள் இசை அமைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது."
"இசைவிப்பது இசை. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். வித்வான் மேடை ஏறிப் பாடுகிற தோடியைத்தான் ஒற்றைத் தந்தி தம்புரா சுருதியுடன் பரதேசியும் பாடுகிறான். அவன் வழி வேறு. இவன் வழி வேறு; பாடுவதிலே வித்தியாசம் தெரிகிறது என்பது உண்மை. ஆனால் ஆண்டிப்பண்டாரத்தின் பாட்டிலே அந்தப் பாடகன் இசைந்து போயிருக்கிறான் என்பதும் உண்மையல்லவா? அதைக் கேட்டு ரசிக்க நாற்காலியில் வந்தமரும் நானூறு ரசிகர் இல்லாவிட்டாலும் நாலு பேராவது சூழ்ந்து நிற்பது உண்மைதானே? அவர்கள் 'லெவலில்' அதை அவர்கள் ரசிக்கத்தானே செய்கிறார்கள்.
இந்தப் பண்டாரம் மேடைப் பாடகனால் துச்சமாகக் கருதப்படுகிறான். ஆனால் பண்டாரமோ மேடைப் பாடகனை வணங்கிக் கும்பிடு போடுகிறான். யார் உயர்ந்தவர்?"
"இசையில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று நினைப்பானேன், பேசுவானேன்? எல்லாமே இசைதான்! டப்பாங்குத்து என்று நீங்கள் கருதலாம்; அதில் ஈடுபட்டிருப்பவன் அடைகிற இன்பத்தை நீங்கள் எப்படி உணர முடியும்?"
"என் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் வருவதில் அதிசயமில்லையே? நான் சினிமா மூலம் பிராபல்யமும் புகழும் அடைந்திருக்கிறேன். மக்கள் வருகிறார்கள். வராமல் இருந்தால் தான் அதிசயம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?"
"ஒரு உயர்ந்த படத்தை இசையமைப்பாளரால் கெடுக்க முடியாது. அவனுக்குக் கெட்ட பெயர் வந்து சேருவதோடு சரி. ஆனால் ஒரு சராசரி படத்தை இசையமைப்பாளன் உயர்த்தவும் முடியும்; கெடுக்கவும் முடியும்."
"'துளசிதள முலசே சந்தோஷ முகா பூஜிந்து' - இந்தப் பாடலைப் பாடியபோது தியாகையரின் மனநிலை என்னவாயிருந்தது? அதுபற்றி இன்று நமக்கு என்ன சார் தெரியும்? நீங்கள் என் பாட்டைக் கேட்டீர்கள்; ஆனால் தியாகையரின் அன்றைய மனநிலையை எவ்வாறு உணரப் போகிறீர்கள்? நானோ அல்லது இன்னொரு வித்வானோ மேடை ஏறிப் பாடினால் எனக்கு கணக்கு வழக்கு தெரியும் என்று காட்டிக்கொள்ள முயல்வேன். தொடையில் ஓங்கி அறைந்து தாளம் போடுவேன்; சுவரப் பிரஸ்தாரங்களைச் செய்து என் வித்வத்தைக் காட்டுவேன்; கமகங்களை உதிர்த்து என் குரல்வளத்தைப் புலப்படுத்துவேன். போதாக்குறைக்கு எனக்கு நானே 'சபாஷ்' போட்டுக்கொள்வேன். எல்லாம் என்..என்..என்..தியாகையர் எங்கிருக்கிறார்? அவர் மனநிலையும் உணர்வுகளையும் எங்கே, எப்படி, யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்?"
- இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா, கல்கி 1985.
இசைஞானியின் லேட்டஸ்ட் ஷிவா பாடல்கள் இங்கே
கப்பி | Kappi 43 பின்னூட்டங்கள்
வகை சினிமா
ஜி டாக் - தனிப்பயன் - custom - கஷ்டம் - பதிவு
காலைல அலுவலகத்துக்கு வந்து பொட்டியைத் திறந்து ஜிடாக்ல நுழைஞ்சு custom மெசெஜை(தனிப்பயன் வாசகம் என்று சொல்லலாமா??) மாற்றும்போது ஒரு யோசனை..இந்த கஸ்டம் வாசகங்கள் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி மற்றவர்களைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தினா என்ன....அதான் கடந்த சில தினங்களில் ஜிடாக்கில் என் தனிப்பயன் வாசகங்கள் கீழே...
**********************************
வேலை! வேலை!! வேலை!!!
வேலை இல்லாதவன் தான்..
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்
வெட்டி! வெட்டி!! வெட்டி!!!
இன்றும் மற்றொரு நாளே!
+1
(18 Sep 06).equals(17 Sep 06)
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
சொன்னா நம்பனும் பிஸி
யாராவது வாங்கடே
இன்னும் இருக்கிறது வேலை!
வேலை பார்க்கற சிங்கத்தை தட்டி கூப்பிடுங்க!
Life is Beautiful
Eternal Sunshine of the Spotless Mind
கூப்பிட்டீங்களா?
வெள்ளிக்கிழமை முடியும் வேலை
L if E
Monday காயுது!
உனக்குள்ள வெட்டியா இருக்கற அதே மிருகம் தான் எனக்குள்ள வேலை பார்த்துட்டு இருக்கு!
என் கடன் பணி செய்து கிடப்பதே!
என் கடன் வெட்டியாய் கிடப்பதே!
ஆத்தா..நான் பஞ்சராயிட்டேன்!
*********************************
அப்படியே உங்க கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் ;)
கப்பி | Kappi 40 பின்னூட்டங்கள்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
கைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்
குப்பைமேட்டில் களஞ்சியம் தேடுபவனுக்கும்
இரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்
சொத்திழந்தவனுக்கும் சுயபுத்தி பிறழ்ந்தவனுக்கும்
வீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
அவர்தம் வீட்டுக் கூரையாக!
இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற தலைப்பைப் பார்த்ததும் தோன்றிய சிந்தனை. வீடின்றி வாழும் வறியவர்க்கு இந்த வானமே கூரையாகிப் போன அவலத்தை சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறேன். சரியான வார்த்தைப் பிரயோகமும் சொல் சிக்கனமும் கைகூடவில்லை. வார்த்தைகளை மாற்றியமைத்து மெருகேற்றியிருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இதன் நிறைகுறைகளை பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கவிதை போட்டியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் சங்கத்திற்கும், விமர்சனங்கள் வழங்கிய இன்ஜினியர்[;)] பாலபாரதி அவர்களுக்கும், நிலவு நண்பன் ரசிகவ் ஞானியார் அவர்களுக்கும் போட்டியில் பங்குபெற எனக்கு ஊக்கமளித்த நாகை சிவா அவர்களுக்கும் நன்றிகள்.
விமர்சனங்கள்:
பாலபாரதி:
// இன்னும் இருக்கிறது ஆகாயம் அவர்தம் வீட்டுக் கூரையாக //
நச் கவிதை.. உலகுக்கெல்லாம் ஒரே துப்பட்டியான ஆகாயத்தை வீடிழந்து துன்பப் படும் நபர்களின் வாழ்க்கையுடன் ஒட்டிக் காட்டுகிறார் கவிஞர்
நிலவு நண்பன்:
இதோ இந்தக் கவிதையில் பிச்சைக்காரி - வறியவர்கள் - நம்பிக்கை இழந்து பயணப்படுவோர்க்கெல்லாம் ஒரே ஆறுதலாக ஆகாயம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது என்று எழுதியிருக்கின்றார் கவிஞர். இன்னும் இருக்கிறது ஆகாயம் என்ற வரியோடு முடித்திருக்கலாம் ஆனால் அவர்தம் வீட்டுக் கூரையாக என்று நீட்டியிருக்கவேண்டாம். கவிஞர் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளையும் கருத்துக்களையும் மெருகேற்றியிருக்கலாம்.
கப்பி | Kappi 13 பின்னூட்டங்கள்
வகை கவித.., களத்தில் குதித்தவை
பனை மரத்துல வவ்வாலா!!
SR Tendulkar not out 141(148)
13 - 4s
5 - 6s
95.27 - SR
vs WI Played at Kinrara Academy Oval, Kuala Lumpur (neutral venue), on 14 September 2006 - day/night (50-over match)
"Look, as far as I'm concerned Tendulkar is God, and if you want to become a better player you've got to compete with the best."
- Brett Lee
http://content-ind.cricinfo.com/quote/content/current/page/156062.html
கப்பி | Kappi 77 பின்னூட்டங்கள்
25 Watts
"நான் போன வருடம் தான் இங்கே வேலைக்கு சேர்ந்தேன். படித்து முடித்ததும் ஒரு இசைக்குழுவில் கிடார் வாசித்துக்கொண்டிருந்தேன். அதற்குப் பின் அமெரிக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அமெரிக்கர்களுக்கு உருகுவே எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த ஊர் எனக்கு போர் அடித்துவிட்டது. நான் இத்தாலியன். ஆனால் இங்கு தான் வளர்ந்தேன். இந்த ஊர், இந்த ஆறு, இந்த கடற்கரை, என் பெற்றோர் இவர்களை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இங்கு உருகுவேயில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. தொழில்நுட்பக் கல்வி பெரிய அளவில் கிடையாது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த ஊர் எனக்குப் பிடித்திருக்கிறது. நீ 25 Watts படம் பார்த்திருக்கிறாயா? உருகுவேயில் எடுக்கப்பட்ட படம்"
"Whisky பார்த்திருக்கிறேன்"
"ம்ம்..அதுவும் உருகுவேயில் எடுக்கப்பட்ட படம் தான். அருமையான படம். ஆனால் நீ கண்டிப்பாக 25 Watts பார்க்கவேண்டும். உருகுவேயில் பள்ளிப் படிப்பு முடித்ததும் 18 வயதிலிருந்து 23, 24 வயது வரை இளைஞர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சீரழிகிறார்கள் எனக் காட்டும் படம். அதுதான் எங்கள் இளைஞர்களின் வாழ்க்கை. பெரிய குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தான்தோன்றித்தனமான வாழ்க்கை. அந்த படத்தைப் பார்த்தாயானால் உருகுவே மேல் உனக்கு தப்பான அபிப்ராயம் தோன்றும். அது உருகுவேயின் மற்றொரு முகம். அந்த படத்தை நீ கண்டிப்பாக பார்த்து உன் கருத்தை சொல்ல வேண்டும்".
என் அலுவலகத்தில் வேறொரு துறையில் வேலை செய்யும் மார்ட்டின் பரிந்துரைத்த படம் தான் 25 Watts.
லீச்சே(Leche), ஹேவி(Javi), சேபே (Sabe) என்ற மூன்று இளைஞர்களின் 24 மணி நேர வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார்கள். லீச்சே ஐந்து வருடங்களாக இத்தாலிய மொழி கற்றுக்கொண்டிருக்கிறான். ஆசிரியை மீது ஒரு தலைக்காதல் கொண்டிருக்கிறான். ஹேவி காரில் 'குழாய்' கட்டி விளம்பரம் செய்பவரிடம் வேலை செய்கிறான். சேபே படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
விடியோ கடைக்காரர், மனநலம் குன்றிய இளைஞன், பிட்ஸா டெலிவரி செய்யும் இளைஞன், கால்பந்தாட்ட வீரன், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும் முன்னாள் கைதி, லீச்சேயின் பாட்டி என அவர்களைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்களுடன் நடக்கும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் படமாக்கப் பட்டுள்ளன.
எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் புகை, மது, போதை, பெண்கள், பலான படங்கள் என இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் காட்டும் சீரான திரைக்கதை. ஆனால் சில் காட்சிகள் மிகவும் நீண்டு நம்மையும் சலிப்படையச் செய்கின்றன. மெல்லிய நகைச்சுவையுடன் வசனம் படத்திற்குப் பக்கபலம். 2001-ல் வெளிவந்த இந்த திரைப்படம் கருப்பு-வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.
உருகுவே நாட்டவர் ஒருவர் தொடர்ந்து ஐந்து நாட்கள் கை தட்டிக்கொண்டு இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறாராம். அவர் எதற்காக கை தட்டினார் என்று கேள்வி எழுப்பியபடி படம் முடிகிறது.
பார்த்த இரண்டு திரைப்படங்களும் உருகுவேயை, மக்களின் வாழ்க்கையை விமர்சிக்கும் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள். அடுத்தது பொழுதுபோக்கு திரைப்படம் ஒன்று பார்க்க வேண்டும்.
கப்பி | Kappi 43 பின்னூட்டங்கள்
வகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா
லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு
தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?' என தலைப்பு வைத்ததை அறிந்த சில சினிமா பிரபலங்கள் வலைப்பதிவாளர்களைக் கவர இந்த லிப்ட் மேட்டரைத் தங்கள் படங்களில் நுழைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்கஷன் ரூமில் எட்டிப்பார்த்தபோது:
கமல், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் அவரது அசிஸ்டெண்டுகள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தசாவதாரம் கதை விவாதத்தில் இருக்கிறார்கள்.
அசிஸ் 1: சார், இந்த மாசம் தேன்கூடு போட்டிக்கு 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'ன்னு டைட்டில் வச்சிருக்காங்க. அதையே நம்ம படத்துல சேத்துட்டோம்னா வலைப்பதிவாளர்களே படத்தை ஓட்டிடுவாங்க.
கமல்: அட நீ வேறய்யா..இப்பவே 'வேட்டையாடு விளையாடை' ஆளாளுக்கு துவைச்சு காயப்போடறாங்க. எந்த பக்கம் போனாலும் விமர்சன பதிவுன்னு ஒன்னு போட்டுடறாங்க..இதுல அவங்களையும் கூப்பிட்டு வம்பை விலைக்கு வாங்காதய்யா
ரவி: கமல் சார்..இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...நாம இந்த லிப்ட் மேட்டரை உள்ள கொண்டு வந்தா தசாவதாரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இப்ப இருந்தே விமர்சன பதிவு போட ஆரம்பிச்சுடுவாங்க. படத்துக்கு பப்ளிசிட்டி கண்ணாபின்னான்னு எகிறும்
கமல்: அதுவும் சரி தான். அப்போ தசாவதாரத்துல ஒரு அவதாரத்தை லாரி டிரைவர் ஆக்கிடலாம். அவனோட அடிமட்ட வாழ்க்கை நிலையைக் காட்டி படத்தை ஆரம்பிச்சு அவன் நாமக்கல்ல இருந்து கல்கத்தா போற வரைக்கும் வழில ஒவ்வொரு கமலுக்கும் லிப்ட் கொடுக்கறான்.
ரவி: அப்படியே 'நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்' னு டைட்டில் பாட்டு போடறோம்.
அசிஸ் : ஒவ்வொரு கமலுக்கும் சைடு டிராக்ல ஒரு லவ் ஸ்டோரி
கமல்(ஓரக்கண்ணால் அசிஸ்டெண்டைப் பார்த்து): உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கியா. அப்படியே டெவலப் பண்ணி சொல்லு
அசிஸ்டெண்டைப் புகழ்ந்ததும் ஜெர்க்காகும் ரவிக்குமார் இடையில் தன் டிராக்கை எடுத்து விடுகிறார்.
ரவி: அந்த லாரி ஓட்டற கமல் மத்த கமல் எல்லாரையும் கொன்னுட்டே வர்றான். அவன் கல்கத்தால கடைசி கமலை கொல்ல முயற்சி செய்யறான். அந்த கடைசி கமல் ஒரு டிசிபி. அவர் டிரைவர் கமல் ஒரு சைக்கோ, சீரியல் கில்லர்ன்னு கண்டுபுடிச்சு அவனுக்கு தூக்குதண்டனை தராரு.
கமல்: தூக்கு தண்டனை தர்றதுக்கு அவன் என்ன ஹைகோர்ட் நீதிபதியா ?? அவனைப் புடிச்சு ஜெயில்ல போடறதா காட்டினா போதும்.
ரவி: அப்படியே காட்டிடுவோம். லாரி டிரைவர் கமல் மத்த கமல் கொன்னது போக சில பெண்களை ரேப் பண்ணியும் கொன்னிருக்கான்னு காட்டினா இன்னும் த்ரில் கூடும்
கமல் (மெதுவாக): 'ரேப் சீன் காட்டலைன்னா இவனுக்கு படம் எடுத்த திருப்தி இருக்காதே'
அவர் முனுமுனுப்பதைப் பார்க்கும் ரவிகுமார் 'என்ன எதுனா பிரச்சனையா?' எனக் கேட்கிறார்.
கமல்: ஆமா ரவி. இப்போதான் வேட்டையாடு விளையாடுல ஒரு திரில்லர் சீரியஸ் படம் பண்ணினேன். இப்போ நான் கண்டிப்பா காமெடி படம் தான் செய்யனும். அப்போ தான் என் கணக்கு சரியா வரும்
ரவி (மனதுக்குள்) : கிழிஞ்சுது போ..மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமா
கமல்: பேசாம கதையை மாத்திடுவோம். தசாவதாரத்துல ஒரு கமல் ஒரு பில்டிங்ல லிப்ட் பாய். பாய்-னா பாய் கிடையாது. அவனை பாயாவே காட்டறோம்.
அசிஸ் : புரியலையே
கமல்: அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி உயரத்தைக் குறைச்சு வயசையும் குறைக்கறோம்
ரவி: சூப்பர்
கமல் : மத்த கமல் எல்லாரும் அதே பில்டிங்க்ல வேலை பாக்கறாங்க. இதை வச்சு ஆள்மாறாட்டம், பழி வாங்கல், வில்லன் எல்லாத்தையும் டெவலப் பண்ணுங்க.
அசிஸ்: ஒவ்வொருத்தர் காதலும் அந்த லிப்ட்லயே டெவலப் ஆகுதுன்னு வச்சுக்கலாம் சார்.
ரவி: கமல் சார், அந்த லிப்ட்ல வச்சே நீங்க ஹீரோயின் அத்தனை பேருக்கும் லிப் டு லிப் தர்றீங்க
கமல்: எங்கயோ போயிட்டய்யா...லிப்ட், லிப் டு லிப்...கேக்கவே நல்லா இருக்கு.
ரவி :இந்த ஷாட்டை வச்சே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுடலாம்.கதை போக போக அதுவா எதுனா வரும்
கமல்: இந்த லிப்ட் ஆங்கில வார்த்தையா இருக்கே...நான் வேணும்னா என் நண்பர்கள்ட்ட போன் போட்டு தமிழ் வார்த்தை என்னன்னு கேட்கவா என்றபடி செல்போனை எடுக்க அதைக் கேட்காதவாறு ரவியும் அசிஸ்டெண்டும் எஸ்ஸாகிறார்கள்.
*************************************************
கமல் லிப்ட் மேட்டரை தசாவதாரத்தில் நுழைப்பதைக் கேள்விப்பட்ட சிவாஜி யூனிட் தானும் களமிறங்குகிறது
ஷங்கர்: ரஜினி சார், ஏற்கனவே எடுத்து முடிச்சதுல பாதியை ரிலீஸ் பண்ணிட்டாங்க. பேசாம நாமளும் இந்த லிப்ட் மேட்டரை உள்ளே நுழைச்சாதான் சரிபடும்
ரஜினி: ஷங்கர்ஜி, ஏற்கனவே ரொம்ப நாளா படம் எடுத்துட்டு இருக்கோம். ரசிகர்கள் பாவம்ஜி. அதைவிட சரவணன் சார் ரொம்ப பாவம்ஜி
சத்யநாராயணா:இல்லைங்க, இந்த லிப்ட் மேட்டர் ஒர்க்-அவுட் ஆகும்
அப்போது தான் அவர் அங்கு இருப்பதைக் கவனித்த ரஜினி
ரஜினி:ஹேய் சத்தி, காது குத்துக்கு போகனும்னு சொன்னயே..கிளம்பலையா
சரவணன்(தனக்குள் மெதுவாக 'இப்படி கை கட்டி நின்னுட்டு இருந்தா எனக்கும் காது குத்திடுவாங்க' ): ஷங்கர், இந்த லிப்ட் கண்டிப்பா வேணுமா? இதை அடுத்த படத்துக்கு வெச்சுக்கலாமே..எல்லாத்தையும் இந்த படத்துலயே காட்டனுமா
ஷங்கர்: சார், படத்துக்கு ஒரு பிரமாண்டம் வர வேணாமா...கதையை அப்படியே இந்த லிப்ட் மேட்டரை மையமா வச்சு நகர்த்தறோம்
அவ்வளவு நேரம் வாசலில் இருந்து ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த வைரமுத்து
'சிவாஜி தருவான் லிப்ட், நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த கிப்ட்' என்றபடி உள்ளே நுழைகிறார்.
'இவரும் வந்துட்டாரா..இனி இவங்க அக்கப்போர் தாங்காதே' என சரவணன் ஜெர்க்காகிறார்.
ரஜினி: வாங்க வைரமுத்துஜி..இப்போ தான் சிவாஜில சில சேஞ்சஸ் பண்ணலாம்னு ஷங்கர்ஜி சொல்லிட்டு இருக்கார்
வைரமுத்து: கேட்டுக்கொண்டு தான் வந்தேன். வரும்போதே ரகுமான் தம்பியின் மெட்டுக்கு லிப்டை எப்படி நுழைக்கலாம் என யோசித்துக்கொண்டுதான் வந்தேன்.
ஷங்கர்: ஹை..நீங்களும் லிப்ட் விளையாட்டுக்கு வந்தாச்சா?
இதைக் கேட்ட சரவணன் 'விளையாட்டா' என அரண்டு போய் சோடா ஆர்டர் செய்கிறார்.
ரஜினி: சீக்கிரம் கதை சொல்லுங்கஜி. அடுத்த மாசத்துக்குள்ள ஷூட்டிங் முடிச்சா ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க போவேன்
ஷங்கர்: அடுத்த மாசத்துக்குள்ள முடிக்கறதா..நீங்க வேற..அடுத்த வாரம் நாம ஆஸ்ட்ரேலியா போறோம். அங்க சிட்னி ஓபரா ஹவுஸ்ல இருக்க லிப்ட்ல பாம் வச்சிடறாங்க. அதை நீங்க போய் எடுக்கறீங்க
ரஜினி: இறைவா
ஷங்கர்: என்ன சார் ஆச்சு
ரஜினி: ஆஸ்திரேலியா, பாம்லாம் வேணாம். வேற சொல்லுங்க
ஷங்கர்: சரி சார்..மெட்ராஸ்லயே கதை வச்சுக்கலாம். ஒரு பில்டிங்குக்கு நீங்க போறீங்க. அங்க லிப்ட்பாயா இருக்க வில்லன் நீங்க போக வேண்டிய பத்தாவது ப்ளோருக்கு கூட்டிட்டு போகாம ஒன்பதாவது ப்ளோர்லயே இறக்கி விட்டுடறாரு. இதுனால உங்க பரம்பரை சொத்து உங்க கை நழுவி போகுது
ரஜினி: எப்படி?
ஷங்கர்: அது இனிமேல் தான் யோசிக்கனும். ஃபுல் ப்ளோல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார். உடனே நீங்க அந்த வில்லன் கிட்ட சண்டை போடறீங்க. கோபமடைஞ்ச வில்லன் 'ஒரு நாள்..ஒரே ஒரு நாள் லிப்ட் பாயா இருந்து பாரு. அப்போ தெரியும் கஷ்டம்'ன்னு சவால் விடறான்.
ரஜினி: இந்த கதையை ஏற்கனவே என்கிட்ட வேற மாதிரி சொல்லி நான் வேணாம்னு சொன்ன மாதிரி இருக்கே.
ஷங்கர்: அது வேற சார். முழுசையும் கேளுங்க. சவாலை ஏத்துக்கற நீங்க ஒரு நாள் லிப்ட் ஆப்பரேட்டர் ஆகறீங்க. உங்க வேலையைப் பார்த்து அந்த பில்டிங் அசோசியேஷன்காரங்க எல்லாம் சேர்ந்து உங்களையே பெர்மனெண்ட் லிப்ட் ஆப்பரேட்டர் ஆக்கிடறாங்க. இதுல டென்ஷனான வில்லன் உங்க லவ்வரைக் கடத்திக்கிட்டு கனடா போயிடறான்.
ரஜினி: சாதாரண லிப்ட் ஆப்பரேட்டர் எப்படி கனடா போக முடியும்
ஷங்கர்(மெதுவாக): இன்னும் அந்த ஊர்ல தான் நான் ஷூட்டிங் எடுக்கல. அதனால அங்க தான் போகனும். (சத்தத்தை உயர்த்தி) அவன் ஊருக்கு தான் லிப்ட் ஆப்பரேட்டர். ஆனா அவன் ஒரு சர்வதேச கள்ளக்கடத்தல் தாதா. அவனை நீங்க எதிர்க்கறீங்க. இதைப் பார்த்து தமிழ்நாடே உங்க பின்னால நிக்குது.
வைரமுத்து: 'லிப்ட் பட்டன் தட்டு மாடியை எட்டும் வரை எட்டு முடிவெடு படையப்பா' என 'வெற்றிக் கொடி கட்டு ட்யூனில் பாட்டெடுக்க 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு லிப்டப்பா' என சத்தி கண்டினியூ செய்கிறார்.
ஷங்கர்: நீங்க கனடா போகறதுக்குள்ள வில்லன் அங்கயிருந்து சுவீடன் வர்றான். அவனை துரத்திகிட்டே நீங்க ரஷ்யா, மலேசியா, ஜப்பான், உருகுவேன்னு உலகம் பூரா சுத்தரீங்க. கடைசில அவன் பஸ் பாஸ் ரினீயூ பண்ண மெட்ராஸ் வரும்போது அவனை கப்புன்னு புடிச்சடறீங்க.அப்படியே மக்களின் ஆதரவோட தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடறீங்க
ரஜினி(மனதுக்குள்): இதை மட்டும் விட மாட்டேங்கறாங்களே
அப்போது 'திஸ் மேன் இஸ் எ மிராக்கிள். ஹி இஸ் எ வொண்டர்புல் ஆக்டர்' என கரகர குரலுடன் பாரதிராஜாவும் தொப்பியைக் கழட்டி கர்ச்சீப்பால் நெற்றியைத் துடைத்தபடி பாக்யராஜும் வர சரவணன் மயங்கிக்கிடப்பதைக் கூட கவனிக்காமல் அனைவரும் ஜன்ன்ல வழியாக ஓடுகின்றனர்.
************************************************
'தசாவதாரத்துக்கும் சிவாஜிக்கும் தர்மபுரி எந்த அளவுலயும் குறைஞ்சது இல்ல' என்றபடி கூலிங் கிளாஸ், பவுடர் பளபளக்க வரும் இயக்குனர் பேரரசைப் பார்த்து ஜெர்க்காகும் விஜயகாந்த் அருகில் இருக்கும் ராமுவசந்தனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.
ராமு: பேரரசு சார், கட்சி மீட்டிங் ஒன்னு கிளம்பிட்டு இருக்கோம். போய் நாளைக்கு வாங்க
என பேரரசுவைக் கழட்டிவிடப் பார்க்கிறார்.
பேரரசு: நான் கூப்பிட்டு வரதுல கில்லி, கூப்பிடாம வரதுல திருப்பாச்சி, கூப்பிட்டு கூப்பிடாம வரதுல சிவகாசி என பஞ்ச் டயலாக் ஆரம்பிக்க, கண்கள் சிவக்கும் விஜய்காந்த் அவரை உள்ளே அழைக்கிறார்,
விஜயகாந்த்: என்ன பேரரசு..தர்மபுரி செட்யூல் அடுத்த வாரம் தானே ஆரம்பிக்குது. அதுக்குள்ள என்னப்பா?
பேரரசு: சார், லிப்ட் பத்தி நீங்க ஒன்னும் கேள்விப்படலையா?
விஜயகாந்த்: என்ன சார் சொல்றீங்க?
பேரரசு: அவனவன் இந்த லிப்டை வச்சு பல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கான் சார். நானும் விர்ருன்னு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்.
எப்படியும் எஸ்கேப் ஆக முடியாது என கேப்டன் பெருமூச்சு விட பேரரசு தொடர்கிறார்.
பேரரசு: படத்துல நீங்க தர்மபுரில பந்தல் கட்டறவரா வர்றீங்க. தர்மபுரில எந்த கல்யாணம், காது குத்து எல்லாத்துக்கும் நீங்க தான் ராகவேந்திரா பந்தல் ஏஜெண்ட்.
இதைக்கேட்டதும் கலக்கமடையும் கேப்டன்: சார், மீதி கதையை நாளைக்கு கேட்டுக்கறேனே..இப்போ கட்சி கொடி ஏத்தற பங்சன் ஒன்னு இருக்கு
பேரரசு: இருங்க சார் முடிச்சுடறேன். நீங்க பந்தல் காண்ட்ராக்டர். அந்த ஊர்ல ரோடு போட்ட காண்ட்ராக்டர் ஊழல் செஞ்சு ரொம்ப மோசமான் ரோடா போட்டதால நீங்க போட்ட பந்தல் எல்லாம் நிக்காம சரிஞ்சு விழுந்து உங்க தொழிலே நாசமா போயிடுது
விஜயகாந்த்(மனதுக்குள்): தர்மபுரி ஆரம்பிச்சதுல இருந்தே இந்த பயம் இருக்குது
பேரரசு: நீங்க அந்த காண்ட்ராக்டரை அடிச்சு உதைச்சு அவரோட முகமூடியைக் கிழிக்கறீங்க. தர்மபுரி புல்லா புதுசா காண்டிராக்ட் விட்டு நல்ல ரோடு போட வழி செய்யறீங்க
ராமு: கேப்டன், அந்த காண்டிராக்டை நம்ம கட்சி ஆளுங்களுக்கு தர்ற மாதிரி பண்ணிடுவோம்
விஜயகாந்த்: யோவ் நீ சும்மா இருய்யா. நீங்க மேல சொல்லுங்க.
பேரரசு: இப்போ தான் மெயின் ஸ்டோரி. நான் அதே ஏரியாவில ஒரு கட்டடத்துல லிப்ட் ஆப்பரேட்டரா இருக்கேன். ஒருநாள் லிப்ட்ல குண்டான ஆசாமிங்க அஞ்சு பேர் ஏறினதால லிப்ட் பாதில நின்னுடுது. நீங்க உடனே லிப்ட் ரோப் வழியா உள்ள இறங்கி அந்த அஞ்சு பேரையும் காப்பாத்தறீங்க
விஜயகாந்த்(பெருமூச்சுடன்): ம்ம்..சொல்லுங்க
பேரரசு: இந்த சம்பவத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து குண்டா இருக்கவங்களுக்கு தனியா லிப்ட் வேணும்னு போராட்டம் பண்றோம். அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரவுது. என் போட்டோவும் அதுக்கு கீழ உங்க போட்டோவும் போட்டு தமிழ்நாடு முழுக்க போஸ்டர் ஓட்டறாங்க. கடைசில அரசு நம்ம கோரிக்கைக்கு அடிபணிஞ்சு தனித் தனி லிப்ட் வைக்கனும்னு ஆணை இடுது
ராமு: தலைவா, முழிச்சுக்கோங்க. இந்தாளு திருப்பதியை மறுபடியும் உங்களுக்கு உல்டா பண்றான். கொஞ்சம் அசந்தா உங்களையும் செக்ண்ட் ஹீரோ ஆக்கிருவான். உசார்.
விஜயகாந்த்: சார், கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இது வேணாம். உங்க கேரக்டர் இல்லாம தனியாவே கதை சொல்லுங்க. ஏற்கனவே ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு
கதையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்ததும் கவலையடைகிற பேரரசு, படத்தில் நடிக்காவிட்டாலும் டைரக்ஷன் வாய்ப்பை விடக்கூடாது என அடுத்த கதையை யோசிக்கிறார்.
பேரரசு: இதே லிப்ட் மேட்டரை வேற மாதிரி வச்சுக்கலாம் சார். நீங்க தர்மபுரில இருந்து மெட்ராசுக்கு பைக்ல வர்றீங்க. அப்போ ஆம்பூர் பக்கத்துல ஒரு கல்யாண கோஷ்டி வந்த லாரி ப்ரேக்டவுன் ஆகி நிக்குது. அதுக்கு காரணம் கலப்படமான பெட்ரோல். அதைப் பார்த்து பொங்கி எழுந்து, அந்த லாரியை உங்க பைக்ல கயிறு போட்டு கட்டி லிப்ட் கொடுக்கறீங்க. அப்படியே அந்த மக்களோட சென்னை நோக்கி வர்றீங்க. திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம், பெரும்புதூர், பூந்தமல்லின்னு நீங்க வர்ற வ்ழி முழுக்க மக்கள் கூட்டம் அலைமோதுது
ராமு: அப்படியே நம்ம தொண்டர்களையும் கொடியையும் ஒவ்வொரு ஊர்லயும் காட்டிட்டு வரலாம்
பேரரசு: நீங்க மெட்ராஸ் உள்ள வரதுக்கு போலிஸ் தடை விதிக்குது. பூந்தமல்லி பைபாஸ்ல நீங்க வெயிட் பண்ணும்போது அந்த பெட்ரோல் பங்க் முதலாளி உங்களைக் கொல்ல ஆள் அனுப்பறான். அவங்களை அந்த லாரிலயே லெக்பைட் போட்டு அடிச்சுபோட்டுடறீங்க.
லெக் பைட் என்ற வார்த்தையைக் கேட்டதும் கேப்டன் குஷியாகிறார்.
விஜயகாந்த்: இப்போதான் விறுவிறுப்பா இருக்கு. அப்படியே டாப் கியர்ல போங்க
பேரரசு: நீங்க மக்களுடன் சேர்ந்து போராட்டம் பண்றீங்க. ஹைவேல வண்டி ப்ரேக்டவுன் ஆகி நிக்கற்வங்களுக்கு லிப்ட் தர்றவங்க அவங்க வீட்டுக்கே கொண்டு வந்து விடனும்னு சட்டம் கொண்டு வர்றதுக்கு போராடறீங்க. அரசும் தலை பணிஞ்சு அந்த மாதிரி சட்டம் கொண்டுவருது.
விஜயகாந்த்: கதை சூப்பர் பேரரசு. இவ்வளவு நாளா உங்களைத் தப்பா நினைச்சுட்டேனே
என்று பீலாகும்போது "வருவான் சார். வல்லவன் வருவான் சார். என் கேரியருக்கு ஒரு லிப்ட் சார் வல்லவன். நயந்தாராவுக்கு கொடுத்தது லிப்டான்னு கேட்டா சொல்லத் தெரியல. வாழ்க்கை முழுக்க கூட வருவாங்களா..இப்ப சொல்ல முடியாது. சொல்லி அடிக்கறவன் தான் இந்த சிம்பு" என எக்குதப்பாக பேசிக்கொண்டு சிம்பு எண்ட்ரி கொடுக்க "இவன் நமக்கு மேல பெருந்தொல்லையா இருக்கானே" என மனதுக்குள் எண்ணும் பேரரசு "யப்பா சிம்பு, தேனப்பன் கார் பஞ்சர் ஆகி பஞ்சர் ஓட்ட காசு இல்லாம ஜெமினி பக்கத்துல லிப்ட் கேட்டு ரொம்ப நேரமா வெயில்ல நின்னுட்டிருக்காராம். என்னன்னு பாருப்பா" என்று சொல்லிவிட்டு திரும்ப கேப்டனும் ராமுவசந்தனும் ஏற்கனவே எஸ்ஸாகியிருந்தனர்.
கப்பி | Kappi 53 பின்னூட்டங்கள்
சினிமா! சினிமா!! சினிமா!!!
வடபழனி மாநகரப் பேருந்து பணிமனைக்கும் வசந்த பவனுக்கும் இடையில் செல்லும் குமரன் காலனி சாலையில் துணை நடிகர்கள், சின்னத் திரை நடிகர்கள், துணை நடிகர்கள் ஏஜெண்டுகள் என பலவகையான சினிமாத் தொழிலாளர்களின் சங்கங்கள் இருக்கும். அந்த சாலையிலுள்ள டாஸ்மாக் வாசலிலும் டீக்கடைகளிளும் சண்டைப் பயிற்சியாளர்கள், நடனக் கலைஞர்கள் துணை நடிகர்கள் என 'எங்கேயோ பார்த்த' முகங்களை அடிக்கடி பார்க்கலாம்.
***********************************************************
அந்த சாலையில் இருக்கும் டீக்கடையில் ஒரு நாள் கல்லூரி நண்பர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அவர் உறவினர் ஒருவரும் உடனிருந்தார். அவர் நடிக்க வாய்ப்பு தேடி மதுரையில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் சென்னை வந்தவர். இப்போது நடிக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது எனக் கேட்டதற்கு "இப்போ கூட சசசின் படத்துல நடிச்சிருக்கேன்.படம் பார்த்துட்டீங்களா?" என்றார். படம் பார்த்திருந்தாலும் அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில்லை. "படத்துல விஜயோட அப்பா ரகுவரன் வரும்போது பின்னாடி நின்னு 'இந்தியாவிலேயே பெரிய தொழிலதிபர்கள்ல ஒருத்தர் இவர்'ன்னு சொல்றது நான் தான். ஞாபகம் இருக்கா" எனக் கேட்டார்.
அப்போது அது கேலிக்குறியதாகத் தோன்றினாலும் யோசித்துப் பார்க்கையில் கதாநாயகனாவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்தவர் நான்கு வருடங்கள் கழித்தும் துணை நடிகராகவே இருப்பது திரையுலகின் இருண்ட முகத்தைக் காட்டியது.
***********************************************************
சமயங்களில் டீக்கடைகளில் திரைக் கலைஞர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஒரு முறை அடிக்கடி திரையில் தோன்றும் ஒரு துணை நடிகரும் அவர் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். வாய்ப்புகள் எப்படியிருக்கிறதென நண்பர் கேட்டதற்கு "இப்போ ரொம்ப நல்லாவே வந்துட்டு இருக்குங்க. இப்போ சூர்யா கூட பஸ் கண்டக்டரா ஒரு படம்..நல்ல ஸ்கோப் இருக்கு..அடுத்த வாரம் யூனிட் பொள்ளாச்சி போகுது. இப்போ கைல ஒரு நாலஞ்சு படம் இருக்கு. இன்னும் நல்லா வரும்" என்றார்.
இன்றும சில படங்களில் அவரைக் காணும்போது அன்றைய உரையாடல் நிழலாடுகிறது. இத்தகைய நம்பிக்கையும் விடாமுயற்சியுமே இவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.
***********************************************************
என் தூரத்து உறவினர் ஒருவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் சென்னையில் இணை எடிட்டராக இருந்தார். அவரை சந்திக்கும் வேளைகளில் இளம் கதாநாயகர்கள் எப்படி தாங்களே பணம் போட்டு நடிக்கிறார்கள் என்பதில் இருந்து பல சுவாரசியமான விடயங்களைச் சொல்லுவார். இணை எடிட்டர் என்றாலும் அவருக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. திரைப்படம், தொலைக்காட்சி தொடர் என எல்லாவற்றிலும் வேலை பார்த்தார்.
குடும்பப் பிரச்சனைகள் காரணமாக சென்ற வருடம் அவர் சினிமாவை விட்டுவிட்டு காஞ்சியில் ஒரு பட்டு கோறா கடையைத் திறந்தார். என் உறவினர் ஒருவருடன் கடைவீதியில் பேசிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரை சந்திக்க நேர்ந்தது. "இப்ப ஆரம்பிச்ச கடையை பத்து வருஷம் முன்ன ஆரம்பிச்சிருந்தா எங்கயோ போய் இருப்ப. இப்பவாவது புத்தி வந்துச்சே" என்று கடிந்துகொண்ட என் உறவினருக்கு அவரால் ஒரு வறண்ட புன்னகையே பதிலாகத் தர முடிந்தது.
***********************************************************
சினிமாவில் செட்டில் ஆன, வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதவேண்டும்.
கப்பி | Kappi 37 பின்னூட்டங்கள்
உறக்கம் தொலைக்காத காலையில்
உறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.
போன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா? சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.
அப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.
பூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.
தூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.
திடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
ஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.
பக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.
தூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.
'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.
காலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். "நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.
அந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய?
போன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.
ஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட "செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே"ன்னு கேட்டா "அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.
என்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப?'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்? அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.
கப்பி | Kappi 45 பின்னூட்டங்கள்
நட்பின் வழியது
இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்
அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்
நான் அனுப்பி பதில் இல்லாத,
நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்
தேவையற்றதாகத் தோன்றி
பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்
நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்
நான் வர முடியாமல் போன
உன் விவாகம்
அடைக்க மறந்த கடன்
அதைக் கேட்டுத் தொலைத்த நீ
இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!
--------------------------------------------------------------------------------
டயலாக்:
"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"
"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"
கப்பி | Kappi 44 பின்னூட்டங்கள்
Whisky
இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.
இந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.
ஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.
தினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.
இதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.
ஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.
தன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
ஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.
எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.
மிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.
மூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.
உடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.
படத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'
கப்பி | Kappi 38 பின்னூட்டங்கள்
வகை சினிமா, ஸ்பானிஷ் பெலிகுலா
இந்த படங்கள் எப்போ ரிலீஸ்??
"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்"
இது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.
இது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.
'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.
இவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :
துள்ளல்:
ரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்(?!) தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.
வீராச்சாமி:
சிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.
இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)
கப்பி | Kappi 38 பின்னூட்டங்கள்
வகை சினிமா, ச்சும்மா..ச்சும்மா
கயல்விழி
சுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.
சுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.
சுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.
அவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.
அன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.
"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்"
"ஓ..போட்டோ குடுத்திருக்காங்களா?"
"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொண்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்"
"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்".
போனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.
"எந்த ப்ராஞ்சுன்னு தெரியலயாடா?"
"தெரியல மச்சி"
"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.
"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்"
"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?'" - இந்த பக்கத்திலிருந்து லதா.
"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது?"
"கயல்விழி மகாதேவனா?"
"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க"
"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்"
"லதா, பாக்க எப்படி இருப்பாங்க?" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.
"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.
அதற்குள் சுந்தர் "இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா? போன்லயே பேசிடலாம்"
"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்".
சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.
"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்"
"ம்ம்..சொல்லுங்க"
"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு"
"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்"
"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா?"
"ஆமாங்க. கொஞ்சம் வேலை..லேட்டாயிடுச்சு.."
"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?"
"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா? தப்பா நினைச்சுக்காதீங்க"
"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்"
"குட்நைட்"
'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.
வழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.
"சுந்தர் பேசறேங்க"
"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க?"
"நலம். எங்க இருக்கீங்க?"
"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா?"
"கண்டிப்பாங்க..நாலு மணிக்கு பண்ணவா?". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.
'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.
மதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.
"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?"
"ஆமாங்க..இன்னும் வேலை முடியல"
"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்"
"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்"
"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா?? உங்களைப் பார்க்க முடியுமா?"
"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்"
"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்"
"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு"
"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா? அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க"
"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்"
"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க"
"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு"
"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது"
"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் பேசிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்."
சுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.
இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.
கப்பி | Kappi 55 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
தோப்பில் ஒரு நாடகம்
'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.
ஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.
முதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனமா இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.
இந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.
இப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க(!!) ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.
இப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.
இப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.
கதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.
அந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பசங்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்(?!) போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க!). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.
இப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா(?!) நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால "டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.
கதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.
இதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.
இதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.
இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )
ஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையா?நாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).
அதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.
பாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.
இதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.
அப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).
கப்பி | Kappi 30 பின்னூட்டங்கள்