பேருந்து பயணங்களில்...

சில்லறை இல்லையென சிடுசிடுக்கும் நடத்துனரில் ஆரம்பித்து பொதுவான விஷயங்கள் எல்லாப் பயணங்களிலும் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.

கல்லூரியில் படித்த நாட்களில் காஞ்சி-மதுரை இடையேயான பேருந்து பயணம் அலாதியானது. இரவு முழுவதுமான பயணத்தில் இரண்டு மூன்று இடங்களில் டீ அருந்த நிறுத்துவார்கள். முக்கியமாக விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு மோட்டலில் எல்லாப் பேருந்துகளும் நின்று செல்லும். முதலில் 'சூர்யா' என்ற பெயரில் சூரியனைக் கொண்டிருந்த அந்த மோட்டலின் பெயர்ப்பலகை ஆட்சி மாற்றத்துக்கேற்ப 'JJ' என்ற பெயரில் பச்சை நிறத்துக்கு மாறியது. இப்போது என்ன பெயரில் இருக்கிறதோ தெரியவில்லை. எந்த நேரம் சென்றாலும் குறைந்தது நான்கைந்து பேருந்துகளாவது அங்கு நின்றுகொண்டிருக்கும். அங்கு கண்டிப்பாக நிறுத்திச் செல்ல வேண்டும் என மேலதிகாரியிடமிருந்து வாய்மொழி ஆணை இருப்பதாக ஒரு நடத்துனர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மோட்டல்களில் இருந்து கிளம்பும் வேளைகளில் பயணிகளில் எவராவது ஒருவர் காணாம்ல போயிருப்பார். அவர் வந்து சேரும் அந்த ஓரிரு நிமிடங்களில் பயணிகள் அனைவரின் சகிப்புத்தன்மையும் தெரிந்துவிடும். இரவு முழுவதுமான பயணத்தினால் அடுத்த நாள் வகுப்புக்குச் சென்றதாய நினைவில்லை.

அதன் பின்னர் சென்னையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வாரம் ஒருமுறையாவது காஞ்சிபுரத்திற்குப் பயணம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் பல்வேறு மனிதர்களைக் காணமுடியும். அதிலும் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில் உட்கார இடம் பிடிக்க எத்தனிக்கும் நேரங்களில் ஒரு சராசரி மனிதனிடம் காணப்படும் வேகம் என்னைப் பல நேரங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. கையில் கிடைத்ததை ஜன்னல் வழியாக சீட்டில் எறிந்துவிட்டு இருக்கைக்கு பட்டா போடுவது நம் பண்பாடாகிவிட்டது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது.

படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.
தொங்கியபடி பயணம் செய்பவன் உள்ளே இருப்பவர்களை நகரச் சொல்வதும் உள்ளே நிற்க இடம் கிடைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த கம்பியை விட்டு அகல முடியாமல் அப்படியே நிற்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்.

அழகான இள வயது மகளுடன் பயணம் செய்யும் தந்தையின் அவஸ்தைகளையும், கண்கள் உள்ளடங்கிய முதியவரின் தனிமையையும் இந்தப் பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

மீதி சில்லறை தராமல் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கித் தரும் நடத்துனர் பயணிகளுக்கு வில்லனாகவே தெரிவார். ஒவ்வொரு முறை நடத்துனர் தன்னைக் கடந்து செல்லும் போதும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் நம் பயணத்தை சுவாரசியமாக்குவார்கள்.

ஜன்னலோர இருக்கை கிடைக்காத நாட்களில் ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பொறாமைக்குள்ளாகிறார்கள். அத்தகைய பயணங்களில் அவர்கள் ஜன்னலை மூடினால் அவர்கள் மேல் கோபம் வருவதை தவிர்க்கமுடிவதில்லை.

ஒவ்வொரு பயணத்தின் போதும் யாராவது ஒருவரின் பயணம் அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி நீள்கிறது. முன்பின் சென்றிராத ஊர்களுக்குச் செல்லும் போது இறங்க வேண்டிய நிறுத்தத்தை வந்துவிட்டதா எனத் திரும்பத் திரும்பக் கேட்பதும், இருந்தும் அந்த நிறுத்தத்தை இறங்காமல் விட்டுவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

மழைக்காலங்களில் பேருந்து பயணங்கள் நீண்டவையாக இருக்கின்றன. ஜன்னல் திரைகள் இறக்கிவிடப்பட்ட பின் பேருந்தினுள் சிறைபட்டுவிட்டது போன்ற அச்சம் எழுகிறது.

எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நாளும் பேருந்து பயணங்களும் அது தரும் அனுபவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.



13 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி பெங்களுர் டவுன் பஸ்ஸில் டிராவல் பண்ணின அனுபவம் இருக்கா...

சொன்னது...

//எதிர் சீட்டுல வந்து உக்கார்ரவுகளயே கவனிச்சதுல //

எதிர் சீட்டுல யாரும் இல்லாம கடுப்புல இருந்தப்போ கவனிச்சது தான் இதெல்லாம்..

//ஹி..ஹி..நம்புங்கப்பா...ஹி..ஹி..//
நம்பிட்டோம்..நம்பிட்டோம்...:))

சொன்னது...

//கப்பி பெங்களுர் டவுன் பஸ்ஸில் டிராவல் பண்ணின அனுபவம் இருக்கா//

இல்லாமலா..

கொத்தில்லா,கோகோதில்லா..இதைத் தவிர வேற எதுவும் தெரியாது...

இப்பல்லாம் பெங்களூர் வந்தா நண்பனோட பைக்தான்..பெங்களூர் டவுன் பஸ்ல போய் ரொம்ப நாளாச்சு :))

உங்களுக்கு என்னப்பா..நல்ல volvo டவுன் பஸ் விடறாங்களே...

சொன்னது...

கப்பி...கலக்கிட்டீங்க போங்க. நம் வீட்டை விட்டு வேறொரு இடத்தில் வெகு தொலைவு இருக்கும் போது இம்மாதிரியான விஷயங்களை அசை போடுவதில் தான் எத்தனை மகிழ்ச்சி! நீங்கள் சொல்லுவது போல பேருந்து பயணம், பல தரப்பட்ட மனிதர்களையும், அவர்களின் பல தரப்பட்ட உணர்வுகளையும் பல தரப்பட்ட அனுபவங்களையும் காணும் மேடையாக அமைகிறது. இதை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன்,

தென்னாற்காடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் காவி வேட்டி கட்டிய கண்டக்டர்கள் 'யார் சீட்டு...கேட்டு வாங்கிக்க' என்று கேட்பதிலாகட்டும், கோயம்புத்தூரில் சேரன்(முன்னாள்) பஸ்களில் ரைட்டு சொல்வதற்குப் பதிலாகத் தந்தி அடிப்பதிலாகட்டும், சென்னையில் கண்டக்டர்கள் 'ரே ரே'வும் 'எறங்கி ஏறு'ம் சொல்வதிலாகட்டும், கூட்டம் நிறைந்த வேளைகளில் பெங்களூர் கேஎஸ்ஆர்டிசி கண்டக்டர்கள் கீழே இறங்கி 'பேகே இள்றி' என்று துரிதப்படுத்துவதிலாகட்டும், புது தில்லி டிடிசி நடத்துனர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஹரியான்வி மொழியில் 'டிகிட் போள் பாய்' எனக் கடித்துத் துப்புவதிலாகட்டும் நடத்துனர்களின் 'மேனரிசங்களைக்' காண்பதும் ஒரு தனி ஜாலி தான்.

எங்காவது மோட்டலில் நின்று விட்டு பஸ் கெளம்புவதற்கு முன்னால், வெளியில் நின்று தம்மடித்துக் கொண்டிருக்கும் கணவர் வராததால், 'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் சொல்வதும் டிரைவர் 'பத்து நிமிசம்னு சொன்னேனேமா' என அலுத்துக் கொள்வதும் சம்பந்தப்பட்ட 'தம் ஆளுநரின்' குடும்பத்தவர்களின் இதயத் துடிப்பை அதிகப் படுத்துவதற்காக ''ட்ர்ன்ன்ன் ட்ர்ன்ன்ன்ன்' என்று வண்டியை சவுண்டு அதிகமாகக் கொடுக்கச் செய்வதும், தம் அடித்துக் கொண்டிருந்தவர் எங்கிருந்தோ அவசரமாக அவசரமாக ஓடி வந்து ஏறுவதும் 'இப்ப அந்த சிகரெட் குடிக்கலைன்னா தான் என்னா?'னு வூட்டுக்கார அம்மாவிடம் பாட்டு வாங்கி அசடு வழிவதும் [இது எங்க வீட்டிலும் நடந்திருக்கு :)] பேருந்து பயணங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒன்று.

அதனுடன் நீங்கள் தங்கள் ஆறு பதிவில் கூறியிருப்பது போல் 'மாமா மடியில் உக்காந்துக்கோடா'னு சிறுவர்களிடம் பெற்றோர்கள் சொல்வதும் 'is very much a bus phenomenon'. :)

உங்களுடைய 'அப்சர்வேசன்கள்' அனைத்தும் அருமை.
//படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.//
இது இன்னும் சுவாரசியமானதாய்ப் படுகிறது. என்னன்னு விளக்குனீங்கன்னா நல்லாருக்கும்.

சொன்னது...

தல கைப்பு...

கலக்கிட்டீங்க..

நான் சொல்லாமல் விட்டுப் போன சுவாரசியமான விஷயங்களை சொல்லிட்டீங்க..

//இம்மாதிரியான விஷயங்களை அசை போடுவதில் தான் எத்தனை மகிழ்ச்சி!//

அதே அதே :)

நடத்துனர்களின் மேனரிசங்களையும் கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள்...

அதே போல் விட்டுப் போன இன்னொரு விஷயம்...நடத்துனரோ, ஓட்டுநரோ, தாங்கள் பேசுவதைக் கேட்க ஒரு ஆள் கிடைத்துவிட்டால் பயணம் நெடுக அவர்களின் மொத்த கதையையும் அனுபவங்களையும் கூறிக் கொண்டு வருவார்கள்...

//'கொஞ்சம் நிறுத்துங்க இன்னும் அவர் வரலை' என்று யாராவது ஒரு பெண் சொல்வதும் //
ரொம்பப் பாவமா நிப்பாங்க..அப்போதான் நம்மாளுங்க அவங்க கெத்தையும் காட்டுவாங்க :))

//'மாமா மடியில் உக்காந்துக்கோடா'னு சிறுவர்களிடம் //
ரொம்ப சந்தோஷமா இருக்கு கைப்பு...இன்னும் அங்க எழுதினதை மறக்காம இருக்கீங்க...

////படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.//

கல்யாணம் ஆயிட்டாலே படியில தொங்கறது குறைந்துவிடும். என் மாமாவுடன் சிறு வயதில் ஊருக்கு செல்லும் நாட்களில் சூப்பராக புட்போர்ட் அடிப்பார்...திருமணமான பின்னர் கூட்டமான பேருந்து வந்தால் அடுத்த பேருந்தில் போகலாம் என ஏறாமல் விட்டு விடுவார்...

பொறுப்பு வந்ததும் ஒரு பயம் வருமே அதை சொன்னேன் :))

சொன்னது...

கைப்ஸ் பதிவிலிருந்து இங்கே வந்தேன்..

//மீதி சில்லறை தராமல் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கித் தரும் நடத்துனர் பயணிகளுக்கு வில்லனாகவே தெரிவார். ஒவ்வொரு முறை நடத்துனர் தன்னைக் கடந்து செல்லும் போதும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் நம் பயணத்தை சுவாரசியமாக்குவார்கள்.//

பொதுவாக நான் இதைப் பார்த்ததில்லை.. (நம்ம வேற வேற ஊரோ..) கண்டக்டர் அவரே ஞாபகம் வச்சிருப்பார். கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டம் குறைஞ்சதும் அவர் கையில் சில்லறை அகப்பட்டதும் அந்தப் பக்கம் வரும்போது அவரே ஞாபகமா கரெக்டான சில்லறையைக் கொடுத்துடுவார். கண்டக்டர்களுக்கே உரிய அந்த அதீத ஞாபகசக்தியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கும்.

சொன்னது...

கப்பி,
உன் மேல எனக்கு பயங்கர கோபம்பா...

இவ்வளவு சூப்பரா எழுதற... ஆனா அடிக்கடி எழுத மாட்ற.. ஏதோ இந்த வாரம்தான் 2 போட்டுருக்க...

வாரத்துக்கு 2வது எழுதுப்பா!!!

அட்டகாசமா எழுதியிருக்க... நானும் இதே மாதிரி ஒண்ணு போடறேன்... ஆனா உன் அளவுக்கு இயல்பா எழுத முடியாது...

சொன்னது...

நானும் இது முதலில் வந்த போது விட்டுட்டேனே. இப்போ கைப்ஸ் பதிவுலேந்துதான் வந்தேன்.

பள்ளி செல்லும் போதும் கல்லூரி செல்லும் போது கிடைத்த வேறுபட்ட அனுபவங்கள், அடித்த லூட்டிகள், டவுண் பஸ்ஸுக்கும், மொபஸல் வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத சிட்டி பசங்களை பார்த்து சிரித்தது, டிக்கெட் எடுக்காமல் செல்லும் த்ரில், பஸ் டோக்கன் தீர்க்கவே அடிக்கும் வெத்து ட்ரிப்கள், புட் போர்டில் தொங்கி கண்டக்டர் இரத்த கொதிப்பை ஜாஸ்தியாக்குவது, ட்ரைவருடன் செண்டி போட்டு ஸ்டாப்பில் இல்லாமல் வீட்டு வாசலில் இறங்கிக் கொள்வது, 20 வருடங்களுக்கு முன்னால் கே.டி.சி (கட்டபொம்மன்) 4-ம் நம்பர் ரூட்டில் வரும் கருப்பசாமி பாண்டியன் கண்டக்டர் என என்னென்னவோ ஞாபங்களைக் கிளப்பி விட்டுட்டீங்களே....

நல்ல பதிவு கப்பி.

சொன்னது...

//பொதுவாக நான் இதைப் பார்த்ததில்லை.. (நம்ம வேற வேற ஊரோ..) கண்டக்டர் அவரே ஞாபகம் வச்சிருப்பார். கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டம் குறைஞ்சதும் அவர் கையில் சில்லறை அகப்பட்டதும் அந்தப் பக்கம் வரும்போது அவரே ஞாபகமா கரெக்டான சில்லறையைக் கொடுத்துடுவார். கண்டக்டர்களுக்கே உரிய அந்த அதீத ஞாபகசக்தியைப் பார்த்தா பிரமிப்பா இருக்கும்.
//

வாங்க சேதுக்கரசி,
கரெக்டா சொன்னீங்க...கண்டக்டர்களின் ஞாபகசக்தியும், வண்டியின் ஆட்டத்திலேயே ஒவ்வொரு ஸ்டேஜிலும் டிக்கெட் கணக்கை குறிப்பதும் ஆச்சரியமூட்டுபவை..

சில்லறை இருந்தால் அவர்களாகக் கொடுத்துவிடுவார்கள்..அவர்களிடம் சில்லறை இல்லாதபோது பயணிகள் லுக் விடுவார்களே..அதைச் சொன்னேன் ;)

சொன்னது...

//கப்பி,
உன் மேல எனக்கு பயங்கர கோபம்பா...

இவ்வளவு சூப்பரா எழுதற... ஆனா அடிக்கடி எழுத மாட்ற.. ஏதோ இந்த வாரம்தான் 2 போட்டுருக்க...

வாரத்துக்கு 2வது எழுதுப்பா!!!
//

சட்டி..அகப்பை...ஹி ஹி ;)


//அட்டகாசமா எழுதியிருக்க... நானும் இதே மாதிரி ஒண்ணு போடறேன்... //

நன்றி வெட்டி!
சீக்கிரமா போடுங்க...ஐ யாம் தி வெயிட்டிங் ;)

சொன்னது...

//நானும் இது முதலில் வந்த போது விட்டுட்டேனே. இப்போ கைப்ஸ் பதிவுலேந்துதான் வந்தேன்.
//

வாழ்க கைப்ஸ் :))

//
என்னென்னவோ ஞாபங்களைக் கிளப்பி விட்டுட்டீங்களே....
//

அட ஒரு பின்னூட்டத்துல இத்தனை சுவாரசியமான விஷயங்களை சொல்லிட்டீங்களே ;)
இது மாதிரி அடிக்கடி ஞாபகங்களை அசைபோடுவதும் ஒரு சுகம் தானே!

//
நல்ல பதிவு கப்பி
//

நன்றி கொத்ஸ்!

சொன்னது...

ரொம்ப நல்ல சொல்லிருக்கீங்க...

//சட்டி..அகப்பை...ஹி ஹி ;)//

யாருக்கு, உங்களுக்கா இல்லை வெட்டிக்கா???

சொன்னது...

//ரொம்ப நல்ல சொல்லிருக்கீங்க...
//

நன்றி உதய்!

//சட்டி..அகப்பை...ஹி ஹி ;)//

யாருக்கு, உங்களுக்கா இல்லை வெட்டிக்கா???
//

ஆகா அட்லாசு...நாங்க தான் உங்களுக்கு வைக்கனும்..நீங்க இப்படியெல்லாம் கேட்கப்படாது.
எனக்குத்தான் உதய் சொன்னேன் :)