?! தொடர்கிறது

காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?

சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.

****

டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

****

சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.

பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.

****

அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.

சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.

'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.

****

'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.

சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.



D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.



பாட்டுத் தலைவன் பாடினால்

"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"

அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.

"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"

"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.


சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.


பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.





அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.


கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.


உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.




என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.

அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன்.


சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு.


கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.



டெஸ்குடா(ஆ)ப்பு & Vanilla Mood

சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.





நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம்.

கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.




ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க! :))


***


Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.




***



சினிமா - தொடர்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்பதோ முதலில் பார்த்த திரைப்படமோ நினைவிலில்லை. ஆனால் சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தது மிகவும் குறைவு. அப்பா/அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. (அப்பா கடைசியாக தியேட்டரில் பார்த்த திரைப்படம் 'பூவே உனக்காக'. அம்மா 'பூவே உனக்காக'விற்குப் பிறகு 'சிவாஜி' பார்த்தார்). அக்காக்களோ சித்தியோ மாமாவோ ஊருக்கு வரும்போது அழைத்துச் செல்வார்கள்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக அப்பா வீடியோ கேசட்/பிளேயர் வாங்கி வந்து படம் பார்த்ததுண்டு. சிறு வயதில் கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது தூர்தர்ஷனின் ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை 40-50 பேர் மத்தியில் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து பார்த்த நாட்கள் நினைவிலிருக்கிறது. கூடம் நிரம்பி நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். கோடை விடுமுறையிலோ பண்டிகை நாட்களிலோ தாத்தா வீட்டில் அக்கா/சித்தி என்று கூட்டம் சேர்ந்துவிட்டால் வண்டி கட்டிக்கொண்டு வந்தவாசிக்கு வந்து படம் பார்ப்போம்.

சில போலீஸ் படங்களைப் பார்த்து போலீஸாக வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.

நினைவு தெரிந்து முதன்முதலில் வரிசையில் அடித்து பிடித்து 'மன்னன்' ரேஞ்சுக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்த திரைப்படம் 'உழைப்பாளி'.

நினைவு தெரிந்து முதன்முதலில் முதல் நாள் பார்த்த திரைப்படம் - எஜமான்

முதன்முதலில் எழுதிவைத்து மனப்பாடம் செய்த பாடல் - 'வந்தேன்டா பால்க்காரன்'



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. வரத் தயங்கிய நண்பர்களை நச்சரித்து அழைத்துச் சென்று வெகுவாக ரசித்த திரைப்படம்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான்.

நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம். வித்யாசாகர் எப்போ ஃபார்முக்கு திரும்புவார்?


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நினைவு தெரிந்து அரங்கில் பார்த்து பாதித்த முதல் படம் - சேது. நண்பர்கள் பத்து பேருடன் படத்திற்குச் சென்று முதல் பாதி ஆட்டமும் பாட்டமுமாய்ப் பார்த்து இரண்டாம் பாதியில் பேச்சின்றி வெளியில் வந்த நினைவிருக்கிறது. வீட்டிற்கு செல்லும்வரை யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

படம் வெளியான நான்காவது நாளில் ஐம்பதே பேர் இருந்த அரங்கில் பார்த்த - அன்பே சிவம்

தளபதி, அஞ்சலி.

சமீபமாக வந்த திரைப்படங்களில் சித்திரம் பேசுதடி, சுப்ரமணியபுரம்.

இன்னும் நிறைய. பட்டியல் நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட பார்க்கிற எல்லா நல்ல படமும் ஏதோ ஒரு வகையில தாக்கத்தான் செய்யுது.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?


பல படங்களின் ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு காட்சியமைப்புகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். முன்னதுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஜீவா.
பின்னதுக்கு H.ஸ்ரீதர்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கையில் அகப்படும் - கருப்பு பூனையில் ஆரம்பித்து கட்டுரைகள் வரை பாரபட்சமின்றி - அத்தனையும்.


7. தமிழ்ச்சினிமா இசை?

எந்நேரமும். எல்லாவித மனநிலைக்கும்.



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தூர்தர்ஷனில் மாநில மொழித் திரைப்படங்களும் வெள்ளி/சனிக்கிழமை இந்தி திரைப்படங்களும் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து மொழி பேதமின்றி. நண்பர்களின்/வலைப்பதிவுகளின் பரிந்துரைகளை தவறாமல் பார்ப்பதுண்டு.

அதிகம் தாக்கிய உலகமொழிப் படங்களின் பட்டியல் தாக்கிய தமிழ்ப்படங்களின் பட்டியலைப் போலவே நீளும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' 100 திரைப்படங்களின் பட்டியல் மதி அவர்களின் இந்த பதிவில் இருக்கிறது - உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன். இதன் அசல் பதிவு அல்வாசிட்டியில் காணலை. இங்கே


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தமிழ்ச்சினிமாவில் வேலை பார்க்கும்/பார்த்த சிலரைப் பர்சனலாகத் தெரியும். அவ்வளவே.

பள்ளி/கல்லூரிக் காலங்களில் - ஏன் இப்போதும் கூட ஒரு திரைப்படத்திலாவது ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு :D


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


நான் புதிதாக வெளியாகும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது சமீபகாலமாக குறைந்துவிட்டது. பழைய படங்களும் வேற்றுமொழிப்படங்களும் உள்ள வரை பிழைப்பு ஓடும்.

தமிழ்நாட்டில் ஓராண்டில் 2011-ல் முதலமைச்சருக்கான போட்டி குறையும். சினிமா மற்றுமின்றி அதுசார்ந்த ஏனைய துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் நிம்மதியாய் இருப்பார்கள். பலர் நிம்மதி இழப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை நேரிடலாம். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும். கடன் தொல்லை குறையும். மாமூல் வாழ்க்கை பாதிக்கும். அலுவலக வேலைகளில் இடர்கள் நேரிடலாம். நிண்ட தூர பயணங்கள் அதிகரிக்கும். நடுப்பக்கங்கள் காலியாகும்..ச்சே ராசிபலன் டோன் வந்துடுச்சே.


அழைத்த தம்பியண்ணனுக்கும் ஜிரா அண்ணாச்சிக்கும் நன்றிகள்!


நான் அழைப்பவர்கள்:

நாமக்கல் சிபி
வினையூக்கி
சவுண்ட் பார்ட்டி உதய்
யாத்ரீகன்
தேவ்



?!

சென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

*****

இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.

*****


போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.

*****

சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.






*****

விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.

* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.


*****

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.

*****

சர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!




*****


இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.

*****


போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"

*****



உள்வாங்கிய கடல்

"சந்துரு சந்துரு"

நெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.

"சந்துரு எப்படிப்பா இருக்க? அம்மா அப்பா செளக்கியமா?"

"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்தி? குழந்தை?"

"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்?"

என் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன.

குமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை.

"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க"

"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு"

குமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

"இப்ப எங்க இருக்கீங்க?"

"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது"

"ஹ்ம்ம்..சித்தி எப்படியிருக்காங்க?"

"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்"

"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா"

"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா"

"தாத்தா பாட்டி எப்படியிருக்காங்க? ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு"

"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா? அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்". குரல் லேசாக கம்மியது.

"தாத்தா சொனனாரு"

"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்"

"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது"

"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா? ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா"

"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு"
வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.

"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு? இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு"

என்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.



Locations of visitors to this page

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

BLOGKUT-Blogs, New & Videos

wiki