?! தொடர்கிறது

காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?

சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.

****

டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

****

சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.

பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.

****

அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.

சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.

'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.

****

'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.

சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.



D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.