பரத்

இந்த இடுகையின் ஒன்லைன் - இது என் நண்பனின் ஒருதலைக் காதல் கதை. அதுவும் தோற்றுப்போன காதல். தறுதலையின் ஒரு தலைக் காதல் என அவனைக் கிண்டல் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. காலப் போக்கில் அவனை கிண்டல் செய்வது நின்று அவனைத் தேற்ற முடியாமல் வருந்திய நாட்களும் தான்...

பரத்..என் பள்ளித் தோழன்....அவன் கதை தான் இது.

ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரக்க பறக்க சைக்கிள்ல வேக வேகமா வந்தான். வந்து இறங்கும்போதே "ஃப்ரெண்டு..அவளை மறுபடியும் பாத்துட்டேன்டா.. க்ரெக்டா ஒரு வருஷம் கழிச்சு" என்றான்.

எங்களுக்கு யாரை சொல்கிறான் என ஒன்றும் விளங்கவில்லை..ஒரு வருடம் ஞாபகம் இருக்கும் அளவு யாருடா அது என்று எங்களுக்கு பயங்கர குழப்பம்.

"இப்போ குமரகோட்டத்துல இருந்து வர்றேன்டா...அங்க தான் அவளைப் பாத்தேன்"

காஞ்சிபுரத்த்தில் குமரக்கோட்டம் என்ற பெரிய முருகன் கோவில் இருக்கிறது. அங்கு வருடா வருடம் 7 நாட்கள் சஷ்டி பூஜைகள் நடக்கும். அப்போது மக்கள் கோவிலை 108 முறை சுற்றுவார்கள். நம் பசங்களும் பக்திமானாக மாறி சுற்றிவருவார்கள். அதிலும் வெள்ளி,சனி, ஞாயிறுகளில் பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

இவன் அங்கு தான் அவளைப் பார்த்திருக்கிறான்.

"ஃப்ரெண்டு..கரெக்டா போன வருஷம் இதே சஷ்டி அப்போ குமரகோட்டத்துல தான் அவளைப் பாத்தேன். அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் அவளை பாக்கவே இல்ல...இப்போ மறுபடியும் இன்னைக்கு பாத்தேன். இதுல இருந்தே தெரியல ஏதோ இருக்குன்னு"

"டேய்...நாம சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய் இருக்கலாம்..அதுக்காக இப்படி கேடு கெட்டத்தனமா யோசிக்காத"

"இல்லடா..எதுக்கு கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு அதே கோயில்ல பாக்கனும்? நான் சீரியஸா ட்ரை பண்ணப் போறேன்"

இதுக்கு மேல் இவனிடம் பேசி புரிய வைக்க முடியாதென நாங்கள் விட்டுவிட்டோம். எப்படியும் ஒரு வாரத்தில் தெளிந்துவிடுவான் என்று தான் நினைத்தோம். ஆனால் அவன் தீவிரமாகவே இறங்கிவிட்டான்.

அதற்குள் நண்பர்கள் விவரங்கள் சேர்த்துவிட்டார்கள். அவள் பெயர் கிருத்திகாவா கீர்த்தனாவா என்று நினைவில்லை. கிருத்திகா என்றே வைத்துக் கொள்வோம்.

அவள் ஒரு பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவள் ஏரியா பையனுடன் சேர்ந்து அவளைச் சில இடங்களில் பார்த்தத்தாகவும் கூறினர். இருந்தாலும் பரத் மனம் தளராமல் இருந்தான்.


தினமும் பள்ளி முடிந்ததும் அவள் வரும் வழியில் ஒரு முச்சந்தியில் காத்திருப்பான். பின் அவள் பின்னாலேயே அவள் வீடு வரை சைக்கிளில் செல்வான். அவள் வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. பாலாற்றைத் தாண்டி தினமும் ஐந்து கிலோமீட்ட்ர் அவள் பின்னால் செல்வான்.

அவளுடன் சுற்றிக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டவன் பரத் முன்பு படித்த பள்ளியில் ஒன்றாகப் படித்த்வன். பெயர் பிரபு. பரத் அவனுடன் தன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான்.

தினமும் அவள் பின்னால் சுற்றுவது அல்லது பிரபுவுடன் இருப்பது என பரத் எங்களுடன் இருக்கும் நேரம் குறைந்துபோனது. நாங்கள் அவளைப் பற்றி ஏதாவது கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவான் இல்லாவிடில் கிளம்பிச் சென்றுவிடுவான்.

அவளின் வீட்டிற்கு எங்கள் வீட்டைத் தாண்டி தான் செல்ல வேண்டும். சில நாட்கள் மாலையில் அவள் வீடு வரை சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வான். அவன் வருகை அதிகமாகவே என் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது. அவள் பின்னால் இவன் செல்வதையும் அம்மா பார்த்திருக்க் வேண்டும்.

"என்னடா..அவன் தினம் எங்கே போய் வர்றான்?? என்ன பண்றான்?" என்று என்னிடமே கேட்டார்கள். நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் ஏதோ உளறி சமாளித்தேன்.

ஒரு மூன்று மாதங்களுக்கு இதே கதை தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் வந்து கொண்டிருந்த போது நான்கு பேர் சேர்ந்து பரத்தை அடித்துப் போட்டு போய்விட்டனர். அவர்கள் யாரென அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை. வீட்டில் நண்பனின் பைக்கில் விழுந்துவிட்டதாகப் பொய் சொன்னான். அவளுடைய சித்தப்பாவின் வேலையாக இருக்குமென எங்களுக்கு சந்தேகம்.

அதன்பின் ஒரு நாள் பிரபு பரத்திடம் வந்து அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துவிடுமாறும் அவள் வீட்டில் எல்லாம் தெரிந்துவிட்டதாகவும் சொன்னான். இருந்தாலும் இவன் அவள் பின் செல்வதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது தினகர் வேகவேகமாக வந்து பரத் தன் கையைக் கிழித்துக் கொண்டதாகவும் ரத்தம் அதிகமாக வீணாகி மருத்துவமனையில் இருப்பதாகவும் சொன்னான்.

நாங்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சென்றால் அவன் சிரித்துக் கொண்டே "ஒன்னும் இல்ல ஃப்ரெண்டு..நீங்க கிளம்புங்க..ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று காரணத்தைச் சொல்லாமல் எங்களை அனுப்பிவிட்டான். அவன் அம்மா உடனிருந்ததால் எங்களால் விவரமாக ஏதும் கேட்க முடியவில்லை.

காரணத்தை தினகர் சொன்னான். அதற்கு முன் தினம் அவள் பரத்திடம் பேசி இருக்கிறாள். தன் பின்னால் வருவதை நிறுத்திவிடுமாறும் தனக்கு இதில் சற்றும் விருப்பம் இல்லையென்றும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். பரத் அப்போதே அழுததாகவும் அவனைத் தேற்றி வீட்டில் விட்டதாகவும் தினகர் சொன்னான். வீட்டிற்குச் சென்றதும் இதுபோல் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.

சாதாரண நாட்களிலேயே வீட்டிற்குச் சென்று அவனனப் பார்க்க முடியாது. அவன் உள்ளே இருக்கும்போதே இல்லையென சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்போது வாய்ப்பே இல்லை. அவனாக வந்தால் தான் உண்டு.அவன் தேறி வரக் காத்திருந்தோம்.

ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வந்தான். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அவனிடம் பேசினோம்.

"இதை ஒழுங்கா இதோட விடுடா..ஆரம்பத்துல இருந்து இத தான் சொல்லிட்டு இருக்கோம். இப்ப்வாவது காது கொடுத்துக் கேளு பரத்..எல்லாம் சினிமால நடக்கிற மாதிரி ஈஸியா நடக்காதுடா...இங்க பாரு"

பரத் தலையை நிமிர்த்தி எங்கள் பேச்சை நிறுத்தினான்.

"விடு ஃப்ரெண்டு, நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் எனக்கு மூளைல எதுவும் ஏறாது. அதே மாதிரி நீங்க என் கூடவே இருந்தாலும் நான் படற அவஸ்தை உங்களுக்கு புரியாது"

சொல்லிக்கொண்டே கிளம்பிச் சென்றுவிட்டான்.

இதற்குப் பின் அவன் பேசுவது குறைந்து போனது. முன் போல் விளையாட வருவதோ ஊர் சுற்றுவதோ குறைந்துபோனது. பள்ளி முடிந்ததும் காஞ்சியிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்தான். தண்ணியும் தம்மும் அதிகமானது. காலப் போக்கில் ஓரளவு தேறி வந்தாலும் பேச்சில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. அவன் காதலிக்க ஆரம்பித்தபோது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்த எங்களால் அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசக் கூட முடியவில்லை.

இன்றும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சில நேரங்களில் அவளைப் பற்றி புலம்புவதாக நண்பர்கள் சொல்கின்றனர். இப்போது அவள் என்ன செய்கிறாள், எங்கு இருக்கிறாள் என எங்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவனிடம் கேட்கும் தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை.



15 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நட்பு!
இதுல யாரை குறை சொல்லுறதுனு தெரியல. வாலிப வயசு கோளாறுல இது போல செய்வதை ஒத்துக் கொள்ளலாம். இன்னமும் அதையே நினைத்துக் கொண்டு இருப்பது என்றால் சாரி, உன் நண்பனுக்கு சுத்தமாக அறிவே கிடையாது. (என்ன காரணமாக இருந்தாலும்) தன் காதலிலும் கோட்டை விட்டு இப்பொழுது அவன் வாழ்க்கையும் கோட்டை விட்டுக் கொண்டு இருக்கின்றான் என்று தான் தோன்றுகிறது.
சொல்லி திருத்துர வழிய பாருங்கப்பா....
வசூல் ராஜா பாட்ட ஒரு நூறு தடவை போட்டுக் கேட்க சொல்லு.

சொன்னது...

உண்மைதான் சிவா...அவனுக்கு அறிவு மழுங்கிப் போய் தான் இருக்கிறது..

அவனைத் திருத்த நாங்கள் படும்பாடு பெரும்பாடு... இதைப் பற்றி பேச்சை எடுத்தாலே எஸ்கேப் ஆகிறவனைப் பிடிப்பதே பெரிய காரியமாக இருக்கிறது...

முன் இருந்ததற்கு இப்போது பரவாயில்லை..முன் போல் வெட்டியாக சுற்றித் திரியாமல் ஒரு வேலையில் செட்டில் ஆகி இருக்கிறான்..

காலம் அவனைத் தேற்றும்..

//வசூல் ராஜா பாட்ட ஒரு நூறு தடவை போட்டுக் கேட்க சொல்லு//

அதெல்லாம் ஆயிரம் தடவைக் கேப்பான்..நம்ம சாதிக்காரன் அவன்..சினிமா பைத்தியம்.. :)

மூளையில தான் ஏறாது!!

சொன்னது...

காலம் கண்டிப்பாக தேற்றும்.

சொன்னது...

அதற்குத் தான் காத்திருக்கிறோம் சிவா..

சொன்னது...

வேட்டிய உருவுன உருகுவேயிலே இந்த கதைய சொன்னா
சந்தி சிரிக்கும்.

இங்கெல்லாம் சரின்னா அன்னிக்கே எல்லாமே,முடியாதுன்னா
அடுத்த ஆள, அடுத்த தெருவ பாக்க போயிறுவானு(ளு)ங்க.

சரியா கப்ஸ்.ஐய்யய்யோ, இது வெற மாதிரி இருக்கெ.
அப்ப கப்பிஸ் , சரியா வருமா.

சொன்னது...

குரு பெருசு..

வாஸ்தவமான பேச்சு...

இங்க இருக்கவன் கிட்ட இத சொன்னா அதுக்கப்புறம் நம்ம கூட பேசவே மாட்டான்...

அதெல்லாம் இந்த ப்லாக்ல விடறதோட நிறுத்திக்கனும்...

நம்ம நட்பை பாத்து கொஞ்சம் பீலாகிட்டேன்..விடுங்க...

//இங்கெல்லாம் சரின்னா அன்னிக்கே எல்லாமே,முடியாதுன்னா
அடுத்த ஆள, அடுத்த தெருவ பாக்க போயிறுவானு(ளு)ங்க.
//
உலகத்தை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க :D


//சரியா கப்ஸ்.ஐய்யய்யோ, இது வெற மாதிரி இருக்கெ.
அப்ப கப்பிஸ் , சரியா வருமா. //

தலிவா..உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்டு..

ஆனா ரெண்டு மூணு ஸ்பானிஷ் வார்த்தை கத்து வச்சிருக்கேன்..அத வச்சு கூப்பிட்டா கண்டு புடிச்சிடுவேன் :))

ஆமா..எனக்கு ஸ்பானிஷ் எப்போ??

comentario போடும்போது ஒன்னு ரெண்டு ஸ்பானிஷ் வார்த்தை சேத்து பயமுறுத்த வேணாமா??

சொன்னது...

நம்ம ஊர்ல(இந்தியாவுலதான்) comentario அதிகமா வருதுன்னு
சொல்லி blogspot-ஐ cementerioக்கு அனுப்பி வெச்சிட்டாங்கோ.

சொன்னது...

இன்னிக்கு almuerzo என்ன சாப்பிட போறீங்க.

comida chatarra சாப்பிட கத்துக்காதீங்க.

நீங்க herbivoro வா இருந்தா dificil தான்.

carnivro வா இருந்தா வாள் எடுத்துட்டு கெளம்புங்க

சொன்னது...

இந்தியால இருக்க நம்மாட்களுக்காக
"lo lamento" :((

சொன்னது...

almuerzo - ரூம்மேட் சமைச்ச Arroz தான்..

சாப்பிடற ஒரே comida chatarra 'papas fritas' :)

mucha dificil aka..
நான் herbivor-ங்க...


"no egg, no meat, no pollo"

ஓட்டல்ல இவங்களுக்கு புரியவைக்கறதுக்கே பெரும்பாடா இருக்கு...

சொன்னது...

"yerra" தினம் அன்னைக்கு ஸ்பெஷலா ஒரு டிஷ் சாப்பிடுவாங்களாமே..டேஸ்ட் பண்ணியிருக்கீங்களா?? :D

சொன்னது...

Dei kanla thanni varuthuda, romba urukkamana kathai.Athu seri yenna ippadi thideernu blogspot block pannitaanunga? yeppadiyo intha link thaedi pidichu block bypass pannittaen.

சொன்னது...

//Dei kanla thanni varuthuda, romba urukkamana kathai//

ஹி ஹி ஹி..ரொம்பத்தான் நக்கல் Aim..
//Athu seri yenna ippadi thideernu blogspot block pannitaanunga? //
ஆமாம்..நேத்துல இருந்து நம்ம மக்கள் தவிச்சு போய் இருக்காங்க..

சொன்னது...

Dei nakkallam onnum illa. Nejamave kanla thanni vilunthuruchu. yaenna thoosi vilunthuruchu un story padikkirae aarvathula. he he he :-D

சொன்னது...

டேய் aim..திரும்பத் திரும்ப பண்ற நீ... :D