வலைப்பதிவர் சந்திப்பு - லீவ் லெட்டர்

1. ஞாயித்துக்கிழமையும் ஆணி பிடுங்க போயிட்டேன்

2. லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கையைக் காட்டி நேராப் போய் மீடியன்ல முட்டிக்கிட்ட ஆட்டோனால ட்ராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்

3. நடேசன் பூங்காவுக்கு வழி கேட்டதுக்கு "அப்படி எதுவும் இங்க இல்ல. நடேசன் முதலியார் பார்க்"தான் இருக்குன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.

4. கிண்டி ஹால்டா சிக்னல் ட்ராபிக் டைவர்ஷன்னால அந்த ஏரியாவையே நாலு முறை சுத்தி எங்கே போறோம்னே மறந்துபோய் வீட்டுக்கே திரும்ப போயிட்டேன்.

5. மாயக்கண்ணாடி ஹீரோவோட(பேரெல்லாம் சொல்ல மாட்டேன்) ஹேர் ஸ்டைல், டான்ஸ்லாம் பார்த்ததுல பயங்கர தலைவலி, காய்ச்சல். மயக்கம்

6. அப்பாவோட ஒன்னுவிட்ட தம்பியோட மாமனாரோட சின்ன பையனோட மச்சானோட மாமனார் செத்துபோயிட்டார்.

7. 'உன்னாலே உன்னாலே' படம் பார்த்து மனம் வெறுத்துப் போய் இழுத்து போத்து தூங்கிட்டேன்.

8. எப்பவும் போல இல்லாம சுத்தமான நல்ல பெட்ரோல் போட்டதுல பைக் இஞ்சின் சீஸ் ஆகி நின்னுப்போச்சு

9. டிக்கெட் எடுக்காம வந்ததால பனகல் பார்க் பஸ் ஸ்டாப்ல செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.

10. தாழ்தள சொகுசுப் பேருந்தின் ஆட்டோமெட்டிக் கதவு திறக்காததால வெளிய வர முடியாம ரெண்டு மணி நேரம் பஸ்ஸுக்குள்ளேயே இருந்தேன்.

இப்படியெல்லாம் மொக்கையான காரணம் ஏதுமில்லீங்க. "ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. இந்த வாரம் வரலைனா பஞ்சாயத்தைக் கூட்டி வீட்டை விட்டு விலக்கி வச்சிருவேன்"னு எங்கப்பாரு போன் செஞ்சு மிரட்டினதால ஊருக்கு போயிட்டேன். :))

சந்திப்பு நல்லபடியா முடிஞ்சுதா? பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)



கூடல் நகர்

"மாப்ள, இப்பல்லாம் எந்த படமும் உருப்படியா வர்றதில்லடா. எதுவுமே சரியில்ல"

"டேய் வெண்ண! இதை என்னவோ நியூஸ் மாதிரி சொல்ற? பல வருஷமா இதைத்தானடா சொல்லிட்டிருக்கோம்! அடுத்த வாரமும் தியேட்டர் முன்னாடி நின்னுட்டு இதே டயலாக் தான் சொல்லப் போற!"

*****************************************************************

பரத் இரட்டை வேடம். பாவனா, சந்தியா இரு கதாநாயகிகள். வழக்கம் போல அழுதுபுலம்பும் அம்மா, அரசியல்வாதி வில்லன், வில்லன் வீட்டுல ஒரு நல்லவன் இதுமாதிரி நிறைய கதாபாத்திரங்கள், செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு பைட்டு, நாலஞ்சு பாட்டு.

அண்ணன் பரத் லெண்டிங் லைப்ரரில வேலை பார்க்கறவர். தம்பி அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வேலை பார்ப்பவர். தம்பி அப்பப்ப வில்லனுக்கு எடுபிடி வேலை செய்வார். அண்ணன் வில்லன் பொண்ணு பாவனாவை கரெக்ட் செய்வார். விஷயம் வில்லனுக்கு தெரிஞ்சு அண்ணனை போட்டு தள்ளுவார். அவர் செத்த சோகத்துல பாவனா தொங்கிடுவாங்க. தம்பி தன் காதலி சந்தியாவுடன் சேருவதற்கு முன் வில்லனைக் கொன்று பழிதீர்ப்பார்.

இந்த அரதப்பழசான கதை தவிர படத்துல எதுவுமே சொல்லிக்கற மாதிரி இல்ல. ஆரம்ப காட்சிகளிலேயே படத்தோட பரிதாப நிலைமை தெரிஞ்சுடுது. இதுல வித்தியாசமா எடுக்கறோம்னு சைக்கிள், மொபெட், கார், ஆம்புலன்ஸ்ன்னு எல்லா வண்டிக்கு முன்னாடியும் கேமரா வச்சிடறாங்க. நல்ல வேளையா இப்ப இருக்க ட்ரெண்ட் மாதிரி கேமராவை அடிக்கடி ஆட்டாம இருக்கறதால தலைவலி வரல. பின்னணி இசை, பாடல்கள் பத்தி கேட்கவே வேணாம். நான் சொல்லவும் போறதில்ல.

இடைவேளைல படத்துல நிறைய ட்விஸ்ட் யோசிச்சோம். படத்தோட ஆரம்பத்துல ரெண்டு பரத்தும் சின்ன பசங்களா இருக்கும்போது சொந்த ஊர்ல விட்டுட்டு வந்த நாய்க்குட்டி, அவங்க குடும்ப பாட்டு ட்யூன்ல குரைச்சு அவங்க கூட சேரும்னு எதிர்பார்த்தோம். டைரக்டர் நாயை மறந்துட்டார் போல.

வில்லனை அண்ணன் கொன்னதும் தம்பியே மார்ச்சுவரில அந்த பிணத்தை அறுப்பார்ன்னு எதிர்ப்பார்த்தது பொய்க்கவில்லை :)) . அதுக்கப்புறம் சண்டையில தம்பியோட காதலி சந்தியா சாவாங்க. தம்பி பாவனாவை கல்யாணம் பண்ணிப்பார்ன்னு நினைச்சோம். அது நடக்கல.

பரத் ஏற்கனவே சென்னை காதல்னு ஒரு மொக்கைல நடிச்சார். இது சென்னை காதல் விட ரொம்பவே நல்ல படம்னாலும் இன்னும் ஒரு படம் இதே மாதிரி நடிச்சாப்போதும். பேக்-அப் பண்ணிடலாம்.

படம் முழுக்க திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுத்துவட்டாரத்துல எடுத்திருக்காங்க. திருப்பரங்குன்றம் நம்ம காலேஜ் ஏரியா. அதுதான் படத்துல ஒரே சந்தோஷம். பார்த்து ரொம்ப நாள் ஆன இடங்களை திரையில் பார்த்ததில் ஒரு திருப்தி.

டைரக்டர் நிறைய ட்ரை பண்ணியிருக்கார். ஆனா எதுவும் சரியா வரல. சீரியசான படமாகவும் இல்லாம, மசாலாவும் ஒழுங்கா இல்லாம மரணக்கடியான படமாயிடுச்சு. சீனு ராமசாமி இன்னொரு படம் எடுத்தா நாலு பேர்கிட்ட விமர்சனம் கேட்டுட்டுத்தான் படம் பார்க்க போகனும்.

படம் முடிச்சு தியேட்டர் வெளியே வரும்போது விகடன் மதன் முன்னாடி போயிட்டிருந்தார். ரொம்ப கூட்டமா இருந்ததால "அடுத்த வாரம் விஜய் டிவி விமர்சனத்துல கார்ட்டூன் வரையும்போது ஆடியன்ஸ் படத்தை வரைஞ்சு ரொம்ப பாவம்னு எழுதி எங்களைவச்சு காமெடி பண்ணிடாதீங்க மதன் சார்"ன்னு அவர்கிட்ட சொல்ல முடியல.



இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!?

"லாங் லாங் அகோ சோ லாங் அகோ சோ தட் நோ ஒன் கேன் சே அவ் லாங் அகோ" பாபா ஒன்பது விசித்திர குணங்களை எழுத சொன்னார். ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்ன வெட்டி ஒரு 5 எழுத சொன்னார். ஆபிஸ்ல தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கிட்டே இருக்கறதால கொஞ்சம் லேட்டாகிப்போச்சு. அதுக்கு முதல்ல மாப்பு கேட்டுக்கறேன்.

வியர்டு வியர்டுன்னு சொல்றாங்களே, நம்ம கிட்ட அந்த மாதிரி ஒரு வியர்டும் இல்லையேன்னு தான் நினைச்சேன். ஆனா இதை எழுத யோசிக்கும்போது தான் "உடம்பில் உரைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன்"ன்னு எல்லா வியர்டும் வெளிய வருது. 9 எழுதலாமா? 5 எழுதலாமா? ரெண்டு பேருக்கும் இல்லாம பொதுவா (9+5)/2=7 எழுதலாமா? பதிவின் நீள அகலத்தைப் பொறுத்து எத்தனை வருதோ அத்தனை எழுதறேன் :))

முதல் வியர்டு முறைச்சுப் பார்க்கறது. பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன். அவரும் நம்மள கவனிக்க ஆரம்பிச்சா போதும் அவரை விடவே மாட்டேன். நாம குறுகுறுன்னு அவரையே பார்க்கறதுல அவங்களும் ரியாக்ஷன் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. அடிக்கடி திரும்பி பார்ப்பாங்க. இல்ல திரும்ப முறைப்பாங்க. முகத்தைத் திருப்பிப்பாங்க. இப்படி விதவிதமா ரியாக்ஷன் வரும். நல்லா ஜாலியா இருக்கும்.

அப்புறம் கோபம். காட்டுத்தனமா கோபப்படுவேன். கோபம் வந்து யார் என்னன்னு பார்க்காம கத்திடுவேன். கோபத்தை கண்ட்ரொல் பண்ணவெல்லாம் தெரியாது. உடனே முகத்துல ரியாக்ஷன் காட்டிட்டுவேன். அப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அவங்ககிட்டயே போய் "சாரிங்க, நான் ரொம்ப கத்திட்டேன். கோபம் வந்தா நான் என்ன கத்தறேன்னே தெரியாது. மன்னிச்சுருங்க"ன்னு ஒரு அரை மணி நேரம் மொக்கை போடுவேன். கோபம்+அதற்குப் பின்னான மொக்கை ஒரு முக்கியமான் வியர்டு :))

கனவு. நான் ஒரு முறை தூங்கிட்டா என் கனவை நானே நிறுத்த மாட்டேன் :)). கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.பல பேரை கனவுல கொன்னுருக்கேன். செத்துப்போன பல பேர் உயிரோட வந்திருக்காங்க.

இன்னொரு வியர்டு - ஏதாவது பஸ்ல ஏறி உட்கார்ந்த பிறகு அது சரியான பஸ் தானான்னு சந்தேகம் வந்துடும். இன்னொரு முறை கீழே இறங்கி போர்டை பார்த்தாலோ இல்லை டிரைவர்-கண்டக்டர்கிட்ட கேட்டாலோ தான் நிம்மதியா இருக்கும். ஏறும்போதே போர்டெல்லாம் பார்த்துதான் ஏறுவேன். ஆனாலும் சீட்டுல உட்கார்ந்ததும் இந்த சந்தேகம் வந்துடும். இத்தனைக்கும் இதுவரை பஸ் மாறி எங்கேயும் போனதில்ல. அப்படியிருந்தும் ஏன்னு தெரியல.

இன்னொரு பஸ் வியர்டு ஆசை - ஏதாவது பஸ்ல போயிட்டே இருக்கனும். விடுமுறைல சென்னைல இருக்க மாமா வீட்டுக்கு வந்தா வீட்டுலயே இருக்க மாட்டேன். மடிப்பாக்கத்துல இருந்து ஏதாவது ஒரு பஸ் ஏறி எங்கேயாவது போய் அங்கிருந்து வேற இடம் போய் இப்படியே நாலைஞ்சு மணி நேரம் பஸ்லயே சுத்திட்டு சாப்பிட வீட்டுக்கு வந்துடுவேன். இன்னொரு நிறைவேற்றப்படாத வியர்டு ஆசை - மதுரை-காஞ்சிபுரத்துக்கு டவுண் பஸ்லயே மாறி மாறி வர்றது. இதுவரை அதிகபட்சம் 5 பஸ் மாறி போயிருக்கேன். அவ்வளவுதான். மதுரை-நாகர்கோயிலுக்கும் ஒரு முறை 7 பஸ் மாறி போயிருக்கோம்.

சினிமா பார்க்கறது வியர்டு இல்லைனாலும் அதுவும் நமக்கு ஒரு முக்கியமான தகுதி இல்லையா? :)) எல்லா படமும் பார்த்துடுவோம். படம் மரண மொக்கையா இருந்தாலும் சரி. எந்த மொழியா இருந்தாலும் சரி. விடறதில்ல. 'உலக சினிமா' பார்க்கறோம்னு ஏதாவது டிவிடி எடுத்துட்டு வந்து படத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பெப்பரப்பேன்னு முழிச்சுட்டு இருக்கறதும் செம காமெடியா இருக்கும்.

அட்வைஸ் பண்றது ரொம்ப பிடிக்கும். காலேஜ்லயும் சரி அப்புறம் வேலைலயும் சரி பசங்களோட புலம்பல்களுக்கெல்லாம் நாம தான் வடிகால். எக்கச்சக்கமா புலம்புவாங்க. நானும் பொறுமையா எல்லாத்துக்கும் 'உம்' கொட்டி கேட்டுட்டு கடைசில 'விட்றா மச்சி..இதெல்லாம் ஜகஜம்'னு ஆரம்பிச்சு அவன் புலம்பினதுக்கு ஏத்தமாதிரி மொக்கையை திரும்ப கொடுத்துடுவேன்.

சாப்பாடு - சாப்பாட்டுல என்னடா வியர்டுன்னு கேட்கலாம். ஆனா இருக்கே :)). ஒவ்வொரு வாரமும் ஒரு சாப்பாடு ஐயிட்டத்தை தேர்ந்தெடுத்து அந்த வாரம் முழுக்க அதையே வெவ்வேறு ஓட்டல்ல சாப்பிட்டு அவங்க தகுதி அடிப்படைல ஓட்டல்களுக்கு ரேட்டிங் கொடுப்பேன். கிட்டத்தட்ட எல்லா முக்கியமான சாப்பாடு ஐயிட்டத்துக்கும் இதுமாதிரி 'சிறப்பு வாரம்' கொண்டாடியிருக்கேன் :)).

இன்னொரு சாப்பாடு வியர்டு எங்கே சாப்பிட்டாலும் அவங்க போடறதை அப்படியே சாப்பிடுவேன். உப்பு குறைச்சலா இருந்தாலோ காரம் அதிகமா இருந்தாலோ கண்டுக்க மாட்டேன். கேட்கவும் மாட்டேன். அது அவங்க வீட்டு டேஸ்ட்ன்னு நான் என் கடமையை செஞ்சுடுவேன். அதுக்கப்புறம் அவங்க குறையை கண்டுபுடிச்சு "எப்படி இதை சாப்பிட்ட? என்னாலயே சாப்பிட முடியலையே"ன்னு கேட்டு அசடு வழிய நின்ன அனுபவமும் நிறைய இருக்கு.

சாப்பாட்டுல காபி சொல்லாம இருக்க முடியுமா? ஏற்கனவே என் ஆறு பதிவுல சொன்னா மாதிரி( டேய், நீ எழுதினதை எல்லாரும் மனப்பாடம் பண்ணியா வச்சிருக்கோம்? சொல்ல வந்ததை சொல்லுடா-ன்னு நீங்க கேட்கறது என் காதுல விழல) ஒவ்வொரு வீட்டு காபிக்கும் தனி சுவை உண்டு. ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு. சோமபானம் சுராபானம் ரேஞ்சுக்கு காபியும் ஒரு சூப்பர் பானம் தான் :))

இன்னொரு வியர்டு - எங்கயாவது ஊர் சுத்த போனாலோ டூர் போனாலோ வீட்டுல சொல்லவே மாட்டேன். அவங்களா போன் பண்ணாலும் வேற ஊர்ல இருக்கறதை சொல்ல மாட்டேன். ஆனா போயிட்டு வந்து முதல் வேலையா வீட்டுல சொல்லிடுவேன். அதுவும் அப்பாகிட்ட சொல்றேனோ இல்லையோ அம்மாகிட்ட சொல்லிடுவேன். அவங்களும் 'ஏன் டா முதல்லயே சொல்லலை'ன்னு கேட்காம 'அப்படியா? நல்லா இருந்ததா'ன்னு கேட்டு போயிட்டே இருப்பாங்க :))

"ஏன் டா லேட்டு"
"சாரி சார் லேட்டாயிடுச்சு"

நானே ரொம்ப லேட்டா வியர்டு பதிவு போடறேன். இதுல யாரைக் கூப்பிடன்னு தெரியல. கிட்டத்தட்ட எல்லாருமே எழுதியிருப்பீங்க. அதனால எழுதாதவங்க எல்லாருக்கும் ஒரு ஓப்பன் இன்வெஸ்டிகேஷன்...ச்சே ஓப்பன் இன்விடேஷன். 'டிக்கெட் வாங்காதவங்க வாங்கிக்க'ன்னு நம்மூர் கண்டக்டர்லாம் கூவற மாதிரி 'இன்னும் வியர்டு பதிவு போடாதவங்க இன்விடேஷனை வாங்கிக்கோங்க' :)



வுட்டுபோனது (அ) வ.பி

:)

:))

:)))))))))))))))))))))))))

:(

:((

:(((((((((((((((((((((((

கலக்கல்!

நல்ல பதிவு!

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

நல்ல கதை!

கொன்னுட்டீங்க! பின்னிட்டீங்க!!

வெளங்குமய்யா!!

போட்டுத் தாக்குங்க!

தகவலுக்கு நன்றி!

உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

1. அது
5. இது?

7. அவர்
8. இவர்

என்னது படம் நல்லாயிருக்கா? பார்ப்போம்..

நல்ல கட்டுரை!!

செம மொக்கை பதிவு!!

உங்க சொந்த கதை தானே?

ஒன்னுமே புரியல!

+

கயமை!

சோதனை!

கயமைக்கு சோதனை!!

பதிவு டாப்பு!
'தல'க்கு ஆப்பு!!

போய் பொழப்பை பாருங்கப்பு!!

29

பி.கு: ரெண்டு வாரமா போடாம விட்ட பின்னூட்டங்களெல்லாம் இங்க குத்துமதிப்பா போட்டு வச்சிருக்கேன்..ஒவ்வொருத்தரா வரிசைல வந்து அவங்கவங்க பதிவுக்கு ஏத்த மாதிரி வாங்கிக்குங்க மக்களே :D

பி.பி.கு: 29 பின்னூட்டங்கள் தான் இருக்கு, 30 வந்தா முன்னுக்கு வர முடியாதாமே :))

பி.பி.பி.கு: வ.பி - வழக்கமான பின்னூட்டங்கள் ;)

பி.பி.பி.பி.கு: ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் அடியேன் திரும்ப வந்துட்டேன்.



எஸ்கேஏஏஏப்ப்!!

ஏற்கனவே தங்கக்கம்பி, பாசத்தும்பி, அன்புத்தும்பி வாழ்த்து சொல்லி அறிக்கை விட்டுட்டார். இருந்தாலும் நானும் ஒரு அறிக்கை விடனும்ல. மக்களே, இந்த ஞாயிற்றுக்கிழமை 11-ம் தேதி இங்கயிருந்து எஸ்கேப். நவம்பர்ல கிளம்பியிருக்க வேண்டியது. "நீ இன்னும் நிறைய ஆணி புடுங்கிட்டு தான் டா போகனும்"னு சொல்லி உட்கார வச்சுட்டாங்க. இப்பக்கூட சண்டைபோட்டு அசால்ட் கேஸ் புக் ஆகி ஏகப்பட்ட பிரச்சனைக்கு அப்புறம் தான் எஸ்கேப் ஆப் மாண்டிவிடியோ.



டிக்கெட் கன்ஃபர்ம் ஆனதும் இங்க கூட இருக்க ஒரு பாசக்காரப் பய 'என்னை விட்டுட்டு போறியாடா'ன்னு ஃபீல் பண்ணினான், "ஃபீல் பண்ணாத மாப்ள,வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போற நேரம் வந்துடுச்சுடா"ன்னு ஒரு பிட்டைப் போட "டேய்,இதெல்லாம் உன் பதிவுல வச்சுக்க...என் கிட்ட இந்த கட்டம்,வட்டம், சதுரம்னு டயலாக் விடாத"ன்னு ஆஃப் பண்ணிட்டான். போற நேரத்துல எதுக்கு பொதுமாத்து வாங்கனும்னு நானும் சைலண்ட் ஆயிட்டேன்.

தென்னமெரிக்க நாடுகளில் ஒரு ரவுண்ட் வரனும்னு நினைத்தேன். அர்ஜெண்டினா மட்டும் தான் போக முடிந்தது. ரியோ டி ஜெனிரோ, இகுவாசு அருவிகளுக்கு செல்ல முடியாதது ஏமாற்றமே.

எட்டரை மாதங்கள். பல நினைவுகள். அனுபவங்கள். ஊருக்கு வந்ததும் மொத்தமா எழுதனும். விடறதில்ல :))

வர்ட்டா!! :)



தெளிவு

"மாப்ள, அவசரமா ஐயாயிரம் ரூபாய் வேணும். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?நாளைக்கு காலைல ஊருக்கு வந்து வாங்கிக்கவா?"

சென்னையில் இருந்து அருண் தொலைபேசியில் அழைத்தபோது படிக்கற பையனுக்கு அப்படி என்ன அவசர செலவு என்றுதான் முதலில் தோன்றியது. அருண் என் பள்ளித் தோழன். அப்போது சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்தான். சென்னையில் அவன் கல்லூரியில் சேர்ந்ததும் அவன் தந்தையும் மாற்றல் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் ராமாபுரத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.

"என்னடா அப்படி திடீர் செலவு?"

"ஒரு பொண்ணை லவ் பண்றேன் மச்சி. அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம்"

"டேய், என்னடா சொல்ற? நீ லவ் பண்றதே இப்பதான் சொல்ற. அவசரப்படாதடா. இரு நானும் தினாவும் நாளைக்கு மெட்ராஸ் வரோம். அங்க வந்து நேர்ல பேசிக்கலாம்"

தினகரை போனில் அழைத்து விஷயத்தை சொன்னேன். ஒரு ரிஜிஸ்டர் மேரேஜுக்காவது கையெழுத்து போட்டு நடத்திவைப்பது என் வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது அருணுக்காக இருக்கக் கூடாது. கல்லூரியில் படிக்கும்போது இவனுக்கு கல்யாணம் செய்துவைத்தால் அவன் எதிர்காலம் என்ன ஆவது என்ற யோசனையுடன் மறுநாள் நானும் தினகரும் சென்னைக்குக் கிளம்பினோம். அருணை தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்திப்பதாகத் திட்டம்.நாங்கள் சென்றபோது கல்லூரி வகுப்பை கட் அடித்துவிட்டு அங்கு எங்களுக்காகக் காத்திருந்தான்.

"பேரு காயத்ரிடா. எங்க பக்கத்து தெருல இருக்காங்க. நான் இங்க ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்ததுல இருந்தே பழக்கம். இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவளை நேர்ல மீட் பண்ணவும் முடியல. அவ ஃப்ரெண்ட் மூலமா தான் பேசிட்டிருக்கேன். நாங்க பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்"

"டேய், பைத்தியக்கார தனமா பேசாத. என்ன விளையாட்டா?"

"இல்லடா சீரியசா தான் சொல்றேன். அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. எங்க மேட்டர் அவங்களுக்கு இன்னும் தெரியாது.

தெரிஞ்சா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது"

"மாப்ள, முதல்ல எல்லா டீடெயிலயும் எங்க கிட்ட சொல்லு. பொறுமையா பேசி முடிவெடுக்கலாம். அவங்க அப்பா என்ன் பண்றாரு?". தினகர் கேட்டான்.

"அவங்கப்பா ராமாபுரத்துலயே மளிகைக்கடை வச்சிருக்காருடா. அந்த ஏரியா வியாபாரிகள் நல சங்கத் தலைவர்"

"அடப்பாவி. அப்ப அந்தாளுக்கு காண்டாக்ட்ஸ் நிறைய இருக்குமே"

"ஆமா மாப்ள, அடுத்த முறை கவுன்சிலருக்கு நிக்க போறாருன்னு காயத்ரி சொன்னா"

"வெளங்கிரும். டேய், அவரைப் பத்தி விடு. மொதல்ல உன்னைப் பத்தி யோசி. அஞ்சு வருஷ கோர்ஸ். ஏற்கனவே ஒரு வருஷம் அட்டண்டென்ஸ் லேக்ல திருப்பி படிக்கற. இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு"

"என் சீனியர் ஒருத்தர்ட்ட பேசினேன் டா. அவர் கம்பெனில பார்ட் டைம் வேலைக்கு சேரப் போறேன்"

"எவ்ளோ, ரெண்டாயிரம் சம்பளம் கொடுப்பாங்களா?"

"ஆயிரத்து என்னூறு"

"டேய், நீ ஆர்க்கிடெக்ட் படிச்சு முடிச்சாலே ஆரம்பத்துல நாலாயிரம் ஐயாயிரத்துக்கு மேல கொடுக்க மாட்டாங்க. இந்த ஆயிரத்தி என்னூறை வச்சு குடும்பம் நடத்துவியா? படிப்பு என்னடா ஆகறது?"

"அவளும் பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சிருக்காடா. ஏதாவது கம்பெனில வேலை கிடைக்கும். இல்லனா ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேரலாம். அப்படி முடியலைனா நான் படிப்பை நிறுத்திடுவேன்"

"மாப்ள, நடக்கற கதையா பேசு. நீயே யோசிச்சுப் பாரு. இப்ப உங்கப்பா இவ்வளவு செலவு பண்ணி நாலு வருஷம் படிக்க வச்சதை பாதில நிறுத்த போறயா?"

"எனக்கு வேற வழி தெரியலடா"

"என்ன வழி தெரியல? படிப்பை பாதில நிறுத்திட்டு மெட்ராஸ்ல எப்படிடா குடும்பம் நடத்துவ?"

"கோடம்பாக்கத்துல நேத்து போய் விசாரிச்சேன் மச்சி. 800 ரூபாய்க்கு ஒரு சின்ன ரூம் இருக்கு. அதை வாடகைக்கு எடுத்துட்டா ஆரம்பத்துல செலவுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படும். அதுக்கு தான் உங்க கிட்ட கேட்டேன். அப்புறம் போகப் போக மெயிண்டெயின் பண்ணிக்கலாம்"

"அதெல்லாம் கொடுக்க முடியாது. கடன் நட்பை முறிக்கும்"

"டேய், சும்மா கடிக்காத. சீரியசா பேசு"

"வெண்ண, நாங்க ஆரம்பத்துல இருந்தே சீரியசா தான் பேசறோம். இது வேளைகே ஆவாது. அந்த பொண்ணை இன்னும் ஒன்றரை வருஷம் வெயிட் பண்ண

சொல்லு.தேவைப்பட்டா அவங்கப்பா கிட்ட உங்க லவ்வைப் பத்தி சொல்ல சொல்லு"

"அவ அப்பாட்ட சொல்றதா? வாய்ப்பே இல்ல. அந்தாளு ரொம்ப ஸ்டிரிக்டுடா"

"ஏண்டா இப்படி எல்லா பக்கமும் நெகடிவ் வச்சிட்டு எப்படிடா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்ச? ரிஜிஸ்டர் மேரேஜுக்கே எவ்வளவு செலவாகும் தெரியுமா?"

"என் க்ளாஸ் மேட்ஸ் பாரீஸ் பக்கத்துல இருக்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல ஒருத்தரை புடிச்சு வச்சிருக்கானுங்கடா. மொதல்ல 4000 கேட்டிருக்கார். இப்ப 2500 ஓகே சொல்லியிருக்காராம். அவனுங்க இந்த ஏற்பாடெல்லாம் கவனிக்கறாங்க"

"அட வீணாப் போனவங்களா, அவனுங்க வேலை தானா இது..உன்னை ஏத்திவிட்டுட்டு இருக்கானுங்களா...எங்கயிருந்துடா வந்து சேர்ந்தீங்க? உனக்கு புத்திமத்தி சொல்லாம அவனுங்களும் இறங்கியிருக்கானுங்க பாரு..அவனுங்களை உதைக்கனும்"

"இல்லடா. நீங்க என் லவ்வை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறேன்"

"நல்லா பண்ணி சந்தோசமா குடும்பம் நடத்து ராசா! அதுக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணம் நிச்சய்மாயிருக்கறதை யோசிச்சுக்கோ. உங்க அப்பா ரிட்டயர் ஆகப்போறாரு. அதை மனசுல வச்சுக்கோ. அப்படியே உனக்கு இருக்க ஆஸ்துமா ப்ராப்ளத்தையும் யோசிச்சுக்கோ"

"அக்காவுக்கு அடுத்த 3-ம் தேதி திருச்சில கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் 7-ம் தேதி இங்க வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு இருக்கேன். வீட்டுல எல்லாரும் ஊர்ல தான் இருப்பாங்க. பிரச்சனை இல்ல"

"எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்னியிருக்கியேடா பாவி. எங்கள பணம் வாங்க மட்டும் கூப்பிட்டியா?"

"டேய் என்னடா இப்படி சொல்லிட்ட?"

"மச்சி இங்க பாரு. எனக்கு இந்த லவ் பண்ணனும், என்ன தடை வந்தாலும் அதே பொண்ணை கல்யாணம் பண்ணனும் அது இது எல்லாம் ஓகே. ஆனா உனக்கு இப்ப அதுக்கான டைம் இல்ல. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கோர்ஸை முடிச்சதும் இதை நீ சொல்லியிருந்தா நாங்களே எங்க செலவுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்.

மொதல்ல படிச்சு முடி ராசா. இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அந்த பொன்னுகிட்ட வேணும்னா கூட நாங்க பேசறோம். அவளை மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்க சொல்லு. நல்லா யோசி. மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணு"

இப்படியாக கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் தாம்பரம் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் அவனுடன் விவாதம் நடந்தது. ஒரு வழியாக அவன் மனதை மாற்றினோம்.

அப்போதைக்கு கல்யாணத்தை தள்ளிப்போடுவதெனவும், அப்படி காயத்ரிக்கு திருமணம் நிச்சயிப்பது நிலையானால் அடுத்து செய்வது குறித்து யோசிக்கலாம் எனவும் அவனைத் தேற்றி பக்கத்திலிருந்த பாருக்கு அழைத்து சென்று தாகசாந்தி செய்து அனுப்பி வைத்தோம்.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். காலப்போக்கில் அருண் காயத்ரியை மறந்தான். அரியர்ஸ் பல வைத்தாலும் ஒரு வழியாகப் படிப்பை முடித்து இப்போது டெல்லியில் வேலை செய்கிறான். அவனுடன் உடன் வேலை பார்க்கும் ப்ரியங்கா என்ற பெண்ணுடன் சுற்றுவதாக தினகர் போன வாரம் தொலைபேசியில் சொன்னான்.

நான் ஆறு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்துகொண்டேன். என் காதல் மணைவி கவிதா இங்கு ஒரு சிறு கம்பெனியில் வேலை செய்கிறாள். நான் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.



Love in the Time of Cholera

காதலும் ஒரு நோய் தான். அதிலும் நிராகரிப்பட்ட காதல் உயிர்கொல்லி. தன் வாழ்நாள் முழுதும் இந்த உயிர்கொல்லி நோயுடன் வாழ்ந்து நோயின் வலியினை முழுதாக அனுபவித்து நோயை எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கனவுலகில் வாழ்ந்து தன் வயோதிகத்தில் காதலில் வென்றவனின் கதை தான் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'Love in the Time of Cholera' (காலரா சமயத்தில் காதல்?).

ஃபெர்மினாவின் மேலுள்ள தன் காதலைக் 51 ஆண்டுகள் கழித்து, அவள் கணவர் அர்பினோவின் இறுதிச்சடங்கில், மீண்டும் ஃப்ளொரொண்டினோ வெளிப்படுத்துவதில் நாவல் ஆரம்பிக்கிறது. இங்கிருந்து ப்ளொரெண்டினோ, ஃபெர்மினா மற்றும் அர்பினோவின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி இல்லாமல் முன்னும்பின்னுமாகக் கூறுகிறார் மார்க்வெஸ்.

இளைஞன் ஃப்ளொரெண்டினோவிற்கு ஃபெர்மினாவின் மேல் கண்டதும் காதல். அவனின் கவிதைகளிலும் இசையிலும் ஈர்க்கப்படும் ஃபெர்மினாவும் காதல் வயப்படுகிறாள். எந்நேரமும் காதல் மயக்கத்திலேயே இருக்கும் ஃப்ளொரெண்டினோ காதல் கவிதைகள் இயற்றுவதும் காதல் காவியங்களை மனனம் செய்வதும் ஃபெர்மினாவின் தரிசனத்திற்குக் காத்திருப்பதுமாகக் காதலின் பித்த நிலையில் இருக்கிறான். இந்நிலையில் தன் உறவினர்களின் ஊருக்குப் பயணப்படும் ஃபெர்மினா காதலின் கனவுலகில் இருந்து வெளிவருகிறாள். ஊருக்குத் திரும்பியதும் ஃப்ளொரெண்டினோவின் காதலை நிராகரிக்கிறாள்.

காதல் நிராகரிக்கப்பட்ட சோகத்தில் ஃப்ளொரெண்டினோ எதிலும் ஈடுபாடில்லாமல் திரிகிறான். அவன் தாய் ட்ரான்சிட்டா அவனது நோயை உணர்ந்து அவனை மீட்டெடுக்க அவனை கப்பல் நிறுவனத்தில் வேலைக்கு சேர வைக்கிறாள். கப்பல் நிறுவன வேலையில் பற்றில்லாமல் எந்த நேரமும் காதல் கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் எழுதும் அலுவல் தொடர்பான கடிதங்களும் கவிதை நடையில் இருக்கின்றன. இதைக் கண்ட கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர், இவனது உறவினர், காதலை மறக்க அவனை வேறொரு நகருக்கு கப்பலின் மூலம் அனுப்புகிறார். இந்த பயணத்தில் ஃப்ளொரெண்டினோவின் காதல் தீவிரமடைகிறது. அந்த தீவிரம் அவன் உடல்நிலையும் பாதிக்கிறது. ஃப்ளொரெண்டினொ ஃபெர்மினாவை மறந்து தன்னால் வாழ முடியாதென ஊர் திரும்புகிறான்.

அதே நேரம், ஃபெர்மினா அர்பினோவை சந்திக்கிறாள். அர்பினோ நகரின் புகழ்பெற்ற மருத்துவர். அவரது தந்தையைப் போலவே அர்பினோவும் அந்த ஊரில் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து காக்கிறார். காலரா வராமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் முன்னின்று நடத்துகிறார். அர்பினோவும் ஃபெர்மினாவும் காதலோ ஈர்ப்போ இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்திற்கும் வசதிக்கும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனாலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஒருவருக்கொருவர் மற்றவரின் தேவை அறிந்து அன்புடன் வாழ்கின்றனர்.

"திருமணம் என்பது ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு" என்கிறார் அர்பினொ.

ஃபெர்மினா தன் கணவனுடன் சிறுசிறு சண்டைகள் இருந்தாலும் ஃப்ளொரெண்டினொவை முழுதாக மறந்துவிட்டு தன் குடும்பத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் குழந்தைகளை அளவில்லா பாசத்துடன் வளர்க்கிறாள்.

ஃபெர்மினாவிற்கு திருமணமானதும் ஃப்ளொரெண்டினோவின் காத்திருத்தல் ஆரம்பமாகிறது. தனக்கும் ஃபெர்மினாவுக்குமான காதலின் வெற்றி அர்பினொவின் மரணத்தால் மட்டுமே சாத்தியம் என அர்பினோவின் மரணத்திற்குக் காத்திருக்கிறான். ஃபெர்மினாவைத் தவிர வேறு யாரையும் மணம் புரிவதில்லையென முடிவெடுத்தாலும் தன் காதலின் வலியைப் போக்கிக்கொள்ள மணமாகாத பெண்கள், விதவைகள் எனப் பல பெண்களை நாடுகிறான்.

ஃப்ளொரெண்டினோவிற்கு வயதாக ஆக அர்பினோவிற்கு முன் தானோ அல்லது ஃபெர்மினாவோ இறந்துவிடும் சாத்தியம் குறித்து பயம் எழுவதை மார்க்வெஸ் மிக அழகாக விவரிக்கிறார்.

சிறு பிணக்குகளும் கருத்துவேறுபாடுகளும் இருந்தாலும் ஃபெர்மினா, அர்பினோ நிறைவான இல்வாழ்க்கை நடத்துகின்றனர். பாரீஸ் நகருக்கு தன் கணவ்னுடன் சுற்றுலா சென்று வந்ததும் ஃபெர்மினாவிற்கு தன் சொந்த ஊரின் மேல் பாசமும் அதே நேரத்தில் அங்கு நேரும் தீயவைகளைக் கண்டு பயமும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.

தன் காதலைத் தன் தாயைத் தவிர வேறு யாரிடமும் வெளிப்படுத்தாத ஃப்ளொரெண்டினோ தன்னுடன் வேலை பார்க்கும் லியோனாவிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் தவிப்பார்.

ஃப்ளொரெண்டினோவின் காதல் நிராகரிக்கப்பட்டு 51 வருடங்கள் 9 மாதங்களுக்குப் பிறகு அர்பினோ மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் இறக்கிறார். இறுதிச் சடங்கில் அன்றிலிருந்து சற்றும் குறையாமல் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் காதலை ஃபெர்மினாவிடம் கூறுகிறார்.இது நடவாத காரியம் என ஃபெர்மினா மறுக்கிறார். முன்பு காதலின் உச்சகட்ட பித்தநிலையில் இருந்த ஃப்ளொரெண்டினோ இப்போது காலத்தால் பக்குவப்பட்டதால் ஃபெர்மினாவிடம் அவளை அடிக்கடி சந்திக்கவாவது அனுமதி கேட்கிறார்.

ஃபெர்மினாவுடன் சந்திப்புகளும் கடிதப் போக்குவரத்தும் தொடர்கிறது. ஃப்ளொரெண்டினோ முன்பு எழுதிய உணர்ச்சிமிகுந்த காதல் கவிதைகளையும் இப்போதைய கடிதங்களையும் ஃபெர்மினா ஒப்பிட்டுப் பார்த்து வியக்கிறார். அர்பினோவின் இழப்பை மறக்க ஃப்ளொரெண்டினோவும் ஃபெர்மினாவும் அவரின் சொந்த கப்பலில் பயணக்கிறார்கள். பயணத்தினூடே இத்தனை நாட்களாக அவர்களினுள் காத்திருந்த காதல் வெளிப்படுகிறது. தன்னை ஊரார் பழி கூறப்போகிறார்கள் என ஃபெர்மினா அச்சப்படுகிறார். உடனே ஃப்ளொரெண்டினொவின் கட்டளைப்படி கப்பலின் கேப்டன் காலரா நோயாளியை ஏற்றிச் செல்ல குறிக்கப்படும் கொடியை கப்பலின் தளத்தில் ஏற்றிவிடுகிறார். இது போல் எத்தனை நாட்கள் இவ்வாறு பயணிப்பதெனக் கேப்டன் கேட்க "எப்பொழுதும்" என ஃப்ளொரெண்டினோ சொல்வதாக நாவல் நிறைவடைகிறது. காதல் நோயின் குறியீடாக காலரா குறிப்பிடப்படுகிறது.

தன் வாழ்நாள் முழுதும் காதலுக்காகக் காத்திருக்கும் நாயகன் ஆச்சரியமளிக்கிறார். கதை நெடுகிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் சம்பங்களையும் விவரிக்கும் விதத்தில் மார்க்வெஸ் கதாபாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துகிறார். கிளைக்கதைகளாக வரும் ஃபெர்மினாவின் தந்தையின் கதையும் அவள் உறவுக்கார பெண்ணின் கதையும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நெடுகே பல ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டு போரைப் பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளும் விவரிக்கப்படுகின்றன.

நல்ல சுவாரசியமான நடையாக இருந்தாலும் வாசிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சில பக்கங்கள் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன. சில வேளைகளில் கதாபாத்திரங்களின் செய்கைகள் அலுப்பேற்படுத்தின. இந்த நாவல் இப்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். நான் உருவகப்படுத்தியது படத்துடன் எந்தளவு ஒத்துப்போகிறது எனப் பார்க்க வேண்டும்.



கண்ணு தெரியுதா?

வழக்கமா தண்டோரா விக்கி நடத்தற விளையாட்டு தான்...இன்னிக்கு இங்க விளையாடலாம்...கண்ணை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க...க்ளூவும் கொடுத்திருக்கேன்...கொஞ்சம் சுலபம் தான்..


1. இப்படியே கண்டினியு பண்ணு ராசா..சொதப்பிடாதே!
சென்ற ஆட்டத்தின் நாயகன் அடுத்த மாசமும் கலக்குவாரா?



2. தானைத்தலைவி..பொய் சொல்ல மாட்டாங்கோ
ரா ரா பாடும் சகி



3. விருந்தோம்பல் நம்ம பண்பாடு இல்லையா?
யார் விருந்தினர்ன்னு கபால்னு 'புடி'ங்க



4. 'தலை'ப்புச் செய்தி :)
இவரைக் கண்டுபுடிக்கறது மாயமா மந்திரமா?



5. இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் போல
இவர் நாட்டு பேங்குல ஒரு அக்கவுண்ட் தொறப்போமா



6. இவர் தான் முரட்டு ஆசாமின்னு சொல்றாங்க
இவர் கடவுளா அப்பாமகனா?



7. மந்திரி
கத்திபாராவில இருந்து கோயம்பேடு எவ்வளவு தூரம்?




8. இவரைத் தெரியாதுன்னு சொல்லிடாதீங்க சாமீ :))
நயந்தாரா ஜோடி தெரியுது..மும்தாஜ் ஜோடி தெரிலயா?



9. மாதவனுக்கு சமமா கண்ணை விரிச்சு சிரிக்கறாங்க
லகே ரஹோ முன்னா மேடம்



10. வலைப்பதிவுலகமே நம்மள பார்த்துகிட்டிருக்கு
பச்சைக்கிளி முத்துச்சரம் ரீமிக்ஸ் ஓட்டிக்கிட்டு மின்னலா வேட்டையாடியவர்



இவங்கதான் ;)





















TCE பொன்விழா கொண்டாட்டங்கள்

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பொன்விழா இந்த மாதம் 29-ம் தேதி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, டி.வி.எஸ் நிறுவன நிர்வாக மேலாளர் திரு. வேணு ஸ்ரீனிவாசன், கல்லூரி தாளாளர்கள் திருமதி. ராதா தியாகராஜன், திரு கருமுத்து. தி. கண்ணன், கல்லூரியின் (நிரந்தர?! ;) ) முதல்வர் திரு. அபய்குமார் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.







விழாவை ஒரு மாசம் தள்ளி வச்சிருந்தா மதுரைக்கு ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்...ஹும்ம்ம்...



பொங்கலோ பொங்கல்!

"ஏங்க நெல்லுமூட்டைல இருந்து ஒரு படி எடுத்து குத்தி வச்சிருக்கேன். பருப்பும் வெல்லமும் வாங்கிட்டு வரணும்"

"ஏம்மா செல்வி, சுகுமார் கடைல போய் 100 கிராம் வெல்லமும் 200 கிராம் பருப்பும் வாங்கிட்டு வா. அப்பா சாயந்திரம் வந்து காசு தருவாருன்னு சொல்லு"

"பொண்ணுக்கு பாவாடை துணி எடுத்தாச்சு. உங்க அப்பாவுக்கு வச்சு படைக்க ஒரு வேட்டி துண்டு வாங்கிட்டு வந்துடுங்க"

********************************************************************

"சார், பொங்கல் சார். சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோட போய் கொண்டாடுவோம் சார். அன்னைக்குப் போய் ஆபிஸ் வர சொல்றீங்களே"

"தெரியுது மோகன், ஆனா இந்த வாரம் டெலிவரி இருக்குன்னு தெரியும்ல...வேணும்னா நீங்க இந்த மாசக்கடைசில ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்களேன்..."

(மனதுக்குள்)"பொங்கலுக்கு ஊருக்கு போக விடாம மாசக்கடைசில லீவ் கொடுக்கறானாம்...போடாங்க"

*******************************************************************

"மாப்ள, மாட்டு கொம்புக்கு அடிக்க பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டயா"

"எல்லாம் ரெடி மாமா, காலைல போய் குளத்துல மாட்டைக் குளிப்பாட்டறோம்..அங்க வச்சே பெயிண்ட் அடிச்சு அலங்காரம் பண்ணி வண்டியோட சேர்த்து பூசை பண்ணி வண்டி கட்டிக்கிட்டு பசங்களை எல்லாம் ஏத்திகிட்டு ஊரை சுத்திட்டு மசானகொல்லைக்கு போய் படையல் வச்சுட்டு பட்டையைக் கிளப்பறோம்"

"கரும்பு கட்டு வண்டியில எடுத்து வச்சிடு...போன வருசத்தை விட பிண்ணிடனும் மாப்ள"

********************************************************************

"இந்த முறையாவது போனஸ் கூட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா கையை விரிச்சுட்டாங்களேய்யா"

"என்ன சார் பண்றது..போனஸ் காசுல தான் பொங்கல் கொண்டாடனும் என்னென்னவோ ப்ளான் போட்டிருந்தேன்...இதை வச்சுகிட்டு என்ன பண்றது...கைமாத்தா ஒரு ஆயிரம் ரூபா இருந்தா குடு சார்"

"அட நீ வேறய்யா..நானே எவன்கிட்ட கேட்கலாம்னு பாத்துட்டிருக்கேன்"

**********************************************************************

"முருகேசா...இந்த வருசமாச்சும் அந்த கருப்பனை அடக்கிடனும்டா"

"ஆமா மாப்ள..போன வருசமே நமக்கு தண்ணி காமிச்சுட்டான்..அந்த குமார்ப்பய குறுக்கப்பூந்து வவுத்துல குத்து வாங்காம இருந்தா போன வருசமே கருப்பன் கணக்கை செட்டில் பண்ணியிருக்கலாம்..இந்த வருசம் அந்த ஊர்க்காரனுங்க மொகத்துல கரியப் பூசனும்"


*********************************************************************

"ஏங்க இந்த பொங்கலுக்காவது ஊருக்கு போய் வரலாம்ங்க."

"அவனுங்க கூட சண்டை போட்டதெல்லாம் மறந்துபோச்சா? இனிமே அந்த ஊரு பக்கம் காலை வைக்க மாட்டேன்"

"பண்டிகை நாள் அதுவுமா எதுக்குங்க வீம்பு? என்ன இருந்தாலும் நல்ல நாள்ல பெரியவ்ங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா நமக்கு தானே நல்லது"

"யார் அவங்களா பெரியவங்க? வேலையை பாத்துட்டு போ..இல்ல அவங்க தான் உனக்கு முக்கியம்னா நீ மட்டும் போய் வா"

**********************************************************************

"மச்சி இந்த பொங்கல் பட்டாசு கிளப்பப் போகுதுடா. தல படம் வருது. போக்கிரி வருது. தீபாவளியும் வருதாம்."

"குரு விட்டுட்டியே"

"தியேட்டர் டிக்கெட் விலை வேற குறைச்சுட்டாங்க... ஆனா என்ன யூஸ்...இவனுங்க ப்ளாக்ல தான் விப்பானுங்க"

"ப்ளாக்கோ வொயிட்டோ...மாப்ள பொங்கல் மூனு நாள்ல ரிலீசான எல்லா படத்தையும் பார்த்துடறோம்"

**********************************************************************

"பொங்கல் எதுக்குப்பா கொண்டாடறோம்?"

"இது நமக்கு இயற்கைக்கு நன்றி செலுத்தி வழிபடற பண்டிகைடா கண்ணா. விவசாயிகளின் பண்டிகை. கிராமத்துல சூரியனுக்கு நிலத்துக்கு நமக்கு உதவற மாடுகளுக்கு பூஜை செய்வாங்க"

"நாம் என்னப்பா செய்யப்போறோம்?"

"நாம புதுத்துணி போட்டுகிட்டு மெரினா பீச் போலாம்டா"

**********************************************************************

"இந்த தடவை பொங்கலுக்கு டிவில என்ன படம்டா போடறாங்க?"

"இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையா "(அ)சிங்கமுல்ல" படம் போடறாங்க...படம் சூப்பரா இருக்கும்பா..."

"நீ என்ன படம் வேணும்னா பாத்துக்க...பட்டிமன்றம் போடும்போது ரிமோட்டை தொடக்கூடாது"

"உங்க ரெண்டு பேருக்கும் படம், பட்டிமன்றம்னு இருக்கு.ஆனா சிறப்பு நிகழ்ச்சின்னு சீரியல் எதுவும் போடமாட்டாங்க. நான் என்ன பண்றது?"

***********************************************************************

அமெரிக்காவிலிருந்து ஜிடாக்கில் நண்பன்
"டேய், ஊரை விட்டு ஊரு வந்து மொத முறையா பொங்கல் கொண்டாடறோம்டா..பீலிங்கா இருக்கு"

"ஆமா மாப்ள..எனக்கும் தான்..என்ன பண்றது"

"நானே நாளைக்கு பொங்கல் செய்யலாம்னு இருக்கேன் டா..நீ என்ன பண்ணப் போற?"

"நாங்க விவரம்ல...இங்க குடும்பத்தோட இருக்க நம்மாளு ஒருத்தரை புடிச்சு வச்சுட்டேன்...அவர் வீட்டுல தான் பொங்கல் ;D"

*********************************************************************

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

பொங்கலோ பொங்கல்!!!!



பாபேல் (Babel)

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? கட்டலாம் என்கிறது பாபேல்(Babel). நாம் சந்தித்திராத மக்களிடம் நம் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும், மொழி தெரியாத இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும், எண்ணங்களை விருப்பங்களை அடுத்தவரிடம் எடுத்தியம்ப இயலாமையால் நேரும் விசனங்களையும பதட்டத்தில் நாம் செய்யும் செயல்களின் பின்விளைவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவர் ஒருவர் ஆடுகளை நரிகளிடமிருந்து காப்பாற்ற மற்றொரு மொராக்கோவாசியிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்குகிறார். அவரின் இரு மகன்களும் அந்த துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுக்கும்போது மொராக்கோவிற்கு சுற்றுலா வந்திருக்கும் அமெரிக்க தம்பதியரில் மனைவியை சுட்டுவிடுகின்றனர். இங்கிருந்து கதை நான்கு கிளைகளாகப் பிரிகின்றது. ஒவ்வொரு கிளைக்கதையும் படத்தின் போக்கில் முழுமையடைகின்றது.

மனைவி சூசனுடனான(கேட் ப்ளான்ச்செட் Cate Blanchett) கருத்து வேறுபாடுகளைக் களைய ஒரு மாற்றத்திற்காக மொராக்கோவிற்கு சுற்றுலா வருகிறார் ரிச்சர்ட் (பிராட் பிட் Brad Pitt). தங்கள் இரு குழ்ந்தைகளையும் எமிலியா என்ற மெக்சிக பெண்மணியின் பொறுப்பில் கலிபோர்னியாவில் விட்டுவருகின்றனர்.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவரின் மகன்கள் அப்துலும் யூசுப்பும். அண்ணனை விட தம்பி சுட்டி('வெயில்' மாதிரி தான்). துப்பாக்கியின் குண்டுவீச்சு தூரத்தை சோதிக்க ஒரு பேருந்தை நோக்கி சுடுகின்றனர். அது சூசனின் தோள்பட்டையை காயப்படுத்துகிறது.

மொழி தெரியாத, மருத்துவ வசதிகளற்ற சிறிய கிராமத்தில் தன் மனைவியுடன் ரிச்சர்ட் படும் இன்னல்களும் படத்தின் ஒரு கிளையாக, தன் மகனின் திருமணத்திற்காக ரிச்சர்டின் குழந்தைகளுடன் மெக்சிகோவிற்கு எமிலியா பயணப்படும் கதை மற்றொரு கிளையில் செல்கிறது.மொராக்கோ பாலைவனப் பரப்புகளில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரகளின் வாழ்க்கை காட்டப்படுகிறது. மற்றொரு கதை ஜப்பானில் வாய்பேச, காது கேட்காத இளம்பெண்ணைப் பற்றியது. இந்த நான்கு கதைகளுக்கும் மையப்புள்ளி அந்த துப்பாக்கிச் சூடு.

அடிபட்ட மனைவியைக் காப்பாற்றத் துடிக்கும் கணவனாக பிராட் பிட் கலக்கியிருக்கிறார். மருத்துவ உதவி வேண்டி தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போதூம் , உதவி கிடைக்கத் தாமதமாகும் நேரத்தில் ஆத்திரம் கொள்வதும், மனைவி படும் வலியின் வேதனையை உள்வாங்கி கலங்குவதுமாக பிராட் பிட் தன் நடிப்பாற்றலை முழுவீச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சக சுற்றுலா பயணிகளைத் தொற்றிக் கொள்ளும் உயிர் பயமும், உதவ வேண்டும் என்ற சிலரது எண்ணமும், எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற மற்ற சிலரின் சுயநல மனப்பாங்கும் அவர்களுக்குள் மூளும் வாக்குவாதங்களும் அருமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

எமிலியா தன் மகனின் திருமணத்திற்காக தன் உறவினர் சாண்டியாகோ(Gael Garcia Bernal)வுடன் ரிச்சர்டின் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மெக்சிகோ வருகிறார். அங்கு திருமணக் கொண்டாட்டங்கள் அழகாகக் காட்டப்படுகின்றன. தன் அத்தையை திரும்ப கலிபோர்னியாவிற்கு அழைத்துவரும்போது இமிக்ரேஷன் பிரச்சனையில் சிக்கி எல்லைப் போலீசாரிடம் தப்பும் சாண்டியாகோ குழந்தைகளையும் எமிலியாவையும் தன்னந்தனியாக பாலைவனத்தில் இறக்கிவிட்டுச் செல்கிறார்.

அந்த பாலைவனத்தில் குழந்தைகளுடன் எமிலியா அல்லாடுகிறார். குழந்தைகளை ஒரு இடத்தில் விட்டுவிட்டு உதவி தேடச் சென்று எல்லை காவல்துறையிடம் அகப்பட்டு பின் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் மெக்சிகோவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். குழந்தைகளும் பாலைவனத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். இந்த படத்தில் மிகவும் கவர்ந்தது எமிலியா கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு தான். கெய்ல் கார்சியா பெர்னாலின் நடிப்பு மிக இயல்பு.

மூன்றாவது கதை, மொராக்கோவில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரர்களின் கதை. துப்பாக்கி விற்ற நபர் காவல்துறையிடம் உண்மையைச் சொல்லிவிட காவல் துறை இவர்களைத் தேடி வருகிறது. அந்த பயத்தில் தந்தையிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லுகிறார்கள். தந்தை அவர்களை அழைத்துக்கொண்டு தலைமறைவாக முயற்சிக்கிறார். ஆனால் வழியில் போலீசிடம் சிக்குகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் அண்ணன் இறக்கிறான்.. அதைக் கண்டு கலங்கும் தம்பி யூசும் அண்ணனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியபடியே போலிசில் சரணடைகிறான்.

நான்காவது கதை, மொராக்கோவாசியிடம் துப்பாக்கியை விற்ற ஜப்பானியரின் மகளைப் பற்றியது. வாய்பேச முடியாத காது கேளாதவரான அந்த இளம்பெண் இளைஞர்களின்பால் ஈர்க்கப்படுவதும் பாலுணர்வினால் பரிதவிப்பதும் தன் மேல் அக்கறை காட்டாத தந்தையின் மேல் கொள்ளும் வெறுப்பும் எந்தவித பூச்சுகளுமின்றி யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு கதைகளும் சுழற்சி முறையில், ஆனால் காலவரிசையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் கதைகளின் போக்கை எந்தவித சிக்கல்களுமின்றி எளிதாகப் புரியும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவும் பின்னணி இசையும். மொராக்கோ, அமெரிக்கா, மெக்சிகோ, ஜப்பான் என அந்தந்த நிலப்பரப்புகளை கனகச்சிதமாக அழகாக உள்வாங்குகிறது ஒளிப்பதிவு. குறிப்பாக மெக்சிகோ திருமண கொண்டாட்டங்களும் இரவு நேர டோக்கியோ நகரமும் மிக அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் பால்கனியில் இருந்து விலகி டோக்கியோ நகரை மேலிருந்து காட்டும் காட்சி அபாரம்.

டோக்கியோ நகர டிஸ்கோக்களாகட்டும், மெக்சிகோவில் திருமணத்தின்போது லத்தீன் அமெரிக்க இசையாகட்டும் மொராக்கோவின் பாலைவனக் கடுமைக்கேற்ற மெல்லிய பின்னணி இசையாகட்டும் காட்சிகளோடு இயைந்திருக்கின்றது.

படத்தில் சில மாண்டேஜ் காட்சிகள் க்ராஷ்(Crash) திரைப்படத்தை ஞாபகப்படுத்துகின்றன. இந்த இரு படங்களுக்கும் படமாக்கப்பட்ட விதத்திலும், அடிநாதத்திலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கிராஷ் திரைப்படத்தில் இனவெறிக்கு எதிரான செய்தி படம்நெடுக சொல்லப்படும். ஆனால் பாபேலில் வெளிப்படையாக எந்தவித மெசெஜும் இல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நான்கு கதைகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படத்திலிருந்து எடுத்துக்கொள்ள நமக்குப் பல செய்திகள் இருக்கின்றன.



கொசுவத்தி & வாழ்த்துக்கள்

"அடுத்த பொங்கலுக்கு உயிரோட இருக்க மாட்ட", "அடுத்த தீபாவளிக்குள்ள உனக்கு கைகால் விளங்காம போயிடும்" - கிராமங்களில் பண்டிகை நாட்களில் சண்டை போட்டுக்கொண்டால் இப்படித் திட்டிக கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம் குறித்து இப்போதே யோசிப்பதும் கடந்த ஆண்டுகளில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை அசைபோடுவதும்கூட பண்டிகைக் கொண்டாட்டங்களின் பகுதியாகவே இருக்கிறது. தீபாவளியின் போது கடந்த ஆண்டு சொதப்பிய மைசூர் பாகோ, கை முறுக்கோ, பொங்கல் அன்று சென்ற வருடம் நடந்த ஏதாவது ஒரு சின்ன சண்டையோ பேசுபொருளாக இருக்கும். புத்தாண்டு தினமும் கடந்த வருட நினைவுகளும் புதுவருடத் தீர்மானங்களுமாகக் கழியும்.

டிடியில் 'இளமை இதோ இதோ'வில் தான் புத்தாண்டு பிறக்கும். 'Wish You Happy New Year' என்று முதல் வரி மட்டும் வைத்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்துக்கு 'சகலகலா வல்லவனை'ப் பற்றிப் பாடும் அந்த பாடல் எப்படி இத்தனை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து ஒலிக்கிறது என ஆச்சரியமாக இருக்கும்.

கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம். அப்படியே ஒரு இரண்டு மூன்று மணி நேரம் ஆடிவிட்டு மொத்தமாக ஒரு குளியலைப் போட்டு மீண்டும் 'ஏதாவது' ஒரு பட்த்தைப் பார்த்து புது வருடத்தை வரவேற்போம்.

புத்தாண்டு சீசனில் கடைகளில் விழாக்கால சலுகைகள் மட்டுமில்லாமல் ஓட்டல்களிலும் பஃபே வைப்பார்கள். அங்கும் போய் நம் கைவரிசையைக் காட்டாவிட்டால் எப்படி? கல்லூரிக்கு பக்கத்திலேயே 'ஆர்த்தி ட்ரைவ் இன்' என்று ஒரு ரெஸ்டாரெண்ட். எவனாவது ட்ரீட் கொடுத்தால் மட்டுமே அங்கு செல்வோம். சாதாரண நாட்களில் அந்த ஓட்டலுக்கு எதிரில் இருக்கும் பரோட்டா கடையை அட்டாக் செய்வோம்.

எங்களைப் பற்றித் தெரியாமல் ஒரு புதுவருட சீசனில் அந்த ஓட்டலில் பஃபே வைத்தார்கள். அதுவும் 80 ரூபாய்க்கு. விடுவோமா? முதலில் ஆறு பேர் போனோம். நாங்க ஆரம்பிக்கும்போதே இன்னும் ஏழெட்டு பசங்க வந்தாங்க. சூப் குடிச்சு முடிக்கும்போது கிட்டத்தட்ட 20 பசங்க. அப்படியே வரிசையா சூப், இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், பட்டர் நான், நூடுல்ஸ், தயிர்சாதம், ரெண்டு மூனு ஸ்வீட்டுன்னு டேபிள்ல வரிசையா வச்சிருந்ததை உள்ள தள்ளிக்கிட்டே வந்தோம்.

ஒரு மணி நேரத்துக்கு மேல நாங்க கஷ்டப்பட்டு கடமையை ஆத்திக்கிட்டிருந்தா பக்கத்துல ஒரு பேமிலி ஆளுக்கு ரெண்டு இட்லி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்காங்க. 'ரெண்டு இட்லி சாப்பிட இவிங்க எதுக்குடா பஃபேக்கு வராங்க'ன்னு சொல்லிகிட்டே அவங்க ப்ளேட்டை தட்டிவிடப் போன நண்பனை அவன் வாயில ஒரு முழு இட்லியை அடைச்சு இந்த பக்கம் கூட்டிட்டு வந்தோம். அங்க இன்னொரு உயிர்காப்பான் கைல ப்ளேட்டோட சின்ன பசங்க விளையாட வச்சிருந்த ஊஞ்சல்ல ஆடிட்டிருந்தான். கேட்டா ஆடி ஆடி கொஞ்சம் ஜீரணமாக்கி வயித்துல இடம் சேமிக்கறானாம்.இப்படியாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாம சேர்த்துவச்சு சாப்பிட்டோம்.

எல்லாருக்கும் சாப்பிட்டு போரடிக்கவே ஐஸ்க்ரீம் பக்கம் போனோம். வென்னிலா ப்ளேவர் எனக்கு புடிக்காதுன்றதால மூனே ரவுண்டுல நிறுத்திடலாம்னு மூனாவது தடவை வாங்கப் போனா கொடுக்க முடியாதுன்னுட்டான். வந்துச்சே எங்களுக்கு கோவம். 'பஃபே'ன்னா எல்லாம் அன்லிமிட்டட் தானே ஏன் கொடுக்க முடியாதுன்னு தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அவன் 'மத்ததெல்லாம் அன்லிமிட்டட்..ஆனா ஐஸ்க்ரீம் ஒரு தடவை தான்'ன்னு பதில் சொல்றான். 'அப்ப அதை போர்ட்ல போட வேண்டியது தானே...இது தெரிஞ்சா நாங்க வந்தே இருக்க மாட்டோம்'னு டயலாக். உடனே அந்தாளு போய் அங்க வச்சிருந்த போர்ட்ல் ஐஸ்கீரிம்க்கு நேரா '50 கி'ன்னு கிறுக்கிட்டு வந்துட்டான்.

ஐஸ்க்ரீம் கொடுக்காத கோவத்தை அங்க பதிவு செஞ்சே ஆகனும். என்ன பண்ணலாம்னு யோசிச்சா எதிர்ல சூப்பு கப்பு வாயைப் பொளந்துட்டு இருக்கு. இன்னைக்கு இவனுங்களை விடறதில்லன்னு ஆளுக்கு ஒரு கப்பை எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு கப் சூப்பை அடிச்சா மத்தவங்களெல்லாம் பக்கத்துல வரவே பயந்துபோய் எங்களைப் பார்க்கறாங்க. அந்த பயம் இருக்கட்டும்னு அந்த சூப்போட பஃபேயை முடிச்சுட்டு ஓட்டல்காரங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி அவங்க அடிக்க வரதுக்கும் முன்னாடி எஸ்கேப் ஆனோம்.

இப்படி ஒவ்வொரு புதுவருஷத்துக்கும் பண்டிகை நாட்களுக்கும் அசைபோட ஏதாவது ஒரு விஷயம் இருந்துட்டுதான் இருக்கு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! ;)



மாண்டி'வீடியோ'

ஆரம்பிச்சுட்டாங்கய்யா. இந்த ஊர்ல கோடைக்காலக் கொண்டாட்டங்களை ஆரம்பிச்சுட்டாங்க. டிசம்பர் 8-ம் தேதி 'La Noche de las Luces'-ன்ற பேர்ல ஒளி இரவு நடத்தினாங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு வான வேடிக்கை. இந்த நிகழ்ச்சிதான் இவங்க கோடைக்கால கொண்டாட்டங்களுக்குத் துவக்கமாம். கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள்(இந்த ஊர் மக்கள்தொகையில் மூன்றிுல ஒரு பங்கு) பீச்சை நிரப்பிட்டாங்க. இரவு 10 மணிக்கு நடந்த இந்த ஒளிவிருந்துக்கு மதியம் 2 மணியில் இருந்தே பீச்சில் மக்கள் குவிய ஆரம்பிச்சாச்சு. மாதேவையும்,பீரையும் கலந்தடிச்சுட்டு வேகாத மாட்டுக்கறியை சைட்ல ஒரு கடி கடிச்சு, பஞ்சு முட்டாய் வாங்கி பசங்க கைல கொடுத்துட்டு வேடிக்கைப் பார்த்துட்டுக் கிடந்தாங்க.

சும்மாவே இப்படி பட்டையைக் கிளப்பறாங்களே கிறிஸ்துமஸுக்கும் இப்படி தூள் கிளப்புவாங்கன்னு பார்த்தா ஏமாற்றமா போயிடுச்சு. நள்ளிரவு 12 மணிக்கு வெடி வெடிச்சாங்க. ஊர் முழுக்க எல்லாரும் ஒரே நேரத்துல ராக்கெட் விட்றது பத்தாவது மாடில இருந்து பார்க்க வண்ணமயமா அருமையா இருந்தது. ஆனா அவ்வளவுதான் இவங்க கிறிஸ்துமஸ் போல. கிறிஸ்துமஸ் அன்னைக்கு தெருவில ஒரு ஈ,காக்கா இல்ல. பொதுவா லீவ் நாளாச்சுன்னா பீச்சுக்கு வந்து வெயில்ல படுத்து கிடக்கற கூட்டத்தையும் காணோம். சினிமா தியேட்டரல் கூட நேத்து ராத்திரி ஷோ மட்டும்தான் ஓட்டினாங்க. இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே :))

ஒளி இரவு வீடியோ:



மூன்று

Final Cut:

தற்செயலாகத் தொலைக்காட்சியில் பார்த்த திரைப்படம். சற்றும் எதிர்பாராத கதைக்களம் ஆரம்பத்திலேயே ஆவலை அதிகப்படுத்துகிறது. கதாநாயகன் ஜூட் இறந்துவிட அவரின் இறுதிச்சடங்குகளுக்காக கூடியிருக்கும் நண்பர்களுக்கு ஜூட்டின் மனைவி, ஜூட்டின் கடைசி ஆசை எனக் கூறி, ஒரு விடியோவைத் திரையிடுகிறார். ஜூட் இரண்டு வருடங்களாக தன் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொறுத்தி தன் நண்பர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியாமல் படம்பிடித்து வைத்திருக்கிறார், காண்டிட் கேமரா நிகழ்ச்சி போல். நண்பர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், அடுத்தவரைப் பற்றி புறம் கூறியவை, கள்ளத் தொடர்புகள், போதை பழக்கங்கள் என அவர்களுடைய ரகசியங்கள் அம்பலமாகின்றன. ஒவ்வொருவரைப் பற்றிய காட்சிகள் வரும்போதும் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளும் விவாதங்களுமாக படம் நகர்கின்றது.

இறுதியில் ஜூட் இறந்ததற்கான காரணமும் அந்த வீடியோவின் மூலமாக வெளிவர அவரின் மரணத்திற்குக் காரணமானவரை கைது செய்வதோடு படம் முடிகின்றது. அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருப்பதையும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளையும் படம்பிடிக்கும் காமிராவை நோக்கி கதாப்பாத்திரங்கள் கோபத்தில் கத்துவது நல்ல காமெடி.

ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியம் அம்பலமாகும்போதும் மற்றவர்களின் ரியாக்ஷனும் குற்றம் சுமத்துபவர் அதை நியாயப்படுத்துவதும் சுவாரசியம். ஆனால் படம் முழுக்க இதே தான் எனும்போது சிறிது சலிப்பு ஏற்படுகிறது. வித்தியாசமான முயற்சி. ஒருமுறை பார்க்கலாம்.


El viaje hacia el mar(Seawards Journey):

கடலை நோக்கிப் பயணம். உருகுவேயின் லவஷேஹா(Lavalleja) மாவட்டத்திலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கடலைக் காண்பதற்காக கதாபாத்திரங்கள் பயணிப்பதே கதை. இவர்களைக் கூட்டிச் செல்பவரைத் தவிர வேறு யாரும் அதுவரைக் கடலைப் பார்த்தது கிடையாது. ஐந்து பேரின் பயணத்தில் அவர்களுக்கு அறிமுகமில்லாத அன்னியன் ஒருவரும் இனைந்துகொள்கிறார்.



மிகவும் மெதுவாக நகரும் படம். மிகப் பழைய வேன் மணல் சாலைகளில் ஓடும் வேகத்திலேயே படமும் நகர்கிறது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், வாழ்க்கையை வெறுத்து சாவிற்காகக் காத்திருக்கும் முதியவர், நடப்பது நடக்கட்டும் என எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு முதியவர், இவர்களை கடல் பார்க்க அழைத்துச் செல்வதே வீண் என நினைக்கும் ஓட்டுனரின் நண்பர், தற்செயலாக இவர்களுடன் பயணம் செய்யும் இளைஞன் என படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்.

இதற்கு முன் பார்த்த உருகுவே திரைப்படங்களை(Whisky,25 Watts) விட தொழில்நுட்ப ரீதியில் வெகு சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படம். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. ஆனால் திரைக்கதையின் வேகம் நம்மை சலிப்படையச் செய்கிறது. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனங்கள் அடுத்து ஏதாவது சுவாரஸ்யமாக நடக்குமென எதிர்பார்க்க வைத்தாலும் கடைசிவரை அதே வேகத்தில் படம் நகர்கிறது.

கடலைச் சென்றடைந்ததும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடலை ஒவ்வொரு விதத்தில் உருவகிப்பதோடு படம் முடிகின்றது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரசியமான திரைப்படமாக வந்திருக்கும். உருகுவேயின் நிலப்பரப்பைப் பார்க்க வேண்டுமானால் இந்த படத்தைப் பார்க்கலாம்.

Misdemeanor:

பதினைந்து நிமிடக் குறும்படம். இதுவும் தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்த்தது. பசியில் தவிக்கும் ஒரு ஏழை இளம்பெண் திருட எத்தனிக்கிறாள். ஆனால் ஒவ்வொருமுறை அவள் திருட முயலும்போதும் அவளுடைய உள்ளுணர்வு தடுக்கிறது. சூப்பர் மார்கெட்டில் திருட முயல்கிறாள். அதே கடையின் முதலாளி பூங்காவில் தன் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது திருட முயல்கிறாள். இறுதியில் திருடக்கூடாது என முடிவெடுத்துத் திருந்துவதாய் பதினைந்து நிமிடத்தில் அழகான சிறுகதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.

வசனம் எதுவுமில்லாமல் காட்சியமைப்புக்கு ஏற்றவாறான பின்னணி இசையுடன் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். பதினைந்து நிமிடங்களில் படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களும் மிக்ச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். சமயத்திற்கு ஏற்றவாறு மாறும் மனித இயல்பை அருமையான குறும்படமாக சொல்லியிருக்கிறார்கள்.



கால் போன போக்கில்

யார் அந்த டினா?
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery

ஏதாவது வெளியூருக்குச் சென்றுவந்தால் திரும்பிவந்ததுமே அம்மாவை உட்காரவைத்து பஸ் ஏறியதிலிருந்து வீட்டிற்கு திரும்பியதுவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வது என் அப்பாவின் வழக்கம். பல சமயங்களில் எனக்கு இது எரிச்சல் ஊட்டினாலும் ஒவ்வொரு முறையும் அவர் விரிவாக எல்லாவற்றையும் சொல்வது ஆச்சரியமாக இருக்கும். நானோ முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துவிடுவேன். அவராக ஒன்றுவிடாமல் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார். இப்போது பொய்னொஸ் ஐரிஸ் பயணம் குறித்து மூன்று பகுதிகளாக பதித்துக் கொண்டிருக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

ரிகொலெதா கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த பூங்காவில் மேப்பை விரித்து உட்கார்ந்தேன். குறிப்பாக எந்த இடத்திற்கும் செல்லும் திட்டமில்லை. அங்கிருந்த சாலையோரக் கடைகளை வேடிக்கைப் பார்த்துவிட்டு சுரங்க ரயிலில் பயணம் செய்து பார்க்கலாமென முடிவெடுத்துக் கிளம்பினேன்.

பொய்னொஸ் ஐரிஸில் பெரும்பாலான பகுதிகளில் தெருவோரக் கடைகள் நிறைந்திருக்கின்றன்ன. கைவினைப் பொருட்களும், மலிவான விலையில் துணிகளும் கிடைக்கின்றன. டேங்கோ நடனமாடுவது போல் சிறு சிலைகளும், அந்த நடனத்திற்கேற்ற ஆடைகளும், இசைத் தட்டுகளும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சில கடைக்காரர்கள் கிடார் வாசித்துக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

மத்திய நூலகம், பல்கலைக்கழக கட்டிடங்கள், கட்டிடக்கலை கண்காட்சியகம் ஆகியன இருந்த சாலையின் வழியாக நடந்து சாண்டா ஃபே (Santa Fe) அவென்யூவிற்கு வந்தேன். இந்த தெரு முழுதும் துணிக்கடைகள்தான். அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா ஃபே மாகாணம் சே குவேரா பிறந்த மாகாணம் என்று எங்கோ படித்த நினைவு.

சாண்டா ஃபேயில் இருந்த ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் நுழைந்தேன். 'Subte' என்றழைக்க்கப்படும் சுரங்க ரயில் பாதைகள் 1913-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் எங்கே வாங்குவதென்று தெரியாமல் அருகிலிருந்தவரிடம் கேட்க, அவர் நான் எந்த பக்கம் ரயில் போகும் எனக் கேட்டதாக நினைத்துக்கொண்டு ரயில் செல்லும் திசையைக் காட்டினார். எதிர்ப்புற நடைமேடையில் சில கடைகள் இருந்ததால் அங்கு சென்று விசாரித்தேன். நான் கேட்ட கடையிலேயே டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ரயிலில் திடீரென்று ஒருவர் சிறிய கிருஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துச் சென்றார். நான் வேண்டாமென சொல்வதற்கு முன் என் கையில் திணித்துவிட என்ன செய்வதென சுற்றும் முற்றும் பார்க்க, அடுத்த நிறுத்தத்தில் அவரே மீண்டும் வந்து வாங்கிச் சென்றார். ஓரிருவர் அந்த பொம்மைகளை காசு கொடுத்து வாங்கினர். மாண்டிவிடியோவிலும் பேருந்துகளில் மிட்டாய்களும், புத்தகங்களும் விற்கிறார்கள், நம்மூரைப் போலவே.




அங்கிருந்து ப்ளாசா இத்தாலியா (Plaza Italia) என்ற ரயில் நிலையம் வரை சென்றேன். அங்கு ஒரு தாவரவியல் பூங்கா இருந்ததை வரைபடத்தில் பார்த்து வைத்திருந்தேன். அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ப்ளாசா இத்தாலியாவை அடைந்தேன். அங்கு உயிரியல் பூங்காவும் தாவரவியல் பூங்காவும் அருகருகில் உள்ளன. நான் தாவரவியல் பூங்காவில் சிறிது நேரம் அமரலாம் என உள்ளே சென்றேன். அமைதியான அந்த பூங்காவில் அமர்ந்து கையோடு எடுத்துச் சென்றிருந்த 'The Green Mile' நாவலை சிறிது நேரம் வாசித்தேன். அருகிலிருந்த மைதானத்தில் ஏதோ கண்காட்சி நடந்துகொண்டிருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் சுரங்க ரயில் மூலமாக நகரின் மையப் பகுதிக்கு வந்தேன். ரயிலில் ஒரு பெண்மணியும் அவரின் மகனும் ஸ்டிக்கர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் லவாஷே(Lavalle), ப்ளோரிடா(Florida) வீதிகளில் நடந்து, மெக்டொனால்ட்ஸில் பசியாற்றி பொழுது கழிந்தது. பொய்னொஸ் ஐரிஸ் சாலைகளில் பல்வேறு இன மக்களைக் காண முடிகிறது. காவல் துறையினரும் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் இருக்கின்றனர்.

மழைமேகம் திரண்டதால் விரைவாகத் துறைமுகம் சென்றடைந்தேன். அங்கு ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாண்டிவிடியோ நோக்கிப் பயணம். இரவு நேரமானாதாலோ என்னவோ கடலில் அலைகள் பெரிதாக இருந்ததால் கப்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.ஒருவேளை பின்னால் உட்கார்ந்ததால் தான் அதிகமாக ஆடுகிறதோ என்று பார்த்த்தால் முன்னால் இருப்பவர்களும் தள்ளாடியபடிதான் இருந்தனர். கலோனியா வந்தடைந்ததும் இரண்டு மணி நேரப் பேருந்துப்பயணத்தில் மாண்டிவிடியோ.

இயற்கை எழில் கொஞ்சும் தென்னமெரிக்க நிலப்பரப்புகளைத் திரைப்படங்களிலும் இணையத்திலும் பார்த்து, படித்து இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டுமென ஆவலாய் இருக்கிறது. பார்ப்போம்.



One night @ BsAs + Shakira + Recoleta Cemetery

யார் அந்த டினா?

"நான் இதுவரை இப்படியொரு கல்லறைத் தோட்டத்தைப் பார்த்ததில்லை. மின்னசோட்டாவிலுள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் பெரிய கல்லறைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கல்லறைகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். நேற்று மாலை முழுக்க நான் அங்குதான் செலவழித்தேன்" - நகரச் சுற்றுலா முடிந்து ஓட்டலுக்குள் நுழையும்போது மில்லர் என்ற சக அமெரிக்கப் பயணி ரிகொலெதா கல்லறைத் தோட்டத்தைப்(Recoleta Cemetery) பற்றி சொன்னார். நகரின் வரைபடத்தில் வழி காட்டியதுடன் பேருந்து தடத்தையும் தந்தார். அடுத்த நாளுக்கு முதல் இலக்காக அந்த கல்லறைத் தோட்டத்தை வைத்துக்கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க மீண்டும் நகரைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.

பொய்னொஸ் ஐரிஸில் இந்திய உணவகம் இருப்பதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். முகவரி எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும் சிலவற்றை மறந்துவிட்டு பின்னர் நொந்துகொள்வது எல்லாப் பயணங்களிலும் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஓட்டல் வரவேற்பாளரிடம் கேட்டதற்கு ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் அது பிட்ஸா கடை(Pizzeria) தான். அவருக்கு என்ன புரிந்ததோ, ஏதோ ஒரு உணவகத்திற்கு வழி காண்பித்துவிட்டார். நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்திய உணவகத்தின் முகவரி கேட்கும் அளவு வாய்க்கு பசி எடுக்காததால் அங்கேயே வயிற்றுப் பசியைத் தணித்துக்கொண்டு மீண்டும் கொர்ரியெந்தெஸ் அவென்யூவில் நடக்க ஆரம்பித்தேன்.

கொர்ரியெந்தெஸ் அவென்யூ முழுக்க சினிமா, நாடக அரங்கங்களும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான அரங்குகளில் நகைச்சுவை நாடகங்கள்தான் நடக்கின்றன. இளம்பெண்கள் கோமாளிகள் போல் வேடமனிந்து பாதசாரிகளை நாடகம் பார்க்க அழைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் எல்லா அரங்க வாசல்களிலும் கூட்டமிருந்தது. சனிக்கிழமை இரவு என்பதும் காரணமாக இருக்கலாம்.

புத்தக கடைகளில் ஸ்பானிஷ் புத்தகங்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டனின் சில நாவல்களும் வேறு சில நாவலாசிரியர்களின் ஃபிக்சன் நாவல்களுமே கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கிடைக்குமென தேடிச்சென்ற எனக்கு ஏமாற்றம்.

அங்கிருந்து லவாஷே(Lavalle) என்ற தெருவிற்கு வந்தேன். இதுவும் ப்ளோரிடா தெருவைப் போலவே வணிக வளாகங்களும் திரையரங்குகளும் நிறைந்த தெரு. இந்த தெருவில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு தென்னிந்திய முகம் தெரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவரின் மனைவி கடையில் இருந்து வெளியே வர எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசலாமா என்ற யோசித்தபடியே அவர்களை நோக்கி நடக்கையில் வேறு ஏதோ கடைக்குள் சென்று கண்ணில் இருந்து மறைந்துவிட்டார்கள்.

இவ்வாறு கடைகளையும் சாலைகளையும் மக்களையும் வேடிக்கைப் பார்த்தவாறே இரவு பதினொரு மணி வரை நடந்துகொண்டிருந்தேன். சிறிது உடல் அயற்சி ஏற்பட்டதால் ஓட்டலுக்குத் திரும்பினேன்.

வெள்ளிக்கிழமை இரவு பொய்னொஸ் ஐரிஸில் ஷகிராவின் இசை நிகழ்ச்சி இருந்திருக்கிறது. ஒரு நாள் முன்னதாகச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம். சாலையோர பேனர்களிலும் , எப்.எம் ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஷகிராவின் ராஜ்ஜியம். தொலைக்காட்சியில் சிறிது நேரம் ஷகிராவின் இசைநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்குத் தயாரானேன்.

காலையில் தூங்கி எழுந்ததும் சிற்றுண்டி அருந்திவிட்டு ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ரிகொலெதா கல்லறைத் தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உலகின் புகழ்பெற்ற கல்லறைத் தோட்டங்களில் ஒன்றான ரிகொலெதா கல்லறைத் தோட்டம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அர்ஜெண்டின அதிபர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் எனப் பலரின் கல்லறைக் கோபுரங்கள்(Mausoleum) அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு கோபுரமும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் ஆன பலகையில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் இறந்த நாள் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை.



சில கல்லறைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



தெருக்களைப் போல் அகலமான இடைவெளிகள் விட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன.



கல்லறைத் தோட்டத்தினுள் பூனைகள் அதிகமாக உலாவுகின்றன.



கல்லறைத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்ததும்....அடுத்த பதிவில்.



யார் அந்த டினா?

உருகுவே வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்க விடாத விசா விதிமுறைகள். ஆறு மாதம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால் அன்று மாலையே திரும்பிவந்தாலும் பரவாயில்லை. இப்படியான விதிமுறைகளின் ஓட்டைகள் வழியே சென்ற வாரம் அர்ஜென்டினா தலைநகர் பொய்னொஸ் ஐரிஸ்(Buenos Aires) பயணம்.

மாண்டிவிடியோவில் இருந்து விமானத்தில் சென்றால் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்பே லேண்ட் ஆகும் தூரம் தான். நான் சென்றது கப்பலில். மாண்டிவிடியோவில் இருந்து கலோனியா என்ற ஊர் வரை இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். கலோனியா வெள்ளி ஆற்றின்(Rio de La Plata) கரையில் இருக்கும் உருகுவேயின் மிகப் பழமையான நகரம். ஆற்றின் அந்தப் பக்கம் அர்ஜெண்டினா. 'Rio de La Plata' உருகுவே ஆறும்(Uruguay River) பரானா ஆறும்(Paraná River) இணைந்து உருவான கயவாய். கலோனியா பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக.

கலோனியாவில் இருந்து 'Buquebus' என்றழைக்கப்படும் கப்பல்வழிப் பயணம். பயணத்தின்போது மேல்தளத்திற்கு செல்ல அனுமதி இல்லை. முதலிலேயே கப்பலில் ஏறிவிட்டதால் ஜன்னலோர சீட்டைப் பிடித்து கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்க்க முடிந்தது. கடல் காற்றை அனுபவிக்க முடியவில்லை.

இமிக்ரேஷன் வேலைகளெல்லாம் கப்பலில் ஏறுவதற்கு முன் கலோனியாவிலேயே முடித்து அனுப்பிவிட்டதால் டாக்ஸியைப் பிடித்து ஓட்டலுக்குச் சென்றேன். செக்-இன் செய்துவிட்டு நகரை சுற்றிப் பார்க்க ஏதேனும் சிட்டி டூர் சேவை இருக்கிறதா என ஓட்டலில் கேட்டதற்கு இரண்டு மணிக்கு நேரம் குறித்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரம் எதற்கு ஓட்டல் அறையில் வெட்டியாக இருக்க வேண்டுமென ரிசப்ஷனில் வைக்கப்பட்டிருந்த ஓசி மேப்பை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன்.

முதலில் கண்ணில் பட்டது ஓபெலிஸ்க் கோபுரம்(The Obelisk). உலகின் மிக அகலமான சாலையான ஜூலை 9 சாலையின்(Nueve de Julio) நடுவிலுள்ள 220 அடி கோபுரம். நான்கு வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டதாக விக்கி சொல்கிறது. அந்த தெரு முனையில் இருந்த மெக்டொனால்ட்ஸில் 'Sin carne, sin pollo' என்று அரைகுறை ஸ்பானிஷில் பேசி ஒரு பர்கர் வாங்கி வயிற்றை நிரப்பிக்கொண்டு அந்த சாலையின் அடுத்த முனைக்கு நடக்க ஆரம்பித்தேன்.

கொர்ரியென்தெஸ் அவென்யூ(Corrientes Avenue) வழியாக ப்ளோரிடா தெருவை(Florida Street) அடைந்தேன். ப்ளோரிடா தெரு பொய்னொஸ் ஐரிஸ் நகரத்தின் பழமையான தெருக்களில் ஒன்று. நகரின் பழமையான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன. இப்போது முழுக்க முழுக்க வணிக வளாகங்களும் சிறு கடைகளும், தெருவோர இசை,ஓவியக் கலைஞர்களுமாக எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கிறது. ஒரு கலைஞர் மிகவும் இனிமையாக புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் நின்று கேட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ப்ளோரிடா தெருவில் இருந்து மே சதுக்கம்(Plaza de Mayo) நோக்கி நடந்தபோது மணி ஒன்றே கால் ஆகிவிட்டிருந்தது. இரண்டு மணிக்கு ஓட்டலில் இருக்க வேண்டுமென்பதால் ஓட்டல் நோக்கி நடந்தேன்.

சரியாக இரண்டு மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டலில் இருந்து ஒவ்வொரு ஓட்டலாக சென்று காத்திருந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்ப அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. முதல் நிறுத்தம் நான் விட்ட இடத்திலேயே. மே சதுக்கம்.

இங்கிருக்கும் காஸா ரோசாதா(Casa Rosada) என்றழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அர்ஜெண்டின அதிபரின் அலுவலகம் இருக்கிறது. அதன் அருகில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கதீட்ரல் தேவாலயமும் உள்ளது.

அன்று அங்கு ஊர்வலம் ஏதோ இருந்ததால் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அங்கிருந்த் கிளம்பிவிட்டோம். அங்கிருந்து நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற தெருக்களின் வழியாக தெற்குப்பகுதிக்கு வந்தோம்.



அடுத்த நிறுத்தம் லா போகா(La Boca). போகா ஜூனியர்ஸ்(Boca Juniors) என்ற புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியின் குகை. டேங்கோ நடனக் கலைஞர்களும் ஓவியர்களும் பெருமளவில் வாழும் பகுதி.



பெரும்பாலான வீடுகள் அருகிலுள்ள துறைமுகங்களில் இருந்து கப்பல்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்புத் தகரங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் பத்து குடும்பங்கள் வரை ஒன்றாக சேர்ந்து வசிப்பார்களாம். வீட்டுச் சுவர்களில் ஓவியங்களும் , பல நாட்டு தேசியக் கொடிகளும் வரையப்பட்டு வண்ணமயமாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு பலகணியிலும் சுண்ணாம்பினால் செய்த பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்.



அங்குள்ள கமினிதோ(Caminito) என்ற தெரு புகழ்பெற்றது. டேங்கோ நடன அரங்கங்கள் நிறைந்த தெரு. கைவினைப் பொருட்களும் ஓவியங்களும் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. நகரின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.



கமினிதோ தெருவை படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது டேங்கோ நடனக் காஸ்ட்யூமில் குறுக்கே வந்த ஒரு பெண் மூன்று அர்ஜெண்டினோ பீசோ(1 அமெரிக்க டாலர்) கொடுத்தால் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றபடி வந்தார். நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர அவருடன் இருந்த மற்ற டேங்கோ கலைஞர்களிடம் ஸ்பானிஷில் ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்தார். அவர்கள் சொன்னது புரியவில்லை என்று நான் கேட்டதும் அவர் விளக்க அதுவும் புரியாமல் மையமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.

அங்கிருந்து நகரின் வடக்குப் பகுதியிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும், தெருக்களையும், பூங்காக்களையும் காட்டிவிட்டு ஏழு மணிக்கு ஓட்டலில் இறக்கிவிட்டனர்.

அரை மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அன்றைய இரவு குறித்தும் ரிகொலெதா கல்லறைத் தோட்டம்(Recoleta Cemetery) குறித்தும் அடுத்த பதிவில்.



பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

சினிமாவில் ஆசிரியர்களாக நடிக்கும் கதாநாயகர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போதோ கெட்ட மாணவனை அடித்து திருத்தும்போதோ விடும் டயலாக் 'நானும் ஒரு காலத்துல ஸ்டூடண்ட் தான்'. அதே மாதிரி நேத்து குழந்தைகள் தினம்னு ஞாபகம் வந்ததும் 'நானும் ஒரு காலத்துல குழந்தைதான்'ன்னு பஞ்ச் டயலாக் தோன்றியது. இப்பவும் மனசால குழந்தைதான் என்ற உண்மையை சொன்னா அடிக்க வருவீங்க. என்னை பெத்தவங்களே 'இன்னும் நீ திருந்தலையா?'ன்னு பாவமா பார்ப்பாங்க. அதனால அந்த உண்மையை மனசுக்குள்ள பொத்தி வச்சிகிட்டு இந்த பிஞ்சு மனசுல பதிஞ்ச பசுமரத்தாணிகள் சில:

* இரண்டாவது படிக்கும் போது எங்க சி செக்சனுக்கும் ஏ செக்சனுக்கும் லஞ்ச் பிரேக்ல சண்டை நடக்கும். எங்க க்ரூப்புக்கு ஞானசம்பந்தம்ன்ற குட்டையன் தான் லீடர். ரெண்டாவது படிக்கும்போது எல்லாருமே குட்டையா தானேடா இருப்பீங்கன்னு கேட்கக்கூடாது. அவன் எங்களை விட குட்டை. ரெண்டு செக்ஷனும் அடிக்கடி அடிச்சிப்போம். அதில்லாம சிமெண்ட் தரையில் ஸ்கேட்டிங் போட்டி வேற நடக்கும்.

* மூணாவது படிக்கும்போதே கிரவுண்ட் பக்கம் போனாலும் நாலாவது படிக்கும்போதுதான் எங்க தெரு அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கிட்டாங்க. அதுவும் ஜோக்க்ராகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோதான்.

* ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது தாத்தா இறந்துட்டார். அவர் இறந்த அடுத்த நாள் வீட்டுல இருக்கவங்க எல்லாம் வருத்தத்தோட வரவுசெலவு கணக்கு பார்த்திட்டிருக்கும்போது தெருவில விளையாடிட்டு குதிச்சு குதிச்சு ஓடி வந்து தாழ்வான வாசல்படியில மண்டையை உடைச்சுக்கிட்டேன். ரத்தம் வழியறதுகூட தெரியாம ஒன்னும் ஆகலைன்னு சொல்லிகிட்டே எழுந்தா எல்லாரும் ஓடி வந்து தலையை அழுத்திபிடிச்சுட்டு தூக்கிட்டு எங்க ஊர் பேமிலி டாக்டர்கிட்ட போனாங்க. அவர் கைல கிடைச்ச ஊசி,நூல்ல ஒரு ஏழெட்டு தையல் போட்டுவிட்டார். அடுத்தநாள் காஞ்சிபுரத்துக்கு வந்து நல்ல டாக்டர்கிட்ட காமிச்சா 'இந்த நூல்ல இது வரைக்கும் பாலியஸ்டர் துணு தைக்க பயன்படுத்திதான் பார்த்திருக்கேன். இதை வச்சு யாரு தையல் போட்டது?'ன்னு கேட்டார்.

* 'சாட் பூட் த்ரீ', 'இங்கி பிங்கி பாங்கி' மாதிரி 'பிஸ்கட் பிஸ்கட்'ட்டும் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கறேன். தெரியாத அப்பாவிகளுக்கு

பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி

'பன்ருட்டி' சில சமயம் 'பொண்டாட்டி'யாகவும் மாறும்.

* நாங்க குடியிருந்த மேட்டுத் தெருதான் காஞ்சிபுரத்துல பட்டு சேலைக் கடைகள் எல்லாம் இருக்கும் தெரு. அந்த தெருவில சாயங்காலம் என்ன டிராபிக் இருந்தாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஐஸ்பாய் விளையாடலைனா எங்களுக்கெல்லாம் தூக்கம் வராது. எல்லா கடைகளுக்குள்ளேயும் போய் ஒளிந்துகொள்ள எங்களுக்கு சிறப்புரிமை உண்டு.

* ஐஸ்பாய் மாதிரியே கல்லா மண்ணா, நாடு புடிக்கற ஆட்டம் இதெல்லாமும் இப்போதெல்லாம் பசங்க விளையாடறதில்லையாமே. ரொம்ப வருத்தமா இருக்கு :(. பல்லாங்குழி, தாயம், நொண்டிக்கெல்லாம் இன்னும் மவுசு இருக்குன்னு நினைக்கறேன்.

* மொதமொத தெரு டீம்ல பெளலிங் கொடுத்தப்போ என் பெளலிங் ஸ்டைலை பார்த்துட்டு 'ஏண்டா மாவாட்டற மாதிரி கையை சுத்திட்டு ஓடி வர?'ன்னு கேட்ட அண்ணனால என் பெளலிங் செம்மைபட்டது.

* பக்கத்து வீட்டு வாசல்ல காகித பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது ஏறி வந்து ஷாட் அடிக்க முயற்சி செய்து தாழ்வாரத்துல உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் மண்டையை பேட்டால் உடைத்திருக்கிறேன். பாட்டிக்கு 12 தையல். எங்கப்பா எனக்கு கொடுத்த அடி பலம்னாலும் தையல் போடற அளவு சீரியஸ் ஆகலை.

* ஒரு கிரிக்கெட் மேட்சில கைக்கு வந்த கேட்சை விரல் வழியாக கப்பைவிட ஸ்டிச் பால் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்குமிடையிலுள்ள தசையை கிழித்துவிட்டது.ஆழமான காயம். வீட்டிற்கு சென்று கமுக்கமாக உட்கார்ந்திருக்கும்போது அம்மா சமைக்க ஆரம்பிச்சாங்க. கேரட் சீவித்தர்றேன்னு சீவல்மணையை வாங்கி இரண்டு நிமிஷத்தில் சீவல் மணை கையைக் கிழிச்சிடுச்சுன்னு ஒரு ஆக்ட் விட்டு அந்த காயத்தை காண்பித்தேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் கட்டு போட்டு வெளியே வந்ததும் அம்மா 'ஒழுங்கா மரியாதையா எப்படி அடிபட்டுச்சுன்னு சொல்லு. விளையாடும்போதா இல்ல எங்கயாவது விழுந்துவாறினயா??' என்று கேட்டதும் கையெல்லாம் ரத்தம் முகமெல்லாம் அசடு. அன்றிலிருந்து அம்மாவிடம் பொய் சொல்வதில்லை. அப்பாவிடம் மட்டும் தான்.

* பத்தாவது முடிச்சு டிசி வாங்கறதுக்கு எங்கப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன போது பிரின்சிபால் நல்லா போட்டு குடுத்துட்டார். 'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு எங்கப்பா கிட்ட பத்த வச்சிட்டார். இன்னைக்கும் அப்பாகிட்ட ஏதாவது எதிர்த்து பேசினா 'அப்பவே உங்க பிரின்சிபால் சொன்னாரேடா..நீ திமிர் பிடிச்சவன்னு' என என்னை ஆஃப் செய்துவிடுவார்.

'என்னடா சின்னபுள்ளத்தனமா வெட்டிக்கதை சொல்லிட்டிருக்க'ன்னு யாராவது வந்து காதைத் திருகறதுக்கு முன்னாடி எல்லா குழந்தைகளுக்கும், மனசால குழந்தைகளா இருக்கற மத்தவங்களுக்கும் பிலேட்டட் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சொல்லி அப்பீட் ஆகறேன் :)



தாமோதரனின் கடிதம்

திருவாளர் திருடன் அவர்களுக்கு,

சென்ற வாரம் சனிக்கிழமை ஜீவா நகரில் தாங்கள் கொள்ளையடித்த வீட்டின் உரிமையாளன் தாமோதரன் எழுதிக் கொள்வது, எப்படியும் இந்த கடிதம் உங்களைச் சேரப் போவதில்லை. ஆனாலும் என் மனதிலுள்ள சோகங்களை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும். என் மனைவி ஏற்கனவே பேயடித்தது .போல் இருக்கிறாள். என்னிடம் சண்டை பிடிப்பதற்கு அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவளை எதிர்த்துப் பேசி சலித்துவிட்டது. எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு இப்போது குறைந்துபோய்த்தான் இருக்கிறது.

நீங்கள் எங்கள் வீட்டில் திருட வந்த அன்று குலதெய்வத்திற்கு பூஜை செய்ய சொந்த ஊருக்குச் சென்றிருந்தோம். அன்றே கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. ஆனால் என்ன செய்வது ஏற்கனவே செய்வதாக ஒத்துக்கொண்டாகிவிட்டது. நானும் தட்டிக்கழிக்க முயன்றேன்.முடியவில்லை.

இந்த செலவு போதாதென்று பூஜையின் போது அம்மாவுடன் வேறு சண்டை போட்டாகிவிட்டது. என்னுடன் இங்கு வந்துவிடு என்று சொன்னாலும் கேட்பதில்லை. கட்டை சாயும் வரை ஊரிலேயே இருப்பதாக சொல்லிக்கொண்டு தனியாக இருக்கிறார். அவருக்கே மாதாமாதம் மருந்து, மளிகை சாமான் என செலவுக்குத் தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இது போதாதென்று இப்போது டிவி வேண்டுமாம். இத்தனை நாள் பக்கத்து வீட்டு அத்தை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது வயதான காலத்தில் தெருவில் இருக்கும் அனைவருடனும் சண்டையாம். அத்தையுடனும் போன வாரம் சண்டை போட்டிருக்கிறார். திடீரென்று டிவி வேண்டுமென்று கேட்டால் நான் எங்கு போவது? இப்போது தான் இந்த கோயில் செலவே நான்காயிரம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு வாங்கிக் கொடுப்பதாக இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறேன்.

நான் ஏன் வாங்கித் தர வேண்டும்? எல்லா சொத்தையும் தம்பி பெயரில் எழுதி வைத்தார்களே அவனிடம் கேட்க வேண்டியது தானே. கூட இருந்தே எல்லா பணத்தையும் திருடியவன் தானே அவன். எனக்கென என்ன செய்திருக்கிறார்கள்? ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்போது பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்குக்கூட ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று அப்பாவுடன் சண்டை போட வேண்டும். படித்து வேலை தேடிக்கொண்டிருந்தபோதும் என்ன உதவி செய்துவிட்டார்கள்? நானாக இந்த வேலை தேடி, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.

என் தம்பி அவர்களுடனேயே இருந்து எல்லா பணத்தையும் அடித்துவிட்டான். அப்பா நோய்வாய் பட்டிருந்தபோது மருத்துவ செலவுகள் பார்க்கிறேன் என்று ஏகத்துக்கும் அவன் பொது பணத்தை சுருட்டியது தெரியாதா? என் அப்பா இன்ஷ்யூரன்ஸ் கட்டியதாக ஞாபகம். ஆனால் இப்போது அதையெல்லாம் அவனிடம் கேட்கமுடியுமா?

சொத்து பிரிக்கும்போதும் அவனுக்கு வீட்டை எழுதி வைத்துவிட்டு எனக்கு காலி நிலத்தைத் தானே கொடுத்தார்கள். அவனுக்கு நல்ல தண்ணீரோடு எட்டு ஏக்கர், எனக்கு பாறை கிணறுடன் மூன்று ஏக்கர். கேட்டால் நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேனாம். நானாக கஷ்டப்பட்டு இந்த நிலையில் இருக்கிறேன். அவர்களா உதவினார்கள்? இவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் சொத்து பிரிக்கும்போது என் மாமனாரையும் சகலையையும் கூட்டிச் சென்றேன். அவர்கள் இவர்களுக்கு மேல். நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். பெற்றவர்களும் சரியில்லை. இவர்களும் சரியில்லை.

இவர்கள் மட்டும் எனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கல்யாணத்தின்போது 20 சவரன் போடுவதாக சொல்லிவிட்டு 15 சவரன் தான் போட்டார்கள். ஆனால் இவளின் தங்கைக்கு 30 சவரன் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் என் சகலைக்கு ரைஸ் மில் வைக்க பணம் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு பண உதவி செய்வது எனக்குத் தெரியாதென நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவளுக்கு நாலு தம்பிகள், அவர்களுக்கு கல்யாணம், குழந்தை பிறப்பது, காது குத்துவது என எத்தனை செலவுகள். இவற்றுக்கெல்லாம் கணக்கு போட்டால் நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் எனக்கென இவர்கள் எனன் செய்தார்கள்?

இதையெல்லாம் கேட்டால் என் மனைவி என்னிடம் சண்டை போடுவாள். இந்த வீட்டைக் கட்ட 50000 ரூபாய் கொடுத்தார்களே எனக் கேட்பாள். பெற்ற மகளுக்கு இது கூட கொடுக்கக்கூடாதா?? நான் கூடத்தான் என் மச்சான் 5000 கடனாக வாங்கியதை விட்டு வைத்திருக்கிறேன்.

இவர்கள் தொல்லைதான் இப்படியென்றால் அலுவலகத்தில் இதற்கு மேல் பிரச்சனை. நான் லஞ்சம் எதுவும் வாங்காதபோதே என் மேல் மொட்டை கடுதாசி எழுதுகிறார்கள். இதற்கு முன்னாவது பரவாயில்லை. கொஞ்சம் வருமானம் வரும் சீட். இப்போது அதுவும் இல்லை. சீட்டை மாற்றி பழி வாங்கிவிட்டார்கள்.

எல்லாரும் பொறாமை பிடித்தவர்க்களாக இருக்கிறார்கள். எனக்கென யாரும் எதுவும் செய்ததில்லை. எல்லாருக்கும் நான் தான் அழுதுகொண்டிருக்கிறேன். நான் எல்லோரிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதை என் மனைவி குறையாகச் சொல்கிறாள். உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?

இந்த நிலையில் என் போதாத நேரம் நீங்கள் என் வீட்டைத் தேர்ந்தெடுத்து திருடியிருக்கிறீர்கள். 20000 ரூபாய் ரொக்கம், 22 சவரன் நகை. போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாகிவிட்டது. ஆனால் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. சும்மா செய்துவிடுவார்களா என்ன? அவர்களும் பணம் கறக்கப் பார்க்கிறார்கள்.

இப்போதிருக்கும் என் மனநிலையில் பாதி பணம் திரும்பக் கிடைத்தாலே போதும் என்றிருக்கிறது. உங்களை சந்திக்க முடிந்தால் பாதியை நீங்கள் வைத்துக்கொண்டு பாதி தந்தால் சரி என்று கூட ஒத்துக்கொண்டுவிடுவேன்.

இதுவரையில் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் யாருக்கும் எதுவும் செய்துவிடுவதில்லை. இப்படி புலம்பியபடியே என் வாழ்க்கை முடியப்போகிறது. எனக்கு யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. விட்டுத் தள்ளுங்கள். என் மனைவி சாப்பிட அழைக்கிறாள். உப்புசப்பில்லாமல் எதையாவது சமைத்துவைத்திருப்பாள். சண்டையில்லாமல் சாப்பிட்டு உறங்கச் செல்ல முயல்கிறேன்.

வணக்கத்துடன்,
தாமோதரன்.



சினிமா! சினிமா!! சினிமா!!! - 2

சினிமா! சினிமா!! சினிமா!!! - 1

சினிமா வாய்ப்பு தேடிய, தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் சிலர் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்தே வாய்ப்பு தேடி வருகிறார்கள். சில நண்பர்கள் படிப்பு முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தபின் சினிமாத்துறையால், அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தவர்கள். சில நண்பர்கள் ஓரிரு மாதங்களில் அத்துறையின் நிதர்சனத்தை உணர்ந்து வேறு வேலையில் சேர்ந்தார்கள். சிலரின் நம்பிக்கை மட்டும் அசைக்க முடியாததாக இருக்கிறது.


*******************************************

கோகுலகிருஷ்ணன். சொந்த ஊர் போடி. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் கணிப்பொறியில் பட்டயப் படிப்பு. நாங்கள் வைத்த பெயர் 'கொம்பு'. ஆரம்பத்தில் அவரின் சினிமா ஆசையைப் பல முறை கிண்டலடித்திருக்க்கிறோம். ஆனால் காலப்போக்கில் அவர் காட்டிய உத்வேகமும் அவர் பட்ட கஷ்டங்களும் எங்கள் மனதை மாற்றின. அவர் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.

படிப்பு முடிந்து கணிணித்துறையில் வேலை தேட சென்னைக்கு வந்தவர் சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். செலவுக்காக வீட்டிலிருந்து வாங்கும் பணம் அனைத்தையும் புகைப்படம் எடுக்கவும் ஆல்பம் தயார் செய்யவும் செலவு செய்துவிடுவார். அறை நண்பர்களுடனும் அவ்வளவாக பேச மாட்டார். அவருக்கு அறிவுரை சொல்லும் தோரணையில் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுவார்.

ஆரம்பத்தில் சிறு வேடங்கள் கிடைத்தபோது அவற்றை நிராகரித்தவர் நாட்கள் செல்லச் செல்ல சிறுசிறு துண்டு வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தலை காட்டினார்.

இரண்டு வருடங்கள் முனைப்பாக இருந்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வாய்ப்பும் வராமல் பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தரவு உள்ளீட்டுத் (Data Entry) துறையில் தற்காலிகமாக வேலை செய்தபடி சினிமா வாய்ப்புகள் தேடினார். அடுத்த ஆறு மாதத்தில் உண்மை நிலையை உணர்ந்து சினிமாவைத் துறந்து இப்போது அதே வங்கியில் நிரந்தர பணியில் சேர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

*******************************************

கோகுலகிருஷணனின் அறை நண்பர் சங்கர். இவரும் மதுரை பாலிடெக்னிக்கில் படித்தவர் தான். சென்னையில் ஒரு சிறு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவரது கனவு திரைப்பட இயக்குனராவது.

பொதுவாக புதிதாக ரிலீசாகும் படங்களை முதல் நாளிலோ முதல் வாரத்திலோ உதயம், கமலா,நேஷனல் அல்லது கருமாரி காம்ப்ளெக்ஸில் பார்த்துவிடுவது வழக்கம். இவருடன் படம் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள், எப்படி எடுக்கலாம் என சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஏரியாவில் எந்த படப்பிடிப்பு நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவார்.

தொழில்நுட்பம் குறித்து பெரிதாகத் தெரியாது எனினும் இயக்குனராகும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர். திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசையிருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கைவிட்டவர். இவருக்கு பிடித்த இயக்குனர் பாலா. அதற்கு அவர் சொல்லும் காரணம் இயக்குனர் பாலா மட்டுமே திரைப்படக் கல்லூரியில் பயிலாதவர்களையும் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வாராம். நண்பர் வேலை செய்துகொண்டே இயக்குனராகும் முயற்சியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

*******************************************

வடபழனி செந்தில் ஆண்டவர் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் அதற்கு முன்னர் நடிகர் பாலா சிங் தங்கியிருந்தாராம். வேறொரு வீட்டிற்கு மாறிப் போனதில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் மீண்டும் அங்கு குடி வர கேட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் எங்களிடம் சொன்னார். திரைப்படத்துறையில் உள்ளவர்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.