காதலும் ஒரு நோய் தான். அதிலும் நிராகரிப்பட்ட காதல் உயிர்கொல்லி. தன் வாழ்நாள் முழுதும் இந்த உயிர்கொல்லி நோயுடன் வாழ்ந்து நோயின் வலியினை முழுதாக அனுபவித்து நோயை எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கனவுலகில் வாழ்ந்து தன் வயோதிகத்தில் காதலில் வென்றவனின் கதை தான் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'Love in the Time of Cholera' (காலரா சமயத்தில் காதல்?).
ஃபெர்மினாவின் மேலுள்ள தன் காதலைக் 51 ஆண்டுகள் கழித்து, அவள் கணவர் அர்பினோவின் இறுதிச்சடங்கில், மீண்டும் ஃப்ளொரொண்டினோ வெளிப்படுத்துவதில் நாவல் ஆரம்பிக்கிறது. இங்கிருந்து ப்ளொரெண்டினோ, ஃபெர்மினா மற்றும் அர்பினோவின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி இல்லாமல் முன்னும்பின்னுமாகக் கூறுகிறார் மார்க்வெஸ்.
இளைஞன் ஃப்ளொரெண்டினோவிற்கு ஃபெர்மினாவின் மேல் கண்டதும் காதல். அவனின் கவிதைகளிலும் இசையிலும் ஈர்க்கப்படும் ஃபெர்மினாவும் காதல் வயப்படுகிறாள். எந்நேரமும் காதல் மயக்கத்திலேயே இருக்கும் ஃப்ளொரெண்டினோ காதல் கவிதைகள் இயற்றுவதும் காதல் காவியங்களை மனனம் செய்வதும் ஃபெர்மினாவின் தரிசனத்திற்குக் காத்திருப்பதுமாகக் காதலின் பித்த நிலையில் இருக்கிறான். இந்நிலையில் தன் உறவினர்களின் ஊருக்குப் பயணப்படும் ஃபெர்மினா காதலின் கனவுலகில் இருந்து வெளிவருகிறாள். ஊருக்குத் திரும்பியதும் ஃப்ளொரெண்டினோவின் காதலை நிராகரிக்கிறாள்.
காதல் நிராகரிக்கப்பட்ட சோகத்தில் ஃப்ளொரெண்டினோ எதிலும் ஈடுபாடில்லாமல் திரிகிறான். அவன் தாய் ட்ரான்சிட்டா அவனது நோயை உணர்ந்து அவனை மீட்டெடுக்க அவனை கப்பல் நிறுவனத்தில் வேலைக்கு சேர வைக்கிறாள். கப்பல் நிறுவன வேலையில் பற்றில்லாமல் எந்த நேரமும் காதல் கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் எழுதும் அலுவல் தொடர்பான கடிதங்களும் கவிதை நடையில் இருக்கின்றன. இதைக் கண்ட கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர், இவனது உறவினர், காதலை மறக்க அவனை வேறொரு நகருக்கு கப்பலின் மூலம் அனுப்புகிறார். இந்த பயணத்தில் ஃப்ளொரெண்டினோவின் காதல் தீவிரமடைகிறது. அந்த தீவிரம் அவன் உடல்நிலையும் பாதிக்கிறது. ஃப்ளொரெண்டினொ ஃபெர்மினாவை மறந்து தன்னால் வாழ முடியாதென ஊர் திரும்புகிறான்.
அதே நேரம், ஃபெர்மினா அர்பினோவை சந்திக்கிறாள். அர்பினோ நகரின் புகழ்பெற்ற மருத்துவர். அவரது தந்தையைப் போலவே அர்பினோவும் அந்த ஊரில் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து காக்கிறார். காலரா வராமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் முன்னின்று நடத்துகிறார். அர்பினோவும் ஃபெர்மினாவும் காதலோ ஈர்ப்போ இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்திற்கும் வசதிக்கும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனாலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஒருவருக்கொருவர் மற்றவரின் தேவை அறிந்து அன்புடன் வாழ்கின்றனர்.
"திருமணம் என்பது ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு" என்கிறார் அர்பினொ.
ஃபெர்மினா தன் கணவனுடன் சிறுசிறு சண்டைகள் இருந்தாலும் ஃப்ளொரெண்டினொவை முழுதாக மறந்துவிட்டு தன் குடும்பத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் குழந்தைகளை அளவில்லா பாசத்துடன் வளர்க்கிறாள்.
ஃபெர்மினாவிற்கு திருமணமானதும் ஃப்ளொரெண்டினோவின் காத்திருத்தல் ஆரம்பமாகிறது. தனக்கும் ஃபெர்மினாவுக்குமான காதலின் வெற்றி அர்பினொவின் மரணத்தால் மட்டுமே சாத்தியம் என அர்பினோவின் மரணத்திற்குக் காத்திருக்கிறான். ஃபெர்மினாவைத் தவிர வேறு யாரையும் மணம் புரிவதில்லையென முடிவெடுத்தாலும் தன் காதலின் வலியைப் போக்கிக்கொள்ள மணமாகாத பெண்கள், விதவைகள் எனப் பல பெண்களை நாடுகிறான்.
ஃப்ளொரெண்டினோவிற்கு வயதாக ஆக அர்பினோவிற்கு முன் தானோ அல்லது ஃபெர்மினாவோ இறந்துவிடும் சாத்தியம் குறித்து பயம் எழுவதை மார்க்வெஸ் மிக அழகாக விவரிக்கிறார்.
சிறு பிணக்குகளும் கருத்துவேறுபாடுகளும் இருந்தாலும் ஃபெர்மினா, அர்பினோ நிறைவான இல்வாழ்க்கை நடத்துகின்றனர். பாரீஸ் நகருக்கு தன் கணவ்னுடன் சுற்றுலா சென்று வந்ததும் ஃபெர்மினாவிற்கு தன் சொந்த ஊரின் மேல் பாசமும் அதே நேரத்தில் அங்கு நேரும் தீயவைகளைக் கண்டு பயமும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.
தன் காதலைத் தன் தாயைத் தவிர வேறு யாரிடமும் வெளிப்படுத்தாத ஃப்ளொரெண்டினோ தன்னுடன் வேலை பார்க்கும் லியோனாவிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் தவிப்பார்.
ஃப்ளொரெண்டினோவின் காதல் நிராகரிக்கப்பட்டு 51 வருடங்கள் 9 மாதங்களுக்குப் பிறகு அர்பினோ மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் இறக்கிறார். இறுதிச் சடங்கில் அன்றிலிருந்து சற்றும் குறையாமல் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் காதலை ஃபெர்மினாவிடம் கூறுகிறார்.இது நடவாத காரியம் என ஃபெர்மினா மறுக்கிறார். முன்பு காதலின் உச்சகட்ட பித்தநிலையில் இருந்த ஃப்ளொரெண்டினோ இப்போது காலத்தால் பக்குவப்பட்டதால் ஃபெர்மினாவிடம் அவளை அடிக்கடி சந்திக்கவாவது அனுமதி கேட்கிறார்.
ஃபெர்மினாவுடன் சந்திப்புகளும் கடிதப் போக்குவரத்தும் தொடர்கிறது. ஃப்ளொரெண்டினோ முன்பு எழுதிய உணர்ச்சிமிகுந்த காதல் கவிதைகளையும் இப்போதைய கடிதங்களையும் ஃபெர்மினா ஒப்பிட்டுப் பார்த்து வியக்கிறார். அர்பினோவின் இழப்பை மறக்க ஃப்ளொரெண்டினோவும் ஃபெர்மினாவும் அவரின் சொந்த கப்பலில் பயணக்கிறார்கள். பயணத்தினூடே இத்தனை நாட்களாக அவர்களினுள் காத்திருந்த காதல் வெளிப்படுகிறது. தன்னை ஊரார் பழி கூறப்போகிறார்கள் என ஃபெர்மினா அச்சப்படுகிறார். உடனே ஃப்ளொரெண்டினொவின் கட்டளைப்படி கப்பலின் கேப்டன் காலரா நோயாளியை ஏற்றிச் செல்ல குறிக்கப்படும் கொடியை கப்பலின் தளத்தில் ஏற்றிவிடுகிறார். இது போல் எத்தனை நாட்கள் இவ்வாறு பயணிப்பதெனக் கேப்டன் கேட்க "எப்பொழுதும்" என ஃப்ளொரெண்டினோ சொல்வதாக நாவல் நிறைவடைகிறது. காதல் நோயின் குறியீடாக காலரா குறிப்பிடப்படுகிறது.
தன் வாழ்நாள் முழுதும் காதலுக்காகக் காத்திருக்கும் நாயகன் ஆச்சரியமளிக்கிறார். கதை நெடுகிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் சம்பங்களையும் விவரிக்கும் விதத்தில் மார்க்வெஸ் கதாபாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துகிறார். கிளைக்கதைகளாக வரும் ஃபெர்மினாவின் தந்தையின் கதையும் அவள் உறவுக்கார பெண்ணின் கதையும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நெடுகே பல ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டு போரைப் பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளும் விவரிக்கப்படுகின்றன.
நல்ல சுவாரசியமான நடையாக இருந்தாலும் வாசிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சில பக்கங்கள் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன. சில வேளைகளில் கதாபாத்திரங்களின் செய்கைகள் அலுப்பேற்படுத்தின. இந்த நாவல் இப்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். நான் உருவகப்படுத்தியது படத்துடன் எந்தளவு ஒத்துப்போகிறது எனப் பார்க்க வேண்டும்.
Love in the Time of Cholera
கப்பி | Kappi
வகை புத்தகம், மார்க்வெஸ்
Subscribe to:
Post Comments (Atom)
29 பின்னூட்டங்கள்:
நல்ல விமர்சனம் கப்பி
இந்த கதையை படிச்சிதான் தமிழ்படுத்தி முரளி படமெல்லாம் எடுக்க ஆரம்பிச்சாங்களோ என்னவோ?
உள்ளேன் அய்யா!
எல்லா ஊர்லயும் காதலன்கள்தான் காதலி பின்னாடி சுத்துவாங்களா?
என்னய்யா கொடுமை இது!
'லவ் இன் த டைம் ஆஃப் காலரா' அற்புதமான ஒரு நாவல். உலகின் மிகச் சிறந்த காதல் கதைகளில் ஒன்று. எல்லோரும் 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்' பற்றியே பேசுவதால் இந்த மாஸ்டர்பீஸ் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. மார்க்கஸின் டிரேட்மார்க்கான பல அம்சங்களை இந்த நாவலில் பார்க்கலாம். அறிமுகப்படுத்தி வைத்தது நல்ல ஐடியா!
அருமையா எழுதியிருக்க கப்பி...
ஆனா இந்த மாதிரி சோக கதை எல்லாம் நமக்கு பிடிக்கறதில்லை... நம்மல மதிக்காதவங்களை நாம பெருசா எடுத்துக்கூடாது! இது தான் நம்ம பாலிஸி :-)
அன்பு கப்பி..
அருமையான விமர்சனம்...
நாவலை முழுசா படிச்ச மாதிரி இருக்கு...அருமை.
நன்றி நிர்மல்
//இந்த கதையை படிச்சிதான் தமிழ்படுத்தி முரளி படமெல்லாம் எடுக்க ஆரம்பிச்சாங்களோ //
:)))
//எல்லா ஊர்லயும் காதலன்கள்தான் காதலி பின்னாடி சுத்துவாங்களா?
என்னய்யா கொடுமை இது! //
தம்பி,
அதானே ;)
சாத்தான்,
//எல்லோரும் 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்' பற்றியே பேசுவதால் //
நானும் அந்த நாவல் தேடி அது இல்லையென்றுதான் இதை வாங்கினேன் :)
//மார்க்கஸின் டிரேட்மார்க்கான பல அம்சங்களை இந்த நாவலில் பார்க்கலாம். அறிமுகப்படுத்தி வைத்தது நல்ல ஐடியா! //
சரியா சொன்னீங்க சாத்தான்..மார்க்வெஸ் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி!
நன்றி வெட்டி.
//ஆனா இந்த மாதிரி சோக கதை எல்லாம் நமக்கு பிடிக்கறதில்லை... நம்மல மதிக்காதவங்களை நாம பெருசா எடுத்துக்கூடாது! இது தான் நம்ம பாலிஸி :-) //
அட, இது சும்மா கதைக்கு....நாமெல்லாம் ஒரே இனம் தானே ;))
மிக்க நன்றி கோபிநாத்
//அருமையான விமர்சனம்...
நாவலை முழுசா படிச்ச மாதிரி இருக்கு...அருமை. //
நிஜமாவா சொல்ற கோபி! :))
ஆச்சரியமா இருக்கே!
//இது தான் நம்ம பாலிஸி :-)//
இந்த பாலிஸிக்கு ப்ரிமியம் கட்டவே தேவையில்ல..
ரொம்ம்ம்ப நல்ல பாலிஸி!
//
நல்ல சுவாரசியமான நடையாக இருந்தாலும் வாசிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆனது.//
கப்பி,
நாளா மாசமா....??
//சில பக்கங்கள் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன.//
பின்னே புரியவேணாமா???
// சில வேளைகளில் கதாபாத்திரங்களின் செய்கைகள் அலுப்பேற்படுத்தின. இந்த நாவல் இப்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். நான் உருவகப்படுத்தியது படத்துடன் எந்தளவு ஒத்துப்போகிறது எனப் பார்க்க வேண்டும்.//
ஹிம் பார்க்கலாம், இந்த புக் யாராவது தமிழிலே போட்டா சொல்லுப்பா... படிச்சு பார்க்கலாம் :)
//இந்த பாலிஸிக்கு ப்ரிமியம் கட்டவே தேவையில்ல..
ரொம்ம்ம்ப நல்ல பாலிஸி!//
:)))))
//நாளா மாசமா....?? //
ஒரு மூனு வாரமாச்சுங்க இராயல் ;)
//
பின்னே புரியவேணாமா???
//
அது சரி :))
//
ஹிம் பார்க்கலாம், இந்த புக் யாராவது தமிழிலே போட்டா சொல்லுப்பா... படிச்சு பார்க்கலாம் :)
//
ஆமா, தமிழ்ல வந்தாலும் படிச்சுப் பார்க்கலாம்!
புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கீங்க கப்பிப்பய. படிச்சதும் சொல்றேன். அடுத்து என்ன எழுதுவீங்கன்னு பார்த்துட்டு இருக்கேன். ;)
-மதி
சூப்பர் விமர்சனம்...
நான் மொதல்ல படம்னு நெனச்சேன்.. அப்புறம்தான் தெரிஞ்சுது நாவல்னு...
// இராம் said...
ஹிம் பார்க்கலாம், இந்த புக் யாராவது தமிழிலே போட்டா சொல்லுப்பா... படிச்சு பார்க்கலாம் :)//
ராயலு... தமிழ்ல போட்டா மட்டும் நாம படிச்சிடுவோமா என்ன?
நமக்கு படிச்சு சொல்லத்தான் கப்பி மாதிரி ஆட்கள் இருக்காங்கள்ல...
அருமையான விமர்சனம் கப்பி!
மார்க்வெஸ் புத்தகத்தை நேரா ஸ்பானிஷ்லையே படிச்சிட்டீங்களா? இங்லீஷ்லையா?... புக்கு பெருசா வேற இருக்குமா? ஐய்யோ! ஆனா உங்கள் கதைச் சுருக்கும் வச்சு பாத்தா வாழ்கையின் பல நிலைகளைப் பற்றி அருமையான கருத்துக்கள் இருக்கும் போல்ருக்கு! அதனாலேயே படிக்கணும்னு தோணுது!
நன்றி கப்பி!
அந்த தென் அமெரிக்க கண்டத்தில எல்லாரையும் நான் கேட்டதா சொல்லுங்க! ;)
நன்றி மதி :)
படிச்சுட்டு சொல்லுங்க. நல்ல சுவாரசியமான புத்தகம்.
//அடுத்து என்ன எழுதுவீங்கன்னு பார்த்துட்டு இருக்கேன். ;)
//
தன்யனானேன் :)
டாங்கிஸ் ஜி ;)
//நமக்கு படிச்சு சொல்லத்தான் கப்பி மாதிரி ஆட்கள் இருக்காங்கள்ல...
//
ஹேய்ய்...காமெடி கீமெடி பண்ணலியே :))
வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரா :)
//மார்க்வெஸ் புத்தகத்தை நேரா ஸ்பானிஷ்லையே படிச்சிட்டீங்களா? இங்லீஷ்லையா?... //
இங்க்லீஷ்ல தாங்க..அந்தளவு ஸ்பானிஷ் அறிவு இன்னும் வளரல :D
//
புக்கு பெருசா வேற இருக்குமா?
//
400-450 பக்கம் தான்..படிச்சுட்டு சொல்லுங்க ;)
//அந்த தென் அமெரிக்க கண்டத்தில எல்லாரையும் நான் கேட்டதா சொல்லுங்க! ;)//
கண்டிப்பா!
எனக்கும் இன்னும் கொஞ்ச நாள் தான் :)
\\எல்லா ஊர்லயும் காதலன்கள்தான் காதலி பின்னாடி சுத்துவாங்களா?
என்னய்யா கொடுமை இது! \\
மன்னா
:))))))
எனக்கென்னவோ ஃப்ளொரெண்டினோ மாதிரி யாரும் இருக்க முடியாதுனு தோணுது. ஒரு கட்டத்துல அவங்கள அவங்களே சமாதானப்படுத்திக்கிட்டு வாழ ஆரம்பிச்சுடுவாங்க. சேரனோட ஆட்டோகிராப் ஒரு நல்ல உதாரணம்னு நினைக்கறேன்.
இம்சை அரசி
நீங்க ஆட்டோக்ராப் உதாரணம் சொன்னா நான் நிர்மல் சொன்ன மாதிரி முரளி படங்களையும், 'பூவே உனக்காக' டைப் படங்களையும் சொல்லுவேன் :))
காதல் நிராகரிக்கப்பட்டவர்கள் எந்தளவு சமாதனப்படுத்திட்டு இயல்புநிலைக்கு திரும்பறாங்க என்பது அவங்க காதலின் ஆழத்தையும்(???!!!!:D) அவங்க காரெக்டரையும் பின்னாட்களில் வேறொருவர் மேல் காதல் ஏற்படும் சாத்தியங்களையும் பொறுத்ததில்லையா? :)
இந்த நாவலில் கூட ஃப்ளொரெண்டினோவிற்கு கப்பல் பயணத்தில் ஒரு இருட்டறையில் உடலுறவு கொண்ட முகமறியாத ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு இருக்கும். அவ்வப்போது மீண்டும் அவளை சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துவான். அவளின் நினைவும் அவன் மனதில் இருந்து கொண்டேயிருக்கும்.ஒருவேளை அவளை மீண்டும் சந்தித்திருந்தால் அவன் ஃபெர்மினாவிற்காக காத்திருந்திருக்க மாட்டான். ;)
// நீங்க ஆட்டோக்ராப் உதாரணம் சொன்னா நான் நிர்மல் சொன்ன மாதிரி முரளி படங்களையும், 'பூவே உனக்காக' டைப் படங்களையும் சொல்லுவேன் :))
//
பூவே உனக்காக படம் யதார்த்தமா இருந்ததா என்ன??? விக்ரமன் படம் எல்லாமே இப்படி இருந்தா எப்படி இருக்கும்ங்கிற ஆசையோட வெளிப்பாடுதான்றது என்னோட கருத்து. அவரோட எந்த படமும் யதார்த்தத்தோட ஒத்துப் போகாது.
ஆட்டோகிராப் ரொம்ப யதார்த்தமா இருக்கும். சூழ்நிலைக்கேற்ப ஒருத்தரோட ஆசைகள் எப்படியெல்லாம் மாறுதுனு. சிலர் அதை வெளிப்படுத்திடுவாங்க. சிலர் மறைச்சிடுவாங்க.
இதுதான் மனித இயல்பு :)
இம்சை அரசி
//சூழ்நிலைக்கேற்ப ஒருத்தரோட ஆசைகள் எப்படியெல்லாம் மாறுதுனு. சிலர் அதை வெளிப்படுத்திடுவாங்க. சிலர் மறைச்சிடுவாங்க.
//
இதை நானும் ஒத்துக்கொள்கிறேன். இதற்குத் தான் சென்ற பின்னூட்டத்திலேயே விளக்கம் கொடுத்திருக்கேனே..ஃப்ளொரெண்டினோ கப்பலில் பயணம் செய்த முகம் தெரியாத பெண்ணிடமும் உடன் பணிபுரியும் லியோனாவிடமும் ஈர்க்கப்படுகிறான். மற்ற பல பெண்களுடன் உறவுகொண்டாலும் அவனால் ஃபெர்மினாவின் நினைவுகளிலிருந்து வெளிவர முடியவில்லை. அது இந்த இரு பெண்களால் சாத்தியப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அவனது காதலை மறக்கக்கூடிய அளவுக்கு இந்த உறவுகள் நிலைக்கவில்லை.
மற்றபடி, யதார்த்தமான சினிமாவை நாம விக்ரமன் படங்களில் தேடினா நமக்கு தான் ஏமாற்றம்..நானும் இதில் உங்க கட்சி தான் :)))
ஒத்துக்கறேங்கய்யா :)))
//ஒத்துக்கறேங்கய்யா :)))
//
அது சரி :)
One hundred years of solitude பதிவின் பின்னூட்டத்தில் உள்ள லிங்கைப் பிடித்து வந்தேன்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நல்ல அறிமுகம்.
உங்க கருத்து? Post a Comment