உறக்கம் தொலைக்காத காலையில்

உறக்கம் ஒரு வரம். சின்ன வயசுல இருந்தே நான் 'முன் தூங்கி பின் எழும்' பரம்பரை. படுத்த இரண்டாவது நிமிஷம் தூங்கிடுவேன். அதுக்கப்புறம் என்னை அடிச்சு போட்டாக் கூட தெரியாது.

போன பொங்கல் பண்டிகையின் போது முதல் நாள் இரவு முழுக்க ஆபிஸ்ல வேலை. பொங்கல் அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் ஏறினேன். சாதாரண நாள்லயே கூட்டம் குலை நடுங்க வைக்கும். பொங்கல் அன்னைக்கு சொல்லனுமா? சரியான கூட்டம். இன்னைக்கும் ஸ்டாண்டிங் தான் மாப்ளே-ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு பஸ்ல ஏறிட்டேன். நம்ம நல்ல நேரம் நான் நின்னுட்டிருந்ததுக்கு பக்கத்து சீட் காரர் அவரோட வந்தவர் பஸ்ல ஏறலைன்னு இறங்கிட்டார். நல்ல்தாப் போச்சுடான்னு நம்ம கட்டையை சீட்ல சாய்ச்சாச்சு.

அப்ப தான் ஒருத்தர் ஏறினார். கையில வெண்டிலேட்டருக்கு மாட்டுற கண்ணாடி. அவர் பாட்டுக்கு நேரா வந்து அந்த கண்ணாடியை என்கிட்ட கொடுத்துட்டு பக்கத்துல நின்னுட்டார். பொதுவா பஸ்ல போகும்போது தூக்கம் வராது.ஆனா அன்னைக்கு ராத்திரி முழுக்க தூங்காததால பஸ் எடுத்ததும் கண்ணை சொக்க ஆரம்பிச்சுடுச்சு.

பூந்தமல்லி பைபாஸ்ல போகும்போதே தலை சாஞ்சுடுச்சு. திடீர்னு கையில் கண்ணாடி இருக்க ஞாபகம் வர முழிப்பு வந்துடுச்சு. நம்மாளு என்னையே முறைச்சு பார்த்துட்டு இருக்காரு. நான் அந்த கண்ணாடியைக் கீழே போட்டால் புடிக்கறதுக்கு ரெடியா இருக்க மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கார்.

தூங்கி அதைக் கீழே போட்டு மானத்தை வாங்க வேணாம்னு செல்போன் எடுத்து ஒவ்வொரு மெசெஜா படிச்சு டெலிட் பண்ணா பொழுது போகும்னு செல்போன் எடுத்தேன். நல்ல வேலையா ஒரு நூறு மெசெஜ் இருந்துச்சு. ஜோக்குன்ற பேருல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்கலையேன்னு ஒவ்வொன்னா படிச்சு படிச்சு டெலிட் பண்ணிட்டு வந்தேன்.

திடீர்னு தோள்ல யாரோ தட்டின மாதிரி இருந்துச்சு. திரும்பி பார்த்தா நம்ம கண்ணாடி பார்ட்டி.அவர் கையில் என் செல்போன்.மெசெஜ் படிச்சுக்கிட்டே செல்போன் கைநழுவி கீழே விழுந்ததும் தெரியாம தூங்கி இருக்கேன். அவரோட கண்ணாடியும் மடியில் விழற நிலைமைல இருக்கு. கர்ச்சீப்பை எடுத்து முகத்தைத் தொடச்சிக்கிட்டே செல்போனை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஸ்ரீபெரும்புதூர் போறதுக்குள்ள மறுபடியும் தூங்கிட்டேன் போல. என்னை எழுப்பி 'நானே வச்சுக்கறேன் கொடுங்க' ன்னு கண்ணாடியை வாங்கிக்கிட்டார். 'அடங்கொக்கமக்கா..மகராசன் அசிங்கப்படுத்திட்டானே' ன்னு பீல் பண்ணிட்டே மறுபடியும் தூங்கிட்டேன். என்னத்த பண்ண அவர் கவலை அவருக்கு..நம்ம தூக்கம் நமக்கு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்துக்கும் முன்னாடியே தூக்கத்தால தான் செல்போனை தொலைச்சேன். சுமார் ஒரு ஐநூறு ஐநூத்தம்பது நாட்களுக்கு முன் ஒரு சுபயோக சுபதினம். அன்னைக்கு காலையில திடீர்னு முழிப்பு வர தலைமாட்டுல இருந்த செல்போனை எடுத்து டைம் பார்த்தா விடிகாலை ஆறரை. அதுக்குள்ள எழுந்து என்ன பண்றதுன்னு மறுபடி தூங்கிட்டேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு தலைமாட்டுல தடவின செல்போனைக் காணோம்.

பக்கத்துல பாத்தா நம்ம தடித் தாண்டவராயன்ஸ் எல்லாம் இன்னும் உறக்கத்துல தான் இருக்கானுங்க. ஒருத்தன் மட்டும் எழுந்து கதவைத் தொறந்து போட்டுட்டு சமையல் கட்டுல உக்காந்து தி இந்துல ஃப்ரைடே ரிவ்யூ படிச்சுட்டு இருக்கான். செல்போனை பாத்தியாடான்னு கேட்டதுக்கு அவன் போனை எடுத்து ஆங்காரமா நீட்டறான்.

தூங்கி எழுந்தவன் கதவைத் திறந்து பேப்பரை எடுத்துக்கிட்டு கதவை அப்படியே திறந்து போட்டுட்டு உள்ள போயிட்டான். வீட்டுக்குள்ள வந்த எவனோ கண்ணுக்கழகா ஒரு போனைப் பாத்ததும் உள்ள புகுந்து அடிச்சுட்டான். எப்படி வீடு புகுந்து அடிச்சிருக்கான்னு டாப் ஆங்கிள்ல படத்தைப் பாருங்க.'தூங்கிட்டு இருக்கும்போது வீடு புகுந்து லவட்டிட்டானுங்கடா மாப்ளே' ன்னு அவன் செல்லை வாங்கி என் நம்பருக்கு அடிச்சா 'not reachable'. ஊர்ல எல்லா திருடனும் விவரமா தான் இருக்கானுங்க. தூங்கிட்டு இருக்க நாலு பேரை தாண்டி வந்து எடுத்திருக்கான். அது தெரியாம நாங்களும் சுகமா தூங்கிட்டு இருந்திருக்கோம்.

காலங்காத்தால மாடி வீட்டுக்கு பேப்பர் போடறவன் தான் வீட்டுக்குள்ள வருவான். பக்கத்து முக்குல இருக்க பேப்பர் கடைக்கு போனால் அங்க கடை ஓனர் தான் இருந்தார். அவர்கிட்ட விஷயத்தை சொன்னதும் செம டென்ஷன் ஆயிட்டார். "நீங்க எதைத் தொலைச்சாலும் பேப்பர் பசங்க மேல பழி போடுவீங்களே..எங்க பசங்க வீட்டுக்கு உள்ள கூட வராம காம்பெளண்ட் வெளிய இருந்து தான் பேப்பர் போடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எங்க மேல சந்தேகப் படாதீங்க சார். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே வருவான். அவன்கிட்டயே விசாரிச்சுக்கோங்க" ன்னு நேர்மையில் மறு உருவமா பேசறார். 'அடடா..காலங்காத்தால ஒரு நல்ல மனசை புண்படுத்திட்டோமே'ன்னு பீல் பண்ணிக்கிட்டே திரும்பி வந்தாச்சு. பக்கத்து ஆட்டோ ஸ்டாண்ட்ல கேட்டா அவங்களும் யாரையும் பாக்கலே-ன்னு சொல்லிட்டாங்க.

அந்த பையனை அடுத்த நாள் புடிச்சு விசாரிச்சா அவனும் நல்லவன் மாதிரியே பேசறான். 'திருடினவன் எங்க இருந்தாலும் ந்ல்லா இருடா' ன்னு வாழ்த்தறதை தவிர வேற என்ன செய்ய?

போன் வாங்கியபோது ஏதோ ஆஃபர்ல திருட்டு இன்ஷூரன்ஸ் (Theft insurance-ங்க) கொடுத்தாங்க. போனது போச்சு பாதி காசையாவது மீட்போம்னு போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். முதல்ல வடபழனி ஸ்டேஷன் போனா அட்ரஸ் கேட்டு விருகம்பாக்கம் ஜூரிஸ்டிக்சன்னு தொரத்தி விட்டுட்டாங்க. அங்க போய் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு வேலையை பாக்க போயாச்சு.

ஒரு வாரம் கழிச்சு கூட வேலை பாக்கறவன் கிட்ட "செல்போன் தொலைஞ்சுதுன்னு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன். ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இன்ஷூரன்ஸ் கம்பெனில இருந்து போன் வரலையே"ன்னு கேட்டா "அட வெண்று, கம்ப்ளெயிண்ட் காப்பி வாங்கி மூனு நாள்ல கம்பெனிக்கு நீ அனுப்பி வைக்கனும்டா"ங்கிறான். என்னதத சொல்ல..நம்ம பொது அறிவு அவ்ளோ தான்.

என்ன தான் செல்போன் தொலைஞ்ச வருத்தம் இருந்தாலும் அதை அடிச்சவனோட தைரியத்தை என்னால பாராட்டாம இருக்க முடியலை. நாலு பேரு தூங்கிட்டு இருக்கும்போது ரூமுக்குள்ள நுழைஞ்சு அடிச்சிருக்கான்னா என்னா தில் இருக்கனும். அவனை ஒரு தடவையாவது சந்திச்சு 'அன்னைக்கு சிக்கி இருந்தா என்ன பண்ணியிருப்ப?'ன்னு கேக்கனும். அதை விடவும், அன்னைக்கு அவன் சிக்கி இருந்தா நாங்க என்ன பண்ணியிருப்போம்? அவனை புடிச்சு அடிச்சிருப்போமா, போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இருப்போமா இல்ல அப்படியே மன்னிச்சு விட்டிருப்போமா..தெரியல...கண்டிப்பா அந்த நிமிஷத்துல என்ன செய்து இருப்போமோ அதுவும், இப்ப யோசித்து பார்க்கும்போது மனதில் தோன்றுவதும் ஒன்றாக இருக்காது...அப்படி இருப்பதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவு.நட்பின் வழியது

இடமாற்றம்
வேலைப் பளு
புதிய நண்பர்கள்
காதலி
திருமணம்
குடும்பம்
தயக்கம்
தலைக்கனம்
ஞாபக மறதி
நேரமின்மை
சோம்பேறித்தனம்
வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்
மாறிய தொலைபேசி எண்
அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம்
நான் அனுப்பி பதில் இல்லாத,
நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள்
தேவையற்றதாகத் தோன்றி
பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும்
என்னை நீயும் புரிந்துகொண்டமை
சரியாகவோ தவறாகவோ
முதிர்ச்சி
வயதிலும் மனதிலும்
நடந்ததும் பொய்யாகிப் போனதுமான
எதிர்பார்ப்புகள்
நீ வராமல் விட்ட
என் தங்கையின் திருமணம்
நான் வர முடியாமல் போன
உன் விவாகம்
அடைக்க மறந்த கடன்
அதைக் கேட்டுத் தொலைத்த நீ
இன்னபிற
இன்னல்களுக்கிடையில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

--------------------------------------------------------------------------------

டயலாக்:

"மச்சான், வர்ற சனிக்கிழமை கெட்டூகெதர் பதினைஞ்சு பேராவது வருவாங்க மறக்காம வந்துடு"

"இதுபோல் கெட்டூகெதர் வச்சுதான் நாம் சந்திக்க முடியும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி
யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்"Whisky

இங்கிலிஷ் படம் பார்க்கறதுனாலே சப்டைட்டிலும் பக்கத்துலயே இங்கிலீஷ் தெரிஞ்சவனும் இருந்தாதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். தப்பித்தவறி தியேட்டர்ல இங்கிலீஷ் படம் பார்க்க போனாலும் அடுத்த ஷோவே காசி தியேட்டர்லயோ இல்ல கருமாரி காம்ப்ளெக்ஸ்லயோ 'தமிழில்' பார்த்தாதான் மத்த பசங்க கிட்ட பிட்டை போடற அளவுக்கு படம் புரியும்.

இந்த நிலைமையில வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காம கூட வேலை பார்க்ககும் லோக்கல் நண்பன் கிட்ட உருகுவே சினிமா இண்டஸ்ட்ரீ பத்தி அறிவை வளர்த்துக்கலாம்னு கேட்டு தொலைச்சுட்டேன். அவன் சொன்ன படம் தான் 'Whisky'. உருகுவேயில் தயாரிக்கப்பட்ட படம். படம் பேரே கலக்கலா இருக்கேன்னு டிவிடி வாங்கி வந்து பார்த்தாச்சு.

ஜேக்கப் கொஷர் (Jacobo Koller - இங்க ஹேக்கபோ) நலிந்த நிலையில் இருக்கும் ஒரு சிறிய காலுறை தொழிற்சாலையின் முதலாளி. மார்த்தா (Marta) என்ற நடுத்தர வயது பெண்மணி அங்கு மேற்பார்வையாளராக இருக்கிறார். இன்னும் இரண்டு பெண்கள் மட்டுமே அங்கு வேலை செய்கிறார்கள்.

தினமும் காலையில் மார்த்தா சீக்கிரமாக வந்து காத்திருப்பார். ஜேக்கப் வந்து தொழிற்சாலையை திறப்பார். சிறிது நேரத்தில் மார்த்தா ஜேக்கப்பிற்கு லெமன் டீ கொடுப்பார். ஜன்னல் கதவு வேலை செய்யாது. சிறிது நேரத்தில் மற்ற இரு பெண்களும் வருவார்கள். பன்னிரெண்டு மணி நேர வேலைக்குப் பிறகு மார்த்தா அவர்களின் பைகளை சோதனை செயத பின் கிளம்பிச் செல்வார்கள். அதற்கு பிறகு மார்த்தாவும் ஜேக்கப்பும் தனித்தனியே கிளம்பிச் செல்வார்கள்.

இதையே படத்தின் ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை காட்டி ஜேக்கப்,மார்த்தாவின் அன்றாட வாழ்க்கையை விவரிப்பதில் படம் தொடங்குகிறது.

ஜேக்கப்பின் வயது முதிர்ந்த தாய் இறந்து விட அவரின் இறுதிச் சடங்குகளுக்காக ஜேக்க்ப்பின் தம்பி ஹெர்மன் கொஷர் (Herman Koller) பிரேசிலில் இருந்து வருகிறார். ஹெர்மனும் காலுறை உற்பத்தி செய்பவர் தான் என்றாலும் கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களும் நவீன இயந்திரங்களும் கொண்டு வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார்.

தன் தம்பியை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற விதண்டாவாத மனப்பான்மை கொண்ட ஜேக்கப் மார்த்தாவை தன் மனைவியாக நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மூவரும் பிரியாபோலிஸ் (Pireapolis) என்ற சுற்றுலா நகரத்திற்கு செல்கின்றனர். அங்கு மூவருக்குள் நடக்கும் உரையாடல்களையும், ஹெர்மனின் தாக்கத்தால் மார்த்தா தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதையும் ஜேக்கப் தன் பிடிவாத்ததை விடாமல் அதே சுழற்சியில் தொடர்வதையும் மீதி படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

ஹெர்மன் பிரேசிலுக்கு கிளம்புவதற்கு முன் தொழிலை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஜேக்கப்பிற்கு பணம் தர அதை முதலில் வாங்க மறுக்கும் ஜேக்கப் பின்னர் வாங்கிக் கொள்கிறான். தன் தம்பியை வழி அனுப்பியதும் அந்த பணம் மொத்தத்தையும் மார்த்தாவிடம் கொடுத்து விடுகிறான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் தொழிற்சாலைக்கு செல்கிறான். ஆனால் மார்த்தா வரவில்லை. அவனே லெமன் டீ போட்டு குடித்துவிட்டு வேலையைத் தொடர்வதாக படம் முடிகிறது.

எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் அதே வாழ்க்கையைத் தொடர விரும்பும் ஜேக்கப், சுழற்சியான வாழ்க்கையில் சிக்கிக் கொண்டாலும் அதிலிருந்து வெளி வரத் துடிக்கும் மார்த்தா, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வெற்றி பெறும் ஹெர்மன் என மூன்று கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியிருக்கிறார்கள். சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்களையும் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருகிறது.

மிகவும் அமைதியான, மெதுவாக ஊர்ந்து செல்லும் திரைப்படம். சனிக்கிழமைகளில் ஜனாதிபதி விருது பெற்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் பார்த்தது போல் இருந்தது.

மூன்று நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி கச்சிதமாக பொருந்துகிறார்கள். ஆரம்பித்த சில நிமிடங்களில் படம் நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறது. படம் முழுக்க காட்சிகள் மெல்லிய நகைச்சுவையோடு யதார்த்தமாக இருக்கின்றன. கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஜேக்கப்பை உருகுவேயுடன் ஒப்புமை படுத்தி விமர்சிக்கிறான். எழுபதுகளில் 'தென் அமெரிக்காவின் ஸ்விட்சர்லாந்து' என அழைக்கப்ப்ட்ட உருகுவே இன்று வளர்ச்சியில் தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் அண்டை நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியன தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன். உருகுவேயின் இந்த தேக்க நிலையையும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையையும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் வழியாக இந்த படம் பிரதிபலிப்பதாக கூறுகிறான்.

படத்துக்கு பெயர்க் காரணம் சொல்லலையே....நம்ம ஊர்ல புகைப்படம் எடுக்கும்போது 'Cheese...'ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி இங்க 'Whisky..'இந்த படங்கள் எப்போ ரிலீஸ்??

"தமிழில் நல்ல படமாகவே இருந்தாலும் இரண்டு டூயட், ஒரு குத்து பாட்டு, சண்டை காட்சி இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க மாட்டார்கள். தயாரிப்பாளர் சொந்தமாக வெளியிட வேண்டியிருக்கும். அதனாலேயே தேவையில்லாமல் பாட்டும் பைட்டும் இடையில் திணிக்கிறார்கள்"

இது யாரோ எங்கேயோ சொல்லி கேட்டது. இது ஓரளவு உண்மை என்றாலும் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இது போல் பாடல் காட்சிகளைத் திணிக்க ஏதுவாக காட்சியமைப்பு இல்லாததால் நன்றாக வந்திருக்க வேண்டிய சில படங்களும் சொதப்பியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம்: கொக்கி.

'வேட்டையாடு விளையாடு' ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. 'வல்லவன்', 'காட் ஃபாதர்' ஆகிய படங்களும் விரைவில் வெளியாகும் என பத்திரிகைகள் சொல்கின்றன.

இவை தவிர நீண்ட நாட்களாக வெளிவராமல் நான் எதிர்பார்த்திருக்கும் இரண்டு படங்கள் :

துள்ளல்:ரட்சகன், ஜோடி, ஸ்டார் வெற்றிப் படங்களைத்(?!) தொடர்ந்து ப்ரவீன் காந்த் க்தாநாயகனாக நடித்து இயக்கும் படம். இரண்டு கதாநாயகிகள். 'சின்ன கலைவாணர்' விவேக்கும் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வட்பழனி 'லஷ்மண் ஸ்ருதி'யில் இந்த படத்தின் போஸ்டரை கடையின் வாசலில் ஒட்டியிருந்தார்கள். இந்த படத்தில் 'தல' நடிப்பதாக இருந்தது என எங்கேயோ படித்த ஞாபகம்.

வீராச்சாமி:சிம்பு நயன்தாரா உதட்டைக் கடித்து, ஆற்காடு சாலையில் கார் ரேஸ் வைத்து, தி. நகரில் அடி வாங்கி 'வல்லவன்' பப்ளிசிட்டிக்கு மாய்ந்து கொண்டிருக்க தன் ஸ்டிலகளை வைத்தே படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கொடுத்தவர். தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு என ஒரு பேட்டியில் சொன்னார். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

இந்த படங்கள் இரண்டும் எப்போ ரிலீஸ்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லிட்டு போங்க! ;)கயல்விழி

சுந்தர்.வயது 28.5' 10''. மாநிறம். சிம்ம லக்கினம். சுவாதி நட்சத்திரம்.துலா ராசி.சாப்ட்வேர் இன்ஜினியர்.வேளச்சேரி பணாமுடீஸ்வரர் தெரு குறுக்கு சந்தில் ஏழாவது மாடியில் டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்.24 மணி நேரம் தண்ணீர்.

சுந்தரின் தாய் கடந்த மூன்று மாதங்களாக மேற்கண்ட மற்றும் இன்ன பிற விவரங்களுடன் தன் மகனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார். வரும் தை மாதத்திற்குள் மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தீவிரமாக இறங்கிவிட்டார்.

சுந்தர், ஐந்து ரூபாய் கர்ச்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் அணியும் சக சென்னை சிட்டிசன். அம்மா பாண்டிச்சேரியில் சொந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டதால் இங்கே நண்பர்களுடன் தங்கி இருக்கிறான்.

அவனைப் பற்றி அலுவலகத்தில் விசாரித்தால் அமைதியான பொறுப்பான பண்பான என எல்லாம் ஆனவன் என்பார்கள். பெண்களுடன் அன்னியோன்யமாய் பழகுபவன்தான் என்றாலும் காதல் திருமணம் செய்வதில்லை என தன் தலையில் தானே எழுதிக்கொண்ட அம்மாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளை.

அன்று அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் அம்மா போன் செய்தார்.

"தரகர் ஒரு ஜாதக்ம் கொடுத்துட்டு போயிருக்காருடா..பொண்ணு பேரு கயல்விழி. கடலூர். அப்பா கடலூர்லயே ஹெட்மாஸ்டர்"

"ஓ..போட்டோ குடுத்திருக்காங்களா?"

"இல்லடா..அந்த பொண்ணு உன் கம்பெனில தான் வேலை பாக்குதாம். தரகருக்கு எந்த ப்ராஞ்சுன்னு சொல்லத் தெரியல. பொண்ணு பேரு கயல்விழி. அப்பா பேரு மகாதேவன். இரண்டு வருஷமா மெட்ராஸ்ல தான் வேலை பாக்கறாளாம்"

"அப்படியா..சரிம்மா இந்த வாரம் வீட்டுக்கு வரும்போது பாத்துக்கலாம்".

போனை வைத்துவிட்டு பக்கத்தில் பிரபுவிடம் விஷயத்தை சொன்னான்.

"எந்த ப்ராஞ்சுன்னு தெரியலயாடா?"

"தெரியல மச்சி"

"சுந்தர், நம்ம கம்பெனிக்குள்ளயே ரெண்டு பேரு கல்யாணம் பன்ணிக்கிட்டா கிப்ட் பாக்கேஜ் உண்டுப்பா..இதையே பாத்து முடிச்சுடு" - பக்கத்து கேபினில் இருந்து ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மேனேஜர் குமார்.

"பார்ப்போம் சார். இப்போ ஜாதகம் மட்டும் தானே குடுத்திருக்காங்க. எல்லாம் முடியட்டும்"

"பொண்ணு பேரு என்ன சொன்னீங்க?'" - இந்த பக்கத்திலிருந்து லதா.

"கயல்விழி. கடலூர். நம்ம கம்பெனி தான். ஆனா எப்படி கண்டுபிடிக்கறது?"

"கயல்விழி மகாதேவனா?"

"ஆமா லதா..அப்பா பேரு மகாதேவன்னு தான் சொன்னாங்க"

"அவ ட்ரெயினிங்க்ல என் பேட்ச் தான். இப்போ டைடல்ல இருக்கா. மெயில் ஐடி தேடித் தரேன்"

"லதா, பாக்க எப்படி இருப்பாங்க?" - இது பிரபு. குறிப்பறிந்த நண்பன்.

"நல்லா லட்சனமா தான் இருப்பா...அமைதியான பொண்ணு..கவலைப்படாதீங்க" என சிரித்தபடியே மெயில் ஐடியைத் தேடினாள்.

அதற்குள் சுந்தர் "இல்ல லதா. மெயில் அனுப்பினா நல்லாயிருக்காது. போன் நம்பர் இருக்கா? போன்லயே பேசிடலாம்"

"போன் நம்பர் என்கிட்ட இல்ல. மத்தியானத்துக்குள்ள வாங்கித் தரேன்".

சொன்னபடியே ஒரு மணி நேரத்தில் தொலைபேசி எண்ணை வாங்கித் தந்துவிட்டாள். ஏற்கனவே இரண்டு பெண்களின் ஜாதகம் பார்த்திருந்தாலும் அவர்களிடம் சுந்தர் பேசியதில்லை. கயல்விழி அதே நிறுவனத்தில் வேலை செய்வது அவன் ஆர்வத்தைத் தூண்டியது. அன்று இரவு வீட்டிற்குச் சென்றதும் அழைக்கலாம் என வேலையைத் தொடர்ந்தான்.

"ஹலோ நான் சுந்தர். லாயிட்ஸ் ரோடு ப்ராஞ்சில இருந்து பேசறேன்"

"ம்ம்..சொல்லுங்க"

"உங்க ஜாதகம் தரகர் கொடுத்திருக்காராம். அம்மா சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசலாம்னு"

"இப்பதாங்க அப்பா போன் பண்ணி சொன்னார்"

"ஓ நல்லது. உங்க பேட்ச் மேட் லதா போன் நம்பர் கொடுத்தாங்க. ஆபிஸ்ல இருக்கீங்களா?"

"ஆமாங்க. கொஞ்சம் வேலை..லேட்டாயிடுச்சு.."

"அப்படிங்களா..இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?"

"பாக்கலாம்ங்க..இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். அப்புறம் கூப்படறீங்களா? தப்பா நினைச்சுக்காதீங்க"

"நோ நோ..இட்ஸ் ஓகே...நீங்க கிளம்புங்க. குட்நைட்"

"குட்நைட்"

'ச்சே..என்னடா இது உப்புசப்பில்லாம முடிஞ்சுடுச்சே' என ம்னதுக்குள் எண்ணியவாறே காலண்டரைப் பார்த்தான். புதன். 'சனிக்கிழமை போன் பண்ணலாம். ரெண்டு நாள் ஆபிஸ்ல ஓட்டி எடுத்துடுவானுங்க'.

வழக்கம்போல் சனிக்கிழமை பத்து மணிக்கு கண் விழித்தான். எழுந்தவுடனே கயல்விழி நினைவு வந்தது. பல் கூட விளக்காமல் போன் செய்தான்.

"சுந்தர் பேசறேங்க"

"ஹலோ சுந்தர். எப்படி இருக்கீங்க?"

"நலம். எங்க இருக்கீங்க?"

"ஆபிஸ்ல இருக்கேன். ஒரு டெலிகான் இருக்கு. ஈவ்னிங் போன் பண்றீங்களா?"

"கண்டிப்பாங்க..நாலு மணிக்கு பண்ணவா?". அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

'என்ன இவ..பிடி கொடுக்காமலயே பேசறாளே..இத இப்படியே விடக்கூடாது. மறுபடியும் சாயந்திரம் போன் பண்ணிட வேண்டியதுதான்'. எண்ணிக்கொண்டே மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

மதியம் சாப்பிட்டுவிட்டு திருட்டி சிடியில் படம் பார்த்துக்கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரத்தையும் கவனித்தபடி இருந்தான். சரியாக நான்கு மணிக்கு கயல்விழியை மீண்டும் அழைத்தான்.

"ஹலோ..என்ன இன்னும் ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?"

"ஆமாங்க..இன்னும் வேலை முடியல"

"என் ப்ரெண்ட் ஜஸ்டின் கூட உங்க ப்ராஜெக்ட்ல தான் இருக்கான்"

"ம்ம்..ஜஸ்டின் தெரியும்ங்க.. அவர் வேற டீம். நான் டெஸ்டிங்ல இருக்கேன்"

"ஓ குட்.இப்போ நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன்...உங்க ஆபிசுக்கு வரலாமா?? உங்களைப் பார்க்க முடியுமா?"

"நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிலாம்னு இருக்கேன்"

"அப்ப நல்லதா போச்சு..உங்களை டைடல்ல வந்து பிக் அப் பண்ணிக்கறேன்.. அப்படியே எங்கயாவது சாப்பிட போலாம்"

"இல்லைங்க..இன்னொரு நாள் பார்க்கலாமே...வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு"

"உங்க வீட்டுல திட்டுவாங்கன்னு பயப்பட்றீங்களா? அதெல்லாம் பார்த்துக்கலாம்ங்க"

"இல்ல சுந்தர். பரவாயில்லை இருக்கட்டும் இன்னொரு நாள் பாக்கலாம்"

"கல்யாணத்தை விடுங்க. ஆஸ் எ கலிக்..ஒரே கம்பெனியில வேலை பார்க்கறோம். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா மீட் பண்ணலாமே..அட்லீஸ்ட் பக்கத்துலயே பெசண்ட் நகர் அஷ்டல்ஷ்மி கோயிலுக்காவது போலாம்ங்க"

"ப்ளீஸ் சுந்தர்..போனா லேட் ஆயிடும். ரூம் மேட் கூட வெளிய போறதா ஏற்கன்வே ஒரு ப்ளான் இருக்கு"

"இதுக்கு மேலயும் வரலைனா நான் என்னங்க சொல்றது"

"சுந்தர்..நான் எதுக்கு வரலைன்றதுக்கு உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டாம். இருந்தாலும் உங்க கிட்ட சொல்றேன். தப்பில்லை. நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி. ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்க வீட்டுல மணிகண்டன்னு ஒருத்தரோட ஜாதகம் பார்த்தாங்க. அவரும் நம்ம கம்பெனி தான். ஜாதகம் எல்லாம் பொருந்தி வந்துச்சு. நாங்களும் பேசிப் பழகிட்டோம். நிச்சயதார்தத்துக்கு கூட நாள் குறிச்சுட்டாங்க. நானும் மணிகண்டனும் போன்ல பேசிக்கிட்டோம். நேர்லயும் மீட் பண்ணோம். கிட்டத்தட்ட ஒரு மாசம் சேர்ந்து சுத்தினோம். எல்லாம் கூடி வர்ற நேரத்துல நிச்சயதார்தத்துக்கு ஒரு வாரம் முன்னாடி என் தாத்தாவுக்கும் அவரோட பெரியப்பாவுக்கும் சின்ன சண்டை வந்து எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. நான் வீட்டுல சொல்றதை மீறவும் முடியாது. என்னால எதுவும் பண்ண முடியல. நான் சின்ன டவுன்ல வளர்ந்த பொண்ணு. என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடிய்ல. நான் இப்பதான் அதை ஓரளவு மறந்திட்டிருக்கேன். நம்ம விஷயத்துலயும் அதே மாதிரி எதுவும் வருத்தம் தர்றா மாதிரி நடக்க வேண்டாம். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாம் நிச்சயமாகட்டும். அதுக்கப்புறம் நானே உங்களுக்கு போன் பண்றேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம். சாரி சுந்தர்."

சுந்தர் எதுவும் கூறும் முன்பே அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அதற்கு அடுத்த வாரம் சுந்தர் ஊருக்குச் சென்றபோது கயல்விழியின் ஜாதகத்தில் பத்து பொருத்தத்திற்கு ஆறு தான் பொருந்தி வருவதாயும் தரகரிடம் வேறொரு பெண்ணின் ஜாதகத்தைக் கேட்டிருப்பதாகவும் அவன் அம்மா சொன்னார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சுந்தர் அந்த முகம் தெரியாத கயல்விழிக்கு மீண்டும் போன் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருக்கிறான்.தோப்பில் ஒரு நாடகம்

'உலகமே ஒரு நாடக மேடை'ன்னு பெரியவங்க சும்மா சொன்னாங்களோ இல்ல காசு வாங்கிட்டு சொன்னாங்களோ தெரியாது. ஆனா காலேஜ்ல படிக்கிற காலத்துல எதுனா ஒரு மேடை கிடைச்சா அதுல ஒரு ஸ்கிட்(Skit) ஏத்தறதுக்கு ஒரு கூட்டமே எப்பவும் காத்துகிட்டு இருக்கும். இதுக்காகவே பசங்க மண்டையை உடைச்சிகிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவானுங்க. அப்ப ரிலீஸ் ஆகி இருக்கற எதுனா ஒரு படத்தை அப்படியே உல்டா பண்ணிட்டா ஒரு ஸ்கிட் ரெடி.

ஆனா அதை விட சுலபமா சினிமாவுல அம்மா செண்டிமெண்டும் தாலி செண்டிமெண்டும் எப்படி காலம் காலமா நிலைச்சு நிக்குதோ அதே மாதிரி ஸ்கிட்டுக்கும் ஒரு எவர்க்ரீன் கதை இருக்கு.

முதல் வேளையா சினிமா ஹீரோக்கள்ல நாலஞ்சு பேரை செலக்ட் பண்ணிக்கனும். இது மாதிரி செலக்ட் பண்ணும்போது தான் கவனமா இருக்கனும். நாம் ஒன்னும் 'அபிநயா' ஆட்கள் இல்ல. அதுனால எந்த ஹீரோன்னு ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிக்கற மாதிரி செல்க்ட் பண்ணனும். உதாரணத்துக்கு சோலைக் கொல்லை பொம்மை மாதிரி கையை விரிச்சு வச்சிக்கிட்டு தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆட்டிகிட்டு "அண்ணன் -தம்பி-பங்காளி"ன்னு பாடிட்டு வந்தா எந்த ஹீரோன்னு நம்மால ஈஸியா கண்டுபுடிக்க முடியும் இல்லையா..அது மாதிரி தான்.

இந்த ஹீரோக்க்ள் செலக்ட் பண்ணும்போது விஜயகாந்தோ, விஜய டி.ஆரோ இருக்கறது நல்லது. அவங்களை வெச்சு நாம எதுவும் பெருசா பண்ணலைனாலும் ஆடியன்ஸ் கிட்ட ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க இவங்க இருந்தா நல்லது.

இப்ப உதாரணத்துக்கு நாலு ஹீரோவை செலக்ட் பண்ணிப்போம். இளைய தளபதி, லிட்டில் சூப்பர் ஸ்டார், 'காக்க காக்க' சூர்யா, 'பிதாமகன்' விக்ரம் இது மாதிரி. .நிறைய பசங்க நடிக்க(!!) ஆசைபட்டால் இன்னும் சில ஹீரோக்களை சேத்துக்கலாம். அதுனால நம்ம மெயின் ஸ்கிரிப்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அதுக்காக ஜெயம் ரவி,விஷால் இப்படியெல்லாம் சேர்த்தா நடிக்கறதுக்கு எந்த பையனும் வரமாட்டான்.

இப்போ சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் மட்டும் ஏன் குறிப்பிட்ட பட ரோல்ன்னு சந்தேகம் வ்ரும். நம்ம இளைய தளபதிக்கும், சிம்புவுக்கும் எந்த படமா இருந்தாலும் ஒரே மானரிசம் பண்ணி ஆடியன்சுக்கு புரிய வச்சிடலாம். ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கஷ்டம். அதுனால 'காக்க காக்க'-ல 'உயிரின் உயிரே' பாட்டை போட்டுட்டு சூரியாவை ஓட விட்டுடலாம். ஒரு அழுக்கு பனியனும் லுங்கியும் குடுத்து பிதாமகன் கெட்டப் கொண்டுவந்துடலாம்.

இப்ப கதைக்கு வருவோம். எந்த மேடைல இந்த ஸ்கிட்டைப் போடப் போறோங்கிறதைப் பொருத்து ஸ்டேஜ்ப்ளேயில்(படத்துக்கு ஸ்கீரின்ப்ளே-ன்னா இதுக்கு ஸ்டேஜ்ப்ளே தானே) சின்ன சின்ன மாறுதல் வரும். முதல்ல காலேஜ் லெவல் மேடைக்கு கதையைப் பார்ப்போம்.

கதையோட முதல் பாகம் - இந்த நாலு ஹீரோவுக்கும் தனித்தனியா ஒரு இண்ட்ரோ சாங்க் போட்டு வரிசையா மேடையில ஏத்தனும். இவங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே உயிர் நண்பர்கள். ஒரே காலேஜ்ல ஒன்னா ஜாயின் பண்றாங்க. இது நம்ம காலேஜ் இல்ல. அதே ஊரில் இருக்கற வேற காலேஜ். அந்த காலேஜ் பேரை சொல்லி பாலிடிக்ஸ் பண்றதும் சொல்லாம் விடறதும் நம்ம விருப்பம் தான்.

அந்த காலேஜ்ல சேர்ந்தப்புறம் நம்ம பசங்க தண்ணி,தம்மு, பிகரு, ஆட்டம் பாட்டம்னு கெட்டுப்(?!) போயிடறாங்க(அதாவது உருப்பட்டுடறாங்க!). பரிட்சைல வரிசையா கப்பு வாங்கித் தள்றாங்க. அவங்க வாழ்க்கையில நிறைய தோல்வி அடைஞ்சு நொந்து போறாங்க. அப்படியே கட் பண்ணிடறோம்.

இப்போ கதையின் அடுத்த பாகம். அதே நாலு ஹீரோ. நம்ம இன்ஜினியரிங் காலேஜுக்கு படிக்க வராங்க. ஒழுக்கசீலர்களா(?!) நல்லா படிச்சு. கோல்ட் மெடல் வாங்கி பெரிய ஆள் ஆயிடறாங்க. இந்த இடத்துல நம்ம தலைவரை லெக்ட்சரரா போட்டு அட்வைஸ் பாட்டு ஒன்னு வேணும்னா போட்டுக்கலாம். நம்ம காலேஜ்ல படிச்சு ஒவ்வொருத்தரும் டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும் வாழ்க்கையில வெற்றிப் படிக்கட்டுல ஏறி போயிட்டே இருக்காங்க. சாரி ஒரு சின்ன கரெக்ஷன்...மேல இன்ஜினியரிங் காலேஜின்னு சொல்லிட்டதால "டாக்டராகவும், பொறியாளர்களாகவும், வக்கீலாகவும்" இதைக் கட் பண்ணிடலாம். அவ்ங்க பொறியாளர்களா மட்டும் வெற்றி படிக்கட்டுல ஏறி போறாங்க.

கதை அவ்ளோ தான். இதுல அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி கரெக்டா பாட்டைப் போட்டுட்டா ஸ்கிட் ரெடி. கூடவே இரண்டு பசங்களுக்கு சுடிதாரை கடன் வாங்கி மாட்டி விட்டு ஸ்தீரிபார்ட் சேர்த்து ரொமாண்டிக் பாட்டு ரெண்டையும் சேத்துக்கலாம். இவங்க ஸ்டேஜ் ஏறினதும் விசில் பிச்சு உதறிடும். பாட்டு தேர்ந்தெடுத்து போடறதுல தான் நம்ம வெற்றியே இருக்கு.

இதே கதையை டிபார்ட்மெண்ட் விழா எதுக்காவது போட்டால், காலேஜுக்கு பதில் டிபார்ட்மெண்டுக்கு மாத்திடனும் . நம்ம நாயகர்கள் வேற டிபார்ட்மெண்ட்ல படிச்சு நாசமா போற மாதிரியும் நம்ம டிபார்ட்மெண்டுல படிச்சு உருப்படற மாதிரியும்.

இதே ஹாஸ்டல் டே-ன்னா ஹாஸ்டல்ல தங்கி படிச்சா நல்லவனா வல்லவனா ஆகற மாதிரியும் 'டே ஸ்காலர்'னா நாசமா போறதாகவும் மாத்திக்கலாம். இப்படி இடத்துக்கு ஏத்த மாதிடி கஸ்டமைஸ் செய்தால் எந்த மேடைக்கும் பொருந்தும் ஒரு எவர்கிரீன் ஸ்கிர்ப்ட் இது.

இதுல இன்னொரு மேட்டர் இருக்கு. நாம செய்யற காமெடியை எல்லாம் பார்த்து ஆடியன்ஸ் ரசிச்சு சிரிப்பாங்கன்ற நம்பிக்கையில பண்ணுவோம். (இப்போ இந்த பதிவைப் படிச்சுட்டு நீங்க சிரிப்பானா அள்ளி வீசுற மாதிரி நான் நினைச்சுட்டு இருக்கேன்ல அது மாதிரி ;) )

ஆனா அது பெருசா ஆப்பு வாங்க வாய்ப்பு இருக்கு. ஆடியன்சுல எவனையும் நாம மேடைல இருக்கும்போது கத்தவோ சேர் மேல ஏறி நின்னு பெல்டால தூக்கு போடவோ விடக் கூடாது(முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமில்லையா?நாம கீழே இருந்தப்போ செய்தது தானே நமக்கு திரும்பக் கிடைக்கும்).

அதுக்கு முன்னேற்பாடு நடவடிக்கையா முதல் வருஷ மாணவர்கள் பத்து,இருபது பேரைப் புடிச்சு நாம என்ன கேவலமா நடிச்சாலும் அதுக்கு சிரிக்கறதுக்கும் கை தட்டறதுக்கும் ஏற்பாடு பண்ணிடனும். அவனுங்களை ஒரே இடத்துல உக்கார விடாம அரங்கத்துல அங்கங்கே நாலு பேரா நிக்க வைச்சா இன்னும் நல்லது.

பாட்டு வரப்போ தியேட்டர்ல தம்மடிக்க போற மாதிரி நம்ம ஸ்கிட் வரும்போது நம்ம செட் பசங்க எல்லாரையும் தம்மடிக்க அனுப்பிடனும். இந்தக் கொடுமையைப் பார்த்துட்டு நட்புக்காக எவ்வளவு நேரம் தான் அவங்களால பொறுமையா இருக்க முடியும். நம்மாளுங்களே கத்த ஆரம்பிச்சிட்டா அது நமக்கு பெருத்த அசிங்கம். அதுக்கெல்லாம் நாம் அசர மாட்டோம். அது வேற விஷயம்.

இதுமாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் + குத்து வாங்கலைனாலும் நிறைய பின்னூட்டம் வாங்கின பதிவு மாதிரி கரையேறிடலாம்.

அப்போ நடிக்க ஆரம்பிச்சது இப்பவும் தினம் தினம் நடிக்க வேண்டி இருக்கு. பின்ன என்னங்க....எவ்வளவு நேரம் தான் வேலை பார்க்கிறா மாதிரியே நடிக்கறது ;).ராக்கி - ரக்ஷாபந்தன் எக்ஸ்க்ளூசிவ்

அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் ஹி ஹி ஹி...இன்றும்

மணி பதினொன்று. இன்றும் அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகிவிட்டது. அறையில் நண்பர்கள் யாரும் இல்லை. நைட் ஷோ சென்றிருப்பார்கள். படத்திற்கு போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்று சீக்கிரம் வந்திருந்தால் நானும் சென்றிருக்கலாம். கிளம்பும் நேரத்தில் மேனேஜர் வந்து வேலை கொடுத்துவிட்டான். இன்று இரண்டாவது முறையாக அவனுடன் தகராறு. ஒன்று இந்த ப்ராஜெக்டில் இருந்து மாற வேண்டும் இல்லையென்றால் கம்பெனியை மாற்ற் வேண்டும். அப்போது தான் நிம்மதி. இதற்கு மேலும் இவனிடம் வேலை பார்க்க முடியாது.

அவனை மட்டும் குறை சொல்லி என்ன பயன். யாருக்கு தான் என் பேரில் அக்கறை இருக்கிறது. பெற்றவர்களுக்கே அக்கறை இல்லை. அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால் நான் ஏன் கல்கத்தாவை விட்டு சென்னைக்கு வரப் போகிறேன். ஜனனியை மணக்க அவர்கள் சம்மதம் சொல்லியிருந்தால் இந்நேரம் என் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருக்கும். அதைத் தாங்க முடியாமல் தானே கல்கத்தாவில் இருந்து இடமாற்றம் கேட்டு இப்போது சென்னையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இரண்டு பாக்கெட் சிகரெட்டில் என் சோகங்களை எல்லாம் மறந்துவிடத் துடிக்கிறேன்.

ஜனனி பத்தாம் வகுப்பில் என் பள்ளியில் வந்து சேர்ந்தாள். அவளும் தமிழ் தான். சொந்த ஊர் திருநெல்வேலி. அவள் அப்பாவிற்கு மாற்றலாகி அந்த வருடம் தான் கல்கத்தா வந்தனர். அப்போது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். அந்த ஏழு ஆண்டுகளில் என் செயல்கள் முழுக்க முழுக்க ஜனனியை நோக்கித் தான் இருந்தது.

நான் கிதார் வாசிக்கக் கற்றுக் கொண்டதே அவளால் தான். ஒரு நாள் பள்ளியில் இருந்து இரயிலில் வீடு திரும்பும்போது எதிர் சீட்டில் ஒருவன் கிடார் வைத்திருந்தான். ஜனனி எனக்கு கிதார் வாசிக்கத் தெரியுமா எனக் கேட்டாள். அவளுக்காகவே அடுத்த நாளே கிடார் வகுப்பில் சேர்ந்து கிடார் கற்றுக்கொண்டேன்.

அதே போல் நான் கிடார் வாசிப்பதை நிறுத்தியதற்குக் காரணமும் அவள் தான். கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கலை நிகழ்ச்சிக்காக மேடையில் வாசித்தேன். அன்று மாலை ஏதோ காரணத்துக்காக எங்களுக்குள் சண்டை வந்தது. அந்த ஆறு வருடங்களில் எங்களிடையே விழுந்த முதல் விரிசல். அன்று முடிவு செய்தேன். இனி கிடார் வாசிக்கப் போவதில்லை என. இப்படித் தான் பல நேரங்களில் காரணமில்லாத பைத்தியக்காரத் தனமான முடிவுகளை எடுக்கின்றோம்.

என் மாமா BARC-இல் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஜனனியை மணக்க என் அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் மாமா பேசி எப்படியாவது எங்கள் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நான் இறுதி வருடம் படித்தபோது 'ஹார்ட் அட்டாக்'கில் மாமா இறந்துபோனார். அதுதான் வாழ்க்கையில் நான் பட்ட முதல் அடி. அவர் இருந்திருந்தால் நான் ஜனனியைப் பிரிந்திருக்கத் தேவையில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் பாட்டியும் இறந்துபோனாள். பாட்டி இறந்த இரண்டு மாதங்களில் அப்பாவிடம் எங்கள் காதலைப் பற்றி சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதி, மொழி எல்லாம் ஒன்று தான். ஆனாலும் அவர் சம்மதிக்க மறுத்துவிட்டார். பெற்ற மகனின் வாழ்க்கையில் அக்கறை இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டார்.

எல்லாம் சுயநலவாதிகள் தானே. அவருக்கு விருப்பமான படிப்பு, அவருக்கு விருப்பமான வேலை, இப்போது அவருக்கு விருப்பமான மருமகள் வேண்டும். எல்லாம் அவர் விருப்பம் போல் அமைய வேண்டும். ஜனனியின் வீட்டிலும் எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. என்னை விட அவள் அதை எளிதாக்த் தாங்கிக் கொண்டாள்.

இதுவரையில் என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தருணங்களும் சோகமான தருணங்களும் ஜனனியால் வந்தவையே.

ஒரு முறை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மழை வலுக்க நான் மூடியிருந்த ஒரு கடையின் வாசலில் ஒதுங்கினேன். சிறிது நேரத்தில் ஜனனி குடையுடன் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் நின்று தன் குடைக்குள் வருமாறு அழைத்தாள். நான் மறுக்க "என்னுடன் குடையில் நனையாமல் வா. இல்லையென்றால் மழை நின்றபின் இருவரும் போவோம்" என அவளும் அந்த கூரையின் கீழ் வந்து நின்றுவிட்டாள். அவளுடன் செல்ல உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கத்தில் மழை நிற்கும் வரை அங்கேயே நின்று பேசிவிட்டு கிளம்பினோம். இது போல் எத்தனை நினைவுகள்.

கல்லூரி படிப்பு முடிந்து நான் வேலைக்குச் சேர்ந்த அதே தினத்தில் ஜனனிக்கு திருமணம். என்னையும் அழைத்தாள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன் போன் செய்து இரண்டு மணி நேரம் அழுதாள். திருமணத்திற்கு நான் செல்லவில்லை. அந்த அளவு என் மனதில் வலுவில்லை.

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. அவளுக்குத் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது லக்னோவில் இருக்கிறாள். அவள் திருமணத்திற்குப் பின் அவளிடம் பேசவேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன் அவளாக எப்படியோ என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அழைத்தாள். அப்போதும் என்னால் அவளிடம் பேச முடியவில்லை.அவள் நலனை விசாரித்துவிட்டு இனி எனக்கு போன் செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டு வைத்துவிட்டேன். அன்று இரவு அவள் திருமணத்தின் போது அழுததை விட அதிகமாக அழுதேன்.

அவள் மகனுக்கு இரண்டு வயதாகிவிட்டதாம். அவள் தோழி கீதா சொன்னாள். ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைக்கத் தான் முடிகிறதே தவிர கிளம்புவதற்குத் திராணியில்லை. அவள் மகனுக்கு 'கார்த்திக்' எனப் பெயர் வைத்திருக்கிறாளாம். சினிமாவில் மட்டும் தான் முன்னாள் காதலனின் பெயரை வைப்பார்கள் போல.

என் அப்பா அன்றே என் காதலுக்குச் சம்மதம் சொல்லியிருந்தால் இப்படி நடுஇரவில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க மாட்டேன். நம் விருப்பத்தை என்றைக்கு மதித்திருக்கிறார்கள். அவர் மேல் எவ்வளவு வெறுப்பிருந்தாலும் அவரை மீறவும் மனம் வரவில்லை. கடைசி வரை நம் மேல் அக்கறை கொண்டு நமக்கு நல்லது செய்பவர்கள் யாருமில்லை.

இப்போது வேறொரு பெண்ணைக் காதலித்தால் ஒத்துக்கொள்ளவா போகிறார். அதற்கும் அவரிடம் சண்டை போடத்தான் வேண்டும். நானும் ஜனனியை மறக்க வேண்டும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே தோன்றுகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும்.

மணி ஒன்றாகிவிட்டது. இன்னும் நண்பர்கள் படம் முடித்து வீடு திரும்பவில்லை. விஜய் பைக்கிற்கு ஆர்.சி புக் இல்லை.

நாளை பத்து மணிக்கு மீட்டிங் இருக்கிறது. அதற்கு முன் மேனேஜரிடம் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அளிக்க வேண்டும். இந்த ப்ராஜெக்டை திட்டமிட்டபடி இந்த மாதத்துக்குள் முடித்துவிட்டால் நல்லது. அவனிடம் நல்ல பெயர் கிடைக்கும், ரேட்டிங்கில் உதவும்.

தூக்க மாத்திரை எங்கே வைத்தேன்?பொன்னான மனமே! பூவான மனமே!!Just reminded of one thing ........... two guys for a girl,
one tearfully ruminating, and the other carefully tracking .........
Despite all this, the girl is looking for better options ......................

This is the way life is ......................