One night @ BsAs + Shakira + Recoleta Cemetery

யார் அந்த டினா?

"நான் இதுவரை இப்படியொரு கல்லறைத் தோட்டத்தைப் பார்த்ததில்லை. மின்னசோட்டாவிலுள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் பெரிய கல்லறைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற கல்லறைகள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள். நேற்று மாலை முழுக்க நான் அங்குதான் செலவழித்தேன்" - நகரச் சுற்றுலா முடிந்து ஓட்டலுக்குள் நுழையும்போது மில்லர் என்ற சக அமெரிக்கப் பயணி ரிகொலெதா கல்லறைத் தோட்டத்தைப்(Recoleta Cemetery) பற்றி சொன்னார். நகரின் வரைபடத்தில் வழி காட்டியதுடன் பேருந்து தடத்தையும் தந்தார். அடுத்த நாளுக்கு முதல் இலக்காக அந்த கல்லறைத் தோட்டத்தை வைத்துக்கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க மீண்டும் நகரைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.

பொய்னொஸ் ஐரிஸில் இந்திய உணவகம் இருப்பதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். முகவரி எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். எத்தனை முன்னேற்பாடுகள் செய்தாலும் சிலவற்றை மறந்துவிட்டு பின்னர் நொந்துகொள்வது எல்லாப் பயணங்களிலும் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஓட்டல் வரவேற்பாளரிடம் கேட்டதற்கு ஒரு உணவகத்தின் பெயரைச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் அது பிட்ஸா கடை(Pizzeria) தான். அவருக்கு என்ன புரிந்ததோ, ஏதோ ஒரு உணவகத்திற்கு வழி காண்பித்துவிட்டார். நண்பரை தொலைபேசியில் அழைத்து இந்திய உணவகத்தின் முகவரி கேட்கும் அளவு வாய்க்கு பசி எடுக்காததால் அங்கேயே வயிற்றுப் பசியைத் தணித்துக்கொண்டு மீண்டும் கொர்ரியெந்தெஸ் அவென்யூவில் நடக்க ஆரம்பித்தேன்.

கொர்ரியெந்தெஸ் அவென்யூ முழுக்க சினிமா, நாடக அரங்கங்களும் புத்தகக் கடைகளும் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான அரங்குகளில் நகைச்சுவை நாடகங்கள்தான் நடக்கின்றன. இளம்பெண்கள் கோமாளிகள் போல் வேடமனிந்து பாதசாரிகளை நாடகம் பார்க்க அழைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் எல்லா அரங்க வாசல்களிலும் கூட்டமிருந்தது. சனிக்கிழமை இரவு என்பதும் காரணமாக இருக்கலாம்.

புத்தக கடைகளில் ஸ்பானிஷ் புத்தகங்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டனின் சில நாவல்களும் வேறு சில நாவலாசிரியர்களின் ஃபிக்சன் நாவல்களுமே கிடைக்கின்றன. புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களின் புத்தகங்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கிடைக்குமென தேடிச்சென்ற எனக்கு ஏமாற்றம்.

அங்கிருந்து லவாஷே(Lavalle) என்ற தெருவிற்கு வந்தேன். இதுவும் ப்ளோரிடா தெருவைப் போலவே வணிக வளாகங்களும் திரையரங்குகளும் நிறைந்த தெரு. இந்த தெருவில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு தென்னிந்திய முகம் தெரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவரின் மனைவி கடையில் இருந்து வெளியே வர எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பேசலாமா என்ற யோசித்தபடியே அவர்களை நோக்கி நடக்கையில் வேறு ஏதோ கடைக்குள் சென்று கண்ணில் இருந்து மறைந்துவிட்டார்கள்.

இவ்வாறு கடைகளையும் சாலைகளையும் மக்களையும் வேடிக்கைப் பார்த்தவாறே இரவு பதினொரு மணி வரை நடந்துகொண்டிருந்தேன். சிறிது உடல் அயற்சி ஏற்பட்டதால் ஓட்டலுக்குத் திரும்பினேன்.

வெள்ளிக்கிழமை இரவு பொய்னொஸ் ஐரிஸில் ஷகிராவின் இசை நிகழ்ச்சி இருந்திருக்கிறது. ஒரு நாள் முன்னதாகச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம். சாலையோர பேனர்களிலும் , எப்.எம் ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஷகிராவின் ராஜ்ஜியம். தொலைக்காட்சியில் சிறிது நேரம் ஷகிராவின் இசைநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அடுத்த நாளுக்குத் தயாரானேன்.

காலையில் தூங்கி எழுந்ததும் சிற்றுண்டி அருந்திவிட்டு ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு ரிகொலெதா கல்லறைத் தோட்டம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உலகின் புகழ்பெற்ற கல்லறைத் தோட்டங்களில் ஒன்றான ரிகொலெதா கல்லறைத் தோட்டம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அர்ஜெண்டின அதிபர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் எனப் பலரின் கல்லறைக் கோபுரங்கள்(Mausoleum) அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு கோபுரமும் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் ஆன பலகையில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் இறந்த நாள் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிறந்த நாள் குறிப்பிடப்படவில்லை.சில கல்லறைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தெருக்களைப் போல் அகலமான இடைவெளிகள் விட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன.கல்லறைத் தோட்டத்தினுள் பூனைகள் அதிகமாக உலாவுகின்றன.கல்லறைத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்ததும்....அடுத்த பதிவில்.யார் அந்த டினா?

உருகுவே வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து இருக்க விடாத விசா விதிமுறைகள். ஆறு மாதம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால் அன்று மாலையே திரும்பிவந்தாலும் பரவாயில்லை. இப்படியான விதிமுறைகளின் ஓட்டைகள் வழியே சென்ற வாரம் அர்ஜென்டினா தலைநகர் பொய்னொஸ் ஐரிஸ்(Buenos Aires) பயணம்.

மாண்டிவிடியோவில் இருந்து விமானத்தில் சென்றால் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்பே லேண்ட் ஆகும் தூரம் தான். நான் சென்றது கப்பலில். மாண்டிவிடியோவில் இருந்து கலோனியா என்ற ஊர் வரை இரண்டு மணி நேரப் பேருந்து பயணம். கலோனியா வெள்ளி ஆற்றின்(Rio de La Plata) கரையில் இருக்கும் உருகுவேயின் மிகப் பழமையான நகரம். ஆற்றின் அந்தப் பக்கம் அர்ஜெண்டினா. 'Rio de La Plata' உருகுவே ஆறும்(Uruguay River) பரானா ஆறும்(Paraná River) இணைந்து உருவான கயவாய். கலோனியா பற்றி பிறிதொரு பதிவில் விரிவாக.

கலோனியாவில் இருந்து 'Buquebus' என்றழைக்கப்படும் கப்பல்வழிப் பயணம். பயணத்தின்போது மேல்தளத்திற்கு செல்ல அனுமதி இல்லை. முதலிலேயே கப்பலில் ஏறிவிட்டதால் ஜன்னலோர சீட்டைப் பிடித்து கண்ணாடி வழியாக வேடிக்கைப் பார்க்க முடிந்தது. கடல் காற்றை அனுபவிக்க முடியவில்லை.

இமிக்ரேஷன் வேலைகளெல்லாம் கப்பலில் ஏறுவதற்கு முன் கலோனியாவிலேயே முடித்து அனுப்பிவிட்டதால் டாக்ஸியைப் பிடித்து ஓட்டலுக்குச் சென்றேன். செக்-இன் செய்துவிட்டு நகரை சுற்றிப் பார்க்க ஏதேனும் சிட்டி டூர் சேவை இருக்கிறதா என ஓட்டலில் கேட்டதற்கு இரண்டு மணிக்கு நேரம் குறித்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரம் எதற்கு ஓட்டல் அறையில் வெட்டியாக இருக்க வேண்டுமென ரிசப்ஷனில் வைக்கப்பட்டிருந்த ஓசி மேப்பை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன்.

முதலில் கண்ணில் பட்டது ஓபெலிஸ்க் கோபுரம்(The Obelisk). உலகின் மிக அகலமான சாலையான ஜூலை 9 சாலையின்(Nueve de Julio) நடுவிலுள்ள 220 அடி கோபுரம். நான்கு வாரங்களில் கட்டிமுடிக்கப்பட்டதாக விக்கி சொல்கிறது. அந்த தெரு முனையில் இருந்த மெக்டொனால்ட்ஸில் 'Sin carne, sin pollo' என்று அரைகுறை ஸ்பானிஷில் பேசி ஒரு பர்கர் வாங்கி வயிற்றை நிரப்பிக்கொண்டு அந்த சாலையின் அடுத்த முனைக்கு நடக்க ஆரம்பித்தேன்.

கொர்ரியென்தெஸ் அவென்யூ(Corrientes Avenue) வழியாக ப்ளோரிடா தெருவை(Florida Street) அடைந்தேன். ப்ளோரிடா தெரு பொய்னொஸ் ஐரிஸ் நகரத்தின் பழமையான தெருக்களில் ஒன்று. நகரின் பழமையான கட்டிடங்கள் இங்குதான் உள்ளன. இப்போது முழுக்க முழுக்க வணிக வளாகங்களும் சிறு கடைகளும், தெருவோர இசை,ஓவியக் கலைஞர்களுமாக எந்த நேரமும் பரபரப்புடன் இருக்கிறது. ஒரு கலைஞர் மிகவும் இனிமையாக புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் நின்று கேட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ப்ளோரிடா தெருவில் இருந்து மே சதுக்கம்(Plaza de Mayo) நோக்கி நடந்தபோது மணி ஒன்றே கால் ஆகிவிட்டிருந்தது. இரண்டு மணிக்கு ஓட்டலில் இருக்க வேண்டுமென்பதால் ஓட்டல் நோக்கி நடந்தேன்.

சரியாக இரண்டு மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டலில் இருந்து ஒவ்வொரு ஓட்டலாக சென்று காத்திருந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்ப அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. முதல் நிறுத்தம் நான் விட்ட இடத்திலேயே. மே சதுக்கம்.

இங்கிருக்கும் காஸா ரோசாதா(Casa Rosada) என்றழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அர்ஜெண்டின அதிபரின் அலுவலகம் இருக்கிறது. அதன் அருகில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கதீட்ரல் தேவாலயமும் உள்ளது.

அன்று அங்கு ஊர்வலம் ஏதோ இருந்ததால் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அங்கிருந்த் கிளம்பிவிட்டோம். அங்கிருந்து நகரின் மையப்பகுதியில் புகழ் பெற்ற தெருக்களின் வழியாக தெற்குப்பகுதிக்கு வந்தோம்.அடுத்த நிறுத்தம் லா போகா(La Boca). போகா ஜூனியர்ஸ்(Boca Juniors) என்ற புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியின் குகை. டேங்கோ நடனக் கலைஞர்களும் ஓவியர்களும் பெருமளவில் வாழும் பகுதி.பெரும்பாலான வீடுகள் அருகிலுள்ள துறைமுகங்களில் இருந்து கப்பல்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட இரும்புத் தகரங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் பத்து குடும்பங்கள் வரை ஒன்றாக சேர்ந்து வசிப்பார்களாம். வீட்டுச் சுவர்களில் ஓவியங்களும் , பல நாட்டு தேசியக் கொடிகளும் வரையப்பட்டு வண்ணமயமாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு பலகணியிலும் சுண்ணாம்பினால் செய்த பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்.அங்குள்ள கமினிதோ(Caminito) என்ற தெரு புகழ்பெற்றது. டேங்கோ நடன அரங்கங்கள் நிறைந்த தெரு. கைவினைப் பொருட்களும் ஓவியங்களும் தெருவோரக் கடைகளில் விற்கப்படுகின்றன. நகரின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.கமினிதோ தெருவை படம் பிடித்துக் கொண்டிருக்கும்போது டேங்கோ நடனக் காஸ்ட்யூமில் குறுக்கே வந்த ஒரு பெண் மூன்று அர்ஜெண்டினோ பீசோ(1 அமெரிக்க டாலர்) கொடுத்தால் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றபடி வந்தார். நான் வேண்டாமென நன்றி சொல்லி நகர அவருடன் இருந்த மற்ற டேங்கோ கலைஞர்களிடம் ஸ்பானிஷில் ஏதோ நகைச்சுவை சொல்லி சிரித்தார். அவர்கள் சொன்னது புரியவில்லை என்று நான் கேட்டதும் அவர் விளக்க அதுவும் புரியாமல் மையமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.

அங்கிருந்து நகரின் வடக்குப் பகுதியிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும், தெருக்களையும், பூங்காக்களையும் காட்டிவிட்டு ஏழு மணிக்கு ஓட்டலில் இறக்கிவிட்டனர்.

அரை மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அன்றைய இரவு குறித்தும் ரிகொலெதா கல்லறைத் தோட்டம்(Recoleta Cemetery) குறித்தும் அடுத்த பதிவில்.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

சினிமாவில் ஆசிரியர்களாக நடிக்கும் கதாநாயகர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு அறிவுரை கூறும்போதோ கெட்ட மாணவனை அடித்து திருத்தும்போதோ விடும் டயலாக் 'நானும் ஒரு காலத்துல ஸ்டூடண்ட் தான்'. அதே மாதிரி நேத்து குழந்தைகள் தினம்னு ஞாபகம் வந்ததும் 'நானும் ஒரு காலத்துல குழந்தைதான்'ன்னு பஞ்ச் டயலாக் தோன்றியது. இப்பவும் மனசால குழந்தைதான் என்ற உண்மையை சொன்னா அடிக்க வருவீங்க. என்னை பெத்தவங்களே 'இன்னும் நீ திருந்தலையா?'ன்னு பாவமா பார்ப்பாங்க. அதனால அந்த உண்மையை மனசுக்குள்ள பொத்தி வச்சிகிட்டு இந்த பிஞ்சு மனசுல பதிஞ்ச பசுமரத்தாணிகள் சில:

* இரண்டாவது படிக்கும் போது எங்க சி செக்சனுக்கும் ஏ செக்சனுக்கும் லஞ்ச் பிரேக்ல சண்டை நடக்கும். எங்க க்ரூப்புக்கு ஞானசம்பந்தம்ன்ற குட்டையன் தான் லீடர். ரெண்டாவது படிக்கும்போது எல்லாருமே குட்டையா தானேடா இருப்பீங்கன்னு கேட்கக்கூடாது. அவன் எங்களை விட குட்டை. ரெண்டு செக்ஷனும் அடிக்கடி அடிச்சிப்போம். அதில்லாம சிமெண்ட் தரையில் ஸ்கேட்டிங் போட்டி வேற நடக்கும்.

* மூணாவது படிக்கும்போதே கிரவுண்ட் பக்கம் போனாலும் நாலாவது படிக்கும்போதுதான் எங்க தெரு அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கிட்டாங்க. அதுவும் ஜோக்க்ராகவோ, ஒப்புக்கு சப்பாணியாகவோதான்.

* ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின்போது தாத்தா இறந்துட்டார். அவர் இறந்த அடுத்த நாள் வீட்டுல இருக்கவங்க எல்லாம் வருத்தத்தோட வரவுசெலவு கணக்கு பார்த்திட்டிருக்கும்போது தெருவில விளையாடிட்டு குதிச்சு குதிச்சு ஓடி வந்து தாழ்வான வாசல்படியில மண்டையை உடைச்சுக்கிட்டேன். ரத்தம் வழியறதுகூட தெரியாம ஒன்னும் ஆகலைன்னு சொல்லிகிட்டே எழுந்தா எல்லாரும் ஓடி வந்து தலையை அழுத்திபிடிச்சுட்டு தூக்கிட்டு எங்க ஊர் பேமிலி டாக்டர்கிட்ட போனாங்க. அவர் கைல கிடைச்ச ஊசி,நூல்ல ஒரு ஏழெட்டு தையல் போட்டுவிட்டார். அடுத்தநாள் காஞ்சிபுரத்துக்கு வந்து நல்ல டாக்டர்கிட்ட காமிச்சா 'இந்த நூல்ல இது வரைக்கும் பாலியஸ்டர் துணு தைக்க பயன்படுத்திதான் பார்த்திருக்கேன். இதை வச்சு யாரு தையல் போட்டது?'ன்னு கேட்டார்.

* 'சாட் பூட் த்ரீ', 'இங்கி பிங்கி பாங்கி' மாதிரி 'பிஸ்கட் பிஸ்கட்'ட்டும் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கறேன். தெரியாத அப்பாவிகளுக்கு

பிஸ்கட் பிஸ்கட்
ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம்
கோ ஜாம்
என்ன கோ
டீ கோ
என்ன டீ
பன்ருட்டி

'பன்ருட்டி' சில சமயம் 'பொண்டாட்டி'யாகவும் மாறும்.

* நாங்க குடியிருந்த மேட்டுத் தெருதான் காஞ்சிபுரத்துல பட்டு சேலைக் கடைகள் எல்லாம் இருக்கும் தெரு. அந்த தெருவில சாயங்காலம் என்ன டிராபிக் இருந்தாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஐஸ்பாய் விளையாடலைனா எங்களுக்கெல்லாம் தூக்கம் வராது. எல்லா கடைகளுக்குள்ளேயும் போய் ஒளிந்துகொள்ள எங்களுக்கு சிறப்புரிமை உண்டு.

* ஐஸ்பாய் மாதிரியே கல்லா மண்ணா, நாடு புடிக்கற ஆட்டம் இதெல்லாமும் இப்போதெல்லாம் பசங்க விளையாடறதில்லையாமே. ரொம்ப வருத்தமா இருக்கு :(. பல்லாங்குழி, தாயம், நொண்டிக்கெல்லாம் இன்னும் மவுசு இருக்குன்னு நினைக்கறேன்.

* மொதமொத தெரு டீம்ல பெளலிங் கொடுத்தப்போ என் பெளலிங் ஸ்டைலை பார்த்துட்டு 'ஏண்டா மாவாட்டற மாதிரி கையை சுத்திட்டு ஓடி வர?'ன்னு கேட்ட அண்ணனால என் பெளலிங் செம்மைபட்டது.

* பக்கத்து வீட்டு வாசல்ல காகித பந்தில் கிரிக்கெட் விளையாடும்போது ஏறி வந்து ஷாட் அடிக்க முயற்சி செய்து தாழ்வாரத்துல உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் மண்டையை பேட்டால் உடைத்திருக்கிறேன். பாட்டிக்கு 12 தையல். எங்கப்பா எனக்கு கொடுத்த அடி பலம்னாலும் தையல் போடற அளவு சீரியஸ் ஆகலை.

* ஒரு கிரிக்கெட் மேட்சில கைக்கு வந்த கேட்சை விரல் வழியாக கப்பைவிட ஸ்டிச் பால் சுண்டுவிரலுக்கும் மோதிர விரலுக்குமிடையிலுள்ள தசையை கிழித்துவிட்டது.ஆழமான காயம். வீட்டிற்கு சென்று கமுக்கமாக உட்கார்ந்திருக்கும்போது அம்மா சமைக்க ஆரம்பிச்சாங்க. கேரட் சீவித்தர்றேன்னு சீவல்மணையை வாங்கி இரண்டு நிமிஷத்தில் சீவல் மணை கையைக் கிழிச்சிடுச்சுன்னு ஒரு ஆக்ட் விட்டு அந்த காயத்தை காண்பித்தேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் கட்டு போட்டு வெளியே வந்ததும் அம்மா 'ஒழுங்கா மரியாதையா எப்படி அடிபட்டுச்சுன்னு சொல்லு. விளையாடும்போதா இல்ல எங்கயாவது விழுந்துவாறினயா??' என்று கேட்டதும் கையெல்லாம் ரத்தம் முகமெல்லாம் அசடு. அன்றிலிருந்து அம்மாவிடம் பொய் சொல்வதில்லை. அப்பாவிடம் மட்டும் தான்.

* பத்தாவது முடிச்சு டிசி வாங்கறதுக்கு எங்கப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன போது பிரின்சிபால் நல்லா போட்டு குடுத்துட்டார். 'பையன் நல்லாத்தான் படிக்கறான். ஆனா யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். எதிர்த்து எதிர்த்து பேசறான்'னு எங்கப்பா கிட்ட பத்த வச்சிட்டார். இன்னைக்கும் அப்பாகிட்ட ஏதாவது எதிர்த்து பேசினா 'அப்பவே உங்க பிரின்சிபால் சொன்னாரேடா..நீ திமிர் பிடிச்சவன்னு' என என்னை ஆஃப் செய்துவிடுவார்.

'என்னடா சின்னபுள்ளத்தனமா வெட்டிக்கதை சொல்லிட்டிருக்க'ன்னு யாராவது வந்து காதைத் திருகறதுக்கு முன்னாடி எல்லா குழந்தைகளுக்கும், மனசால குழந்தைகளா இருக்கற மத்தவங்களுக்கும் பிலேட்டட் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சொல்லி அப்பீட் ஆகறேன் :)தாமோதரனின் கடிதம்

திருவாளர் திருடன் அவர்களுக்கு,

சென்ற வாரம் சனிக்கிழமை ஜீவா நகரில் தாங்கள் கொள்ளையடித்த வீட்டின் உரிமையாளன் தாமோதரன் எழுதிக் கொள்வது, எப்படியும் இந்த கடிதம் உங்களைச் சேரப் போவதில்லை. ஆனாலும் என் மனதிலுள்ள சோகங்களை எல்லாம் யாரிடமாவது கொட்ட வேண்டும். என் மனைவி ஏற்கனவே பேயடித்தது .போல் இருக்கிறாள். என்னிடம் சண்டை பிடிப்பதற்கு அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. அவளை எதிர்த்துப் பேசி சலித்துவிட்டது. எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த தெம்பு இப்போது குறைந்துபோய்த்தான் இருக்கிறது.

நீங்கள் எங்கள் வீட்டில் திருட வந்த அன்று குலதெய்வத்திற்கு பூஜை செய்ய சொந்த ஊருக்குச் சென்றிருந்தோம். அன்றே கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் செலவாகிவிட்டது. ஆனால் என்ன செய்வது ஏற்கனவே செய்வதாக ஒத்துக்கொண்டாகிவிட்டது. நானும் தட்டிக்கழிக்க முயன்றேன்.முடியவில்லை.

இந்த செலவு போதாதென்று பூஜையின் போது அம்மாவுடன் வேறு சண்டை போட்டாகிவிட்டது. என்னுடன் இங்கு வந்துவிடு என்று சொன்னாலும் கேட்பதில்லை. கட்டை சாயும் வரை ஊரிலேயே இருப்பதாக சொல்லிக்கொண்டு தனியாக இருக்கிறார். அவருக்கே மாதாமாதம் மருந்து, மளிகை சாமான் என செலவுக்குத் தனியாக பணம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இது போதாதென்று இப்போது டிவி வேண்டுமாம். இத்தனை நாள் பக்கத்து வீட்டு அத்தை வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது வயதான காலத்தில் தெருவில் இருக்கும் அனைவருடனும் சண்டையாம். அத்தையுடனும் போன வாரம் சண்டை போட்டிருக்கிறார். திடீரென்று டிவி வேண்டுமென்று கேட்டால் நான் எங்கு போவது? இப்போது தான் இந்த கோயில் செலவே நான்காயிரம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு வாங்கிக் கொடுப்பதாக இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறேன்.

நான் ஏன் வாங்கித் தர வேண்டும்? எல்லா சொத்தையும் தம்பி பெயரில் எழுதி வைத்தார்களே அவனிடம் கேட்க வேண்டியது தானே. கூட இருந்தே எல்லா பணத்தையும் திருடியவன் தானே அவன். எனக்கென என்ன செய்திருக்கிறார்கள்? ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்போது பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்குக்கூட ஒவ்வொரு முறையும் ஊருக்குச் சென்று அப்பாவுடன் சண்டை போட வேண்டும். படித்து வேலை தேடிக்கொண்டிருந்தபோதும் என்ன உதவி செய்துவிட்டார்கள்? நானாக இந்த வேலை தேடி, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.

என் தம்பி அவர்களுடனேயே இருந்து எல்லா பணத்தையும் அடித்துவிட்டான். அப்பா நோய்வாய் பட்டிருந்தபோது மருத்துவ செலவுகள் பார்க்கிறேன் என்று ஏகத்துக்கும் அவன் பொது பணத்தை சுருட்டியது தெரியாதா? என் அப்பா இன்ஷ்யூரன்ஸ் கட்டியதாக ஞாபகம். ஆனால் இப்போது அதையெல்லாம் அவனிடம் கேட்கமுடியுமா?

சொத்து பிரிக்கும்போதும் அவனுக்கு வீட்டை எழுதி வைத்துவிட்டு எனக்கு காலி நிலத்தைத் தானே கொடுத்தார்கள். அவனுக்கு நல்ல தண்ணீரோடு எட்டு ஏக்கர், எனக்கு பாறை கிணறுடன் மூன்று ஏக்கர். கேட்டால் நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேனாம். நானாக கஷ்டப்பட்டு இந்த நிலையில் இருக்கிறேன். அவர்களா உதவினார்கள்? இவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்துதான் சொத்து பிரிக்கும்போது என் மாமனாரையும் சகலையையும் கூட்டிச் சென்றேன். அவர்கள் இவர்களுக்கு மேல். நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டு எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். பெற்றவர்களும் சரியில்லை. இவர்களும் சரியில்லை.

இவர்கள் மட்டும் எனக்கு என்ன செய்திருக்கிறார்கள்? கல்யாணத்தின்போது 20 சவரன் போடுவதாக சொல்லிவிட்டு 15 சவரன் தான் போட்டார்கள். ஆனால் இவளின் தங்கைக்கு 30 சவரன் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் என் சகலைக்கு ரைஸ் மில் வைக்க பணம் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு பண உதவி செய்வது எனக்குத் தெரியாதென நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவளுக்கு நாலு தம்பிகள், அவர்களுக்கு கல்யாணம், குழந்தை பிறப்பது, காது குத்துவது என எத்தனை செலவுகள். இவற்றுக்கெல்லாம் கணக்கு போட்டால் நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். ஆனால் எனக்கென இவர்கள் எனன் செய்தார்கள்?

இதையெல்லாம் கேட்டால் என் மனைவி என்னிடம் சண்டை போடுவாள். இந்த வீட்டைக் கட்ட 50000 ரூபாய் கொடுத்தார்களே எனக் கேட்பாள். பெற்ற மகளுக்கு இது கூட கொடுக்கக்கூடாதா?? நான் கூடத்தான் என் மச்சான் 5000 கடனாக வாங்கியதை விட்டு வைத்திருக்கிறேன்.

இவர்கள் தொல்லைதான் இப்படியென்றால் அலுவலகத்தில் இதற்கு மேல் பிரச்சனை. நான் லஞ்சம் எதுவும் வாங்காதபோதே என் மேல் மொட்டை கடுதாசி எழுதுகிறார்கள். இதற்கு முன்னாவது பரவாயில்லை. கொஞ்சம் வருமானம் வரும் சீட். இப்போது அதுவும் இல்லை. சீட்டை மாற்றி பழி வாங்கிவிட்டார்கள்.

எல்லாரும் பொறாமை பிடித்தவர்க்களாக இருக்கிறார்கள். எனக்கென யாரும் எதுவும் செய்ததில்லை. எல்லாருக்கும் நான் தான் அழுதுகொண்டிருக்கிறேன். நான் எல்லோரிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதை என் மனைவி குறையாகச் சொல்கிறாள். உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் உதவி எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?

இந்த நிலையில் என் போதாத நேரம் நீங்கள் என் வீட்டைத் தேர்ந்தெடுத்து திருடியிருக்கிறீர்கள். 20000 ரூபாய் ரொக்கம், 22 சவரன் நகை. போலீஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாகிவிட்டது. ஆனால் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. சும்மா செய்துவிடுவார்களா என்ன? அவர்களும் பணம் கறக்கப் பார்க்கிறார்கள்.

இப்போதிருக்கும் என் மனநிலையில் பாதி பணம் திரும்பக் கிடைத்தாலே போதும் என்றிருக்கிறது. உங்களை சந்திக்க முடிந்தால் பாதியை நீங்கள் வைத்துக்கொண்டு பாதி தந்தால் சரி என்று கூட ஒத்துக்கொண்டுவிடுவேன்.

இதுவரையில் நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரும் யாருக்கும் எதுவும் செய்துவிடுவதில்லை. இப்படி புலம்பியபடியே என் வாழ்க்கை முடியப்போகிறது. எனக்கு யாரும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. விட்டுத் தள்ளுங்கள். என் மனைவி சாப்பிட அழைக்கிறாள். உப்புசப்பில்லாமல் எதையாவது சமைத்துவைத்திருப்பாள். சண்டையில்லாமல் சாப்பிட்டு உறங்கச் செல்ல முயல்கிறேன்.

வணக்கத்துடன்,
தாமோதரன்.சினிமா! சினிமா!! சினிமா!!! - 2

சினிமா! சினிமா!! சினிமா!!! - 1

சினிமா வாய்ப்பு தேடிய, தேடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் சிலர் கல்லூரியில் படிக்கும் பொழுதிலிருந்தே வாய்ப்பு தேடி வருகிறார்கள். சில நண்பர்கள் படிப்பு முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்தபின் சினிமாத்துறையால், அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தவர்கள். சில நண்பர்கள் ஓரிரு மாதங்களில் அத்துறையின் நிதர்சனத்தை உணர்ந்து வேறு வேலையில் சேர்ந்தார்கள். சிலரின் நம்பிக்கை மட்டும் அசைக்க முடியாததாக இருக்கிறது.


*******************************************

கோகுலகிருஷ்ணன். சொந்த ஊர் போடி. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் கணிப்பொறியில் பட்டயப் படிப்பு. நாங்கள் வைத்த பெயர் 'கொம்பு'. ஆரம்பத்தில் அவரின் சினிமா ஆசையைப் பல முறை கிண்டலடித்திருக்க்கிறோம். ஆனால் காலப்போக்கில் அவர் காட்டிய உத்வேகமும் அவர் பட்ட கஷ்டங்களும் எங்கள் மனதை மாற்றின. அவர் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.

படிப்பு முடிந்து கணிணித்துறையில் வேலை தேட சென்னைக்கு வந்தவர் சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். செலவுக்காக வீட்டிலிருந்து வாங்கும் பணம் அனைத்தையும் புகைப்படம் எடுக்கவும் ஆல்பம் தயார் செய்யவும் செலவு செய்துவிடுவார். அறை நண்பர்களுடனும் அவ்வளவாக பேச மாட்டார். அவருக்கு அறிவுரை சொல்லும் தோரணையில் பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுவார்.

ஆரம்பத்தில் சிறு வேடங்கள் கிடைத்தபோது அவற்றை நிராகரித்தவர் நாட்கள் செல்லச் செல்ல சிறுசிறு துண்டு வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தலை காட்டினார்.

இரண்டு வருடங்கள் முனைப்பாக இருந்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வாய்ப்பும் வராமல் பின்னர் நண்பர்களின் அறிவுறுத்தலால் சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தரவு உள்ளீட்டுத் (Data Entry) துறையில் தற்காலிகமாக வேலை செய்தபடி சினிமா வாய்ப்புகள் தேடினார். அடுத்த ஆறு மாதத்தில் உண்மை நிலையை உணர்ந்து சினிமாவைத் துறந்து இப்போது அதே வங்கியில் நிரந்தர பணியில் சேர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

*******************************************

கோகுலகிருஷணனின் அறை நண்பர் சங்கர். இவரும் மதுரை பாலிடெக்னிக்கில் படித்தவர் தான். சென்னையில் ஒரு சிறு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவரது கனவு திரைப்பட இயக்குனராவது.

பொதுவாக புதிதாக ரிலீசாகும் படங்களை முதல் நாளிலோ முதல் வாரத்திலோ உதயம், கமலா,நேஷனல் அல்லது கருமாரி காம்ப்ளெக்ஸில் பார்த்துவிடுவது வழக்கம். இவருடன் படம் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள், எப்படி எடுக்கலாம் என சொல்லிக் கொண்டிருப்பார். அந்த ஏரியாவில் எந்த படப்பிடிப்பு நடந்தாலும் தவறாமல் சென்றுவிடுவார்.

தொழில்நுட்பம் குறித்து பெரிதாகத் தெரியாது எனினும் இயக்குனராகும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர். திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசையிருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக கைவிட்டவர். இவருக்கு பிடித்த இயக்குனர் பாலா. அதற்கு அவர் சொல்லும் காரணம் இயக்குனர் பாலா மட்டுமே திரைப்படக் கல்லூரியில் பயிலாதவர்களையும் உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வாராம். நண்பர் வேலை செய்துகொண்டே இயக்குனராகும் முயற்சியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

*******************************************

வடபழனி செந்தில் ஆண்டவர் கோயில் தெருவில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் அதற்கு முன்னர் நடிகர் பாலா சிங் தங்கியிருந்தாராம். வேறொரு வீட்டிற்கு மாறிப் போனதில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் மீண்டும் அங்கு குடி வர கேட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் எங்களிடம் சொன்னார். திரைப்படத்துறையில் உள்ளவர்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.ச்சும்மா...ச்சும்மா!!

ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா!!?? ;))பாசக்கார பய!
இனமடா நீ!தலயின் சிஷ்யகேடி!
இதை மெயில்ல அனுப்பின புண்ணியவான் எங்க இருந்தாலும் நல்லாயிரு..நல்லாவே இரு! ;)