உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு

உருகுவே செல்வதற்கு முன் தெரிந்த இரண்டே ஸ்பானிஷ் வார்த்தைகள் 'Hola', 'Adios'. அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ஆரம்ப நாட்களில் ஸ்பானிய மொழி தெரியாமல் சிறிது திண்டாடினோம். பின்னர் எங்கள் அணியில் இருந்த உள்ளூர் நண்பர்கள் உதவியுடனும் இணையத்திலும் ஸ்பானிஷ் கற்க ஆரம்பித்தேன். காலையில் வந்தவுடன் நலம் விசாரித்தலில் ஆரம்பித்து அலுவலில் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்பானிஷில் சொல்லக் கற்றுத்தருவார்கள். இதுபோல் தினமும் வேலையின் போக்கிலேயே அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எளிதாக இருந்தது. எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.

ஆரம்பத்தில் சமையல் செய்ய ஒரு சட்டி வாங்கச் சென்று ஆங்கிலம் தெரியாத கடைக்காரரிடம் ஸ்பானிஷில் கேட்கத் தெரியாமல், சட்டியைக் குறிக்க நான் செய்த அபிநயங்கள் அவருக்குப் புரியாமல் சட்டியே வாங்காமல் சாப்பாட்டுக்கு அல்லாடிய நான் பின்னர் ஓரளவு ஸ்பானிஷ் பேச கற்றுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று வர இயன்றது அலுவலக நண்பர்களால் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.

நான் அங்கு சென்றபோது எங்கள் அணியில் மொத்தம் பதினேழு இந்தியர்களே இருந்தனர். அவர்களில் ஸ்பானிஷ் கற்க ஆர்வமிருப்பவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணே மாலை வேளைகளில் பாடம் எடுத்தார். பணிகளுக்கிடையில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்த முடியாததால் வகுப்புகளைத் தொடர முடியாமல் போனது. அடுத்த நான்கைந்து மாதங்களில் எங்கள் அலுவலகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது ஆனது. அப்போது பத்திலிருந்து பதினைந்து பேர் ஸ்பானிஷ் கற்க ஆர்வம் காட்டியதால் மனிதவள அலுவலகத்தில் இருந்து சிறப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்த முன்வந்தனர்.

மனிதவள அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் படித்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்களுக்கு ஸ்பானிஷ் கற்றுத்தர முன்வந்தார். அவர் பெயர் பியத்ரிஸ் மெலொ (Beatriz Melo). வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் வீதம் வகுப்புகள் ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்களுக்காக அடிப்படையில் இருந்து வகுப்புகளை ஆரம்பித்தார். நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.

பியத்ரிஸ் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் (பெயர் மறந்துவிட்டது) ஸ்பானிஷ் பேராசியராகப் பணியாற்றியவர். சில வருடங்கள் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு உருகுவே திரும்பியவர் அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார். தலைநகர் மாண்டிவிடியோவில் வெளியே சென்றால் ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவே. வேறு ஊர்களுக்குச் சென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாகவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது(இத்தகைய பள்ளிகள் பிரிட்டிஷ், இத்தாலி நாடுகளைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன). ஆனால் அரசுப் பள்ளிகளில் சமீபமாக சில ஆண்டுகளாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பதால் ஆங்கிலம் அறியாமலிருப்பது இயல்பென்று அறிய முடிந்தது. பியத்ரிஸ் ஒவ்வொரு முறை உருகுவேயைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்வைப்பார்.பியத்ரிஸ் எமிலி டிக்கன்ஸன்(Emily Dickensen) என்ற பள்ளியில் பணிபுரிந்து வந்தார். மாணவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடத்த விரும்பினார். மாணவர்கள் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்வதுடன் அவர்கள் ஆங்கிலம் கற்கவும் உதவுமென்றும் மேலும் நாங்கள் கற்ற ஸ்பானிஷை மாணவர்களிடம் பேசிப் பழக வாய்ப்பாகவும் இருக்குமென சந்திப்பை ஏற்பாடு செய்தார். நாங்கள் ஆறு பேர் அந்த பள்ளிக்குச் சென்றபோது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருந்தனர். கைதட்டி ஆரவாரமாக எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனோம். எங்களை அறிமுகம் செய்துவைத்த பியத்ரிஸ் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தலா பத்து மாணவர்களாக குழுக்களாகப் பிரிக்க அவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம்.


அறிமுகத்திற்குப் பிறகு அரைகுறை ஸ்பானிஷிலேயே சிறிது நேரம் பேசினோம். அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை. மெதுவாக பேசினால் சில வார்த்தைகளை அறிந்து என்ன கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஸ்பானிய உச்சரிப்பாலும் வார்த்தை பிரயோகங்களாலும் சில காமெடிகள் நடந்ததால் ஆங்கிலத்திற்கு மாறினோம். அவர்கள் இந்தியாவைக் குறித்தும் நம் வாழ்வுமுறை குறித்தும் அவர்களுக்கு இருந்த கேள்விகளைக் கேட்டனர். சிலர் ஏற்கனவே இந்தியா குறித்த தகவல்களை அறிந்திருந்தார்கள். வெளிநாட்டுத் தூதவராக வேண்டும், நிரலாளராக வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒரு கனவிருந்தது.

அந்த பள்ளி மாணவர்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வி நிலை குறித்த கவலை இருந்தது. நம் ஊரைப் போலவே தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது. அம்மாணவர்களில் ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பொருளாதார நிலையைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது. ஏற்கனவே உருகுவேயின் கிராமப்புறங்களையும் புறநகர் பகுதிகளையும் பார்த்து உருகுவேயில் அத்தகைய பாகுபாடு இருப்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அந்த சிறுவனின் கேள்வி அதிர்ச்சியளித்தது. அவர்களிடம் அந்த பாகுபாடுகள் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிலையிலிருந்து அவர்கள் போராடி மேலேறி வருவதுதான் சாதனை என்று ஊக்கமளிக்கும் வண்ணம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

பிறகு என்னைப் பற்றிய கேள்விகள் கேட்டார்கள். உருகுவேயில் எப்படி பொழுதுபோக்குகின்றேன், எங்கெல்லாம் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பேசியபடி சிறிது நேரம் உரையாடினோம். உருகுவேயில் நான் கேள்விப்பட்டிராத சில இடங்கள் குறித்தும் விழாக்கள் குறித்தும் தகவல்கள் தந்தார்கள். உருகுவேயில் சிறப்பான Dulce de Leche என்னும் இனிப்பும் கேக்குகளும் சாப்பிட்டபடியே இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக உரையாடினோம். ஒரு பிற்பகற்பொழுதில் பல சுகமான நினைவுகளைத் தந்து இனிமையானதொரு அனுபவமாக அமைந்த சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.

பியத்ரிஸ் இப்போதும் மடல் தொடர்பில் இருக்கிறார். அவ்வப்போது உருகுவே குறித்த செய்திகளையும் பள்ளி மாணவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார். அவரின் மடல் வரும் நாட்களில் இவ்வாறான சில இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி சில மணி நேரங்கள் கழிகின்றன.

பி.கு: இந்த சந்திப்பு மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து இதுவே நீண்டுவிட்டது. ஆகவே மற்றவை பிறிதொரு பதிவில்.பதிவர் பட்டறை @ கோலிவுட்

பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.

விஜய்: அண்ணா நாம அடிச்சா எல்லாமே கில்லிங்கண்ணா..இப்ப பதிவு எழுத வந்தாலும் அதுமாதிரி கில்லி பறக்கனும்ங்கண்ணா

சந்தானம்: குருவின்னு பறவை பேரை வெச்சப்பிறகே ஒன்னும் பறக்கல..இதுல என்னத்த கில்லி மாதிரி பறக்கறது? சரி இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கீங்க? என்னா மேட்டரு?

விஜய்: ண்ணா, அமிதாப் பச்சன் பதிவெழுத ஆரம்பிச்சு ஆயிரக்கணக்குல பின்னூட்டம் வாங்கறார்ண்ணா..அமீர்கான் ஷாருக்கான் பேரை நாய்க்கு வச்சு வகைவகையா கலாய்க்கறாருன்னா..அது மாதிரியே நாங்களும் ப்லாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்ண்ணா..நான் ஒருவாட்டி முடிவெடுத்துட்டா

சந்தானம்: நீங்க மாறவே மாட்டீங்கன்னு தெரியும்..அது என்ன கணக்கு அமீர்கானைப் பாத்துட்டு ப்லாகு? இங்க அஜீத்துக்கு நீங்க வளக்கற குருவி பேரை வச்சி காமெடி பண்ணவா? படத்துலதான் உங்க பஞ்ச் டயலாக்கு ,அடுத்தவனை அசிங்கப்படுத்தற தொல்லையெல்லாம் தாங்கலைனா இங்கயும் வந்து ஆரம்பிக்கனுமா? ஏற்கனவே அங்க கூட்டம் அதிகம்டா..நீங்களும் போனா க்ரவுடு அதிகமாயிரும்

விஜய்: எங்கப்பா இன்னொரு ஐடியாவும் கொடுத்திருக்காருங்கண்ணா. இப்ப குருவிக்கு பதிவுல தான் ரொம்ப நெகடிவ் விமர்சனமாங்கண்ணா. நான், எங்கப்பா, எங்கம்மா, தரணி, திரிஷா, விவேக்னு எல்லாருக்கும் பதிவு எழுத சொல்லித்தர போறேங்க்ண்ணா..ஆளாளுக்கு குருவியை புகழ்ந்து எழுதி படத்தை ஹிட்டாக்குவாங்கண்ணா

சந்தானம்: படத்தை ஓடவைக்க இத்தன நாளா இவங்களயெல்லாம் கூப்பிட்டு டிவில தான் பில்டப்ப கொடுத்தீங்க இப்ப இங்கயுமாடா?? டைரக்டர் சார் நீங்க எதுக்கு பதிவெழுத வந்தீங்க?

கே.எஸ்.ரவிகுமார்: ரெண்டு வருஷமா கமல் சாரோட தசாவதாரம் படமெடுத்து எனக்கு டைரக்ஷனே மறந்து போச்சு. என்னை கேமரா பக்கமே வரவிடல. டைரக்டருனு பின்னாடி எழுதியிருக்கற ப்ளாஸ்டிக் சார்ல என்னை ஓரமா உக்காற வச்சு வேடிக்கை பார்க்க விட்டுட்டாரு கமல் சாரு..பேருக்கு தான் டைரக்டர்..இப்ப எனக்கு சுத்தமா டைரக்ஷன் மறந்து போச்சு..என்னை ரிஃப்ரெஷ் பண்ண கண்டிப்பா எதாவது செய்யனும்

சந்தானம்: ஒரு பஞ்சாயத்து சீனோ ரேப் சீனோ இல்லாம படமெடுக்க சொன்னா உடனே டைரக்ஷனே மறந்து போற அளவுக்கு ஆயிட்டீங்களே சார்..கேட்கற எனக்கே ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு

கே.எஸ்.ரவிகுமார்: அதனால தான் சவுத்துல ஒரு வில்லேஜ்ல

சந்தானம்: நிறுத்துங்க அதென்ன படமெடுக்கறவன்லாம் சவுத்துல ஒரு வில்லேஜுன்றீங்க..அப்படியில்லனா நார்த் மெட்ராஸுங்கறீங்க..ஏன் உங்களுக்கெல்லாம் செண்டர் தமிழ்நாட்டுல வேற ஊரே கிடைக்காதா

கே.எஸ்.ரவிகுமார்: அதுதான்யா ட்ரெண்டு..என்னை சொல்ல விடு..சவுத்துல ஒரு வில்லேஜ்ல ஒரு ஃபேமிலி ஸ்டோரி எடுக்கனும்..அதுக்கு முன்ன பதிவெழுதிப் பாக்கனும். பதிவுல நெறய இங்கிலீஷ் படம் பத்தி எழுதுவாங்களாமே அதுல எதுனா உருவ முடியுமான்னு பாக்கனும்

சந்தானம்: 'காக்க காக்க' கவுதம் மேனன் எல்லா படத்தையும் உருவி பத்து படத்துக்கு கதை ரெடியா வச்சிருக்காரு..நீங்க லேட்டு...ஒன்னு பண்ணுங்க லேட்டஸ்ட் ட்ரெண்டு கேள்வி பதில் எழுதறதுதான்..மக்களை கேள்வி கேட்க சொல்லலாம்..அப்படி யாரும் கேக்கலைனா கொண்டித்தோப்பு குமார், கூடுவாஞ்சேரி சேகர்ன்னு யார் பேராவது போட்டு கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் எழுதலாம்


என்றபடி அருகில் ஜெயம் ரவியைப் பார்க்கிறார்.

சந்தானம்: ஜெராக்ஸ் ரவி..ச்சே ஜெயம் ரவி நீங்க இங்க என்ன பண்றீங்க

ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கு வாழ்க்கைல ரெண்டு விஷயம் சொந்தமா பண்ணனும்னு ஆசை. ஒன்னு வளர்ந்து பெரியவனாவறது. இன்னைக்கு வரைக்கும் நானே கஷ்டபட்டு இந்தளவு வளர்ந்துட்டேன். இன்னொன்னு நானே ப்லாகு எழுதறது. அதுக்கு தான் ரெடியாயிட்டிருக்கேன்.

சந்தானம்: ஆறரை அடிக்கு வளர்ந்ததுகூட சாதனையா..அது சரி கையில எதுக்கு 'முப்பது நாளில் தெலுங்கு' புக்கை வச்சு மண்டையை ஆட்டிட்டிருக்க? தெலுங்குல ப்லாகு எழுதப்போறயா?

ஜெயம் ரவி: ச்சேச்சே தெலுங்குல இருக்க ப்லாகெல்லாம் படிச்சு அதை தமிழ்ல எழுதனும்ல அதுக்காகத்தான் தெலுங்கு கத்துக்கறேன்

சந்தானம்: இங்க பாத்தியா அழுவாங்கோலி ஆட்டம் ஆடறத..சொந்தமா யோசிச்சு பதிவெழுத சொன்னா தெலுங்குல இருந்து ரீமேக்காம்..என்னமோ பண்ணு அதையும் படிக்கனும்னு ஜனங்க தலைல எழுதியிருக்கு

அப்போது கணீர் குரலில் கவிதை சொல்லியபடி வைரமுத்து வருகிறார்

வைரமுத்து: இளைஞனே கேள்!
கீபோர்டை ஆணியாக்கி
கணிணியின் வெள்ளைத்திரையைப்
பனை ஓலையாக்கி
கவி செதுக்கிடு!
நீ எழுத ஆரம்பித்தால்
பதிவுலகம் உன்னைக் கொஞ்சும்!
தமிழுலகம் நிறுத்தவிடக் கெஞ்சும்!
காலையில் கரைந்து போகும்
மின்மினியாய் இருக்காதே!
உச்சிவானில் மின்னும் நட்சத்திரமாய்
உயரத்தில் இரு!
சீற்றம் கொள்!
சிரி!
சண்டை போடு!
சர்ச்சையில் இறங்கு!
கும்மியடி!
பின்னூட்டம் போட்டு வாங்கு!!
இந்தக் கலை உன் கைக்குள் வரும்!
இதுதான் பதிவுகளின் தாரக மந்திரம்!


சந்தானம்: வரும்போதே மூச்சுவிடாம பேசிட்டு வரீங்களே சார்..ஏற்கனவே பதிவெழுதின அனுபவம் இருக்கோ

வைரமுத்து: இணையத்தில் எழுதியதில்லை! தமிழரின் இதயத்தில் எழுதியிருக்கிறேன்

சந்தானம்: இந்த ரைமிங்கா பேசறத மட்டும் விடாதீங்க. இணையத்துல ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்காங்க! கவுஜ எழுத கம்ப்யூட்டர் பிரோக்ராம்லாம் எழுதிவச்சிருக்காங்க! அங்க உங்களால தாக்குபுடிக்க முடியுமா சார்?

வைரமுத்து: காய்ந்துபோன ஏரிக்கரையில் ஊர்ந்து போகும் நண்டால் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியுமா? தீய்ந்து போன தோசையை தினம் தின்று ஓய்ந்து போயிருக்கும் ரங்கமணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா? சிக்னலுக்கு சிக்னல் வசூல்ராஜாக்கள் தொல்லையிலிருந்து கியரை முறுக்கி சீறிப் பாயும் சிங்கங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? இவர்களால் முடியுமென்றால் என்னாலும் முடியும்

சந்தானம்: இப்ப என்னா கேட்டுட்டேன்னு இவ்ளோ ஃபீலாவறீங்கன்னு தான் புரியல..என்னவோ சொல்றீங்க அதுவும் என்னனு புரியல...பதிவெழுதனும்னு முடிவு பண்ணிட்டபிறகு என்ன பண்றது..நல்லாயிருந்தா சரி

சிம்பு: எனக்கு எதிரிங்க நிறைய பேர் சார். சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும்போதே நோட்டுல கதை எழுதுவேன். அதைப்பாத்துட்டு பாராட்டாம மிஸ் அடிப்பாங்க.

சந்தானம்: கிளாச கவனிக்காம கதை எழுதுனா மிஸ் அடிக்காம உனக்கு நாலு ஃபிகர் வந்து கிஸ்ஸா அடிப்பாங்க?

சிம்பு: புதுசா நான் பதிவெழுதிதான் பேர்வாங்கனும்னு இல்லை. லிட்டில் சூப்பர் ஸ்டார்னு அன்னைக்கே மக்கள் ஏத்துக்கிட்டாங்க..இப்ப பதிவும் எழுதி அங்கயும் ஸ்டார் ஆவேன் சார். அந்த நம்பிக்கையிருக்கு சார்

சந்தானம்: ஏன்டா...ஏதோ மக்கள் உனக்கு வாக்கு போட்டு ஏத்துக்கிட்டா மாதிரி பேசற..உங்கப்பாவே உன் படத்தைப் போட்டு அதை சுத்தி சுத்தி லிட்டில் சூப்பர்ஸ்டார்னு எழுதி வச்சா உடனே நீ பெரிய ஆள் ஆயிடுவியா? டேய் பதிவுலகத்துல சூப்பர்ஸ்டார் ஆவனும்னா நல்லா மேட்டரோட எழுதனும்..நீ மேட்டரா எழுதுவன்னு தெரியும் ஆனா மேட்டரோட எழுதுவியா?

சிம்பு: என் காதல் கதைகளை ஒவ்வொன்னா எழுதிட்டு வந்தாலே ஆறு வருஷத்துக்கு ஆற அமர எழுதலாம் சார். அத்தனை அடிபட்டிருக்கேன். ஆனா அத்தனையும் தாண்டி வருவேன்.

சந்தானம்: தாண்டி வரமுடியாது..ஒரு எட்டடி குழி தோண்டிட்டு வேணா வரலாம்..சார் தயவு செஞ்சு அப்படியே ரொமான்ஸ் மூடுக்கு போயிடாதீங்க..ஏற்கனவே எங்களால தாங்க முடியல..

சிம்பு:ஏற்கனவே இண்டர்நெட்டுல இறங்கி ஆர்குட், சாட்ன்னு பல பொண்ணுங்க கிட்ட பேசிட்டிருக்கேன்..இப்ப முடிவு பண்ணிட்டேன். என் மனசைத் தொறக்க ஒரு இடம் வேணும். அதுக்கு பதிவு தான் ஒரே வழி

சந்தானம்: கிழிஞ்சுது இனி எத்தன பேரு சிக்கி சீரழிய போறாங்களோ..அப்படியே உங்க ஃப்ரெண்டு எஸ்.ஜே. சூரியாவையும் கூட்டிட்டு வந்துட்டா சேர்ந்து கும்மியடிக்கலாம்...'ரெண்டு' போட்டிக்கு டபுள் மீனிங்கல கூட எதுனா எழுதிபாக்கலாம்!

சிம்பு: எழுதறோம் சார்! சிம்புன்னா யாருன்னு காட்றோம்! எனக்கு எதிரா நடவடிக்கைல இருக்கறவங்களைத் தூக்கறோம் சார்.

சந்தானம்: மொதல்ல என் தோள்ல இருந்து உங்க கையத் தூக்குங்க..அப்படியே பதிவுக்கு 'சிம்புவின் சொம்பு'ன்னு பேரு வைங்க! கூட்டம் குவியும்

எனும்போதே பேரரசு 'ஜிங்கிலி ஜாக்கு'பலூன் பரத்து' 'பூனை பூபதி' 'உலக்கை உலகநாதன்' என்று கத்தியபடியே வருகிறார்

சந்தானம்: என்ன சார் நீங்களும் பதிவெழுத போறீங்களா?

பேரரசு: அட எப்படி கண்டுபுடிச்சீங்க?

சந்தானம்: நீ பதிவெழுதறன்னு கண்டுபுடிக்க இதுக்காக நாசாலருந்து சைண்டிஸ்டா வருவாங்க..சரி இன்னா மேட்டரு ஏதோ பேரெல்லாம் சொல்லினு வர?

பேரரசு: அதெல்லாம் வலைல நான் எழுத போற காரெக்டர்ஸ் பேரு

சந்தானம்: காரெக்டர்ஸ் பேரு ஏன் காறி துப்பற பேராட்டம் இருக்கு? சரி அது உன் கஷ்டம் படிக்கறவங்க கஷ்டம்..அப்படி என்னதான் எழுதப்போற ப்லாகுல?

பேரரசு: வேறென்ன செண்டிமெண்ட் கதைதான்..ஒரு ஹீரோ..அவன் கம்பெனில ஓசில நெட்டு கிடைக்குதேன்னு ப்லாகு ஆரம்பிக்கிறான். ப்லாகு மூலமாவே ஒரு ஃபிகரையும் புடிக்கறான். அப்படியே லவ்வு டெவலப் ஆகுது..அந்நேரம் பார்த்து ஹீரோவோட அக்கா வேலைபாக்கற ஆபீஸ்ல அவங்க மேனேஜர் வெள்ளைக்காரன்ன் ஜிங்கிலி ஜாக்கு இண்டர்நெட்டை கட் பண்ணிடறாங்க..அக்காவால பதிவெழுத முடியல..அதைப் பாத்த ஹீரோ ஜிங்கிலி ஜாக்கிட்ட இங்கிலீஷ்ல பேசியே சண்டை போடறான்..அது வேலைக்காவல..அதனால தானே அக்கா பேர்ல ங்கொக்கமக்கான்னு சூப்பரா எழுதி அக்காவை சந்தோஷப்படுத்தறான்..அப்பதான் ஒரு டிவிஸ்டு..அவன் ஆபீஸ்லயும் இண்டர்நெட் கட் ஆயிடுது..அதுக்கு காரணம் அவனோட டீம்லீட் டிங்கர் டில்லி. அவன் போராட்டத்துல இறங்கறான். அவனை வேலைய விட்டே தூக்கறாங்க..அந்த கம்பெனிக்கு எதிர்ல இருக்க டாஸ்மாக்ல உள்ளிருப்பு போராட்டம் நடத்தற அவனை நான் சந்திக்கிறேன். அந்த கம்பெனிக்கே அவன் தான் ஓனர்ன்ற ப்ளாஷ்பேக் சொல்லி அவனை உசுப்பேத்தி கம்பெனியவே வாங்க வைச்சு பதிவெழுத வைக்கறேன்..அவன் அக்காவும் அதே கம்பெனில பதிவெழுதறாங்க..அந்த கம்பெனில எல்லாரும் சந்தோஷமா பதிவு எழுதறாங்க..இதையே நான் மூனு வருஷத்துக்கு தொடர்கதையா எழுதப்போறேன்...சூப்பர்டூப்பர் ஹிட்டாவும் பாருங்க

சந்தானம்: கம்பெனில எல்லாரும் பதிவெழுதினா கம்பெனி எப்படி உருப்படும். சரிவுடு..உன் கதையே உருப்படாது இதுல கதைல வர்ற கம்பெனி உருப்படலனா என்ன...பதிவுக்கு பேரு வச்சிட்டியா?

பேரரசு: ஏதாவது ஊர் பேர் தான் வைக்கனும்..அதான் எனக்கு ராசி

சந்தானம்: ஏர்வாடி இல்லைனா கீழ்ப்பாக்கம்னு வை. உன் பதிவை படிக்கறவங்க கடைசில அங்கதான் போகனும். சரி எல்லாரும் கிளம்பிட்டீங்க..ஆனா கம்ப்யூட்டர் பத்தி தெரியுமா? அதுல எப்படி எழுதறதுனு தெரியுமா?

கே.எஸ்.ரவிகுமார்: இப்ப கேட்டியே..இது கேள்வி...அதுக்குத்தான் ஆட்களை அனுப்பியிருக்கோம்ல

சந்தானம்: எங்கே?

கே.எஸ்.ரவிகுமார்: நம்மூர்ல இணையத்துல எழுதறவங்க எல்லாம் ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா மெரினா பீச்ல காந்தி சிலைக்கு பின்னால கூட்டம் போடுவாங்க..அவங்களைத் தூக்க சொல்லி ஏற்கனவே கனல் கண்ணனை பத்து ஸ்டண்டு ஆர்ட்டிஸ்டோட அனுப்பியாச்சு..அவங்க வந்துதான் எங்களுக்கு கத்துக்கொடுக்கனும்

என்று கூற 'அடப்பாவிகளா....இப்படி ஒரு அப்பாவிக் கூட்டத்துக்கு ஆப்பு ரெடி பண்றீங்கன்னு சொல்லவேயில்லையேடா..அவங்களை என் உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தறேன்டா' என்று சந்தானம் பைக்கிலேறி பீச்சை நோக்கிப் பறக்கிறார்.கண்ணு தெரியுதா?

ரொம்ப நாளாச்சு இதை விளையாடி. அதுவும் நட்சத்திர வாரத்தில் ஏதாவது போட்டி நடத்தலைனா போட்டி உருவிடுவாங்களாமே...கீழே இருக்க கண்களை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க..ரொம்ப சுலபம் தான்..
1. இனியாவது தமிழ் திரைப்படங்களில் நடிப்பீங்களா?


2. சிங்கத்துக்கு சுளுக்கெடுத்தாச்சுல்ல


3. புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்தவர்


4. க்ளூ வேணுமா என்ன?


5. எத்தனை வருஷமானாலும் அடித்து ஆடுபவர்


6. தம்பியண்ணன் இவரைக் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்


7. மத்திய அமைச்சர்


8. பல அவதாரங்கள் எடுக்கும் கலைஞர்9. என்னமா கண்ணு வருவியா? வரமாட்டியா?


10. அதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே

இவங்க தான் :))
நினைத்தாலே இனிக்கும்

'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "இந்த மாசம் பயிர்களில் தட்டான்பூச்சிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்ங்கறதால பொட்டாசியம் பாஸ்பைட் உரத்தை ஒன்னுக்கு மூனுன்ற கணக்குல கலந்து போடனும்னு மதுராந்தகம் வேளாண் விரிவாக்க மையத்துல இருந்து செய்தி அனுப்பியிருக்காங்க". சரோஜ் நாராயண்ஸ்வாமி ஆறே முக்காலுக்கு செய்திகளை ஆரம்பிப்பதற்குள் எழுந்துகொள்ளவில்லை என்றால் காலையிலேயே உதைதான்.

6.55க்கு அறிவிப்புகளுக்குப் பிறகு 'காலை மலர்' ஆரம்பிக்கும். நகரில் இன்று, அறிவியல் செய்திகள் முடிந்ததும் 7.15க்கு மீண்டும் செய்திகள். அரை மணி நேரத்தில் எதற்கு இன்னொரு செய்திகள் அந்த நேரத்தில் இரண்டு பாடல்களை ஒளிபரப்பலாமே என்று கடியாக இருக்கும். 7.40க்கு இன்று ஒரு தகவல். முதல்ல 7.35க்கு இருந்து பிறகு 7.40க்கு மாற்றினார்கள். இடையில் நகைச்சுவை துணுக்குகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. காலை மலர் முடிந்ததும் 7.45-ல் இருந்து 8 வரை பாடல்கள். அதற்குள் குளித்து முடித்திருக்க வேண்டும்.

8.15க்கு விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு. ஒவ்வொரு பாடலையும் குறைந்தது இருபது பேராவது விரும்பிக் கேட்டு கடிதம் எழுதியிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குள் அறிவிப்பாளர் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடும் எஸ்.பி.பி போல் மூச்சுவிடாமல் எல்லா பெயர்களையும் அறிவிப்பார். பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் அவர்கள் பெயரை மட்டுமல்லாது அவரின் கொள்ளு தாத்தா, பாட்டியில் ஆரம்பித்து பக்கத்து தெரு பொடியன் வரை அனைவரின் பெயரையும் எழுதி அனுப்பியிருப்பார்கள். காஞ்சிபுரத்திலிருந்து யாராவது கேட்டிருந்தால் அவரை நமக்குத் தெரிந்திருக்குமா என்று யோசித்ததுண்டு. நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே இட்லியோ தோசையோ உள்ளே இறங்கும். 8.40க்கு விளம்பரதாரர் வழங்கும் பாடல் என்று புது பாடல் ஒன்று ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கு தயாராகக் கிளம்பி இந்த புதுப்பாடலுக்காகவே காத்திருந்து கேட்டுவிட்டு கிளம்புவோம். அதற்குள் கிளம்பாவிட்டால் அன்று பள்ளிக்கு லேட் தான்.

மாலையில் வந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். 6.30க்கு செய்திகள். செய்திகள் முடிந்ததும் அடுத்த நாள் நிகழ்ச்சிகள்.ஒரு நாளும் நிகழ்ச்சிகளில் (யாராவது இறந்தாலொழிய)மாற்றமிருக்காது. ஆனாலும் காலை 5.30க்கு ஆரம்பித்து இரவு வரையான நிகழ்ச்சிகளை தினமும் சொல்வார்கள். அறிவுப்புகள் முடிந்ததும் நாடகம், தமிழ்/ஹிந்தி பாடல்கள். ஆங்கிலப் பாடல்களும் வாரத்தில் சில நாட்கள் உண்டு. பல்வகை சங்கீத நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும். தொலைக்காட்சி வந்தபின் மாலை வேளைகளில் வானொலி கேட்பது குறைந்துபோனது. ஆனால் மழை புயலடித்து தூர்தர்ஷன் தெரியாத நாட்களில் வானொலி பொழுதுபோக்கு.

ஞாயிற்றுக்கிழமைகளில் சில சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை வசனம். பெரும்பாலும் பழைய சிவாஜி/எம்.ஜி.ஆர் படங்களே ஒலிபரப்பப்படும். தலைவரின் படங்கள் வெகு அரிது. 'தங்கப்பதக்கம்' மட்டும் இரண்டு மூன்று முறை கேட்ட ஞாபகம் இருக்கின்றது. கதைவசனம் முடிந்ததும் பிலிப்ஸ் சூப்பர் 10 என்று அந்த வாரத்தின் சிறந்த பத்து புதுப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிகழ்ச்சியின் பெயர் சரியா என்று நினைவில்லை. மதிய நேரங்களில் வெயிலினால் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டபடி உள்விளையாட்டுகள் தான். சூப்பர் 10 முடிந்ததும் 4 ஆகிவிட்டது வெயில் குறைந்துவிட்டதென கிரிக்கெட் விளையாடக் கிளம்புவோம்.


சில நிகழ்ச்சிகள் திருச்சி, கோவை வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் "காஞ்சியில் ஒரு வானொலி நிலையம் இருந்தால் காஞ்சியிலிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுமே. இங்கு ஒன்று திறந்தால் என்ன" என்று தோன்றும். அதே போல் சிலோன் நிலையம் சில சமயங்களில் மட்டும் வரும். இரவுகளில் தெளிவாக வரும். நான் தூங்கப் போகும் நேரம் அப்பா கேட்டுக்கொண்டிருப்பார்.

வானொலியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் சுவாரசியமானவை. அப்போது எல்லா விளம்பரங்களிலும் ஒன்றிரண்டு குரல்களே மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இன்றும் கூட பண்பலை அலைவரிசைகளில் விளம்பரங்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

அப்போதெல்லாம் காலை இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தனியார் பண்பலை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். காஞ்சிபுரத்தில் பண்பலை எடுக்காது. விடுமுறையில் மாமா வீட்டுக்கு மடிப்பாக்கத்திற்கு செல்லும்போது கேட்க முடியும். 'ப்ரியமுடன் ப்ரியா'வில் ப்ரியா அழகாகப் பேசி சூப்பரான பாடல்களை ஒலிபரப்புவார். "மாஆர்ரூஊஊஉதி சூசுகி ட்ராஃபிக் பீட்" என்று அன்று ஆரம்பித்தது இன்றும் பண்பலை வானொலிகளில் தொடர்கின்றது.

பல தனியார் பண்பலை அலைவரிசைகள் வந்தபின்னும் இன்றும் சென்னை வானொலி நிலையத்திற்கென தனியாக நேயர்கள் இருக்கின்றார்கள். சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசைகளான ரெயின்போ, கோல்ட் எப்.எம்களிலும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

அப்பா வேலைக்கு சேர்ந்ததும் வாங்கிய வானொலி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பலமுறை கிழே விழுந்திருக்கிறது. நான் பலமுறை அதைத் திறந்து நோண்டியிருக்கிறேன். டியூனரையும் உள்ளே இருக்கும் காந்தத்தையும் கிழட்டி திரும்ப மாட்டி அந்த ரேடியோவிற்கு பலமுறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து மகிழ்வித்தது. டேப் ரிகார்டர் வாங்கியபின் அந்த ரேடியோ பரணிற்குச் சென்றது. டேப்ரிகார்டர் வந்தபின்னாலும்கூட எங்கள் விட்டில் எண்ணி பதினைந்து கேசட்டுகளுக்கு மேல் இருக்காது. எப்போதும் அதில் வானொலி தான் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதும் கூட பண்பலை வானொலியைக் கேட்டபடிதான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


இன்று மாலை அயர்ச்சியிலும் ஏதோ இனம்புரியாதொரு கவலையிலும் பதிவெழுதத் தோன்றாமல் லேப்டாப் மானிட்டரை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்த எனக்கு வானொலி குறித்தான பழைய நினைவுகளைக் கிளறி இந்த பதிவை எழுத வைத்து அதற்கு வானொலி நிகழ்ச்சி பெயர்களின் சாயலிலேயே தலைப்பையும் தந்த தல கைப்புவுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்த வானொலிக்கும் இப்பதிவு சமர்ப்பணம். :Dசிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)

சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது.

பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விடுதிகளிலும் பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளிலும் அவர்களைப் பார்த்தாலும் அவர்களைக் குறித்தும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களைக் குறித்துமான பிரக்ஞையின்றி கடந்து செல்கின்றோம். பாலியல் தொழிலை அவர்கள் பிழைப்பிற்காகத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் குறித்து இச்சமூகம் வருந்துவதில்லை. அக்குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வித கருணையுமின்றி நிராகரிக்கப்படுகின்றன.சனா பிரிஸ்கி பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்ய கொல்கத்தாவிற்கு வருகிறார். எல்லா பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளைப் போலவே அங்கும் படம்பிடிக்க அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சனா பிரிஸ்கி பின்வாங்காமல் முயல்கிறார். பாலியல் தொழிலாளிகளைக் குறித்து படமெடுக்க வரும் பிரிஸ்கி அவர்களின் குழந்தைகளின்பால் ஈர்க்கப்படுகிறார். கல்வி மறுக்கப்பட்டு அங்கேயே தங்கள் வாழ்வைக் கழிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர்களை அந்த சூழலிலிருந்து வெளிக்கொணர வேண்டி அபிஜித், கெளர், கோச்சி, தபாசி, சாந்தி, மாணிக், சுசித்ரா, பூஜா ஆகிய எட்டு சிறுவர்களுக்கு புகைப்படக்கலையைக் கற்றுத்தர ஆரம்பிக்கிறார்.

ஆரம்பத்தில் சனாவுடன் பழகத் தயங்கும் சிறுவர்கள் சிறுது நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புரோக்கர்களும் சனாவை எதிர்க்கின்றனர். ஆயினும் சிறுவர்கள் ஆர்வத்துடன் சனாவிடம் புகைப்படக்கலையைக் கற்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் தங்கள் வீடுகளையும் படம் பிடிக்கின்றனர். சனா அவர்களைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்; புகைப்படங்கள் எடுக்க வைக்கிறார். அவர்கள் புகைப்படக்கலையை எளிதில் கற்றுக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

அச்சிறுவர்கள் அனைவரும் தங்கள் குடும்பச் சூழ்நிலையையும் சமூகத்தையும் அறிந்தே இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற கனவும் தங்கள் குடும்பத்தினை நல்ல நிலையில் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையும் இருந்தாலும் யதார்தத்தினை உணர்ந்திருக்கிறார்கள். பெண் குழந்தைகள் வளர்ந்தபின் தாங்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை அறிந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருக்கிறார்கள்.

பிரிஸ்கி இவர்களை அத்தகைய சூழலில் இருந்து வெளிக்கொணர முயற்சிக்கிறார். அவர்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அக்குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தனியாக குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேசி ஒப்புதல் வாங்கும் பிரிஸ்கி பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதில் சிரமங்களைச் சந்திக்கிறார். பல இன்னல்களுக்குப் பிறகு அச்சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கிறார்.

அபிஜித்தின் புகைப்படம் ஒன்று ஆம்ஸடர்டாமில் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகிறது. ஆனால் அவனை ஆம்ஸ்டர்டாம் அனுப்ப அபிஜித்தின் அம்மா மறுக்கிறார். பிரிஸ்கி அவரிடம் இப்போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சம்மதம் வாங்குகிறார். அபிஜித்திற்கு பாஸ்போர்ட் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பல தடைகளை மீறி பாஸ்போர்ட் பெற்று அபிஜித் அப்போட்டியில் கலந்துகொள்கிறான்.

திரும்பி வரும் அபிஜித் பள்ளியில் சேர்கிறான். மாணிக்கின் தந்தை அவனைப் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார். பூஜா, சுசித்ரா, சாந்தி மூவரையும் அவர்களின் பெற்றோர்கள் விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தபாசியும் கெளரும் பள்ளிப்படிப்பைத் தொடர்கிறான். கோச்சியும் விடுதியிலேயே தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் படம் முடிகின்றது.

பல சிரமங்களுக்கிடையே இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் சனா பிரிஸ்கி. ஏஜெண்டுகளின் எதிர்ப்பு, பாலியல் தொழிலாளிகளின் ஒத்துழையாமைக்கு மத்தியில் அக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது போற்றத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் எதையும் நேரடியான போதனையில் இறங்காமல் சிறுவர்களின் வாயிலாக அவர்களின் உலகைத் திறந்து காட்டியிருப்பது திரைப்படத்தின் நோக்கத்திற்கு உறுதி சேர்கின்றது.


அச்சிறுவர்கள் கேமரா தங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணமில்லாமல் இயல்பாக அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன் தங்களைக் குறித்தும் தங்கள் கனவுகள் குறித்தும் தங்கள் சமூகச் சூழலைக் குறித்தும் பேசுகிறார்கள். ஏமாற்றத்தையும் துன்பத்தையும் தாங்கும் சக்தியை இச்சமூகம் சிறுவயதிலேயே அவர்களுக்கு தந்துவிட்டது. ஆயினும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக் கைதிகளாகாமல் அதிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகத்தோடு இருக்கும் இச்சிறுவர்கள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பாலியல் தொழிலாளிகளின் வாழ்வைப் பதிவு செய்ய வந்த சனா பிரிஸ்கி அக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல இன்னல்களை எதிர்கொண்டு அவர்களின் வாழ்க்கையைப் பதிவாக்கியிருப்பதும் அவர்களின் கல்விக்காக அவர்களின் பெற்றோரிடமும் உறவினரிடமும் போராடுவதும் தலைவணங்க வேண்டியவை. இத்திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

பாலியல் தொழிலாளர்களின் நலன்களை அரசும் சமுதாயமும் தொடர்ந்து புறக்கணித்தபடிதான் இருக்கின்றன. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பரவலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களும் ஏழ்மையின் காரணமாகவும் விழுப்புணர்வின்மையின் காரணமாகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்துவதில்லை. வெகுசிலரே தங்கள் குழந்தையின் எதிர்கால நலனைக் கருதி செயல்படுகிறார்கள். அத்தகைய சூழலில் பிறந்த ஒரே காரணத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு திறமைகளும் கனவுகளும் நிராகரிக்கப்படும் சிறுவர்கள் ஆயிரமாயிரம்.கிரிக்கெட் - IPL - T20

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:

* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ஆட்டங்களையும் பெரும்பாலும் விடுவதில்லை.

* ரன்குவிப்பு ஒன்று மட்டுமே கிரிக்கெட் என்றாகிப்போனது வருத்தத்தை அளிக்கின்றது. பெளலர்களுக்கு சம வாய்ப்பு இல்லாமல் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமாகவே இருக்கின்றது. லீ, மெக்க்ராத், பாலாஜி, ந்டினி என எப்போதாவது ஆச்சரியப்படுத்தும் ஸ்பெல்களைத் தவிர பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாகவே இருக்கின்றது. பந்துவீச்சு என்பது ரன்களை கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை எடுப்பதும் மட்டுமன்று. அது மட்டையாளருக்கும் பந்துவீச்சாளருக்குமிடையேயான ஒரு சுவாரசியமான களம். அது ஒரு மைண்ட் கேம். இருவரும் அடுத்தவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆட்டத்தை மாற்றுவது, மட்டையாளரை தன் பந்திற்கு ஏற்றவாறு ஆட வைப்பது, கேட்சிங் பொசிஷன்களில் வீரர்களை நிற்க வைத்து பேட்ஸ்மேனின் திறமையை சோதிப்பது என பந்துவீச்சு ஓடி வந்து பந்தை வீசுவது மட்டுமன்று. ஏற்கனவே சொன்னதுபோல் அது ஒரு மைண்ட் கேம். ஆனால் 20-20 போட்டிகளில் அதற்கான சாத்தியங்கள் துளியும் இல்லை. இங்கு மொத்த நோக்கமும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலும் விக்கெட்டுகளை எடுப்பதிலுமே இருக்கின்றது. இத்தகைய போக்கு தொடருமேயானால் வருங்காலத்தில் லீ-யோ, மெக்ராத்தோ, கும்ப்ளே-வோ வார்னேயோ ஏன் இஷான் ஷர்மாவே கூட தேவைப்படாது. வீரர்களை லைன் அண்ட் லெங்க்த்தில் ஒரு மெஷினைப் போல போட பயிற்சி தந்தால் போதுமானது. பந்துவீச்சு ஒரு மைண்ட் கேமாக இருக்காது.

* ரன்குவிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதால் சரியான கிரிக்கெட் ஷாட்டை விடவும் ஸ்லாக்கர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதாவது பந்து எப்படி வந்தாலும் சுத்துவது. இதிலும் பார்த்தீர்களென்றால், ஹெய்டன், கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஜெயசூர்யா போன்ற டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தேர்ந்த வீரர்களே சரியான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் எல்லா 20-20 போட்டிகளிலும் ரன்களைக் குவிக்கிறார்கள். முதலில் சொன்ன வீரர்களை விட மெக்கல்லம், தோணி எத்தனை மேட்சுகளில் ரன் குவித்தார்கள்? பெரும்பாலான இளம்வீரர்கள் மட்டையைச் சுற்றுவதில்தான் இருக்கிறார்கள். சரியான கிரிக்கெட்டிங்க் ஷாட்ஸும் பந்திற்கு ஏற்ற ஷாட்ஸ் தேர்வும் வெகு அரிதாகவே காணக் கிடைக்கின்றது.

* மேலே சொன்னதுபோல் தொடருமானால், பந்துவீச்சைப் போலவே ரன்குவிப்பு மட்டுமே பேட்டிங் என்ற நிலைக்கு ஆளாகிவிடும். ஸ்லாக்கர்கள் மட்டுமே திறமையான மட்டையாளர்களாகக் கருதப்படும் அபாயம் இருக்கின்றது. பல கிரிக்கெட் ஷாட்டுகள் காணாமல் போகும். எத்தகைய பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் டிஃபன்ஸ் ஆட்டமே நீக்கப்பட்டுவிடும். வருங்கால வீரர்களுக்கு ப்ரண்ட்ஃபூட்டில் டிஃபன்ஸ் செய்யக்கூடத் தெரியாமல் போகலாம்.

* நான்கு மணி நேரத்திற்கு தொடர்ச்சியான ரன்குவிப்பைப் பார்ப்பது எனக்கு அயற்சியளிக்கின்றது. என்னைப் பொருத்தவரை சிகஸரும் ஃபோரும் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் இல்லை.

* தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடந்துவரும் இப்போட்டிகளில் பல மேட்சுகளில் பலர் பந்தை அடித்து துவம்சம் செய்து ரன்குவித்தாலும் நினைவுகொள்ளத்தக்க இன்னிங்க்ஸ் என்று ஒன்றிரண்டு மட்டுமே சட்டென நினைவுக்கு வருகின்றது. ஒருநாள் போட்டியிலோ டெஸ்ட் போட்டியிலோ ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்க்ஸை கட்டமைப்பது ஆர்வத்தைக் கிளப்பும். ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் தங்கள் இன்னிங்க்ஸை ஆரம்பித்து மேட்ச் சூடாகும். ஆனால் 20-20ல் அதற்கான வாய்ப்புகள் இல்லை. இங்கு ஒவ்வொரு வீரரின் தனித்தன்மையும் மறைந்துவிடுகிறது.


* இன்றைய பள்ளி மாணவர்களிடம் தோனியை விட டிராவிட் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காரணம் ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக தோனிக்குத் தரும் முக்கியத்துவம் மற்றும் 20/20. "பின்ன தோனி டிராவிட்டைவிட நல்ல ப்ளேயர் இல்லையா?" என்பீர்களேயானால் - நான் பேசுவது கிரிக்கெட் குறித்து.

* டெஸ்ட் மேட்சுகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில் (யாருடா டெஸ்ட் மேட்ச் பார்ப்பாங்க?ன்னு மட்டும் கேட்டுறாதீங்க) 20-20 ஐபிஎல் போன்ற தொடர்களின் மூலம் ஒரு நாள் போட்டிகளும் பாதிப்படையும். முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட இப்போட்டிகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வாரியங்கள் ஒருநாள்/டெஸ்ட் போட்டிகளை குறைத்து 20-20 போட்டிகளுக்கு இடமளிப்பார்கள். ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் கிடைக்கும் திரில் எனக்கு இதில் கிடைக்கவில்லை. ஆகையால் இவை இரண்டும் குறைந்தால் கவலையே.


* ரஞ்சி போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் குறைவான கவனமே செலுத்தும் பிசிசிஐ, ஐபிஎல்-லின் வெற்றிக்குப் பிறகு அத்தகைய போட்டிகளில் எந்த அளவு ஆர்வத்துடன் நடத்தும் என்பது கேள்விக்குறி. வருங்கால இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்க இத்தகைய உள்ளூர் போட்டிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஐபிஎல்-லின் இந்த வெற்றி, ரஞ்சியையும் மற்ற உள்ளூர் போட்டிகளையும் கூட 20-20 வடிவத்திற்கு மாற்றத்தக்க வணிக சக்தி படைத்தது. எதிர்கால இந்திய அணி வீரர்களின் கிரிக்கெட் அறிவு 20-20க்குள் சுருங்கிவிடக்கூடாது. (இது என் தேவையற்ற அச்சமாகக்க்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியமும் இருக்கின்றது)


* முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்தபின் டெஸ்ட் போட்டிகள் அழிந்தா போயின? அது போல் 20-20 இருந்தாலும் ஒரு நாள் போட்டிகளும் டெஸ்ட் போட்டிகளும் தொடரும் என்று சொல்லலாம். ஆனால் முற்றிலும் வணிக லாப நோக்கங்களுடன் நடத்தப்படும் இன்றைய 20-20 போட்டிகளில் இறங்கியிருக்கும் வணிகசக்திகள் ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் ஒழித்துக்கட்ட வல்லமை படைத்தவை என்பதில் சந்தேகமேயில்லை.

* இந்தியா கடந்த 20-20 உலகக் கோப்பையை வென்றிராவிட்டால் ஐபிஎல் போட்டிகள் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை.

* கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல் இதிலும் லீக் ஆட்டங்கள் நடைபெறுவது நல்லதுதானே. மக்களுக்கும் பொழுதுபோக்குதானே என்ற கருத்து நிலவுகிறது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் அடிப்படையிலேயே லீக் ஆட்டங்களுக்கு ஏற்றவாறு அமைந்தன. அந்த ஆட்டங்களின் அமைப்பு ஹார்மோன் உந்துதலையும் மக்களுக்கு சில மணி நேரங்களில் உச்சகட்ட பொழுதுபோக்கையும் அளித்தன. ஆனால் கிரிக்கெட் அவ்வாறானதாகத் தோன்றவில்லை. 20-20 ஆட்டத்தில் இன்னமும் எனக்கு ஹைலைட்ஸ் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது.


* கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் "கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே" என்ற போர்வையுடனும் முற்றிலும் வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் இத்தகைய ஐபிஎல் போட்டிகளை மக்களும் ரசிக்கிறார்கள். ஊடகங்களின் உதவியுடன் 20-20 கிரிக்கெட் பார்ப்பது அன்றாட காரியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் வருங்காலத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டியையும் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். நாமும் கூட அவ்வாறான கிரிக்கெட் விளையாட்டு இருந்ததை மறந்துவிட்டு சிக்ஸர்களுக்கும் பெளண்டரிகளுக்கும் ஆரவாரம் செய்திருப்போம்.


கொசுறு கேள்வி: எனக்குத் தெரிந்து பிசிசிஐ-க்கு இணையதளம் இல்லை. ஏன்?குணா (எ) குணசேகர்

குணாவை நீங்கள் ஏதாவதொரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலோ மாவட்ட நீதிமன்ற வாயிலிலோ அல்லது தாலுக்கா அலுவலகத்திலோ பார்த்திருக்கலாம். இதற்கு முன் நீங்கள் அவனைப் பார்த்திராவிட்டாலும் எளிதில் அடையாளம் காண இயலும். வயது இருபத்தி ஏழு. ஐந்தரை அடி உயரம். வெள்ளை கதர் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருப்பான். ஒரு இளம்பெண் தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மறுநாள் பூப்போட்ட சட்டை அணிந்திருப்பான். வலது கையில் இரண்டு மோதிரங்களும் இடது கையில் செப்புப்பட்டையும் கழுத்தில் செயினும் உறங்கும் நேரம் தவிர எப்போதும் அணிந்திருப்பான். பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்தால் வரும் பின்விளைவுகளை வெள்ளியன்று வெளியான ஒரு நாளிதழின் வண்ணப்பக்கத்தில் அவன் படித்ததில் இருந்து அவனுடைய நோக்கியா சட்டைப் பையில் துருத்திக் கொண்டோ அல்லது அவன் உள்ளங்கை வியர்வையில் நனைந்துகொண்டோ இருக்கும்.

குணா முதன்முதலில் சண்டையில் இறங்கி அடிவாங்கியது காதலுக்காகத்தான். அதுவும் அவனுடைய நண்பனின் காதலுக்கு. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய நண்பன் செல்வம் வேறு ஒரு ஏரியா பெண்ணைக் காதலிக்க அந்த ஏரியாவிலிருந்து இவர்களை அடிக்க வந்தார்கள். அவர்களைக் கண்டதும் செல்வம் உட்பட எல்லோரும் ஓடிவிட குணா மட்டும் சிக்கிவிட்டான். குணாவிற்கு அடி பலமாக விழுந்தாலும் அவன் வாங்கியதில் பாதியையாவது அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தான். உடைந்த கையோடு வீட்டிற்கு வந்து சாக்கடையில் விழுந்து விட்டதாக வீங்கிய முகத்துடன் சொன்ன அவனை யாரும் நம்பவில்லை. குணாவின் காயத்துக்கு கட்டுப் போட்டுவிட்டுத் தலையிலும் தண்ணீர் தெளித்துவிட்டனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை கலெக்டராக வேண்டுமென்ற லட்சியத்துடன் இருந்த குணா இறுதித் தேர்வில் கணக்கில் தேர்ச்சி பெறாததால் ஒரு வருடம் தடை ஏற்பட்டது. அதற்குள் குணாவின் லட்சியமும் மாறிவிட்டது. உடலையும் மூளையையும் வருத்திப் படித்து கலெக்டராகி சம்பாதிப்பதைவிட நேராக வேலையில் இறங்கிவிட முடிவு செய்தான். முதலில் தன் தந்தையின் உரக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்தவன் பின் ஆற்று மணல் டெண்டர் எடுத்து சிறிது பணம் பார்த்து சொந்தமாக இரண்டு லாரிகள் வாங்கினான். அப்போது விசிட்டிங் கார்ட் அடிக்கும்போது பேருக்குப் பிறகு போட ஒரு பட்டம் இல்லையென்ற கவலையோடு தொலைதூரக் கல்வி திட்டத்தில் பி.பி.ஏ. சேர்ந்தான். நண்பன் ஒருவனின் அறிவுரையினால் ஒரு பெட்ரோல் பங்க் டெண்டர் எடுக்க முயன்று நீதிமன்ற வழக்கிலும் மற்ற செலவுகளிலும் ஒரு லாரியை விற்க வேண்டிவந்தது. பெட்ரோல் பங்குக்கும் அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் தன்னிடமிருந்த ஒரு லாரியை வேலையில்லாமல் இருந்த தன் மாமாவிடம் கொடுத்துவிட்டு ரியல் எஸ்டேட்டில் இறங்கிவிட்டான்.

அவன் அத்தொழிலில் சிக்கல்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு செயலில் இறங்கியது அவனுக்கு லாபத்தை பன்மடங்காக்கிவிட்டது. சட்டச் சிக்கலில் நீதிமன்ற வழக்குகளில் இருக்கும் நிலத்தைத் தேடிப் பிடிப்பான். அதன் உரிமையாளரிடம் குறைந்த விலைக்கு நிலத்தை பேரம் பேசுவான். பல வருடங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர்களும் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள். அவர்களிடம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு வழக்கின் எதிர்கட்சியிடம் சென்று பேசுவான். சில சமயம் பேச்சுவார்த்தையோடு காரியம் முடிந்துவிடும்.சில சமயங்களில் கைகலப்பு வரை செல்ல நேரிடும். அப்படிப்பட்ட நேரங்களில் அவனது கட்சிப் பதவி துணை கொடுக்கும். குணாவிற்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருப்பதால் இதுமாதிரியான பிரச்சனைகளை எளிதாக தீர்த்துவிடுவான். இவனுடைய பேச்சுவார்த்தையால் வழக்கு நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்படும். பிறகு அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடுவான். எல்லா மட்டத்தில் இருப்பவர்களுக்கும் சரியான பங்கு சென்றுவிடுவதால் குணா அனைவருக்கும் நல்லவனாகவே இருந்தான்.

குணாவிற்கு ஒரு தேசிய கட்சியின் இளைஞர் அணி வட்டச் செயலாளர் பதவி தேடிவந்தது. இதற்கு முன் ஒரு மாநிலக் கட்சியின் உறுப்பினராக இருந்தான். அங்கு இளைஞர் அணியில் ஒரு பதவிக்கு துண்டு போட்டு சில வருடங்கள் காத்திருந்தான். இவனது சிறப்பை புரிந்துகொள்ளாமல் உள்ளூர் பெருசுகள் இவனை கண்டுகொள்ளவில்லை. தேசிய கட்சியின் புதிய மாவட்ட செயலாளர் இவனை அழைத்து இளைஞர் அணி பொறுப்பையும் தந்து கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதனால் எவ்வளவு தூரமென்றாலும் பைக்கிலேயே சென்று கொண்டிருந்த குணா கட்சித் தோழர்களின் அன்புத்தொல்லையால் சிகப்பு நிற ஸ்கார்பியோ ஒன்றை வாங்கி கட்சியின் கொடியை பட்டொளி வீச பறக்கவிட்டான். கட்சி போஸ்டர்களில் இரண்டாம் வரிசையில் செல்போனுடன் கும்பிடு போட்டான்.

குணா பெரும்பாலான நேரங்களில் உண்மை பேசுவதில்லை என்ற கொள்கையில் இருப்பவன். அதிலும் ஒவ்வொருவரிடம் ஒரு பொய்யை சொல்லி வைப்பான். ஏதாவது ஒரு பாரில் இருந்து கொண்டு தன் வீட்டாரிடம் சென்னைக்கு சென்றிருப்பதாகவும் நண்பர்களிடம் வேலை விஷயமாக அலகாபாத் சென்றிருப்பதாகவும் தொழில்முறை நண்பர்களிடம் உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்திருப்பதாகவும் கட்சி நண்பர்களிடம் வட்டச்செயலாளரைப் பார்க்க சென்று கொண்டிருப்பதாகவும் ஆளுக்கொரு பொய்யை அவிழ்த்துவிடுவான். போதையில் இருந்தாலும் சொல்லிய பொய்களை சரியாக ஞாபகம் வைத்துக்கொண்டு அடுத்த முறை அவர்களை சந்திக்கையில் அதற்கு மேல் கதைகளை அடுக்குவான்.

தன் பொய் சொல்லும் திறமையின் மீது அவனுக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கையுண்டு. ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது ஒரகடம் அருகில் ஐநூறு ஏக்கரை விலை முடித்துக் கொடுத்ததாக சொல்வான். ஜார்ஜ் புஷ் இந்தியா வந்ததும் உண்மை. ஒரகடம் அருகில் ஆயிரம் ஏக்கர் இருப்பதும் உண்மை. ஆனால் குணா அதை விலை முடித்துக் கொடுத்தானா என்பது அவனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

குணா பலமுறை காதலில் குதித்திருக்கிறான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவி தேவியைக் காதலித்தான். அவளது பெற்றோர்கள் அடுத்த வருடமே அவளது படிப்பை நிறுத்தி திருமணம் செய்துவிட்டனர். பதினொன்றாம் வகுப்பில் தன் தெருவில் வசித்த கற்பகம் என்ற கல்லூரி மாணவியைக் குணா ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்த இரண்டாவது வாரம் கற்பகத்தின் அப்பாவிற்கு மதுரைக்கு பணிமாற்றம் வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் யாரையும் காதலிக்கக் கூடாதென்ற அவனின் மன உறுதி சில பெண்களைக் காப்பாற்றியது. பின்னர் தொழிலில் முழுமையாக இறங்கிவிட்டாலும் அவ்வப்போது ஏதாவதொரு பெண்ணைக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். சுவற்றில் அடித்த பந்துபோல் ஒவ்வொரு முறையும்அவனது காதல் அம்புகள் திரும்பிவந்ததில் அவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை விஷயமாக அலைந்துகொண்டு இருபத்திநாலு மணி நேரமும் சரக்கடித்து போதையில் இருந்த குணாவிற்கு சென்ற மாதம் அந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. சார்பதிவாளராக புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த மகாலட்சுமியைக் கண்டதும் காதலில் விழுந்தான். அவன் காதலில் விழுவது இது முதல் முறை இல்லையென்றாலும் வழக்கம் போல் ஒருதலைக் காதலாக இல்லாமல் மகாலட்சுமியும் காதல் வயப்பட்டாள். அதோடு அவன் கதை முடிந்தது.வணக்கமுங்க!

"என் இனிய தமிழ் மக்களே எங்கோ ஒரு தெக்கத்திக் கள்ளிக்காட்டின் ஏரிக்கரைகளில் கில்லி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் போல ஒரு ஓரமாக ஜல்லியடித்துக் கொண்டிருந்த உங்கள் பாசத்துக்குரிய கப்பி கான்கிரீட் காட்டிற்குள் நுழைந்து மக்கள் கூட்டத்திலே தொலைந்து புழுதிக் காற்று முகத்திலறைய மூச்சி திணறிக்கொண்டிருக்கும் ஒரு பட்டிக்காட்டானைப் போல இதோ இன்று உங்கள் முன் நட்சத்திரமாக" - பாரதிராஜா பேஸ் வாய்ஸ்ல எல்லாருக்கும் வணக்கமுங்க!

ஒரு மாசத்துக்கு முன்ன தமிழ்மணம் நிர்வாகிகளிடமிருந்து அழைப்பு வந்த போது கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. வாரத்துக்கு ஒரு பதிவு போடறதுக்கே டரியலாகுதே ஒரு வாரத்துக்கு தினம் ஒரு பதிவாவது போடனும்னா சிக்கி சின்னாபின்னம் ஆயிருமேன்னு மனசுல லேசா ஒரு கவலை வந்தது. இருந்தாலும் "எடுத்த சபதம் முடிப்பேன் தயங்காதே"ன்னு தலைவர் பாட்டு பேக்க்ரவுண்டுல மனசுக்குள்ள ஓட்டிக்கிட்டு தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்பினேன்.


ஏழு நாளைக்கு பதிவெழுதி எல்லாருக்கும் ஏழரையைக் கூட்டனுமேன்னு யோசிச்ச பிறகுதான் பதிவுக்கு மேட்டர் எப்படி தேத்தறதுன்னு பெரிய கன்பீசன் ஆஃப் டல்லாஸ் ஆகிப்போச்சு. இந்த நட்சத்திர வாரத்துல என்ன பண்ணலாம்னு நட்புகிட்ட கேட்டேன்.


"மாப்பு..நான் தமிழ்மணத்துல நட்சத்திரம் ஆக்கியிருக்காங்கடா"

"நட்சத்திரமா..ஏண்டா இந்த சினிமாக்காரனும் அரசியல்வாதியும் தான் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு அவனவன் தனக்குத்தானே விடிவெள்ளி விடியாத சனின்னு பட்டம் கொடுத்துக்கறான். நீயுமாடா"

"டேய் இது பட்டம் இல்லடா..வாரம் ஒரு பதிவரை நட்சத்திரம் ஆக்குவாங்க. இந்த வாரம் நான் நட்சத்திரம்"

"இத்தனை நாளா நீ மூட்டையக் கட்டுவியான்னு பாத்திருப்பாங்க..நீ கிளம்பற மாதிரி தெரியல..கெரகம் நட்சத்திரம் ஆக்கிவிட்டாலாவது முடிச்சுட்டு கடையை மூடுவானான்னு நட்சத்திரம் ஆக்கியிருப்பாங்க"

"டேய் நண்பனுக்கு உதவி பண்ணுடா"

"சரி வழக்கமா வாரத்துக்கு பத்து படம் பார்த்து அதுல குலுக்கல்ல ஒன்னைத் தேர்ந்தெடுத்து எழுதுவியே அது மாதிரி ஏழு படத்துக்கு எழுதிடு"

"என்ன மக்கா இப்படி சொல்லிட்ட..நான் எத்தனை படம் பார்த்தாலும் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தின ஒரு நல்ல படத்தைப் பத்தி தான்டே எழுதுவேன்"

"மொக்கை நாயே இப்படி ஒரு பில்டப்பா!! சரி கொசுவத்தி சுத்திரு"

"மாமா.. ஏழு நாளும் கொசுவத்தி சுத்தினா புகை எனக்கே மூச்சடைக்கும்டா. படிக்கறவங்க பாவம்"

"பாவம் பார்த்தா நீ பதிவெல்லாம் எழுதற? அப்படின்னா நீ என்னைக்கோ கிளம்பியிருக்கனுமே"

"பங்காளி! இங்க பாரு..நான் இப்போதைக்கு கிளம்பறதா இல்ல..பதிவெழுத மேட்டர் சொல்லு"

"இந்த கதை கவிதையெல்லாம்" (காதல் படத்துல வர்ற டைரகடர் டோன்ல கேட்கறான்..எனக்கு நேரம் வரும்டேய்)

"கவுஜ எழுதறதில்லன்னு நான் அவ்வையார் மேல சத்தியம் பண்ணிட்டேனே. கதை எழுதலாம். ஆனா கரு கிடைக்க மாட்டேங்குதே மாப்ள"

"கரு கிடைக்கலையா? என் கையில எதுவும் கிடைக்கறதுக்கு முன்ன ஓடிரு"

"தம்பி கோவிச்சுக்காதடா..வேற எதுனா ஐடியா கொடு"

"சரி ஆனாஊன்னா ?! போட்டு ஃபீலிங்க்ஸ விடுவியே அதையே பண்ணிடேன்"

"மச்சி இது நல்ல ஐடியாவா இருக்கு..?!-திங்கள், ?!-செவ்வாய்ன்னு ஒரு வாரம் ஓட்டிடலாம்..ஆனா கல்லைக் கொண்டு அடிப்பாங்கடா"

"அந்த பயமெல்லாம் இருந்தா பேசாம ஒன்னு பண்ணு. எதுனா இங்கிலீசோ ஸ்பானிஷோ பதிவு ஒன்னைப் படிச்சு அதை அப்படியே நீ எழுதற மாதிரி தமிழ்ல எழுதிடு"

"காப்பியா..ச்சே இந்த கப்பி ஒருக்காலும் அதை செய்யமாட்டான்"

"மனசாட்சிய மார்வாடிக் கடையில வச்சுட்டு பேசறயேடா..சரி இந்த பி.ந. எலக்கியத்துல எறங்கிடேன்"

"மாப்ள..என்னடா ஏதோ ரன்னிங் பஸ்ஸுல இருந்து எறங்கற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்ட..அதெல்லாம் படிச்சாலே தாவு தீருது..இதுல எழுதனும்னா அள்ளு கிழண்டுரும்டே"

"முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கற மாதிரி ஒத்துக்கிட்ட பிறகு ஏன்டா என் உசுரை எடுககற..எதுனா ஹாட் டாபிக்கா எடுத்து எழுது..மெசேஜ் சொல்லு"

"இளைய தளபதி விஜய் மெசேஜ் சொன்னாலே கேட்காத நம்ம மக்கள் நான் சொல்லி கேப்பாங்கன்ற?"

"அடேய் உனக்கு இப்ப என்ன தான்டா வேணும்"

"ஏழு நாள் பதிவெழுத மேட்டரு"

"அதுக்கு ஏன்டா என்கிட்ட ஏழரைய கூட்டற"

"எனக்கு மட்டும் ஆசையா மாப்பு..ஆப்பு பலமாயிருச்சு அதான்"

"தலைவர் சில வருஷத்துக்கு முன்ன சொன்னது தான்டா ஞாபகம் வருது"

"என்னது மக்கா? என் வழி தனி வழி..அதுவா?"

"தமிழ்நாட்டை இனி யாராலயும் காப்பாத்த முடியாது"

ஆகவே மக்களே..இந்த நிமிடம் வரை அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு என்ன எழுதப்போறேன்னு எனக்கே தெரியாது. "இந்த தபா மன்னிச்சிருங்கோ"ன்னு கேட்காத அளவுக்கு எழுதிடலாம்ன்னு மட்டும் நம்பிக்கை இருக்கு. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றியுடன் எப்பவும் போல இந்த வாரமும் உங்க பேராதரவு வேண்டி வணங்கி நிற்கும் உங்கள் பாசத்துக்குரிய கப்பி! :Dகொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்

"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க"

"அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?"

"ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது"

"அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?"

"இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?"

"இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"

பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த சுட்டிப்பெண் ரயில் பயணத்தை ரசித்தபடி வந்தாள். அவளது தந்தை ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லியவாறே கேமராவில் அவளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார். அன்றாடம் பார்க்கும் கட்டிடங்களிலும் தூரத்து மலைகளிலும் கடந்து செல்லும் ரயில்களிலும் ஆச்சரியத்தைக் காணும் அவளது மனம் வாய்க்காதா என்ற ஏக்கத்துடனான அரைமணி நேர ரயில் பயணம் சுகானுபவம்.ரயிலோ பேருந்தோ தரும் சுகத்தை விமானப் பயணம் தருவதில்லை. விமான நிலையத்தில் காத்திருத்தலும் நீண்ட வரிசையிலான பாதுகாப்பு சோதனைகளும் இறுகிய முகங்களும் ஒரு அன்னியத்தை உண்டாக்குகின்றன. எல்லா விமான நிலையத்திலும் சிறுவர்களும் பள்ளி/கல்லூரி மாணவர்களும் மட்டுமே சிரித்து மகிழ்ந்து இயல்பாக இருப்பதுபோல் தோன்றுகிறது. விமானத்தில் ஏறியதும் பணியாளர்களின் செயற்கை புன்னகை அவர்களின் அயற்சியை பிரதிபலிக்கின்றது. கூண்டில் சிக்கிய உணர்வுடன் எப்போது தரையிறங்கி இவ்விமானத்திலிருந்து வெளியேறுவோம் என்ற எண்ணமே ஒருவித ஒவ்வாமையை உண்டாக்குகின்றது.

அதேபோல் அமெரிக்காவில் எல்லா ஊர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரே நிறத்தில் கட்டிடங்கள், அதே டேகோ பெல், அதே பிட்சா ஹட், அதே ஸ்டார் பக்ஸ், ஒரே மாதிரியான சாலைகள், விதிமுறைகள் என்று ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.நண்பனின் சகோதரியும் மச்சானும் டென்வரில் வசிக்கின்றனர். நீண்டநாட்களாகவே அங்கு செல்ல திட்டம் தீட்டி இரண்டு வாரங்களுக்கு முன் நிறைவேறியது. ஃப்ளோரிடாவிலிருந்து இன்னொரு நண்பனும் வந்திருந்தான். "உங்க ஊர்ல எங்கயாவது கூட்டிட்டு போய் காட்டுங்க. இல்ல மூன்று நாளும் வீட்டுலயே வச்சு சாப்பாடு போட்டாலும் ஓகே தான்" என்று மொத்தமாக அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்.

இங்கு இந்த வருடம் ஒரே ஒருநாள் லேசாக பனி பொழிந்தது. அடுத்தநாள் காலையில் தரையிலும் கார்களிலும் தூசி படிந்தாற்போல் பனி. அவ்வளவுதான். அந்த குளிரே என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வீட்டிலிருந்து பார்த்தாலே பனிமலை தெரிகிறது. குளிர்காலத்தில் ஊரெங்கிலும் பனி படர்ந்திருக்கும் என்றார்கள். அந்த பனியிலும் குளிரிலும் வருடம் முழுக்க இருப்பது என்னால் இயலாத காரியமென்றே தோன்றுகிறது.இதற்கு முன் ஒரே ஒரு முறை அக்காவை நேரில் சந்தித்திருக்கிறேன். மச்சானுடன் ஒன்றிரண்டு முறை தொலைபேசியிருப்பேன். ஆனால் நாங்கள் சென்றிருந்த அந்த மூன்று நாட்களில் பலநாட்கள் பழகியது போன்றதொரு உணர்வும் நெருக்கமும் ஏற்பட்டது. மூன்று நாட்களும் நண்பர்கள், சினிமா, அரசியல், வெட்டி அரட்டையென பேசியபடி கழிந்தது. சாப்பிட்டபடியும் தான்.முதல் நாள் கேவ்ஸ் ஆஃப் விண்ட் (Caves of Wind) என்ற குகைகளுக்கு சென்றிருந்தோம். குகை முழுதும் இயற்கையாகவே கணிமங்கள் படிந்திருந்தன. Stalactites, Stagamites என எப்போதோ படித்ததையெல்லாம் ஞாபகப்படுத்தி சுற்றிக் காட்டினார்கள். குகைகளினுள்ளே எப்போதும் ஒரே சீதோஷ்ன நிலையில் இருக்குமாம். விதவிதமான வடிவங்களில் கணிமங்கள் படிந்திருந்தது அழகு.அங்கிருந்து உலகின் மிக உயரமான தொங்குபாலமான ராயல் கார்ஜ்(Royal Gorge)க்கு சென்றோம். இரண்டு மிகப்பெரிய மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலம் இது. அங்கிருந்து கீழே அதளபாதத்தில் ஆர்கன்ஸாஸ் ஆறு ஓடுகிறது. 1929-ல் ஆறே மாதங்களில் இந்த பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள மலைகளின் அழகும் பாலமும் பிரமிப்பை ஏற்படுத்தின.

அடுத்த நாள் பனிமலைகளை நோக்கிப் பயணித்தோம். ராக்கி தேசிய பூங்கா என்றழைக்கப்படும் மலைத்தொடருக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது பனிமழை பொழிந்துகொண்டிருந்தது. வாயிலில் பல சாலைகளை மூடிவிட்டதாகவும் சிறிது தூரமே செல்லமுடியுமென்றும் சொன்னார்கள். எவ்வளவு தூரம் போகமுடியுமோ போவோமென சென்றோம். சாலைகளிலும் சுற்றி மலைகளிலும் முழுதும் பனி. முன்பின் பனியையே பார்த்திராத நானும் எனது நண்பனும் ஆசை தீர பனியில் நனைந்தோம்.அங்கிருந்து பனிச்சறுக்கு செய்யும் பகுதிக்குச் சென்று அதை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன் என பனிச்சறுக்கு செய்தோம். பனிச்சறுக்கு செயவதற்கான காலணிகளை அணிந்து நடப்பதே பெரிய காரியமாக இருந்தது. அசால்டாக பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆச்சரியமும் பொறாமையும். எங்கள் காலில் பனிச்சறுக்கு பலகையை காலில் மாட்டுவதற்குள் மச்சானுக்கு தாவு தீர்ந்தது. ஒருவாறு மாட்டிக்கொண்டு நான்கு அடிகள் சறுக்கும்போதே உயிர்பயம் வந்துவிடுகிறது. ஒரு மணி நேரம் தட்டுத்தடுமாறி விழுந்து விழுப்புண்கள் வாங்கினோம்.பனிமலைகளை விடவும் அந்த பாலத்தை விடவும் பனிச்சறுக்கை விடவும் இந்த பயணத்தை இனிமையாக்கியது அக்காவும் மச்சானும் தான். டென்வரிலிருந்து கிளம்ப மனமின்றி வீட்டிற்கு திரும்ப வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அறை நண்பர்கள் வெளியே சென்றிருந்தார்கள். வீட்டைத் திறந்து நாற்காலியில் அமர்ந்தபோது என்றுமில்லாத ஒரு தனிமையுணர்வு ஏற்பட்டது. முந்தைய மூன்று நாட்களை அசைபோட்டபடி உறங்கச் சென்றேன்.

குலாப் ஜாமூன், பூரி, இட்லி, குழி பணியாரம், தோசை, பிரியாணி என்று சலிக்காமல் பரிவோடு சமைத்துப் போட்ட அக்காவுக்கும் அக்காவுடன் சேர்ந்து நாங்கள் அடித்த மொக்கை ஜோக்குகளுக்கு சிரித்து மூன்று நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் எங்கள் மேல் அன்பும் அக்கறையும் காட்டிய மச்சானுக்கும்...குருவி - தவறவிடக்கூடாத திரைப்படம் - சில காரணங்கள்

குருவியைப் பற்றி வலையுலகம் முழுதும் நெகட்டிவ் விமர்சனங்கள். பார்த்தவர்கள் அனைவரும் டரியலாகிப் போயிருக்கிறார்கள். ஆனால் குருவி அப்படி ஒன்றும் பார்க்கவே கூடாத ஒதுக்க வேண்டிய திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தைக் கேவலம் என்று சொல்லி கேவலத்தையே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குருவி அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

- படத்தின் நகைச்சுவை காட்சிகள். சின்னக் கலைவாணர் விவேக் மாங்கு மாங்குன்னு டபுள் மீனிங் டயலாக்கா பேசிட்டிருந்தாலும் சிரிப்பே வரல. ஆனா நம்ம இளைய தளபதி அசால்டா காமெடி பண்றாரு. தோளைக் குலுக்கி கண்ணடிச்சா காமெடி. திரிசாவை முறைச்சா காமெடி. அதைவிட சண்டை போடும்போது சட்டையைக் கழட்டிப் போட்டு கையை முறுக்கி காட்டுவாரு பாருங்க..அந்த ஒரு காமெடி சீனுக்காகவே படம் பாக்கலாம்

- எதிர்பாராத திருப்பங்கள். விஜய் நாலாவது மாடியில இருப்பாரு. வில்லனோட அடியாளுங்க துரத்திட்டு வருவாங்க. பக்கத்து மேம்பாலத்து டிராக்ல தூரத்துல டிரெயினைக் காட்டுவாங்க. இளைய தளபதியோட முகத்தைக் காட்டுவாங்க. டிரெயினு..முகம்..முகம்..டிரெயினு. இப்ப நீங்க என்ன நினைப்பீங்க? இளைய தளபதி நேரா அந்த டிரெயின் மேல குதிப்பாருன்னு தானே? அங்க தான் ஒரு டிவிஸ்டு. நம்ம தலைவர் அந்த நாலாவது மாடியிலருந்து பாலத்துல குதிச்சு கைப்புடி சுவரைப் புடிச்சு தட்டுத்தடுமாறி டிராக்ல ஏறி ஓடற டிரெயின்ல ரன்னிங்க்ல ஏறுவாரு. இப்படி ஏகப்பட்ட டிவிஸ்டோ டிவிஸ்ட் இருக்க படம் இது.

- செண்டிமெண்ட். பத்து வயசு பையன் வில்லனோட காலைப் பிடிச்சு விடறது, கண் தெரியாத இளம்பெண்ணின் சகோதரனை வில்லன் கொல்வது, மகன் வந்து காப்பாற்றுவான் என்று தந்தை சபதம் செய்வது என்று தமிழ்திரைப்படங்களில் இதுவரை பார்த்திராத செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படம்.


- மெசேஜ். படத்துல சின்ன பசங்களுக்கு நிறைய புத்திமதி சொல்வாரு இளைய தளபதி. உதாரணமா பற்களை பலமா வச்சுக்கறதுக்கான அவசியத்தை சூசகமா சொல்லியிருக்காரு. ஆக்ஸிலரேட்டர் கட்டானாலும் வாயில ஒயரை கடிச்சிக்கிட்டு ரேஸ் ஜெயிக்கறாரு நம்ம தலைவரு. பற்கள் மட்டுமில்லாம நம்ம மனசும் பலமா இருந்தா எந்த மொக்க நாயும் ரேஸ்ல ஜெயிக்கலாம்ன்றது தான் மெசெஜு. இதுமாதிரி படம் முழுக்க மெசெஜ் தான்

- இளைய தளபதியின் கெட்டப்புகள். குருவி விஜய் 'மாஸ்க் ஆப் சாரோ' ஆண்டனியோ பாண்டராஸே காலில் விழும் அளவுக்கு முகமூடி அணிந்து வரும் காட்சியில் அது விஜய் தானா என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மச்சம், மீசை என்று மாறுவேடத்திற்கு மெனக்கெட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு நாலுநாள் தாடியே போதும் என்று 'அழகிய தமிழ் மகனில்' நிருபித்த இளைய தளபதி குருவியில் அதுகூட தேவையில்லை என்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தசாவதாரத்தில் பத்து கெட்டப் போடும் கமல்ஹாசன் விஜயிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.

- பல்வேறு கலாச்சாரங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம். மலேசியா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பல்வேறு கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வையும் நேர்மையாக பதிவு செய்துள்ள திரைப்படம்

- நேட்டிவிட்டி. மலேசியாவில் இருக்கும் திரிசா 'லா' போட்டுத்தான் பேசுவார். ஆந்திரா கடப்பாவிலிருக்கும் வில்லன் ஆஷிஷ் வித்தியார்த்தி 'லு' போட்டு தெலுங்கில் தான் பேசுவார் (இவர் எப்போ தான் தமிழ் பேசி நடிப்பாரோ). அதே போல் வில்லனின் அடியாட்களும் தெலுங்கில் தான் பேசுவார்கள். இவ்வாறு யதார்த்தமாக நேட்டிவிட்டியுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் குருவி.

- ரவுடிகள் ஒழிப்பு. தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலயும் மட்டுமில்லாம மலேசியாவுக்கு போய் அங்கேயும் தனியாளா ரவுடிகளை அடிச்சு துவம்சம் பண்ண குருவியை விட்டா யார் இருக்கா?

- இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு கோபம், வெறுப்பு, ரென்சன் எல்லாமே போயிடும். உங்களுக்கு ஒரு சென்ஸும் இருக்காது. ஏன்னா இது ஒரு மிகச்சிறந்த சென்ஸ்லெஸ் திரைப்படம்.

- தன்னம்பிக்கை ஊட்டும் திரைப்படம். "குருவி மாதிரி ஒருத்தனே இந்த உலகத்துல இருக்கான். நமக்கென்ன"ன்னு ஓவ்வொருத்தருக்கும் தன்னம்பிக்கையை டன் கணக்கில் ஏற்றிவிடும் வெற்றித்திரைப்படம் குருவி.

- தொழில்நுட்பம்/ மருத்துவம் கற்பிக்கும் திரைப்படம். வெப் காமிராவே விஜயைப் பார்த்து கன்பீஸ் ஆவதும், இண்டர்நெட்டு ஈமெயில் மூலமாக விஜய் வில்லன்களை போலீஸிடம் மாட்டிவிடுவதும், வெப்காமிரா டிராலியில் சுத்துவதும் பாமரர்க்கும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் அ-புனைவு திரைப்படம். ஒரு ஒயரை அசைத்தால் கோமாவிற்கு போவதும் அதே ஒயரை அசைத்தால் கோமாவிலிருந்து மீண்டு வருவதும் மருத்துவ அதிசயங்கள்.

- கட்டமைக்கப்பட்ட பாரம்பரியங்களை உடைத்தெறியும் புரட்சித் திரைப்படம். மொத்த திரைப்படத்தையும் பார்த்தாலே உங்களுக்குத் தானாக புரியும்.

- இரண்டு பேரரசு, இரண்டு பி.வாசு, இரண்டு ஸ்ரீகாந்த் தேவா, இரண்டு விஜய் இணைந்து படமெடுத்தால் எவ்வளவு சிறப்பாக வருமோ அதை விடவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

- காமெடி, டிராஜடி, ரொமான்ஸ், டிராமா, ஆக்ஷன் என்று எந்த வகையிலும் பிரிக்க முடியாத திரைப்படம் இது. பார்ப்பவர்கள் இத்திரைப்படத்தை அவரவர்க்கு ஏற்றவாறு கொள்ளலாம். அப்படி அனைத்தும் கலந்த கலவை இத்திரைக்காவியம்.

- இந்த படத்தை பார்த்துவிட்டால் வேறு எந்த படமாக இருந்தாலும் பிடித்துவிடும்.

- எல்லாவற்றிற்கும் மேலாக இத்திரைப்படம் உங்கள் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்ட மிகச் சிறந்த மருந்து. இந்த படத்தை பார்த்துட்டீங்கன்னா அப்புறம் வாழ்க்கையில எதுவுமே கொடுமையா தெரியாது.

இந்த திரைக்காவியத்தைப் பார்க்க இதைவிட காரணம் வேண்டுமா என்ன? கண்டிப்பா பாருங்க மக்களே. குருவி 'நாமம்' வாழ்க!! இளைய தளபதி புகழ் ஓங்குக!!

நல்லாயிருங்க!!சிறுவர்களின் உலகம் - 2 (Pan's Labyrinth)

El Laberinto del Fauno (Pan's Labyrinth)

சிறுவர்களின் உலகம் கற்பனைகளாலும் கதைகளாலும் நிறைந்தது. உறக்கத்திலும் கூட கனவோடு கதைத்தபடி உறங்குகிறார்கள். சிறுவர்கள் விளையாடும்போது அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள் தானே? ஒவ்வொருவரும் ஏதாவதொரு கதையை சொன்னபடிதான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த கதைகளைக் கேட்கும் நிதானமோ அல்லது புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பெரும்பாலானோர்க்கு வாய்ப்பதில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் அவர்களுக்கேற்றவாறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். யதார்த்த உலகில் ஏற்படும் சம்பவங்களைத் தாங்கள் கேட்ட கற்பனைக் கதைகளுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் இன்னல்களைத் தீர்க்க தாங்கள் கேட்ட கதைகளின் நாயகர்கள் வருவார்கள் என்று நம்பிக் காத்திருக்கிறார்கள். அந்நாயகர்கள் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று உணர்ந்து வருந்தத் தேவையில்லாத வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.


12 வயது சிறுமி ஒஃபெலியா. எந்த நேரமும் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பவள். தான் படித்த மாயக்கதைகள் அனைத்தும் நிஜத்திலும் நடக்குமென நம்புபவள். அவளது தந்தை இறந்ததும் தாய் கார்மென் இராணுவ அதிகாரி விதால்-ஐ மணக்கிறார். ஒஃபெலியாவும் கர்ப்பிணியான கார்மென்னும் உள்நாட்டுப் போரின் காரணமாக ஒரு காட்டுப்பகுதியில் தன் படையினருடன் முகாமிட்டிருக்கும் விதாலிடம் செல்கிறார்கள். விதாலிடம் பணிபுரியும் மெர்சிடிஸ் ஒஃபெலியா மீது அன்பும் பரிவும் கொள்கிறார். ஆரம்பத்திலிருந்தே விதாலின் மேல் வெறுப்பு கொள்ளும் ஒஃபெலியா இறந்துபோன தன் தந்தையின் நினைவாகவே இருக்கிறாள்.

அன்றிரவு ஒரு பூச்சி ஒஃபிலியாவின் அறைக்குள் நுழைகிறது. ஒஃபெலியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது ஒரு தேவதையாக உருமாற்றம் கொள்கிறது. ஒஃபெலியாவை அருகிலிருக்கும் ஒரு சிக்கல்வழிக்கு(Labyrinth) அழைத்துச் செல்கிறது. அங்கே ஆட்டுத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு ஃபானை(Faun)க் காண்கிறாள். ஒஃபெலியா வேறொரு உலகத்தின் இளவரசி என்றும் அங்கிருந்து இந்த உலகத்திற்கு தப்பித்து வந்தவள் என்றும் அவளைத் தேடியே தான் வந்திருப்பதாகவும் அந்த ஃபான் கூறுகிறது. மீண்டும் இளவரசியாக தன் உலகத்திற்குத் திரும்ப பெளர்ணமி தினத்திற்கு முன் மூன்று செயல்களை முடித்தாக வேண்டுமெனச் சொல்கிறது. ஒரு முதிர்ந்த மரத்தினுள் வாழும் தவளையின் வாயிலிருந்து சாவியைக் கொணர்தல், மனிதர்களை உண்ணும் கொடிய ஜந்து இருக்கும் அறையில் இருந்து ஒரு கத்தியைக் கொண்டு வருதல் என ஒவ்வொன்றாக செய்து முடிக்கிறாள் ஒஃபெலியா.

அதே நேரத்தில் விதால் கொரில்லா படையினரை சிறிதும் கருணையின்றி சித்ரவதை செய்து கொன்று குவிக்கிறான். நோய்வாய்ப்பட்ட கார்மென், கொடூரனான விதாலினிடையே சிக்கிய ஒஃபெலியாவின் மேல் மெர்சிடிஸ் பரிவு காட்டுகிறாள். ஒஃபெலியாவும் மெர்சிடிஸிடம் அன்பு கொள்கிறாள். மெர்சிடிஸ் அங்கிருந்தவாறே மருத்துவர் மூலமாக கொரில்லா படையினருக்கு உதவுகிறாள். இதை அறிந்தும் ஒஃபெலியா அந்த ரகசியத்தைக் காக்கிறாள். கார்மெனின் உடல்நிலை சீரழிகிறது. ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு இரத்தப்போக்கில் இறக்கிறாள். மெர்சிடிஸ் கொரில்லா படையினருக்கு உதவுவதை அறிந்த விதால் அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறான்.

விதாலிடம் தப்பிக்க ஒரே வழி இளவரசியாக தன்னுலகிற்கு திரும்புவதுதான் என்று எண்ணும் ஒஃப்லியா ஃபானிடம் மூன்றாவது செயல் குறித்துக் கேட்கிறாள். ஒரு களங்கமில்லா உயிரின் ரத்தம் இருந்தால் அவ்வுலகின் கதவைத் திறக்க இயலும் என்று கூறும் ஃபான் ஒஃபெலியாவின் தம்பியை அங்கு கொண்டு வருமாறு சொல்கிறது. விதாலை ஏமாற்றிவிட்டு குழந்தையை அந்த சிக்கலறைக்கு கொண்டு வருகிறாள் ஒஃபெலியா. விதால் அவளைத் துரத்தி வருகிறான். குழந்தையைத் தன்னிடம் தருமாறும் அக்குழந்தையின் ரத்தத்தின் மூலம் கீழுலகின் கதவைத் திறப்பதாகவும் ஃபான் சொல்கிறது. குழந்தையைத் தர மறுக்கிறாள் ஒஃபெலியா. அதே நேரம் அங்கு வரும் விதால் குழந்தையை வாங்கிக்கொண்டு ஒஃபெலியாவைச் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். அங்கிருந்து வெளியே வரும் விதாலை கொரில்லா படையினர் எதிர்கொள்கின்றனர். மெர்சிடிஸ் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொள்ள விதால் கொல்லப்படுகிறான்.

சிக்கலறையினுள் ஒஃபெலியாவின் களங்கமில்லா குருதி கீழுலகின் கதவின் மீது சிந்த அவ்வுலகின் கதவு அவளுக்கு திறக்கிறது. அரண்மனை போன்ற அந்த மாளிகையில் ஃபான் அவளை வரவேற்கிறது. அரியணையில் அமர்ந்திருக்கும் இறந்துபோன அவளது தந்தையும் தாயும் அவளை வரவேற்று அரவணைக்கிறார்கள். நிஜ உலகில் இறந்துபோன ஒஃபெலியா தான் கனவு கண்டது போல கீழுலகின் இளவரசி ஆகிறாள்.

யதார்த்த உலகில் நடக்கும் சம்பவங்களையும் ஒஃபெலியாவின் கற்பனை உலகில் நடப்பவையையும் அருமையாகக் கோர்த்து ஒரு மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தரும் திரைப்படம் El Laberinto del Fauno. உள்நாட்டுப் போரினிடையே தந்தையை இழந்து தனிமையில் தவித்து கனவுலகில் சஞ்சரிக்கும் ஒரு சிறுமியின் மனோநிலை வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

மெல்லிய நகைச்சுவை இழையோடும் வசனங்களும் காட்சி வடிவமைப்புக்கேற்ற பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன. நடிகர்கள் அனைவருமே மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒஃபெலியாவாக இவான பெகேரோ(Ivana Bequero) மனதைக் கவர்கிறார். இராணுவ அதிகாரியாக குரூரமான விதால் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செர்ஜி லோபஸ்(Sergi Lopez) சிறப்பாக நடித்துள்ளார்.

ஒஃபெலியாவின் கற்பனையில் தோன்றுவதாகக் காட்டப்படும் மாற்று உலகில் உயிரினங்களும் மாளிகைகளும் கிராபிக்ஸில் வெகு அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. கிஷர்மோ தெல் தோரோவின் (Guillermo Del Toro) இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை ஆகியவற்றிற்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் கதையை விடவும் அது படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளும் இத்திரைப்படத்தை ஒரு சுகானுபவம் ஆக்குகின்றன.

யதார்த்த உலகில் விதாலின் குரூரத்திலிருந்து கோபத்திலிருந்தும் தப்பிக்க ஒஃபெலியா உருவாக்கும் கற்பனை உலகம் நம் மனதையும் இதமாக்குகின்றது. ஒஃபெலியா கனவுலகில் சஞ்சரிக்கிறாள் என்று தெரிந்தாலும் அவை உண்மையாகும் சாத்தியம் இல்லவே இல்லை என்பதை அறிந்தாலும் யதார்த்த உலகின் கொடூரங்களில் இருந்து தப்பித்து எப்படியாவது அவள் கீழுலகின் இளவரசியாக ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. ஆனால் நிஜத்தில், பல நேரங்களில், கற்பனைகள் சிறிதும் கருணையின்றிப் பொசுக்கப்படுகின்றன. நம் கற்பனைகள் அனைத்தும் நிஜமாகும் மாற்று உலகிற்கான சாவி எங்கோ ஒரு சிக்கலறையில் கொடிய விலங்கொன்றின் பாதுகாப்பில் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது.