சிறுவர்களின் உலகம் - 2 (Pan's Labyrinth)

El Laberinto del Fauno (Pan's Labyrinth)

சிறுவர்களின் உலகம் கற்பனைகளாலும் கதைகளாலும் நிறைந்தது. உறக்கத்திலும் கூட கனவோடு கதைத்தபடி உறங்குகிறார்கள். சிறுவர்கள் விளையாடும்போது அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள் தானே? ஒவ்வொருவரும் ஏதாவதொரு கதையை சொன்னபடிதான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த கதைகளைக் கேட்கும் நிதானமோ அல்லது புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பெரும்பாலானோர்க்கு வாய்ப்பதில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் அவர்களுக்கேற்றவாறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். யதார்த்த உலகில் ஏற்படும் சம்பவங்களைத் தாங்கள் கேட்ட கற்பனைக் கதைகளுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் இன்னல்களைத் தீர்க்க தாங்கள் கேட்ட கதைகளின் நாயகர்கள் வருவார்கள் என்று நம்பிக் காத்திருக்கிறார்கள். அந்நாயகர்கள் வெறும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று உணர்ந்து வருந்தத் தேவையில்லாத வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.


12 வயது சிறுமி ஒஃபெலியா. எந்த நேரமும் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பவள். தான் படித்த மாயக்கதைகள் அனைத்தும் நிஜத்திலும் நடக்குமென நம்புபவள். அவளது தந்தை இறந்ததும் தாய் கார்மென் இராணுவ அதிகாரி விதால்-ஐ மணக்கிறார். ஒஃபெலியாவும் கர்ப்பிணியான கார்மென்னும் உள்நாட்டுப் போரின் காரணமாக ஒரு காட்டுப்பகுதியில் தன் படையினருடன் முகாமிட்டிருக்கும் விதாலிடம் செல்கிறார்கள். விதாலிடம் பணிபுரியும் மெர்சிடிஸ் ஒஃபெலியா மீது அன்பும் பரிவும் கொள்கிறார். ஆரம்பத்திலிருந்தே விதாலின் மேல் வெறுப்பு கொள்ளும் ஒஃபெலியா இறந்துபோன தன் தந்தையின் நினைவாகவே இருக்கிறாள்.





அன்றிரவு ஒரு பூச்சி ஒஃபிலியாவின் அறைக்குள் நுழைகிறது. ஒஃபெலியா பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது ஒரு தேவதையாக உருமாற்றம் கொள்கிறது. ஒஃபெலியாவை அருகிலிருக்கும் ஒரு சிக்கல்வழிக்கு(Labyrinth) அழைத்துச் செல்கிறது. அங்கே ஆட்டுத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு ஃபானை(Faun)க் காண்கிறாள். ஒஃபெலியா வேறொரு உலகத்தின் இளவரசி என்றும் அங்கிருந்து இந்த உலகத்திற்கு தப்பித்து வந்தவள் என்றும் அவளைத் தேடியே தான் வந்திருப்பதாகவும் அந்த ஃபான் கூறுகிறது. மீண்டும் இளவரசியாக தன் உலகத்திற்குத் திரும்ப பெளர்ணமி தினத்திற்கு முன் மூன்று செயல்களை முடித்தாக வேண்டுமெனச் சொல்கிறது. ஒரு முதிர்ந்த மரத்தினுள் வாழும் தவளையின் வாயிலிருந்து சாவியைக் கொணர்தல், மனிதர்களை உண்ணும் கொடிய ஜந்து இருக்கும் அறையில் இருந்து ஒரு கத்தியைக் கொண்டு வருதல் என ஒவ்வொன்றாக செய்து முடிக்கிறாள் ஒஃபெலியா.

அதே நேரத்தில் விதால் கொரில்லா படையினரை சிறிதும் கருணையின்றி சித்ரவதை செய்து கொன்று குவிக்கிறான். நோய்வாய்ப்பட்ட கார்மென், கொடூரனான விதாலினிடையே சிக்கிய ஒஃபெலியாவின் மேல் மெர்சிடிஸ் பரிவு காட்டுகிறாள். ஒஃபெலியாவும் மெர்சிடிஸிடம் அன்பு கொள்கிறாள். மெர்சிடிஸ் அங்கிருந்தவாறே மருத்துவர் மூலமாக கொரில்லா படையினருக்கு உதவுகிறாள். இதை அறிந்தும் ஒஃபெலியா அந்த ரகசியத்தைக் காக்கிறாள். கார்மெனின் உடல்நிலை சீரழிகிறது. ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்துவிட்டு இரத்தப்போக்கில் இறக்கிறாள். மெர்சிடிஸ் கொரில்லா படையினருக்கு உதவுவதை அறிந்த விதால் அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறான்.





விதாலிடம் தப்பிக்க ஒரே வழி இளவரசியாக தன்னுலகிற்கு திரும்புவதுதான் என்று எண்ணும் ஒஃப்லியா ஃபானிடம் மூன்றாவது செயல் குறித்துக் கேட்கிறாள். ஒரு களங்கமில்லா உயிரின் ரத்தம் இருந்தால் அவ்வுலகின் கதவைத் திறக்க இயலும் என்று கூறும் ஃபான் ஒஃபெலியாவின் தம்பியை அங்கு கொண்டு வருமாறு சொல்கிறது. விதாலை ஏமாற்றிவிட்டு குழந்தையை அந்த சிக்கலறைக்கு கொண்டு வருகிறாள் ஒஃபெலியா. விதால் அவளைத் துரத்தி வருகிறான். குழந்தையைத் தன்னிடம் தருமாறும் அக்குழந்தையின் ரத்தத்தின் மூலம் கீழுலகின் கதவைத் திறப்பதாகவும் ஃபான் சொல்கிறது. குழந்தையைத் தர மறுக்கிறாள் ஒஃபெலியா. அதே நேரம் அங்கு வரும் விதால் குழந்தையை வாங்கிக்கொண்டு ஒஃபெலியாவைச் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். அங்கிருந்து வெளியே வரும் விதாலை கொரில்லா படையினர் எதிர்கொள்கின்றனர். மெர்சிடிஸ் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொள்ள விதால் கொல்லப்படுகிறான்.

சிக்கலறையினுள் ஒஃபெலியாவின் களங்கமில்லா குருதி கீழுலகின் கதவின் மீது சிந்த அவ்வுலகின் கதவு அவளுக்கு திறக்கிறது. அரண்மனை போன்ற அந்த மாளிகையில் ஃபான் அவளை வரவேற்கிறது. அரியணையில் அமர்ந்திருக்கும் இறந்துபோன அவளது தந்தையும் தாயும் அவளை வரவேற்று அரவணைக்கிறார்கள். நிஜ உலகில் இறந்துபோன ஒஃபெலியா தான் கனவு கண்டது போல கீழுலகின் இளவரசி ஆகிறாள்.

யதார்த்த உலகில் நடக்கும் சம்பவங்களையும் ஒஃபெலியாவின் கற்பனை உலகில் நடப்பவையையும் அருமையாகக் கோர்த்து ஒரு மிகச் சிறப்பானதொரு அனுபவத்தைத் தரும் திரைப்படம் El Laberinto del Fauno. உள்நாட்டுப் போரினிடையே தந்தையை இழந்து தனிமையில் தவித்து கனவுலகில் சஞ்சரிக்கும் ஒரு சிறுமியின் மனோநிலை வெகு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.





மெல்லிய நகைச்சுவை இழையோடும் வசனங்களும் காட்சி வடிவமைப்புக்கேற்ற பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்றச் செய்கின்றன. நடிகர்கள் அனைவருமே மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒஃபெலியாவாக இவான பெகேரோ(Ivana Bequero) மனதைக் கவர்கிறார். இராணுவ அதிகாரியாக குரூரமான விதால் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செர்ஜி லோபஸ்(Sergi Lopez) சிறப்பாக நடித்துள்ளார்.

ஒஃபெலியாவின் கற்பனையில் தோன்றுவதாகக் காட்டப்படும் மாற்று உலகில் உயிரினங்களும் மாளிகைகளும் கிராபிக்ஸில் வெகு அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. கிஷர்மோ தெல் தோரோவின் (Guillermo Del Toro) இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை ஆகியவற்றிற்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தின் கதையை விடவும் அது படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளும் இத்திரைப்படத்தை ஒரு சுகானுபவம் ஆக்குகின்றன.

யதார்த்த உலகில் விதாலின் குரூரத்திலிருந்து கோபத்திலிருந்தும் தப்பிக்க ஒஃபெலியா உருவாக்கும் கற்பனை உலகம் நம் மனதையும் இதமாக்குகின்றது. ஒஃபெலியா கனவுலகில் சஞ்சரிக்கிறாள் என்று தெரிந்தாலும் அவை உண்மையாகும் சாத்தியம் இல்லவே இல்லை என்பதை அறிந்தாலும் யதார்த்த உலகின் கொடூரங்களில் இருந்து தப்பித்து எப்படியாவது அவள் கீழுலகின் இளவரசியாக ஆகிவிட வேண்டும் என்ற ஏக்கம் எழுகிறது. ஆனால் நிஜத்தில், பல நேரங்களில், கற்பனைகள் சிறிதும் கருணையின்றிப் பொசுக்கப்படுகின்றன. நம் கற்பனைகள் அனைத்தும் நிஜமாகும் மாற்று உலகிற்கான சாவி எங்கோ ஒரு சிக்கலறையில் கொடிய விலங்கொன்றின் பாதுகாப்பில் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது.



11 பின்னூட்டங்கள்:

சொன்னது...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்தில் காட்சிகள் அப்படியே தெரிகிறது. சிக்கலான இடங்களைக்கூட நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இன்றுதான், கியேர்மோ டெல் தோரோ, The Hobbit படத்தையும் இயக்கவிருப்பதாக அறிந்தேன். பான்ஸ் லாப்ரிந்த் போல, அந்தப்படமும் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் தொடர் பிடித்திருக்கிறது. முதலாவது பகுதியில் சொன்ன படத்தைப் பார்க்கவில்லை. தேடல் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். முடிந்தளவு பல்வேறு நாடுகளிலும் இருக்கும் அருமையான சிறுவர்களின் உலகைச் சித்தரிக்கும் படங்களைப்பற்றிப் பேசுவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

-மதி

சொன்னது...

மிக்க நன்றி மதி!! தங்கள் பாராட்டுதல் ஊக்கமளிக்கிறது!!

இதே தொடரில் இன்னும் சில திரைப்படங்கள் குறித்து எழுத எண்ணியிருக்கிறேன். என்னால் இயன்றவரை அறிமுகம் கொடுக்க முயல்கிறேன்.

நன்றி!!

சொன்னது...

இவ்வளவு விரிவாக கூடவா விமர்சிக்க இயலுமா .....என் வியக்க வைத்துவிட்டது உங்கள் எழுத்து நடை!

தொடருங்கள்......

சொன்னது...

//ஒஃபெலியாவின் கற்பனையில் தோன்றுவதாகக் காட்டப்படும் மாற்று உலகில்

நடக்கும் மாய அம்சங்கள் எல்லாம் ஒஃபேலியாவின் கற்பனை என்பது ஒரு interpretation இருந்தாலும், அவை உண்மை என்றும் சொல்லலாம். டெல் டோரோ வேண்டுமென்றே, கற்பனையா உண்மையா என்ற கேள்விக்கான விடையை பார்வையாளர்களிடம் விட்டு விட்டதாக சொல்லியிருக்கிறார்.

IMDB இல் இதைப் பற்றி விவாதங்கள் நடந்திருக்கின்றன. மாயவாத காட்சிகள் உண்மையே அவை ஒஃபேலியாவின் கற்பனை அல்ல என்பவர்களுக்கு ஆதரவாக் டெல் டோரோ ஒரு காட்சியை விட்டு வைத்துள்ளார் -ஃபான் கொடுத்த சுண்ணாம்பு கட்டியை கொண்டு, ஒஃபேலியா சமையலறைக்கு கதவு வரைந்து தப்பி ச் செல்லம் காட்சி.

சொன்னது...

திவ்யா

நன்றி!


பாலா

நீங்கள் சொல்வது சரிதான். படத்தில் நடக்கும் சம்பவங்களை உண்மை என்றும் கொள்ளலாம் ஒஃபெலியாவின் கற்பனை என்றும் கொள்ளலாம்.இதுவே இப்படத்தின் சிறப்பும் கூட...ஆனால்..

//ஃபான் கொடுத்த சுண்ணாம்பு கட்டியை கொண்டு, ஒஃபேலியா சமையலறைக்கு கதவு வரைந்து தப்பி ச் செல்லம் காட்சி.//

நீங்கள் சொல்லும் இதே காட்சியில் தனிமையில் இருக்கும்போது ஒஃபெலியா ஃபான் சொன்னபடி கத்தியைக் கொணரப் போகும்போது சுண்ணாம்புக் கட்டியால் சுவற்றில் கதவு வரைந்து செல்வாள். ஆனால் இறுதிக்காட்சியில் தன் தம்பியை விதாலின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச்செல்லும் காட்சியில் அந்த சுண்ணாம்புக் கட்டி உடைந்துவிடும். அவளால் அதை வைத்து சுவற்றில் கதவு வரைய முடியாது. எனவே அந்த அறையின் கதவு வழியாக தப்பிக்கும்போது விதால் பார்த்துவிடுவான். தனிமையில் இருக்கும்போது சுவற்றில் கதவு உண்டாக்க உதவும் சுண்ணாம்புக் கட்டி விதாலின் அறையில் உடைந்துவிடுகிறது. இதிலிருந்து மாய சம்பவங்கள் ஒஃபெலியாவின் கற்பனை என்று கொள்ளலாம். இவ்வாறே என் புரிதல் அமைந்திருக்கிறது.

(சுண்ணாம்பு கட்டி தனியாக இருக்கும்போது மட்டும் வேலை செய்யும் தன்மை உடையது. மற்றவர்கள் முன் உபயோகித்தால் உடைந்துவிடும் என்று கூறி கற்பனை அல்ல என்றும்கூட சொல்லலாமோ :)))

சொன்னது...

நல்ல விமர்சனம் கப்பி..;)

சொன்னது...

நல்ல விமர்சனம் கப்பி.... சமிபத்திலே டிஸ்னி தயாரிப்பான "bridge to terabithia" படம் பார்த்தேன்... கிட்டதட்ட இதேமாதிரியான வேறு உலகம் பற்றி கனவு காணும் சிறுவர்கள் பற்றிய கதையது.....

சொன்னது...

i had seen this movie!
Had found it too bloody and gory for my taste!
:-S

சொன்னது...

கோபிநாத்

நீயா?நானா கோபிநாத் இஷ்டைலுல 'நெஞ்சார்ந்த நன்றிகள்' :))


இராம்

நீங்க சொல்லியிருக்க படம் இன்னும் பாக்கல...கூடிய சீக்கிரம் பாக்கறேன் :))

சிவிஆர்

ஆமா அண்ணாச்சி..கொஞ்சம் இரத்தம் அதிகமாத்தான் இருக்கும்..அதுவும் உங்களுக்கு ரொம்பவே அதிகமா இருந்திருக்கும் :)

சொன்னது...

இடுகையைப் படித்த கையோடு உடனே படத்தைப் பார்த்து விட்டேன். அருமை. அருமை. அருமை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. மதி சொன்னது போல் சிக்கலான காட்சிகளையும் எளிதாக விவரித்து இருக்கிறீர்கள்.

சொன்னது...

ரவிசங்கர்

நன்றி! :)