பாட்டுத் தலைவன் பாடினால்

"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"

அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.

"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"

"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.


சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.


பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.





அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.


கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.


உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.




என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.

அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன்.


சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு.


கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.