இறப்பும் இறப்பு சார்ந்தும்

மடியிலேயே இறந்த நண்பனின் இறுதி நேர துடிதுடிப்பை என் கைகளின் நடுக்கம் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. "மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" அவன் உதிர்த்த கடைசி வார்த்தைகள் வலியை அதிகமாக்குகின்றன. காயத்தைச் சுற்றி கட்டியிருக்கும் துணியையும் மீறி முன்நெற்றியிலிருந்து வழியும் இரத்தம் பிசுபிசுத்தபடி இருக்கிறது. சட்டையில் படிந்துள்ள அவனது இரத்தம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது. மரணம் குறித்த பயம் மனதைக் கவ்வுகிறது. அவன் மனைவியிடம் மரணத்தை சொல்லப்போகும் தருணத்தை நினைக்கையில் பயம் அதிகரிக்கிறது. மரண செய்தியை சொந்தங்களுக்கு அறிவிப்பதை விட கொடியது வேறெதும் இருக்குமா என்று தெரியவில்லை.

சரவணன் பத்து வருடமாக பழகிய நண்பன். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமானான். இருவரும் ஒரே வகுப்பு. அன்றிலிருந்து இன்று இரண்டு மணி நேரம் முன்பு வரை ஒன்றாகவே இருந்தோம். அவன் என் மடியிலேயே இறந்தபோதும் அவன் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது.

ஒரே வகுப்பில் ஒன்றாக தூங்கியது, அரியர்ஸ் வைத்து க்ளியர் செய்தது, ஒன்றாக சென்ற திரையரங்குகள், வேலை தேடிய காலங்களில் கையில் பணமில்லாமல் ஒரே டீயையும சிகரெட்டையும் துண்டு பீடியையும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்தது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.

படிப்பு முடிந்து ஆறு மாதங்கள் இருவரும் வேலை தேடி அலைந்தோம். எனக்கு தி.நகரில் ஒரு கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அவன் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்கு சாந்தி பழக்கமானாள். அவள் எங்கள் மேன்ஷன் அருகில் இருந்த கூல்டிரிங்க்ஸ் கடையில் வேலை செய்து வந்தாள். இதைப் பற்றி என்னிடம் சரவணன் சொல்லும்போதே வேலைக்குச் சென்று சிறிது சம்பாதித்த பின் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். சாந்தியின் வீட்டிலும் இப்போதைக்கு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்றும் பிரச்சினை எதுவும் வராது என்றும் நம்பிக்கையுடன் கூறினான்.

நான் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கும் வேலை கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆடிட்டருக்கு உதவியாளனாக சேர்ந்தான். என்னை விட ஆயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் வாங்குவதாகப் பெருமையாக சொல்லி குவாட்டர் வாங்கித்தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

சரவணனுக்கு நான் தான் ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து வைத்தேன். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. இருவரின் வீட்டிலும் உடன்பிறந்தவர்கள் யாருமில்லையென்றாலும் பெற்றோர்கள் எதிர்த்தனர். இருவர் வீட்டிலும் நானே சென்று நேரில் பேசினேன். அவனுடைய தந்தை என்னை அடிக்க கை ஓங்கியபோது குறுக்கே தடுத்து அவரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே வந்தவன் அதற்குப் பிறகு வீட்டிற்கு செல்லவில்லை. பல்லாவரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். சாந்தி வீட்டருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள்.

கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளாக வேலை செய்துவந்தோம். சென்னையை சுற்றியிருக்கும் ஊர்களுக்கு சென்று விற்கத் தயாராக இருக்கும் நிலங்களைப் பார்த்து நிலத்தின் உரிமையாளர்களிடம் விலை பேசுவோம். பிறகு இங்கு நிலம் வாங்குவதற்காக எங்களை அனுகுபவர்களுக்கு முடித்துக் கொடுப்போம். வரும் கமிஷனில் ஆளுக்குப் பாதியாக பகிர்ந்துகொள்வோம்.

இன்றும் கேளம்பாக்கம் அருகில் ஒரு நிலத்தை பார்க்கச் சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப மாலை ஆறு ஆகிவிட்டது. அங்கிருந்து தாம்பரம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினோம். காலியாக இருந்த பேருந்தில் இரண்டு பேர் சீட்டில் அமர்ந்தோம். அடுத்த நாள் செங்கல்பட்டு செல்வதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே பேருந்து குலுங்கியது. எதிரில் வந்துகொண்டிருந்த லாரியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி பேருந்தின் ஒரு பக்கத்தை கிழித்தவாறே வந்துகொண்டிருந்தது. விபத்தின் அதிர்வில் நான் முன்னிருக்கையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்க்கையில் பேருந்திலிருந்து பிய்ந்திருந்த தகடு ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்த சரவணனின் இடுப்பைக் கிழித்திருந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இறந்திருந்தனர். பேருந்து எங்கும் மரண ஓலம். என் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

இதற்குள் விபத்தில் அடிபடாமல் தப்பித்த மற்ற பயணிகளும் மக்களும் அடிபட்டவர்களை தூக்கி கீழே இறக்கினர். நான் சரவணனை அவன் இருக்கையில் இருந்து தூக்கினேன். இன்னொருவர் அவன் காலைப் பிடிக்க அவனை பேருந்திலிருந்து கீழே இறக்கினோம். அங்கிருந்த பலர் செல்போன்களில் ஆம்புலன்ஸுக்கும் அவசர போலீசுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த இன்னொரு அரசு பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டு எங்களை ஏற்றினார்கள். சரவணனை மடியில் கிடத்தியபடி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். சரவணனின் சட்டை முழுக்க இரத்தம் ஊறி சிவப்பாகிவிட்டிருந்தது. என் சட்டையைக் கழற்றி இடுப்பில் வெட்டிப் பட்டிருந்த காயத்தை அழுத்திப் பிடித்தேன். பேருந்து தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரட்டினார்கள். என் காலடியில் அடிபட்ட ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்.

பேண்ட் பாக்கெட்டில் கர்ச்சீப் எடுக்கும்போதுதான் சரவணனின் வலதுகை உடைந்து சதை பிய்ந்திருப்பதைக் கவனித்தேன். அவன் கையைத் தூக்கி மேலே வைக்கும்போது வலியில் துடிதுடித்தான். பேருந்து வண்டலூரை நெருங்கியது. மயக்கத்திலிருந்த சரவணன் வலியில் முனகிகொண்டிருந்தான். அருகிலிருந்தவர் அவனிடம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும்படியும் மயங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக்கொண்டிருந்தார். அவனிடம் "சரவணா ஒன்னும் ஆகாதுடா. தைரியமா இரு. இன்னும் அஞ்சே நிமிஷம்டா. பொருத்துக்கோ" என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தேன்.

"மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" என்று வலியில் அவன் முனகியது என் உயிரை உலுக்கியது. "ஒன்னும் ஆவாதுடா, தைரியமா இரு" என்று உதட்டளவில் சொன்னேனே தவிர மரண பயம் நெஞ்சைக் கவ்வியது.

பேருந்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரண்டு மூன்று பேர் பேருந்திலிருந்து இறங்கி முன்னால் உள்ள வண்டிகளை நகர்த்த சொல்லி வழி ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

வண்டி மீண்டும் வேகமெடுக்கையில் சரவணன் துடிக்க ஆரம்பித்தான். உடல் குலுங்க ஆரம்பித்தது. அவன் கைகாலகளை அழுத்திப் பிடித்தும் நடுக்கம் குறையவில்லை. பத்து நொடிகள் துடித்து சட்டென அடங்கிப் போனான். என் நண்பன் என் மடியிலேயே உயிரை விட்டான்.

அவன் இறந்த அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை. நாவும் கண்களும் வறண்டுபோயிருந்தன. மருத்துவமனையில் அவனை பிணவறைக்கு கொண்டுசென்றனர். ஒரு இயந்திரத்தைப் போல் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அங்கேயே அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். சாந்திக்கு போன் செய்யவும் தோன்றவில்லை. சாந்திக்கு போன் செய்வதைக் காட்டிலும் நேரில் சொல்வதுதான் சரி என அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். போகும் வழியெங்கும் சரவணனின் நினைவுகளே அலைகழித்துக்கொண்டிருக்கிறது.

நேராக சாந்தி வேலை செய்யும் பள்ளிக்குச் சென்றால் அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். என்ன ஆகியதோ என்ற பயத்துடன் வேகமாக வீடு நோக்கி நடந்தேன். சாந்தி "வாங்கண்ணா. அவர் வேற சைட் ஏதாவது பார்க்க போயிருக்காரா?" என்றபடி கதவைத் திறந்தாள். பின் அவளாகவே "மயக்கமா இருந்துச்சுன்னு டாக்டர்ட்ட போய் காட்டினேண்ணா. இரண்டு மாசமாம். நீங்க மாமா ஆகப் போறீங்க" என்றாள். நான் உடைந்து அழத்தொடங்கினேன்.நேஷனல் ஜியோகப்பி சேனல்

தமிழ் சேனல்ல எதிலயுமே நல்ல நிகழ்ச்சி போட மாட்டறாங்க. புதுசா வர்ற படமெல்லாமும் மொக்கையாவே இருக்கு. இதுக்கெல்லாம் ஒரே வழி இனி NGC,அனிமல் ப்ளானெட் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்த்து அறிவை வளர்த்துக்கறதுதான்னு முடிவெடுத்தேங்க. இதை என் நண்பன்கிட்ட சொன்னா "தமிழ்படங்கள்ல ஹீரோயின் இருக்க ரூமுக்குள்ள நுழையுமே கரப்பான்பூச்சி...அதுக்கு எத்தனை காலு அதை முதல்ல சொல்லு பார்க்கலாம்"ன்னு கலாய்க்கிறான். படத்துல கரப்பான்பூச்சியை நாம பார்த்தா தானே?

என்னடா இது நமக்கு வந்த சோதனைன்னு மனசுல நினைச்சுட்டே அனிமல் ப்ளானெட் வச்சா அஞ்சு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல. தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடுது. அந்த நேரத்துல புதுமுக நடிகை பூர்ணிகா அவங்க வீட்டு நாய்க்குட்டி பத்தி எஸ்.எஸ். ம்யூசிக்ல பேசிட்டிருந்தாங்க. இதுலயும் விலங்குபத்தி தானே சொல்றாங்கன்னு அவங்களைப் பார்த்து கொளுகையை மறந்துட்டேன்.

சாதாரணமாவே பாம்பு பல்லியெல்லாம் பார்த்தா பயத்துல பசியெடுக்க ஆரம்பிச்சிடும். இதுல காட்டுவிலங்குகளைப் பத்தி எப்படி கத்துக்கறதுன்னு ஒரே குழப்பமாயிடுச்சு. இங்கிலீஷ் சேனல் பார்த்தாதான் ஒன்னும் புரியலயே தமிழ்படமா பார்த்து கத்துக்கலாம்னு டி.ஆர் படம், இராம.நாராயணன் படம் சிடியெல்லாம் வாங்க கடைக்கு போனா கடைக்காரன் ஏதோ விநோத ஜந்துவை பார்க்கற மாதிரி பார்க்கறான்.

படம் பார்த்து கத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் மகேந்திரனின் வனவாசம் படிச்சோ இயற்கைநேசியின் பதிவுகளை படிச்சோ அறிவை வளர்த்துக்கலாம் முடிவெடுத்தேங்க. ஆனா அவங்க பதிவை பாதி படிச்சுட்டிருக்கும்போதே ஒரு கும்மி பதிவோ மொக்கை பதிவோ வந்து அந்த ஜோதியில ஐக்கியமாயிடறேன் :))

ஓணான் ஒன்னுக்கிருக்கறதை படம் பிடிக்கறது, மைனாவை சைட் அடிக்கறது, சும்மா இருந்த நாய்கிட்ட கையைக் கொடுத்து கடிவாங்கிட்டு அதே நாயை போட்டோ புடிக்கறதுன்னு நம்ம தல ஒலகமகா ஒளி ஓவியரா இருக்காரு. அவர் வழியில 'தலயின் வாரிசு' இராயலும் "ஆகீத்தா ஐவத்து ஆகலைனா கும்மாங்குத்து"ன்னு படம் புடிச்சு வச்சிருக்காரு. நாமளும் அதே வழியை ஃபாலோ பண்ணவேண்டியதுதான்ன்னு முடிவெடுத்து எடுத்த வீடியோ தான் கீழே இருக்கறது. பார்த்து துப்பிட்டு போங்க மக்களே.யப்பா...ஒரு முப்பது செகண்ட் படம் காட்டறதுக்கு எவ்வளவு மொக்கை போட வேண்டியிருக்கு!!!

படம் எடுத்து பார்த்ததும்தான் எனக்கு இதிலயும் நிறைய சந்தேகம் வந்துச்சு. இதுல மொத்தம் எத்தனை எறும்புகள் இருக்கு? ஒவ்வொரு முறையும் எறும்புகள் ஒரே ஒரு மண் துகளைத்தான் எடுத்துட்டு வருமா அதுக்கு மேலயும் எடுத்துட்டு வருமா? ஒரு பக்கம் மட்டும் தூர் வாறின மண்ணைப் போடாம காலியா இருக்கே..அதான் வெளியே வர்ற வழியா?

இப்படி மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் 'தல'யை அடமானம் வைத்தாவது பதில் கண்டுபிடிச்சு நானும் ஒரு நாள் விலங்குகளுக்காக ஒரு தனி சேனல் ஆரம்பிக்கனும் என்பதுதான் இப்போதைய லட்சியம்.மதுரை 625015

மதுரை 625015. திருப்பரங்குன்றம். தியாகராசர் பொறியியற் கல்லூரி. ஆண்கள் விடுதி.

Rangers
அம்பலவான சுவாமிகள்
டவுசர் பாண்டிஸ்
ஏழரை
Drizzlers
மொக்கையன்ஸ்
Spiders
Rockers
Storm
Band of Brothers
கசமுசா
கவர்ன்மெண்ட் ஒயின்ஸ்
கிங்ஸ்
MC
கல்யாணி
மகாராஜா (திருப்பரங்குன்றம் தியேட்டர் பேருங்கோவ்)
Satanic samurais

இவையெல்லாம் கிரிக்கெட் அணிகளின் பெயர்கள். கல்லூரி விடுதியில் வெள்ளொளி கிரிக்கெட் போட்டிகள் வருடாவருடம் பிப்ரவரி மாதம் தவறாமல் நடக்கும். அணிக்கு எட்டு பேர். நுழைவுக் கட்டணம் ஐம்பது ரூபாய்.டென்னிஸ் பந்து. பெளலிங் கிடையாது. அதிகபட்சம் இரண்டு அடிகள் எடுத்துவைத்து கையைச் சுற்றாமல் வீசலாம்(Chucking). லீக் ஆட்டங்களுக்கு தலா எட்டு ஓவர்கள். காலிறுதி போட்டிக்கு பத்து ஓவர்.அரையிறுதி போட்டிகளுக்கு பன்னிரெண்டு ஓவர்கள். இறுதிப் போட்டி பதினைந்து ஓவர்கள்.

முதலாண்டு மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும். மிரட்டியாவது சேர்க்கப்படுவார்கள். ஆடத்தெரியாவிட்டாலும் 50 ரூபாய் கொடுக்க வேண்டும்.

லீக் ஆட்டங்களில் எப்போதும் நான்காம் ஆண்டு அணிகள் முதலாண்டு அணிகளோடும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு அணிகளோடும் ஆடுவார்கள். அப்போதுதான் இறுதியாண்டு மாணவர்கள் சுலபமாக காலிறுதி வரை வர முடியும். ;)

முதலாண்டு மாணவன் பேட்டிங் செய்ய இறங்கும்போதே எப்படி அவுட் ஆக விருப்பம் என கேட்டுவிடுவோம். அவன் விருப்பம் போல் குச்சி கழண்டோ, காட்ச் கொடுத்தோ ரன் அவுட்டோ ஆகலாம். முதலாண்டு மாணவன் நான்கு ரன் அடித்தாலும் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். ஒரு ஓவருக்கு அவன் எவ்வளவு அடித்தாலும் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து ரன்கள் மட்டுமே ஸ்கோரில் ஏறும். இதே இறுதியாண்டு மாணவனாக இருந்தால் இரண்டு அடித்தால் நான்கு, நான்கு அடித்தால் ஆறு. ஒரே ரணகளம் தான். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் லவுட் ஸ்பீக்கரில் ஒரு குத்து பாட்டு போட்டு குத்தாட்டம் தான்.

இறுதியாண்டு மாணவர்கள்தான் அம்பயர்களாக இருப்பார்கள். எதிரணியில் ஜூனியர் எவனாவது தொடர்ந்து அடித்து ஆடினால் யோசிக்காமல் அவுட் கொடுக்கப்படும். Benefit of doubt எப்போதுமே இறுதியாண்டு அணிக்குத் தான் :)

காலிறுதி சுற்று ஆரம்பித்ததும் போட்டிகள் சூடுபிடித்துவிடும். சண்டை அடிதடி என அல்லோலப்படும். இறுதியாண்டு அணியை எப்போதும் தோற்கவிட மாட்டோம். அப்படியே தோற்பது போலிருந்தால் ஜூனியர்களை அழைத்து "டேய் எப்படியும் அடுத்த வருசம் நீங்க விளையாடுவீங்க. எங்களுக்கு இது தான் கடைசி. அடுத்த வருசம் நீங்க ஜெயிச்சுக்குங்க.இந்த வருசம் விடுங்கடா" என ஃபீலிங் டயலாக்கோ "டேய் ஒழுங்கா மரியாதையா தோத்துடுங்கடா. இல்ல ஒருத்தனும் ஒழுங்கா கிரவுண்டை விட்டு வெளிய வர மாட்டீங்க" என அன்பாகவோ பேசி ஜெயிக்க வைப்போம்.

இந்த போட்டிகளின் ஹைலைட்டே கமெண்ட்ரிதான். மாலை ஐந்து மணியிலிருந்தே போட்டிகள் ஆரம்பித்தாலும் இரவு எட்டு மணிக்கு மேல் கல்லூரி காலி ஆனபின் தான் கமெண்ட்ரி சூடுபிடிக்கும். மற்றவர்களை ஓட்டுவதும், மைக்கிலேயே ஜூனியரை அவுட் ஆகி வெளியே வருமாறு அழைப்பதும், ஸ்கோரை குறைத்து சொல்வதும், கடலை போடுபவர்களையும் இலை பறிப்பவர்களையும் கெட்ட வார்த்தையில் வைவதுமென ஜாலியாக இருக்கும். பல பேரின் காதல் கோட்டைகள் கமெண்டேட்டர்களின் வாயில் இடிந்து சுக்குநூறாகும்.

அன்பே
அனிதா
நீ எனக்கு
ஹனி தா!

என கவுஜ அரங்கேற்றமும் நடக்கும்.

கண்டிப்பாக தினம் ஒரு அடிதடியாவது அரங்கேறும். மின்விளக்குகள் உடைபடும். போட்டி நடத்தும் ரெப்புகள் பணம் அடிப்பதாக கம்ப்ளெயிண்டுகள் வரும். ஏமாற்றி தோற்கடிக்கப்பட்டதாக விவாதங்கள் நடக்கும். வேண்டுமென்றே வலுவான அணியுடன் மோத வைத்து தோற்கடிக்கப்பட்டதாக சண்டை எழும். சண்டை போட்டதும் குத்து பாட்டுக்கு சேர்ந்து குத்தாட்டம் போடுவார்கள். போட்டி நடக்கும் நான்கு நாட்களும் திருவிழா தான்.

வருடம் முழுக்க கிரிக்கெட்டே கதி என இருந்தாலும் இந்த நான்கு நாட்கள் இரவும் பகலும் மைதானத்திலேயே தான்.

கல்லூரி முடிந்ததும் விடுதி அறையை காலி செயவதற்கு முன் 'இனி கிரிக்கெட்டே விளையாடப் போவதில்லை' என்பது போல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அந்த நான்கு நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது.

இன்றும் விடுதி நண்பர்கள் யாரையாவது தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் கேட்கப்படும் மூன்றாவது கேள்வி "இப்பவும் கிரிக்கெட் விளையாடறயாடா?" என்பதாகத் தான் இருக்கிறது.சென்னை-600028

சுண்ணாம்புக் கால்வாய் என்றழைக்கப்படும் விசாலாட்சிபுரம் கிரிக்கெட் டீம் ஷார்க்ஸ்(Sharks) அணியினரைப் பற்றிய படம். நான்கு இளைஞர்களை வைத்து படம் எடுத்தாலே நாலு பேருக்கும் சேர்த்து ஆறு லவ் ட்ராக், வேலை இல்லாமல் வெட்டியாய்த் திரிதல், பெற்றோரை திட்டுவது, பெற்றோர்கள் இவர்களைத் திட்டுவது, ட்ரிபிள் மீனிங் காமெடி என ஒரு வட்டத்துக்குள்ளே சுற்றாமல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து சுவாரசியமான படமாக எடுத்திருக்கும் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்ட வேண்டும்.

ஷார்க்ஸ் கிரிக்கெட் அணிக்கும் ராக்கர்ஸ் அணிக்கும் பல வருடமாக வாய்க்கால் தகராறு. இந்த நிலையில் ராக்கர்ஸ் அணியிலிருக்கும் கார்த்திக் குடும்பத்தினர் விசாலாட்சிபுரம் ஏரியாவிற்கு வீடு மாறி வருகின்றனர். அவனுக்கும் மற்ற இளைஞர்களுக்குமான முறைப்பு, மோதல் என முதல்பாதி செம ஜாலியாகப் போகிறது. இடையில் காபி ஷாப்பில் வேலை செய்பவனுக்கு ஒரு லவ் ட்ராக், கிரிக்கெட் அணியின் கேப்டன் கார்த்திக்கு பழனியின் தங்கையுடன் ஒரு லவ் ட்ராக். அதற்கு பின் நண்பர்களிடையே ஏற்படும் மனத் தாங்கல்கள், சமரசங்கள், கிரிக்கெட் டோர்னமெண்ட், குழுக்களுக்கிடையான சண்டை என வேகமாக செல்லும் திரைக்கதைக்குத் தடையாக வலிந்து திணிக்கப்பட்ட இரண்டு டூயட் பாடல்கள்.அசத்தலான பாடி லேங்குவேஜ், அளவான நடிப்பு, டயலாக் டெலிவரி என பத்து பசங்களும் கலக்கியிருக்கிறார்கள். முக்கியமாக வெங்க்ட் பிரபுவின் தம்பி பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். டைமிங் காமெடியும் வசனமும் பெரும்பலம். எல்லோரையும் வெட்டி ஆபிசர்களாக சுற்ற வைக்காமல் வேலைக்கும் படிப்புக்கும் இடையே கிரிக்கெட் விளையாடுவதாகக் காண்பித்திருப்பது வெகு இயல்பு.

சிறுவர்களிடம் தோற்பது, சிறுவயதில் வாங்கிய பேட்டை இழப்பது, கேட்ச் பிடிக்காமல் பொது மாத்து வாங்குவது, கிரிக்கெட் மேட்சில் கமெண்டரியில் அடுத்தவரைக் கலாய்ப்பது என படம் முழுக்க சம்பவங்களைக் கோர்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

"இதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் சுமார் மூஞ்சி குமாரிடம் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஐ லவ் யூ சொல்வது எந்த அளவு சாத்தியமில்லையோ அதே போல் 15 ஓவர்களில் 135 ரன் அடிப்பதற்கு சாத்தியமே இல்லை."

வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்ற பேரில் சொதப்பாமல் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.பல இடங்களில் நம் சொந்த அனுபவத்துடன் பொருத்திப் பார்க்க முடிவது படத்திற்கு பெரிய வெற்றி( வெயிட் ஃபார் மதுரை-625015 :D). படம் பார்த்து இரண்டு நாட்களாக சில காட்சிகளையும் வசனங்களையும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்.