இறப்பும் இறப்பு சார்ந்தும்

மடியிலேயே இறந்த நண்பனின் இறுதி நேர துடிதுடிப்பை என் கைகளின் நடுக்கம் நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. "மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" அவன் உதிர்த்த கடைசி வார்த்தைகள் வலியை அதிகமாக்குகின்றன. காயத்தைச் சுற்றி கட்டியிருக்கும் துணியையும் மீறி முன்நெற்றியிலிருந்து வழியும் இரத்தம் பிசுபிசுத்தபடி இருக்கிறது. சட்டையில் படிந்துள்ள அவனது இரத்தம் நினைவுகளைக் கிளறிவிடுகிறது. மரணம் குறித்த பயம் மனதைக் கவ்வுகிறது. அவன் மனைவியிடம் மரணத்தை சொல்லப்போகும் தருணத்தை நினைக்கையில் பயம் அதிகரிக்கிறது. மரண செய்தியை சொந்தங்களுக்கு அறிவிப்பதை விட கொடியது வேறெதும் இருக்குமா என்று தெரியவில்லை.

சரவணன் பத்து வருடமாக பழகிய நண்பன். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமானான். இருவரும் ஒரே வகுப்பு. அன்றிலிருந்து இன்று இரண்டு மணி நேரம் முன்பு வரை ஒன்றாகவே இருந்தோம். அவன் என் மடியிலேயே இறந்தபோதும் அவன் இறந்ததை மனம் நம்ப மறுக்கிறது.

ஒரே வகுப்பில் ஒன்றாக தூங்கியது, அரியர்ஸ் வைத்து க்ளியர் செய்தது, ஒன்றாக சென்ற திரையரங்குகள், வேலை தேடிய காலங்களில் கையில் பணமில்லாமல் ஒரே டீயையும சிகரெட்டையும் துண்டு பீடியையும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்தது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.

படிப்பு முடிந்து ஆறு மாதங்கள் இருவரும் வேலை தேடி அலைந்தோம். எனக்கு தி.நகரில் ஒரு கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அவன் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவனுக்கு சாந்தி பழக்கமானாள். அவள் எங்கள் மேன்ஷன் அருகில் இருந்த கூல்டிரிங்க்ஸ் கடையில் வேலை செய்து வந்தாள். இதைப் பற்றி என்னிடம் சரவணன் சொல்லும்போதே வேலைக்குச் சென்று சிறிது சம்பாதித்த பின் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். சாந்தியின் வீட்டிலும் இப்போதைக்கு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்றும் பிரச்சினை எதுவும் வராது என்றும் நம்பிக்கையுடன் கூறினான்.

நான் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது மாதத்தில் அவனுக்கும் வேலை கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் ஒரு ஆடிட்டருக்கு உதவியாளனாக சேர்ந்தான். என்னை விட ஆயிரம் ரூபாய் அதிகம் சம்பளம் வாங்குவதாகப் பெருமையாக சொல்லி குவாட்டர் வாங்கித்தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

சரவணனுக்கு நான் தான் ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து வைத்தேன். இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு. இருவரின் வீட்டிலும் உடன்பிறந்தவர்கள் யாருமில்லையென்றாலும் பெற்றோர்கள் எதிர்த்தனர். இருவர் வீட்டிலும் நானே சென்று நேரில் பேசினேன். அவனுடைய தந்தை என்னை அடிக்க கை ஓங்கியபோது குறுக்கே தடுத்து அவரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியே வந்தவன் அதற்குப் பிறகு வீட்டிற்கு செல்லவில்லை. பல்லாவரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். சாந்தி வீட்டருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள்.

கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளாக வேலை செய்துவந்தோம். சென்னையை சுற்றியிருக்கும் ஊர்களுக்கு சென்று விற்கத் தயாராக இருக்கும் நிலங்களைப் பார்த்து நிலத்தின் உரிமையாளர்களிடம் விலை பேசுவோம். பிறகு இங்கு நிலம் வாங்குவதற்காக எங்களை அனுகுபவர்களுக்கு முடித்துக் கொடுப்போம். வரும் கமிஷனில் ஆளுக்குப் பாதியாக பகிர்ந்துகொள்வோம்.

இன்றும் கேளம்பாக்கம் அருகில் ஒரு நிலத்தை பார்க்கச் சென்றிருந்தோம். அங்கிருந்து திரும்ப மாலை ஆறு ஆகிவிட்டது. அங்கிருந்து தாம்பரம் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினோம். காலியாக இருந்த பேருந்தில் இரண்டு பேர் சீட்டில் அமர்ந்தோம். அடுத்த நாள் செங்கல்பட்டு செல்வதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே பேருந்து குலுங்கியது. எதிரில் வந்துகொண்டிருந்த லாரியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி பேருந்தின் ஒரு பக்கத்தை கிழித்தவாறே வந்துகொண்டிருந்தது. விபத்தின் அதிர்வில் நான் முன்னிருக்கையில் இடித்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்க்கையில் பேருந்திலிருந்து பிய்ந்திருந்த தகடு ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்த சரவணனின் இடுப்பைக் கிழித்திருந்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இறந்திருந்தனர். பேருந்து எங்கும் மரண ஓலம். என் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

இதற்குள் விபத்தில் அடிபடாமல் தப்பித்த மற்ற பயணிகளும் மக்களும் அடிபட்டவர்களை தூக்கி கீழே இறக்கினர். நான் சரவணனை அவன் இருக்கையில் இருந்து தூக்கினேன். இன்னொருவர் அவன் காலைப் பிடிக்க அவனை பேருந்திலிருந்து கீழே இறக்கினோம். அங்கிருந்த பலர் செல்போன்களில் ஆம்புலன்ஸுக்கும் அவசர போலீசுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த இன்னொரு அரசு பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிடப்பட்டு எங்களை ஏற்றினார்கள். சரவணனை மடியில் கிடத்தியபடி ஒரு இருக்கையில் அமர்ந்தேன். சரவணனின் சட்டை முழுக்க இரத்தம் ஊறி சிவப்பாகிவிட்டிருந்தது. என் சட்டையைக் கழற்றி இடுப்பில் வெட்டிப் பட்டிருந்த காயத்தை அழுத்திப் பிடித்தேன். பேருந்து தாம்பரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரட்டினார்கள். என் காலடியில் அடிபட்ட ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்.

பேண்ட் பாக்கெட்டில் கர்ச்சீப் எடுக்கும்போதுதான் சரவணனின் வலதுகை உடைந்து சதை பிய்ந்திருப்பதைக் கவனித்தேன். அவன் கையைத் தூக்கி மேலே வைக்கும்போது வலியில் துடிதுடித்தான். பேருந்து வண்டலூரை நெருங்கியது. மயக்கத்திலிருந்த சரவணன் வலியில் முனகிகொண்டிருந்தான். அருகிலிருந்தவர் அவனிடம் சத்தமாக பேசிக்கொண்டிருக்கும்படியும் மயங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக்கொண்டிருந்தார். அவனிடம் "சரவணா ஒன்னும் ஆகாதுடா. தைரியமா இரு. இன்னும் அஞ்சே நிமிஷம்டா. பொருத்துக்கோ" என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடியே வந்தேன்.

"மச்சான் ரொம்ப வலிக்குதுடா! செத்துடுவேன் போலிருக்குடா" என்று வலியில் அவன் முனகியது என் உயிரை உலுக்கியது. "ஒன்னும் ஆவாதுடா, தைரியமா இரு" என்று உதட்டளவில் சொன்னேனே தவிர மரண பயம் நெஞ்சைக் கவ்வியது.

பேருந்து நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரண்டு மூன்று பேர் பேருந்திலிருந்து இறங்கி முன்னால் உள்ள வண்டிகளை நகர்த்த சொல்லி வழி ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

வண்டி மீண்டும் வேகமெடுக்கையில் சரவணன் துடிக்க ஆரம்பித்தான். உடல் குலுங்க ஆரம்பித்தது. அவன் கைகாலகளை அழுத்திப் பிடித்தும் நடுக்கம் குறையவில்லை. பத்து நொடிகள் துடித்து சட்டென அடங்கிப் போனான். என் நண்பன் என் மடியிலேயே உயிரை விட்டான்.

அவன் இறந்த அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை. நாவும் கண்களும் வறண்டுபோயிருந்தன. மருத்துவமனையில் அவனை பிணவறைக்கு கொண்டுசென்றனர். ஒரு இயந்திரத்தைப் போல் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அங்கேயே அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். சாந்திக்கு போன் செய்யவும் தோன்றவில்லை. சாந்திக்கு போன் செய்வதைக் காட்டிலும் நேரில் சொல்வதுதான் சரி என அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். போகும் வழியெங்கும் சரவணனின் நினைவுகளே அலைகழித்துக்கொண்டிருக்கிறது.

நேராக சாந்தி வேலை செய்யும் பள்ளிக்குச் சென்றால் அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். என்ன ஆகியதோ என்ற பயத்துடன் வேகமாக வீடு நோக்கி நடந்தேன். சாந்தி "வாங்கண்ணா. அவர் வேற சைட் ஏதாவது பார்க்க போயிருக்காரா?" என்றபடி கதவைத் திறந்தாள். பின் அவளாகவே "மயக்கமா இருந்துச்சுன்னு டாக்டர்ட்ட போய் காட்டினேண்ணா. இரண்டு மாசமாம். நீங்க மாமா ஆகப் போறீங்க" என்றாள். நான் உடைந்து அழத்தொடங்கினேன்.



42 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ச்சே! என் நண்பனின் மரணம் ஞாபகம் வந்துவிட்டது கப்பி! என்னால் பல வருஷங்கள் ஆகியும் மறக்க முடியவில்லை. அவன் பெயர் வைரம். மனதை பிழிந்து விட்டீர்கள்:-((

சொன்னது...

அருமையா எழுதியிருக்கீங்க... மடியிலேயே நண்பனின் மரணமென்றால் அது போல் கொடுமை எதுவுமே இருக்க முடியாது :((((

சொன்னது...

கப்பி,
மனசு ரொம்ப வேதனையா இருக்கு.
இதுக்கு மேல என்னால் எழுத முடியல.

சொன்னது...

அபி அப்பா

உண்மைதான் அபி அப்பா. இறந்தவர்களின் நினைவுகள் நம்மை நீங்குவதேயில்லை.

வருகைக்கு நன்றி!

சொன்னது...

//அருமையா எழுதியிருக்கீங்க... மடியிலேயே நண்பனின் மரணமென்றால் அது போல் கொடுமை எதுவுமே இருக்க முடியாது :((((

//

ஜி

நன்றி ஜி. அப்படியொரு கொடுமையை சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் நேரில் கண்டதே இந்த கதைக்கான கரு :(

சொன்னது...

உலகம் சுற்றும் வாலிபி

//கப்பி,
மனசு ரொம்ப வேதனையா இருக்கு.
இதுக்கு மேல என்னால் எழுத முடியல.

//

வருகைக்கு நன்றி!

சொன்னது...

இந்தக் கதையைப் படிச்சு முடிச்சவுடனே மனசு ரொம்ப பாரமாயிடுச்சுங்க கப்பி. நல்லா உணர்ந்து எழுதியிருக்கீங்க

சொன்னது...

எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும் போல...ரொம்ப டச்சிங்கான கதை கப்பி.....

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

நல்ல கதை. ஆனால் கதை என்று நினைக்க முடியவில்லை. படித்தவுடன் மனசு பாரமாயிடுச்சுங்க கப்பி.

சொன்னது...

வாழ்க்கை எனும் புத்தகத்தில் இது மாதிரியான பக்கங்களை படிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. எனக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் உண்டு. நான் நிஜமோ என்று பயந்து கொண்டுதான் படித்தேன்.. இறுதியில் தூண்டிவிட்டு பின் ஆட வைத்துவிட்டது. கப்பிபய ஸார்.. சூப்பர்..

சொன்னது...

இதேபோன்ற ஒரு சம்பவத்தை பல மாதங்களுக்கு முன் படித்த நினைவு வருகிறது. முடிவில் சாந்தியின் கருவுற்றிருப்பதை எழுதியது அதிக சோகத்தை உருவாக்க எழுதியது போல தோன்றினாலும் நேரில் பார்ப்பது போல தோன்றும் பதிவு

சொன்னது...

அருமையான கதை....உள்ளார்ந்த நட்பு தெளிவாய் வந்திருக்கு....

சொன்னது...

i can't believe this as story, gives very much feeling, as jk said same to me too

சொன்னது...

இந்தக் கதை "நல்லா இருக்கு" , "இல்லை" என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூட தோணலை! ஆனால், " ஏன் இந்தக் கதையை எழுதினீங்க?" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே! அதனால, சந்தோஷமான விஷயங்களை அதிகமா எழுதுங்க Junior இன்னு வேண்டுகோள்விடுக்கிறேன்,
:)

சொன்னது...

நெகிழ்ச்சியான கதை.. வாழ்த்துக்கள்

சொன்னது...

அருமையா எழுதியிருக்கீங்க... வேதனையா இருக்கு

சொன்னது...

நன்றி கதிரவன்! :)

//எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கும் போல...ரொம்ப டச்சிங்கான கதை கப்பி.....
//

வாங்க நாட்ஸ் டாங்க்ஸ் :)


//நல்ல கதை. ஆனால் கதை என்று நினைக்க முடியவில்லை. படித்தவுடன் மனசு பாரமாயிடுச்சுங்க கப்பி.
//

மிக்க நன்றி J K

சொன்னது...

உண்மைத்தமிழன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

//முடிவில் சாந்தியின் கருவுற்றிருப்பதை எழுதியது அதிக சோகத்தை உருவாக்க எழுதியது போல தோன்றினாலும்//

பத்மா அர்விந்த்

உண்மைதான் பத்மா அர்விந்த். அதை நீக்கிவிடலாம் என நினைத்திருந்து அப்படியே வெளியிட்டு விட்டேன் :)

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி! :)

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி

//i can't believe this as story, gives very much feeling, as jk said same to me too //

கதை தான் செந்தில் :)

மிக்க நன்றி!


//இந்தக் கதை "நல்லா இருக்கு" , "இல்லை" என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூட தோணலை! ஆனால், " ஏன் இந்தக் கதையை எழுதினீங்க?" அப்படின்னு கேட்கத் தோனுது. இருந்தாலும் கேட்க முடியாதே. எழுத்துச்சுதந்திரம்னு ஒன்னு இருக்கே! அதனால, சந்தோஷமான விஷயங்களை அதிகமா எழுதுங்க Junior இன்னு வேண்டுகோள்விடுக்கிறேன்,
:)
//

வாங்க சீனியர்

எல்லாம் ஒரு முயற்சி தான் :))

சொன்னது...

//நெகிழ்ச்சியான கதை.. வாழ்த்துக்கள் //

நன்றி சிங்கம் :)

சொன்னது...

//அருமையா எழுதியிருக்கீங்க... வேதனையா இருக்கு
//

மிக்க நன்றி மின்னல் :)

சொன்னது...

கப்பி,
உருக்கமாக இருந்துச்சு ...

சொன்னது...

கப்பி எனக்கு இது மேல எழுதத் தெரியலியேப்பா :(

சொன்னது...

நன்றி வினையூக்கி :)


//கப்பி எனக்கு இது மேல எழுதத் தெரியலியேப்பா :(//

வாங்க மகி.

சொன்னது...

கப்பியாரே,

ஏற்கெனவே அழுகாச்சி, அழுகாச்சியா இருக்கிற இந்த உலகத்தில நீவீர் வேற அழுகாச்சி கதை சொல்லி அழ வைக்கிறீர் இது நியாயமா ...

had a mild heart attack... ;-))

சொன்னது...

கண்ணுல வழியற கண்ணீரைத் துடைச்சிகிட்டாலும் மனசுல ஏறுன பாரத்தை துடைக்க முடியலை கப்பி!

:(

இதை என்னவோ கதைன்னு சொல்லத் தோணலை எனக்கு!

சொன்னது...

:-((

சொன்னது...

Kappi, this is a touching story,
Sibi, thx for ur reference.

சொன்னது...

கதை ரொம்ப அருமை கப்பி. மரணங்களை விட அதை சொந்தங்களுக்கு அறிவிக்கும் கொடுமை தான் ரொம்ப கொடுமை.

சொன்னது...

இறப்பின் வழி இழப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், இது போல் மனதைப் பாரமாக்கும் கதைகளைத் தவிர்க்கலாமே. படித்தவுடன் பல்வேறு நினைவுகள் உள்ளத்தைக் கஷ்டப் படுத்தி விட்டன.

இராசகோபால்

சொன்னது...

வாங்க தெகா

ரொம்ப நாளாச்சு :)

//ஏற்கெனவே அழுகாச்சி, அழுகாச்சியா இருக்கிற இந்த உலகத்தில நீவீர் வேற அழுகாச்சி கதை சொல்லி அழ வைக்கிறீர் இது நியாயமா ...
//

கூல் டவுன் தல சும்மா கதை தானே :))


சிபி
//கண்ணுல வழியற கண்ணீரைத் துடைச்சிகிட்டாலும் மனசுல ஏறுன பாரத்தை துடைக்க முடியலை கப்பி!//

புண்பட்ட நெஞ்சை... :)
நன்றி தள

துர்கா,

நன்றி :)

சொன்னது...

நன்றி நெல்லை காந்த்! :)

//கதை ரொம்ப அருமை கப்பி. மரணங்களை விட அதை சொந்தங்களுக்கு அறிவிக்கும் கொடுமை தான் ரொம்ப கொடுமை//

உண்மை சந்தோஷ்.
மிக்க நன்றி!

சொன்னது...

//இறப்பின் வழி இழப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், இது போல் மனதைப் பாரமாக்கும் கதைகளைத் தவிர்க்கலாமே. படித்தவுடன் பல்வேறு நினைவுகள் உள்ளத்தைக் கஷ்டப் படுத்தி விட்டன//

இராசகோபால்

இதை மனதை பாரமாக்கும் நோக்கத்துடன் எழுதவில்லை. தங்கள் மனத்தை வருத்தியமைக்கு என் வருத்தங்கள் :)

வருகைக்கு நன்றி!!

சொன்னது...

கும்மி அடிக்க சீக்கிரம் ஒரு பதிவு போடவும். இல்லை இந்த பதிவே ஓகேவா?

சொன்னது...

I came into this comment page grappling tears and hoping that it would only be a story. Thank God, it is only a story. Great work!

எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது...

சொன்னது...

//கும்மி அடிக்க சீக்கிரம் ஒரு பதிவு போடவும். இல்லை இந்த பதிவே ஓகேவா? //

ஒன்லி கும்மீஸ்

அடுத்த பதிவு உங்களுக்குத்தான் :))

//I came into this comment page grappling tears and hoping that it would only be a story. Thank God, it is only a story. Great work!//

நன்றி ppattian

சொன்னது...

கப்பிக்குள் இப்படியும் ஒருத்தன் உக்காந்து பீல் பண்ணுறானா? !!!!

கதையைப் பத்திச் சொல்லணும்ன்னா.. இது கதையாத் தெரியல்ல....மனசைப் பிசையுது

சொன்னது...

கப்பி,

அட்டகாசம்'ப்பா.... கடைசி வரி படிச்சதும் மனசு பாரமா ஆகிருச்சு... :(

சொன்னது...

//கப்பிக்குள் இப்படியும் ஒருத்தன் உ
உக்காந்து பீல் பண்ணுறானா? !!!!//

தேவ்

தூங்கிட்டிருக்கவன் அப்பப்போ எழுந்துடறான் :))))

//
கதையைப் பத்திச் சொல்லணும்ன்னா.. இது கதையாத் தெரியல்ல....மனசைப் பிசையுது
//

நன்றி தேவ்! :)

//கப்பி,

அட்டகாசம்'ப்பா.... கடைசி வரி படிச்சதும் மனசு பாரமா ஆகிருச்சு... :(
//

இராயல்

மிக்க நன்றி!

சொன்னது...

அழ வைச்சுட்டு நன்றின்னு சொல்லுறீங்களே.மனசை கசக்கி பிழிந்த கதை கப்பி :-((
படிச்சவுடனே மனசே சரியில்லை.அதான் ஒரு smiley மட்டும் போட்டுட்டு போயிட்டேன்.

சொன்னது...

//அழ வைச்சுட்டு நன்றின்னு சொல்லுறீங்களே.மனசை கசக்கி பிழிந்த கதை கப்பி :-((
படிச்சவுடனே மனசே சரியில்லை.அதான் ஒரு smiley மட்டும் போட்டுட்டு போயிட்டேன். //


ஆகா..கூல் டவுன் :)

மீண்டும் நன்றி துர்கா :))