D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.