நரிகளுக்கு நடுவில்!

என் நண்பன் SnoozenBooze-ன் ஆங்கிலப் புலம்பலின் தமிழாக்கம். என் முதல் மொழிப்பெயர்ப்பு முயற்சி. நண்பனுக்கு அலுவலகத்தில் ஆப்பு மேல் ஆப்பு...நமக்கும் same blood..அதன் தாக்கம் தான் இது!!


நரிகளுக்கு நடுவில்!

இது என் இடமல்ல!
நரிகளுக்கு நடுவில்
மானாக உணர்கிறேன்!

மான்,நரி,சிங்கம், சிறுத்தை,
கீரி, பாம்பு
அனைத்திற்கும் ஒரே கூண்டு!

தனித்தன்மை இழந்து
தன்பலம் மறந்து
மயக்கத்திலே திரிகின்றன!

கூண்டிலுள்ள மற்றொரு மான்
என்னையும் நரியென
எண்ணுகிறது!

போலிப் புன்னகையும்
முகத்துதியும் இவ்விடத்தை
வெறுக்கச் செய்கின்றன.

இது என் இடமல்ல!
இங்கிருக்க எனக்கு
விருப்பமல்ல!

என் இடத்தில்
மனம் மகிழும் போது
வாய்விட்டு சிரிக்கலாம்!
சோகம் கவிழ்கையில்
புன்னகை புரியலாம்!

போலி வேடங்கள்
ஏதும் பூணாமல்
'நானாக' இருக்கலாம்!

கோபத்தை முகத்திலும்
அன்பைக் கண்களிலும்
வெளிக்காட்டலாம்!

கேளிக்கையும் கேலியும்
கூத்தாடும் அரங்கம்!

ஒவ்வொரு பகலும்
பல கதைகளையும்
ஒவ்வொரு இரவும்
பல கனவுகளையும்
புனையும் களம்!

ஒவ்வொரு நாளும்
அதே நிகழ்வுகள்!
ஆனால்
புதுப்புது அனுபவங்கள்!

அந்த இடம்
இந்நாட்டு மன்னர்கள்
கடைசி வரிசையில் அமர்ந்து
ஆட்சி செய்த
புண்ணியபூமி!!!'சுகா'னுபவங்கள் ஆறு

"கோட்டோவியக் கோ" சுகாவின் ஆணையை ஏற்று என்னுடைய 'அலுக்காத ஆறு'..... எத்தனை நாட்கள் ஆனாலும் எத்தனை முறையானாலும் எனக்கு சலிப்பு ஏற்படுத்தாத இந்த ஆறு விஷயங்கள் குறித்து சிறிது விரிவாக:


1.எனக்கு நினைவு தெரிந்து என் மூன்றாம் வகுப்பிலிருந்து நான் சூப்பர் ஸ்டார் ரசிகன். தலைவரின் எந்த படமாகயிருந்தாலும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதை மீண்டும் பார்ப்பது என்றைக்கும் அலுக்காது. சிறு வயதில் 'மாப்பிள்ளை'யில் ஆரம்பித்து த்லைவரின் படங்களை வரிசையாக சொல்வதில் எங்களுக்குள் போட்டியே நடக்கும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் தலைவரின் இண்ட்ரோ பாடலைப் பக்கத்து வீட்டு அண்ணனை எழுதித் தரச் சொல்லி மனப்பாடம் செய்வோம்.

கல்லூரியில் புத்தாண்டு, பொங்கல்,தீபாவளி, ஹாஸ்டல் டே போன்ற நாட்களில் வருடா வருடம் தவறாமல் திரையிடப்படும் படம் பாட்ஷா தான். அந்த நான்கு வருடங்களில் பாட்ஷா வை மட்டும் குறைந்தப்ட்சம் 20 முறையாவது திரையிட்டிருப்போம்.

தலைவர் சில சமயங்களில் சொதப்பும் போது அவருக்காக வக்காலத்து வாங்கி நண்பர்களுடன் சண்டையிடுவதும் தனி சுகம் தான்.

2. ஒவ்வொரு முறையும் பயணம் நமக்கு புது அனுபவத்தைத் தருகிறது. ஜன்னல் ஓர சீட்டில் பேருந்து பயணம் நம் பயணத்திற்கான காரணத்தையே மறக்க வைத்துவிடுகிறது. 'மாமா மடியில் உக்காந்துக்கோடா' என நம்மை அடுத்தவர் மடியில் உட்கார வைத்த நாட்களில் இருந்து பேருந்து பயணம் எப்போதும் குதூகலம் தருவதாகவே இருக்கிறது. அதிலும் கூட்ட நெரிசல் மிக்க பண்டிகை நாட்களில் சக பயணிகளை பார்த்துக் கொண்டு வந்தாலே நேரம் கடந்துவிடுகிறது.

நண்பர்களுடன் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது டூர் அடிக்காவிட்டால் மனதில் ஒரு சோகம் குடி கொண்டுவிடுகிறது.

3.எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி கொண்ட கிரிக்கெட். பள்ளி விடுமுறை நாட்களில் காலை 6 மணிக்கே க்ரவுண்டுக்கு போய் ஒரு ஸ்டம்பை நட்டு பிட்ச் பிடிப்பதில் ஆரம்பித்து மாலை இருட்டுகிற வரை விளையாடி நாள் முழுக்க கிரிக்கெட்டே வாழ்க்கையாக இருக்கும்,
கல்லூரியிலும் ஹாஸ்டலில் நுழையும்போதே கைகள் பேட்டையும் பந்தையும் தேட ஆரம்பித்துவிடும். பரிட்சை நாட்களிலும் மதியம் பரிட்சை என்றால காலையில் கிரிக்கெட் விளையாடி பல பேரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புவோம். வருடாவருடம் விடுதியில் நடத்தும் வெள்ளொளி கிரிக்கெட் போட்டியும் அப்போது கொடுக்கும் நேர்முக வர்ண்னைகளும் அம்பயரிங்கில் நடக்கும் தகராறுகளும் என்றைக்கும் மறக்க முடியாதவை.

4.குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது. இதை விட எந்த விளையாட்டும் மகிழ்ச்சியைத் தர முடியாது. அதிலும் கல்யாண சமயங்களிலும் விடுமுறைகளிலும் அவர்களுடன் விளையாடுவதும், திடீரென காரணமே இல்லாமல் அழும் குழந்தையை சமாதானம் செய்வதும், அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளுக்கு சமரசம் செய்வதும் தரும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது.

5.வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருள் கவிந்து நிறம் மாறும் மாலை வேளைகளில் மொட்டை மாடியில் அமர்ந்து காற்றாடுவது, மேக ஒட்டடைகள் இல்லாத கோடை இரவுகளில் நட்சத்திரக் கூட்டங்களை பலவாறாக உருவகிப்பது, படுத்துக் கொண்டே இரவு முழுவதும் நிலவுடன் பயணிப்பது, மன நிறைவைத் தரும் சூரிய அஸ்தமனம், தொலைதூரத்தில் இருந்து திரண்டு வரும் மழை மேகங்களும் இடி மின்னலும் தரும் பயமும் கிளர்ச்சியும் என வானம் பல வகையில் நம்முடன் உறவு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நம் மனநிலைக்கேற்ப வானம் உருமாறிக் கொண்டிருக்கிறது.

6.காபி....ஆடும் ஆட்டம் அனைத்தும் அரை சாண் வயிற்றுக்குத்தான் என்றாலும் இந்த காபி குடிக்கும் சுகம் இருக்கே..அதை அனுபவிக்கனும்...ஆராயக் கூடாது..யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க..கோயில் கட்டறாங்க...காபியை முதன் முதலில் கண்டுபிடித்தது யாருன்னு தெரிந்தால் அவருக்கு நான் சிலை வைப்பேன்...தூக்கத்துல எழுப்பி காபி குடிக்க சொன்னால் கூட குடிக்க ரெடி...
ஒவ்வொரு வீட்டு காபிக்கும் ஒரு சுவை உண்டு...ஒவ்வொரு ஓட்டல் காபிக்கும் தனி மணம் உண்டு.... ஒவ்வொரு கப் காபியிலும் புது சுவையை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்,

7.

ஓ...ஆறு தான் எழுதனுமோ...

இந்த விளையாட்டுக்கு நானே லேட்டா தான் வந்திருக்கேன்...ஏற்கனவே பல பேருக்கு விளையாடிட்டு இருக்கறதால யார் யார் இன்னும் வரலைனு தெரியல..அதனால ஒரு ஈஸியான வழி...தமிழ்மணத்துல இப்போ மறுமொழியப்பட்ட இடுகைகளில் முதல் ஆறு பேரை விளையாட்டுல சேத்துக்கலாம்..அவங்க ஏற்கனவே விளையாடிட்டு இருந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..

1.Boston Bala
2.மகேந்திரன். பெ
3.icarus prakash
4.பெனாத்தல் சுரேஷ்
5.நிலா
6.சந்தோஷ்சாக்ரடீஸும் நானும்

சாக்ரடீஸ் ஒரு முறை தன் சீடர்களுடன் சந்தையில் ஒவ்வொரு கடையாக 'விண்டோ ஷாப்பிங்' செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் " நீங்கள் தான் எதுவும் வாங்கப் போவதில்லையே, பின் எதற்காக எல்லாக் கடைகளுக்கும் செல்கிறீர்கள்" எனக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் " இந்த உலகத்தில எவை எல்லாம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடிகிறது என்பதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

இந்த மாதிரி நானும் யோசிக்க ஆரம்பிச்சதுல மண்டை காய்ந்துவிட்டது....இங்கு வந்ததில் பல விஷயங்களை இழந்திருந்தாலும் இது மாதிரி கடையில் வாங்கும் அல்லது பணம் செலவு செய்து கிடைக்கும் விஷயங்களில் இழந்திருக்கிறேன் என யோசித்தேன்...

உதாரணத்துக்கு சாப்பாட்டு அயிட்டங்களில் பார்த்தால் பாலாஜி இட்லி கடையில் கல்தோசை,பரோட்டா இரவு உணவு..... ஹாட் சிப்ஸ்,சரவண,வசந்த பவன்களில் காபி....

உதயம்,கமலா,காசி,AVM,தேவி கருமாரியில் வாரம் ஒரு முறையாவது நைட் ஷோ... எந்த குப்பை படமாக இருந்தாலும் வாரத்துக்கு ஒரு படமாவது பார்க்கா விட்டால் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கம் வராது.....

மற்ற எந்த தியேட்டரிலும் ரிலீஸாகாத படங்கள் கூட கருமாரி காம்ப்ளெக்ஸில் ரிலிஸ் ஆகும்...

எந்த தியேட்டரிலும் பார்க்காத படம் இல்லையென்றால் ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கோ அல்லது வாடகைக்கோ ஏதாவது ஒரு பட டிவிடி....

வெள்ளி காலையில் சுடச்சுட வீடு தேடி வரும் விகடன்...குமுதம்,குங்குமம்,சினிக்கூத்து எனக் களஞ்சியங்கள்....

ஹிக்கின்பாதம்ஸ்,லாண்ட் மார்க் கடைகள்.... ப்ளாட்பாரத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஆங்கில நாவல்கள்...

அப்புறம் எப்பவாவது போகும் ஸ்பென்சர்ஸ்,பெசண்ட் நகர்.... அங்க போய் நமக்கு ஒன்னும் செலவு இல்ல...ஆனா கூட வர்றவனை அவிச்சுடலாம்...அவன் தலையில பெரிய துண்டைப் போட்டுட்டு வரலாம்...

இது மாதிரி யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாயிட்டே போகுது.... மனக்கவலையும் அதிகமாகுது.....இது மாதிரி பல விஷயங்கள் இல்லாம ரொம்ப நாள் நம்மால தாக்கு புடிக்க முடியாது!!!!

இந்த விஷயத்துல நாம சாக்ரடீஸ் என்ன..அவர் கஸின் ப்ரதர் 'பல்ப'ரடீஸ் அளவுக்கு கூட வர முடியாது!!!!உருகுவேயில் காரசட்னி

வந்து இரண்டு வாரம் ஆகிறது. இன்னும் உருகுவே பத்தி எழுதவில்லையே என ஒரே ஃபீலிங்க்ஸ்...அதற்கு தான் இது.... பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்கு இன்னும் இணைய இணைப்பு வாங்க முடியவில்லை. வங்கி கணக்கு எண் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 2500 பீஸோ அழ வேண்டும். வஙகிக் கணக்கு தொடங்குவது பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வாரம் ஆகுமாம். நம் ஊரில் வீடு தேடி வந்து கண்டதுக்கு கடன் தருகிறார்கள்...இங்கு இதற்கே இப்படி இழுத்தடிக்கிறார்கள்.

அலுவலகத்திலும் கொஞ்சம் வேலை பார்க்கத்(?!) தொடங்கி விட்டதால் கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக எழுத வேண்டியிருக்கிறது. நிற்க.

மாண்டிவிடியோ...அமைதியான நகரம்...மக்கள் ஆச்சரியப்பட வைக்கிறார்கள்...நட்புடன் பழகுகிறார்கள்...கடைகளில் ஸ்பானிஷ் தெரியாமல் திணறுகையில் தானே வந்து உதவுகிறார்கள்...உலகின் 30 பாதுகாப்பான இடங்களில் ஒன்றாம்...கம்பெனி வண்டியிலேயே தினமும் பயணிப்பதால் நக்ரை இன்னும் முழுமையாக சுற்ற ஆரம்பிக்கவில்லை...

எல்லாவற்றுக்கும் இறக்குமதியை ந்ம்பி இருக்கும் நாடு....காய்கறிகள் கூட சிலி, ஈக்வேடார் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன...இங்கு சொந்தமாக உற்பத்தி செய்யப்படுவது மாடு மற்றும் பன்றி கறி தான்!!!

இனி சொந்தக் கதைக்கு வருவோம்.....ராம்ப்லா எனப்படும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வீடு பார்த்து குடியாயிற்று. ..நம்ம ஊர்ல இந்த மாதிரி பீச் ஏரியாவில் இருக்கனும்னா வாடகைக்கு நம்ம சொத்தையே எழுதி தர வேண்டி இருக்கும்...இங்க இந்த ஊரே பீச்சா இருப்பதால் சீப்பா இருக்கு!!!

'நளன்' ஒருத்தன் ரூம் மேட்டா கிடைச்சிருக்கான்...சூப்பரா சமைக்கறான்...நம்ம வேலை மைக்ரோவேவ்ல அரிசி வச்சு சாதம் பொங்கறது....அதுக்கப்புறம் அவனுக்கு பக்கத்துல இருந்து மாரல் சப்போர்ட் கொடுக்கற கஷ்டமான வேலை மட்டும் தான்...அவன் ஏதாவது இரண்டு மூன்று காய்களை சேர்த்து குழம்புக்கும் கூட்டுக்கும் நடுவில் ஒரு அயிட்டம் சமைப்பான். ஒரே கவலை..எது செய்தாலும் அதில் உருளைக் கிழங்கு போடலைனா அவனுக்கு ஜீரணமாகாது.....என்ன செஞ்சா என்ன..நம்ம சாப்பாட்டு ப்ரச்சனை தீர்ந்தது...

இங்கு குறைஞ்சது 50 இந்தியர்களாவது இருப்பார்கள் என்று வந்தால் மொத்தம் 20 பேர் தான்..அதுலயும் 4 பேர் தான் தமிழ்...ஆனா வாரவாரம் கெட்-டூகெதர் ன்ற பேருல யார் வீட்டுலாவது ஓசில நல்ல சாப்பாடு போடறாங்க..

வந்த முதல் வாரமே இங்க இருக்க ஒரு ஆசிய ரெஸ்டாரென்டுக்கு போனோம்...மெனு கார்ட்ல இருந்தது எல்லாம் தாய், மலாய் அயிட்டங்கள்...இந்திய உணவு நான்கோ ஐந்தோ தான்...சமோசா, கொஃப்தா, ராகுல் ஜோஷ்னு பேரு வச்சு ஒரு டிஷ். அப்புறம் பேரு வாயில நுழையாத இரண்டு டிஷ்...'நாண்' வேண்டுமென்றால் நான்கு மணி நேரம் முன்னால் ஆர்டர் பண்ணனுமாம்...

பக்கத்துல 'V' இருக்க அயிட்டம் மெனுகார்ட்ல மொத்தமே 3 தான்...அதுல ஒரு மீன் அயிட்டத்தை அவன் எப்படி சைவமா மாத்தி தருவான்னு தெரியாம வாய்ல பேரு நுழையாத ஒரு டிஷ் ஆர்டர் பண்ணியாச்சு....

அதுக்குள்ள சமோசாவை என்ன கொடுமை பண்ணி வச்சிருக்காங்களோனு அதை ஒரு ப்ளேட் கொண்டு வர சொன்னோம்...அவன் கொண்டு வந்த ச்மோசாவிலேயே பசி அடங்கிடுச்சு..அவ்வளவு சூப்பரா எப்படி தான் செய்தானோ...நம்ம ஊருக்கு வந்து சமோசா செய்யறதை மட்டும் நல்லா கத்துக்கிட்டு வந்தவன் போல...

சமோசாவால வாயை அடைச்சவன் பின்னாடியே அதுக்கு ஒரு சட்னி கொண்டு வந்தான்...காரத்துல எங்களை திக்கு முக்காட வச்சிட்டானுங்க...நம்ம ஊர் ஆந்திரா மெஸ் சட்னியெல்லாம் தோற்றுவிடும்...அவ்வளவு காரம்... வெங்காயம், மிளகாய் மசாலா எல்லாம் போட்டு சூப்பரா பண்ணியிருந்தான்.....அதுலயும் கூட வந்த இரண்டு ஆந்திரா பசங்களுக்கு இத்தனை நாள் கழிச்சு இவ்வளவு காரமா சாப்பிட்டதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...

சமோசா காலியானாலும் அந்த சட்னியை சும்மாவே தொட்டு நக்க ஆரம்பிச்சிட்டோம்..அந்தளவு எங்களை மயக்கிடுச்சு...

அடுத்தது அந்த பெயர் தெரியாத அயிட்டம் பெரிய ஆப்பு.....கத்தரிக்காயும் பன்னீரும் போட்டு உப்பில்லாம கொண்டு வந்தான்....வாயில வைக்க முடியல....மறுபடியும் அந்த சட்னி தான் காப்பாற்றியது...அவன் கொடுத்த அரை ப்ளேட் சாதத்துல அந்த சட்னியை கலந்தடித்து பாதி வயிறு நிரம்பியது....

வயிறு நிரம்பவில்லையென்றாலும் நம்ம ஊர் சாப்பாடு என்ற மனத் திருப்தி தான்...

இங்கு இன்னொரு நலல விஷயம்...வாரவாரம் கெட்-டூகெதர் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுகிறார்கள்...நேற்று தக்காளி ரசம்...ஒரிஜினல் ஆந்திரா ஊறுகாய்...

இன்னும் இரு வாரங்களில் அர்ஜெண்டினா போக ஒரு ப்ளான் போட்டு இருக்கோம்...இப்படி கம்பெனி காசுல ஊர் சுத்தினா தானே உண்டு...நாம என்னைக்கு நம்ம காசுல இங்கெல்லாம் வரப் போறோம்!!!கடைசிப் பக்கங்களுக்காக...மதுமிதா!!

வலைப்பதிவர் பெயர்: கப்பி பய

வலைப்பூ பெயர் : கப்பி பய

சுட்டி(url) :http://kappiguys.blogspot.com

ஊர்: காஞ்சிபுரம்...இப்பொழுது இருப்பது மாண்டிவிடியோ

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகிளில் எதையோ தேடும் போது முதலில் ஒரு தமிழ் திவைப் பார்த்தேன். அது வரை ஆங்கில பதிவுகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன..

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : இருங்க பார்த்து சொல்றேன்...விய வருடம்,.சித்திரை 8...அன்றைக்கு அலுவலகத்தில் எப்பொழுதும் போல் வேலையே இல்லாமல் பயங்கர வெட்டி....வழக்கம் போல் தமிழ்மணத்தை திறந்து ஒவ்வொரு பதிவா படிச்சு மதியம் வரை பொழுதைக் கழித்தேன்...சிறிது நேரத்தில் அடி மனசு ஆசை திடீரென வெளியில் வந்து தலையில் தட்ட இந்த பதிவை ஆரம்பித்தேன்...

இது எத்தனையாவது பதிவு:16...கத்துக்குட்டிங்கோவ்

இப்பதிவின் சுட்டி(url) : http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_09.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஏற்கனவே சொன்னது போல் எழுத வேண்டும் என்ற அடி மனசு ஆசை தான்

சந்தித்த அனுபவங்கள்:பல துறைகளில் பல வகையான பதிவுகள்....ஆச்சரியமூட்டும் தகவல்கள்..குழாயடிச் சண்டைகளுக்கு நிகரான பதிவர்களின் சண்டைகள்..தனி நபர் தாக்குதல்கள்...பல விவாதங்கள், வாக்குவாதங்கள்...

பெற்ற நண்பர்கள்:யாவரும் கேளிர்...

கற்றவை: கையளவு...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்...நினைத்ததை எழுத முடிகிற சுதந்திரம்...யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள் என்ற தைரியம்..

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து பதிவது...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்"

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

நன்றி!!பேர் சொல்லும் பிள்ளைகள்

படிக்கற காலத்துல பல பேருக்கு பல பட்டப்பெயர்கள் வச்சாலும் சில பேருக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பெயர் பச்சக்குன்னு ஒட்டிக்கும். .சொந்த பேரு அவனுங்களுக்கே மறந்து போற அளவுக்கு எல்லாருமே பட்டப்பெயரை வச்சு கூப்பிடுவாங்க...இந்த பெயர்களுக்கு அவனுங்க காப்பிரைட்டே வச்சிருக்கானுங்க... அந்த பட்ட பெயர்கள்ல பலது வெளியே சொல்ல முடியாது...சென்ஸார்ட்...அதுல சொல்ல முடிந்த பெயர்களில் எனக்கு ஞாபகம் வந்ததை இங்க போட்டிருக்கேன்...

சிறுவன்-பால் வடியும் முகத்தோட பத்தாம் கிளாஸ் பையன் மாதிரி இருப்பான்..

புலாஸ்-புலாசுலாக்கியோட ஷார்ட் ஃபார்ம்....ஆக்சுவலா அவனே உயரத்துல ஒரு ஷார்ட் ஃபார்ம் தான்..

மூனடியார்-நாலடியார் தம்பி..புலாஸை விட சின்ன பையன்

சுள்ளான்-ஆள் நாலடி இருந்தாலும் அவன் செய்கிற சில்மிஷங்களுக்காக..

காய்-காரணம் சொல்ல முடியாதுங்கோவ்

லோ ஹிப் - பேண்ட் இடுப்புலயே நிக்காது!!

அலெக்ஸ் - வாத்தியார் பெயரை பையனுக்கு வச்சு அவனை அசிங்கப் படுத்தியாச்சு!!

டோப்பு- கஞசா குடிக்கி மாதிரி அரைத் தூக்கத்துலயே திரிவான்

கும்தாஜ்-மும்தாஜ்க்கு போட்டியா களமிறக்கப்பட்டவன்.

கப்பை- ஃபீல்டிங் மிஸ் பண்றதை கப்பை-னு சொல்லுவோம்...ஆனா இவனுக்கு அந்த பேரு ஏன்னு பெயர்க்காரணம் மறந்து போச்சு

அங்குச்சாமி-அவன் 1st இயர் ரூம்ல இந்த பேரை யாரோ கிறுக்கி வச்சிருந்ததால அவனுக்கும் இந்த பேரு

தாத்தா-நோயாளி...வாரத்துக்கு ஒரு தடவை வயிறு பிரச்னை பண்ணி சாகற நிலைமையில இருந்தவன்..எதுன்னாலும் ரொம்ப பொறுப்பான பதில் சொல்பவன்.

கனல்-விளையாடும் போது பந்தை காட்டான் மாதிரி எறிவான்..

வேல் கொப்பரை-மனசுல விவேக் ஓபராய்னு நினைச்சுக்கிட்டு சுத்துனா இந்த பேரு தான் மிஞ்சும்

மொன்னை-மத்தவங்கள அவன் மொன்னைனு கூப்பிட்டு ஆரம்பிச்சு அவன் பேரே மொன்னை ஆயிடுச்சு....இது தான் பாப்புலர் பெய்ர்..காலேஜ்ல பாதி பேருக்கு அவன் உண்மையான பெய்ர் தெரியாது.

ஆபிசர்-பொறுப்பானவன், பண்பானவன்

ஷில்பன்-as in சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்...இந்த பேரு பசங்களுக்கு வச்சதில்லை...யாருக்கு வச்சதுன்னு சொல்ல மாட்டேன்!!

டிங்கு - அவன் நடை அப்படி

நாய் - ராய்-னு பேரை வச்சிகிட்டு மதுரைல சுத்தினா நல்லா இருக்குமா..அதான் நாய்னு மாத்தியாச்சு

ஓடுகாலி - ஹாஸ்டல்ல எல்லா ரூம்லயும் படுத்து தூங்கற ஜீவராசி

தக்காளி - கொழுக் மொழுக்

பயில்வான் - அவ்ளோ பலசாலி..பேட் கூட தூக்கமுடியாது.

கொசு-பயில்வானுக்கு போட்டியா உடம்பு வச்சிருக்கவன்

டான் - இருப்பதிலேயே கேவலமான பெயர். மனசுல தன்னைப் பத்தி ரொம்ப ஓவரா நினைச்சுக்கிட்டு திரிஞ்சவனுக்கு வச்ச பேரு...பிற்காலத்தில் இது ஒரு கெட்ட வார்த்தையா மாறிடுச்சு...இந்த பேரை வச்சு மத்த பசங்கள கூப்பிட்டா அவனுங்களுக்கு ம்கா கேவலம்

மாஸ்டர் - சின்ன டான்.

இன்னும் பல பேரு இருக்கு...ஆனா இதெல்லாம் தான் டக்குனு ஞாபகத்துக்கு வந்தது. படிக்கற காலத்துல தான் இப்படின்னா வேலைக்கு சேர்ந்த அப்புறமும் பேர் வைக்கிற பழக்கம் போகல..

தல - வயசுல பெரியவர்..யார் வேணும்னாலும் ஓட்டலாம்..அவிக்கலாம்...

கேப்டன்-மதுரைக்கார தல

சல்லி-சல்லித்தனமாக நடக்கும் PL

பெரிய சல்லி-அதைவிட சல்லித்தனமான GL

கில்லி - இவங்க இரண்டு பேர் நடுவில சிக்கினாலும் எல்லாத்துலயும் எஸ்கேப் ஆகும் PM

குட்டி சல்லி-சல்லியோட சிஷ்யன்

இது மாதிரி அடுத்தவனுக்கு பேர் வைக்கிற சுகமே தனி தான்..