மரணம்! - சிறுகதை

'என்ன எழவுடா இது...மனுஷனுக்கு ஒரு மரியாதை இல்லாம போயிடுச்சு... நாளைக்கு காலைல கல்கத்தா போறதுக்கு இப்போ 8 மணிக்கு சொல்றானுங்க..விவஸ்தை கெட்டவனுங்க' எனப் புலம்பிக் கொண்டே தெரு முனையில் இருக்கும் ஆட்டோ
ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்திருந்தேன்.

"காலைல அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்"

இருந்த 2 ஆட்டோ காரர்களும் தங்கள் பார்வையிலேயே யார் போவது என முடிவு செய்து
கொண்டதும் ஒருவர் "போலாம் சார்..காலைல வீட்டாண்ட வந்துடறேன்" என்றார்.

"எவ்ளோ கேக்கறீங்க"

"கொடுங்க சார்..காலைல எழுந்து வரணும். 180 கொடுங்க"

"வடபழனில இருந்து ஏர்போர்ட் போக 180 ரூபாயா?? டாக்ஸியே இத விட கம்மியா வருமே"

"காலங்காத்தால சார்..ரிடர்ன் வரும்போது காலியா தான் வரனும்..150 கொடுங்க...பகல்லயே 120க்கு போறோம்"

"சரி காலைல கரெக்டா அஞ்சு மணிக்கு வந்துடுங்க'" என உறுதி செய்துவிட்டு என் பேரம் பேசும் திறமையை நொந்தபடியே வீடு திரும்பினேன்.

காலையில் ஆட்டோகாரரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பத்து நிமிடம் காக்க வைத்து அரக்க பறக்கக் கிளம்பினேன்.

மார்கழி மாத குளிர் லேசாக நடுங்க வைத்தது. டிரைவர் டிராபிக் அற்ற அதிகாலை சாலையில் ஆட்டோவை விரட்டிக் கொண்டிருந்தார். வெறிச்சோடிய சாலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்போர்ட் உள்ளே நுழைந்தவுடன் "சார், மயக்கம் வர மாதிரி இருக்கு...ஒரு நிமிஷம் இருங்க" என்றப்டியே டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்..

"என்னங்க..ப்ரஷர் இருக்கா?? என்ன பண்ணுது"

"தெரில சார்..ப்ரஷர்லாம் இல்ல...மயக்கமா வருது..ஒன்னும் இல்ல சார் ஒரு ரெண்டு நிமிஷம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சீட்டில் சரிந்து விழுந்தார்.

'என்னடா வம்பாப் போச்சே'னு நினைச்சுக்கிட்டே கண்கள் சொருகிக்கிடந்தவரை .தட்டி எழுப்பினால் ஒரு அசைவும் இல்லை.தோளைப் பிடித்து உலுக்கினால் தலை சரிந்தது.

அதுக்குள்ள ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டிரைவர் இருவர் வந்தனர்.

"என்ன சார் ஆச்சு"

"தெரியலீங்க..நல்லா ஓட்டிட்டு வந்தாரு. உள்ள வந்ததும் மயக்கமா வருதுன்னு ஓரங்கட்டினாரு...அப்படியே சரிஞ்சுட்டாரு"

"உயிரோடதாம்பா இருக்காரு" இன்னொருத்தர் டிரைவரை செக் பண்ணி சர்டிபிகேட் கொடுத்தார்.

"இங்க ஏர்போர்ட் உள்ள டாக்டர் இருப்பாங்களா?"

"தெரியல சார். மெடிக்கல் ஷாப் ஒன்னு இருக்கு"

"கண்டிப்பா டாக்டர் இருக்கனும்ங்க"

அதற்குள் இன்னொரு ஆட்டோகாரர் எங்களைப் பார்த்து நிறுத்தினார்.

"என்னாச்சு?"

"திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு"

"எந்த ஏரியா ஆட்டோ?"

"வடபழனிங்க..குமரன் காலனி..இஙக உள்ள யாருனா டாக்டர் இருப்பாங்களா? இல்ல பக்கத்துல எதுனா ஆஸ்பிடல் இருக்கா? நீங்க இந்த ஆட்டோவ ஓட்டிட்டு வர்றீங்களா?"

"தெரியல சார்..உள்ள சவாரி வெயிட்டிங்..போகனும் சார்" சொல்லிக்கொண்டே ஆட்டோவை எடுத்து கிளம்பிட்டான்.

"உங்களுக்கு எப்ப சார் ப்ளைட்டு?"

"ஆறரைக்குங்க...இன்னும் 40 நிமிஷம் இருக்கு"

"நீங்க உள்ள போய் டாக்டர் யாருனா இருக்காங்களா விசாரிங்க சார்..நாங்க இவரைப் பாத்துக்கறோம்".

மூன்று பேருமாக சேர்ந்து டிரைவரைத் தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்தோம். பையைத் தூக்கிட்டுப் போறதா இல்ல அங்கயே போட்டுட்டுப் போறதானு ஒரு செகண்ட் யோசிச்சு அவங்களையே பாத்துக்க சொல்லிட்டு குறுக்கால ஏர்போர்ட் உள்ளே ஓடினேன்.

'ப்ளைட்ட விட்டுட்டா ஆபிஸ்ல என்னடா பதில் சொல்லுவே?'னு உள்ள இருந்து பட்சி கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுச்சு.

மெடிக்கல் ஷாப்பில் வெளியே விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தால் உள்ளே ஒருவர் இழுத்து போர்த்து தூங்கிக் கொண்டிருந்தார். கதவைத் தட்டி அவரை எழுப்பி இங்கு டாக்டர் இருப்பாரா எனக் கேட்டதற்கு அந்த கட்டிடத்தின் மறுமுனையைக் காட்டிவிட்டு மீண்டும் அவர் கனவை கன்ட்டினியூ பண்ண போயிட்டார்.

அவர் கைக்காட்டின இடத்துக்கு ஓடினா அங்க யாரும் இல்ல. டாக்டர் பேரைப் போட்டு ஒரு போர்ட் மட்டும் இருக்கு. உள்ளே யாரும் இருக்க மாதிரி தெரியலை. இன்னைக்கு நமக்கு ஆப்படிக்கற முடிவோட் தான் எல்லாரும் கிளம்பியிருக்காங்க-னு நொந்துகிட்டே திரும்பினா பின்னாடி ஒரு செக்யூரிட்டி முறைச்சு பாத்துட்டு நிக்கறாரு.

"ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டாரு. இங்க டாக்டர் இல்லையா??"

"இருந்தா இங்க தான் இருப்பாரு..நீங்க ஏர்போர்ட் மேனேஜரைப் போய் பாருங்க' னு மறுபடி எதிர் மூலைக்கு கையைக் காட்டினார். நல்ல வேளையாக மேனேஜர் அவர் அலுவலகத்தில் இருந்தார்.

"சார் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டார். டாக்டர் அங்க ரூம்ல இல்ல"

"என்ன ஆச்சு?? டிரைவர் இப்ப எங்க இருக்காரு.."

"அங்க எண்ட்ரன்ஸ்ல இருக்காரு சார்..ப்ரஷ்ரா இருக்கும்னு நினைக்கறேன்"

"அங்க யாருனா இருக்காங்களா?"

"டாக்ஸி டிரைவர் ரெண்டு பேர் இருக்காங்க"

"அப்ப ஒன்னு பண்ணுங்க...அவங்களை ஓட்ட சொல்லி எப்படியாவது ஆட்டோவை இங்க கொண்டுவந்துடுங்க..ஏன்னா டாக்டர் அஙக வந்து மறுபடி அவரை இங்க கொண்டு வரதுக்கு லேட் ஆகும். நேரா அங்க டாக்டர் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டா சீக்கிரம் ட்ரீட் பண்ணலாம்'"

அடப்பாவிகளா இன்னைக்கு ஆட்டோவும் ஓட்ட வச்சுடுவாங்க போல-னு நினைச்சுக்கிட்டே மறுபடி இங்க ஓடி வந்தேன்.

அங்கே இன்னொரு ஆட்டோ காரர் வண்டிய நிறுத்தி டாக்ஸிகாரங்க கிட்ட பேசிட்டு இருந்தார்.

"உள்ள டாக்டர் இருக்காருங்க...இவரை அங்கேயே கூட்டிட்டு வரச் சொன்னாங்க..நீங்க இந்த வண்டியை ஒட்டிட்டு வர்றீங்களா" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே "என் வண்டியை இங்க நிறுத்திட்டு போனா ஃபைன் போட்ருவாங்க சார்" என்றபடியே அவன் ஆட்டோவை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.

அதுக்குள்ள அந்த டாக்ஸி டிரைவர்ல ஒருத்தர் அவரே ஒட்டறேன்னு வண்டியக் கிளப்பினார். இருக்கிற பிரச்சனை போதும் ஆட்டோவையும் கொண்டு போய் எங்கயாவது முட்டிடக் கூடாதுனு நினைச்சுக்கிட்டே பையைத் தூக்கிட்டு மறுபடி குறுக்கு வழில ஓடினேன்.

சொன்ன மாதிரியே ஏர்போர்ட் மேனேஜர் டாக்டரோட காத்துக்கிட்டிருந்தார். ஆட்டோவில் இருந்து டிரைவரைப் பிடித்து இறக்கு அங்க கீழேயே சுவரோரம் படுக்க வைத்ததும் டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார்.

"இவர் எந்த ஏரியாங்க?"

"வடபழனி சார்"

"எப்படியாவது அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியுமா?'

"என் ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்றேன் சார். எங்க வீட்டு பக்கத்து ஸ்டாண்ட் தான்" என்றபடி என் நண்பனை அழைத்து நிலைமையை விளக்கி அங்கு தகவல் சொல்லும்படி கூறினேன்.

"உங்களுக்கு எந்த ஃப்ளைட்?? லேட் ஆகிடப்போது"

"6.30 சார்..இன்னும் 20 நிமிஷம் இருக்கு"

"நீங்க கிளம்புங்க..இனி நாங்க பாத்துக்கறோம்"

நான் அந்த டாக்ஸி டிரைவர்களிடம் திரும்பி "ரொம்ப தாங்க்ஸ் பாஸ்..இவருக்கு ஆட்டோ பணம் தரனும்" என்றபடியே பர்ஸை எடுத்தேன்.

"இருக்கட்டும் சார். நல்லவேளை ஏர்போர்ட் உள்ளே வந்து மயங்கினார். வர்ற வழில GST ரோட்டிலேயே மயங்கியிருந்தா ஒன்னுமே பண்ணி இருக்க முடியாது...மேனேஜர்ட்ட கொடுத்துடுங்க..அவர் கொடுத்துடுவார்" என்றார் டாக்ஸி.

நான் இருநூறு ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்தபடியே மீண்டும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மேனேஜர் என்னுடனேயே வந்து வரிசையில் நிற்காமல் நேரத்துக்கு செக்-இன் செய்ய உதவினார்.

நல்ல்படியா அவரை டாக்டர்ட்ட சேர்த்துட்டு நேரத்துக்கு ஃப்ளைட் பிடிச்சாச்சுன்னு திருப்தியுடன் கிளம்பினேன்.

கல்கத்தா சென்றதும் அங்கு வேலை பளுவில் இந்த சம்பவத்தை மறந்தாகிவிட்டது. இடையில் ஒரு முறை ந்ண்பனிடம் செல்லில் பேசும் போது அவனிடம் கேட்டதற்கு அவனுக்கும் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

இருபது நாள் கழித்து திரும்பி வந்தேன். வீட்டிற்கு வந்து இறங்கும் போதே ஆட்டோ ஸ்டாண்டைப் பார்த்தேன். யாரும் இல்லை.

அனறு மாலை ஸ்டாண்டில் பேரம் பேசிய போது இருந்த இன்னொருவர் இருந்தார். போய் விசாரிக்கலாம் என சென்றேன்.

"அன்னைக்கு ஏர்போர்ட்ல மயங்கி விழுந்தாரே..அவர் இப்போ எப்படி இருக்கார்?"

"நீங்க தானே சார் அன்னைக்கு ஏர்போர்ட் சவாரி போனது?"

"ஆமாங்க..அன்னைக்கு நைட் கேக்க வந்தப்போ நீங்க கூட இருந்தீங்களே"

"ஆமா சார்..அவன் இறந்துட்டான் சார்"

"என்னங்க சொல்றீங்க"

"ஆமா சார்..உங்கள செவ்வாய் கிழமை உட்டுட்டு வந்தான்ல..அதுக்கு அடுத்த சனிக்கிழமை செத்துட்டான் சார்"

"எப்படிங்க..என்னாச்சு?"

"ஹார்ட் அட்டாக்ங்க..ரெண்டாவது அட்டாக்..அன்னைக்கு உங்க ப்ரண்ட் வந்து சொன்னதும் போய் கூட்டியாந்தோம். அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெட்ல இருந்துட்டு வீட்டுக்கு வந்தான். வந்தும் வண்டி எடுக்கல..அதுக்குள்ள இன்னொரு அட்டாக்...மொத அட்டாக் வந்தப்புறமும் அலைச்சல் குறைக்கல...ரெண்டு பொட்டைப் ப்ள்ளளங்க வேற சார்...உடம்பு ஒத்துக்கலன்னா வேலைய குறைச்சுக்கனும்..அதுக்கப்புறம் தானே சார் பணம்..அன்னைக்கு கூட மொதல்ல நான் தான் வரேன்னேன். அவனா தான் போறேன்னான்.."

"என்னங்க...சரியாயிட்டிருப்பாரு..வந்து பாக்கலாம்னு வந்தேங்க..இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன்'

"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"

நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வீடு நோக்கி நடந்தேன்.40 பின்னூட்டங்கள்:

சொன்னது...

நல்லா இருக்குங்க!கப்பி பயலாரே!

வாழ்த்துக்கள்!

சொன்னது...

நல்ல இருக்குங்க... யதார்த்தமா நேரில் பார்க்கற மாதிரி நகர்த்தி இருக்கீங்க.
உண்மையில் நடந்ததோ?

சொன்னது...

மிக்க நன்றி தளபதி,நிலா.

ஆமாங்க நிலா...சொந்த அனுபவம் தான் :).

நேற்றிரவுதான் எழுதி முடித்தேன்..காலையில் வந்து பார்த்தால் இளவஞ்சி இந்த தலைப்பை அளித்திருந்தார்!!

சொன்னது...

மீட்டருக்கு மேல கேக்கும் ஆட்டோகாரங்களெல்லாம் நல்ல மேட்டர சொல்லி புரியவெச்சிட்டிங்க ..

சொன்னது...

வாங்க கோவி.கண்ணன்... என்ன பண்றதுங்க..மீட்டர் மேல வாங்கறது பரம்பரை வியாதி ஆயிடுச்சே! :)

சொன்னது...

//நேற்றிரவுதான் எழுதி முடித்தேன்..காலையில் வந்து பார்த்தால் இளவஞ்சி இந்த தலைப்பை அளித்திருந்தார்!!
//

அட! என்ன ஒரு கோ இன்ஸிடெண்ட்!

சொன்னது...

ஆமாங்க சிபி..
செம கோ இன்ஸிடெண்ட்!!..

ஒரே wavelength..ஹி ஹி ஹி..

சொன்னது...

நல்லா இருக்கு கப்பி. இது சொந்த அனுபவம் என்று வேறு சொல்லி உள்ளீர்கள். உங்களின் சேவை மனபான்மையை மனதார பாராட்டுகின்றேன்.

சொன்னது...

யதார்த்தமா இருக்கு கப்பி. வாழ்த்துக்கள்

சொன்னது...

நன்றி சிவா..

எல்லா இடுகைக்கும் வந்து பின்னூட்டம் போடறீங்களே உங்க சேவை மனப்பான்மையைத் தான் பாராட்டனும் சிவா :D...

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி மனசு..

சொன்னது...

கதை என்று கருதமுடியாது. எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி உண்மை
நிகழ்வைப் பதிவு செய்தது போல் உள்ளது. பாராட்டுகிறேன்

சொன்னது...

நன்றி சிவஞானம்ஜி..

கதைசொல்லி வாயிலாக அமைந்ததால் அப்படி தோன்றுகிறதோ??

சொன்னது...

good job

சொன்னது...

நன்றி ஜோ, அனானி..

சொன்னது...

// உடம்பு ஒத்துக்கலன்னா வேலைய குறைச்சுக்கனும்..அதுக்கப்புறம் தானே சார் பணம்.. //

நிதர்சனம்!

வாழ்த்துக்கள் கப்பி...

சொன்னது...

மிக்க நன்றி இளவஞ்சி..

தற்செயலா நான் எழுதி வச்சிருந்ததுக்கு ஏத்த மாதிரி தலைப்பைக் கொடுத்திட்டீங்க..அங்க வந்தே சொல்லனும்னு இருந்தேன் :)

நன்றி!

சொன்னது...

//நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வீடு நோக்கி நடந்தேன்.//
நல்லா இருக்குங்க.. வேற என்ன செய்ய முடியும்?!! ஒரு பெரிய பாரம் என்பதற்கு மேல்,.. ஒண்ணும் செய்ய முடியாத இயலாமை.. நல்லா காட்டி இருக்கீங்க.

சொன்னது...

நன்றி பொன்ஸ்..

//ஒரு பெரிய பாரம் என்பதற்கு மேல்,.. ஒண்ணும் செய்ய முடியாத இயலாமை.. //

காரணமற்ற குற்ற உணர்ச்சியையும் சேத்துக்குங்க...

சொன்னது...

//u r really a kappi paya thaan//

இது பாராட்டு தானே?? நன்றி நெருப்பு!!

சொன்னது...

It is very beautiful.

சொன்னது...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேன் துளி!

சொன்னது...

மரணம் என்பது நம் கையில் இல்லை என்பதை விட, உங்களையும் அவரையும் ஏதோ அன்று சேர்த்துவிட்டது.
இதில் இயலாத்தன்மையை விட நீங்க செய்ததுதான் உயர்வு.ஆடோக்காரர்களில் உயர்ந்தவர்கள் இருப்பதைப்போல் பயணம் செய்பவர்களும்மனிததன்மையுடன் நடந்துகொள்ளமுடியும்னு நிரூபிச்சுட்டிங்க. ஒரு நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள்.

சொன்னது...

நல்லா இருக்குங்க! போட்டிக்கு அனுப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

சொன்னது...

ரெம்ப நல்லா இருக்குங்க.

நாம இரண்டு பேருக்கும் எதிர்பாராத விதமாக "ஆட்டோ" பொதுவான விஷயமாகிப் போய்விட்டது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி valli,நன்மனம், மகேஸ்...

//நாம இரண்டு பேருக்கும் எதிர்பாராத விதமாக "ஆட்டோ" பொதுவான விஷயமாகிப் போய்விட்டது.
//

அப்படியா..இதோ வரேன் இருங்க...

சொன்னது...

நல்ல இருக்கு கப்பி, எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் அருமையாக சொல்லியதற்கு பாரட்டுக்கள்.

சொன்னது...

நன்றி மதுரைக்கார நண்பா..

சொன்னது...

கதைப்போக்கு எதார்த்தமாக, நன்றாக உள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சொன்னது...

அருமை. நல்ல கதை.

நன்றி.

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி கலை அரசன்,
sivabalan

சொன்னது...

நல்ல கதையமப்பு, யதார்த்தமும் கூட.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி இளா...

சொன்னது...

யதார்த்தமான கதை. ஏர்போர்ட்டில் தவித்த தவிப்பையும், பல்வேறு மனிதர்களின் போக்கையும் அழகாகக் கொண்டு வந்து விட்டீர்கள். கடைசியில் முடிவு, மரணம் என்று தலைப்பு இல்லாவிட்டால் ஊகிக்க முடியாமலேயே இருந்திருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிவகுமார்..

சொன்னது...

கப்பி,
முதல் முறை உங்கள் பதிவு படிக்கிறேன். நல்ல வேகமான நடையோட்டம், வாழ்த்துக்கள்!
மரபூர் ஜெய.சந்திரசேகரன்

சொன்னது...

முதல் முறை வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சந்திரசேகரன்..

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி tamilatamila..

சொன்னது...

இயந்திரமயமாகிப் போன இந்தக் காலத்து வாழ்க்கையில் நம்மில் பெரும்பாலோனோர் கவனிக்காமல் கடந்து போகும் விஷயத்தை படம் பிடிக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.

சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி கெளதம்..