"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"
அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.
"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"
"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.
சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.
கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.
பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.
அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.
கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.
உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.
என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.
அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன்.
சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு.
கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.
பாட்டுத் தலைவன் பாடினால்
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
டெஸ்குடா(ஆ)ப்பு & Vanilla Mood
சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.
நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம்.
கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.
ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க! :))
***
Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.
***
கப்பி | Kappi 11 பின்னூட்டங்கள்
வகை டெக்கு, பதிவர் வட்டம், புகைப்படம்
சினிமா - தொடர்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்பதோ முதலில் பார்த்த திரைப்படமோ நினைவிலில்லை. ஆனால் சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தது மிகவும் குறைவு. அப்பா/அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. (அப்பா கடைசியாக தியேட்டரில் பார்த்த திரைப்படம் 'பூவே உனக்காக'. அம்மா 'பூவே உனக்காக'விற்குப் பிறகு 'சிவாஜி' பார்த்தார்). அக்காக்களோ சித்தியோ மாமாவோ ஊருக்கு வரும்போது அழைத்துச் செல்வார்கள்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக அப்பா வீடியோ கேசட்/பிளேயர் வாங்கி வந்து படம் பார்த்ததுண்டு. சிறு வயதில் கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது தூர்தர்ஷனின் ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை 40-50 பேர் மத்தியில் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து பார்த்த நாட்கள் நினைவிலிருக்கிறது. கூடம் நிரம்பி நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். கோடை விடுமுறையிலோ பண்டிகை நாட்களிலோ தாத்தா வீட்டில் அக்கா/சித்தி என்று கூட்டம் சேர்ந்துவிட்டால் வண்டி கட்டிக்கொண்டு வந்தவாசிக்கு வந்து படம் பார்ப்போம்.
சில போலீஸ் படங்களைப் பார்த்து போலீஸாக வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.
நினைவு தெரிந்து முதன்முதலில் வரிசையில் அடித்து பிடித்து 'மன்னன்' ரேஞ்சுக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்த திரைப்படம் 'உழைப்பாளி'.
நினைவு தெரிந்து முதன்முதலில் முதல் நாள் பார்த்த திரைப்படம் - எஜமான்
முதன்முதலில் எழுதிவைத்து மனப்பாடம் செய்த பாடல் - 'வந்தேன்டா பால்க்காரன்'
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
சரோஜா. வரத் தயங்கிய நண்பர்களை நச்சரித்து அழைத்துச் சென்று வெகுவாக ரசித்த திரைப்படம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜெயம்கொண்டான்.
நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம். வித்யாசாகர் எப்போ ஃபார்முக்கு திரும்புவார்?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நினைவு தெரிந்து அரங்கில் பார்த்து பாதித்த முதல் படம் - சேது. நண்பர்கள் பத்து பேருடன் படத்திற்குச் சென்று முதல் பாதி ஆட்டமும் பாட்டமுமாய்ப் பார்த்து இரண்டாம் பாதியில் பேச்சின்றி வெளியில் வந்த நினைவிருக்கிறது. வீட்டிற்கு செல்லும்வரை யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
படம் வெளியான நான்காவது நாளில் ஐம்பதே பேர் இருந்த அரங்கில் பார்த்த - அன்பே சிவம்
தளபதி, அஞ்சலி.
சமீபமாக வந்த திரைப்படங்களில் சித்திரம் பேசுதடி, சுப்ரமணியபுரம்.
இன்னும் நிறைய. பட்டியல் நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட பார்க்கிற எல்லா நல்ல படமும் ஏதோ ஒரு வகையில தாக்கத்தான் செய்யுது.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினி
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
பல படங்களின் ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு காட்சியமைப்புகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். முன்னதுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஜீவா.
பின்னதுக்கு H.ஸ்ரீதர்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கையில் அகப்படும் - கருப்பு பூனையில் ஆரம்பித்து கட்டுரைகள் வரை பாரபட்சமின்றி - அத்தனையும்.
7. தமிழ்ச்சினிமா இசை?
எந்நேரமும். எல்லாவித மனநிலைக்கும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தூர்தர்ஷனில் மாநில மொழித் திரைப்படங்களும் வெள்ளி/சனிக்கிழமை இந்தி திரைப்படங்களும் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து மொழி பேதமின்றி. நண்பர்களின்/வலைப்பதிவுகளின் பரிந்துரைகளை தவறாமல் பார்ப்பதுண்டு.
அதிகம் தாக்கிய உலகமொழிப் படங்களின் பட்டியல் தாக்கிய தமிழ்ப்படங்களின் பட்டியலைப் போலவே நீளும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' 100 திரைப்படங்களின் பட்டியல் மதி அவர்களின் இந்த பதிவில் இருக்கிறது - உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன். இதன் அசல் பதிவு அல்வாசிட்டியில் காணலை. இங்கே
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ்ச்சினிமாவில் வேலை பார்க்கும்/பார்த்த சிலரைப் பர்சனலாகத் தெரியும். அவ்வளவே.
பள்ளி/கல்லூரிக் காலங்களில் - ஏன் இப்போதும் கூட ஒரு திரைப்படத்திலாவது ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு :D
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான் புதிதாக வெளியாகும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது சமீபகாலமாக குறைந்துவிட்டது. பழைய படங்களும் வேற்றுமொழிப்படங்களும் உள்ள வரை பிழைப்பு ஓடும்.
தமிழ்நாட்டில் ஓராண்டில் 2011-ல் முதலமைச்சருக்கான போட்டி குறையும். சினிமா மற்றுமின்றி அதுசார்ந்த ஏனைய துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் நிம்மதியாய் இருப்பார்கள். பலர் நிம்மதி இழப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை நேரிடலாம். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும். கடன் தொல்லை குறையும். மாமூல் வாழ்க்கை பாதிக்கும். அலுவலக வேலைகளில் இடர்கள் நேரிடலாம். நிண்ட தூர பயணங்கள் அதிகரிக்கும். நடுப்பக்கங்கள் காலியாகும்..ச்சே ராசிபலன் டோன் வந்துடுச்சே.
அழைத்த தம்பியண்ணனுக்கும் ஜிரா அண்ணாச்சிக்கும் நன்றிகள்!
நான் அழைப்பவர்கள்:
நாமக்கல் சிபி
வினையூக்கி
சவுண்ட் பார்ட்டி உதய்
யாத்ரீகன்
தேவ்
கப்பி | Kappi 18 பின்னூட்டங்கள்
வகை சினிமா, பதிவர் வட்டம்
?!
சென்னை-600028-ல் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் வெங்கட் பிரபுவின் மேல் லேசான சந்தேகம் இருந்தது. சரோஜா ஊத்திக்கொள்ளும் என ஆரம்பத்திலிருந்தே பட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சரோஜாவிலும் வெங்கட் பிரபு ஹிட்டடித்துவிட்டார். எளிமையான கதையை அசத்தலான திரைக்கதை மூலம் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகளையும்(பாடல்களையும்) சற்றே நீளமான கிளைமாக்ஸையும் தவிர்த்துப் பார்த்தால் சரவெடி. மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன், சரண் அப்புறம் இன்னொருத்தர் - இந்த நாலு பேர் கேங்க் கலக்கிட்டாங்க. இரண்டு நாட்களாக அறையில் நண்பர்கள் அனைவரும் 'சார்' போட்டு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த ஆன்சைட் அப்ரசண்டிங்க தொல்லை வர வர தாங்க முடியல. கம்ப்யூட்டரையே கண்டுபுடிச்ச மாதிரி சீன் போடறதும் வெளிய எங்கனா போனா அவனுங்களுக்குள்ள கூட வெள்ளைகார தொரை மாதிரி பீட்டர் வுடறதும் அரைடவுசரும் அஞ்சு ரூபா கண்ணாடியும்னு டார்ச்சர்ஸ் ஆப் டல்லாசா இருக்கு. வெள்ளிக்கிழமை தியேட்டர்ல சரோஜா ஆரம்பிக்கும்போது "நேற்றைய முன்தினம்" னு போட்டு படத்தை ஆரம்பிச்சாங்க. ஆன்சைட் அப்ரசண்டி ஒருத்தன் "you mean yesterday"ன்னு கூட வந்த ஃபிகரை உஷார் பண்ற பீலிங்க்ல சவுண்டு விட திரையில் "Day before Yesterday"ன்னு ஆங்கிலத்துல ஸ்லைடு. தியேட்டரே அதிருது.
போன வாரம் வீட்டுக்கு போன் பேசும்போது அம்மா "மகனே பழமெல்லாம் வாங்கி சாப்புடு. ஒடம்ப பார்த்துக்க"ன்னு சொன்னாங்க. வீட்டு சாமான் வாங்க வால்மார்ட் போனப்போ அம்மா சொன்னதை தட்டாத பையனா வாழைப்பழம் வாங்கலாம்னு வாங்கிட்டு வந்தேன். எல்லாமே சாப்பிட முடியாதபடி பச்சையா இருந்தது. சரி ரெண்டு நாள் வச்சு சாப்பிடலாம்னு எடுத்துட்டு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஆச்சு ரெண்டு நாள் ஆச்சு.பழம் பழுக்கவேயில்ல. என்னடா இது சோதனை. நம்மூர் மாதிரி பழுக்க வைக்கற டெக்னிக் ஏதாவது உபயோகிப்போமான்னு யோசிச்சுட்டே விட்டுட்டேன். மூனாவது நாள் மாலை பழம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு எடுத்தா அழுகிப் போய் கெடக்கு. இந்த ஊர்ல ஒன்னுமே புரியல. நேரா பச்சையா இருந்து அப்படியே அடுத்த நாள் அழுகிடுது. என்ன பழம் விக்கறானுங்களோ. இவனுங்களால அம்மாவோட பேச்சைக் கேட்காதவன்னு என் மேல பழி.
சமீபத்தில் எடுத்த இரண்டு புகைப்படங்கள்.
விஜய் டிவியின் நீயா?நானா? ஆரம்பத்தில் இருந்த சுவாரசியம் இப்ப இல்லை. ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆக்கிட்டாங்க.
* எல்லா வாரமும் ஏதாவது நான்கு பேர் மட்டும் பேச வைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஒரு அழகான பெண்ணை முன்வரிசையில் அமரவைத்து அடிக்கடி அவருக்கு ஒரு க்ளோசப். அவரோட ரியாக்ஷனை திரும்பத்திரும்ப காட்டுகிறார்கள்.
* சில சமயங்களில் விவாதம் செயற்கையாக இருக்கிறது. சிலர் சொல்லிக்கொடுத்ததை ஒப்பிப்பது போல் பேசுகிறார்கள்.
* கோபிநாத் யாராவது ஒருவரை அசிங்கப்படுத்துகிறார். கோபிநாத்தை யாராவது ஸ்மார்ட்டாக இருப்பதாக சொல்கிறார்.
* ஒவ்வொரு எபிசோடிலும் வடிவேலு டயலாக் ஏதாவது ஒன்றை கோபிநாத் சொல்லத் தவறுவதில்லை.
* விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் முன்னிருந்த சுவாரசியம் இல்லை.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு. இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.
சர்வேசனின் இந்த பதிவுல கேய்ட்லின் மேஹர்-ன்ற குட்டிப்பெண் பாடற வீடியோ ஒன்னு போட்டிருந்தார். இங்க இன்னொரு முறை பாருங்க. என்ன அழகா பாடறா!
இந்த பதிவில் நான் ஐந்தாவது படிக்கும்போது நடுமண்டையில் அடிபட்ட சரித்திர சம்பவத்தை முன்ன சொல்லியிருக்கேன். நடுமண்டையில் இருந்த அந்த தழும்பு இப்ப முன்நெற்றிக்கு வந்துடுச்சு.
போன வாரம் அலுவலக கேண்டீன்ல காதுல விழுந்தது: "this is democracy man! majority rules"
கப்பி | Kappi 36 பின்னூட்டங்கள்
வகை ஃபீலிங்ஸு, டெக்கு, புகைப்படம்
உள்வாங்கிய கடல்
"சந்துரு சந்துரு"
நெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.
"சந்துரு எப்படிப்பா இருக்க? அம்மா அப்பா செளக்கியமா?"
"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்தி? குழந்தை?"
"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்?"
என் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன.
குமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை.
"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க"
"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு"
குமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.
"இப்ப எங்க இருக்கீங்க?"
"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது"
"ஹ்ம்ம்..சித்தி எப்படியிருக்காங்க?"
"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்"
"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா"
"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா"
"தாத்தா பாட்டி எப்படியிருக்காங்க? ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு"
"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா? அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்". குரல் லேசாக கம்மியது.
"தாத்தா சொனனாரு"
"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்"
"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது"
"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா? ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா"
"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு"
வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.
"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு? இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு"
என்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.
கப்பி | Kappi 26 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
ஹாலிவுட் தலைவிகள்
Women In Film
Women In Film By Philip
80 years of female portraits in cinema - Mary Pickford, Lillian Gish, Gloria Swanson, Marlene Dietrich, Norma Shearer, Ruth Chatterton, Jean Harlow, Katharine Hepburn, Carole Lombard, Bette Davis, Greta Garbo, Barbara Stanwyck, Vivien Leigh, Greer Garson, Hedy Lamarr, Rita Hayworth, Gene Tierney, Olivia de Havilland, Ingrid Bergman, Joan Crawford, Ginger Rogers, Loretta Young, Deborah Kerr, Judy Garland, Anne Baxter, Lauren Bacall, Susan Hayward, Ava Gardner, Marilyn Monroe, Grace Kelly, Lana Turner, Elizabeth Taylor, Kim Novak, Audrey Hepburn, Dorothy Dandridge, Shirley MacLaine, Natalie Wood, Rita Moreno, Janet Leigh, Brigitte Bardot, Sophia Loren, Ann Margret, Julie Andrews, Raquel Welch, Tuesday Weld, Jane Fonda, Julie Christie, Faye Dunaway, Catherine Deneuve, Jacqueline Bisset, Candice Bergen, Isabella Rossellini, Diane Keaton, Goldie Hawn, Meryl Streep, Susan Sarandon, Jessica Lange, Michelle Pfeiffer, Sigourney Weaver, Kathleen Turner, Holly Hunter, Jodie Foster, Angela Bassett, Demi Moore, Sharon Stone, Meg Ryan, Julia Roberts, Salma Hayek, Sandra Bullock, Julianne Moore, Diane Lane, Nicole Kidman, Catherine Zeta-Jones, Angelina Jolie, Charlize Theron, Reese Witherspoon, Halle Berry
கப்பி | Kappi 12 பின்னூட்டங்கள்
வகை டெக்கு
நிரடும் நிரலிகள்
"ஹாய் ஐயாம் ஷெரில்"
"ஹாய் ஜெயக்குமார் கந்தசாமி. ஜெய்"
"நைஸ் டு மீட் யூ ஜெய்"
இங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாள் தானாக வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள் ஷெரில். எல்லா அமெரிக்க பெண்களைப் போன்றே சராசரிக்கு சற்றே அதிகமான உயரம். ஒல்லியான தேகம். கரிய தலைமுடி. புன்னகை தவழும் உதடுகள். துள்ளலான கண்கள். மொத்தத்தில் அழகி. என்னுடைய பிராஜெக்ட்டில் இருப்பாளோ என்ற ஆர்வத்தில் கேட்டதில் காண்டிராக்டராக ஏதோ ஒரு ஆதிகால அப்பிளிகேஷனைக் கட்டிமேய்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். "இத்தனை வருஷமா இதானே நடக்குது நம்ம பிராஜெக்ட்ல என்னைக்கு நல்ல ஃபிகர் இருந்திருக்கு" என்ற ஆதங்கத்துடன் வேலையைத் தொடங்கினேன்.
கிளையண்ட் அலுவலகத்தில் நிறைய இந்தியர்களே வேலைப் பார்த்தாலும் யாரும் அவ்வளவு நட்புடன் பழகவில்லை. எங்கள் கம்பெனி உள்ளே புகுந்ததில் காண்டிராக்டர்களாக வேலை செய்யும் பலருக்கு வேலை பறிக்கப்படும் அபாயம். முகம் கொடுத்தும் பேசாத நிலை. இந்த அழகில் நான் இவர்களிடம் கற்றுக்கொண்டு இந்தியாவில் இருக்கும் டீமிற்கும் சொல்லிக் கொடுத்து, அதன்பின் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்ய வேண்டும்.
முதல்நாள் எது எங்கிருக்கிறது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்த எனக்கு ஷெரில் தானே முன்வந்து அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினாள். அன்று மதியம் கேண்டினில் இருவரும் உணவு உண்டபோது எங்கள் கம்பெனி பற்றியும் என் பிராஜெக்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களுக்கும் அறிமுகம் கொடுத்தாள். அவளுடைய அப்ளிகேஷன் பற்றியும் விவரித்தாள்.
ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் எல்லா ஊரிலும் எல்லாம் எளிதாக கிடைக்கும், எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொன்னவனைத் தேடிக் கொண்டிருந்தேன்.இந்த சிறிய நகரில் எங்கள் கிளையண்ட் அலுவலகம் ஒன்றுதான் பெரியது. மற்றபடி பெரிய அலுவலகங்களோ வணிக நிறுவனங்களோ கிடையாது. நான் ஆன்லைனில் பதிவு செய்திருந்த அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தாலும் கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரப் பயணம். ஓரிரு முறை டாக்ஸியில் சென்றுவந்ததைத் தெரிந்துகொண்ட ஷெரில் அவளே கடைகளுக்குக் கூட்டிச் செல்ல முன்வந்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அவளே உதவிகள் செய்தாள். ஷெரில் வேலையிலும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். இந்த ஊரில் இப்படி ஒரு நல்லவளா என்ற ஆச்சரியம் உண்டானது.
"ஜெய், உங்க ஊரைப் பத்தி சொல்லேன்"
"சொர்க்கம்"
"உங்க ஊர்க்காரங்க எல்லாரும் கிட்டத்தட்ட இப்படித்தான் சொல்றீங்க"
"அதான் உண்மை..அதனால தான்"
"இண்டியா பத்தி நான் கொஞ்சம் படிச்சிருக்கேன். நிறைய வீடியோஸ் பார்த்திருக்கேன். நல்ல அழகான பெண்கள். ஒரு முறை உங்க ஊருக்கு கூட்டிட்டு போவியா?"
"கண்டிப்பா. ஒரு முறையாவது நீ நேரில் பார்க்கனும். உனக்கு ரொம்ப பிடிச்சுப் போகும்"
"நீ பேசற மொழி பேர் என்ன சொன்ன?"
"தமிழ்"
"டாமிள்.யெஸ்.அதுவும் கத்துக்கொடு" என்று சிரித்தாள்.
வேலையினிடையிலும் அரட்டை நேரங்களிலும் இந்தியா பற்றி, மொழிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வாள். அமெரிக்க அரசியல், விளையாட்டு என அரட்டை தொடரும். எங்கள் நட்பும் வளர்ந்தது.
"ஷெரில், எனக்கு கார் ஒன்னு வாங்கனும். ஆன்லைன்ல பார்த்துட்டிருக்கேன். இந்த ஊரில நல்ல டீலர் சொல்லேன்"
"என் பாய் பிரெண்ட் டாம் ஒரு கார் விக்கப் போறான். நிஸ்ஸான் அல்டிமா. நீ என்ன கார் பார்க்கற? ஸ்போர்ட்ஸ் கார் வாங்கப் போறயா?"
"அதெல்லாம் வேண்டாம். செடான் தான் பார்க்கறேன். உன் பாய் பிரண்ட் காரே வாங்கிடலாம்"
அதிக அலைச்சலில்லாமல் குறைந்த விலையிலேயே கார் அமைந்தது. அதற்கு டிரீட் கொடுக்க அவளையும் அவள் பாய் ஃபிரெண்டையும் டின்னருக்கு இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். காரத்தில் கண்கள் கலங்கினாலும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
"ஜெய் உன்கிட்ட சொல்லியிருக்கேன்ல நானும் டாமும் பைக்கிங் போவோம்ன்னு.வார இறுதியில் பக்கத்துல இருக்க மலைல சைக்கிள் ஓட்டுவோம். நீயும் வருவியா?"
"கண்டிப்பா ஷெரில். அடுத்த வாரமே சைக்கிள் வாங்கிடறேன். மலைல ஓட்ட நீங்க தான் கத்துத் தரணும்"
"ஷ்யூர். உனக்கும் ரொம்ப பிடிச்சுப் போகும் பாரு. அடுத்த வாரமே ஆரம்பிப்போம். இங்க இருக்க டிராக் எனக்கு ரொம்ப பிடிச்சது. சமயத்துல டாம் வரலைனாலும் தனியா நானே கிளம்பிடுவேன். நீயும் வந்தா எனக்கு கம்பெனி கிடைக்கும்" என்று சிரித்தாள்.
ப்ராஜெக்ட் வேலையும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது. எங்கள் கடின உழைப்புக்குப் பலனாக புதிதாக ப்ராஜெக்ட்களும் கிடைத்தன. கிளையண்டிடம் இருந்த அத்தனை அப்ளிகேஷன்களையும் ஆராய்ந்து அதில் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி கிளையண்டுக்கு சில ஆலோசனைகள் கொடுத்தோம். அதிலும் சில ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. எங்களுடைய அணி வளர ஆரம்பித்தது. கிளையண்டிடம் இருந்து சிறிது சிறிதாக வேலைகள் வாங்கி ஆஃப்ஷோரை வளர்த்தோம்.
"ஹேய் ஷெரில். உன்னோட பவர்பில்டர் அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த நான் கொடுத்த ப்ரோபசலை ஜோ அப்ரூவ் பண்ணிட்டார். ஆஃப்ஷோர் டீம்ல புதுசா 4 பேர் சேர்த்து இந்த வீக்கே மைக்ரேஷன் வேலை ஆரம்பிக்கறோம்"
"தெரியும் ஜெய். ஜோ கூட இப்ப தான் பேசிட்டு வரேன்"
"எனக்கு இது பெரிய அச்சீவ்மெண்ட். என் ஹெட் இப்பத்தான் போன்ல பாராட்டினார். சந்தோஷமா இருக்கேன். நைட் டின்னர் என் டிரீட். நீ ஃப்ரீ தானே?"
"இல்ல ஜெய். நீ என்னோட அப்ளிகேஷனை ஜாவா-வுக்கு மாத்த ஆரம்பிச்ச பிறகு எனக்கு என்ன வேலை. எனக்கு தெரிஞ்சது பவர்பில்டர் தானே. இன்னைக்கு எனக்கு இங்க கடைசி நாள். அதுக்குத்தான் ஜோ கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டே ஊருக்கு கிளம்பறேன். இந்த ஊர்ல என் ப்ரொபைலுக்கு வேலை கிடைக்காது. அதனால ஊருக்கு போய் அப்பா அம்மாவோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு நியூ ஜெர்சில ஏதாவது வேலை பிடிக்கனும். இடையில் நானும் ஒரு புது டெக்னாலஜி ஏதாவது கத்துக்கனும். ஈவ்னிங் டாம் என்னை பிக்கப் பண்ண வருவான். என்ன நாம ப்ளான் பண்ண சைக்கிள் ட்ரிப் தான் போக முடியாது. அடுத்த முறை மீட் பண்ணும்போது கண்டிப்பா போவோம். கீப் இன் டச் ஜெய். வில் மிஸ் திஸ் நைஸ் லிட்டில் டவுன் அண்ட் வில் மிஸ் யூ." என்று கூறியபடி கைகொடுத்து கிளம்பிச் சென்றாள்.
நான் கணிணித் திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தேன்.
கப்பி | Kappi 31 பின்னூட்டங்கள்
வகை சிறுகதை
PIT - ஜூலை-2008 போட்டிக்காக
இது போட்டிக்கு:
இது படம் எடுத்த பொட்டிக்கு:
சும்மா இருந்தவனை தலையில தட்டி படமெடுக்க அனுப்பிய தல-க்கு சமர்ப்பணம்..எல்லா புகழும் கைப்புவுக்கே!! :)
கப்பி | Kappi 13 பின்னூட்டங்கள்
வகை புகைப்படம்
காத்திருந்த காதலி - 10
காத்திருந்த காதலி - 1: வடகரை வேலன்
காத்திருந்த காதலி - 2: பரிசல்காரன்
காத்திருந்த காதலி - 3: வெயிலான்
காத்திருந்த காதலி - 4: கிரி
காத்திருந்த காதலி - 5: ஜெகதீசன்
காத்திருந்த காதலி - 6: டிபிசிடி
காத்திருந்த காதலி - 7: கயல்விழி முத்துலெட்சுமி
காத்திருந்த காதலி - 8: மை ஃபிரண்ட்
காத்திருந்த காதலி - 9: கோபிநாத்
சங்கர் சொன்னதன்படி அவன் அறைக்கு வந்த ராமச்சந்திரன் அங்கு அவர் மகளைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்தார். நாயைக் கண்டு பயந்து நின்றுகொண்டிருந்த தன் மகளை அரவணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.
"கையில என்னம்மா டைரி? யாரோட டைரி?"
"கார்த்திக்கோட டைரிப்பா. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. கார்த்திக் என்னை லவ் பண்ணியிருக்கான்பா"
ராமச்சந்திரனின் முகத்தில் கவலை ரேகை படர்ந்தது. அவர் நினைத்தது போலவே அத்தனையும் நடந்திருக்கிறது. மருத்துவமனையிலிருந்து அவர் கிளம்பியதிலிருந்தே சங்கர் ஏன் அப்படி சொல்ல வேண்டும், கார்த்திக் இவ்வாறு செய்ய என்ன காரணம் இருக்க முடியுமென்ற குழப்பத்திலே தான் வந்தார். தொழிலில் இருவருக்கும் பொறாமை வருவதற்கான வாய்ப்பேயில்லை. சில நாட்களாக கார்த்திக் தொழிலில் கவனம் செலுத்துவதில்லை என்று சங்கர் ஓரிரு சமயங்களில் சொல்லியிருந்தாலும் அதற்கான வேறு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும் என்றே எண்ணியிருந்தார். ஆனாலும் அந்த காரணம் தெரியாமல் ஷூவுக்குள் சிறிய கல் ஒன்று சிக்கியது போல அவர் மனம் உறுத்திக்கொண்டிருந்தது. இப்போது கார்த்திக் தன்னைக் காதலித்ததாக கெளரி சொன்னதும் அவருக்கு எல்லாம் புரிந்தது.
"தண்ணி கொண்டு வாம்மா. உக்காந்து பேசலாம்" என்றபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தார். கெளரி அந்த டைரியை டேபிளில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள். ராமச்சந்திரன் அந்த டைரியைப் புரட்ட ஆரம்பித்தார்.
***
கார்த்திக் கெளரிக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான். மூன்று வருடக் காதலை இன்று சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். சங்கரிடம் கூட கெளரியைப் பற்றிப் பேசியதில்லை. தன் காதலை கெளரியிடம் சொல்லி அவள் சம்மதித்ததும் இருவரும் சேர்ந்து சங்கரிடம் சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். கல்லூரிக்குப் பிறகும் தொடர்ந்த கெளரியுடனான நட்பு காதலாக மாறிய தருணம் எப்போதென்று பழைய நினைவுகளை அசைபோட்டபடி இருந்தான். தன் காதலைச் சொன்னதும் கெளரி என்ன சொல்வாளோ நட்பை முறித்துச் சென்றுவிடுவாளோ என்ற அச்சமும் அவனை அவ்வப்போது கலங்கச் செய்தது. என்ன ஆனாலும் சரியென்று வாழ்த்து அட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவளிடம் தன் காதலைச் சொல்ல தான் எழுதிய கவிதையைச் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தபோது சங்கரும் கெளரியும் கைகோர்த்தபடி வந்துகொண்டிருந்தனர்.
"கார்த்திக், சங்கர் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?"
"என்ன சொன்னான்?"
"ஐ லவ் யூ சொல்லிட்டான் டா..அதுவும் ஒரு பயம் இல்லாம மட்டு மரியாதையில்லாம" வெட்கப்புன்னகையுடன் சங்கரின் தோளில் சாய்ந்தாள் கெளரி.
"மச்சான் நான் மொதல்ல உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அப்புறம் இவ ஒத்துக்கிட்டதும் ரெண்டும் பேரும் சேர்ந்து வந்து சொன்னா உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலடா" என்றான் சங்கர்.
இதற்குப் பிறகு அவர்கள் பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை. இதயத்தில் இமயமலையையே ஏற்றிவைத்தது போல் பாரமாக இருந்தது. "இவளிடம் இத்தனை வருடங்களாக இருவரும் ஒரே மாதிரிதானே பழகினோம். சங்கரை விட எனக்கு என்ன குறைச்சல். அவனிடம் எப்படி அவளால் காதலில் விழ முடிந்தது. இத்தனைக்கும் அவனைவிட அவளுக்காக நான் தானே எத்தனையோ செய்திருக்கிறேன். கல்லூரி முடிந்த அன்று ஃபேர்வெல் பார்ட்டியில் கூட 'நீ எப்பவும் எனக்கு ஸ்பெஷல்டா" என்றாளே. பாதகி" என்று மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.
"என்னடா ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா" சங்கர் தோளில் தட்டினான்.
"இல்லடா. அதெல்லாம் ஒன்னுமில்ல. கேட்டதும் சந்தோஷத்துல என்ன சொல்றதுன்னே தெரியல. கங்கிராட்ஸ்டா. ஹேய் கெளரி உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா"
"இன்னும் இல்லடா. இனிதான் அதைப்பத்தியெல்லாம் யோசிக்கனும்"
"எப்ப கல்யாணம் பண்றீங்க? ரெண்டு பேர் வீட்டுலயும் வீட்டுல பேசிப்பார்ப்போம்.ஒத்துக்கலைனா நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" உள்ளுக்குள் இடி விழுந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சகஜமாய் பேச முயன்றுகொண்டிருந்தான் கார்த்திக்.
"மொதல்ல நம்ம கம்பெனி நல்ல நிலைமைக்கு வரட்டும்டா.அப்புறம் கல்யாணம் பத்தி யோசிக்கலாம்" என்ற சங்கரை இடைமறித்தாள் கெளரி
"கார்த்திக், நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போறே?"
"கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல"
"ஏன்? காதல் மேலே வெறுப்பா?"
"இல்ல. ஒருத்தருக்கு ஒரு தடவைதான் காதல். நான் ஏற்கனவே காதலிச்சிட்டு இருக்கேன்"
"அட்ரா சக்க.. யாரந்த பொண்ணு?"
"இது ஒரு தலை காதல். நான் அவ கிட்ட சொல்றதுக்கு முன்னவே செத்து போச்சு. யாரென்று கேட்காதே ப்ளீஸ்.."
செத்துப்போன தன் காதலை மீண்டும் உயிர்விப்பது எப்படி என்று அன்றைக்கே திட்டம் தீட்ட ஆரம்பித்தான் கார்த்திக்.
***
கார்த்திக் அப்பாவையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். சங்கர் மயக்கம் தெளிந்தவுடன் அவனிடம் பேசவேண்டும். இத்தனை நாட்களாக மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும். இத்தனை வருடங்கள் தொடர்ந்த நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று எண்ணியபடி சிகரெட் புகையை ஆழமாக உள்ளே இழுத்தான். அப்போது அவனை உரசியபடி ஒரு பைக் வந்து நின்றது.
***
இக்கதையின் அடுத்த பாகத்தை தொடர 'சிக்மா(Sigma) சித்தர்' கேஆரெஸ் அண்ணாச்சி அழைக்கிறேன்.
கப்பி | Kappi 11 பின்னூட்டங்கள்
வகை தொடர்கதை, பதிவர் வட்டம்
?! - திண்ணை, குசேலன் & இன்ன பிற
நேற்றிரவு கனவில் குசேலன் Free View ஷோ. தலைவர்,நயன்தாரா, பி.வாசு,வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ஒரு காட்சி. காட்சியோ வசனங்களோ நினைவில் இல்லை. அந்த காட்சியில் பசுபதி இல்லை. பசுபதி எங்கே என்ற எண்ணம் தோன்றியதும் தூக்கம் கலைந்து எழுந்துவிட்டேன்.
குசேலன் பாட்டு கேட்டாச்சா? ஜீ.வி. பிரகாஷிடம் எதிர்பார்த்ததை விடவே பாடல்கள் நன்றாக இருக்கின்றன. சில பாடல்கள் ஏற்கனவே கேட்டதுபோல் இருந்தாலும் எல்லா பாடல்களுமே எனக்குப் பிடித்திருக்கின்றன. 4/5.
பாடல்கள் ராகா-வில் இங்க இருக்கு
***
ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் எங்கப்பா திண்ணைல உட்கார்ந்துகிட்டு தாத்தா பாட்டியோட சண்டை போடாம வந்தது கிடையாது.'என்னை மறந்துட்டல்ல'ன்னு கையைப் புடிச்சபடி தாத்தா கேட்டது, எங்க வீட்டு திண்ணைல நாப்பது வருஷமா இருந்த போஸ்ட் ஆபிஸு, அதுல கொஞ்சம் கையாடல் பண்ண சித்தப்பு, கடைசி அஞ்சு வருஷம் திண்ணைலயே கழிச்ச கொள்ளுப் பாட்டி, திண்ணைல தூங்கும்போது என் கால் மேல ஏறிப்போன கட்டுவிரியன், கடிச்ச தேளு, ஊருல அரசமரத்துல இறங்கி வீட்டுக்கு போறதுக்குள்ள ஊர்ல இருக்க எல்லாரையும் அவங்கவங்க வீட்டு திண்ணைலயே பார்த்து விசாரிச்சுடறது..இன்னும் எத்தனையோ..அதையெல்லாம் ஒவ்வொன்னா எப்பவாவது விரிவாக எழுதனும்...
இப்ப ஒரு மொக்கை..
அதாகப்பட்டது கதையின் ஆரம்பத்திலே கதையின் நாயகனுக்கு(வேற யாரு நான் தான்) வயது ஒன்றரை. அப்ப திண்ணைல வச்சு நான் செய்த பிசினஸ் டீல் பற்றி பின்னாளில் எனக்கு சொல்லப்பட்ட வெர்ஷன் இது. ஏதோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. குழந்தை அழுததால(அட இதுவும் நான் தான்) அம்மாவோட ஒரு செயினை மாட்டி விட்டிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு வந்ததும் எங்கப்பாரு அவர் நண்பரோட எங்க தெருக்கோடியில இருந்த ஓட்டலுக்கு காபி குடிக்க கிளம்பினாராம். நான் அழுதுட்டே அவர் பின்னாடி வந்ததால திண்ணைல உக்கார விட்டுட்டு எங்கம்மாவுக்கு குரல் விட்டுட்டு போயிட்டாராம். எங்கம்மா திண்ணைய விட்டு எங்கே போகப்போறான்னு விட்டுட்டாங்களாம்.
அப்ப 'சொப்பு அண்ணா' கேரக்டர் எண்ட்ரி. அவரு என்கிட்ட நாற்காலி கால் தேயாம இருக்க போடற ப்ளாஸ்டிக் குப்பியைக் கொடுத்துட்டு செயினைக் கேட்டிருக்கார். அப்ப எங்க வீட்டுல ஒரு இரும்பு நாற்காலி இருந்தது. அதுல குப்பி இருந்ததா இல்லையா எனத் தெரியாது. இருந்தாலும் வீட்டுக்குத் தேவைப்படற பொருளா இருக்கேன்னு நானும் செயினைக் கிழட்டிக் கொடுத்துட்டு பண்டமாற்று முறையில் குப்பியை வாங்கிட்டேன். அவரும் கிளம்பி போயிட்டார்.
நான் உள்ள போய் எங்கம்மாகிட்ட "சொப்பு அண்ணா கொடுத்தாரு"ன்னு சொல்லி அந்த குப்பியைக் கொடுத்திருக்கேன். அவங்க கழுத்துல இருந்த செயினைத் தேட "அதான் இது"ன்னு கையில இருந்த குப்பியைக் கொடுத்து ஒரு பக்கா பிசினஸ் டீல் முடிச்ச சந்தோஷத்தோட இருந்திருக்கேன். என்ன செய்ய அப்ப இருந்து இப்ப வரைக்கும் வெளுத்ததெல்லாம் பாலு பொங்கறதெல்லாம் பீருன்னே வளர்ந்திருக்கேன்.
***
திண்ணை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் தீண்டாமைச் சின்னமாகவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எங்க ஊர் பக்கம் இன்னும் அப்படித்தான் இருக்கு!!
***
ஆயில்யன் அண்ணாச்சி சிலப்பல வாரங்களுக்கு முன்ன ஜிலேபி பதிவு போட சொன்னாரு. ஆனா எழுத முடியலை. என்னால ஜிலேபி கொடுக்க முடியலைனாலும் என்னால முடிஞ்சது
***
த*****ம் படம் பற்றி எழுத மாட்டேன்னு அசின், மல்லிகா ஷெராவத் மேல சத்தியம் பண்ணிட்டேன். இப்ப வரைக்கும் சத்தியத்தைக் காப்பாத்திட்டிருக்கேன்.
***
இந்த பாட்டு பாருங்க. 'மலையாளி' என்ற இசைக்குழு. தமிழ் பாட்டு மாதிரியே இருக்கு. செம கலக்கல்.
***
இந்த மாத ?! தத்துவம்
"We don’t see things as they are, we see them as we are"
கப்பி | Kappi 24 பின்னூட்டங்கள்
சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)
இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி இசை, பாடல்கள். சில காட்சிகள் கண் கலங்க வைக்கும். பல காட்சிகள் புன்னகைக்க வைக்கும். படத்தில் சொல்வது போல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இத்திரைப்படத்தைப் பாருங்கள். ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.
கீழே அப்படத்தில் வரும் ஒரு பாடல் - Keep Your Mind Wide Open
பாடியவர் இத்திரைப்படத்தில் லெஸ்லியாக நடித்த அன்னா சோஃபியா ராப் (Anna Sophia Robb)
கப்பி | Kappi 11 பின்னூட்டங்கள்
வகை சிறுவர்களின் உலகம், சினிமா
'?!' & நன்றி
விஜய் தொலைக்காட்சியின் சென்ற வார 'நீயா? நானா?' நிகழ்ச்சியில் "பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வைக்கும் பாசத்தில் பாரபட்சம் இருக்கின்றதா" என்ற சுவாரசியமான தலைப்பில் இடையில் விவாதம் நடந்தது. இரண்டோ அதற்கு மேலோ குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவது பெரும்பாலான குடும்பங்களில் நடப்பது. பதினைந்து வயது சிறுவனில் இருந்து ஐம்பத்தைந்து வயதானவர் வரை தங்கள் உணர்வுப்பூர்வமாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எதிர்தரப்பில் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளாமல் 'பிள்ளையின் எதிர்காலத்திற்கு, பொருளாதார நிலை, பிள்ளையின் ஆசை, எங்களின் கனவு' என்று விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தார்கள். பல இனிமையான அனுபவப் பகிர்வுகளுடனும், வாதங்களுடனும் இருதரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த கோபிநாத் எப்போதும் போல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
'ஜெயா டிவி' காமெடி டைம்-இல் கடித்துக்கொண்டிருந்த நடிகர் 'லொள்ளு சபா'வுக்கு வந்ததிலிருந்து இதையும் பார்ப்பதில்லை. சந்தானத்தைத் தொடர்ந்து ஜீவாவும் கிளம்பிவிட்டார் போல. நிகழ்ச்சி மரண மொக்கையாகிவிட்டது. சிரிப்பே வரல.
*****
இரண்டு வாரங்களாக தூங்குவதற்கு முன்னும் தூங்கி எழுந்த பின்னும் ஏ.ஆர்.ரகுமானின் 'Ada' மற்றும் 'Jaane Tu Ya Jaane Na' படங்களின் பாடல்களைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் அட்டகாசம்.
*****
நட்சத்திர வாரத்தில் தலைவரைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருந்தேன். சிலப்பல காரணங்களால் இயலவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டில்.
All About Superstar என்ற பதிவில் சுந்தர் என்பவர் தினம்தினம் சுவையான பல தகவல்களையும், சுடச்சுட செய்திகளையும் தலைவரின் பழைய பத்திரிகைப் பேட்டிகளையும் தருகிறார்.
*****
ஒரு வழியாக இங்கு வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பொது நூலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த ஏழு மாதங்களில் இரண்டே நாவல்களை முழுதாக வாசித்திருக்கிறேன். ஓர்ஹன் பாமுக்-கின் 'My Name is Red' புத்தகத்தை இரண்டு மாதங்களாக இருநூறு பக்கங்கள் மட்டுமே வாசித்திருக்கிறேன். இந்த வேகத்தில் படித்தால் அதை முடிப்பதற்குள் 2009 வந்துவிடும் என்ற அச்சத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு நூலகத்தில் இருந்து கொண்டுவந்த தஸ்தாவஸ்கியின் 'The Brothers Karamazov' ஆரம்பித்திருக்கிறேன். அதை சீக்கிரம் வாசித்துமுடிக்க தஸ்தாவஸ்கி அருள்புரிவாராக
*****
இந்த பாட்டு செமையா இருக்கு.
*****
இரண்டு மாதங்களாக ?! பதிவுகளை எழுதவில்லை என்று கவலையில் இருந்தேன்.
*****
இந்த மாத ?! தத்துவம்
""No man, for any considerable period, can wear one face to himself, and another to the multitude, without finally getting bewildered as to which may be true."
- எங்கோ படித்தது.
*****
இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்வு செய்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் அடாத மொக்கையிலும் விடாது பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! :)
கப்பி | Kappi 27 பின்னூட்டங்கள்
உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு
உருகுவே செல்வதற்கு முன் தெரிந்த இரண்டே ஸ்பானிஷ் வார்த்தைகள் 'Hola', 'Adios'. அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ஆரம்ப நாட்களில் ஸ்பானிய மொழி தெரியாமல் சிறிது திண்டாடினோம். பின்னர் எங்கள் அணியில் இருந்த உள்ளூர் நண்பர்கள் உதவியுடனும் இணையத்திலும் ஸ்பானிஷ் கற்க ஆரம்பித்தேன். காலையில் வந்தவுடன் நலம் விசாரித்தலில் ஆரம்பித்து அலுவலில் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்பானிஷில் சொல்லக் கற்றுத்தருவார்கள். இதுபோல் தினமும் வேலையின் போக்கிலேயே அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எளிதாக இருந்தது. எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.
இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.
ஆரம்பத்தில் சமையல் செய்ய ஒரு சட்டி வாங்கச் சென்று ஆங்கிலம் தெரியாத கடைக்காரரிடம் ஸ்பானிஷில் கேட்கத் தெரியாமல், சட்டியைக் குறிக்க நான் செய்த அபிநயங்கள் அவருக்குப் புரியாமல் சட்டியே வாங்காமல் சாப்பாட்டுக்கு அல்லாடிய நான் பின்னர் ஓரளவு ஸ்பானிஷ் பேச கற்றுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று வர இயன்றது அலுவலக நண்பர்களால் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.
நான் அங்கு சென்றபோது எங்கள் அணியில் மொத்தம் பதினேழு இந்தியர்களே இருந்தனர். அவர்களில் ஸ்பானிஷ் கற்க ஆர்வமிருப்பவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணே மாலை வேளைகளில் பாடம் எடுத்தார். பணிகளுக்கிடையில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்த முடியாததால் வகுப்புகளைத் தொடர முடியாமல் போனது. அடுத்த நான்கைந்து மாதங்களில் எங்கள் அலுவலகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது ஆனது. அப்போது பத்திலிருந்து பதினைந்து பேர் ஸ்பானிஷ் கற்க ஆர்வம் காட்டியதால் மனிதவள அலுவலகத்தில் இருந்து சிறப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்த முன்வந்தனர்.
மனிதவள அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் படித்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்களுக்கு ஸ்பானிஷ் கற்றுத்தர முன்வந்தார். அவர் பெயர் பியத்ரிஸ் மெலொ (Beatriz Melo). வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் வீதம் வகுப்புகள் ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்களுக்காக அடிப்படையில் இருந்து வகுப்புகளை ஆரம்பித்தார். நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.
பியத்ரிஸ் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் (பெயர் மறந்துவிட்டது) ஸ்பானிஷ் பேராசியராகப் பணியாற்றியவர். சில வருடங்கள் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு உருகுவே திரும்பியவர் அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார். தலைநகர் மாண்டிவிடியோவில் வெளியே சென்றால் ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவே. வேறு ஊர்களுக்குச் சென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாகவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது(இத்தகைய பள்ளிகள் பிரிட்டிஷ், இத்தாலி நாடுகளைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன). ஆனால் அரசுப் பள்ளிகளில் சமீபமாக சில ஆண்டுகளாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பதால் ஆங்கிலம் அறியாமலிருப்பது இயல்பென்று அறிய முடிந்தது. பியத்ரிஸ் ஒவ்வொரு முறை உருகுவேயைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்வைப்பார்.
பியத்ரிஸ் எமிலி டிக்கன்ஸன்(Emily Dickensen) என்ற பள்ளியில் பணிபுரிந்து வந்தார். மாணவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடத்த விரும்பினார். மாணவர்கள் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்வதுடன் அவர்கள் ஆங்கிலம் கற்கவும் உதவுமென்றும் மேலும் நாங்கள் கற்ற ஸ்பானிஷை மாணவர்களிடம் பேசிப் பழக வாய்ப்பாகவும் இருக்குமென சந்திப்பை ஏற்பாடு செய்தார். நாங்கள் ஆறு பேர் அந்த பள்ளிக்குச் சென்றபோது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருந்தனர். கைதட்டி ஆரவாரமாக எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனோம். எங்களை அறிமுகம் செய்துவைத்த பியத்ரிஸ் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தலா பத்து மாணவர்களாக குழுக்களாகப் பிரிக்க அவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம்.
அறிமுகத்திற்குப் பிறகு அரைகுறை ஸ்பானிஷிலேயே சிறிது நேரம் பேசினோம். அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை. மெதுவாக பேசினால் சில வார்த்தைகளை அறிந்து என்ன கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஸ்பானிய உச்சரிப்பாலும் வார்த்தை பிரயோகங்களாலும் சில காமெடிகள் நடந்ததால் ஆங்கிலத்திற்கு மாறினோம். அவர்கள் இந்தியாவைக் குறித்தும் நம் வாழ்வுமுறை குறித்தும் அவர்களுக்கு இருந்த கேள்விகளைக் கேட்டனர். சிலர் ஏற்கனவே இந்தியா குறித்த தகவல்களை அறிந்திருந்தார்கள். வெளிநாட்டுத் தூதவராக வேண்டும், நிரலாளராக வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒரு கனவிருந்தது.
அந்த பள்ளி மாணவர்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வி நிலை குறித்த கவலை இருந்தது. நம் ஊரைப் போலவே தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது. அம்மாணவர்களில் ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பொருளாதார நிலையைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது. ஏற்கனவே உருகுவேயின் கிராமப்புறங்களையும் புறநகர் பகுதிகளையும் பார்த்து உருகுவேயில் அத்தகைய பாகுபாடு இருப்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அந்த சிறுவனின் கேள்வி அதிர்ச்சியளித்தது. அவர்களிடம் அந்த பாகுபாடுகள் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிலையிலிருந்து அவர்கள் போராடி மேலேறி வருவதுதான் சாதனை என்று ஊக்கமளிக்கும் வண்ணம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
பிறகு என்னைப் பற்றிய கேள்விகள் கேட்டார்கள். உருகுவேயில் எப்படி பொழுதுபோக்குகின்றேன், எங்கெல்லாம் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பேசியபடி சிறிது நேரம் உரையாடினோம். உருகுவேயில் நான் கேள்விப்பட்டிராத சில இடங்கள் குறித்தும் விழாக்கள் குறித்தும் தகவல்கள் தந்தார்கள். உருகுவேயில் சிறப்பான Dulce de Leche என்னும் இனிப்பும் கேக்குகளும் சாப்பிட்டபடியே இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக உரையாடினோம். ஒரு பிற்பகற்பொழுதில் பல சுகமான நினைவுகளைத் தந்து இனிமையானதொரு அனுபவமாக அமைந்த சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.
பியத்ரிஸ் இப்போதும் மடல் தொடர்பில் இருக்கிறார். அவ்வப்போது உருகுவே குறித்த செய்திகளையும் பள்ளி மாணவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார். அவரின் மடல் வரும் நாட்களில் இவ்வாறான சில இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி சில மணி நேரங்கள் கழிகின்றன.
பி.கு: இந்த சந்திப்பு மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து இதுவே நீண்டுவிட்டது. ஆகவே மற்றவை பிறிதொரு பதிவில்.
கப்பி | Kappi 22 பின்னூட்டங்கள்
பதிவர் பட்டறை @ கோலிவுட்
பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.
விஜய்: அண்ணா நாம அடிச்சா எல்லாமே கில்லிங்கண்ணா..இப்ப பதிவு எழுத வந்தாலும் அதுமாதிரி கில்லி பறக்கனும்ங்கண்ணா
சந்தானம்: குருவின்னு பறவை பேரை வெச்சப்பிறகே ஒன்னும் பறக்கல..இதுல என்னத்த கில்லி மாதிரி பறக்கறது? சரி இப்ப எதுக்கு இங்க கூடியிருக்கீங்க? என்னா மேட்டரு?
விஜய்: ண்ணா, அமிதாப் பச்சன் பதிவெழுத ஆரம்பிச்சு ஆயிரக்கணக்குல பின்னூட்டம் வாங்கறார்ண்ணா..அமீர்கான் ஷாருக்கான் பேரை நாய்க்கு வச்சு வகைவகையா கலாய்க்கறாருன்னா..அது மாதிரியே நாங்களும் ப்லாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்ண்ணா..நான் ஒருவாட்டி முடிவெடுத்துட்டா
சந்தானம்: நீங்க மாறவே மாட்டீங்கன்னு தெரியும்..அது என்ன கணக்கு அமீர்கானைப் பாத்துட்டு ப்லாகு? இங்க அஜீத்துக்கு நீங்க வளக்கற குருவி பேரை வச்சி காமெடி பண்ணவா? படத்துலதான் உங்க பஞ்ச் டயலாக்கு ,அடுத்தவனை அசிங்கப்படுத்தற தொல்லையெல்லாம் தாங்கலைனா இங்கயும் வந்து ஆரம்பிக்கனுமா? ஏற்கனவே அங்க கூட்டம் அதிகம்டா..நீங்களும் போனா க்ரவுடு அதிகமாயிரும்
விஜய்: எங்கப்பா இன்னொரு ஐடியாவும் கொடுத்திருக்காருங்கண்ணா. இப்ப குருவிக்கு பதிவுல தான் ரொம்ப நெகடிவ் விமர்சனமாங்கண்ணா. நான், எங்கப்பா, எங்கம்மா, தரணி, திரிஷா, விவேக்னு எல்லாருக்கும் பதிவு எழுத சொல்லித்தர போறேங்க்ண்ணா..ஆளாளுக்கு குருவியை புகழ்ந்து எழுதி படத்தை ஹிட்டாக்குவாங்கண்ணா
சந்தானம்: படத்தை ஓடவைக்க இத்தன நாளா இவங்களயெல்லாம் கூப்பிட்டு டிவில தான் பில்டப்ப கொடுத்தீங்க இப்ப இங்கயுமாடா?? டைரக்டர் சார் நீங்க எதுக்கு பதிவெழுத வந்தீங்க?
கே.எஸ்.ரவிகுமார்: ரெண்டு வருஷமா கமல் சாரோட தசாவதாரம் படமெடுத்து எனக்கு டைரக்ஷனே மறந்து போச்சு. என்னை கேமரா பக்கமே வரவிடல. டைரக்டருனு பின்னாடி எழுதியிருக்கற ப்ளாஸ்டிக் சார்ல என்னை ஓரமா உக்காற வச்சு வேடிக்கை பார்க்க விட்டுட்டாரு கமல் சாரு..பேருக்கு தான் டைரக்டர்..இப்ப எனக்கு சுத்தமா டைரக்ஷன் மறந்து போச்சு..என்னை ரிஃப்ரெஷ் பண்ண கண்டிப்பா எதாவது செய்யனும்
சந்தானம்: ஒரு பஞ்சாயத்து சீனோ ரேப் சீனோ இல்லாம படமெடுக்க சொன்னா உடனே டைரக்ஷனே மறந்து போற அளவுக்கு ஆயிட்டீங்களே சார்..கேட்கற எனக்கே ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு
கே.எஸ்.ரவிகுமார்: அதனால தான் சவுத்துல ஒரு வில்லேஜ்ல
சந்தானம்: நிறுத்துங்க அதென்ன படமெடுக்கறவன்லாம் சவுத்துல ஒரு வில்லேஜுன்றீங்க..அப்படியில்லனா நார்த் மெட்ராஸுங்கறீங்க..ஏன் உங்களுக்கெல்லாம் செண்டர் தமிழ்நாட்டுல வேற ஊரே கிடைக்காதா
கே.எஸ்.ரவிகுமார்: அதுதான்யா ட்ரெண்டு..என்னை சொல்ல விடு..சவுத்துல ஒரு வில்லேஜ்ல ஒரு ஃபேமிலி ஸ்டோரி எடுக்கனும்..அதுக்கு முன்ன பதிவெழுதிப் பாக்கனும். பதிவுல நெறய இங்கிலீஷ் படம் பத்தி எழுதுவாங்களாமே அதுல எதுனா உருவ முடியுமான்னு பாக்கனும்
சந்தானம்: 'காக்க காக்க' கவுதம் மேனன் எல்லா படத்தையும் உருவி பத்து படத்துக்கு கதை ரெடியா வச்சிருக்காரு..நீங்க லேட்டு...ஒன்னு பண்ணுங்க லேட்டஸ்ட் ட்ரெண்டு கேள்வி பதில் எழுதறதுதான்..மக்களை கேள்வி கேட்க சொல்லலாம்..அப்படி யாரும் கேக்கலைனா கொண்டித்தோப்பு குமார், கூடுவாஞ்சேரி சேகர்ன்னு யார் பேராவது போட்டு கேள்வி கேட்டுக்கிட்டு அதுக்கு பதிலும் எழுதலாம்
என்றபடி அருகில் ஜெயம் ரவியைப் பார்க்கிறார்.
சந்தானம்: ஜெராக்ஸ் ரவி..ச்சே ஜெயம் ரவி நீங்க இங்க என்ன பண்றீங்க
ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் ஹீரோ மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கு வாழ்க்கைல ரெண்டு விஷயம் சொந்தமா பண்ணனும்னு ஆசை. ஒன்னு வளர்ந்து பெரியவனாவறது. இன்னைக்கு வரைக்கும் நானே கஷ்டபட்டு இந்தளவு வளர்ந்துட்டேன். இன்னொன்னு நானே ப்லாகு எழுதறது. அதுக்கு தான் ரெடியாயிட்டிருக்கேன்.
சந்தானம்: ஆறரை அடிக்கு வளர்ந்ததுகூட சாதனையா..அது சரி கையில எதுக்கு 'முப்பது நாளில் தெலுங்கு' புக்கை வச்சு மண்டையை ஆட்டிட்டிருக்க? தெலுங்குல ப்லாகு எழுதப்போறயா?
ஜெயம் ரவி: ச்சேச்சே தெலுங்குல இருக்க ப்லாகெல்லாம் படிச்சு அதை தமிழ்ல எழுதனும்ல அதுக்காகத்தான் தெலுங்கு கத்துக்கறேன்
சந்தானம்: இங்க பாத்தியா அழுவாங்கோலி ஆட்டம் ஆடறத..சொந்தமா யோசிச்சு பதிவெழுத சொன்னா தெலுங்குல இருந்து ரீமேக்காம்..என்னமோ பண்ணு அதையும் படிக்கனும்னு ஜனங்க தலைல எழுதியிருக்கு
அப்போது கணீர் குரலில் கவிதை சொல்லியபடி வைரமுத்து வருகிறார்
வைரமுத்து: இளைஞனே கேள்!
கீபோர்டை ஆணியாக்கி
கணிணியின் வெள்ளைத்திரையைப்
பனை ஓலையாக்கி
கவி செதுக்கிடு!
நீ எழுத ஆரம்பித்தால்
பதிவுலகம் உன்னைக் கொஞ்சும்!
தமிழுலகம் நிறுத்தவிடக் கெஞ்சும்!
காலையில் கரைந்து போகும்
மின்மினியாய் இருக்காதே!
உச்சிவானில் மின்னும் நட்சத்திரமாய்
உயரத்தில் இரு!
சீற்றம் கொள்!
சிரி!
சண்டை போடு!
சர்ச்சையில் இறங்கு!
கும்மியடி!
பின்னூட்டம் போட்டு வாங்கு!!
இந்தக் கலை உன் கைக்குள் வரும்!
இதுதான் பதிவுகளின் தாரக மந்திரம்!
சந்தானம்: வரும்போதே மூச்சுவிடாம பேசிட்டு வரீங்களே சார்..ஏற்கனவே பதிவெழுதின அனுபவம் இருக்கோ
வைரமுத்து: இணையத்தில் எழுதியதில்லை! தமிழரின் இதயத்தில் எழுதியிருக்கிறேன்
சந்தானம்: இந்த ரைமிங்கா பேசறத மட்டும் விடாதீங்க. இணையத்துல ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்காங்க! கவுஜ எழுத கம்ப்யூட்டர் பிரோக்ராம்லாம் எழுதிவச்சிருக்காங்க! அங்க உங்களால தாக்குபுடிக்க முடியுமா சார்?
வைரமுத்து: காய்ந்துபோன ஏரிக்கரையில் ஊர்ந்து போகும் நண்டால் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியுமா? தீய்ந்து போன தோசையை தினம் தின்று ஓய்ந்து போயிருக்கும் ரங்கமணிகளால் தாக்குப்பிடிக்க முடியுமா? சிக்னலுக்கு சிக்னல் வசூல்ராஜாக்கள் தொல்லையிலிருந்து கியரை முறுக்கி சீறிப் பாயும் சிங்கங்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? இவர்களால் முடியுமென்றால் என்னாலும் முடியும்
சந்தானம்: இப்ப என்னா கேட்டுட்டேன்னு இவ்ளோ ஃபீலாவறீங்கன்னு தான் புரியல..என்னவோ சொல்றீங்க அதுவும் என்னனு புரியல...பதிவெழுதனும்னு முடிவு பண்ணிட்டபிறகு என்ன பண்றது..நல்லாயிருந்தா சரி
சிம்பு: எனக்கு எதிரிங்க நிறைய பேர் சார். சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கும்போதே நோட்டுல கதை எழுதுவேன். அதைப்பாத்துட்டு பாராட்டாம மிஸ் அடிப்பாங்க.
சந்தானம்: கிளாச கவனிக்காம கதை எழுதுனா மிஸ் அடிக்காம உனக்கு நாலு ஃபிகர் வந்து கிஸ்ஸா அடிப்பாங்க?
சிம்பு: புதுசா நான் பதிவெழுதிதான் பேர்வாங்கனும்னு இல்லை. லிட்டில் சூப்பர் ஸ்டார்னு அன்னைக்கே மக்கள் ஏத்துக்கிட்டாங்க..இப்ப பதிவும் எழுதி அங்கயும் ஸ்டார் ஆவேன் சார். அந்த நம்பிக்கையிருக்கு சார்
சந்தானம்: ஏன்டா...ஏதோ மக்கள் உனக்கு வாக்கு போட்டு ஏத்துக்கிட்டா மாதிரி பேசற..உங்கப்பாவே உன் படத்தைப் போட்டு அதை சுத்தி சுத்தி லிட்டில் சூப்பர்ஸ்டார்னு எழுதி வச்சா உடனே நீ பெரிய ஆள் ஆயிடுவியா? டேய் பதிவுலகத்துல சூப்பர்ஸ்டார் ஆவனும்னா நல்லா மேட்டரோட எழுதனும்..நீ மேட்டரா எழுதுவன்னு தெரியும் ஆனா மேட்டரோட எழுதுவியா?
சிம்பு: என் காதல் கதைகளை ஒவ்வொன்னா எழுதிட்டு வந்தாலே ஆறு வருஷத்துக்கு ஆற அமர எழுதலாம் சார். அத்தனை அடிபட்டிருக்கேன். ஆனா அத்தனையும் தாண்டி வருவேன்.
சந்தானம்: தாண்டி வரமுடியாது..ஒரு எட்டடி குழி தோண்டிட்டு வேணா வரலாம்..சார் தயவு செஞ்சு அப்படியே ரொமான்ஸ் மூடுக்கு போயிடாதீங்க..ஏற்கனவே எங்களால தாங்க முடியல..
சிம்பு:ஏற்கனவே இண்டர்நெட்டுல இறங்கி ஆர்குட், சாட்ன்னு பல பொண்ணுங்க கிட்ட பேசிட்டிருக்கேன்..இப்ப முடிவு பண்ணிட்டேன். என் மனசைத் தொறக்க ஒரு இடம் வேணும். அதுக்கு பதிவு தான் ஒரே வழி
சந்தானம்: கிழிஞ்சுது இனி எத்தன பேரு சிக்கி சீரழிய போறாங்களோ..அப்படியே உங்க ஃப்ரெண்டு எஸ்.ஜே. சூரியாவையும் கூட்டிட்டு வந்துட்டா சேர்ந்து கும்மியடிக்கலாம்...'ரெண்டு' போட்டிக்கு டபுள் மீனிங்கல கூட எதுனா எழுதிபாக்கலாம்!
சிம்பு: எழுதறோம் சார்! சிம்புன்னா யாருன்னு காட்றோம்! எனக்கு எதிரா நடவடிக்கைல இருக்கறவங்களைத் தூக்கறோம் சார்.
சந்தானம்: மொதல்ல என் தோள்ல இருந்து உங்க கையத் தூக்குங்க..அப்படியே பதிவுக்கு 'சிம்புவின் சொம்பு'ன்னு பேரு வைங்க! கூட்டம் குவியும்
எனும்போதே பேரரசு 'ஜிங்கிலி ஜாக்கு'பலூன் பரத்து' 'பூனை பூபதி' 'உலக்கை உலகநாதன்' என்று கத்தியபடியே வருகிறார்
சந்தானம்: என்ன சார் நீங்களும் பதிவெழுத போறீங்களா?
பேரரசு: அட எப்படி கண்டுபுடிச்சீங்க?
சந்தானம்: நீ பதிவெழுதறன்னு கண்டுபுடிக்க இதுக்காக நாசாலருந்து சைண்டிஸ்டா வருவாங்க..சரி இன்னா மேட்டரு ஏதோ பேரெல்லாம் சொல்லினு வர?
பேரரசு: அதெல்லாம் வலைல நான் எழுத போற காரெக்டர்ஸ் பேரு
சந்தானம்: காரெக்டர்ஸ் பேரு ஏன் காறி துப்பற பேராட்டம் இருக்கு? சரி அது உன் கஷ்டம் படிக்கறவங்க கஷ்டம்..அப்படி என்னதான் எழுதப்போற ப்லாகுல?
பேரரசு: வேறென்ன செண்டிமெண்ட் கதைதான்..ஒரு ஹீரோ..அவன் கம்பெனில ஓசில நெட்டு கிடைக்குதேன்னு ப்லாகு ஆரம்பிக்கிறான். ப்லாகு மூலமாவே ஒரு ஃபிகரையும் புடிக்கறான். அப்படியே லவ்வு டெவலப் ஆகுது..அந்நேரம் பார்த்து ஹீரோவோட அக்கா வேலைபாக்கற ஆபீஸ்ல அவங்க மேனேஜர் வெள்ளைக்காரன்ன் ஜிங்கிலி ஜாக்கு இண்டர்நெட்டை கட் பண்ணிடறாங்க..அக்காவால பதிவெழுத முடியல..அதைப் பாத்த ஹீரோ ஜிங்கிலி ஜாக்கிட்ட இங்கிலீஷ்ல பேசியே சண்டை போடறான்..அது வேலைக்காவல..அதனால தானே அக்கா பேர்ல ங்கொக்கமக்கான்னு சூப்பரா எழுதி அக்காவை சந்தோஷப்படுத்தறான்..அப்பதான் ஒரு டிவிஸ்டு..அவன் ஆபீஸ்லயும் இண்டர்நெட் கட் ஆயிடுது..அதுக்கு காரணம் அவனோட டீம்லீட் டிங்கர் டில்லி. அவன் போராட்டத்துல இறங்கறான். அவனை வேலைய விட்டே தூக்கறாங்க..அந்த கம்பெனிக்கு எதிர்ல இருக்க டாஸ்மாக்ல உள்ளிருப்பு போராட்டம் நடத்தற அவனை நான் சந்திக்கிறேன். அந்த கம்பெனிக்கே அவன் தான் ஓனர்ன்ற ப்ளாஷ்பேக் சொல்லி அவனை உசுப்பேத்தி கம்பெனியவே வாங்க வைச்சு பதிவெழுத வைக்கறேன்..அவன் அக்காவும் அதே கம்பெனில பதிவெழுதறாங்க..அந்த கம்பெனில எல்லாரும் சந்தோஷமா பதிவு எழுதறாங்க..இதையே நான் மூனு வருஷத்துக்கு தொடர்கதையா எழுதப்போறேன்...சூப்பர்டூப்பர் ஹிட்டாவும் பாருங்க
சந்தானம்: கம்பெனில எல்லாரும் பதிவெழுதினா கம்பெனி எப்படி உருப்படும். சரிவுடு..உன் கதையே உருப்படாது இதுல கதைல வர்ற கம்பெனி உருப்படலனா என்ன...பதிவுக்கு பேரு வச்சிட்டியா?
பேரரசு: ஏதாவது ஊர் பேர் தான் வைக்கனும்..அதான் எனக்கு ராசி
சந்தானம்: ஏர்வாடி இல்லைனா கீழ்ப்பாக்கம்னு வை. உன் பதிவை படிக்கறவங்க கடைசில அங்கதான் போகனும். சரி எல்லாரும் கிளம்பிட்டீங்க..ஆனா கம்ப்யூட்டர் பத்தி தெரியுமா? அதுல எப்படி எழுதறதுனு தெரியுமா?
கே.எஸ்.ரவிகுமார்: இப்ப கேட்டியே..இது கேள்வி...அதுக்குத்தான் ஆட்களை அனுப்பியிருக்கோம்ல
சந்தானம்: எங்கே?
கே.எஸ்.ரவிகுமார்: நம்மூர்ல இணையத்துல எழுதறவங்க எல்லாம் ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா மெரினா பீச்ல காந்தி சிலைக்கு பின்னால கூட்டம் போடுவாங்க..அவங்களைத் தூக்க சொல்லி ஏற்கனவே கனல் கண்ணனை பத்து ஸ்டண்டு ஆர்ட்டிஸ்டோட அனுப்பியாச்சு..அவங்க வந்துதான் எங்களுக்கு கத்துக்கொடுக்கனும்
என்று கூற 'அடப்பாவிகளா....இப்படி ஒரு அப்பாவிக் கூட்டத்துக்கு ஆப்பு ரெடி பண்றீங்கன்னு சொல்லவேயில்லையேடா..அவங்களை என் உயிரைக்கொடுத்தாவது காப்பாத்தறேன்டா' என்று சந்தானம் பைக்கிலேறி பீச்சை நோக்கிப் பறக்கிறார்.
கப்பி | Kappi 48 பின்னூட்டங்கள்
கண்ணு தெரியுதா?
1. இனியாவது தமிழ் திரைப்படங்களில் நடிப்பீங்களா?
2. சிங்கத்துக்கு சுளுக்கெடுத்தாச்சுல்ல
3. புதிதாக வலைப்பதிவு ஆரம்பித்தவர்
5. எத்தனை வருஷமானாலும் அடித்து ஆடுபவர்
6. தம்பியண்ணன் இவரைக் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்
8. பல அவதாரங்கள் எடுக்கும் கலைஞர்
9. என்னமா கண்ணு வருவியா? வரமாட்டியா?
10. அதான் வீட்டுக்கு அனுப்பிட்டாங்களே
இவங்க தான் :))
கப்பி | Kappi 40 பின்னூட்டங்கள்
நினைத்தாலே இனிக்கும்
'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "இந்த மாசம் பயிர்களில் தட்டான்பூச்சிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்ங்கறதால பொட்டாசியம் பாஸ்பைட் உரத்தை ஒன்னுக்கு மூனுன்ற கணக்குல கலந்து போடனும்னு மதுராந்தகம் வேளாண் விரிவாக்க மையத்துல இருந்து செய்தி அனுப்பியிருக்காங்க". சரோஜ் நாராயண்ஸ்வாமி ஆறே முக்காலுக்கு செய்திகளை ஆரம்பிப்பதற்குள் எழுந்துகொள்ளவில்லை என்றால் காலையிலேயே உதைதான்.
6.55க்கு அறிவிப்புகளுக்குப் பிறகு 'காலை மலர்' ஆரம்பிக்கும். நகரில் இன்று, அறிவியல் செய்திகள் முடிந்ததும் 7.15க்கு மீண்டும் செய்திகள். அரை மணி நேரத்தில் எதற்கு இன்னொரு செய்திகள் அந்த நேரத்தில் இரண்டு பாடல்களை ஒளிபரப்பலாமே என்று கடியாக இருக்கும். 7.40க்கு இன்று ஒரு தகவல். முதல்ல 7.35க்கு இருந்து பிறகு 7.40க்கு மாற்றினார்கள். இடையில் நகைச்சுவை துணுக்குகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. காலை மலர் முடிந்ததும் 7.45-ல் இருந்து 8 வரை பாடல்கள். அதற்குள் குளித்து முடித்திருக்க வேண்டும்.
8.15க்கு விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு. ஒவ்வொரு பாடலையும் குறைந்தது இருபது பேராவது விரும்பிக் கேட்டு கடிதம் எழுதியிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குள் அறிவிப்பாளர் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடும் எஸ்.பி.பி போல் மூச்சுவிடாமல் எல்லா பெயர்களையும் அறிவிப்பார். பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் அவர்கள் பெயரை மட்டுமல்லாது அவரின் கொள்ளு தாத்தா, பாட்டியில் ஆரம்பித்து பக்கத்து தெரு பொடியன் வரை அனைவரின் பெயரையும் எழுதி அனுப்பியிருப்பார்கள். காஞ்சிபுரத்திலிருந்து யாராவது கேட்டிருந்தால் அவரை நமக்குத் தெரிந்திருக்குமா என்று யோசித்ததுண்டு. நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே இட்லியோ தோசையோ உள்ளே இறங்கும். 8.40க்கு விளம்பரதாரர் வழங்கும் பாடல் என்று புது பாடல் ஒன்று ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கு தயாராகக் கிளம்பி இந்த புதுப்பாடலுக்காகவே காத்திருந்து கேட்டுவிட்டு கிளம்புவோம். அதற்குள் கிளம்பாவிட்டால் அன்று பள்ளிக்கு லேட் தான்.
மாலையில் வந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். 6.30க்கு செய்திகள். செய்திகள் முடிந்ததும் அடுத்த நாள் நிகழ்ச்சிகள்.ஒரு நாளும் நிகழ்ச்சிகளில் (யாராவது இறந்தாலொழிய)மாற்றமிருக்காது. ஆனாலும் காலை 5.30க்கு ஆரம்பித்து இரவு வரையான நிகழ்ச்சிகளை தினமும் சொல்வார்கள். அறிவுப்புகள் முடிந்ததும் நாடகம், தமிழ்/ஹிந்தி பாடல்கள். ஆங்கிலப் பாடல்களும் வாரத்தில் சில நாட்கள் உண்டு. பல்வகை சங்கீத நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும். தொலைக்காட்சி வந்தபின் மாலை வேளைகளில் வானொலி கேட்பது குறைந்துபோனது. ஆனால் மழை புயலடித்து தூர்தர்ஷன் தெரியாத நாட்களில் வானொலி பொழுதுபோக்கு.
ஞாயிற்றுக்கிழமைகளில் சில சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை வசனம். பெரும்பாலும் பழைய சிவாஜி/எம்.ஜி.ஆர் படங்களே ஒலிபரப்பப்படும். தலைவரின் படங்கள் வெகு அரிது. 'தங்கப்பதக்கம்' மட்டும் இரண்டு மூன்று முறை கேட்ட ஞாபகம் இருக்கின்றது. கதைவசனம் முடிந்ததும் பிலிப்ஸ் சூப்பர் 10 என்று அந்த வாரத்தின் சிறந்த பத்து புதுப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிகழ்ச்சியின் பெயர் சரியா என்று நினைவில்லை. மதிய நேரங்களில் வெயிலினால் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டபடி உள்விளையாட்டுகள் தான். சூப்பர் 10 முடிந்ததும் 4 ஆகிவிட்டது வெயில் குறைந்துவிட்டதென கிரிக்கெட் விளையாடக் கிளம்புவோம்.
சில நிகழ்ச்சிகள் திருச்சி, கோவை வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் "காஞ்சியில் ஒரு வானொலி நிலையம் இருந்தால் காஞ்சியிலிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுமே. இங்கு ஒன்று திறந்தால் என்ன" என்று தோன்றும். அதே போல் சிலோன் நிலையம் சில சமயங்களில் மட்டும் வரும். இரவுகளில் தெளிவாக வரும். நான் தூங்கப் போகும் நேரம் அப்பா கேட்டுக்கொண்டிருப்பார்.
வானொலியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் சுவாரசியமானவை. அப்போது எல்லா விளம்பரங்களிலும் ஒன்றிரண்டு குரல்களே மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இன்றும் கூட பண்பலை அலைவரிசைகளில் விளம்பரங்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்.
அப்போதெல்லாம் காலை இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தனியார் பண்பலை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். காஞ்சிபுரத்தில் பண்பலை எடுக்காது. விடுமுறையில் மாமா வீட்டுக்கு மடிப்பாக்கத்திற்கு செல்லும்போது கேட்க முடியும். 'ப்ரியமுடன் ப்ரியா'வில் ப்ரியா அழகாகப் பேசி சூப்பரான பாடல்களை ஒலிபரப்புவார். "மாஆர்ரூஊஊஉதி சூசுகி ட்ராஃபிக் பீட்" என்று அன்று ஆரம்பித்தது இன்றும் பண்பலை வானொலிகளில் தொடர்கின்றது.
பல தனியார் பண்பலை அலைவரிசைகள் வந்தபின்னும் இன்றும் சென்னை வானொலி நிலையத்திற்கென தனியாக நேயர்கள் இருக்கின்றார்கள். சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசைகளான ரெயின்போ, கோல்ட் எப்.எம்களிலும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
அப்பா வேலைக்கு சேர்ந்ததும் வாங்கிய வானொலி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பலமுறை கிழே விழுந்திருக்கிறது. நான் பலமுறை அதைத் திறந்து நோண்டியிருக்கிறேன். டியூனரையும் உள்ளே இருக்கும் காந்தத்தையும் கிழட்டி திரும்ப மாட்டி அந்த ரேடியோவிற்கு பலமுறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து மகிழ்வித்தது. டேப் ரிகார்டர் வாங்கியபின் அந்த ரேடியோ பரணிற்குச் சென்றது. டேப்ரிகார்டர் வந்தபின்னாலும்கூட எங்கள் விட்டில் எண்ணி பதினைந்து கேசட்டுகளுக்கு மேல் இருக்காது. எப்போதும் அதில் வானொலி தான் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதும் கூட பண்பலை வானொலியைக் கேட்டபடிதான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்று மாலை அயர்ச்சியிலும் ஏதோ இனம்புரியாதொரு கவலையிலும் பதிவெழுதத் தோன்றாமல் லேப்டாப் மானிட்டரை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்த எனக்கு வானொலி குறித்தான பழைய நினைவுகளைக் கிளறி இந்த பதிவை எழுத வைத்து அதற்கு வானொலி நிகழ்ச்சி பெயர்களின் சாயலிலேயே தலைப்பையும் தந்த தல கைப்புவுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்த வானொலிக்கும் இப்பதிவு சமர்ப்பணம். :D
கப்பி | Kappi 35 பின்னூட்டங்கள்
சிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)
சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது.
பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விடுதிகளிலும் பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளிலும் அவர்களைப் பார்த்தாலும் அவர்களைக் குறித்தும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களைக் குறித்துமான பிரக்ஞையின்றி கடந்து செல்கின்றோம். பாலியல் தொழிலை அவர்கள் பிழைப்பிற்காகத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் குறித்து இச்சமூகம் வருந்துவதில்லை. அக்குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வித கருணையுமின்றி நிராகரிக்கப்படுகின்றன.
சனா பிரிஸ்கி பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்ய கொல்கத்தாவிற்கு வருகிறார். எல்லா பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளைப் போலவே அங்கும் படம்பிடிக்க அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சனா பிரிஸ்கி பின்வாங்காமல் முயல்கிறார். பாலியல் தொழிலாளிகளைக் குறித்து படமெடுக்க வரும் பிரிஸ்கி அவர்களின் குழந்தைகளின்பால் ஈர்க்கப்படுகிறார். கல்வி மறுக்கப்பட்டு அங்கேயே தங்கள் வாழ்வைக் கழிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர்களை அந்த சூழலிலிருந்து வெளிக்கொணர வேண்டி அபிஜித், கெளர், கோச்சி, தபாசி, சாந்தி, மாணிக், சுசித்ரா, பூஜா ஆகிய எட்டு சிறுவர்களுக்கு புகைப்படக்கலையைக் கற்றுத்தர ஆரம்பிக்கிறார்.
ஆரம்பத்தில் சனாவுடன் பழகத் தயங்கும் சிறுவர்கள் சிறுது நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புரோக்கர்களும் சனாவை எதிர்க்கின்றனர். ஆயினும் சிறுவர்கள் ஆர்வத்துடன் சனாவிடம் புகைப்படக்கலையைக் கற்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் தங்கள் வீடுகளையும் படம் பிடிக்கின்றனர். சனா அவர்களைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்; புகைப்படங்கள் எடுக்க வைக்கிறார். அவர்கள் புகைப்படக்கலையை எளிதில் கற்றுக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.
அச்சிறுவர்கள் அனைவரும் தங்கள் குடும்பச் சூழ்நிலையையும் சமூகத்தையும் அறிந்தே இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற கனவும் தங்கள் குடும்பத்தினை நல்ல நிலையில் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையும் இருந்தாலும் யதார்தத்தினை உணர்ந்திருக்கிறார்கள். பெண் குழந்தைகள் வளர்ந்தபின் தாங்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை அறிந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருக்கிறார்கள்.
பிரிஸ்கி இவர்களை அத்தகைய சூழலில் இருந்து வெளிக்கொணர முயற்சிக்கிறார். அவர்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அக்குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தனியாக குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேசி ஒப்புதல் வாங்கும் பிரிஸ்கி பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதில் சிரமங்களைச் சந்திக்கிறார். பல இன்னல்களுக்குப் பிறகு அச்சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கிறார்.
அபிஜித்தின் புகைப்படம் ஒன்று ஆம்ஸடர்டாமில் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகிறது. ஆனால் அவனை ஆம்ஸ்டர்டாம் அனுப்ப அபிஜித்தின் அம்மா மறுக்கிறார். பிரிஸ்கி அவரிடம் இப்போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சம்மதம் வாங்குகிறார். அபிஜித்திற்கு பாஸ்போர்ட் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பல தடைகளை மீறி பாஸ்போர்ட் பெற்று அபிஜித் அப்போட்டியில் கலந்துகொள்கிறான்.
திரும்பி வரும் அபிஜித் பள்ளியில் சேர்கிறான். மாணிக்கின் தந்தை அவனைப் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார். பூஜா, சுசித்ரா, சாந்தி மூவரையும் அவர்களின் பெற்றோர்கள் விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தபாசியும் கெளரும் பள்ளிப்படிப்பைத் தொடர்கிறான். கோச்சியும் விடுதியிலேயே தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் படம் முடிகின்றது.
பல சிரமங்களுக்கிடையே இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் சனா பிரிஸ்கி. ஏஜெண்டுகளின் எதிர்ப்பு, பாலியல் தொழிலாளிகளின் ஒத்துழையாமைக்கு மத்தியில் அக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது போற்றத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் எதையும் நேரடியான போதனையில் இறங்காமல் சிறுவர்களின் வாயிலாக அவர்களின் உலகைத் திறந்து காட்டியிருப்பது திரைப்படத்தின் நோக்கத்திற்கு உறுதி சேர்கின்றது.
அச்சிறுவர்கள் கேமரா தங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணமில்லாமல் இயல்பாக அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன் தங்களைக் குறித்தும் தங்கள் கனவுகள் குறித்தும் தங்கள் சமூகச் சூழலைக் குறித்தும் பேசுகிறார்கள். ஏமாற்றத்தையும் துன்பத்தையும் தாங்கும் சக்தியை இச்சமூகம் சிறுவயதிலேயே அவர்களுக்கு தந்துவிட்டது. ஆயினும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக் கைதிகளாகாமல் அதிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகத்தோடு இருக்கும் இச்சிறுவர்கள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலியல் தொழிலாளிகளின் வாழ்வைப் பதிவு செய்ய வந்த சனா பிரிஸ்கி அக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல இன்னல்களை எதிர்கொண்டு அவர்களின் வாழ்க்கையைப் பதிவாக்கியிருப்பதும் அவர்களின் கல்விக்காக அவர்களின் பெற்றோரிடமும் உறவினரிடமும் போராடுவதும் தலைவணங்க வேண்டியவை. இத்திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் நலன்களை அரசும் சமுதாயமும் தொடர்ந்து புறக்கணித்தபடிதான் இருக்கின்றன. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பரவலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களும் ஏழ்மையின் காரணமாகவும் விழுப்புணர்வின்மையின் காரணமாகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்துவதில்லை. வெகுசிலரே தங்கள் குழந்தையின் எதிர்கால நலனைக் கருதி செயல்படுகிறார்கள். அத்தகைய சூழலில் பிறந்த ஒரே காரணத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு திறமைகளும் கனவுகளும் நிராகரிக்கப்படும் சிறுவர்கள் ஆயிரமாயிரம்.
கப்பி | Kappi 15 பின்னூட்டங்கள்
கிரிக்கெட் - IPL - T20
ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:
* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ஆட்டங்களையும் பெரும்பாலும் விடுவதில்லை.
* ரன்குவிப்பு ஒன்று மட்டுமே கிரிக்கெட் என்றாகிப்போனது வருத்தத்தை அளிக்கின்றது. பெளலர்களுக்கு சம வாய்ப்பு இல்லாமல் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமாகவே இருக்கின்றது. லீ, மெக்க்ராத், பாலாஜி, ந்டினி என எப்போதாவது ஆச்சரியப்படுத்தும் ஸ்பெல்களைத் தவிர பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாகவே இருக்கின்றது. பந்துவீச்சு என்பது ரன்களை கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை எடுப்பதும் மட்டுமன்று. அது மட்டையாளருக்கும் பந்துவீச்சாளருக்குமிடையேயான ஒரு சுவாரசியமான களம். அது ஒரு மைண்ட் கேம். இருவரும் அடுத்தவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆட்டத்தை மாற்றுவது, மட்டையாளரை தன் பந்திற்கு ஏற்றவாறு ஆட வைப்பது, கேட்சிங் பொசிஷன்களில் வீரர்களை நிற்க வைத்து பேட்ஸ்மேனின் திறமையை சோதிப்பது என பந்துவீச்சு ஓடி வந்து பந்தை வீசுவது மட்டுமன்று. ஏற்கனவே சொன்னதுபோல் அது ஒரு மைண்ட் கேம். ஆனால் 20-20 போட்டிகளில் அதற்கான சாத்தியங்கள் துளியும் இல்லை. இங்கு மொத்த நோக்கமும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலும் விக்கெட்டுகளை எடுப்பதிலுமே இருக்கின்றது. இத்தகைய போக்கு தொடருமேயானால் வருங்காலத்தில் லீ-யோ, மெக்ராத்தோ, கும்ப்ளே-வோ வார்னேயோ ஏன் இஷான் ஷர்மாவே கூட தேவைப்படாது. வீரர்களை லைன் அண்ட் லெங்க்த்தில் ஒரு மெஷினைப் போல போட பயிற்சி தந்தால் போதுமானது. பந்துவீச்சு ஒரு மைண்ட் கேமாக இருக்காது.
* ரன்குவிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதால் சரியான கிரிக்கெட் ஷாட்டை விடவும் ஸ்லாக்கர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதாவது பந்து எப்படி வந்தாலும் சுத்துவது. இதிலும் பார்த்தீர்களென்றால், ஹெய்டன், கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஜெயசூர்யா போன்ற டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தேர்ந்த வீரர்களே சரியான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் எல்லா 20-20 போட்டிகளிலும் ரன்களைக் குவிக்கிறார்கள். முதலில் சொன்ன வீரர்களை விட மெக்கல்லம், தோணி எத்தனை மேட்சுகளில் ரன் குவித்தார்கள்? பெரும்பாலான இளம்வீரர்கள் மட்டையைச் சுற்றுவதில்தான் இருக்கிறார்கள். சரியான கிரிக்கெட்டிங்க் ஷாட்ஸும் பந்திற்கு ஏற்ற ஷாட்ஸ் தேர்வும் வெகு அரிதாகவே காணக் கிடைக்கின்றது.
* மேலே சொன்னதுபோல் தொடருமானால், பந்துவீச்சைப் போலவே ரன்குவிப்பு மட்டுமே பேட்டிங் என்ற நிலைக்கு ஆளாகிவிடும். ஸ்லாக்கர்கள் மட்டுமே திறமையான மட்டையாளர்களாகக் கருதப்படும் அபாயம் இருக்கின்றது. பல கிரிக்கெட் ஷாட்டுகள் காணாமல் போகும். எத்தகைய பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் டிஃபன்ஸ் ஆட்டமே நீக்கப்பட்டுவிடும். வருங்கால வீரர்களுக்கு ப்ரண்ட்ஃபூட்டில் டிஃபன்ஸ் செய்யக்கூடத் தெரியாமல் போகலாம்.
* நான்கு மணி நேரத்திற்கு தொடர்ச்சியான ரன்குவிப்பைப் பார்ப்பது எனக்கு அயற்சியளிக்கின்றது. என்னைப் பொருத்தவரை சிகஸரும் ஃபோரும் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் இல்லை.
* தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடந்துவரும் இப்போட்டிகளில் பல மேட்சுகளில் பலர் பந்தை அடித்து துவம்சம் செய்து ரன்குவித்தாலும் நினைவுகொள்ளத்தக்க இன்னிங்க்ஸ் என்று ஒன்றிரண்டு மட்டுமே சட்டென நினைவுக்கு வருகின்றது. ஒருநாள் போட்டியிலோ டெஸ்ட் போட்டியிலோ ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்க்ஸை கட்டமைப்பது ஆர்வத்தைக் கிளப்பும். ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் தங்கள் இன்னிங்க்ஸை ஆரம்பித்து மேட்ச் சூடாகும். ஆனால் 20-20ல் அதற்கான வாய்ப்புகள் இல்லை. இங்கு ஒவ்வொரு வீரரின் தனித்தன்மையும் மறைந்துவிடுகிறது.
* இன்றைய பள்ளி மாணவர்களிடம் தோனியை விட டிராவிட் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காரணம் ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக தோனிக்குத் தரும் முக்கியத்துவம் மற்றும் 20/20. "பின்ன தோனி டிராவிட்டைவிட நல்ல ப்ளேயர் இல்லையா?" என்பீர்களேயானால் - நான் பேசுவது கிரிக்கெட் குறித்து.
* டெஸ்ட் மேட்சுகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில் (யாருடா டெஸ்ட் மேட்ச் பார்ப்பாங்க?ன்னு மட்டும் கேட்டுறாதீங்க) 20-20 ஐபிஎல் போன்ற தொடர்களின் மூலம் ஒரு நாள் போட்டிகளும் பாதிப்படையும். முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட இப்போட்டிகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வாரியங்கள் ஒருநாள்/டெஸ்ட் போட்டிகளை குறைத்து 20-20 போட்டிகளுக்கு இடமளிப்பார்கள். ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் கிடைக்கும் திரில் எனக்கு இதில் கிடைக்கவில்லை. ஆகையால் இவை இரண்டும் குறைந்தால் கவலையே.
* ரஞ்சி போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் குறைவான கவனமே செலுத்தும் பிசிசிஐ, ஐபிஎல்-லின் வெற்றிக்குப் பிறகு அத்தகைய போட்டிகளில் எந்த அளவு ஆர்வத்துடன் நடத்தும் என்பது கேள்விக்குறி. வருங்கால இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்க இத்தகைய உள்ளூர் போட்டிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஐபிஎல்-லின் இந்த வெற்றி, ரஞ்சியையும் மற்ற உள்ளூர் போட்டிகளையும் கூட 20-20 வடிவத்திற்கு மாற்றத்தக்க வணிக சக்தி படைத்தது. எதிர்கால இந்திய அணி வீரர்களின் கிரிக்கெட் அறிவு 20-20க்குள் சுருங்கிவிடக்கூடாது. (இது என் தேவையற்ற அச்சமாகக்க்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியமும் இருக்கின்றது)
* முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்தபின் டெஸ்ட் போட்டிகள் அழிந்தா போயின? அது போல் 20-20 இருந்தாலும் ஒரு நாள் போட்டிகளும் டெஸ்ட் போட்டிகளும் தொடரும் என்று சொல்லலாம். ஆனால் முற்றிலும் வணிக லாப நோக்கங்களுடன் நடத்தப்படும் இன்றைய 20-20 போட்டிகளில் இறங்கியிருக்கும் வணிகசக்திகள் ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் ஒழித்துக்கட்ட வல்லமை படைத்தவை என்பதில் சந்தேகமேயில்லை.
* இந்தியா கடந்த 20-20 உலகக் கோப்பையை வென்றிராவிட்டால் ஐபிஎல் போட்டிகள் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை.
* கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல் இதிலும் லீக் ஆட்டங்கள் நடைபெறுவது நல்லதுதானே. மக்களுக்கும் பொழுதுபோக்குதானே என்ற கருத்து நிலவுகிறது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் அடிப்படையிலேயே லீக் ஆட்டங்களுக்கு ஏற்றவாறு அமைந்தன. அந்த ஆட்டங்களின் அமைப்பு ஹார்மோன் உந்துதலையும் மக்களுக்கு சில மணி நேரங்களில் உச்சகட்ட பொழுதுபோக்கையும் அளித்தன. ஆனால் கிரிக்கெட் அவ்வாறானதாகத் தோன்றவில்லை. 20-20 ஆட்டத்தில் இன்னமும் எனக்கு ஹைலைட்ஸ் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது.
* கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் "கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே" என்ற போர்வையுடனும் முற்றிலும் வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் இத்தகைய ஐபிஎல் போட்டிகளை மக்களும் ரசிக்கிறார்கள். ஊடகங்களின் உதவியுடன் 20-20 கிரிக்கெட் பார்ப்பது அன்றாட காரியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் வருங்காலத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டியையும் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். நாமும் கூட அவ்வாறான கிரிக்கெட் விளையாட்டு இருந்ததை மறந்துவிட்டு சிக்ஸர்களுக்கும் பெளண்டரிகளுக்கும் ஆரவாரம் செய்திருப்போம்.
கொசுறு கேள்வி: எனக்குத் தெரிந்து பிசிசிஐ-க்கு இணையதளம் இல்லை. ஏன்?
கப்பி | Kappi 19 பின்னூட்டங்கள்