உருகுவே செல்வதற்கு முன் தெரிந்த இரண்டே ஸ்பானிஷ் வார்த்தைகள் 'Hola', 'Adios'. அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ஆரம்ப நாட்களில் ஸ்பானிய மொழி தெரியாமல் சிறிது திண்டாடினோம். பின்னர் எங்கள் அணியில் இருந்த உள்ளூர் நண்பர்கள் உதவியுடனும் இணையத்திலும் ஸ்பானிஷ் கற்க ஆரம்பித்தேன். காலையில் வந்தவுடன் நலம் விசாரித்தலில் ஆரம்பித்து அலுவலில் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்பானிஷில் சொல்லக் கற்றுத்தருவார்கள். இதுபோல் தினமும் வேலையின் போக்கிலேயே அம்மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எளிதாக இருந்தது. எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.
இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.
ஆரம்பத்தில் சமையல் செய்ய ஒரு சட்டி வாங்கச் சென்று ஆங்கிலம் தெரியாத கடைக்காரரிடம் ஸ்பானிஷில் கேட்கத் தெரியாமல், சட்டியைக் குறிக்க நான் செய்த அபிநயங்கள் அவருக்குப் புரியாமல் சட்டியே வாங்காமல் சாப்பாட்டுக்கு அல்லாடிய நான் பின்னர் ஓரளவு ஸ்பானிஷ் பேச கற்றுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று வர இயன்றது அலுவலக நண்பர்களால் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.
நான் அங்கு சென்றபோது எங்கள் அணியில் மொத்தம் பதினேழு இந்தியர்களே இருந்தனர். அவர்களில் ஸ்பானிஷ் கற்க ஆர்வமிருப்பவர்களுக்கு எங்கள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணே மாலை வேளைகளில் பாடம் எடுத்தார். பணிகளுக்கிடையில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்த முடியாததால் வகுப்புகளைத் தொடர முடியாமல் போனது. அடுத்த நான்கைந்து மாதங்களில் எங்கள் அலுவலகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது ஆனது. அப்போது பத்திலிருந்து பதினைந்து பேர் ஸ்பானிஷ் கற்க ஆர்வம் காட்டியதால் மனிதவள அலுவலகத்தில் இருந்து சிறப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்த முன்வந்தனர்.
மனிதவள அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் படித்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்களுக்கு ஸ்பானிஷ் கற்றுத்தர முன்வந்தார். அவர் பெயர் பியத்ரிஸ் மெலொ (Beatriz Melo). வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு மணி நேரம் வீதம் வகுப்புகள் ஆரம்பித்தது. புதிதாக வந்தவர்களுக்காக அடிப்படையில் இருந்து வகுப்புகளை ஆரம்பித்தார். நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.
பியத்ரிஸ் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் (பெயர் மறந்துவிட்டது) ஸ்பானிஷ் பேராசியராகப் பணியாற்றியவர். சில வருடங்கள் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு உருகுவே திரும்பியவர் அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார். தலைநகர் மாண்டிவிடியோவில் வெளியே சென்றால் ஆங்கிலம் அறிந்தவர்கள் மிகக் குறைவே. வேறு ஊர்களுக்குச் சென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாகவே ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது(இத்தகைய பள்ளிகள் பிரிட்டிஷ், இத்தாலி நாடுகளைச் சார்ந்த அமைப்புகளால் நடத்தப்படுகின்றன). ஆனால் அரசுப் பள்ளிகளில் சமீபமாக சில ஆண்டுகளாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலேயே படிப்பதால் ஆங்கிலம் அறியாமலிருப்பது இயல்பென்று அறிய முடிந்தது. பியத்ரிஸ் ஒவ்வொரு முறை உருகுவேயைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் பேசும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பல திட்டங்களை முன்வைப்பார்.
பியத்ரிஸ் எமிலி டிக்கன்ஸன்(Emily Dickensen) என்ற பள்ளியில் பணிபுரிந்து வந்தார். மாணவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு நடத்த விரும்பினார். மாணவர்கள் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்வதுடன் அவர்கள் ஆங்கிலம் கற்கவும் உதவுமென்றும் மேலும் நாங்கள் கற்ற ஸ்பானிஷை மாணவர்களிடம் பேசிப் பழக வாய்ப்பாகவும் இருக்குமென சந்திப்பை ஏற்பாடு செய்தார். நாங்கள் ஆறு பேர் அந்த பள்ளிக்குச் சென்றபோது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருந்தனர். கைதட்டி ஆரவாரமாக எங்களை வரவேற்றதில் மகிழ்ச்சியில் வாயடைத்துப் போனோம். எங்களை அறிமுகம் செய்துவைத்த பியத்ரிஸ் ஒவ்வொரு வகுப்பிலிருந்து தலா பத்து மாணவர்களாக குழுக்களாகப் பிரிக்க அவர்களுடன் உரையாட ஆரம்பித்தோம்.
அறிமுகத்திற்குப் பிறகு அரைகுறை ஸ்பானிஷிலேயே சிறிது நேரம் பேசினோம். அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை. மெதுவாக பேசினால் சில வார்த்தைகளை அறிந்து என்ன கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் ஸ்பானிய உச்சரிப்பாலும் வார்த்தை பிரயோகங்களாலும் சில காமெடிகள் நடந்ததால் ஆங்கிலத்திற்கு மாறினோம். அவர்கள் இந்தியாவைக் குறித்தும் நம் வாழ்வுமுறை குறித்தும் அவர்களுக்கு இருந்த கேள்விகளைக் கேட்டனர். சிலர் ஏற்கனவே இந்தியா குறித்த தகவல்களை அறிந்திருந்தார்கள். வெளிநாட்டுத் தூதவராக வேண்டும், நிரலாளராக வேண்டும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டுமென ஒவ்வொருவருக்கும் ஒரு கனவிருந்தது.
அந்த பள்ளி மாணவர்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வி நிலை குறித்த கவலை இருந்தது. நம் ஊரைப் போலவே தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டம் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கின்றது. அம்மாணவர்களில் ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பொருளாதார நிலையைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது. ஏற்கனவே உருகுவேயின் கிராமப்புறங்களையும் புறநகர் பகுதிகளையும் பார்த்து உருகுவேயில் அத்தகைய பாகுபாடு இருப்பதை அறிந்திருந்தேன். ஆனாலும் அந்த சிறுவனின் கேள்வி அதிர்ச்சியளித்தது. அவர்களிடம் அந்த பாகுபாடுகள் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அந்த நிலையிலிருந்து அவர்கள் போராடி மேலேறி வருவதுதான் சாதனை என்று ஊக்கமளிக்கும் வண்ணம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
பிறகு என்னைப் பற்றிய கேள்விகள் கேட்டார்கள். உருகுவேயில் எப்படி பொழுதுபோக்குகின்றேன், எங்கெல்லாம் சென்றிருக்கிறேன் என்றெல்லாம் பேசியபடி சிறிது நேரம் உரையாடினோம். உருகுவேயில் நான் கேள்விப்பட்டிராத சில இடங்கள் குறித்தும் விழாக்கள் குறித்தும் தகவல்கள் தந்தார்கள். உருகுவேயில் சிறப்பான Dulce de Leche என்னும் இனிப்பும் கேக்குகளும் சாப்பிட்டபடியே இரண்டு மணி நேரத்திற்க்கும் மேலாக உரையாடினோம். ஒரு பிற்பகற்பொழுதில் பல சுகமான நினைவுகளைத் தந்து இனிமையானதொரு அனுபவமாக அமைந்த சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.
பியத்ரிஸ் இப்போதும் மடல் தொடர்பில் இருக்கிறார். அவ்வப்போது உருகுவே குறித்த செய்திகளையும் பள்ளி மாணவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார். அவரின் மடல் வரும் நாட்களில் இவ்வாறான சில இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி சில மணி நேரங்கள் கழிகின்றன.
பி.கு: இந்த சந்திப்பு மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் சேர்த்து ஒரு பதிவாக எழுத ஆரம்பித்து இதுவே நீண்டுவிட்டது. ஆகவே மற்றவை பிறிதொரு பதிவில்.
உருகுவே:பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு
கப்பி | Kappi
Subscribe to:
Post Comments (Atom)
22 பின்னூட்டங்கள்:
//முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.
//
நல்லாத்தான் கத்துக்கிட்டு இருந்திருக்கீங்க மத்த மொழிகளை இப்படி கத்துக்கிட்டாத்தான் சீக்கிரமே மத்த வார்த்தைகளையும் ஈசியா கத்துக்கமுடியும்! :))
\\எந்த மொழியைக் கற்றுக்கொண்டாலும் முதலில் அதிலுள்ள கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது ஆரம்பகட்டங்களில் சுவாரசியம் சேர்க்கும். படுஜாலி பேர்வழிகளான அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். \
அட பாவமே:))))
//ஒரு சிறுவன் 'நீங்க எங்க ஏரியாவுக்கெல்லாம் வருவீங்கன்னு நினைச்சு பார்க்கல' என்ற போது அந்த ஊரிலும் பணத்தினைக் கொண்டு பாகுபாடு அப்பட்டமாக இருப்பதும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையும் அந்த சிறுவர்களிடமிருந்த சுயவிரக்க மனநிலையும் கவலையைத் தந்தது.///
:(((
உங்கள் உருகுவே அனுபவ பகிர்வு படிக்க சுவாரஸியமாக இருந்தது:))
\\சந்திப்பு முடிந்து திரும்பியபோது சூரியன் மேற்கில் அஸ்தமித்திருந்தது.\\
எல்லா ஊரிலும் சூரியன் மேற்கில்தானே அஸ்தமிக்கும்?????
//இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் ஸ்பானிஷ் மொழியை நான் கற்க ஆரம்பித்ததால் கற்றுக்கொள்ள காட்டிய ஆர்வத்தால் அவர்கள் என்மேல் தனி அக்கறை காட்டினார்கள், நட்பு பாராட்டினார்கள். மற்ற அணியிலிருந்து வரும் அவர்களின் நண்பர்களிடமும் என்னை ஸ்பானிஷில் பேசச் சொல்லி அவர்கள் மூலம் புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். அது கற்றலை இன்னும் சுவையாக்கியது.//
Same feelings. My stay was in Paris, France.
//நான் ஏற்கனவே சிறிது கற்றுவைத்திருந்ததால் ஆரம்பகட்ட வகுப்புகள் எளிதாக இருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்பானிஷ் மற்றுமல்லாது உருகுவேயின் வரலாறு கலாச்சாரம் குறித்தும் சொல்லிவந்தார். அவரது குடும்ப விஷயங்களையும்கூட பகிர்ந்துகொண்டார். பின்னர் ஸ்பானிஷ் இலக்கணம் கற்றுத்தர ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் தேர்வு வைத்து பள்ளியில் படிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.//
Same here. My spanish teacher (took classes near Los Angeles) is from Spain. She use to explain the difference between Mexican and other latin american cuisines, how life use to be in spain, experience of carrying live chickens in a public bus, benefits of avacado, making guacamole etc.
ஆங்கிலம் என்ன தான் சர்வதேச மொழி என்று அறியப்பட்டாலும், உலகின் பல நாடுகளில் அதன் செல்வாக்கு மிக குறைவு என்பதும், அவர்கள் தமது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதும், உங்கள் கட்டுரையில் தெளிவாகின்றது.
-கலையகம்
http://kalaiy.blogspot.com
நல்ல அனுபவம் செல்லம் ;)
\\அலுவலக நண்பர்கள் முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். \\
எல்லா பய புள்ளைங்களும் இப்படி தான் போல!! ;)
யப்பா ராசா, எனக்கும் அந்த வார்த்தைகள் எல்லாத்தையும் கத்துக் குடுத்துடுப்பா!! :))
மனதைத் தொட்ட பதிவு!
சிறுவர்களுக்கு நீங்கள் கொடுத்த உற்சாகம் மிகவும் உபயோகமான ஒன்று.
செனோர்! டு போஸ்ட் இஸ் முய் போனிடோ.
//அதேபோல் அந்த காலகட்டத்தில் நாகை சிவா, பெருசு, மகேந்திரன் ஆகியோருடன் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் ஸ்பானிஷ் கும்மி அடிக்க ஆரம்பித்திருந்தேன்.//
அட அவுங்களும் ஸ்பானிஷ் சான்றோர்களா? இம்புட்டு நாள் தெரியாம போச்சே!!!
இம்புட்டு அருமையா பதிவு எழுதி இருக்கீங்களே கப்பி ஒரு ஸ்பானிஸ் பெண் போட்டோ கூடவா கிடைக்காம போச்சு:((((
ரொம்ப கஞ்சுஸ் நீங்க.
//முதலில் ஸ்பானிஷில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். //
எல்லா மொழிகாரர்களும் அடுத்த மொழி படிக்க ஆரம்பிக்கும் பொழுது செய்யும் முதல் வேலை அது.
ஆயில்யன்
//மத்த மொழிகளை இப்படி கத்துக்கிட்டாத்தான் சீக்கிரமே மத்த வார்த்தைகளையும் ஈசியா கத்துக்கமுடியும்! :))//
அதே அதே :)
நன்றி தல
திவ்யா
//அட பாவமே:))))//
:))
நன்றிங்க!!
பெத்தராயுடு
தலைவா..அப்ப நீங்க studyspanish.com தளம் பற்றி சொன்னீங்க..நினைவிருக்கா? :)
நன்றி!! :)
கலையகம்
நன்றி!
கோபிநாத்
//எல்லா பய புள்ளைங்களும் இப்படி தான் போல!! ;)//
ஒரே இனம் தானே :))
கொத்ஸ்
உங்களுக்கு இல்லாமலா..கண்டிப்பா :))
VSK
நன்றி ஐயா! :)
பிரேம்ஜி
muchas gracias :)
குசும்பன்
//அட அவுங்களும் ஸ்பானிஷ் சான்றோர்களா? இம்புட்டு நாள் தெரியாம போச்சே!!!//
ஆமா அண்ணாச்சி ஆமா! அவங்கல்லாம் ஸ்பானிஷ்ல கவுஜயே எழுதுவாங்க :))
//இம்புட்டு அருமையா பதிவு எழுதி இருக்கீங்களே கப்பி ஒரு ஸ்பானிஸ் பெண் போட்டோ கூடவா கிடைக்காம போச்சு:((((//
அவ்வ்வ்வ்வ்வ்
என்னை மன்னிச்சிடுங்க அண்ணாச்சி!! உங்களுக்காகவே ஒரு தனிப் பதிவாவே போட்டுடறேன் :))
:) Hola! Adios. naan innum athulay irukken ;)
sí señor. con gusto. por nada
உங்க கருத்து? Post a Comment