கிரிக்கெட் - IPL - T20

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:

* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ஆட்டங்களையும் பெரும்பாலும் விடுவதில்லை.

* ரன்குவிப்பு ஒன்று மட்டுமே கிரிக்கெட் என்றாகிப்போனது வருத்தத்தை அளிக்கின்றது. பெளலர்களுக்கு சம வாய்ப்பு இல்லாமல் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியமாகவே இருக்கின்றது. லீ, மெக்க்ராத், பாலாஜி, ந்டினி என எப்போதாவது ஆச்சரியப்படுத்தும் ஸ்பெல்களைத் தவிர பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாகவே இருக்கின்றது. பந்துவீச்சு என்பது ரன்களை கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை எடுப்பதும் மட்டுமன்று. அது மட்டையாளருக்கும் பந்துவீச்சாளருக்குமிடையேயான ஒரு சுவாரசியமான களம். அது ஒரு மைண்ட் கேம். இருவரும் அடுத்தவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆட்டத்தை மாற்றுவது, மட்டையாளரை தன் பந்திற்கு ஏற்றவாறு ஆட வைப்பது, கேட்சிங் பொசிஷன்களில் வீரர்களை நிற்க வைத்து பேட்ஸ்மேனின் திறமையை சோதிப்பது என பந்துவீச்சு ஓடி வந்து பந்தை வீசுவது மட்டுமன்று. ஏற்கனவே சொன்னதுபோல் அது ஒரு மைண்ட் கேம். ஆனால் 20-20 போட்டிகளில் அதற்கான சாத்தியங்கள் துளியும் இல்லை. இங்கு மொத்த நோக்கமும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலும் விக்கெட்டுகளை எடுப்பதிலுமே இருக்கின்றது. இத்தகைய போக்கு தொடருமேயானால் வருங்காலத்தில் லீ-யோ, மெக்ராத்தோ, கும்ப்ளே-வோ வார்னேயோ ஏன் இஷான் ஷர்மாவே கூட தேவைப்படாது. வீரர்களை லைன் அண்ட் லெங்க்த்தில் ஒரு மெஷினைப் போல போட பயிற்சி தந்தால் போதுமானது. பந்துவீச்சு ஒரு மைண்ட் கேமாக இருக்காது.

* ரன்குவிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதால் சரியான கிரிக்கெட் ஷாட்டை விடவும் ஸ்லாக்கர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதாவது பந்து எப்படி வந்தாலும் சுத்துவது. இதிலும் பார்த்தீர்களென்றால், ஹெய்டன், கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஜெயசூர்யா போன்ற டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் தேர்ந்த வீரர்களே சரியான கிரிக்கெட் ஷாட்டுகளுடன் எல்லா 20-20 போட்டிகளிலும் ரன்களைக் குவிக்கிறார்கள். முதலில் சொன்ன வீரர்களை விட மெக்கல்லம், தோணி எத்தனை மேட்சுகளில் ரன் குவித்தார்கள்? பெரும்பாலான இளம்வீரர்கள் மட்டையைச் சுற்றுவதில்தான் இருக்கிறார்கள். சரியான கிரிக்கெட்டிங்க் ஷாட்ஸும் பந்திற்கு ஏற்ற ஷாட்ஸ் தேர்வும் வெகு அரிதாகவே காணக் கிடைக்கின்றது.

* மேலே சொன்னதுபோல் தொடருமானால், பந்துவீச்சைப் போலவே ரன்குவிப்பு மட்டுமே பேட்டிங் என்ற நிலைக்கு ஆளாகிவிடும். ஸ்லாக்கர்கள் மட்டுமே திறமையான மட்டையாளர்களாகக் கருதப்படும் அபாயம் இருக்கின்றது. பல கிரிக்கெட் ஷாட்டுகள் காணாமல் போகும். எத்தகைய பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் டிஃபன்ஸ் ஆட்டமே நீக்கப்பட்டுவிடும். வருங்கால வீரர்களுக்கு ப்ரண்ட்ஃபூட்டில் டிஃபன்ஸ் செய்யக்கூடத் தெரியாமல் போகலாம்.

* நான்கு மணி நேரத்திற்கு தொடர்ச்சியான ரன்குவிப்பைப் பார்ப்பது எனக்கு அயற்சியளிக்கின்றது. என்னைப் பொருத்தவரை சிகஸரும் ஃபோரும் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் இல்லை.

* தொடர்ந்து இரண்டு மாதங்களாக நடந்துவரும் இப்போட்டிகளில் பல மேட்சுகளில் பலர் பந்தை அடித்து துவம்சம் செய்து ரன்குவித்தாலும் நினைவுகொள்ளத்தக்க இன்னிங்க்ஸ் என்று ஒன்றிரண்டு மட்டுமே சட்டென நினைவுக்கு வருகின்றது. ஒருநாள் போட்டியிலோ டெஸ்ட் போட்டியிலோ ஒரு பேட்ஸ்மேன் இன்னிங்க்ஸை கட்டமைப்பது ஆர்வத்தைக் கிளப்பும். ஒவ்வொரு வீரரும் அவரவர் பாணியில் தங்கள் இன்னிங்க்ஸை ஆரம்பித்து மேட்ச் சூடாகும். ஆனால் 20-20ல் அதற்கான வாய்ப்புகள் இல்லை. இங்கு ஒவ்வொரு வீரரின் தனித்தன்மையும் மறைந்துவிடுகிறது.


* இன்றைய பள்ளி மாணவர்களிடம் தோனியை விட டிராவிட் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காரணம் ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக தோனிக்குத் தரும் முக்கியத்துவம் மற்றும் 20/20. "பின்ன தோனி டிராவிட்டைவிட நல்ல ப்ளேயர் இல்லையா?" என்பீர்களேயானால் - நான் பேசுவது கிரிக்கெட் குறித்து.

* டெஸ்ட் மேட்சுகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைந்துவிட்ட நிலையில் (யாருடா டெஸ்ட் மேட்ச் பார்ப்பாங்க?ன்னு மட்டும் கேட்டுறாதீங்க) 20-20 ஐபிஎல் போன்ற தொடர்களின் மூலம் ஒரு நாள் போட்டிகளும் பாதிப்படையும். முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட இப்போட்டிகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வாரியங்கள் ஒருநாள்/டெஸ்ட் போட்டிகளை குறைத்து 20-20 போட்டிகளுக்கு இடமளிப்பார்கள். ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் கிடைக்கும் திரில் எனக்கு இதில் கிடைக்கவில்லை. ஆகையால் இவை இரண்டும் குறைந்தால் கவலையே.


* ரஞ்சி போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் குறைவான கவனமே செலுத்தும் பிசிசிஐ, ஐபிஎல்-லின் வெற்றிக்குப் பிறகு அத்தகைய போட்டிகளில் எந்த அளவு ஆர்வத்துடன் நடத்தும் என்பது கேள்விக்குறி. வருங்கால இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்க இத்தகைய உள்ளூர் போட்டிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் ஐபிஎல்-லின் இந்த வெற்றி, ரஞ்சியையும் மற்ற உள்ளூர் போட்டிகளையும் கூட 20-20 வடிவத்திற்கு மாற்றத்தக்க வணிக சக்தி படைத்தது. எதிர்கால இந்திய அணி வீரர்களின் கிரிக்கெட் அறிவு 20-20க்குள் சுருங்கிவிடக்கூடாது. (இது என் தேவையற்ற அச்சமாகக்க்கூட இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியமும் இருக்கின்றது)


* முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்தபின் டெஸ்ட் போட்டிகள் அழிந்தா போயின? அது போல் 20-20 இருந்தாலும் ஒரு நாள் போட்டிகளும் டெஸ்ட் போட்டிகளும் தொடரும் என்று சொல்லலாம். ஆனால் முற்றிலும் வணிக லாப நோக்கங்களுடன் நடத்தப்படும் இன்றைய 20-20 போட்டிகளில் இறங்கியிருக்கும் வணிகசக்திகள் ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் ஒழித்துக்கட்ட வல்லமை படைத்தவை என்பதில் சந்தேகமேயில்லை.

* இந்தியா கடந்த 20-20 உலகக் கோப்பையை வென்றிராவிட்டால் ஐபிஎல் போட்டிகள் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை.

* கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல் இதிலும் லீக் ஆட்டங்கள் நடைபெறுவது நல்லதுதானே. மக்களுக்கும் பொழுதுபோக்குதானே என்ற கருத்து நிலவுகிறது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் அடிப்படையிலேயே லீக் ஆட்டங்களுக்கு ஏற்றவாறு அமைந்தன. அந்த ஆட்டங்களின் அமைப்பு ஹார்மோன் உந்துதலையும் மக்களுக்கு சில மணி நேரங்களில் உச்சகட்ட பொழுதுபோக்கையும் அளித்தன. ஆனால் கிரிக்கெட் அவ்வாறானதாகத் தோன்றவில்லை. 20-20 ஆட்டத்தில் இன்னமும் எனக்கு ஹைலைட்ஸ் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது.


* கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் "கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே" என்ற போர்வையுடனும் முற்றிலும் வணிக நோக்கங்களுக்காக நடத்தப்படும் இத்தகைய ஐபிஎல் போட்டிகளை மக்களும் ரசிக்கிறார்கள். ஊடகங்களின் உதவியுடன் 20-20 கிரிக்கெட் பார்ப்பது அன்றாட காரியங்களில் ஒன்றாகிவிட்டது. ஆனால் வருங்காலத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டியையும் பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். நாமும் கூட அவ்வாறான கிரிக்கெட் விளையாட்டு இருந்ததை மறந்துவிட்டு சிக்ஸர்களுக்கும் பெளண்டரிகளுக்கும் ஆரவாரம் செய்திருப்போம்.


கொசுறு கேள்வி: எனக்குத் தெரிந்து பிசிசிஐ-க்கு இணையதளம் இல்லை. ஏன்?



19 பின்னூட்டங்கள்:

சொன்னது...

ஒரு தின போட்டி ஆரம்பிக்கும் போதும் இதே போல் ஒரு கருத்து வந்திருக்கக் கூடும். அப்போது டெஸ்ட் மேட்ச், பிறகு 60, அப்புறம் 50 இப்போதூ 20-20. 20-20 போட்டிக்கு பந்துவீச மக்கள் பழக வேண்டும், பழகுவார்கள். 10-10 வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

சொன்னது...

உங்களாட்டம் ஆளுங்க இன்னிக்கு கேட்கிற கேள்விக்கு அன்னிக்கே பதில் சொல்லிட்டோமில்ல?

சொன்னது...

ரொம்ப எல்லாம் கவலைப்படாதீங்க. டெஸ்ட் கிரிக்கெட் பிழைச்சுக்கும். அப்புறம் இது ஒண்ணும் அப்படி பௌலர்களுக்கு எதிராகத் தெரியவில்லை. ரொம்ப கவலைப்படாதீங்க.

அப்புறம் ஷாருக்கான் வலைத்தளம் ஆரம்பிச்சு பைசா பண்ணறதைப் பார்த்த பின் பிசிசிஐ வலைத்தளம் வராமலேயாப் போகும்? :))

சொன்னது...

டெஸ்ட் போட்டிகள் மராத்தான் ஓட்டப் பந்தயம் என்றால், ட்வ்ண்டி-ட்வெண்டி விரைவு தடகளப் போட்டிகள். அதை விரும்புவர்கள் இதை விரும்பாமல் போகலாம். புதிய ரசிகர்கள் கிடைக்கலாம்.

இன்றைய டெஸ்ட் வீரர்களும் பயிற்சியின் போது bowling machine-களை வைத்துதான் பயிற்சி செய்வார்கள். பௌலர்கள் கையில் இருந்து பந்து விடுபட்ட பிறகு அது முற்றிலும் பேட்ஸ்மேன்கள் ஆட்டமே. டென்னிஸ், பேட்மிண்டன் விளையாட்டுகள் போல் இருவரும் சமநிலை கிடையாது. கூடைப்பந்து, கைப்பந்து போல் முழுவதுமாக 'அணி' விளையாட்டும் கிடையாது. ஒரே ஒரு வீரர் மட்டுமே வெற்றி (அ) தோல்விக்கு முழுவதுமாக பொறுப்பேற்க முடியும்.

சொன்னது...

மாற்றம் என்பது மானிட தத்துவம் :)

எப்பவும் நல்லதுக்கு தான் மாறும்னு இல்லை :) பார்க்கலாம்!

சொன்னது...

இளா

இளா, அதே அதே!! இது மாதிரி மாறிட்டேதானிருக்கும்..ஆனா கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பார்த்து பழகிப் போன நாம கொஞ்சம் வருந்த வேண்டியிருக்கலாம்..அம்புட்டுதான் :))

சொன்னது...

பினாத்தல் சுரேஷ்

தல, நானும் இந்த மேட்சுகளையும் உட்கார்ந்து பார்த்துட்டு தான் இருக்கேன்...ஆனா அவ்வளவு ஒன்றி பார்க்க முடியல..மூனு மணி நேரத்துல அடிச்சுபுடிச்சு கிரிக்கெட்டை முடிக்கறதை விட ஆற அமர ஆடறதுதான் அதோட இயல்பான ஆட்டமா தோணுது..

எப்படியும் 20-20 கிரிக்கெட்டின் வருங்காலத்தை மாற்றப்போவது உறுதி. அதையும் விடாம பார்த்து நாம் பிறவிப்பயன் அடையப் போறதும் உறுதி :))

சொன்னது...

கொத்ஸ்


//ரொம்ப எல்லாம் கவலைப்படாதீங்க. டெஸ்ட் கிரிக்கெட் பிழைச்சுக்கும். //

இம்ரான் கான் ரீஜண்டா "டெஸ்டு கூட பொழச்சுக்கும்..ஒன் டே மேட்ச் நிலைமை என்னவாகும் தெரியலயே"ன்னு ஒரு இஷ்டேட்மெண்டு வுட்டுக்கீறாரு

எனக்கென்னவோ டெஸ்ட் மேட்சுகளின் எண்ணிக்கையும் குறையும்னு தோணுது..

வெ.இ.-ஆஸ் மேட்ச் பார்த்தீங்களா? எட்வர்ட்ஸ் கலக்கறாப்ள :))



//அப்புறம் ஷாருக்கான் வலைத்தளம் ஆரம்பிச்சு பைசா பண்ணறதைப் பார்த்த பின் பிசிசிஐ வலைத்தளம் வராமலேயாப் போகும்? :))
//

அது மேட்டரு...பிசிசியை வலைத்தளம் போட்டாலும் சுத்தி ஸ்பான்சர் பேனரைப் போட்டு நாலு பாப்-அப்பை வச்சு..அந்த பக்கமும் இந்த பக்கமும் கொஞ்சம் கொலு வச்சு அட்டகாசம பிரிச்சு மேய்ஞ்சுர மாட்டாங்க? :))

சொன்னது...

ஸ்ரீதர் நாராயணன்

// அதை விரும்புவர்கள் இதை விரும்பாமல் போகலாம். புதிய ரசிகர்கள் கிடைக்கலாம்.//


கண்டிப்பாக 20-20க்கு புதிய ரசிகர்கள் கிடைப்பார்கள்...கிரிக்கெட்டுக்கு அல்ல!! அம்புட்டுதேன் :)

//
இன்றைய டெஸ்ட் வீரர்களும் பயிற்சியின் போது bowling machine-களை வைத்துதான் பயிற்சி செய்வார்கள். //


என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..பயிற்சியின் போது மெஷின் வச்சு ப்ராக்டீஸ் பண்றதும் மைதானத்தில் விளையாடறதும் ஒன்னுங்களா? மெஷின்ல செட் பண்ணிட்டு (ரேண்டமாகக் கூட) விளையாடுவது வேறு. மைதானத்தில் ஆடும்போது ஆடுவது அந்த பந்தைப் பொறுத்து மட்டுமல்ல..பந்து வீச்சாளரை, அவர் வீசிய முந்தைய பந்துகளை, முந்தைய பந்துகளை பேட்ஸ்மேன் ஆடிய விதம் அத்தனையும் பொறுத்துங்க..

//பௌலர்கள் கையில் இருந்து பந்து விடுபட்ட பிறகு அது முற்றிலும் பேட்ஸ்மேன்கள் ஆட்டமே. //

இதுல இருந்து நான் மாறுபடறேங்க..பெளலர்களின் திறமையே தங்களின் விருப்பத்திற்கேற்ப பேட்ஸ்மேனை ஆடவைப்பதில் தான் இருக்கிறது..ஏற்கனவே சொன்னதுபோல் இது மைண்ட் கேம்..கண்டிப்பா முற்றிலும் பேட்ஸ்மேன் ஆட்டம்னு சொன்னா என்னால ஏத்துக்க முடியலைங்க..



// ஒரே ஒரு வீரர் மட்டுமே வெற்றி (அ) தோல்விக்கு முழுவதுமாக பொறுப்பேற்க முடியும்//

அது சரி தான்..அதே மாதிரி ஒருத்தர் மட்டும் விளையாடினாலும் போதாது..உ.தா. தொன்னூறுகளில் சச்சின். இதுவும் அணி விளையாட்டுதான்..கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பெளலர், பீல்டர் என எல்லாருக்குமே பங்குண்டு...ஆனால் வணிக மயமாக்கப்பட்ட நவீன கிரிக்கெட்டில் அதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன.

சொன்னது...

ட்ரீம்ஸ்

//எப்பவும் நல்லதுக்கு தான் மாறும்னு இல்லை :) பார்க்கலாம்!
//

பார்ப்போம் :)

சொன்னது...

கருத்தக்கள் நன்றாகத் தான் உள்ளன. இந்த IPL கிரிக்கெட்டின் பெரிய பயனாக நினைப்பது நமது இளம் வீரர்களுக்கு பல நாட்டு விளையாட்டு வீரர்களுடன் விளையாடக் கிடைத்த வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு டிரைனிங் கேம்ப் போல் ஆகி விட்டது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை நல்ல ஷாட் ஆடுபவர்கள் மட்டுமே ரன் குவிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது, இது காட்டடி அடிப்பவர்களை யோசிக்க வைப்பதுடன், அதே ஆக முயற்சிப்பவர்களிக்கும் பாடமாக அமையும்.

சொன்னது...

//இந்த IPL கிரிக்கெட்டின் பெரிய பயனாக நினைப்பது நமது இளம் வீரர்களுக்கு பல நாட்டு விளையாட்டு வீரர்களுடன் விளையாடக் கிடைத்த வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு டிரைனிங் கேம்ப் போல் ஆகி விட்டது.//

இது நிச்சயமா பயனுள்ளதுதான்!!

ஐபிஎல்-லின் வெற்றியினால் தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் எப்படி நடத்தப்படும், இளைய வீரர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கனும்.


//பேட்டிங்கைப் பொறுத்தவரை நல்ல ஷாட் ஆடுபவர்கள் மட்டுமே ரன் குவிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது, இது காட்டடி அடிப்பவர்களை யோசிக்க வைப்பதுடன், அதே ஆக முயற்சிப்பவர்களிக்கும் பாடமாக அமையும்.//

இங்க தாங்க ரிஸ்கே...இப்ப என்ன ஆகுதுன்னா காட்டடி அடிச்சா ஒரு மேட்ச் இல்லைனாலும் இன்னொரு மேட்சுல ரன் அடிச்சிடலாம்..எல்லாரும் அந்த மாதிரி இறங்கிட்டா வெளங்கிரும்...நிங்க சொல்றமாதிரி நடந்தா சந்தோஷம் தான்...ஆனா அப்படி நடக்குமான்னு சந்தேகமாத்தான் இருக்கு :)

சொன்னது...

ஆரம்பத்துலருந்து ஒரு மேட்ச் கூட பாக்காம சாதனை செஞ்சுகிட்டு இருக்கோம்ல. செய்திவந்தாக்கூட சேனல மாத்திடறது.

சொன்னது...

//* இந்தியா கடந்த 20-20 உலகக் கோப்பையை வென்றிராவிட்டால் ஐபிஎல் போட்டிகள் நடந்திருக்குமா எனத் தெரியவில்லை.//

நிச்சயமாக அதுவும் ஒரு காரணம், பின் கபில்தேவ் ஆரம்பித்ததுக்கு போட்டியாக ஆரம்பித்தது ஒரு காரணம்.

சொன்னது...

//தம்பி said...
ஆரம்பத்துலருந்து ஒரு மேட்ச் கூட பாக்காம சாதனை செஞ்சுகிட்டு இருக்கோம்ல. செய்திவந்தாக்கூட சேனல மாத்திடறது.//

அதுனாலதான் தோனி ஓன்னு அழுக்கிட்டு இருந்தாரா அன்னைக்கு...

சரி அதுல்லாம் இருக்கட்டும் அப்புறம் ஏன் இந்த பதிவை கடைசி வரை படித்தீர் குபீர் இலக்கியவாதி தம்பி.

சொன்னது...

ஜியர் கேர்ள்ஸ் பற்றி ஒன்று சொல்லாததுக்கு என் கடும் கண்டனங்கள்!!!

சொன்னது...

தம்பியண்ணன்


//ஆரம்பத்துலருந்து ஒரு மேட்ச் கூட பாக்காம சாதனை செஞ்சுகிட்டு இருக்கோம்ல. செய்திவந்தாக்கூட சேனல மாத்திடறது.//

இந்தளவுக்கு எனக்கு மன உறுதி இல்லையேண்ணே :))


குசும்பன்

//நிச்சயமாக அதுவும் ஒரு காரணம், பின் கபில்தேவ் ஆரம்பித்ததுக்கு போட்டியாக ஆரம்பித்தது ஒரு காரணம்//

ஆமாங்க அண்ணாச்சி..அதுவும் ஒரு முக்கிய காரணம் தான்..எங்கே லாபமெல்லாம் வேற பாக்கெட்டுக்கு போயிடுமோனு பயந்து நடத்தறாங்க


//அதுனாலதான் தோனி ஓன்னு அழுக்கிட்டு இருந்தாரா அன்னைக்கு...//

தம்பியண்ணன்...இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நலனுக்காவது நீங்க திரும்ப
கிரிக்கெட் பார்க்கோனும்..இல்லைனா தோனி தலைமைலா சாகும்வரைக்கும் பெப்புசி குடிக்கற போராட்டம் நடத்துவோம் :))


//ஜியர் கேர்ள்ஸ் பற்றி ஒன்று சொல்லாததுக்கு என் கடும் கண்டனங்கள்!!!//

ஜியர் கேர்ள்ஸைப் பற்றி தனியா ஒரு பதிவே போடலாம்..அவங்களை இந்த சின்ன பதிவுல ஒரு பத்தியா சேர்க்கறது தப்பில்லையா? டெஸ்ட் மேட்ச், ஒன் டே போட்டிகளிலும்கூட இனி சியர் கேர்ள்ஸ் இல்லையென்றால் புறக்கணிக்கலாம்னு இருக்கேன் :))

அதெல்லாம் இருக்கட்டும்...சியர் கேர்ள்ஸைப் பத்தி சொல்லலைன்னு நீங்க ஏன் அண்ணாச்சி கண்டனம் சொல்றீங்க...வீட்டு தொலைபேசி எண் கொடுங்க :)))

சொன்னது...

//கண்டிப்பா முற்றிலும் பேட்ஸ்மேன் ஆட்டம்னு//

முற்றிலும்னு சொல்லவில்லை. ஆனால் எல்லாரும் சமநிலையில் கருத முடியாது.

கால் பந்தாட்டதிலோ, கூடைப்பந்திலோ கூட ஒரே அணியில் விளையாடுபவர்களில் சிற்சில வேறுபாடுகள் உண்டு. ஆனால் கிரிக்கெட்டில இந்த இடைவெளி அதிகம்.

T20-T20 கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால் திசையை நோக்கி நகர்கிறது. சீக்கிரமே இந்தியாவில் பேஸ்பால் பிரபலமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.

சொன்னது...

ஸ்ரீதர் நாராயணன்


//முற்றிலும்னு சொல்லவில்லை. ஆனால் எல்லாரும் சமநிலையில் கருத முடியாது.//

எல்லாரும் எல்லா ஆட்டங்களிலும் சமநிலையில் இருப்பதில்லைன்னுகூட சொல்லலாங்க :)

நீங்க சொல்ற மாதிரி, கிரிக்கெட் கால்பந்தைப் போலவோ கூடைப்பந்தைப் போலவோ கிடையாதென்பதில் உடன்படுகிறேன்.


//
T20-T20 கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால் திசையை நோக்கி நகர்கிறது. சீக்கிரமே இந்தியாவில் பேஸ்பால் பிரபலமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.//

அமெரிக்காவில் இப்போது பேஸ்பாலுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது..பேஸ்பாலின் தீவிர் விசுவாசிகள் தவிர பெரும்பாலானோர் ஆட்டங்களைப் பார்ப்பதில்லைமக்களை மைதானத்துக்கு வரவைக்க என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள்...20-20 ஆட்டங்களினால் கிரிக்கெட்டுக்கும் அந்த நிலை வருமா?