சிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)

சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நிலையிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகமும் தன்னோடு தன் சமூகமும் மேலெழ வேண்டுமென்ற லட்சியமும் சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிடுகின்றன. ஆனால் அதற்கான வழிகளைச் சமூகம் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி அடைத்துவைத்திருக்கின்றது.

பாலியல் தொழிலாளிகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விடுதிகளிலும் பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளிலும் அவர்களைப் பார்த்தாலும் அவர்களைக் குறித்தும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பங்களைக் குறித்துமான பிரக்ஞையின்றி கடந்து செல்கின்றோம். பாலியல் தொழிலை அவர்கள் பிழைப்பிற்காகத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் குறித்து இச்சமூகம் வருந்துவதில்லை. அக்குழந்தைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வித கருணையுமின்றி நிராகரிக்கப்படுகின்றன.



சனா பிரிஸ்கி பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்ய கொல்கத்தாவிற்கு வருகிறார். எல்லா பாலியல் தொழில் நடத்தும் பகுதிகளைப் போலவே அங்கும் படம்பிடிக்க அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் சனா பிரிஸ்கி பின்வாங்காமல் முயல்கிறார். பாலியல் தொழிலாளிகளைக் குறித்து படமெடுக்க வரும் பிரிஸ்கி அவர்களின் குழந்தைகளின்பால் ஈர்க்கப்படுகிறார். கல்வி மறுக்கப்பட்டு அங்கேயே தங்கள் வாழ்வைக் கழிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்த கவலையுடன் அவர்களை அந்த சூழலிலிருந்து வெளிக்கொணர வேண்டி அபிஜித், கெளர், கோச்சி, தபாசி, சாந்தி, மாணிக், சுசித்ரா, பூஜா ஆகிய எட்டு சிறுவர்களுக்கு புகைப்படக்கலையைக் கற்றுத்தர ஆரம்பிக்கிறார்.

ஆரம்பத்தில் சனாவுடன் பழகத் தயங்கும் சிறுவர்கள் சிறுது நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் புரோக்கர்களும் சனாவை எதிர்க்கின்றனர். ஆயினும் சிறுவர்கள் ஆர்வத்துடன் சனாவிடம் புகைப்படக்கலையைக் கற்கின்றனர். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் தங்கள் வீடுகளையும் படம் பிடிக்கின்றனர். சனா அவர்களைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார்; புகைப்படங்கள் எடுக்க வைக்கிறார். அவர்கள் புகைப்படக்கலையை எளிதில் கற்றுக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

அச்சிறுவர்கள் அனைவரும் தங்கள் குடும்பச் சூழ்நிலையையும் சமூகத்தையும் அறிந்தே இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற கனவும் தங்கள் குடும்பத்தினை நல்ல நிலையில் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையும் இருந்தாலும் யதார்தத்தினை உணர்ந்திருக்கிறார்கள். பெண் குழந்தைகள் வளர்ந்தபின் தாங்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை அறிந்தும் அதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருக்கிறார்கள்.





பிரிஸ்கி இவர்களை அத்தகைய சூழலில் இருந்து வெளிக்கொணர முயற்சிக்கிறார். அவர்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அக்குழந்தைகளின் பெற்றோரும் உறவினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் தனியாக குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேசி ஒப்புதல் வாங்கும் பிரிஸ்கி பள்ளிகளில் அவர்களைச் சேர்ப்பதில் சிரமங்களைச் சந்திக்கிறார். பல இன்னல்களுக்குப் பிறகு அச்சிறுவர்களைப் பள்ளியில் சேர்க்கிறார்.

அபிஜித்தின் புகைப்படம் ஒன்று ஆம்ஸடர்டாமில் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகிறது. ஆனால் அவனை ஆம்ஸ்டர்டாம் அனுப்ப அபிஜித்தின் அம்மா மறுக்கிறார். பிரிஸ்கி அவரிடம் இப்போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சம்மதம் வாங்குகிறார். அபிஜித்திற்கு பாஸ்போர்ட் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. பல தடைகளை மீறி பாஸ்போர்ட் பெற்று அபிஜித் அப்போட்டியில் கலந்துகொள்கிறான்.

திரும்பி வரும் அபிஜித் பள்ளியில் சேர்கிறான். மாணிக்கின் தந்தை அவனைப் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார். பூஜா, சுசித்ரா, சாந்தி மூவரையும் அவர்களின் பெற்றோர்கள் விடுதியிலிருந்து அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தபாசியும் கெளரும் பள்ளிப்படிப்பைத் தொடர்கிறான். கோச்சியும் விடுதியிலேயே தங்கி படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் படம் முடிகின்றது.





பல சிரமங்களுக்கிடையே இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் சனா பிரிஸ்கி. ஏஜெண்டுகளின் எதிர்ப்பு, பாலியல் தொழிலாளிகளின் ஒத்துழையாமைக்கு மத்தியில் அக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது போற்றத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் எதையும் நேரடியான போதனையில் இறங்காமல் சிறுவர்களின் வாயிலாக அவர்களின் உலகைத் திறந்து காட்டியிருப்பது திரைப்படத்தின் நோக்கத்திற்கு உறுதி சேர்கின்றது.


அச்சிறுவர்கள் கேமரா தங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணமில்லாமல் இயல்பாக அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன் தங்களைக் குறித்தும் தங்கள் கனவுகள் குறித்தும் தங்கள் சமூகச் சூழலைக் குறித்தும் பேசுகிறார்கள். ஏமாற்றத்தையும் துன்பத்தையும் தாங்கும் சக்தியை இச்சமூகம் சிறுவயதிலேயே அவர்களுக்கு தந்துவிட்டது. ஆயினும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக் கைதிகளாகாமல் அதிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகத்தோடு இருக்கும் இச்சிறுவர்கள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பாலியல் தொழிலாளிகளின் வாழ்வைப் பதிவு செய்ய வந்த சனா பிரிஸ்கி அக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல இன்னல்களை எதிர்கொண்டு அவர்களின் வாழ்க்கையைப் பதிவாக்கியிருப்பதும் அவர்களின் கல்விக்காக அவர்களின் பெற்றோரிடமும் உறவினரிடமும் போராடுவதும் தலைவணங்க வேண்டியவை. இத்திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

பாலியல் தொழிலாளர்களின் நலன்களை அரசும் சமுதாயமும் தொடர்ந்து புறக்கணித்தபடிதான் இருக்கின்றன. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பரவலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களும் ஏழ்மையின் காரணமாகவும் விழுப்புணர்வின்மையின் காரணமாகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்துவதில்லை. வெகுசிலரே தங்கள் குழந்தையின் எதிர்கால நலனைக் கருதி செயல்படுகிறார்கள். அத்தகைய சூழலில் பிறந்த ஒரே காரணத்தினால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு திறமைகளும் கனவுகளும் நிராகரிக்கப்படும் சிறுவர்கள் ஆயிரமாயிரம்.



15 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப் போனாலும் அவை அச்சிறுவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் ஒருபோதும் அசைத்துப் பார்ப்பதில்லை//

நல்லா எழுதியிருக்கேப்பா கப்பி. ஒரு திரைப்படத்தைப் பாத்துட்டு அதை பத்தி ஒரு ரிப்போர்ட்டர் மாதிரி உன் கருத்துகளை வைக்கிறது உனக்கு இயல்பாக வருகிறது. கிட்டத்தட்ட படத்தைப் பாத்த எஃபெக்டு வருது இந்தப் பதிவைப் படிச்சா.

சொன்னது...

படம் பார்த்தபோது மெல்லிய குற்ற உணர்ச்சி தாக்குவதை தவிர்க்கமுடியாது. நாம் வாழும் நாட்டிலேதான் அந்தச் சிறுவர்களும் வாழ்கிறார்கள்.

அய்யனார் இதே படத்தை பத்தி எழுதியிருக்கார்.

சொன்னது...

திரைப்படத்தை பார்த்திருந்தால் கூட இந்த அளவிற்கு அக்குழந்தைகளின் அவநிலையை பற்றி சிந்தித்திருப்பேனோ இல்லியோ........உங்கள் விமர்சக பதிவும், தெள்ளந்தெளிவாக நீங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கும் விதமும் சிந்திக்க வைத்தது!!

சொன்னது...

அய்யனார் தயாவால் இந்த படம் பார்த்திருக்கிறேன்.

அந்த குழந்தைகள் புகைப்படம் எடுக்கும் அழகும், அவர்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்த பிறகு அந்த ரிசல்ட்டுக்காக தவிக்கும் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும்

\\அச்சிறுவர்கள் கேமரா தங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணமில்லாமல் இயல்பாக அந்த வயதுக்குரிய குறுகுறுப்புடன் தங்களைக் குறித்தும் தங்கள் கனவுகள் குறித்தும் தங்கள் சமூகச் சூழலைக் குறித்தும் பேசுகிறார்கள். ஏமாற்றத்தையும் துன்பத்தையும் தாங்கும் சக்தியை இச்சமூகம் சிறுவயதிலேயே அவர்களுக்கு தந்துவிட்டது. ஆயினும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக் கைதிகளாகாமல் அதிலிருந்து வெளிவரவேண்டுமென்ற உத்வேகத்தோடு இருக்கும் இச்சிறுவர்கள் நமக்கு பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
\\

நன்றாக சொல்லியிருக்கிங்க கப்பி ;)

சொன்னது...

:) இன்னும் படம் பார்க்கல..

சொன்னது...

மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க, நானும் பார்க்க முயற்சிக்கிறேன்.

சொன்னது...

அது ஏன் கப்பி எங்கிருந்தோ நம்மூருக்கு வந்து நம்மூரு கதையை அப்படி எடுத்து உலக சபையில வைச்சி அந்த அவார்ட் இந்த அவார்ட்ன்னு வாங்கிற அளவிற்கு இருக்கும் பொழுது, நம்மூரு ஆட்கள் அப்படி உணர்வுகளே வராம மரத்துப் போயி இருக்கக் காரணமென்னா?

அதிக மக்கட் தொகையுடன் வாழ்ந்தால் இது போன்ற மனித நேயம் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமோ? அதுக்காக நாம சொல்லிக் கொள்ளும் சல்ஜாப்புகளான அவனவன் விதிப்பயன்படி அவனவன் வாழ்றான், தாகமிருப்பவன் தேடிச் சென்றடைவான்னு சொல்லிக்கிட்டு தான் உண்டு தான் சுயநல சுரண்டல் வாழ்க்கையுண்டு வாழ்ந்து முடிக்கிறோமோ... ஆனா, உச் கொட்ட நிறைய பேர் இருக்கோம் என்னயும் சேர்த்தே :(.

இந்தப் பதிவுக்கு ஓர் நன்றி!

சொன்னது...

கைப்ஸ்

நன்றி தல _/\_ :)


தம்பி

//படம் பார்த்தபோது மெல்லிய குற்ற உணர்ச்சி தாக்குவதை தவிர்க்கமுடியாது.நாம் வாழும் நாட்டிலேதான் அந்தச் சிறுவர்களும் வாழ்கிறார்கள்.
//

சரியாச் சொன்னீங்க!!

அய்யனாரின் பதிவு இங்கே

நன்றி!!

சொன்னது...

:(((

Write up is very nice... Will try to watch it soon :))

சொன்னது...

திவ்யா

நன்றி!!



கோபிநாத்


//ரத்தப்பரிசோதனை செய்த பிறகு அந்த ரிசல்ட்டுக்காக தவிக்கும் தவிப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும்
//

மிகவும் உணர்வுப்பூர்வமான தருணங்கள்!!

நன்றி அண்ணாச்சி!!

சொன்னது...

ட்ரீம்ஸு

பார்த்து சொல்லு மக்கா :))


குசும்பன்

நன்றி அண்ணாச்சி!!

சொன்னது...

தெகா

//நம்மூரு ஆட்கள் அப்படி உணர்வுகளே வராம மரத்துப் போயி இருக்கக் காரணமென்னா?//

வணிக நோக்கம் மட்டுமே கொண்ட ஊடகங்களும் அதிகார மையங்களும் மக்களை அப்படி மரத்துப்போக வச்சிருக்காங்களோ??

//ஆனா, உச் கொட்ட நிறைய பேர் இருக்கோம்//

ஹ்ம்ம்..என்னையும் சேர்த்தே :(


நன்றி!!!


ஜி

நன்றி மக்கா!!

சொன்னது...

கப்பி
இது வெறும் பட விமர்சனம் மட்டும் இல்லை! நம் மனதை நாமே செய்து கொள்ளும் விமர்சனமும் கூட! அதை ஆங்காங்கே நச்-னு காட்டி இருக்க!

நகரத்துப் பள்ளிகளில் கூட, சிறுவர்கள் கேலி பேசப்பட்டு, திரும்பியும் பழைய இடத்துக்கே வருவதும் வாடிக்கை தான்!

கோபி சொன்னது போல, ரத்தப் பரிசோதனை செய்த பிறகு அந்த ரிசல்ட்டுக்காக அவர்கள் தவிக்கும் தவிப்பு மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும்!

இதையும் பாருங்க! சிறார்களின் புகைப்படக் கலை பரிமளிக்கும் தளம். அதையே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் நடத்துகிறார் ப்ரிஸ்கி!
http://kids-with-cameras.org

பல சிவப்பு விளக்குச் சிறுவர்கள் இப்போது பள்ளி முடித்து, மேல்படிப்புக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் கூடச் சேர்ந்துள்ளது மிகவும் மகிழ்வான ஒரு செய்தி!

சொன்னது...

கேஆரெஸ்

//
நகரத்துப் பள்ளிகளில் கூட, சிறுவர்கள் கேலி பேசப்பட்டு, திரும்பியும் பழைய இடத்துக்கே வருவதும் வாடிக்கை தான்!
//

உண்மை அண்ணாச்சி!! மக்கள் கிட்ட விழிப்புணர்வும் சக மனிதர்கள் மேல அக்கறையும் கம்மியா இருக்கும்போது பள்ளிச் சிறுவர்களை என்ன சொல்ல முடியும்


//
இதையும் பாருங்க! சிறார்களின் புகைப்படக் கலை பரிமளிக்கும் தளம். அதையே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகவும் நடத்துகிறார் ப்ரிஸ்கி!
http://kids-with-cameras.org
//

இதைப் பார்த்திருக்கேன்.. பதிவில் சொல்ல மறந்துட்டேன் அண்ணாச்சி.

நன்றி !!

சொன்னது...

ம்ம்ம்ம்... மனம் கனக்கிறது என்று மட்டும் கதை விட்டுக்கொண்டு நிறுத்திக் கொள்கிறேன்.