நினைத்தாலே இனிக்கும்

'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம். பக்திப் பாடல்கள் முடிந்ததும் வேளாண் செய்திகள். "இந்த மாசம் பயிர்களில் தட்டான்பூச்சிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்ங்கறதால பொட்டாசியம் பாஸ்பைட் உரத்தை ஒன்னுக்கு மூனுன்ற கணக்குல கலந்து போடனும்னு மதுராந்தகம் வேளாண் விரிவாக்க மையத்துல இருந்து செய்தி அனுப்பியிருக்காங்க". சரோஜ் நாராயண்ஸ்வாமி ஆறே முக்காலுக்கு செய்திகளை ஆரம்பிப்பதற்குள் எழுந்துகொள்ளவில்லை என்றால் காலையிலேயே உதைதான்.

6.55க்கு அறிவிப்புகளுக்குப் பிறகு 'காலை மலர்' ஆரம்பிக்கும். நகரில் இன்று, அறிவியல் செய்திகள் முடிந்ததும் 7.15க்கு மீண்டும் செய்திகள். அரை மணி நேரத்தில் எதற்கு இன்னொரு செய்திகள் அந்த நேரத்தில் இரண்டு பாடல்களை ஒளிபரப்பலாமே என்று கடியாக இருக்கும். 7.40க்கு இன்று ஒரு தகவல். முதல்ல 7.35க்கு இருந்து பிறகு 7.40க்கு மாற்றினார்கள். இடையில் நகைச்சுவை துணுக்குகள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. காலை மலர் முடிந்ததும் 7.45-ல் இருந்து 8 வரை பாடல்கள். அதற்குள் குளித்து முடித்திருக்க வேண்டும்.

8.15க்கு விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு. ஒவ்வொரு பாடலையும் குறைந்தது இருபது பேராவது விரும்பிக் கேட்டு கடிதம் எழுதியிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குள் அறிவிப்பாளர் 'மண்ணில் இந்த காதலன்றி' பாடும் எஸ்.பி.பி போல் மூச்சுவிடாமல் எல்லா பெயர்களையும் அறிவிப்பார். பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் அவர்கள் பெயரை மட்டுமல்லாது அவரின் கொள்ளு தாத்தா, பாட்டியில் ஆரம்பித்து பக்கத்து தெரு பொடியன் வரை அனைவரின் பெயரையும் எழுதி அனுப்பியிருப்பார்கள். காஞ்சிபுரத்திலிருந்து யாராவது கேட்டிருந்தால் அவரை நமக்குத் தெரிந்திருக்குமா என்று யோசித்ததுண்டு. நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே இட்லியோ தோசையோ உள்ளே இறங்கும். 8.40க்கு விளம்பரதாரர் வழங்கும் பாடல் என்று புது பாடல் ஒன்று ஒலிபரப்புவார்கள். பள்ளிக்கு தயாராகக் கிளம்பி இந்த புதுப்பாடலுக்காகவே காத்திருந்து கேட்டுவிட்டு கிளம்புவோம். அதற்குள் கிளம்பாவிட்டால் அன்று பள்ளிக்கு லேட் தான்.

மாலையில் வந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். 6.30க்கு செய்திகள். செய்திகள் முடிந்ததும் அடுத்த நாள் நிகழ்ச்சிகள்.ஒரு நாளும் நிகழ்ச்சிகளில் (யாராவது இறந்தாலொழிய)மாற்றமிருக்காது. ஆனாலும் காலை 5.30க்கு ஆரம்பித்து இரவு வரையான நிகழ்ச்சிகளை தினமும் சொல்வார்கள். அறிவுப்புகள் முடிந்ததும் நாடகம், தமிழ்/ஹிந்தி பாடல்கள். ஆங்கிலப் பாடல்களும் வாரத்தில் சில நாட்கள் உண்டு. பல்வகை சங்கீத நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும். தொலைக்காட்சி வந்தபின் மாலை வேளைகளில் வானொலி கேட்பது குறைந்துபோனது. ஆனால் மழை புயலடித்து தூர்தர்ஷன் தெரியாத நாட்களில் வானொலி பொழுதுபோக்கு.

ஞாயிற்றுக்கிழமைகளில் சில சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை வசனம். பெரும்பாலும் பழைய சிவாஜி/எம்.ஜி.ஆர் படங்களே ஒலிபரப்பப்படும். தலைவரின் படங்கள் வெகு அரிது. 'தங்கப்பதக்கம்' மட்டும் இரண்டு மூன்று முறை கேட்ட ஞாபகம் இருக்கின்றது. கதைவசனம் முடிந்ததும் பிலிப்ஸ் சூப்பர் 10 என்று அந்த வாரத்தின் சிறந்த பத்து புதுப்பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிகழ்ச்சியின் பெயர் சரியா என்று நினைவில்லை. மதிய நேரங்களில் வெயிலினால் கிரிக்கெட் விளையாட விடமாட்டார்கள். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டபடி உள்விளையாட்டுகள் தான். சூப்பர் 10 முடிந்ததும் 4 ஆகிவிட்டது வெயில் குறைந்துவிட்டதென கிரிக்கெட் விளையாடக் கிளம்புவோம்.


சில நிகழ்ச்சிகள் திருச்சி, கோவை வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் "காஞ்சியில் ஒரு வானொலி நிலையம் இருந்தால் காஞ்சியிலிருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுமே. இங்கு ஒன்று திறந்தால் என்ன" என்று தோன்றும். அதே போல் சிலோன் நிலையம் சில சமயங்களில் மட்டும் வரும். இரவுகளில் தெளிவாக வரும். நான் தூங்கப் போகும் நேரம் அப்பா கேட்டுக்கொண்டிருப்பார்.

வானொலியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களும் சுவாரசியமானவை. அப்போது எல்லா விளம்பரங்களிலும் ஒன்றிரண்டு குரல்களே மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இன்றும் கூட பண்பலை அலைவரிசைகளில் விளம்பரங்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

அப்போதெல்லாம் காலை இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தனியார் பண்பலை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். காஞ்சிபுரத்தில் பண்பலை எடுக்காது. விடுமுறையில் மாமா வீட்டுக்கு மடிப்பாக்கத்திற்கு செல்லும்போது கேட்க முடியும். 'ப்ரியமுடன் ப்ரியா'வில் ப்ரியா அழகாகப் பேசி சூப்பரான பாடல்களை ஒலிபரப்புவார். "மாஆர்ரூஊஊஉதி சூசுகி ட்ராஃபிக் பீட்" என்று அன்று ஆரம்பித்தது இன்றும் பண்பலை வானொலிகளில் தொடர்கின்றது.

பல தனியார் பண்பலை அலைவரிசைகள் வந்தபின்னும் இன்றும் சென்னை வானொலி நிலையத்திற்கென தனியாக நேயர்கள் இருக்கின்றார்கள். சென்னை வானொலியின் பண்பலை அலைவரிசைகளான ரெயின்போ, கோல்ட் எப்.எம்களிலும் பல நல்ல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

அப்பா வேலைக்கு சேர்ந்ததும் வாங்கிய வானொலி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பலமுறை கிழே விழுந்திருக்கிறது. நான் பலமுறை அதைத் திறந்து நோண்டியிருக்கிறேன். டியூனரையும் உள்ளே இருக்கும் காந்தத்தையும் கிழட்டி திரும்ப மாட்டி அந்த ரேடியோவிற்கு பலமுறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து மகிழ்வித்தது. டேப் ரிகார்டர் வாங்கியபின் அந்த ரேடியோ பரணிற்குச் சென்றது. டேப்ரிகார்டர் வந்தபின்னாலும்கூட எங்கள் விட்டில் எண்ணி பதினைந்து கேசட்டுகளுக்கு மேல் இருக்காது. எப்போதும் அதில் வானொலி தான் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதும் கூட பண்பலை வானொலியைக் கேட்டபடிதான் இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


இன்று மாலை அயர்ச்சியிலும் ஏதோ இனம்புரியாதொரு கவலையிலும் பதிவெழுதத் தோன்றாமல் லேப்டாப் மானிட்டரை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்த எனக்கு வானொலி குறித்தான பழைய நினைவுகளைக் கிளறி இந்த பதிவை எழுத வைத்து அதற்கு வானொலி நிகழ்ச்சி பெயர்களின் சாயலிலேயே தலைப்பையும் தந்த தல கைப்புவுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்த வானொலிக்கும் இப்பதிவு சமர்ப்பணம். :D



35 பின்னூட்டங்கள்:

சொன்னது...

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், தமிழ்ச்சேவை இரண்டு...நியாபகங்களை கிளறிவிட்டீர்கள் கப்பி

இன்றைக்கும் அப்துல் ஹமீது, மயில்வாகனன் சர்வானந்தா,ராஜேஸ்வரி சண்முகம் போன்றோரின் வருடும் குரல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இதை தட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் வண்டியில் ஆஹா FM ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் பேசுவதை கேட்டால் எனக்கு தவளை கத்துவதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

சொன்னது...

மலரும் நினைவுகள்......தொடரும் நினைவுகளாக பதிவு நல்லா இருக்கு:))

சொன்னது...

கொசுவத்தி சூப்பர்

சொன்னது...

//அப்பா வேலைக்கு சேர்ந்ததும் வாங்கிய வானொலி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டிருந்தது. பலமுறை கிழே விழுந்திருக்கிறது. நான் பலமுறை அதைத் திறந்து நோண்டியிருக்கிறேன். டியூனரையும் உள்ளே இருக்கும் காந்தத்தையும் கிழட்டி திரும்ப மாட்டி அந்த ரேடியோவிற்கு பலமுறை ஆப்ரேஷன் செய்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து மகிழ்வித்தது///

அடடா எப்பிடிங்க? அப்படியே என் மலரும் நினைவுகள் போல இருந்தது.....
அப்புறம் அந்த "பாயசம் வைக்க வேண்டும் பானையில் ஓர் அரிசியில்லை".....வயல் பாட்டை விட்டு விட்டீர்களே!!!
அன்புடன் அருணா

சொன்னது...

முதல் பாராவில் ஆரம்பித்து அப்படியே எங்க வீட்டுல நடக்கிற மாதிரியே இருந்தது விசயங்கள்.
ஹ்ம் இப்ப.. நெட் எப். எம் தான் வழி .. :(

சொன்னது...

/குசும்பன் சொன்னது...
கொசுவத்தி சூப்பர்
/
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சொன்னது...

//இதை தட்டிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் வண்டியில் ஆஹா FM ஒலித்துக் கொண்டிருக்கிறது. //

எனக்கும் கூட ஒரு வெறித்தனமா தேடுதலில் கிடைத்த பல பல ஆன்லைன் ரேடியோக்களிடம்தான் அவ்வப்போது தஞ்சம் புகுந்து கொள்கிறேன்!

சொன்னது...

இன்று வகைக்கொரு சேனல்கள் வந்தாலும் என்றும் மறக்க முடியாதது ரேடியோதான்.

நானும் இதைப்பற்றி ஒரு பதிவு முன்பு போட்டிருக்கிறேன்.

பாருங்களேன்.

http://pudugaithendral.blogspot.com/2007/12/blog-post_428.html

சொன்னது...

Dei you remember abdul hameedu...... madurai vanaoli try pannina neraya pudhu padam kooda vasanam kaekkalam... Naan ethana thadava "soorya vamsam" kathai vasanam kaettaen gnabagam illa.........
Aana enga veetu radio romba naal velai paarthu kittu irunthathu, pala pala operations, open panni thoosi thattals ellaathaiyum thaandi....tv vara varaikkum...... ippo ennamo velai paarka maataenguthu............

சொன்னது...

//மலரும் நினைவுகள்......தொடரும் நினைவுகளாக பதிவு நல்லா இருக்கு:))//


riiippeeettttu....super kappi :-)

சொன்னது...

கப்பி நீங்க காஞ்சீபுரத்துல கேட்டதை நான் மதுரையிலும், மற்ற தெற்கு மாவட்டங்களிலும் கேட்டு இருக்கிறேன். ஆகக் கூடி எல்லோருக்கும் அப்பாவும் வானொலியும் மாறவில்லை.

நீங்கள் பாப்பா மலரெல்லாம் கேட்டதில்லையா.
எங்களுக்குக் கூடுதலாக சிலோன் ரேடியோவும் கிடைக்கும். மகிழ்ச்சியான நாட்கள். கொசுவர்த்தி என்றாலும் செமையாகத்தான் சுற்றி இருக்கிறீர்கள். நன்றிம்மா.

சொன்னது...

சூப்பரு....

சொன்னது...

நம்ம அப்பாக்கள் எல்லாம் ஒரே இனம் தான் போல..!! ;))

\\இன்று ஒரு தகவல். \\

இந்த நிகழ்ச்சி வரும் போது எங்க அப்பாவுக்கு வேற எந்த சவுண்டும் கேட்க்கூடாது...அந்த அளவுக்கு உன்னிப்பாக கேட்டுக்கிட்டு இருப்பாரு...;)

சொன்னது...

@ gobinath
aaga ennappa bayamuruthareenga??? naanum appadi unnippa kaettaen "indru oru thagaval" :D

சொன்னது...

இப்ப இருக்கற சீரியல்களுக்கு சற்றும் குறையாம ஆனா அருமையான புதினங்கள் என்று அழைக்கப்படும் ரேடியோ நாடகங்களை கேட்பது வீட்டுப்பெண்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அப்ப வீட்டுல ஒரு அமைதி இருக்குமே... அடடா எங்கையுமே கிடைக்காது. ரேடியோ குரல் நடுநாயகமாக இருக்க எலலாரது காதும் ரேட்டியோவினை நோக்கி. ஞாயிற்றுக்கிழமைல மதியம் நாலுமணிக்கோ என்னவோ திரைப்படத்தை வசனமா ஓடவிடுவாங்க. விதி படத்தின் கோர்ட் சீன் வந்தப்ப கோர்ட்ல இருந்து கேட்ட மாதிரியே இருந்தது. மண்டயா துபாய்லருந்து சித்தப்பா கொண்டு வந்த ரேடியோ பத்து வருஷத்துக்கும் மேல உழைச்சுது. காலப்போக்குல அது காணாமலும் போச்சு.

சொன்னது...

:)

சொன்னது...

//இந்த பதிவை எழுத வைத்து அதற்கு வானொலி நிகழ்ச்சி பெயர்களின் சாயலிலேயே தலைப்பையும் தந்த தல கைப்புவுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்த வானொலிக்கும் இப்பதிவு சமர்ப்பணம். :D//

வளர நன்னிப்பா. நீ இந்தப் பதிவுல எனக்கு நன்றி தெரிவிச்சிருந்தாலும் "எல்லா புகழும் குருவி ராவணனுக்கே"அப்படின்னு டாக்டர் குருவி ஸ்டைல்லயே சொல்லிக்கிறேன்.

கப்பி...கொசுவத்தி சுத்தறதுல நீ ஒரு மாஸ்டர்ங்கிறது ஒரு புறம் இருந்தாலும், உன்கிட்ட ஹெவியா லைக் பண்ண வச்ச விஷயம் ஒன்னு இருக்குமா செல்லம். அது நீ சுத்துற கொசுவத்தில ஒவ்வொருத்தருக்கும் பிடிச்சது ஒவ்வொன்னு இருக்கு, அதே மாதிரி பகிர்ந்துக்கிறதுக்கும் ஒவ்வொன்னு இருக்கு பாரு அது தான். வந்துருக்கற பின்னூட்டங்களைப் பாத்தாலே தெரிஞ்சிருக்கும்.

கல்லூரி படிக்கும் நாள்லேயே வானொலி கேக்கும் பழக்கம் போயிடுச்சு. இருந்தாலும் வானொலி கேட்ட அந்த நினைவுகள் இன்னும் பசுமையாயிருக்கு. வானொலி கேக்கறதுல சுவாரசியமான ஒரு விஷயம் என்னன்னா பேசறவங்களோட குரலை வச்சி அவங்க முகம் எப்படி இருக்கும்னு நாமளே மனசுக்குள்ள ஒரு உருவம் வச்சிருப்போம். மத்தவங்க எப்படியோ-எனக்கு அப்படித் தான். ரேடியோல அடிக்கடி கேக்கற குரலோட தன்மையை வச்சு என மனசுக்குள்ளேயே ஒரு முகம் வச்சிப்பேன். உதாரணத்துக்கு சரோஜ் நாராயண்சாமியோட குரல் வச்சி அது ஒரு ஆண்னு பலநாள் நெனச்சிட்டு இருந்தேன். அதோட கறுப்பான உருண்டையான ஒரு முகம் வேற உருவகப் படுத்தி வச்சிருந்தேன். ஒரு நாள் டிவில ஸ்லீவ்லெஸ் போட்ட ஒரு ஆண்டியைப் பாத்துட்டு அவங்க தான் சரோஜ் நாராயண்சாமின்னு தெரிஞ்சதும் ஆச்சரியமா போச்சு. அதே மாதிரி இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதனுக்கும் ஒரு முகம் இருந்துச்சு. கண்ணாடி போட்ட மீசை வச்ச கொஞ்சம் இளமையான முகம் அது. உண்மையான முகத்தை சன் டிவில பாத்து பழகனதுக்கு அப்புறமும் இன்னமும் அந்த பழைய முகம் நியாபகம் இருக்கு. அதே போல சில எண்பதுகளில் வந்த திரைப்படப் பாடல்கள் - ராஜா இழைச்சு இழைச்சு மியூசிக் பண்ணிருப்பார். ரேடியோல கேட்டுட்டு இசையோட தன்மையை வச்சி பாட்டோட காட்சி இப்படி இருக்கும்னு நெனச்சி வச்சிருப்போம்...அப்புறமா பாடல் காட்சியைப் பாத்தா ரொம்ப பாடாவதியா இருக்கும்.

பாடல் விரும்பிக் கேக்கறவங்களோட பேர்களும் சில சமயம் மனசுல நிக்கும் - வாகையூர் ராக்கெட் ராமசாமின்னு ஒருத்தரோட பேரு அடிக்கடி வரும். வாகையூர் எங்க ஊருக்குப் பக்கத்து ஊருங்கிறதால அந்த ராக்கெட் ராமசாமியை நேரடியா பாக்கற வாய்ப்பும் கெடச்சுது. ரொம்ப சாதாரணமா வேட்டி, சட்டை, மேல ஒரு டவல், சைக்கிள் வச்சிட்டு இருந்தாரு...ஆனா அந்த பேரு இன்னமும் நினைவுல இருக்கு. அதே மாதிரி துப்பாக்கி தொழிற்சாலைங்கிற இடத்துலேருந்து நிறைய பேரு பாடலை விரும்பிக் கேப்பாங்க. துப்பாக்கி தொழிற்சாலை எங்க இருக்குன்னு இன்னவரைக்கும் தெரிஞ்சதில்லை.

வானொலி விளம்பரங்கள் - ரொம்ப வித்தியாசமாவும், சில சமயம் காமெடியாவும் இருக்கும். ஏ.கே.சுந்தர்னு ஒருத்தரு வானொலியில் குரல் கொடுப்பவர். டிடியில சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சௌந்தரபாண்டியன் ஸ்டோர்ஸ், டி.எச்.ரோடு,சுழல் மெத்தை அருகில், வண்ணாரப்பேட்டைங்கிற விளம்பரத்துலயும் இன்னும் பல விளம்பரங்கள்லயும் வர கணீர் குரல் இவரோடது. நார்த் மெட்ராஸ் பக்கமே போகாத நான் சுழல்மெத்தை அருகே போனப்போ முதமுதலில் ஞாபகம் வந்தது இந்த வெளம்பரம் தான். "ராதா லேட்டா வந்தேன்னு கோபமா? வரும் போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன். இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோட தான் வரணும்" இந்த விளம்பரம் ரேடியோல அம்புட்டு ஃபேமஸ். இதையே உல்டா பண்ணி மயில்சாமி லட்சுமணன் காமெடி கேசட்ல "இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோட தான் வரனும் இல்ல பக்கத்துவீட்டுக்காரனோட ஓடிப் போயிருவேன்"னு வரும். இதெல்லாம் 15-20 வருஷத்துக்கு அப்புறம் இன்னும் ஞாபகம் இருக்குன்னா அதுக்கு காரணம் அந்தளவுக்கு அந்த விளம்பரங்கள் மனசுல பதிஞ்சது தான். இதே மாதிரி கோல்கேட் பல்பொடி விளம்பரம் ஒன்னு, அது டிவிலயும் வரும், ஆனா ரேடியோல கேக்கும் போது தான் ஒரு எஃபெக்ட் கெடைக்கும், அதோட செம காமெடியா இருக்கும். "டாக்டர் இவரு வாய் ரொம்ப நாறுது, அதுக்கப்புறம் டாக்டர் கோல்கேட் பல்பொடி தேய்க்க சொல்லுவாரு(வசனம் நெனவில்ல) கடைசியா வர்ற வாய்ஸ் ஓவர் தான் ஹைலைட் -"எட்டி எட்டி போனவங்க கிட்ட எத்தனை நெருக்கம்?"

ஆல்-இன்-ஆல் ரேடியோ எஃப்எம்ல காலை 7 மணியிலிருந்து பத்து மணி வரை ஒவ்வொரு விளம்பரதாரருக்கும் ஒவ்வொரு மணி நேரம் ஸ்லாட். 7 மணிக்கு எஸ்.எஸ்,இண்டர்நேஷனல் நேரம். அதில் முதன்முதலில் வருவது "குறளின் குரல்" அப்படின்னு ஒரு நிகழ்ச்சி. ஒரு குறளைச் சொல்லி அதுக்கு பொருளும் சொல்லுவாங்க. ரொம்ப கேட்ட குரல் மாதிரியே இருக்குன்னு பல நாள் நெனச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சந்தேகத்துல எங்க தமிழ் மிஸ் கிட்ட கேட்டப்போ நான் தாம்ப்பா அதுன்னு அவங்க சொன்னதை கேட்டு ஆச்சரியமா போச்சு. அதே மாதிரி 8 மணிக்கு பிரியமான நேரம்னு ஒன்னு வரும் ஒவ்வொரு திரைப்பட பிரபலத்துக்கு அவங்க பிறந்த நாள் அன்னிக்கு வாழ்த்தையும் சொல்லி அவங்க படப்பாடல்களையும் போடுவாங்க. "பாடும்நிலா பாலு"ன்னு SPBயைக் கூப்பிட ஆரம்பிச்சது இந்த நிகழ்ச்சியில தான். டி.ராஜேந்தர் வச்ச பேராம் அது. 9 மணிக்கு விஆர்ஜி நேரம்னு வரும் - அதுல தான் முதன்முதலில் மாருதி சுசுகி டிராஃபிக் பீட் நான் கேட்டது.

சோம்பேறியான என்னையே இம்புட்டு கொசுவத்தி சுத்த வச்சிருச்சுப்பா உன் பதிவு...நோஸ்டால்ஜியா சாமி நோஸ்டால்ஜியா. அந்த நாளும் வந்திடாதோ? :(

சொன்னது...

வானொலி கேக்கறதுல சுவாரசியமான ஒரு விஷயம் என்னன்னா பேசறவங்களோட குரலை வச்சி அவங்க முகம் எப்படி இருக்கும்னு நாமளே மனசுக்குள்ள ஒரு உருவம் வச்சிருப்போம். மத்தவங்க எப்படியோ-எனக்கு அப்படித் தான். ரேடியோல அடிக்கடி கேக்கற குரலோட தன்மையை வச்சு என மனசுக்குள்ளேயே ஒரு முகம் வச்சிப்பேன். உதாரணத்துக்கு சரோஜ் நாராயண்சாமியோட குரல் வச்சி அது ஒரு ஆண்னு பலநாள் நெனச்சிட்டு இருந்தேன். அதோட கறுப்பான உருண்டையான ஒரு முகம் வேற உருவகப் படுத்தி வச்சிருந்தேன். ஒரு நாள் டிவில ஸ்லீவ்லெஸ் போட்ட ஒரு ஆண்டியைப் பாத்துட்டு அவங்க தான் சரோஜ் நாராயண்சாமின்னு தெரிஞ்சதும் ஆச்சரியமா போச்சு. அதே மாதிரி இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதனுக்கும் ஒரு முகம் இருந்துச்சு. கண்ணாடி போட்ட மீசை வச்ச கொஞ்சம் இளமையான முகம் அது. உண்மையான முகத்தை சன் டிவில பாத்து பழகனதுக்கு அப்புறமும் இன்னமும் அந்த பழைய முகம் நியாபகம் இருக்கு. அதே போல சில எண்பதுகளில் வந்த திரைப்படப் பாடல்கள் - ராஜா இழைச்சு இழைச்சு மியூசிக் பண்ணிருப்பார். ரேடியோல கேட்டுட்டு இசையோட தன்மையை வச்சி பாட்டோட காட்சி இப்படி இருக்கும்னு நெனச்சி வச்சிருப்போம்...அப்புறமா பாடல் காட்சியைப் பாத்தா ரொம்ப பாடாவதியா இருக்கும்//
உண்மையோ உண்மை.

அந்திமழை பொழிகிறது,
பொட்டு வச்ச மல்லிகை மொட்டு,
சோலைப் புஷ்பங்களே,
அண்ணேஅண்ணே,
பூவே இளைய பூவே
இன்னும் எத்தனையோ பாடல்கள்.:)

சொன்னது...

வானொலி கேக்கறதுல சுவாரசியமான ஒரு விஷயம் என்னன்னா பேசறவங்களோட குரலை வச்சி அவங்க முகம் எப்படி இருக்கும்னு நாமளே மனசுக்குள்ள ஒரு உருவம் வச்சிருப்போம். மத்தவங்க எப்படியோ-எனக்கு அப்படித் தான். ரேடியோல அடிக்கடி கேக்கற குரலோட தன்மையை வச்சு என மனசுக்குள்ளேயே ஒரு முகம் வச்சிப்பேன். உதாரணத்துக்கு சரோஜ் நாராயண்சாமியோட குரல் வச்சி அது ஒரு ஆண்னு பலநாள் நெனச்சிட்டு இருந்தேன். அதோட கறுப்பான உருண்டையான ஒரு முகம் வேற உருவகப் படுத்தி வச்சிருந்தேன். ஒரு நாள் டிவில ஸ்லீவ்லெஸ் போட்ட ஒரு ஆண்டியைப் பாத்துட்டு அவங்க தான் சரோஜ் நாராயண்சாமின்னு தெரிஞ்சதும் ஆச்சரியமா போச்சு. அதே மாதிரி இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதனுக்கும் ஒரு முகம் இருந்துச்சு. கண்ணாடி போட்ட மீசை வச்ச கொஞ்சம் இளமையான முகம் அது. உண்மையான முகத்தை சன் டிவில பாத்து பழகனதுக்கு அப்புறமும் இன்னமும் அந்த பழைய முகம் நியாபகம் இருக்கு. அதே போல சில எண்பதுகளில் வந்த திரைப்படப் பாடல்கள் - ராஜா இழைச்சு இழைச்சு மியூசிக் பண்ணிருப்பார். ரேடியோல கேட்டுட்டு இசையோட தன்மையை வச்சி பாட்டோட காட்சி இப்படி இருக்கும்னு நெனச்சி வச்சிருப்போம்...அப்புறமா பாடல் காட்சியைப் பாத்தா ரொம்ப பாடாவதியா இருக்கும்//
உண்மையோ உண்மை.

அந்திமழை பொழிகிறது,
பொட்டு வச்ச மல்லிகை மொட்டு,
சோலைப் புஷ்பங்களே,
அண்ணேஅண்ணே,
பூவே இளைய பூவே
இன்னும் எத்தனையோ பாடல்கள்.:)

சொன்னது...

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு ஒலிபரப்பாகும் "சூரியகாந்தி" என்ற நிகழ்ச்சியில் 1/2 மணி நேர மேடை நாடகம் ஒலிபரப்பாகும்!

சிறுவயதில் பல வாரங்கள் கேட்டிருக்கிறேன்!

டிவி சீரியல்கள் வராத காலத்தில் இதைக் கேட்டு மூக்குச் சிந்திய பெண்மணிகளும் உண்டு!

சொன்னது...

//சோலைப் புஷ்பங்களே//

//பூவே இளைய பூவே//

அருமையான பாடல்கள்!

எவ்வளவோ டெக்னாலஜி இன்றைய காலகட்டத்தில் வந்தாலும் அந்த காலத்து ரேடியோ கேட்ட சுகம் இப்போ இல்லைன்னுதான் சொல்லணும்!

சொன்னது...

இலங்கை வானொலியின் அந்த காந்தக்குரல்களின் ஓசை இன்னமும் காதுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறது...
நல்லதொரு பதிவு, இனிமையான நினைவுகள் பல மனதினில் வந்துபோகிறது...

சொன்னது...

இரண்டாம் சொக்கன்

வாங்க தல!!

ஞாபகங்களை அப்பப்ப கிளறிவிட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்...ஏன்னா நீங்களே சொன்ன மாதிரி இப்ப இருக்கவங்க //பேசுவதை கேட்டால் எனக்கு தவளை கத்துவதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.//

நன்றி!! :)


திவ்யா

நன்றிங்க!! கொசுவத்தி சுத்தறது சுகம்தானே :))


குசும்பன்

நன்றி தல!! :)

சொன்னது...

அருணா

நீங்க சொல்ற பாட்டு எனக்கு நினைவில்லைங்களே :(

நன்றி!!


கயல்விழி முத்துலட்சுமி

//முதல் பாராவில் ஆரம்பித்து அப்படியே எங்க வீட்டுல நடக்கிற மாதிரியே இருந்தது விசயங்கள்.//

எல்லார் வீட்டுலயும் அதே கதை தானே :)

//
ஹ்ம் இப்ப.. நெட் எப். எம் தான் வழி .. :(//



ஆயில்யன்

ரிப்பீட்டுக்கு நன்றிங்கண்ணா :))

ஆன்லைன் ரேடியோ நேயர்தானா :))


ஹ்ம்ம்..இங்கயும் அதே கதை தான் :))

நன்றிங்க!! :)

சொன்னது...

புதுகைத் தென்றல்

ஆகா..நீங்களும் கொசுவத்தி சுத்தியிருக்கீங்களா...சூப்பர்...இதை எப்படி பார்க்காம விட்டேன்னு தெரியலயே.

Aim

வாடா நண்பா!!

எல்லாம் ஒரே இனம்தானே :))


ஸ்யாம்

நன்றி நாட்ஸ் :)

சொன்னது...

வல்லிசிம்ஹன்

//ஆகக் கூடி எல்லோருக்கும் அப்பாவும் வானொலியும் மாறவில்லை.//

ஆமாங்க! எல்லாருக்குமே அப்படித்தான் இருந்திருக்கு :)

நன்றிங்கம்மா!! :)


இராம்

நன்றிண்ணே :)


கோபிநாத்

//நம்ம அப்பாக்கள் எல்லாம் ஒரே இனம் தான் போல..!! ;))//

நம்மள மாதிரியே இருக்காங்க :)))


//இந்த நிகழ்ச்சி வரும் போது எங்க அப்பாவுக்கு வேற எந்த சவுண்டும் கேட்க்கூடாது...அந்த அளவுக்கு உன்னிப்பாக கேட்டுக்கிட்டு இருப்பாரு...;)//

சூப்பரு :)

நன்றி அண்ணாத்த!!

சொன்னது...

தம்பி

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தம்பியண்ணனே அண்ணனே அண்ணனே ;)))


ட்ரீம்ஸு

பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் சிரிப்பானுக்கு சிரிப்பான்

:)

சொன்னது...

கைப்புள்ள

நான் பதிவில சொன்னதை விட நிறைய சொல்லியிருக்கீங்க தல!! கலக்கல்ஸ்!!

அப்ப சரோஜ் நாராயண்ஸ்வாமி ஆண் இல்லையா..அவ்வ்வ் :))


குரலுக்கு ஏத்த மாதிரி முகத்தை கற்பனை செய்து பார்க்கறது நல்லா ஜாலியா இருக்கும் தல.நானும் அதைப் பண்ணியிருக்கேன்

//ராக்கெட் ராமசாமி//

செம பெயரா இருக்கே :))


வானொலி விளம்பரங்கள் பற்றி பக்கம் பக்கமா எழுதலாமே தல!! நீங்க சொல்ல சொல்ல அதெல்லாம் திரும்ப மனசுல ஓடுது :)

பாடும் நிலா பாலு, விஆர்ஜி நேரம்..அட்ரா சக்கை..பின்றீங்க தல! :)


எல்லாத்தையும் கொசுவத்தி சுத்தி கொண்டுவந்துட்டீங்க தல!! சூப்பர்!!

நன்றி நன்றி நன்றி!! :)

சொன்னது...

வல்லிசிம்ஹன்

பல திரைப்பாடல்களை அறிமுகப்படுத்தியதே வானொலி தானே :)


நாமக்கல் சிபி

//அந்த காலத்து ரேடியோ கேட்ட சுகம் இப்போ இல்லைன்னுதான் சொல்லணும்//

சரியா சொன்னீங்க தள!!

நன்றி! :)


தமிழன்

நன்றிங்க!!

சொன்னது...

அருமையான பதிவு, இதே நினைவில் நான் இட்ட முந்திய பதிவு

ஆகாச வாணியும் விவித் பாரதியும்....! http://kanapraba.blogspot.com/2006/09/blog-post.html

சொன்னது...

//ரேடியோல கேட்டுட்டு இசையோட தன்மையை வச்சி பாட்டோட காட்சி இப்படி இருக்கும்னு நெனச்சி வச்சிருப்போம்...அப்புறமா பாடல் காட்சியைப் பாத்தா ரொம்ப பாடாவதியா இருக்கும்.
//

Very true. For, e.g I was totally dissappointed watching the video track of 'Poo maalaiye thol seravaa' song from the movie 'Pagal nilavu'. Incidentally, it was directed by a person by the name Manirathnam.

சொன்னது...

கப்பி,

அருமையான கொசுவத்தி பதிவு. எல்லா அப்பாவும் இப்படித் தான்னு நெனைக்கும்போது சந்தோசமா இருக்கு. சரி நம்ம அப்பாக்கள விட்டுட்டு, அப்பா ரோலில் இருக்கும் நம்மை, நம் குழந்தைகள ஒரு இருபது வருடம் கழித்து கொசுவத்தி சுத்தினா என்னன்னு எழுதுவார்கள் ??

காலைல எழுந்ததும் கணினி
நுழைவது உடன் தமிழ்மணம்
படிப்பது பல பதிவுகள்
இடிப்பது சில பின்னூட்டங்கள் ...

சும்மா டமாஸ். :))))

//வானொலி கேக்கறதுல சுவாரசியமான ஒரு விஷயம் என்னன்னா பேசறவங்களோட குரலை வச்சி அவங்க முகம் எப்படி இருக்கும்னு நாமளே மனசுக்குள்ள ஒரு உருவம் வச்சிருப்போம். மத்தவங்க எப்படியோ-எனக்கு அப்படித் தான்.//

வல்லிம்மா, நானும் உங்க கட்சி தான் :))

சொன்னது...

//இன்றைக்கும் அப்துல் ஹமீது, மயில்வாகனன் சர்வானந்தா,ராஜேஸ்வரி சண்முகம் போன்றோரின் வருடும் குரல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.//

கே எஸ் ராஜா குரலை மறக்கமுடியுமா?

ஏதாவது ஒர் திரைப்படதிலிருந்து ”யார் நீங்க?“ என்பதை ஒலிபரப்பி உடனே கே எஸ் ராஜா என்பார். எனக்கு மிகவும் பிடிக்கும்.

இலங்கை வானொலியில் காலையில் வரும் பிறந்த நாள் வாழ்த்தும் உற்சாகமாக இருக்கும். (பிறந்த நாள் இன்று பிறந்த நாள, பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்)

வாழ்த்துபவர்கள், அம்மா, அப்பா, அம்மம்மா, அப்பப்பா என்று வேகமாகவும் தெளிவாகவும் சொல்வது அழகு.

மக்கள் வங்கியின் விளம்பரமும் அழகு. (அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே)

//ரேடியோல கேட்டுட்டு இசையோட தன்மையை வச்சி பாட்டோட காட்சி இப்படி இருக்கும்னு நெனச்சி வச்சிருப்போம்...அப்புறமா பாடல் காட்சியைப் பாத்தா ரொம்ப பாடாவதியா இருக்கும்.//

”இளமையெனும் பூங்காற்று” பாட்டை இப்படித்தான் கொலை பண்ணீட்டாங்க.

நல்ல பதிவு.

எல்லோரையும் எதோ ஒரு விதத்தில் பாதித்து பழைய ஞாபகங்களை கிளப்பி சுவையா அசை போட வைத்தது.

நன்றி.

சொன்னது...

கானா பிரபா

உங்க கொசுவத்தி கலக்கல்!! :)

நன்றி தல!

பெத்த ராயுடு

_/\_


சதங்கா

//காலைல எழுந்ததும் கணினி
நுழைவது உடன் தமிழ்மணம்
படிப்பது பல பதிவுகள்
இடிப்பது சில பின்னூட்டங்கள் ...
//

:)))))


நன்றி!!


வடகரை வேலன்

தங்கள் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு நன்றி!!

சொன்னது...

இவர்களுடன் கூட கோவை வானொலி சூலூர் கணேஷ் இன் "கோவை மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு... அசெஸ் பைரில்லாம்" என்ற கணிர் குரல், நாடக விழா, செய்தி வாசிப்பாளர்கள் ராஜாராம், ஜான் சுந்தர்... ஞாயிற்று கிழமை வரும் சிறுவர் உலகம் இன்னும் எத்தனை எத்தனையோ... சொல்லிக்கொண்டே போகலாம். என்னதான் டிவி... சேனல்கள் வந்தாலும் வானொலி வானொலிதான் (அந்த காலம்). இன்னும் விரிவாக பதிவு செய்ய ஆசை. அவகாசம் கிடைக்கும் போது எழுதலாம்.