கால் போன போக்கில்

யார் அந்த டினா?
One night @ BsAs + Shakira + Recoleta Cemetery

ஏதாவது வெளியூருக்குச் சென்றுவந்தால் திரும்பிவந்ததுமே அம்மாவை உட்காரவைத்து பஸ் ஏறியதிலிருந்து வீட்டிற்கு திரும்பியதுவரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வது என் அப்பாவின் வழக்கம். பல சமயங்களில் எனக்கு இது எரிச்சல் ஊட்டினாலும் ஒவ்வொரு முறையும் அவர் விரிவாக எல்லாவற்றையும் சொல்வது ஆச்சரியமாக இருக்கும். நானோ முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அதை மட்டும் சொல்லிவிட்டு முடித்துவிடுவேன். அவராக ஒன்றுவிடாமல் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார். இப்போது பொய்னொஸ் ஐரிஸ் பயணம் குறித்து மூன்று பகுதிகளாக பதித்துக் கொண்டிருக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

ரிகொலெதா கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளியே வந்ததும் அங்கிருந்த பூங்காவில் மேப்பை விரித்து உட்கார்ந்தேன். குறிப்பாக எந்த இடத்திற்கும் செல்லும் திட்டமில்லை. அங்கிருந்த சாலையோரக் கடைகளை வேடிக்கைப் பார்த்துவிட்டு சுரங்க ரயிலில் பயணம் செய்து பார்க்கலாமென முடிவெடுத்துக் கிளம்பினேன்.

பொய்னொஸ் ஐரிஸில் பெரும்பாலான பகுதிகளில் தெருவோரக் கடைகள் நிறைந்திருக்கின்றன்ன. கைவினைப் பொருட்களும், மலிவான விலையில் துணிகளும் கிடைக்கின்றன. டேங்கோ நடனமாடுவது போல் சிறு சிலைகளும், அந்த நடனத்திற்கேற்ற ஆடைகளும், இசைத் தட்டுகளும் மலிவான விலையில் கிடைக்கின்றன. சில கடைக்காரர்கள் கிடார் வாசித்துக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

மத்திய நூலகம், பல்கலைக்கழக கட்டிடங்கள், கட்டிடக்கலை கண்காட்சியகம் ஆகியன இருந்த சாலையின் வழியாக நடந்து சாண்டா ஃபே (Santa Fe) அவென்யூவிற்கு வந்தேன். இந்த தெரு முழுதும் துணிக்கடைகள்தான். அர்ஜெண்டினாவிலுள்ள சாண்டா ஃபே மாகாணம் சே குவேரா பிறந்த மாகாணம் என்று எங்கோ படித்த நினைவு.

சாண்டா ஃபேயில் இருந்த ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் நுழைந்தேன். 'Subte' என்றழைக்க்கப்படும் சுரங்க ரயில் பாதைகள் 1913-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் எங்கே வாங்குவதென்று தெரியாமல் அருகிலிருந்தவரிடம் கேட்க, அவர் நான் எந்த பக்கம் ரயில் போகும் எனக் கேட்டதாக நினைத்துக்கொண்டு ரயில் செல்லும் திசையைக் காட்டினார். எதிர்ப்புற நடைமேடையில் சில கடைகள் இருந்ததால் அங்கு சென்று விசாரித்தேன். நான் கேட்ட கடையிலேயே டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ரயிலில் திடீரென்று ஒருவர் சிறிய கிருஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுத்துச் சென்றார். நான் வேண்டாமென சொல்வதற்கு முன் என் கையில் திணித்துவிட என்ன செய்வதென சுற்றும் முற்றும் பார்க்க, அடுத்த நிறுத்தத்தில் அவரே மீண்டும் வந்து வாங்கிச் சென்றார். ஓரிருவர் அந்த பொம்மைகளை காசு கொடுத்து வாங்கினர். மாண்டிவிடியோவிலும் பேருந்துகளில் மிட்டாய்களும், புத்தகங்களும் விற்கிறார்கள், நம்மூரைப் போலவே.




அங்கிருந்து ப்ளாசா இத்தாலியா (Plaza Italia) என்ற ரயில் நிலையம் வரை சென்றேன். அங்கு ஒரு தாவரவியல் பூங்கா இருந்ததை வரைபடத்தில் பார்த்து வைத்திருந்தேன். அங்கிருந்து 20 நிமிட பயணத்தில் ப்ளாசா இத்தாலியாவை அடைந்தேன். அங்கு உயிரியல் பூங்காவும் தாவரவியல் பூங்காவும் அருகருகில் உள்ளன. நான் தாவரவியல் பூங்காவில் சிறிது நேரம் அமரலாம் என உள்ளே சென்றேன். அமைதியான அந்த பூங்காவில் அமர்ந்து கையோடு எடுத்துச் சென்றிருந்த 'The Green Mile' நாவலை சிறிது நேரம் வாசித்தேன். அருகிலிருந்த மைதானத்தில் ஏதோ கண்காட்சி நடந்துகொண்டிருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் சுரங்க ரயில் மூலமாக நகரின் மையப் பகுதிக்கு வந்தேன். ரயிலில் ஒரு பெண்மணியும் அவரின் மகனும் ஸ்டிக்கர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் லவாஷே(Lavalle), ப்ளோரிடா(Florida) வீதிகளில் நடந்து, மெக்டொனால்ட்ஸில் பசியாற்றி பொழுது கழிந்தது. பொய்னொஸ் ஐரிஸ் சாலைகளில் பல்வேறு இன மக்களைக் காண முடிகிறது. காவல் துறையினரும் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் இருக்கின்றனர்.

மழைமேகம் திரண்டதால் விரைவாகத் துறைமுகம் சென்றடைந்தேன். அங்கு ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் மாண்டிவிடியோ நோக்கிப் பயணம். இரவு நேரமானாதாலோ என்னவோ கடலில் அலைகள் பெரிதாக இருந்ததால் கப்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.ஒருவேளை பின்னால் உட்கார்ந்ததால் தான் அதிகமாக ஆடுகிறதோ என்று பார்த்த்தால் முன்னால் இருப்பவர்களும் தள்ளாடியபடிதான் இருந்தனர். கலோனியா வந்தடைந்ததும் இரண்டு மணி நேரப் பேருந்துப்பயணத்தில் மாண்டிவிடியோ.

இயற்கை எழில் கொஞ்சும் தென்னமெரிக்க நிலப்பரப்புகளைத் திரைப்படங்களிலும் இணையத்திலும் பார்த்து, படித்து இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்ல வேண்டுமென ஆவலாய் இருக்கிறது. பார்ப்போம்.



15 பின்னூட்டங்கள்:

சொன்னது...

கப்பி,

என்னாப்பா அம்பூட்டு தானா.... இல்லே இன்னும் தொடர்ச்சி வருதா???

எத்தனை நாளு இருந்தே இங்கே???

சொன்னது...

அருமையா சொல்லியிருக்க கப்பி...

//ஒருவேளை பின்னால் உட்கார்ந்ததால் தான் அதிகமாக ஆடுகிறதோ என்று பார்த்த்தால் முன்னால் இருப்பவர்களும் தள்ளாடியபடிதான் இருந்தனர்.//
பஸ்ல போற மாதிரினு நினைச்சிக்கிட்டயா???

:-))

சொன்னது...

//என்னாப்பா அம்பூட்டு தானா.... இல்லே இன்னும் தொடர்ச்சி வருதா???

எத்தனை நாளு இருந்தே இங்கே???
//

அம்புட்டு தான் நைனா :)

அங்க ரெண்டு நாள் தான் இருந்தேன் ராம்! தொரத்தி விட்டுட்டாங்க :))

சொன்னது...

மிக்க நன்றி நிர்மல்!

சொன்னது...

நன்றி வெட்டி!

//பஸ்ல போற மாதிரினு நினைச்சிக்கிட்டயா???
//

ஹி ஹி..அது சும்மா ஜோக்கு :))

சொன்னது...

மூன்று பகுதிகளும் வெகு அருமை. அலுப்பும் எழாமல், ஆர்வமும் குன்றாமல் ஆசையுடன் படித்த பயணக் குறிப்புகள். நன்றி கப்பி.


---இரவு நேரமானாதாலோ என்னவோ கடலில் அலைகள் பெரிதாக இருந்ததால் கப்பலின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.---

ஏதோ 'உள்ளே' ஏற்றிக் கொண்டதன் விளைவோ ; )
நீங்களும் ஆடினீர்களா : P

சொன்னது...

மாண்டிவிடியோ மங்குனிகள் சங்கத்தின் சார்பாக கப்பி அவர்களை வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
தலைவரின் இந்த பயணம் ஒரு மாபெரும் மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த பயணத்தில் பெற்ற அனுபவங்களை தொடராக எங்களுக்கு படிக்க தந்த கப்பியாருக்கு நிச்சயமாக வலை வைக்கப்படும் ச்ச்சே சிலை வைக்கப்படும்.

சொன்னது...

அழகான பயணக்கட்டுரை. வாசிக்கும்போதே அந்த ஊருக்கு போயிட்டு வந்தா மாதிரி ஒரு பீலிங். என்ன கொறவா போச்சுன்னா டினா பிகர்கள் போட்டோவ கொஞ்சம் தட்டி விட்டிருந்தன்னா ஜூப்பரா இருந்திருக்கும்.

சொன்னது...

//ஏதோ 'உள்ளே' ஏற்றிக் கொண்டதன் விளைவோ ; )
நீங்களும் ஆடினீர்களா : P//

ஆஹா...
ஆடாதடா
ஆடாதடா மனிதா...

சொன்னது...

//மூன்று பகுதிகளும் வெகு அருமை. அலுப்பும் எழாமல், ஆர்வமும் குன்றாமல் ஆசையுடன் படித்த பயணக் குறிப்புகள். நன்றி கப்பி.
//

எழுத ஆரம்பிக்கும்போதே மக்களை அலுப்பேற்றிவிடுவேனோ என்ற பயத்தில்தான் எழுதத் தொடங்கினேன் :)
ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாபா!


//
ஏதோ 'உள்ளே' ஏற்றிக் கொண்டதன் விளைவோ ; )
நீங்களும் ஆடினீர்களா : P
//

நான் ஆடியதற்கு கப்பல் ஆடியதைத் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என 'சுய உணர்வு'டன் உறுதியளிக்கிறேன் :D

சொன்னது...

//மாண்டிவிடியோ மங்குனிகள் சங்கத்தின் சார்பாக கப்பி அவர்களை வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.
//

நான் தான் சோம்பேறி..வந்து பத்து நாளைக்கப்புறம் பதிவு போடறேன்..நீங்களுமா இப்படி லேட்டா வரவேற்கறது?? இதுல பெருமை வேற!!

//
தலைவரின் இந்த பயணம் ஒரு மாபெரும் மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது.
//

மைல்கல்லா..மங்குனிகளா இந்த ஊர்லயும் கிலோமீட்டர் கணக்குதான்!!கி.மீ. கல்லுன்னு சொல்லுங்க..


//
இந்த பயணத்தில் பெற்ற அனுபவங்களை தொடராக எங்களுக்கு படிக்க தந்த கப்பியாருக்கு நிச்சயமாக வலை வைக்கப்படும் ச்ச்சே சிலை வைக்கப்படும்.
//

சிலையா...அடப்பாவிகளா...உங்களுக்கு தலைவாழை இலை போட்டு விருந்து வைக்கறேன்..சிலை மட்டும் வாணாம் கண்ணுங்களா!!

சொன்னது...

மிக்க நன்றி தம்பி!

//என்ன கொறவா போச்சுன்னா டினா பிகர்கள் போட்டோவ கொஞ்சம் தட்டி விட்டிருந்தன்னா ஜூப்பரா இருந்திருக்கும்.
//

மைண்ட்ல வச்சிருக்கேன் ;)

சொன்னது...

//ஆஹா...
ஆடாதடா
ஆடாதடா மனிதா...
//

இயக்குனர் SA சந்திரசேகரனா ,நடிகர் சந்திரசேகரனாய்யா??

சொன்னது...

//இயக்குனர் SA சந்திரசேகரனா ,நடிகர் சந்திரசேகரனாய்யா??//

நாட்டாமை படங்களின் பஞ்சாயத்து நடைபெறும் இடம் (ஆலமரத்தடில), கருப்பு கலர் ஜமுக்காளத்துல முக்காடு போட்டுகிட்டு கையில ராந்தல் விளக்கு, கையில தடி வச்சிக்கிட்டு, இந்த மாதிரி அட்வைஸ் பாட்டுக்கு தமிழ் சினிமா வச்சிருக்கற வரமுறைகளான, இருட்டு, காற்றில் புகை, இதுங்களோட நாந்தாம்பா நடிச்சேன்.

நல்ல வேள ப்ளாக் எழுதற மரபூர் ஜெயசந்திரசேகரனான்னு கேக்காம விட்டியே.

நல்லாருப்பா

சொன்னது...

//இருட்டு, காற்றில் புகை, இதுங்களோட நாந்தாம்பா நடிச்சேன்.
//

நடிகர் சந்திரசேகரும் இதுமாதிரி ஒரு பாட்டுல நடிச்சிருக்கறதால குழம்பிட்டேன்..மன்னிச்சிருங்க இ.த.த!