கொசுவத்தி & வாழ்த்துக்கள்

"அடுத்த பொங்கலுக்கு உயிரோட இருக்க மாட்ட", "அடுத்த தீபாவளிக்குள்ள உனக்கு கைகால் விளங்காம போயிடும்" - கிராமங்களில் பண்டிகை நாட்களில் சண்டை போட்டுக்கொண்டால் இப்படித் திட்டிக கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்த வருடம் குறித்து இப்போதே யோசிப்பதும் கடந்த ஆண்டுகளில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை அசைபோடுவதும்கூட பண்டிகைக் கொண்டாட்டங்களின் பகுதியாகவே இருக்கிறது. தீபாவளியின் போது கடந்த ஆண்டு சொதப்பிய மைசூர் பாகோ, கை முறுக்கோ, பொங்கல் அன்று சென்ற வருடம் நடந்த ஏதாவது ஒரு சின்ன சண்டையோ பேசுபொருளாக இருக்கும். புத்தாண்டு தினமும் கடந்த வருட நினைவுகளும் புதுவருடத் தீர்மானங்களுமாகக் கழியும்.

டிடியில் 'இளமை இதோ இதோ'வில் தான் புத்தாண்டு பிறக்கும். 'Wish You Happy New Year' என்று முதல் வரி மட்டும் வைத்துவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்துக்கு 'சகலகலா வல்லவனை'ப் பற்றிப் பாடும் அந்த பாடல் எப்படி இத்தனை ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து ஒலிக்கிறது என ஆச்சரியமாக இருக்கும்.

கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம். அப்படியே ஒரு இரண்டு மூன்று மணி நேரம் ஆடிவிட்டு மொத்தமாக ஒரு குளியலைப் போட்டு மீண்டும் 'ஏதாவது' ஒரு பட்த்தைப் பார்த்து புது வருடத்தை வரவேற்போம்.

புத்தாண்டு சீசனில் கடைகளில் விழாக்கால சலுகைகள் மட்டுமில்லாமல் ஓட்டல்களிலும் பஃபே வைப்பார்கள். அங்கும் போய் நம் கைவரிசையைக் காட்டாவிட்டால் எப்படி? கல்லூரிக்கு பக்கத்திலேயே 'ஆர்த்தி ட்ரைவ் இன்' என்று ஒரு ரெஸ்டாரெண்ட். எவனாவது ட்ரீட் கொடுத்தால் மட்டுமே அங்கு செல்வோம். சாதாரண நாட்களில் அந்த ஓட்டலுக்கு எதிரில் இருக்கும் பரோட்டா கடையை அட்டாக் செய்வோம்.

எங்களைப் பற்றித் தெரியாமல் ஒரு புதுவருட சீசனில் அந்த ஓட்டலில் பஃபே வைத்தார்கள். அதுவும் 80 ரூபாய்க்கு. விடுவோமா? முதலில் ஆறு பேர் போனோம். நாங்க ஆரம்பிக்கும்போதே இன்னும் ஏழெட்டு பசங்க வந்தாங்க. சூப் குடிச்சு முடிக்கும்போது கிட்டத்தட்ட 20 பசங்க. அப்படியே வரிசையா சூப், இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், பட்டர் நான், நூடுல்ஸ், தயிர்சாதம், ரெண்டு மூனு ஸ்வீட்டுன்னு டேபிள்ல வரிசையா வச்சிருந்ததை உள்ள தள்ளிக்கிட்டே வந்தோம்.

ஒரு மணி நேரத்துக்கு மேல நாங்க கஷ்டப்பட்டு கடமையை ஆத்திக்கிட்டிருந்தா பக்கத்துல ஒரு பேமிலி ஆளுக்கு ரெண்டு இட்லி வச்சுகிட்டு உட்கார்ந்திருக்காங்க. 'ரெண்டு இட்லி சாப்பிட இவிங்க எதுக்குடா பஃபேக்கு வராங்க'ன்னு சொல்லிகிட்டே அவங்க ப்ளேட்டை தட்டிவிடப் போன நண்பனை அவன் வாயில ஒரு முழு இட்லியை அடைச்சு இந்த பக்கம் கூட்டிட்டு வந்தோம். அங்க இன்னொரு உயிர்காப்பான் கைல ப்ளேட்டோட சின்ன பசங்க விளையாட வச்சிருந்த ஊஞ்சல்ல ஆடிட்டிருந்தான். கேட்டா ஆடி ஆடி கொஞ்சம் ஜீரணமாக்கி வயித்துல இடம் சேமிக்கறானாம்.இப்படியாக கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாம சேர்த்துவச்சு சாப்பிட்டோம்.

எல்லாருக்கும் சாப்பிட்டு போரடிக்கவே ஐஸ்க்ரீம் பக்கம் போனோம். வென்னிலா ப்ளேவர் எனக்கு புடிக்காதுன்றதால மூனே ரவுண்டுல நிறுத்திடலாம்னு மூனாவது தடவை வாங்கப் போனா கொடுக்க முடியாதுன்னுட்டான். வந்துச்சே எங்களுக்கு கோவம். 'பஃபே'ன்னா எல்லாம் அன்லிமிட்டட் தானே ஏன் கொடுக்க முடியாதுன்னு தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அவன் 'மத்ததெல்லாம் அன்லிமிட்டட்..ஆனா ஐஸ்க்ரீம் ஒரு தடவை தான்'ன்னு பதில் சொல்றான். 'அப்ப அதை போர்ட்ல போட வேண்டியது தானே...இது தெரிஞ்சா நாங்க வந்தே இருக்க மாட்டோம்'னு டயலாக். உடனே அந்தாளு போய் அங்க வச்சிருந்த போர்ட்ல் ஐஸ்கீரிம்க்கு நேரா '50 கி'ன்னு கிறுக்கிட்டு வந்துட்டான்.

ஐஸ்க்ரீம் கொடுக்காத கோவத்தை அங்க பதிவு செஞ்சே ஆகனும். என்ன பண்ணலாம்னு யோசிச்சா எதிர்ல சூப்பு கப்பு வாயைப் பொளந்துட்டு இருக்கு. இன்னைக்கு இவனுங்களை விடறதில்லன்னு ஆளுக்கு ஒரு கப்பை எடுத்துகிட்டு மறுபடியும் ஒரு கப் சூப்பை அடிச்சா மத்தவங்களெல்லாம் பக்கத்துல வரவே பயந்துபோய் எங்களைப் பார்க்கறாங்க. அந்த பயம் இருக்கட்டும்னு அந்த சூப்போட பஃபேயை முடிச்சுட்டு ஓட்டல்காரங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி அவங்க அடிக்க வரதுக்கும் முன்னாடி எஸ்கேப் ஆனோம்.

இப்படி ஒவ்வொரு புதுவருஷத்துக்கும் பண்டிகை நாட்களுக்கும் அசைபோட ஏதாவது ஒரு விஷயம் இருந்துட்டுதான் இருக்கு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! ;)



16 பின்னூட்டங்கள்:

சொன்னது...

அசத்திட்டீங்க கப்பி....

நாங்களும் இதை மாதிரி கல்லூரி காலத்துல, ஹோட்டலுக்குப் போய் அவிங்க ஏன் டா ப்ஃபே வச்சோம்னு யோசிக்கிற அளவுக்கு சாப்டிருக்கோம்...

சொன்னது...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த வருஷம் சகலகலாவல்லவன் பாட்டை பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு இல்லாம போயிடுச்சேனு வருத்தமா இருக்கு

சொன்னது...

கலக்கல் கப்பி!!!

இந்த பஃபேல நான் சாப்பிட்டத பார்த்து எங்க பசங்களே ஃபீல் பண்ணாங்க... இன்னும் அதை சொல்லி ஓட்டுவானுங்க :-)

எல்லாத்தையும் ரீல் சுத்த வெச்சிட்ட!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள் கப்பி...

சீக்கிரமா சென்னை திரும்பி இந்த வருடத்தில் மேலும் பல பதிவுகள் போட்டு எங்களை மகிழ்ச்சியிலாழ்த்துவாயாக :-)

சொன்னது...

கப்பி,

லைப்ல எவ்வளவோ விஷயங்கள் திரும்ப நினைச்சுப் பார்க்கறப்ப ரொம்ப சுவாரஸ்யம் நிறைஞ்சதா இருக்கும்.

அதுல நீ எழுதியிருக்க இந்த விஷயம் ரொம்ப அருமைப்பா..

கொசுவத்தி சுருளை எங்களையும் சுத்த வச்சுட்ட.... :-))))

சொன்னது...

கல்லூரி நினைவுகளை அசை போடுவதென்றாலே சுகம் தான். அதுவும் நண்பர்களோடு சேர்ந்து அடித்த கூத்துகளை பின்னொரு நாளில் நினைத்து பார்க்கும் போது 'அந்த நாளும் வந்திடாதோ' எனத் தோன்றும். நல்லா எழுதியிருக்கேப்பா.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கப்பி.

சொன்னது...

கப்பி கலக்கி இருக்கே மா.. என்ன நாங்க இங்க வந்த பிறகும் buffetல இன்னும் கலக்கிட்டு இருக்கோம் :)).. கல்லூரி வாழ்க்கை இன்னும் எங்களுக்கு தொடர்ந்து கிட்டு இருக்கு.

புத்தாண்டு வாழ்த்துக்கள் கப்பி.

சொன்னது...

வாங்க ஜி!

//நாங்களும் இதை மாதிரி கல்லூரி காலத்துல, ஹோட்டலுக்குப் போய் அவிங்க ஏன் டா ப்ஃபே வச்சோம்னு யோசிக்கிற அளவுக்கு சாப்டிருக்கோம்... //

எல்லாம் ஒரே இனம் தானே :))

சொன்னது...

நன்றி நிர்மல். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

//சகலகலாவல்லவன் பாட்டை பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு இல்லாம போயிடுச்சேனு //

ஐயோ அதெல்லாம் பார்க்காம விட்டா ஏதாவது குத்தமாயிடப் போகுது..

அதனால இங்க போய் பார்த்துப்பேன் :)))

சொன்னது...

//நான் சாப்பிட்டத பார்த்து எங்க பசங்களே ஃபீல் பண்ணாங்க... //

இதுக்கெல்லாம் நாம ஃபீல் பண்ணா முடியுமா? ;))

//சீக்கிரமா சென்னை திரும்பி //

இன்னும் நாலஞ்சு வாரம் தான் ;)

புத்தாண்டு வாழ்த்துக்கள் வெட்டி!

சொன்னது...

//லைப்ல எவ்வளவோ விஷயங்கள் திரும்ப நினைச்சுப் பார்க்கறப்ப ரொம்ப சுவாரஸ்யம் நிறைஞ்சதா இருக்கும்.
//

அதே!

வாழ்த்துக்களுக்கு நன்றி ராம்! :)

சொன்னது...

வாழ்த்துக்களுக்கும் கொசுவத்தில எரியற நெருப்புல எண்ணெயை ஊத்தினதுக்கும் நன்றி கைப்ஸ்! :)

//
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கப்பி.
//

நன்றி தல! வாழ்த்துக்கள்!

சொன்னது...

//என்ன நாங்க இங்க வந்த பிறகும் buffetல இன்னும் கலக்கிட்டு இருக்கோம் :)).. கல்லூரி வாழ்க்கை இன்னும் எங்களுக்கு தொடர்ந்து கிட்டு இருக்கு.

//

பின்ன பரம்பரை பரம்பரையா நடந்துட்டு வர சம்பிரதாயத்தை விட்டுட முடியுமா? :))


//
புத்தாண்டு வாழ்த்துக்கள் கப்பி.
//

நன்றி சந்தோஷ்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சொன்னது...

//இப்படி ஒவ்வொரு புதுவருஷத்துக்கும் பண்டிகை நாட்களுக்கும் அசைபோட ஏதாவது ஒரு விஷயம் இருந்துட்டுதான் இருக்கு.
//

சத்தியமான வார்த்தைகள். என்றும் நினைத்து மகிழ வைக்கும் தருமணங்கள்.... :-)

சொன்னது...

வாசனை கொசுவர்த்தி! :))

சொன்னது...

நன்றி புலி & தங்கத் தம்பி! :)

சொன்னது...

superb... thanimaiyila roomla ukkanthuttu unga blog padichuttu sirichittu iruntha pakkathu room mate vithyasama pathuttu poraanga... excellent way of writing.. ipdi ellam saapta naadu thaangathunga.. pathu...