Gandhi - My Father

"நான் மோகன்தாஸ் காந்தியின் மகன் இல்லை. மோகன்தாஸ் காந்திதான் என் அப்பா" - குடிபோதையில் தகராறு செய்வதால் தன்னைக் கைது செய்ய வரும் போலீஸிடம் ஹரிலால் காந்தி சொல்லும் இந்த வசனம் தான் காந்தி-மை ஃபாதர் திரைப்படம். மோகன்தாஸ் காந்திக்கும் அவரின் மூத்த மகனான ஹரிலாலுக்குமான உறவைச் சொல்லும் திரைப்படம்.

தந்தையைப் போலவே பாரிஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவோடிருக்கும் ஹரிலாலை தன் கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்க தன் முதல் தொண்டனாக அடையாளம் காண்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுகிறார் ஹரிலால். தந்தையின் பேச்சை மறுத்துப் பேசாத தனயனாக ஆங்கில அரசுக்கு எதிராக சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். ஆனாலும் பாரிஸ்டர் ஆக வேண்டுமென்ற தன் கனவை தன் தாய் கஸ்தூரிபா மூலமாகவும் தானாகவும் காந்தியிடம் தெரிவிக்கிறார். ஆனாலும் ஹரிலால் பாரிஸ்டர் ஆவதற்கான கல்வித்தகுதி இல்லாதவர் எனக் கருதும் காந்தி அவரைத் தன்னுடனேயே அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். தன் நண்பர் மூலம் பாரிஸ்டர் படிக்கக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப்பையும் மற்றொரு இளைஞருக்கு கொடுத்துவிடுகிறார். இதனால் ஹரிலாலுக்கும் காந்திக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது.
தன் மனைவியுடன் இந்தியா திரும்பும் ஹரிலால் துணி வியாபாரம் செய்கிறான். இங்கு வந்து படித்தும் அவனால் பரிட்சையில் தேற முடியவில்லை. ஏழ்மையும் தோல்வியும் அவனை மதுவிற்கு அடிமையாக்குகிறது. காந்தி அந்நிய துணிகளை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது இங்கிலாந்திலிருந்து துணிகளை வரவழைத்து அவற்றை விற்கவும் முடியாமல் நஷ்டப்படுகிறான் ஹரிலால்.

ஹரிலாலின் மனைவி அவனைப் பிரிந்து காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறாள். அங்கு இறந்துவிடுகிறாள். கஸ்தூரிபா ஹரிலாலை சமாதானப்படுத்துகிறார். அவன் மீண்டும் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறான். சிறிது நாட்களில் மீண்டும் பெற்றோரை விட்டு விலகுகிறான். இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான். கஸ்தூரிபாவும் காந்தியும் அவனை சந்தித்துப் பேசுகிறார்கள். மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான். வியாபாரத்தையெல்லாம் விட்டுவிட்டு நாடோடியாகிறான். குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் சுற்றித் திரிகிறான். இறுதியில் காந்தி இறந்து ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் அநாதையாக இறக்கிறான் ஹரிலால்.

மோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மகனுக்குமான உறவைச் சொல்லும் இந்த் படத்தில் காந்தி என்னும் ஆளுமையைத் தாண்டி அவரை ஒரு சாதாரண தந்தையாகக் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தன் கொள்கைகளிலும் முடிவுகளிலும் உறுதியாக இருக்கும் காந்தி ஹரிலாலின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. தன் மகனை தன் முதல் தொண்டனாகக் கண்டு பெருமிதம் கொள்ளும் காந்தி அவனுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் கொள்ளவில்லை.

அதே நேரத்தில் ஹரிதாஸ் ஒரு குழப்பவாதியாகவே இருக்கிறார். தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவே பெற்றோரிடமிருந்து பிரிந்துவந்து துணி வியாபாரம் செய்து நஷ்டப்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். மனைவியுடன் சண்டையிடுகிறார். பொது இடங்களில் காந்தியை அவதூறாகப் பேசுகிறார். மீண்டும் பெற்றோருடன் சேர்கிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து விலகுகிறார். இவ்வாறாக ஹரிலால் ஒரு குழப்பவாதியாகவே தெரிகிறார்.

இருவருக்குமிடையே கஸ்தூரிபா. தன் மகனுக்காக ஆரம்பத்திலிருந்தே காந்தியுடன் சண்டைபோடும் கஸ்தூரிபா இறுதியில் அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதை எண்ணிக் கலங்குகிறார். தன் மகன்கள் அவர்களின் விருப்பப்படியான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென காந்தியுடன் விவாதிக்கிறார் கஸ்தூரிபா. ஆனாலும் கணவனின் சொல்லையும் மீற முடியாமல் மகனின் நிலையைக் கண்டு தவிக்கிறார். இறுதியில் தந்தைக்கும் மகனுக்குமான பிணக்கைத் தீர்க்கமுடியாமல் வருந்துகிறார்.

ஹரிலாலின் மனைவி குலாப் கணவனின் பேச்சைத் தட்டாத சராசரி மனைவியாக இருக்கிறார். ஏழ்மையிலும் குடும்பத்தை சரியாக நிர்வகிக்கிறார். ஹரிலால் குடித்துவிட்டு சண்டைபோடும் வேளைகளில் அடங்கிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிலாலைப் பிரிந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு இறந்துவிடுகிறார்.தேர்ந்த நடிப்பு படத்தின் பெரும்பலம். குலாப்'பாக பூமிகா நிறைவாக நடித்திருக்கிறார். பாந்தமான முகமும் சோகம் இழையோடும் கண்களும் அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகிறது.மோகன்தாஸ் காந்தியாக தர்ஷன் ஜரிவாலா திறம்பட நடித்திருக்கிறார். இளமைக் கால காந்தியாக சிறிது உடல்வாகாக இருப்பதுபோல் தோன்றினாலும் வயதான காந்தியாக அருமையாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற பாடி லேங்குவேஜ் பெரும்பலம். ஆனால் ஒப்பனையில் காது பெரிதாக ஓட்டப்பட்டது பல காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது

கஸ்தூரிபாயாக ஷெவாலி சா. அவரின் கண்களே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. பாசத்தில் தவிக்கும்போதும், கணவர் மேல் கோபம் கொள்ளும்போதும் ஹரிலால் குடித்துவிட்டு வரும்போது அவனை வெறுக்கும்போதும் சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷ்ய் கண்ணா ஹரிலாலாக அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஹரிலாலைக் கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, தந்தையிடம் பாரிஸ்டர் ஆகும் ஆசையை சொல்லும் காட்சி, விரக்தியின் உட்சத்தில் திருவிழா கூட்டத்தின் நடுவில் வெறி கொண்டு தன் இயலாமையை உரக்க அறிவிக்கும் காட்சி, மனைவி இறந்ததும் அழும் காட்சி, ரயிலில் தன் பெற்றோரை சந்தித்து 'காந்தி மகாத்மா ஆவதற்கு கஸ்தூரிபா தான் காரணம். கஸ்தூரிபா வாழ்க!" என கோஷமிடும் காட்சி என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடக்கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்க் கொண்டுவந்த இயக்குனர் பெரோஸ்கானைப் பாராட்ட வேண்டும். தேர்ந்த காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் வசனங்கள் குறிப்பிடும்படியில்லை. ஒரு சாதாரண படத்திற்க்கான வசனங்கள் போலவே இருந்தது ஏமாற்றம். அனில் கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். தலைவர்களைப் புனிதபிம்பமாக்கி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கும் சமுதாயத்தில் தந்தையாக வெற்றியடையாதவராக, குடும்பத்தை திருபதிப்படுத்தாதவராக மோகன்தாஸ் காந்தியை திரையில் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

படம் நிறைய யோசிக்க வைக்கும். தேசத்தைப் பற்றியும் ஹரிலால் பற்றியும் காந்தியைப் பற்றியும் உஙகள் தந்தையைப் பற்றியும்.26 பின்னூட்டங்கள்:

சொன்னது...

:)good one.i feel like watching it soon

சொன்னது...

மத்த பதிவுக்கெல்லாம் விடுமுறை விட்ட மோகந்தாஸ் தானே நீங்க?....

சொன்னது...

ஓஹோ!

இந்த காந்தின்ற ஆளு அவ்வளவு முண்டமானவரா?

இன்னாமேன் இது?

சொந்த மகனுடைய பொண்டாட்டிய கூட தன் ஆசிரமத்துக்கு கூட்டிகினாரே!

இது மேரி நெச வாழ்க்கையில இந்தியாவுல பொறந்து இருந்தார்னா...

டங்கு வார் கிழிஞ்சிட்டு இருக்கும்ல!

இந்தியாவுல காந்தி பூந்தின்னு சொல்றாங்களே ஒரு ஒல்லி குச்சி கெழவரு. அவருக்கும் இவருக்கும் இன்னா மேன் ஒறவு?

ஹரிதாசு இன்னா மார்க சரக்கு குடிச்சாரு? பட்டையா? பிராந்தியா?

பட்டை ஒடம்புக்கு ரொம்ப கெடுதி சார்!

சொன்னது...

நல்ல விமர்சனம் கப்பி..... :)

சொன்னது...

அருமையான விமர்சனம். வாழ்க!

சொன்னது...

மற்றுமொறு அட்டகாசமான விமர்சனம் உங்களிடமிருந்து!!
நல்லா எழுதறீங்க கப்பி!
வாழ்த்துக்கள்!!

:-)

சொன்னது...

நன்றி துர்கா

போட்டோ ரொம்ப பயமுறுத்துதே :))

அனானி

:)))வருகைக்கு நன்றி மாசிலா!

சொன்னது...

இராயல்

நன்றிங்கண்ணே :))

ஐகாரஸ் பிரகாஷ்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)


நன்றி VCR ச்சே CVR :)

சொன்னது...

//CVR said...

நல்லா எழுதறீங்க கப்பி!

:-) //

அது தான் உலகத்துக்கே தெரியுமே :-)

சொன்னது...

ஹரிலால்- சுதந்திர இந்தியாவின் அரசியல்/வாதி எனலாமா?

சொன்னது...

விமர்சனம் அருமை கப்பி :)

சொன்னது...

வெட்டி

ஒய் திஸ் கொலவெறி? :))

அனானி
//
ஹரிலால்- சுதந்திர இந்தியாவின் அரசியல்/வாதி எனலாமா?//

சுதந்திர இந்தியாவின் அரசியல்வாதிகள் ஒரு குறிக்கோளோட இலக்கோட இருக்காங்க..ஆனா ஹரிலால் என்னைப் பொறுத்தவரை ஒரு இலக்கில்லாத குழப்பவாதி :)

கோபிநாத்

நன்றிண்ணே :)

சொன்னது...

தந்தையின் சித்தாந்த பரிச்சார்த்த எலியாக மாற்றப்பட்டு தான் என்பதை மீட்க துடிக்கையில் வெளியிலிருந்து பார்க்கையில் குழப்பமாகதான் இருக்கும்.

எனக்கென்னவோ குழம்பி போனது தந்தைதான் மகன்னல்ல என படுகின்றது

சொன்னது...

ஒரு தேசத்தின் தந்தை...

ஆனால் ஒரு தந்தையாக கடமை தவறியவர்...

படம் அதை படம் பிடித்துக்காட்டியிருக்கும் என நம்புகிறேன்.

நல்ல விமர்சனம். நன்றி.

சொன்னது...

நிர்மல்

//எனக்கென்னவோ குழம்பி போனது தந்தைதான் மகன்னல்ல என படுகின்றது//

அதே! ஹரிலால் குழப்பவாதியாவதற்கு அவர் தந்தை மோகன்தாஸ் காந்தி தான் காரணம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை


அரை பிளேடு அண்ணாச்சி

//ஒரு தேசத்தின் தந்தை...

ஆனால் ஒரு தந்தையாக கடமை தவறியவர்...

//படம் அதை படம் பிடித்துக்காட்டியிருக்கும் என நம்புகிறேன்.//

ஆமா தல..அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி

சொன்னது...

நல்ல விமர்சனம் கப்பி... மஹாத்மாவும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சாதாரண தந்தையாதான் இருந்துருக்கார்..

சொன்னது...

காந்திய பத்தி ஏற்கனவே ஒரு படம் வந்துடுச்சே, இது என்னவா இருக்கும்னு யோசிச்சேன்...இப்போ புரியுது. நல்ல கதை தான்...உங்க விமர்சனத்த படிச்சதுக்கப்புறம் படத்தையே பார்த்துட்ட மாதிரி இருக்குது! நம்ம அரசியல்வாதிங்க இத பார்த்து இன்னும் கொடி பிடிக்காம இருக்கறது ஆச்சர்யமா இருக்கு!

சொன்னது...

தஞசாவூரான்
நன்றி!!


நன்றி சத்யா!

சொன்னது...

இந்த படம் எப்போ வந்துச்சு? யாரும் சொல்லவே இல்லையே??

சொன்னது...

போட்டோ பார்த்ததுமே, அடடே அக்ஷே கண்ணா.. கண்டிப்பா இந்த மாதிரி கதாபாத்திரத்தை நல்லா செஞிருப்பாரேன்னு நெனச்சேன். :-)

சொன்னது...

அட பூமிகா வேற இருக்கங்களா? கண்டிப்பா இவர் சரியான தேர்வுதான்..

சொன்னது...

விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு அறிவுஜீவி சார்.

ஆனால், படம் கொஞ்சம் ஹிஸ்டோரிக்கலா இருக்கும்போல இருக்கே? படம் ஸ்லோவா ஓடுமே! நான் தூங்கிட்டேனா? என்ன பண்றது? நீங்க சொல்லவே இல்லையே?

சொன்னது...

//ஆனால், படம் கொஞ்சம் ஹிஸ்டோரிக்கலா இருக்கும்போல இருக்கே? படம் ஸ்லோவா ஓடுமே! நான் தூங்கிட்டேனா? என்ன பண்றது? நீங்க சொல்லவே இல்லையே?//

கோப்பி குடிச்சுகிட்டே பாரு லா
(என்னை விட வயது குறைவாக இருக்கும் என்ற உரிமையில்)

சரி, அதான் பூமிகா இருக்காங்கல்ல.. :)

சொன்னது...

மை ஃபிரண்ட்

படம் வந்து ஒரு ரெண்டு வாரம் தான் ஆகுது..அங்க பார்க்க இன்னும் நெட்ல வந்திருக்காதுன்னு நினைக்கறேன் :))

அக்ஷய் கண்ணா, பூமிகால்லாம் நல்லா நடிச்சிருக்காங்க...தைரியமா பாருங்க..

//நான் தூங்கிட்டேனா? என்ன பண்றது? நீங்க சொல்லவே இல்லையே?//

வேற என்ன...படம் முடிஞ்சதும் தியேட்டர்காரங்க எழுப்பி விரட்டிவிடுவாங்க..எழுந்து வீட்டுக்கு போங்க :))))

சொன்னது...

//கோப்பி குடிச்சுகிட்டே பாரு லா
//

இதுவும் நல்ல் யோசனை தான்..ஆனா நம்ம மக்கள் ஏதாவது கொறிச்சிட்டே சவுண்ட் விட்டுட்டே தான் படம் பார்க்கறாங்க...ரொம்ப டிஸ்டர்பன்ஸ்பா :)))

//
சரி, அதான் பூமிகா இருக்காங்கல்ல.. :)//

ஆனா பாதில செத்து போயிடறாங்களே :(

சொன்னது...

மிக நல்ல பதிவு.
மிக நல்ல படம்.