ராஜேந்திரன் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வயது 31. பணம் கையாடல் செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்கியபோது அவனுக்கு வயது 37. வீட்டிற்கு மூத்தமகனான ராஜேந்திரன் விவசாயம் பார்த்தபடியே தான் படித்தான். பத்தாம் வகுப்பில் ஃபெயிலான போதும் அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவன் தாய் மாமன் நடேசனின் அறிவுரையால் செய்யாறில் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினான். பின்னர் பேருக்கு ப்ளஸ் டூ முடித்துவிட்டு நடேசனின் மகளை திருமணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவனை கூட்டுறவு வங்கித் தேர்வு எழுத வைத்ததும் அவன் மாமா தான்.
சொந்தமாக நிலமிருந்ததால் அரசாங்க உத்தியோகத்திற்குப் போக வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ராஜேந்திரனுக்கு இல்லை. இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு தம்பிகள் சென்னையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் ஆறேழு ஏக்கர் வரும். அதை வைத்து விவசாயம் பார்த்தபடி இருந்துவிடலாம் என்றுதான் இருந்தான். நடேசன் அவனை வலுக்கட்டாயமாக பரிட்சை எழுதவைத்து கட்சியில் ஆளைப் பிடித்து செய்யாறிலேயே கூட்டுறவு வங்கியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
அவனுடன் கிளார்க்காக வேலை பார்க்கும் செல்வமும் மேற்பார்வையாளர் குமரேசனும் ராஜேந்திரனுக்கு நண்பர்களாயினர். அக்கம்பக்கம் கிராமத்து மக்கள் விவசாயக்கடன் வாங்குவதற்காக வரும்போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தான். அதனால் வங்கிக்கு வரும் விவசாயிகளிடையே நல்ல பெயர். ஆரம்பத்தில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தவன் சிறுசிறு பணத்தட்டுப்பாடு வரும்போது கை நீட்ட ஆரம்பித்தான். விதிகளை மீறி கடன் கொடுப்பது, பணம் வாங்கிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வது என இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். மூவரும் சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். எப்போதாவது வரும் ஆடிட்டருக்கும் கணிசமான தொகை செல்லும். இதைப்போலவே எல்லா வங்கிகளுமே நடப்பதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்வும் அவனை விட்டுப்போனது.
ஊரிலிருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தான். தன் பெயரிலும் மனைவி பெயரிலும் நிலம் வாங்கிப்போட்டான். தன் தம்பிக்கு தடபுடலாகத் திருமணம் செய்துவைத்தான். சொந்தத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தான். கோயிலுக்கு திருவிழாவின் போதெல்லாம் கல்வெட்டில் பெயர் வருமளவு பணம் கொடுத்தான். இப்படி ஊருக்குள் நல்ல பெயர் எடுத்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலை ஆனான்.
ஓரிரு வருடங்களுக்கு முன் கடன் தொகை கட்டமுடியாமல் போன ஒருவனது வீட்டை ஜப்தி செய்தார்கள். அவன் கோர்ட்டில் கேஸ் போட்டான். அதனால் பழைய கணக்குகளை நோண்டத் தொடங்கினார்கள். இதை முன்னமே அறிந்துகொண்ட செல்வம் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான். குமரேசனும் ராஜேந்திரனும் சிக்கிக் கொண்டார்கள். தன்னை நேர்மையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தால் வங்கியின் மேலாளர் இவர்கள் மட்டுமே தவறு செய்ததாக தலைமை அலுவலகத்துக்கு எழுதிக் கொடுத்தார். இருவரின் வேலையும் பறிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
இருவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரேசன் தன் நண்பர்கள் மூலம் பணம் செலவு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிட்டான். இப்படியொரு வழியிருப்பது தெரியாமல் ராஜேந்திரன் தனியாக சிக்கினான். தனியாக வழக்கறிஞரைப் பிடித்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.
துறையில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக தன் கையிலிருந்த பணத்தையெல்ல்லாம் கொடுத்தான். ஆனால் யாருக்கு கொடுத்தால் வேலை ஆகுமென்ற நெளிவு சுளிவு தெரியாததால் பணம் செலவானதுதான் மிச்சம். அவன் மேலான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
ராஜேந்திரனின் மனைவி சுந்தரி அவனுக்கு வேலை போனதிலிருந்து இளைத்துப் போய்விட்டாள். அவளது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துத்தான் வேலைக்காக செலவு செய்தான். அவளுக்கு பணம் செலவாவதை விட எப்படியாவது மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டால் போதும் என்றே எண்ணினாள். வீட்டின் பின்கட்டில் ஒட்டடை படிந்துகிடந்த தையல் மிஷினை தூசு தட்டினாள்.
ராஜேந்திரனுக்கு ஒரு மகன். ஒரு மகள். மகன் ஆறாம் வகுப்பும் மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்து ரேங்குக்குள் வரும் மகன் இப்போது சில பாடங்களில் பெயிலாவது சுந்தரிக்குக் கவலையைக் கூட்டியது.
நடேசன் ராஜேந்திரனிடம் வீணாக இப்படி செலவு செய்யாமல் ஊரில் விவசாயத்தை ஒழுங்காக கவனிக்கும்படி அறிவுரை கூறினார். "வேலையில்லாம ஊருக்கு வந்தா ஒருத்தனும் மதிக்க மாட்டான்" என்று சொல்லிவிட்டான் ராஜேந்திரன். அவர் தான் அடிக்கடி சுந்தரிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
தங்கள் வீட்டின் பின்புறம் மந்தரிக்கப்பட்ட எலுமிச்சை பழம், மிளகாய் இருந்ததாயும் அதனால் தான் தன் குடுமபத்திற்குக் கேடு வருவதாயும் ராஜேந்திரன் பணம் கையாடல் செய்திருக்கமாட்டான் என்றும் அவனது தாய் சொல்லிவருகிறாள். மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து "யார் தான் செய்யல? அவனுக்கு மட்டும் ஏனிப்படி" என்று புலம்புவது அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
ராஜேந்திரனின் அக்கா கணவர்களுக்கு உள்ளூர சந்தோஷம் தான். வேலையிலிருந்தபோது அவன் தங்களை மதிக்காததாயும் இப்போதும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் தண்ணியடிக்கும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
ராஜேந்திரனிடம் கடன் வாங்கிய சிலர் தானாக வந்து திருப்பிக்கொடுத்தார்கள். சிலர் அவன் சென்று கேட்டும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனும் இப்போது கடன் வாங்கப் பழகிவிட்டான். ஆரம்பத்தில் தன் மதிப்பு போய்விடும் என்று எதையாவது விற்று செலவு செய்துகொண்டிருந்தவன் இப்போது கடன் வாங்கத் தயங்குவதில்லை. நிலத்தை மட்டும் விற்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான். காலையிலும் மாலையிலும் சைக்கிளில் ஊருக்கு சென்று விவசாயம் செய்துகொண்டிருக்கிறான்.
சென்ற வாரம் வட்டச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பேசினான். எழுபத்தைந்தாயிரம் இருந்தால் வேலை வாங்கிடலாம் என்று அவர் சொன்னதும் கையோடு கொண்டுபோயிருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டு இந்த மாதக் கடைசிக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் கணக்குப்படி, வேலையை திரும்பப் பெறுவதற்காக நேற்று வரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் செலவு செய்திருக்கிறான்.
இன்னும் ஆறு மாதம் கழித்து இன்னொருவருக்கு லஞ்சம் கொடுக்க செய்யாறில் தான் கட்டிய வீட்டை விற்க ஏற்பாடு செய்வான். அப்போது சுந்தரியின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்காமல் அடமானம் வைத்து லஞ்சம் கொடுப்பான். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு செலவு செய்துவிட்டு வேலை திரும்பக் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததும் ஊரில் நிலத்தை விற்று கடனையெல்லாம் அடைத்துவிட்டு செய்யாறில் உயர்நிலை பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை வைப்பான். அவன் கூட்டுறவு வங்கியில் வேலை செய்ததையோ அவர்களுக்கு சொந்தமாக நிலமிருந்ததையோ அவன் மகனும் மகளும் மறந்துவிடுவார்கள்.
ராஜேந்திரன் கதை
கப்பி | Kappi
வகை சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
16 பின்னூட்டங்கள்:
ஹ்ம்ம்ம்ம்ம், என்னத்த சொல்ல காலம் நேரம். முள்ளை எடுக்க முள்ளா?
உண்மைக்கதையா?!!!
நல்லா இருக்குப்பா..... :)
வாழையடி வாழையா என்னைக்கு மாறும் இது ??
அக்கு வேறயா ஆணி வேறயா (சரியா?) பிரிச்சி எழுதிட்டீங்க... உண்மைக் கதையாதான் இருக்கும்.
சூப்பரு!!!
எப்பவும் போல கலக்கிட்ட கப்பி!!
நடத்து!! :-D
கதை சூப்பர்..கதையோட கடைசி வரிதான் அட்டகாசம்...
கதை அருமை...
இந்த வெரைட்டி தான் கப்பி :-)
இது கதையல்ல....நிஜம் --- அப்படித்தானே கப்பி?
வாழ்த்துக்கள் .. தொடருங்கள்!
நன்றி விவ்ஸ்
வினையூக்கி,ppattian, தஞ்சாவூரான்
இது உண்மைக் கதை இல்லைங்க...சில உண்மை சம்பவங்களை கோர்த்து எழுதிய கற்பனைக் கதை தான்...
வாழ்த்துக்களுக்கு நன்றி :)
நன்றி சின்ன தல :D
ஜொள்ஸ்ண்ணே
//வாழையடி வாழையா என்னைக்கு மாறும் இது ??//
ம்ம்ம்...
நன்றிண்ணே! :)
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவிஆர் :)
//கதை சூப்பர்..கதையோட கடைசி வரிதான் அட்டகாசம்...//
முத்துலட்சுமி
ரொம்ப நன்றிங்கக்கா! :)
வெட்டி
//
இந்த வெரைட்டி தான் கப்பி :-) //
காமெடி கீமெடி பண்ணலையே :))
மிகக் நன்றி் வெட்டி
கதை நல்லா இருக்கு கப்பி ;-)
good one, the story style is similar to 'sevvalai' stories, writteny Anna, and all most all of us had that book as supplimentary book in tamil, i bought it recently also to feel the stories again
நன்றி கோபிண்ணே :)
நன்றி செந்தில
செவ்வாழை எனக்கும் நினைவிருக்கிறது..அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது அந்த புத்தகத்தை தேடி எடுக்க வேண்டும் ;)
gud one :))
நன்றி ஜி! :)
உங்க கருத்து? Post a Comment