டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)

"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன
"


ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு. இன்னொரு பாட்டுக்கு ராஜீவ் வருவார். அந்த பாடல் நடுவில் வரும் வரிகள்

"இவ பொண்ணா பொறந்ததாலே
பல பொறுப்பு வந்தது மேலே
"

ஆனா இந்த பாட்டோட ஆரம்பம், மெட்டு சுத்தமா மறந்துபோச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

இன்று பேச்சுவாக்கில் இந்த பாடல்கள் பற்றிய நினைவுகள் வந்ததும் தூர்தர்ஷன் பற்றி கொசுவத்தி சுத்தல் தான்... மக்கள்ஸ் யாராவது ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருப்பீங்க..இருந்தாலும் நானும் என் பங்குக்கு சுத்தறேன் :))

தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த, ஆண்டெனா குத்துமதிப்பாக ஏதோவொரு திசையில இருக்கும்போது "அப்படியே விடு. நல்லா தெரியுது"ன்னு உள்ளருந்து குரல் வர, "அட தெரியுதாம்ல"ன்னு அவசரமா ஓடும்போது ஆண்டெனாவை ஆட்டி விட்டு படம் மறுபடியும் தெரியாமப் போக, இப்ப மறுபடியும் ஆண்டெனாவை ஒரு சுத்து சுத்தி படம் குத்துமதிப்பா தெரியற மாதிரி வச்சிட்டு, கம்பியை இறுக்கி கட்டிட்டு ஓடிவந்து எந்த நிகழ்ச்சி போட்டாலும் 'பெப்பரப்பே'ன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்த காலம் கண் முன்னாடி ப்ளாஷ் அடிச்சுட்டு போகுது. சொல்லி வைத்தாற்போல் சுவாரசியமான நிகழ்ச்சி ஏதாவது ஒளிபரப்பாகும்போது காற்றில் ஆண்டெனா திரும்பியிருக்கும். ஆண்டெனா எந்த பக்கம் பார்க்குதோ அந்த பக்கம் தான் மெட்ராஸ் இருக்குன்னு ஒவ்வொரு தடவையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.ஞாயித்துக்கிழமை ஏழே காலுக்கு ரங்கோலில ஆரம்பிக்கும். பழைய, புதிய ஹிந்தி பாடல்கள். ராஜ் கபூர், கிஷோர் குமார்ன்னு பழசுல ஆரம்பிச்சு முடிக்கும்போது புது பாடல்கள் ஒளிபரப்புவாங்க. ஒன்பது மணிக்கு ராமாயணம், மகாபாரதம். நடுவில் ராமானந்த சாகர், காலச் சக்கரம் எல்லாம் பேசுவாங்க. சந்திரகாந்தா மறக்க முடியுமா? டைட்டில் பாட்டு சூப்பரா இருக்கும். அப்புறம் க்ரூர் சிங்..யக்கூஊஉ. :))


பத்து மணிக்கு மிலிந்த் சோமன் நடிச்ச ஒரு விஞ்ஞானத் தொடர் ஒளிபரப்பாகும். பெயர் மறந்துபோச்சு.அப்புறம் ஜங்கிள் புக். டைட்டில் பாட்டு அப்படியே ஞாபகம் இருக்கு.
ஒரு மணிக்கு காதுகேளாதோருக்கான செய்திகள். அதைக் கத்துக்கிற ஆர்வம் கொஞ்ச நாள் இருந்தது. இப்ப குவிஜு டைம். நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி காட்டினா அதுக்கு என்ன அர்த்தம்?


பிற்பகல் மாநில மொழி திரைப்படங்கள். ஆங்கில அகர வரிசையில். தமிழ் படம் எப்படா வரும்னு எல்லா மொழி படங்களையும் ஒன்னு விடாம சப்-டைட்டிலோடு சப்பு கொட்டிட்டு பார்த்திருப்போம். தமிழ் படம் ஒளிபரப்பற அன்னைக்கு தொடர்ச்சியா ரெண்டு படம். கொண்டாட்டம் தான். மாலை தமிழ் படம் எதுனா அரதப்பழசான படமாயிருக்கும். மணாளனே மங்கையின் பாக்கியத்தை பத்தாவது முறையா போட்டாலும் விடாமப் பார்ப்போம்ல :))

வாரநாட்களில் மாலையில் 5 மணிக்கு ஆரம்பித்து கார்ட்டூன் போடுவாங்க. அப்புறம் வரிசையா மனைமாட்சி, நல்வாழ்வு, பல்சுவை நிகழ்ச்சி, சிறுவர் பூங்கா, வயலும் வாழ்வும். 6.55க்கு முன்னோட்டம், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு. காவல் துறை கட்டுப்பாட்டு அறை, எழும்பூர், சென்னை-600008.

7 மணிக்கும் 8.30க்கும் செய்திகள். ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபாலன், நிரஞ்சன். கடைசியா கண்ணாத்தாள் ஞாபகம் இருக்கு.

7.05க்கு சில நாடகங்கள் ஞாபகம் இருக்கு. விழுதுகள், எஸ்.வி. சேகரோட வண்ணக் கோலங்கள், விவேக்கின் மேல் மாடி காலி, கே.பாலசந்தரோட நாடகம் ஏதோ. அப்புறம் படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல வருவாரே, ரவி ராகவேந்தரா, அவரோட நாடகம் ஒன்னு. வாத்தியார்-னு பட்டபெயரோட ஒரு நடிகர்-இயக்குனர் இருப்பாரே. அப்புறம் கிரேசி மோகன் ரெண்டு சீரியல் பண்ணினாருன்னு நினைக்கறேன்.

செவ்வாய்க்கிழமை 7.30க்கு டிடி செட்ல போட்ட நாடகம். அப்பவே செம மொக்கையா இருக்கும். அதுல வழுக்கைத் தலையோட ஒருத்தர் எல்லா வாரமும் வருவார். அவர் பேரும் மறந்துபோச்சு.

புதன்கிழமை சித்ரஹார். காம்பியரருக்காகவே பார்த்த நிகழ்ச்சி. இதுல முழுக்க புதுப்பாடலகள் தான். 'சாப்பிட வாங்க' நிகழ்ச்சியில வசந்த் அண்ட் கோ ஓனர் கோட்சூட்டோட வந்து சுடச்சுட ருசிச்சு சாப்பிடுவார். அப்புறம் ஒரு குக்கரோ மிக்ஸியோ பரிசு கொடுத்துட்டு போஸ் கொடுப்பார்.

வியாழக்கிழமை எதிரொலி போட்டு மொக்கை போடுவாங்க. நடராஜன், கண்ணன்னு நிலைய இயக்குனர்கள் வந்து ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் சொல்வாங்க. ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பப்படும் படமும் சொல்லிட்டு போவாங்க.

வெள்ளிக்கிழமை ஊரே எதிர்பார்க்கும் 'ஒலியும் ஒளியும்'. ஒரு வாரம்கூட பார்க்காம விட்டதுல்ல.

ஒன்பது மணிக்கு மேல டப்பிங் நாடகங்கள். சாந்தி, ஜுனூன், கானூன், சுவாபிமான், வக்த்ன்னு மெகா சீரியல்களின் தாத்தாக்கள். சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன்.

சனிக்கிழமை காலைல ஏதோ விஞ்ஞான நிகழ்ச்சியெல்லாம் போடுவாங்க. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.

இப்போது வரும் 'கனா காணும் காலங்கள்'க்கெல்லாம் சீனியர் 'ஸ்கூல் டேஸ்'. பள்ளி மாணவர்கள் வைத்து எடுக்கப்பட்ட சீரியல். செம ஜாலியா இருக்கும். மிகவும் விரும்பிப் பார்த்த தொடர்.

பண்டிகை நாட்கள்ல சிறப்பு நிகழ்ச்சிகள்னா அது தூர்தர்ஷன் தான். செவ்வாய்க்கிழமை நாடகத்துக்கு போட்ட செட்டையே இன்னும் கொஞ்சம் மாற்றி ரெடி பண்ணிடுவாங்க. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொலைபேசியில் அழைத்து பதில் சொல்லனும். வரிசையா ஒரு பத்து பேர் போனோடு உக்காந்திருப்பாங்க. அதுக்கப்புறம் குலுக்கல். அதுக்கப்புறம் வெற்றி பெற்றவர்கள் 'இயக்குனர், சென்னை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை' என்ற முகவரிக்கு ஒரு கடுதாசி போடனும். அதுக்கப்புறம் பரிசு அனுப்புவாங்க.

ஒரு வருடப்பிறப்பிற்கு சந்திரபோஸ் நடத்திய ஒரு மெல்லிசை நிகழ்ச்சி தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே மாதிரி நகைச்சுவை நாடகங்களும் அடிக்கடி மறுஒளிபரப்பு செய்யப்படும்.

ஒரு தீபாவளிக்கு சிம்ரன் பேட்டி பார்த்துட்டே கரப்பான்பூச்சி வரைஞ்சதை ஏற்கனவே சொல்லியிருக்கேன் :D

பட்டிமன்றங்களில் தமிழறிஞர்கள் அருமையா பேசுவாங்க. அவ்வை நடராசன், அறிவொளி, தா.கு. பாலசுப்ரமணியம் இப்படி பலபேர்.கம்பன் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், தமிழ் கவியரங்கங்கள் வாரவாரம் ஒளிபரப்பாகும்.

தலைவர் வர்ற போலியோ விளம்பரம் ஞாபகம் இருக்கா? எப்படா அதை ஒளிபரப்புவாங்கன்னு காத்துட்டிருந்தது ஞாபகமிருக்கும். இதுமாதிரி பாடல்கள் நிறைய ஒளிபரப்புவாங்க. 'மிலே சுர் மேரா துமாரா' யாருக்கும் மறந்திருக்காது.(இந்த வீடியோவை பிடிச்சுட்டு யூடியூப்புக்குள்ள போனா ஒரு சுரங்கமே இருக்கு;))

தடங்கலுக்கு வருந்துகிறோம். டிடி-2க்கு மாத்தறதுக்காக இதோட நிறுத்திடறேன். பின்னூட்டத்துல விட்டதை தொடருவோம் :))

டிடி மெட்ரோ:


காஞ்சிபுரத்துல டிடி மெட்ரோ தெரியும். ஆனா தாத்தா ஊருல தெரியாது. விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது நண்பர்களை டிடி-2 தெரியாதான்னு கலாய்ச்சிருக்கேன். டிடி-2ல் பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான். அதுவும் எல்லாமே டப்பிங் தொடர்களாகத் தான் இருக்கும்.

மாலையில் டக் டேல்ஸ், ஹீ-மேன், சூப்பர் மேன், டிடி'ஸ் காமெடி ஷோ,டிஸ்னியின் மற்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வெகு சில சீரியல்கள் தான் ஞாபகம் இருக்கு. ஸ்ரீமான் - ஸ்ரீமதி விடாமல் பார்த்த நகைச்சுவைத் தொடர். செம ஜாலியா இருக்கும். அதே மாதிரி படோஸன் - அடுத்த வீட்டுப் பெண் சீரியல். கலக்கலா இருக்கும்.

சூப்பர் ஹிட் போட்டி - பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சி. கொஞ்சநாள் அழகான தொகுப்பாளினி வந்தாங்க. அப்புறம் காமெடி நாடகம் போட்டு இடையில் பாடல்கள் ஒளிபரப்பினார்கள்.

Fugitive - The Most Wantedன்னு ஒரு நிகழ்ச்சி. உண்மைச் சம்பவங்கள், குற்றங்களைப் பற்றிய துப்பறியும் தொடர். கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரே வரதட்சணை வழக்குல கைதான ஞாபகம்.

சீ ஹாக்ஸ்-னு கப்பல் படையை வச்சு ஒரு சீரியல் நல்லாயிருக்கும். மாதவன் நடிச்சது. மத்த சீரியல் பெயரெல்லாம் மறந்துபோச்சு.

எங்க வீட்டுல இருந்த ஈ.சி.(EC) டி.வி கிட்டத்தட்ட 12-13 வருஷத்துக்கு இருந்தது. கேபிள் இணைப்பு கொடுத்த பின்னும் பொதிகை நிகழ்ச்சிகள் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற தனியார் சேனல்கள் வந்த பின்னாலும் பொதிகை நிகழ்ச்சிகளின் தரம் எப்போதும் மேலே தான். BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் இப்போதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. நான் போன் போட்டு பங்கேற்றிருக்கும் ஒரே நிகழ்ச்சி அது. ஆனா தப்பா தான் பதில் சொன்னேன் :))

தூர்தர்ஷன் மூஜிக் 'டொண்ட டொண்ட டொண்டடொய்ங்ங்ங்'ன்னு பேக்ரவுண்ட்ல ஓட கொசுவத்தி சுத்தியாச்சு. நீங்களும் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பற்றி் சொல்லுங்களேன். :))42 பின்னூட்டங்கள்:

சொன்னது...

\\அப்புறம் வரிசையா மனைமாட்சி, நல்வாழ்வு, பல்சுவை நிகழ்ச்சி, சிறுவர் பூங்கா,\\

அந்த சிறுவர் பூங்கா நிகழ்ச்சியின் பெயர், 'கண்மனி பூங்கா'ன்னு நினைக்கிறேன்!

ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது பதிவு படிக்கிறதுக்கு,
கொசுவர்த்தியை அழகா சுத்தியிருக்கிறீங்க கப்பி!

சிரித்து, ரசித்து படித்தேன்!!

சொன்னது...

ஹைய்யா.......நான் தன் முதல் கமென்ட்டா?

கப்பி, ஏதும் ஸ்பெஷல் ப்ரியானி பார்சல் உண்டா முதல் கமெண்டுக்கு??

சொன்னது...

//கடைசியா கண்ணாத்தாள் ஞாபகம் இருக்கு.//

எனக்கு இன்னும் கண்ணுலேயே இருக்காங்கப்பு :)))))))))))

அப்புறம் டி டி மெட்ரோவில கொஞ்ச காலம் மெட்ரோ பிரியா நான் பாத்திருக்கேனே டிவியிலன்னு அலட்டியது (ஏன்னா எங்க ஊருல ரொம்ப்ப்ப்ப் சிரமப்பட்டுத்தான் டிடி2 கொண்டுவரணும்!)

ஞாயிற்று கிழமைகளில் சூப்பர் ஹிட் - மம்மி வாங்க டாடி வாங்க! ஹம்ட்டி டம்ட்டி பம்ஜிங்க்குத்தாங்க - பாட்டெல்லாம் கொஞ்சமா ஞாபகமிருக்கு :)

சொன்னது...

ஐய்யய்யோ... ஐய்யய்யோ... இந்த எஸ்டீடி-ய (எஸ்டீடி-னா வரலாறு தான மாப்புள) படிக்கிறப்போ ஜாலியா இருக்கே... அப்படீனா எனக்கு வயசாகிருச்சா.... அவ்வ்வ்...

மிலிந் சோமன் நடித்த அந்த சீரியலின் பெயர் "கேப்டன் வ்யோம்"

ரவிராகவேந்தர் நடித்த அந்த சீரியலின் பெயர் "நிலவைத் தேடி"

சொன்னது...

ஆணா?... பொண்ணா?...ஆணா?... பொண்ணா?... - இப்படின்னு ரெண்டு பேரு கேப் விட்டு கேப் விட்டு ரெண்டு வாட்டி பாடுவாங்க...இது தான் இந்தப் பாட்டோட ஆரம்பம். ராஜீவ் வண்டி இழுக்கறவரா நடிச்சிருப்பாரு.

//தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த, ஆண்டெனா குத்துமதிப்பாக ஏதோவொரு திசையில இருக்கும்போது "அப்படியே விடு. நல்லா தெரியுது"ன்னு உள்ளருந்து குரல் வர, "அட தெரியுதாம்ல"ன்னு அவசரமா ஓடும்போது ஆண்டெனாவை ஆட்டி விட்டு படம் மறுபடியும் தெரியாமப் போக, இப்ப மறுபடியும் ஆண்டெனாவை ஒரு சுத்து சுத்தி படம் குத்துமதிப்பா தெரியற மாதிரி வச்சிட்டு//
அந்த காலத்துலேயே பொறந்துட்டியா? அப்போ நீ ஓல்ட் மாங்க் தான்!
:)

//நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி காட்டினா அதுக்கு என்ன அர்த்தம்?//
இந்தியா. கரெக்டா? அதுல செய்தி வாசிக்கிற ஷஷி பால் நியாபகம் இருக்கா. அவங்க தான் என் தம்பி கேர்ள் ஃபிரெண்டு :)

//சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன்//
ரேணுகா ஷஹானே. ஹம் ஆப்கே ஹைன் கவுன் படத்துல மாதுரி தீட்சித் பாடற பாட்டு ஒன்னு வருமே - "தீதி தேரா தேவர் திவானா"ன்னு...அந்த பாட்டுல தீதி ரேணுகா ஷஹானே தான்.

//BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் இப்போதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. நான் போன் போட்டு பங்கேற்றிருக்கும் ஒரே நிகழ்ச்சி அது. ஆனா தப்பா தான் பதில் சொன்னேன் :))//
நடத்தறவரு பேரு டாக்டர் சுமந்த் சி.ராமன். எனக்கும் ரெண்டு தடவை நம்பர் கெடைச்சி பேசிருக்கேன். ஒரு தடவை டெல்லியில இருக்கும் போது சரியான பதில் கூட சொன்னேன். பரிசு வாங்கறதுக்கு டெலிபோன் பில் ப்ரூஃப் கேட்டாங்க. அப்போ எங்கிட்ட இருந்தது ப்ரீபெய்ட் கார்ட்...அதனால பரிசு வாங்க முடியலை. அதுக்காகவே போஸ்ட் பெய்டுக்கு மாத்துனா அதுக்கப்புறம் நம்பரே கெடைக்கலை :(

//ரவிராகவேந்தர் நடித்த அந்த சீரியலின் பெயர் "நிலவைத் தேடி"//
எனக்கு நியாபகம் இருக்கற வரைக்கும் அந்த சீரியலோட பேரு "நிலா பெண்ணே". அதுல ரவி ராகவேந்தர் கதாபாத்திரம் பேரு ரேவந்த். இதே சீரியலோட கதை கன்னடத்துல திரைப்படமா வந்துருக்கு.

வருஷ ஆரம்பத்துலயே கொசுவத்தி சுத்தவச்சிட்டே...ஹ்ம்ம்ம்
:)

சொன்னது...

Hey Kappy..u forgot to say Jannoon, Kannoon serials. You took me back to old days. You see onething within our generation itself howmany changes in this world. Ofcourse We missed lot.
However amasing changes.
Wow.

Regards,
Logu

சொன்னது...

திவ்யா

அது கண்மணி பூங்காவே தாங்க :)

// ஏதும் ஸ்பெஷல் ப்ரியானி பார்சல் உண்டா முதல் கமெண்டுக்கு??
//

பக்கத்துல இருக்க முனியாண்டி விலாஸ்ல என் பேரை சொல்லி சாப்பிட்டுக்கோங்க..அப்படி அவங்க விடலைனா தல கிட்ட கேட்டு வாங்கி குச்சு மிட்டாயும் குருவி ரொட்டியும் பார்சல் அனுப்பறேன் :))

நன்றி :)


ஆயில்யன்

//எனக்கு இன்னும் கண்ணுலேயே இருக்காங்கப்பு :)))))))))))//

அதே தான் :))

//மெட்ரோ பிரியா நான் பாத்திருக்கேனே டிவியிலன்னு அலட்டியது//

அடடா இவிங்கள மறந்துட்டேனே :))

//பாட்டெல்லாம் கொஞ்சமா ஞாபகமிருக்கு :)
//

சேம் ப்ளட் :)).

நன்றி ஆயில்யன் :)


கருப்பன்

//அப்படீனா எனக்கு வயசாகிருச்சா.... அவ்வ்வ்...
//

அதுக்கு ஒன்னியும் பண்ண முடியாது நைனா :))


//மிலிந் சோமன் நடித்த அந்த சீரியலின் பெயர் "கேப்டன் வ்யோம்"

ரவிராகவேந்தர் நடித்த அந்த சீரியலின் பெயர் "நிலவைத் தேடி"//


கலக்கிப்புட்டீங்க..ஜூப்பரு..நன்றி ஹை!! :))

சொன்னது...

கைப்ஸ்

ஆணா பொண்ணா விட்டு விட்டு சொல்றது ஸ்ரீவித்யா பாட்டுல தானே? கன்பீஸ் பண்றீங்களே

//அந்த காலத்துலேயே பொறந்துட்டியா? அப்போ நீ ஓல்ட் மாங்க் தான்!
:)//

அப்ப நான் குழந்தை..இப்பவும் தான் ஹி ஹி :))


//இந்தியா. கரெக்டா? //

கலக்கிப்புட்டீங்க..சின்ன வயசுல நீங்க நெறய மெமரி ப்ளஸ் சாப்பிட்டது தான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே :))

//
அதுல செய்தி வாசிக்கிற ஷஷி பால் நியாபகம் இருக்கா. அவங்க தான் என் தம்பி கேர்ள் ஃபிரெண்டு :)
//

அட :))))


//அப்போ எங்கிட்ட இருந்தது ப்ரீபெய்ட் கார்ட்...அதனால பரிசு வாங்க முடியலை. அதுக்காகவே போஸ்ட் பெய்டுக்கு மாத்துனா அதுக்கப்புறம் நம்பரே கெடைக்கலை :(
//

என்ன கொடுமை தல இது...நாம போராட்டத்துல இறங்கறோம்...

தல, நாம ரெண்டு பேருமே இனிமேல் 'டிவி-புகழ்'ன்னு முன்னாடி போட்டுக்கலாம்ல :))


//வருஷ ஆரம்பத்துலயே கொசுவத்தி சுத்தவச்சிட்டே...ஹ்ம்ம்ம்//

வருஷம் பூரா அதை வச்சுத்தானே பொழப்பை ஓட்டிட்டு இருக்கோம் :)))

நன்றி தல :)

சொன்னது...

Logu

//Hey Kappy..u forgot to say Jannoon, Kannoon serials.
//

சொல்லியிருக்கேன் பாருங்கண்ணா :))


நீங்க சொல்றது ரொம்ப சரி. நன்றி :)

சொன்னது...

சூப்பர்மா...

அதுலயும் இந்த அண்டெனா சுத்தறது மறக்கவே முடியாது... எங்க ஏரியால எல்லாம் ஊட்டி, கொடைக்கானல் :-)

அப்பறம் என் இனிய இயந்திரானு ஒரு நாடகம். நான் அதை கடைசி வரைக்கும் பார்த்தேன். நம்ம பூனைக்கண் சிவரஞ்சனி நடிச்சிருப்பாங்க (நான் சிபி, நீ நிலானு சொல்லிட்டே ஒரு ரோபோ திரியும்.

சொன்னது...

அடுத்த வாரம் வரப்போகும் நிகழ்ச்சிகளை சொல்லும் 'முன்னோட்டம்' - அதில் சொல்லப்போகும் அடுத்த வாரப் படத்திற்க்காக பார்ப்போம். அதோடு, யு.எம்.கண்ணன் பங்கேற்கும் 'எதிரொலி' நிகழ்ச்சியை விட்டுவிட்டீர்கள்.

சொன்னது...

சூப்பர் கொசுவத்தி ராசா...;))

\\ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த\\

;-))) எல்லாம் ஒரு கூட்டமாக தான் இருந்திருக்கோம்..

ஜெயின் ராபாட்ன்னு ஒரு தொடர் வரும் புதன்கிழமையில் வரும்.. தவறமால் பார்த்தேன்..;)))

சொன்னது...

\\எங்க வீட்டுல இருந்த ஈ.சி.(EC) டி.வி \\

ஆகா..எங்க வீட்டிலும் ஈ.சி தான்ய்யா...ரெண்டு கதவு வேற இருக்கும்..;))

சொன்னது...

:) :) நிலவைத்தேடி சீரியல் அருமையாக இருக்கும்.. கடைசில மெலொடிராமடிக்கா ஹீரோயின் இறந்து போயிடுவாங்க.. மதன்பாப் நடிச்ச இருட்டிலதேடாதிங்க , ஹார்லிக்ஸ் ஸ்பான்ஸர் பண்ண 7த் சேனல் தயார் பண்ண தொடர்கள்.. மாநில மொழி திரைப்படங்கள்.. சந்திரகாந்தா, அலிப் லைலா, ஏக்சேபட்கர் ஏக், சேகர் சுமன் நடித்த ரிபோர்டர், எதிரொலி... ம்ம்ம் தூர்தர்ஷன் காலங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இருந்த சுவாரசியம் இப்போ எல்லாம் இருந்தும் இல்லை...

சொன்னது...

அப்புறம் நீலா மாலா தொடர், அக்பர் த கிரேட், கிரேட் மரதாஸ், மதியானம் போடுற சாந்தி, யுக் , சுவாபிமான்

சொன்னது...

கிரிக்கெட் நேரலை ஒளிபரப்புகளில் முதல் பந்து வீச்சையும் கடைசி பந்து வீச்சையும் கட் பண்ணிட்டு விளம்பரம் காட்டிட்டு போடும் டிபிகல் தூர்தர்ஷன் டெக்னிக்... மேட்ச் நடக்கிறப்ப match will resume in DD metro என்று ஸ்லைட் போட்டு டிடி2 தெரியாத எங்க ஊர் மக்களை எல்லாம் வெறுப்பேத்துறது இது எதையும் மறக்க முடியாது

சொன்னது...

வெட்டி

//
அதுலயும் இந்த அண்டெனா சுத்தறது மறக்கவே முடியாது... எங்க ஏரியால எல்லாம் ஊட்டி, கொடைக்கானல் :-)//

ஓ ஊட்டி கொடைக்கானலா? சில நிகழ்ச்சிகள் வராதுன்னு நினைக்கறேன் இல்லையா?


//அப்பறம் என் இனிய இயந்திரானு ஒரு நாடகம். நான் அதை கடைசி வரைக்கும் பார்த்தேன். நம்ம பூனைக்கண் சிவரஞ்சனி நடிச்சிருப்பாங்க //


ஆகா..காந்தக் கண்ணழகியை எப்படி மறக்க முடியும் :)))


//
(நான் சிபி, நீ நிலானு சொல்லிட்டே ஒரு ரோபோ திரியும்.//

நாங்களும் அப்படி சொல்லிக்கிட்டுத்தான் திரிவோம் :Dச்சின்னப்பையன்

//சொல்லப்போகும் அடுத்த வாரப் படத்திற்க்காக பார்ப்போம். //

அதே அதே :))

//
அதோடு, யு.எம்.கண்ணன் பங்கேற்கும் 'எதிரொலி' நிகழ்ச்சியை விட்டுவிட்டீர்கள்.//

சொல்லியிருக்கேனே சி.பை :))

சொன்னது...

நீயா-நானா அண்ணாத்த

//சூப்பர் கொசுவத்தி ராசா...;))//

ஹி ஹி நன்னி :))

//எல்லாம் ஒரு கூட்டமாக தான் இருந்திருக்கோம்..//

இருந்திருக்கோம் இல்ல..இருக்கோம்..நாம எப்பவுமே இப்படித்தானே பாஸ் :)))


//
ஜெயின் ராபாட்ன்னு ஒரு தொடர் வரும் புதன்கிழமையில் வரும்.. தவறமால் பார்த்தேன்..;)))//

நாக்கு தெள்ளிதே :D


//ஆகா..எங்க வீட்டிலும் ஈ.சி தான்ய்யா...ரெண்டு கதவு வேற இருக்கும்..;))//

அதே தான்..நாலுக்கு மூனு அடி அளவுல மரப்பெட்டில ரெண்டு கதவு..பாதி அளவுக்கு ஸ்கீர்ன், பக்கத்துல மேல ட்யூனர் கண்ட்ரோல், கீழே ஸ்பீக்கர்...எவ்வளவு அடிச்சாலும் தாங்கற டிவி அது :)))

சொன்னது...

வினையூக்கி

//:) :) நிலவைத்தேடி சீரியல் அருமையாக இருக்கும்.. கடைசில மெலொடிராமடிக்கா ஹீரோயின் இறந்து போயிடுவாங்க.. //

மறந்து போச்சுதே :))

//
மதன்பாப் நடிச்ச இருட்டிலதேடாதிங்க //

இது பார்த்த ஞாபகம் கீது

// ஹார்லிக்ஸ் ஸ்பான்ஸர் பண்ண 7த் சேனல் தயார் பண்ண தொடர்கள்..//

செவன்த் சேனல் நிகழ்ச்சிகள்ல ஒரு அம்மணி வருவாங்களே..அவங்க பேர் நினைவிருக்கா?

//
சந்திரகாந்தா, //

மறக்க முடியுமா?? சூப்பர் சீரியல்

//அலிப் லைலா, ஏக்சேபட்கர் ஏக், சேகர் சுமன் நடித்த ரிபோர்டர், //

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))

//ம்ம்ம் தூர்தர்ஷன் காலங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இருந்த சுவாரசியம் இப்போ எல்லாம் இருந்தும் இல்லை...
//

ரீப்பீட்ட்ட்டு :))

//நீலா மாலா தொடர், அக்பர் த கிரேட், கிரேட் மரதாஸ்,
//

தல...கைப்ஸ் போல நீங்களும் மெமர் ப்ளஸ் நெறய சாப்பிடுவீங்களோ? :))

//
மதியானம் போடுற சாந்தி, யுக் , சுவாபிமான்
//

அதை சொல்லியிருக்கேனே...ஸ்கூல் முடிச்சு அவசர அவசரமா வருவோம்ல :))

//கிரிக்கெட் நேரலை ஒளிபரப்புகளில் முதல் பந்து வீச்சையும் கடைசி பந்து வீச்சையும் கட் பண்ணிட்டு விளம்பரம் காட்டிட்டு போடும் டிபிகல் தூர்தர்ஷன் டெக்னிக்...//

கிரிக்கெட் பத்தி வேணும்னேதான் சொல்லாம விட்டேன்..அப்புறம் புலம்பல்ஸ் தனி பதிவு அளவுக்கு போயிடும் :))

//
மேட்ச் நடக்கிறப்ப match will resume in DD metro என்று ஸ்லைட் போட்டு டிடி2 தெரியாத எங்க ஊர் மக்களை எல்லாம் வெறுப்பேத்துறது இது எதையும் மறக்க முடியாது//

:)) சில சமயம் எங்க வீட்லயும் டிடி2 தெரியாது..அப்பல்லாம் ஆண்டெனாவை திருப்பனும்..இல்ல டிவியை மேல ரெண்டு தட்டு தட்டனும்..இல்ல பக்கத்து வீட்டுக்கு ஓடனும் :))

சேர்ந்து கொசுவத்தி சுத்தினதுக்கு டாங்கிஸ் :)))

சொன்னது...

Chandrakantha.., Sankarlal Thuparikirar, from DD Metro Priya's programme was awesome but they stopped that program within 2 years.. YGP's Thuppu ariyum saambu..En iniya iyanthira.. I would like to buy DVD verision of these serials if some one can sell that. Can somone tell me what happened to the serial Junoon? NDTV's India this week was good news compilation on DD II. above all i watched Roja movie atleast 7 or 8 times only on DD.

சொன்னது...

//ஆணா பொண்ணா விட்டு விட்டு சொல்றது ஸ்ரீவித்யா பாட்டுல தானே? கன்பீஸ் பண்றீங்களே//
எனக்கு ஞாபகம் இருக்கற வரை ஸ்ரீவித்யாவும் ராஜீவும் வர்றது ஒரே பாட்டுல தான்...அது அந்த ஆணா? பொண்ணா? பாட்டு தான்.

//செவன்த் சேனல் நிகழ்ச்சிகள்ல ஒரு அம்மணி வருவாங்களே..அவங்க பேர் நினைவிருக்கா?//

அவங்க பேரு மாலா மணியன்.

சொன்னது...

//Fugitive - The Most Wantedன்னு ஒரு நிகழ்ச்சி. உண்மைச் சம்பவங்கள், குற்றங்களைப் பற்றிய துப்பறியும் தொடர். கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரே வரதட்சணை வழக்குல கைதான ஞாபகம்.//

;-)

கப்பி

உங்க பதிவை ரொம்பவே ரசித்துப் படித்தேன். நான் ஈழத்தில் இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் தூரதர்ஷனின் பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கின்றேன். அது பத்திச் சொல்லணும்னா இன்னொரு கொசுவர்த்திப் பதிவு தேவை.

சொன்னது...

vino

//
YGP's Thuppu ariyum saambu..
//

அட ஆமா..ஒய்ஜி படங்கள்/மற்ற நாடகங்களை விட காமெடி நல்லாருக்கும் :))

//above all i watched Roja movie atleast 7 or 8 times only on DD.//

:)) ஒரு சுதந்திர தினம், குடியரசு தினம் விடாம போடுவாங்களே :))

நன்றி :)

கைப்ஸ்

ரெண்டு பேரும் வர்றது ஓரே பாட்டுலயா??? கன்பீசன்ஸ் அதிகமாவுதே :))

கானா பிரபா

தல..நீங்களும் டிடி ரசிகரா சூப்பர் :))

//இன்னொரு கொசுவர்த்திப் பதிவு தேவை.
//

:)))

நன்றி தல!

சொன்னது...

KTM,

கலக்கிட்டே ராசா..... இப்பவும் எனக்கு இன்னும் நல்லா "என் இனிய இயந்திரா" தொடர் ஞாபகம் இருக்கு.. :)) அடுத்து சித்ரகார், ஞாயித்து கிழமை காலையிலே ஒளிப்பரப்பான பைபிள் தொடர்... :)

இராமாயணம் அப்போ ஹிந்தியிலே தான் ஒளிப்பரப்புவாங்க, ஆனா நீயூஸ் பேப்பரிலே அன்னிக்கே தமிழிலே வசனம் வந்திருக்கும், அதை நிகழ்ச்சியப்போவே வாசித்து பார்த்தது மட்டுமில்லாமே அது முடிஞ்சதும் படிக்க தெரியாத எங்க அப்பத்தா'வுக்கு வேற வாசிச்சு காட்டுவேன்.... :)

இன்னும் இருக்கு, என்னோட கொசுவத்தியோட வீல்'ஐ கிளச்ச்'லேயிருந்து ஃப்ர்ஸ்ட் கியர்'க்கு மாத்தியிருக்கேன்..... ஆமேலே பர்த்தீனீ... :)

எங்க வீட்டு டிவி பொட்டியிலும் கதவு இருந்துச்சு..... பேரு தான் ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிது... :(

சொன்னது...

Dei, You have written this so well.
Almost everything is correct.
Of course, I too rolled the mosquito coil. The best part was the Antenna. I used to do that most of the time.

சொன்னது...

உக்காந்து யோசிப்பாய்ங்களோ
!!!

சொன்னது...

சூப்பரப்பு கப்பி....

//ஸ்கூல் டேஸ்//

இது நாம பத்தாப்போ, பதினொன்னாப்போ படிக்கும்போது வந்ததுன்னு நெனக்கிறேன். இதப் பாத்துட்டு நானும் ஜீனியர் காலேஜ் ஸ்டூடண்ட்னு சீன் போட்டது இன்னமும் ஞாபகத்துல இருக்குது... அருமையான கொசுவத்தி... :))

சொன்னது...

இராம்

//முடிஞ்சதும் படிக்க தெரியாத எங்க அப்பத்தா'வுக்கு வேற வாசிச்சு காட்டுவேன்.... :)//

பாசக்கார அண்ணன்னே நீங்க :))

//
இன்னும் இருக்கு, என்னோட கொசுவத்தியோட வீல்'ஐ கிளச்ச்'லேயிருந்து ஃப்ர்ஸ்ட் கியர்'க்கு மாத்தியிருக்கேன்..... ஆமேலே பர்த்தீனீ... :)
//

:))

//
எங்க வீட்டு டிவி பொட்டியிலும் கதவு இருந்துச்சு..... பேரு தான் ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிது... :(//

தல கைப்ஸ்ட்டருந்து மெமரி ப்ளஸ் வாங்கி சாப்பிட்டுங்க :)))


ராஜ்மோகன்

வா மாப்பி..டாங்கிஸ் :)))


ஜி

மக்கா நீயும் ஸ்கூல் டேஸ் ரசிகனா..என் இனமடா நீ :)))

சொன்னது...

எனக்கு ஒண்ணு கூட ஞாபகம் இல்ல, ஜங்கிள் புக் மட்டும் லேசா ஞாபகம் இருக்கு. நான் பத்தாவது படிக்கும்போதுதான் டீவி பாக்க ஆரம்பிச்சதும் அப்பதான் வாங்கினாங்க எங்க வீட்டுலன்றதும் ஒரு காரணம். எப்பவுமே ரேடியோதான்.

ஆனா ஒண்ணு
இங்க கமெண்ட் போட்ட ஆளுங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க. :)
இத்தனை நேரம் பாத்து அத ஞாபகமும் வெச்சிருக்காங்க.

சொன்னது...

நம்ம தல கடந்த நூற்றாண்டுல தூர்தர்ஷன்ல நியூஸ் வாசிச்ச பொண்டு புள்ளைங்க பேரல்லாம் கரீட்டா சொல்றத பாத்தா அவர் சின்ன வயசுலருந்தே ஒரு டைப்பாதான் வளர்ந்திருக்காரு. அதாவது உன்னிப்பா பாக்கறதும் பாக்கறத மனசுல பதிய வச்சிக்கறதையும் சொல்றேன். வேறெதுவும் இல்ல.

சொன்னது...

//நம்ம தல கடந்த நூற்றாண்டுல தூர்தர்ஷன்ல நியூஸ் வாசிச்ச பொண்டு புள்ளைங்க பேரல்லாம் கரீட்டா சொல்றத பாத்தா அவர் சின்ன வயசுலருந்தே ஒரு டைப்பாதான் வளர்ந்திருக்காரு. அதாவது உன்னிப்பா பாக்கறதும் பாக்கறத மனசுல பதிய வச்சிக்கறதையும் சொல்றேன். வேறெதுவும் இல்ல//

//வேறெதுவும் இல்ல//

நம்பறேன்
:)

சொன்னது...

கப்பி,

கொஞ்சம் லேட்டா வறேன்.

அந்த சமயத்தில் நல்ல நாடகங்கள் வந்தது. S V சேகரின் வண்ணகோலங்கள் மெகா ஹிட். பாலசந்தரின் இரயில் பயணங்கள், ரேவதி அவருடைய புருஷனுடன் நடித்த சீரியல், மறக்க முடியாத மொளலியின் Flight 172 ...இன்னும் பல. 13 அல்லது 26 வாரம் வரும். இப்ப வரும் சீரியல்கள் மாதிரி இழுவை கிடையாது.

அண்டெனா சுத்தறதுக்கு, மாமா வாங்கிக் கொடுத்த விளையாட்டு 'Walkie-talkie' ரொம்ப உபயோகமாக இருந்தது.

ம்ம்ம்ம்... அந்த காலத்திற்கு கூட்டிட்டு போனதிற்கு மிக்க நன்றி.

-அரசு

சொன்னது...

ஆவூன்னா அந்த சிம்ரன் மட்டேற கொண்டாந்துடறீங்களே? ஆமா நீங்க வரைஞ்ச அந்த கரப்பான் பூச்சிக்கு மூக்குக்கு கீழ மச்சம் வச்சீங்களா;)
***
ஆணா பொண்ணா பாட்டுல ஸ்ரீவித்யா, ராஜீவ் ரெண்டு பெரும் வருவாங்க.
***
அப்புறம் சாயந்திரம் அஞ்சு மணிக்கு "Spiderman" போடுவாங்க. நாங்க தெருவுல கிரிக்கெட் ஆடிகிட்டிருப்போம். Spiderman டைட்டில் பாட்டு கேட்டவுடனே பேட், பால் எல்லாத்தையும் எடுத்துகிட்டு விழுந்தசிகிட்டு வீட்டுக்குள்ளாற ஓடுவோம். அதெல்லாம் மறக்க முடியாது. ஆட்டோகிராப் படம் மாதிரி பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
***
கதவு வச்ச டிவி ஒன்னு Solidaire இல்ல Uptron'னா இருக்கும்.

சொன்னது...
This comment has been removed by the author.
சொன்னது...

நன்றி கப்பி...மிகவும் அருமை... கணினி ஏ கதி னு இருக்குற நாம் அனைவருக்கும் இந்த பதிவு ஒரு புத்துணர்ச்சி.....

எங்க வீட்டில கதவு வெச்சது Crown TV :))

சொன்னது...

தம்பியண்ணன்

//எனக்கு ஒண்ணு கூட ஞாபகம் இல்ல,//

நீங்க இலக்கியவாதிண்ணே..இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லண்ணே :))

//அதாவது உன்னிப்பா பாக்கறதும் பாக்கறத மனசுல பதிய வச்சிக்கறதையும் சொல்றேன். வேறெதுவும் இல்ல.
//

இதையும் நீர் ஒருத்தன் தான்யா நோட் பண்றீரு :))

கைப்ஸ்

எங்க மேல எப்பவுமே உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்குமே தல :))

அரசு

ஆமாங்க அரசு..எல்லா சீரியலும் 13 வாரத்துக்கு தான் வரும்

//அண்டெனா சுத்தறதுக்கு, மாமா வாங்கிக் கொடுத்த விளையாட்டு 'Walkie-talkie' ரொம்ப உபயோகமாக இருந்தது.//

ஆகா..அந்த காலத்துலயே பல டெக்னிக்குகளை உபயோகிச்சிருக்கீங்களே :))

நன்றி!

சொன்னது...

sathiya

//ஆவூன்னா அந்த சிம்ரன் மட்டேற கொண்டாந்துடறீங்களே? ஆமா நீங்க வரைஞ்ச அந்த கரப்பான் பூச்சிக்கு மூக்குக்கு கீழ மச்சம் வச்சீங்களா;)//


பின்ன தலைவிய மறக்க முடியுமா? :))


//
ஆணா பொண்ணா பாட்டுல ஸ்ரீவித்யா, ராஜீவ் ரெண்டு பெரும் வருவாங்க.//

என்ன நீங்களும் இப்படி சொல்லிப்போட்டீங்க...ரெண்டும் ஒரே பாட்டா?? கன்பீசன்ஸ் :))

நன்றி சத்யா :)

Gayathri


//
எங்க வீட்டில கதவு வெச்சது Crown TV :))
//


EC, Solidaire, Uptron, Crown...எத்தன :))

நன்றி காயத்ரி!

சொன்னது...

பாதில நின்னு போன தண்ணீர் மனிதன், மாதவன் நடிச்ச அரசக் கதை, குட்டி ராதிகா கணவரும், Y.G.மதுவந்தியும் கொடுத்த பிக்னிக் அந்தாக்ஷரி, கேப்டன் வ்யாம், ஜெய் ஹனுமான், அப்புறம் சிவபெருமானுக்காக ஒரு தொடர், சுரபி, Made in India, School days... ஹ்ம்ம்ம்... டார்ட்டாய்ஸ் சுத்த விட்டுட்டீங்க கப்பி சுத்த விட்டுட்டீங்க...

சொன்னது...

//தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த//

எங்க வீட்ல மாடில இருக்கும் ஆண்டெனா. அங்கே இருந்து நீங்க சொன்ன மாதிரி கேப்போம்.எங்க வீட்ல இருந்த அந்த "Solidaire" டிவிக்கு 24*7 மெக்கானிக்கா இருந்தேன்!

தேக் பாய் தேக் ஒரு காமெடி சீரியல் வரும்.ஒரு பெரிய கூட்டு குடும்பம் பத்திய கதை! "Tu tu Mai Mai" ,"Junoon","Swabhiman","Imthihaan","Ajnabhi",
Captain Vyom","Sea Hawks","Sri Krishna","Mahabaratham","Jai Hanuman","ShakthiMan","Chandrakantha","Oliyum Oliyum"
இப்படி நாங்க பாத்த எல்லாத்தையும் பத்தி நினைவு படுத்திடீங்களே கப்பி!

மிகவும் ரசித்து படித்து சிரித்து மகிழ்ந்தேன்!

சொன்னது...

Hi - Good Post. Rajiv song is not 'Aana Ponna'.. The Rajiv song goes on like this
"Odi aadara pen kuzhandhai
Iva eno onju thalai kuninja...
Iva padi thiriyira velaiyila
pala barangala sumandhu azhinja..

Iva ponna porandhadhaale
Pale poruppu vandhadhu mele.."

I have a good memory ..he he

சொன்னது...

இம்சை அரசி

டாங்கிஸுங்கோ!! :))

ரம்யா ரமணி

நன்றி!! :))

ஸ்ரீ

தெய்வமே!! காலைக் காட்டுங்க!! :)))

இத்தனை நாளா அந்த பாட்டு தெரியாம மண்டைய உடைச்சுட்டிருந்தேன்!! நன்றி!! நன்றி!! :)

சொன்னது...

டிடி1ல் கஷ்மீரில் எடுத்த 'குல் குல்ஷன் குல்ஃபாம்' எனும் தொடர் பார்த்ததுண்டா?

"சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன்."

அவங்க பேரு ரேணுகா ஷானே, ஹம் ஆப்கே ஹேய்ன் கோன் படத்தில் சல்மான் கானின் அண்ணியாக நடித்திருப்பார்.

ஷாருக்கான் கூட தூர்தர்ஷன் நாடகத்தில் நடித்து தான் திரைப்பட துறைக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.