பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்"
சென்ற மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதியைக் கழிக்க எந்தெந்த படங்களைப் பார்க்கலாமென விவாதித்துக் கொண்டிருந்தபோது தென்காசிக்கார நண்பன் மட்டும் ஊருக்குச் செல்வதாகச் சொன்னான். "எங்களோட அப்ப இந்த வாரம் படம் பார்க்க வர மாட்டியா? அப்ப நாங்க உன்னோட ஊருக்கு வர்றோம். இங்கயிருந்து நேரா திருநெல்வேலி போய் அங்கயிருந்து பாபநாசம் போறோம்..பாணதீர்த்தம் ஃபால்ஸ் போயிட்டு அன்னைக்கு சாயங்காலம் தென்காசி வந்துடலாம். உங்க வீட்டுல தங்கிட்டு அடுத்த நாள் குத்தாலம்லா பாத்துட்டு நைட் கிளம்பி வந்துடலாம். நாங்களும் வரோம்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு" என்று திடீர் திட்டம் ஒன்றைப் போட்டு அவனுடன் கிளம்பிவிட்டோம்.
கோயம்பேடு சென்றால் தென்காசி, திருநெல்வேலி இரண்டுக்குமே அல்ட்ரா டீலக்ஸ் அரசுப் பேருந்து காலியாக இருந்தது. முதலில் தென்காசி-குத்தாலம்..அடுத்த நாள் பாபநாசம் என திட்டத்தை மாற்றி தென்காசி பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பேருந்து எடுக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றும் திருநெல்வேலி பேருந்து 10 நிமிடத்தில் எடுக்கப்போவதாக சொன்னதும் மீண்டும் திட்டத்தை மாற்றி திருநெல்வேலிக்கே செல்ல பேருந்து மாறி ஏறினோம்.
திருநெல்வேலி சென்றதும் மீண்டும் திட்டத்தை மாற்றிக் கொண்டு தென்காசி பேருந்தில் ஏறிவிட்டோம். நண்பனின் வீட்டிற்குச் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அவன் அப்பா ஏற்பாடு செய்த காரிலேயே பழைய குற்றாலம் அருவிக்குச் சென்றோம். கூட்டம் நிறைய இல்லை. முதல் ரவுண்ட் குளியலைப் போட்டோம். குளிரில் கைகள் விறைத்துக் கொண்டாலும் அரை மணி நேரத்திற்காவது வெளியே வருவதில்லை என்ற முடிவோடு குளித்தோம். தண்ணீர் அவ்வளவு வேகமாக விழவில்லை. அளவு குறைவு தான்.
அருவியிலும் ம்பு போட்டும் சோப்பு போட்டும் குளிக்கும் நபர்களைக் கண்டால் அப்படியே அடிக்கலாம் போலிருக்கும். வீட்டில் பக்கெட் தண்ணீரிலேயே குளித்து பழக்கப்பட்டு அருவியில் எப்படி குளிப்பது என்று தெரியாமல் வீணாய்ப் போனவர்கள். அருவியில் குளிக்கும் சுகத்தைக் கெடுப்பதே இதுமாதிரி ஆட்கள் தான். அவர்களிடமிருந்து தப்பி ஓரமாக தண்ணீர் வேகமாக விழும் இடமாக ஒதுங்கி நின்று திருப்தியாக குளித்தோம்.
சூடாக பஜ்ஜி, டீ அடித்துவிட்டு அங்கிருந்து ஐந்தருவிக்கு கிளம்பினோம். ஐந்தருவியில் இரண்டு பெண்களுக்கு. மூன்று ஆண்களுக்கு. இரண்டாவதாக உள்ள அருவியில் தண்ணீர் பெரிய பாறையில் பக்கவாட்டில் விழுகிறது. அந்த பாறையில் படுத்தவாறே அருமையாகக் குளிக்கலாம். இங்கும் பாறை சந்தில் உள்ளே சென்று எவனையும் உள்ளே விடாமல் ஒரு மணி நேரம் குளித்தோம்.
சைக்கிளில் வைத்து ஒரு சிகப்பு வண்ண பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஏதோ பூச்சி மாதிரி இருந்தது. மேலே சிகப்பு வண்ண தோலை உரித்தால் வெள்ளை நிறத்தில் சாப்பிடக்கூடிய பகுதி. இனிப்பாக இருந்தது. பழத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தது. இப்போது மறந்துவிட்டது. யாருக்காவது தெரியுமா?
அங்கிருந்து குற்றாலம் மெயின் அருவிக்கு வந்தோம். தண்ணீரும் குறைச்சல். கூட்டமும் அதிகம். அதனால் அங்கு குளிக்கவில்லை. பொங்குமாக்கடலில் விழுந்து இறந்து போன கல்லூரி ஜூனியர் நினைவுக்கு வந்து சிறிது நேரம் கல்லூரி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம்.
நான் அதுவரை பாபநாசம் சென்றதில்லை. பாணதீர்த்தம் ரோஜா படத்தில் மதுபாலா ஆடிய அருவி என்பது மட்டும் தான் தெரியும். அடுத்த நாள் காலை தென்காசியிலிருந்து பாபநாசம் கிளம்பினோம். அங்கிருந்து காரையார் அணை சுமார் இருபது கிலோமீட்டர். ரிசர்வ் பாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து படகில் பாணதீர்த்தம் செல்லவேண்டும். அங்கு கடைகள் எதுவும் இருக்காது என்று டிரைவர் கூறியதால் பாபநாசத்திலேயே வயிறு முட்ட சாப்பிட்டு காரையாருக்குச் சென்றோம். காரையார் அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அணை மிகவும் அமைதியாக இருந்தது. நாங்கள் சென்றபோது மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
படகில் கதை பேசியபடி சென்றுகொண்டிருந்த போது நண்பன் என்னை திரும்பிப் பார்க்கச் சொன்னான். திரும்பினால் அந்த பக்கம் பாணதீர்த்தம் அருவி. பார்த்ததுமே வாயடைத்துப் போனது. அருவி அந்தளவு கம்பீரமாக பிரம்மாண்டமாக இருந்தது. படகிலிருந்து ஒத்தையடி பாதை வழியாக அருவிக்குச் செல்ல வேண்டும். நாங்கள் சென்றபோது தான் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று கிளம்பியது. அருவியில் மொத்தமே ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள்.
அருவியின் ஒரு பக்கம் மட்டும் கம்பி கட்டி விட்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கத்திற்கு செல்ல முடியாது. தண்ணீர் அந்தளவு வேகமாக விழுகிறது. முன்னால் விழுந்து நிற்கும் தண்ணீரில் விழுந்தால் கூட பிழைப்பது அரிது. ஐந்தருவி, பழைய குற்றாலத்தை விடவும் தண்ணீர் வேகமாக விழுந்தது. அந்த வேகத்தில் தோள்பட்டையிலும் கழுத்திலும் லேசாக வலியெடுக்கவே ஆரம்பித்தது. ஆனாலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேகமாக தண்ணீர் விழும் இடத்திலேயே குளித்தோம். தண்ணீர் மிகவும் இனிப்பாக இருந்தது. அந்த தண்ணீரில் குளித்து அதை குடித்து வாழ்ந்தால் ஒரு நோயும் வராது போல. அந்தளவு சுத்தம். சுவை.
குளித்துக்கொண்டிருக்கும் போது கிழே காலடியில் வானவில். பாறையில் எங்களுக்காகவே தோன்றிய வானவில். அப்போது கவிதை தான் எதுவும் தோன்றவில்லை. நல்ல வேளை. அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் எவனாவது அருவியிலேயே குதித்திருப்பான்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்தோம். கிளம்ப மனமே இல்லை. இதற்கு முன் பல அருவிகளில் குளித்திருந்தாலும் பாணதீர்த்தத்தின் பிரம்மாண்டம் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. நாங்கள் கிளம்பும்போது இரண்டு படகுகளில் கூட்டம் வந்தது. நாங்கள் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் திருப்தியாக குளித்திருக்க முடியாது. இங்கும் கூட்டத்தில் இடிபட்டு ஷஅம்பு சோப்பினால் பாணதீர்த்தமே பிடிக்காமல் கூட போயிருக்கும்.
அங்கிருந்து பாபநாசம் வரும் வழியில் சேர்வலார் அணைக்கு செல்லும் பாதை பிரிந்தது. அதையும் சென்று பார்த்துவிடுவோம் என்று சென்றோம். அங்கிருந்த காவலாளி "யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க" என்று கேட்டார். "கேட்கறதுக்கு யாருமே இல்ல..அப்படியே உள்ள வந்துட்டோம்" என்றதும் "சரி பார்த்துட்டு போங்க..போட்டோ எடுக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சேர்வலார் அணை மழைத் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும் அணையாம். மேக மூட்டமாக இருந்ததால் பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. கால் மணி நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.
இனிப்பு கடை வைத்தால் "சாந்தி ஸ்வீட்ஸ்" என்று வைத்தால்தான் வியாபாரம் நடக்கும் என்று யாரோ சொல்லிவிட்டார்கள் போல. திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபது "சாந்தி ஸ்வீட்ஸ்" கடைகள். அதிலும் 'அக்மார்க்', 'ஒரிஜினல்', 'அசல்' என பட்டங்களுடன். ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில் இருக்கிறது. அங்கு சென்று தேவைக்கு அதிகமாகவே அல்வா வாங்கிக் கொண்டோம்.
வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல எளிதாக இடம் கிடைத்ததால் ரிடர்னுக்கும் எளிதாக இடம் கிடைக்கும் என்ற எங்கள் லாஜிக் பொய்த்துப் போனது. பேருந்து நிலையத்தில் எக்கச்சக்க கூட்டம். அரசுப் பேருந்தில் ஏறுவதற்கே வாய்ப்பில்லை என முடிவு செய்து மீண்டும் ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து தனியார் பேருந்துகளில் டிக்கெட் வாங்க முயற்சித்தோம். அதுவும் கிடைக்காததால் மீண்டும் புது பேருந்து நிலையம் வந்து அடித்து பிடித்து திருவனந்தபுரதிலிருந்து வந்த பழைய அரசுப் பேருந்தில் ஏறி, மதுரை வரை டிரைவர் கேபினில் அமர்ந்துவந்து, மதுரையிலிருந்து கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் ஓட்டை சீட்டைப் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை ஓட்டுநர் வண்டி ஓட்டியதைப் பின்னால் உட்கார்ந்து பார்த்ததில் அவரின் ரசிகனாகிவிட்டேன். அந்த டப்பா வண்டியையும் என்ன அருமையா ஓட்டறாரு.
சென்று வந்து ஒரு மாதத்திற்கு் ஆகிவிட்டது. இன்று ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதும் பாணதீர்த்தம் நினைவுக்கு வந்தது. இன்னும் அதன் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலவில்லை. அதில் குளித்த சுகமும் மறக்கவில்லை. அருவியில் சீசன் வரும்போதெல்லாம் சென்றுவர வேண்டும். அதுவும் பக்கத்திலேயே நண்பன் வீடு இருக்கும்போது சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் கூட பிரச்சனை இல்லை.