Love in the Time of Cholera

காதலும் ஒரு நோய் தான். அதிலும் நிராகரிப்பட்ட காதல் உயிர்கொல்லி. தன் வாழ்நாள் முழுதும் இந்த உயிர்கொல்லி நோயுடன் வாழ்ந்து நோயின் வலியினை முழுதாக அனுபவித்து நோயை எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கனவுலகில் வாழ்ந்து தன் வயோதிகத்தில் காதலில் வென்றவனின் கதை தான் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'Love in the Time of Cholera' (காலரா சமயத்தில் காதல்?).

ஃபெர்மினாவின் மேலுள்ள தன் காதலைக் 51 ஆண்டுகள் கழித்து, அவள் கணவர் அர்பினோவின் இறுதிச்சடங்கில், மீண்டும் ஃப்ளொரொண்டினோ வெளிப்படுத்துவதில் நாவல் ஆரம்பிக்கிறது. இங்கிருந்து ப்ளொரெண்டினோ, ஃபெர்மினா மற்றும் அர்பினோவின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி இல்லாமல் முன்னும்பின்னுமாகக் கூறுகிறார் மார்க்வெஸ்.

இளைஞன் ஃப்ளொரெண்டினோவிற்கு ஃபெர்மினாவின் மேல் கண்டதும் காதல். அவனின் கவிதைகளிலும் இசையிலும் ஈர்க்கப்படும் ஃபெர்மினாவும் காதல் வயப்படுகிறாள். எந்நேரமும் காதல் மயக்கத்திலேயே இருக்கும் ஃப்ளொரெண்டினோ காதல் கவிதைகள் இயற்றுவதும் காதல் காவியங்களை மனனம் செய்வதும் ஃபெர்மினாவின் தரிசனத்திற்குக் காத்திருப்பதுமாகக் காதலின் பித்த நிலையில் இருக்கிறான். இந்நிலையில் தன் உறவினர்களின் ஊருக்குப் பயணப்படும் ஃபெர்மினா காதலின் கனவுலகில் இருந்து வெளிவருகிறாள். ஊருக்குத் திரும்பியதும் ஃப்ளொரெண்டினோவின் காதலை நிராகரிக்கிறாள்.

காதல் நிராகரிக்கப்பட்ட சோகத்தில் ஃப்ளொரெண்டினோ எதிலும் ஈடுபாடில்லாமல் திரிகிறான். அவன் தாய் ட்ரான்சிட்டா அவனது நோயை உணர்ந்து அவனை மீட்டெடுக்க அவனை கப்பல் நிறுவனத்தில் வேலைக்கு சேர வைக்கிறாள். கப்பல் நிறுவன வேலையில் பற்றில்லாமல் எந்த நேரமும் காதல் கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் எழுதும் அலுவல் தொடர்பான கடிதங்களும் கவிதை நடையில் இருக்கின்றன. இதைக் கண்ட கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர், இவனது உறவினர், காதலை மறக்க அவனை வேறொரு நகருக்கு கப்பலின் மூலம் அனுப்புகிறார். இந்த பயணத்தில் ஃப்ளொரெண்டினோவின் காதல் தீவிரமடைகிறது. அந்த தீவிரம் அவன் உடல்நிலையும் பாதிக்கிறது. ஃப்ளொரெண்டினொ ஃபெர்மினாவை மறந்து தன்னால் வாழ முடியாதென ஊர் திரும்புகிறான்.

அதே நேரம், ஃபெர்மினா அர்பினோவை சந்திக்கிறாள். அர்பினோ நகரின் புகழ்பெற்ற மருத்துவர். அவரது தந்தையைப் போலவே அர்பினோவும் அந்த ஊரில் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து காக்கிறார். காலரா வராமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் முன்னின்று நடத்துகிறார். அர்பினோவும் ஃபெர்மினாவும் காதலோ ஈர்ப்போ இல்லாவிட்டாலும் சமூக அந்தஸ்திற்கும் வசதிக்கும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனாலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஒருவருக்கொருவர் மற்றவரின் தேவை அறிந்து அன்புடன் வாழ்கின்றனர்.

"திருமணம் என்பது ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு" என்கிறார் அர்பினொ.

ஃபெர்மினா தன் கணவனுடன் சிறுசிறு சண்டைகள் இருந்தாலும் ஃப்ளொரெண்டினொவை முழுதாக மறந்துவிட்டு தன் குடும்பத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். தன் குழந்தைகளை அளவில்லா பாசத்துடன் வளர்க்கிறாள்.

ஃபெர்மினாவிற்கு திருமணமானதும் ஃப்ளொரெண்டினோவின் காத்திருத்தல் ஆரம்பமாகிறது. தனக்கும் ஃபெர்மினாவுக்குமான காதலின் வெற்றி அர்பினொவின் மரணத்தால் மட்டுமே சாத்தியம் என அர்பினோவின் மரணத்திற்குக் காத்திருக்கிறான். ஃபெர்மினாவைத் தவிர வேறு யாரையும் மணம் புரிவதில்லையென முடிவெடுத்தாலும் தன் காதலின் வலியைப் போக்கிக்கொள்ள மணமாகாத பெண்கள், விதவைகள் எனப் பல பெண்களை நாடுகிறான்.

ஃப்ளொரெண்டினோவிற்கு வயதாக ஆக அர்பினோவிற்கு முன் தானோ அல்லது ஃபெர்மினாவோ இறந்துவிடும் சாத்தியம் குறித்து பயம் எழுவதை மார்க்வெஸ் மிக அழகாக விவரிக்கிறார்.

சிறு பிணக்குகளும் கருத்துவேறுபாடுகளும் இருந்தாலும் ஃபெர்மினா, அர்பினோ நிறைவான இல்வாழ்க்கை நடத்துகின்றனர். பாரீஸ் நகருக்கு தன் கணவ்னுடன் சுற்றுலா சென்று வந்ததும் ஃபெர்மினாவிற்கு தன் சொந்த ஊரின் மேல் பாசமும் அதே நேரத்தில் அங்கு நேரும் தீயவைகளைக் கண்டு பயமும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும்.

தன் காதலைத் தன் தாயைத் தவிர வேறு யாரிடமும் வெளிப்படுத்தாத ஃப்ளொரெண்டினோ தன்னுடன் வேலை பார்க்கும் லியோனாவிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் தவிப்பார்.

ஃப்ளொரெண்டினோவின் காதல் நிராகரிக்கப்பட்டு 51 வருடங்கள் 9 மாதங்களுக்குப் பிறகு அர்பினோ மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்தில் இறக்கிறார். இறுதிச் சடங்கில் அன்றிலிருந்து சற்றும் குறையாமல் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் காதலை ஃபெர்மினாவிடம் கூறுகிறார்.இது நடவாத காரியம் என ஃபெர்மினா மறுக்கிறார். முன்பு காதலின் உச்சகட்ட பித்தநிலையில் இருந்த ஃப்ளொரெண்டினோ இப்போது காலத்தால் பக்குவப்பட்டதால் ஃபெர்மினாவிடம் அவளை அடிக்கடி சந்திக்கவாவது அனுமதி கேட்கிறார்.

ஃபெர்மினாவுடன் சந்திப்புகளும் கடிதப் போக்குவரத்தும் தொடர்கிறது. ஃப்ளொரெண்டினோ முன்பு எழுதிய உணர்ச்சிமிகுந்த காதல் கவிதைகளையும் இப்போதைய கடிதங்களையும் ஃபெர்மினா ஒப்பிட்டுப் பார்த்து வியக்கிறார். அர்பினோவின் இழப்பை மறக்க ஃப்ளொரெண்டினோவும் ஃபெர்மினாவும் அவரின் சொந்த கப்பலில் பயணக்கிறார்கள். பயணத்தினூடே இத்தனை நாட்களாக அவர்களினுள் காத்திருந்த காதல் வெளிப்படுகிறது. தன்னை ஊரார் பழி கூறப்போகிறார்கள் என ஃபெர்மினா அச்சப்படுகிறார். உடனே ஃப்ளொரெண்டினொவின் கட்டளைப்படி கப்பலின் கேப்டன் காலரா நோயாளியை ஏற்றிச் செல்ல குறிக்கப்படும் கொடியை கப்பலின் தளத்தில் ஏற்றிவிடுகிறார். இது போல் எத்தனை நாட்கள் இவ்வாறு பயணிப்பதெனக் கேப்டன் கேட்க "எப்பொழுதும்" என ஃப்ளொரெண்டினோ சொல்வதாக நாவல் நிறைவடைகிறது. காதல் நோயின் குறியீடாக காலரா குறிப்பிடப்படுகிறது.

தன் வாழ்நாள் முழுதும் காதலுக்காகக் காத்திருக்கும் நாயகன் ஆச்சரியமளிக்கிறார். கதை நெடுகிலும் கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் சம்பங்களையும் விவரிக்கும் விதத்தில் மார்க்வெஸ் கதாபாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துகிறார். கிளைக்கதைகளாக வரும் ஃபெர்மினாவின் தந்தையின் கதையும் அவள் உறவுக்கார பெண்ணின் கதையும் மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நெடுகே பல ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டு போரைப் பற்றியும் அதனால் ஏற்படும் இழப்புகளும் விவரிக்கப்படுகின்றன.

நல்ல சுவாரசியமான நடையாக இருந்தாலும் வாசிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சில பக்கங்கள் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தன. சில வேளைகளில் கதாபாத்திரங்களின் செய்கைகள் அலுப்பேற்படுத்தின. இந்த நாவல் இப்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். நான் உருவகப்படுத்தியது படத்துடன் எந்தளவு ஒத்துப்போகிறது எனப் பார்க்க வேண்டும்.



கண்ணு தெரியுதா?

வழக்கமா தண்டோரா விக்கி நடத்தற விளையாட்டு தான்...இன்னிக்கு இங்க விளையாடலாம்...கண்ணை வச்சு ஆசாமிங்களைக் கண்டுபுடிங்க...க்ளூவும் கொடுத்திருக்கேன்...கொஞ்சம் சுலபம் தான்..


1. இப்படியே கண்டினியு பண்ணு ராசா..சொதப்பிடாதே!
சென்ற ஆட்டத்தின் நாயகன் அடுத்த மாசமும் கலக்குவாரா?



2. தானைத்தலைவி..பொய் சொல்ல மாட்டாங்கோ
ரா ரா பாடும் சகி



3. விருந்தோம்பல் நம்ம பண்பாடு இல்லையா?
யார் விருந்தினர்ன்னு கபால்னு 'புடி'ங்க



4. 'தலை'ப்புச் செய்தி :)
இவரைக் கண்டுபுடிக்கறது மாயமா மந்திரமா?



5. இன்னொருத்தன் பொறந்துதான் வரணும் போல
இவர் நாட்டு பேங்குல ஒரு அக்கவுண்ட் தொறப்போமா



6. இவர் தான் முரட்டு ஆசாமின்னு சொல்றாங்க
இவர் கடவுளா அப்பாமகனா?



7. மந்திரி
கத்திபாராவில இருந்து கோயம்பேடு எவ்வளவு தூரம்?




8. இவரைத் தெரியாதுன்னு சொல்லிடாதீங்க சாமீ :))
நயந்தாரா ஜோடி தெரியுது..மும்தாஜ் ஜோடி தெரிலயா?



9. மாதவனுக்கு சமமா கண்ணை விரிச்சு சிரிக்கறாங்க
லகே ரஹோ முன்னா மேடம்



10. வலைப்பதிவுலகமே நம்மள பார்த்துகிட்டிருக்கு
பச்சைக்கிளி முத்துச்சரம் ரீமிக்ஸ் ஓட்டிக்கிட்டு மின்னலா வேட்டையாடியவர்



இவங்கதான் ;)





















TCE பொன்விழா கொண்டாட்டங்கள்

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியின் பொன்விழா இந்த மாதம் 29-ம் தேதி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் கொண்டாடப்படுகிறது. மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, டி.வி.எஸ் நிறுவன நிர்வாக மேலாளர் திரு. வேணு ஸ்ரீனிவாசன், கல்லூரி தாளாளர்கள் திருமதி. ராதா தியாகராஜன், திரு கருமுத்து. தி. கண்ணன், கல்லூரியின் (நிரந்தர?! ;) ) முதல்வர் திரு. அபய்குமார் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.







விழாவை ஒரு மாசம் தள்ளி வச்சிருந்தா மதுரைக்கு ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்...ஹும்ம்ம்...



பொங்கலோ பொங்கல்!

"ஏங்க நெல்லுமூட்டைல இருந்து ஒரு படி எடுத்து குத்தி வச்சிருக்கேன். பருப்பும் வெல்லமும் வாங்கிட்டு வரணும்"

"ஏம்மா செல்வி, சுகுமார் கடைல போய் 100 கிராம் வெல்லமும் 200 கிராம் பருப்பும் வாங்கிட்டு வா. அப்பா சாயந்திரம் வந்து காசு தருவாருன்னு சொல்லு"

"பொண்ணுக்கு பாவாடை துணி எடுத்தாச்சு. உங்க அப்பாவுக்கு வச்சு படைக்க ஒரு வேட்டி துண்டு வாங்கிட்டு வந்துடுங்க"

********************************************************************

"சார், பொங்கல் சார். சொந்த கிராமத்துக்கு குடும்பத்தோட போய் கொண்டாடுவோம் சார். அன்னைக்குப் போய் ஆபிஸ் வர சொல்றீங்களே"

"தெரியுது மோகன், ஆனா இந்த வாரம் டெலிவரி இருக்குன்னு தெரியும்ல...வேணும்னா நீங்க இந்த மாசக்கடைசில ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோங்களேன்..."

(மனதுக்குள்)"பொங்கலுக்கு ஊருக்கு போக விடாம மாசக்கடைசில லீவ் கொடுக்கறானாம்...போடாங்க"

*******************************************************************

"மாப்ள, மாட்டு கொம்புக்கு அடிக்க பெயிண்ட் வாங்கிட்டு வந்துட்டயா"

"எல்லாம் ரெடி மாமா, காலைல போய் குளத்துல மாட்டைக் குளிப்பாட்டறோம்..அங்க வச்சே பெயிண்ட் அடிச்சு அலங்காரம் பண்ணி வண்டியோட சேர்த்து பூசை பண்ணி வண்டி கட்டிக்கிட்டு பசங்களை எல்லாம் ஏத்திகிட்டு ஊரை சுத்திட்டு மசானகொல்லைக்கு போய் படையல் வச்சுட்டு பட்டையைக் கிளப்பறோம்"

"கரும்பு கட்டு வண்டியில எடுத்து வச்சிடு...போன வருசத்தை விட பிண்ணிடனும் மாப்ள"

********************************************************************

"இந்த முறையாவது போனஸ் கூட்டி கொடுப்பாங்கன்னு பார்த்தா கையை விரிச்சுட்டாங்களேய்யா"

"என்ன சார் பண்றது..போனஸ் காசுல தான் பொங்கல் கொண்டாடனும் என்னென்னவோ ப்ளான் போட்டிருந்தேன்...இதை வச்சுகிட்டு என்ன பண்றது...கைமாத்தா ஒரு ஆயிரம் ரூபா இருந்தா குடு சார்"

"அட நீ வேறய்யா..நானே எவன்கிட்ட கேட்கலாம்னு பாத்துட்டிருக்கேன்"

**********************************************************************

"முருகேசா...இந்த வருசமாச்சும் அந்த கருப்பனை அடக்கிடனும்டா"

"ஆமா மாப்ள..போன வருசமே நமக்கு தண்ணி காமிச்சுட்டான்..அந்த குமார்ப்பய குறுக்கப்பூந்து வவுத்துல குத்து வாங்காம இருந்தா போன வருசமே கருப்பன் கணக்கை செட்டில் பண்ணியிருக்கலாம்..இந்த வருசம் அந்த ஊர்க்காரனுங்க மொகத்துல கரியப் பூசனும்"


*********************************************************************

"ஏங்க இந்த பொங்கலுக்காவது ஊருக்கு போய் வரலாம்ங்க."

"அவனுங்க கூட சண்டை போட்டதெல்லாம் மறந்துபோச்சா? இனிமே அந்த ஊரு பக்கம் காலை வைக்க மாட்டேன்"

"பண்டிகை நாள் அதுவுமா எதுக்குங்க வீம்பு? என்ன இருந்தாலும் நல்ல நாள்ல பெரியவ்ங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா நமக்கு தானே நல்லது"

"யார் அவங்களா பெரியவங்க? வேலையை பாத்துட்டு போ..இல்ல அவங்க தான் உனக்கு முக்கியம்னா நீ மட்டும் போய் வா"

**********************************************************************

"மச்சி இந்த பொங்கல் பட்டாசு கிளப்பப் போகுதுடா. தல படம் வருது. போக்கிரி வருது. தீபாவளியும் வருதாம்."

"குரு விட்டுட்டியே"

"தியேட்டர் டிக்கெட் விலை வேற குறைச்சுட்டாங்க... ஆனா என்ன யூஸ்...இவனுங்க ப்ளாக்ல தான் விப்பானுங்க"

"ப்ளாக்கோ வொயிட்டோ...மாப்ள பொங்கல் மூனு நாள்ல ரிலீசான எல்லா படத்தையும் பார்த்துடறோம்"

**********************************************************************

"பொங்கல் எதுக்குப்பா கொண்டாடறோம்?"

"இது நமக்கு இயற்கைக்கு நன்றி செலுத்தி வழிபடற பண்டிகைடா கண்ணா. விவசாயிகளின் பண்டிகை. கிராமத்துல சூரியனுக்கு நிலத்துக்கு நமக்கு உதவற மாடுகளுக்கு பூஜை செய்வாங்க"

"நாம் என்னப்பா செய்யப்போறோம்?"

"நாம புதுத்துணி போட்டுகிட்டு மெரினா பீச் போலாம்டா"

**********************************************************************

"இந்த தடவை பொங்கலுக்கு டிவில என்ன படம்டா போடறாங்க?"

"இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையா "(அ)சிங்கமுல்ல" படம் போடறாங்க...படம் சூப்பரா இருக்கும்பா..."

"நீ என்ன படம் வேணும்னா பாத்துக்க...பட்டிமன்றம் போடும்போது ரிமோட்டை தொடக்கூடாது"

"உங்க ரெண்டு பேருக்கும் படம், பட்டிமன்றம்னு இருக்கு.ஆனா சிறப்பு நிகழ்ச்சின்னு சீரியல் எதுவும் போடமாட்டாங்க. நான் என்ன பண்றது?"

***********************************************************************

அமெரிக்காவிலிருந்து ஜிடாக்கில் நண்பன்
"டேய், ஊரை விட்டு ஊரு வந்து மொத முறையா பொங்கல் கொண்டாடறோம்டா..பீலிங்கா இருக்கு"

"ஆமா மாப்ள..எனக்கும் தான்..என்ன பண்றது"

"நானே நாளைக்கு பொங்கல் செய்யலாம்னு இருக்கேன் டா..நீ என்ன பண்ணப் போற?"

"நாங்க விவரம்ல...இங்க குடும்பத்தோட இருக்க நம்மாளு ஒருத்தரை புடிச்சு வச்சுட்டேன்...அவர் வீட்டுல தான் பொங்கல் ;D"

*********************************************************************

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!

பொங்கலோ பொங்கல்!!!!



பாபேல் (Babel)

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? கட்டலாம் என்கிறது பாபேல்(Babel). நாம் சந்தித்திராத மக்களிடம் நம் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும், மொழி தெரியாத இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும், எண்ணங்களை விருப்பங்களை அடுத்தவரிடம் எடுத்தியம்ப இயலாமையால் நேரும் விசனங்களையும பதட்டத்தில் நாம் செய்யும் செயல்களின் பின்விளைவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவர் ஒருவர் ஆடுகளை நரிகளிடமிருந்து காப்பாற்ற மற்றொரு மொராக்கோவாசியிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்குகிறார். அவரின் இரு மகன்களும் அந்த துப்பாக்கியை வைத்து பயிற்சி எடுக்கும்போது மொராக்கோவிற்கு சுற்றுலா வந்திருக்கும் அமெரிக்க தம்பதியரில் மனைவியை சுட்டுவிடுகின்றனர். இங்கிருந்து கதை நான்கு கிளைகளாகப் பிரிகின்றது. ஒவ்வொரு கிளைக்கதையும் படத்தின் போக்கில் முழுமையடைகின்றது.

மனைவி சூசனுடனான(கேட் ப்ளான்ச்செட் Cate Blanchett) கருத்து வேறுபாடுகளைக் களைய ஒரு மாற்றத்திற்காக மொராக்கோவிற்கு சுற்றுலா வருகிறார் ரிச்சர்ட் (பிராட் பிட் Brad Pitt). தங்கள் இரு குழ்ந்தைகளையும் எமிலியா என்ற மெக்சிக பெண்மணியின் பொறுப்பில் கலிபோர்னியாவில் விட்டுவருகின்றனர்.

மொராக்கோவில் ஆடுமேய்ப்பவரின் மகன்கள் அப்துலும் யூசுப்பும். அண்ணனை விட தம்பி சுட்டி('வெயில்' மாதிரி தான்). துப்பாக்கியின் குண்டுவீச்சு தூரத்தை சோதிக்க ஒரு பேருந்தை நோக்கி சுடுகின்றனர். அது சூசனின் தோள்பட்டையை காயப்படுத்துகிறது.

மொழி தெரியாத, மருத்துவ வசதிகளற்ற சிறிய கிராமத்தில் தன் மனைவியுடன் ரிச்சர்ட் படும் இன்னல்களும் படத்தின் ஒரு கிளையாக, தன் மகனின் திருமணத்திற்காக ரிச்சர்டின் குழந்தைகளுடன் மெக்சிகோவிற்கு எமிலியா பயணப்படும் கதை மற்றொரு கிளையில் செல்கிறது.மொராக்கோ பாலைவனப் பரப்புகளில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரகளின் வாழ்க்கை காட்டப்படுகிறது. மற்றொரு கதை ஜப்பானில் வாய்பேச, காது கேட்காத இளம்பெண்ணைப் பற்றியது. இந்த நான்கு கதைகளுக்கும் மையப்புள்ளி அந்த துப்பாக்கிச் சூடு.

அடிபட்ட மனைவியைக் காப்பாற்றத் துடிக்கும் கணவனாக பிராட் பிட் கலக்கியிருக்கிறார். மருத்துவ உதவி வேண்டி தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும்போதூம் , உதவி கிடைக்கத் தாமதமாகும் நேரத்தில் ஆத்திரம் கொள்வதும், மனைவி படும் வலியின் வேதனையை உள்வாங்கி கலங்குவதுமாக பிராட் பிட் தன் நடிப்பாற்றலை முழுவீச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சக சுற்றுலா பயணிகளைத் தொற்றிக் கொள்ளும் உயிர் பயமும், உதவ வேண்டும் என்ற சிலரது எண்ணமும், எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற மற்ற சிலரின் சுயநல மனப்பாங்கும் அவர்களுக்குள் மூளும் வாக்குவாதங்களும் அருமையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

எமிலியா தன் மகனின் திருமணத்திற்காக தன் உறவினர் சாண்டியாகோ(Gael Garcia Bernal)வுடன் ரிச்சர்டின் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மெக்சிகோ வருகிறார். அங்கு திருமணக் கொண்டாட்டங்கள் அழகாகக் காட்டப்படுகின்றன. தன் அத்தையை திரும்ப கலிபோர்னியாவிற்கு அழைத்துவரும்போது இமிக்ரேஷன் பிரச்சனையில் சிக்கி எல்லைப் போலீசாரிடம் தப்பும் சாண்டியாகோ குழந்தைகளையும் எமிலியாவையும் தன்னந்தனியாக பாலைவனத்தில் இறக்கிவிட்டுச் செல்கிறார்.

அந்த பாலைவனத்தில் குழந்தைகளுடன் எமிலியா அல்லாடுகிறார். குழந்தைகளை ஒரு இடத்தில் விட்டுவிட்டு உதவி தேடச் சென்று எல்லை காவல்துறையிடம் அகப்பட்டு பின் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் மெக்சிகோவிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். குழந்தைகளும் பாலைவனத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். இந்த படத்தில் மிகவும் கவர்ந்தது எமிலியா கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு தான். கெய்ல் கார்சியா பெர்னாலின் நடிப்பு மிக இயல்பு.

மூன்றாவது கதை, மொராக்கோவில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான சகோதரர்களின் கதை. துப்பாக்கி விற்ற நபர் காவல்துறையிடம் உண்மையைச் சொல்லிவிட காவல் துறை இவர்களைத் தேடி வருகிறது. அந்த பயத்தில் தந்தையிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லுகிறார்கள். தந்தை அவர்களை அழைத்துக்கொண்டு தலைமறைவாக முயற்சிக்கிறார். ஆனால் வழியில் போலீசிடம் சிக்குகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் அண்ணன் இறக்கிறான்.. அதைக் கண்டு கலங்கும் தம்பி யூசும் அண்ணனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியபடியே போலிசில் சரணடைகிறான்.

நான்காவது கதை, மொராக்கோவாசியிடம் துப்பாக்கியை விற்ற ஜப்பானியரின் மகளைப் பற்றியது. வாய்பேச முடியாத காது கேளாதவரான அந்த இளம்பெண் இளைஞர்களின்பால் ஈர்க்கப்படுவதும் பாலுணர்வினால் பரிதவிப்பதும் தன் மேல் அக்கறை காட்டாத தந்தையின் மேல் கொள்ளும் வெறுப்பும் எந்தவித பூச்சுகளுமின்றி யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு கதைகளும் சுழற்சி முறையில், ஆனால் காலவரிசையின்றி காட்டப்படுகின்றன. ஆனால் கதைகளின் போக்கை எந்தவித சிக்கல்களுமின்றி எளிதாகப் புரியும்படி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவும் பின்னணி இசையும். மொராக்கோ, அமெரிக்கா, மெக்சிகோ, ஜப்பான் என அந்தந்த நிலப்பரப்புகளை கனகச்சிதமாக அழகாக உள்வாங்குகிறது ஒளிப்பதிவு. குறிப்பாக மெக்சிகோ திருமண கொண்டாட்டங்களும் இரவு நேர டோக்கியோ நகரமும் மிக அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் பால்கனியில் இருந்து விலகி டோக்கியோ நகரை மேலிருந்து காட்டும் காட்சி அபாரம்.

டோக்கியோ நகர டிஸ்கோக்களாகட்டும், மெக்சிகோவில் திருமணத்தின்போது லத்தீன் அமெரிக்க இசையாகட்டும் மொராக்கோவின் பாலைவனக் கடுமைக்கேற்ற மெல்லிய பின்னணி இசையாகட்டும் காட்சிகளோடு இயைந்திருக்கின்றது.

படத்தில் சில மாண்டேஜ் காட்சிகள் க்ராஷ்(Crash) திரைப்படத்தை ஞாபகப்படுத்துகின்றன. இந்த இரு படங்களுக்கும் படமாக்கப்பட்ட விதத்திலும், அடிநாதத்திலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கிராஷ் திரைப்படத்தில் இனவெறிக்கு எதிரான செய்தி படம்நெடுக சொல்லப்படும். ஆனால் பாபேலில் வெளிப்படையாக எந்தவித மெசெஜும் இல்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள நான்கு கதைகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் படத்திலிருந்து எடுத்துக்கொள்ள நமக்குப் பல செய்திகள் இருக்கின்றன.