இரு பயணங்கள்

பயணம் தரும் அனுபவங்களும் அதன் தாக்கமும் என்றும் ஆச்சரியமூட்டுபவை. புது ஊர்களும் மனிதர்களும் அவர்கள் குறித்த நினைவுகளும் எளிதில் மறக்க முடிவதில்லை. எந்த பயணமும் திட்டமிட்டபடி நிறைவேறியதுமில்லை. பயணங்கள் நம் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போடும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன. கதாபாத்திரங்களின் பயணங்களின் வழியே பல அருமையான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வாரம் இரண்டு ஸ்பானிஷ் திரைப்படங்களைப் பார்த்தேன். இரண்டு படங்களுமே கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டவையே. இரண்டு படங்களும் லத்தீன் அமெரிக்காவின் இருவேறு முகங்கள். இந்த இரு திரைப்படங்களைக் குறித்தும் அவை ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவாக எழுத முடியுமா என்ற சந்தேகத்துடனேயே இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Y tu mamá también ( And your mother too )

ஹூலியோ, டெனோக் என்ற இரு மெக்ஸிக இளைஞர்கள் லூயிசா என்ற நடுத்தர வயது பெண்ணுடன் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு பயணிக்கிறார்கள். பயணத்தினூடே அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களும் கற்றுக்கொள்ளும் பாடங்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நகைச்சுவை படம் என்றோ, உடலுறவு காட்சிகள் விரவிக் கிடக்கும் செக்ஸ் படம் என்றோ, மணமுறிந்த ஒரு பெண்ணைப் பற்றிய மென்சோகக் கதை என்றோ, மெக்ஸிகோவின் சமூக, வாழ்க்கை முறையைக் காட்டும் படம் என்றோ வகைப்படுத்த முடியாது. இப்படம் இவையெல்லாம் கலந்த கலவையே.

டெனோக் ஒரு பணக்கார இளைஞன். அவன் தந்தை அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ள செல்வந்தர். ஹூலியோ நடுத்தர வர்க்க இளைஞன். டெனோக்கின் உறவினர் மனைவி லூசியா. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறியும் லூயிசா அவனிடமிருந்து பிரிகிறாள். அவளிடம் ஈர்க்கப்படும் இரு நண்பர்களூம் 'சொர்க்க வாசல்' என்ற கடற்கரைக்கு அழைத்து செல்வதாகச் சொல்லி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றனர்.

பயணம் நெடுகிலும் கதாபாத்திரங்களின் செய்கைகள் சரி/தவறு என்று எந்த முன்முடிவுகளும் இன்றி அதன் போக்கில் படமாக்கப் பட்டுள்ளன. சில உரையாடல்களும் காட்சி அமைப்புகளும் அதிர்ச்சியூட்டுகின்றன. படம் நெடுகிலுமே வசனங்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. சாலை நெடுகே மெக்ஸிகோவின் கிராமங்களும் காவல் கட்டுப்பாடுகளும் மக்களின் வாழ்வுமுறையும் காட்டப்படுகிறது.செக்ஸ் மட்டுமே வாழ்க்கையென இருக்கும் இரண்டு இளைஞர்கள் பயணத்தின் முடிவில் முதிர்ச்சியடைவது அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உறவுகள் கேள்விக்குறியதாகின்றன. எதிர்பாராத முடிவு படத்தை மெதுவாக மனதில் அசைபோடவைக்கிறது.

படத்தில் சில காட்சிகளினூடே பின்னணியில் கிளைக்கதைகள் சொல்லப்படுகின்றன. நடைபாதையை உபயோகிக்காத பாதசாரி, ஹூலியோவின் கம்யூனிஸ்ட் சகோதரி, மெக்ஸிக ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகும் லாரி, கடற்கரையில் உதவ வரும் மீனவன், கடற்கரை பன்றிகள் என பின்னனியில் சொல்லப்படும் கதைகள் மனதில் நிற்கின்றன.

கதாபாத்திரங்களின் நுன்னிய உணர்வுகளையும் முகபாவங்களையும் தவறவிடாமல் மெதுவாக நகரும் காட்சிகள்,மெல்லிய பின்னணி இசை, அழகான காட்சியமைப்புகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. இந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கவர்கிறார்கள். அருமையான வெளிப்பாடு.

இந்த திரைப்படம் ஒரு கலாச்சார அதிர்வை அளிக்கலாம். ஆனால் மனித உணர்வுகளை அருமையாக படம் பிடித்த திரைப்படம்.


இரண்டாவது திரைப்படம் இலத்தின் அமெரிக்க வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு புரட்சிப் பயணம்.

Diarios de motocicleta (The Motorcycle Diaries)

எர்னெஸ்ட் குவேரா தன் நண்பர் அல்பெர்டோ க்ரேனெடோவுடன் 1950களில் மேற்கொண்ட இலத்தீன் அமெரிக்கப் பயணம் குறித்த திரைப்படம். சே குவேரா உலகை மாற்றியதற்கு முன் உலகம் அவரை மாற்றிய கதை. எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் இரு நண்பர்களின் பயணத்தை அருமையாக காட்டியிருக்கிறார்கள். பயணம் நெடுக சந்திக்கும் மக்களும் அவர்களது வறுமையும் இரு இளைஞர்களிடம் ஏற்படுத்தும் மன மாற்றங்கள் அருமையாக படம்பிடிக்கப் பட்டுள்ளது.

இருபத்தி மூன்று வயது இளைஞன் எர்னெஸ்டோ தன் நண்பன் அல்பெர்டோவுடன் தென் அமெரிக்க பயணத்திற்குக் கிளம்புகிறான். அர்ஜெண்டினா, சிலெ, பெரு, கொலம்பியா வழியாக வெனிசுலாவில் பயணம் முடிகிறது. வழி நெடுக பயணத்தில பல இன்னல்களையும் முதலாளித்துவத்தால் மக்கள் படும் துன்பத்தையும், வறுமையையும் தொழுநோயாளிகளின் நிலையையும் கண் கூடாகக் காணும் நண்பர்கள் எப்படி மாறினார்கள் என்பதே இப்படம்.

பயணத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கிளம்பும்போதும் அவர்களின் ஆரம்பகட்ட பயணமும் பழைய மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் படும் பாடும் நகைச்சுவையுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அல்பெர்டோ தன் முகபாவங்கள் மற்றும் செய்கைகள் மூலம் சிரிக்க வைக்கிறார்.

தென் அமெரிக்க நிலவெளிகளின் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நம்மையும் அந்த நிலவெளிகளில் பயணிக்க வைக்கிறார்கள். வழியில் சந்திக்கும் சுரங்கப் பணியாளர்கள் எர்னெஸ்டோவின் மனதில் முதல் விதையாக விழுகிறார்கள். அதன் பின்னர் சிலேயிலும் பெருவிலும் பூர்வீக மக்களை சந்திக்கும் நண்பர்களின் மனம் மாற்றமடைகிறது. தொழுநோய் மருத்துவமனையில் இளைஞர்கள் இருவரும் தங்கி சேவை செய்வதும், எர்னெஸ்டோ நோயாளிகள் மீது காட்டும் அன்பும் பரிவும் நம்மைக் கலங்க வைக்கிறது.

தொழுநோயாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக நள்ளிரவில் அமேசான் நதியை எர்னெஸ்டோ நீந்திக் கடப்பதைக் காணும்போது உண்மையிலேயே சே குவேரா இப்படி செய்தாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பயணத்தின் முடிவில் அல்பெர்டோ வெனிசுலாவில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துவிட எர்னெஸ்டோ தனியாக அர்ஜெண்டினா திரும்புகிறான். பின்னணியில் சே குவேராவின் வரலாறு சொல்லப்படுகிறது.

இரண்டு நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சே குவேராவாக நடித்த கெய்ல் கார்சியா பெர்னால் சிறப்பாக கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. பயணத்தினூடே இரு நண்பர்கள் தங்களின் சுயமறிதல் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.

சில படங்கள் பொழுதுபோக்குவதற்கு. சில படங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு. இது இரண்டாவது வகை.


இந்த இரண்டு படங்களைப் பார்த்ததும் மனதிலுள்ள சில கேள்விகளுக்கு விடை கிட்டினாலும் மேலும் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன, சில பயணங்களைப் போலவே.



24 பின்னூட்டங்கள்:

சொன்னது...

//இந்த திரைப்படம் ஒரு கலாச்சார அதிர்வை அளிக்கலாம். //

நமக்காக இருக்கலாம். கண்டிப்பாக அவர்களுக்கு இருக்காது என்பது என் எண்ணம், கருத்து. :)

சொன்னது...

//அமேசான் நதியை எர்னெஸ்டோ நீந்திக் கடப்பதைக் காணும்போது உண்மையிலேயே சே குவேரா இப்படி செய்தாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.//

நடந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் தான் கப்பி. நான் சில வாரங்களுக்கு முன்பு " The Country " என்ற ஒரு படம் பார்த்தேன். தென் ஆப்பரிக்க விடுதலை போராட்டத்தை பற்றி கதை. அந்த படத்தை பார்த்தவுடன் ஆடிப் போயிட்டேன். வசனங்கள் எல்லாம் அவ்வளவு கூர்மை. கண்டிப்பாக காண வேண்டிய படம் ஒரு முறையெனும்.

சொன்னது...

//சில படங்கள் பொழுதுபோக்குவதற்கு. சில படங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு. இது இரண்டாவது வகை.//

பல படங்கள் பொழுது போக்குவதற்கு என்பது சரி தான். சில படங்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கு என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. புரிந்து கொள்வதற்கு என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

வாழ்க்கை வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அனுபவம் தான் வாழ்வை கற்று தரும் என்பது என் எண்ணம்

சொன்னது...

கப்பி,


நல்லா இருக்கு உன்னுடைய பதிவு.

சேகுவாரா புத்தகம் படிக்கும் போதே ஒரு சிலிர்ப்பு பிறக்கும். நீ சொன்ன அந்த மோட்டர்சைக்கிள் பற்றிய கதை என்னவென்றால் செகுவாரா'வின் இளமையில் ஒரு மோட்டர் கம்பெனியின் மாடலாக செயல்பட்டார் என புத்தகத்தில் படித்தாக ஞாபகம்.

சொன்னது...
This comment has been removed by a blog administrator.
சொன்னது...

//சில படங்கள் பொழுதுபோக்குவதற்கு. சில படங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு. இது இரண்டாவது வகை.


இந்த இரண்டு படங்களைப் பார்த்ததும் மனதிலுள்ள சில கேள்விகளுக்கு விடை கிட்டினாலும் மேலும் பல கேள்விகளை எழுப்பிச் சென்றன, சில பயணங்களைப் போலவே.//

நல்லா சொல்லி இருக்க கப்பி...

சொன்னது...

//நமக்காக இருக்கலாம். கண்டிப்பாக அவர்களுக்கு இருக்காது என்பது என் எண்ணம், கருத்து. :)
//

உண்மைதான் புலி...நான் நமக்குத்தான் சொல்கிறேன் ;)

//நடந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் தான் கப்பி. //

கண்டிப்பாக நடந்திருக்கும்...சே மற்றும் அர்னெஸ்டோவின் புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுத்த படம் தான்...ஆனால் அந்த காட்சிகள் தந்த பிரமிப்பு கேள்விகளாக முளைக்கின்றது ;)

//The Country " என்ற ஒரு படம் பார்த்தேன். தென் ஆப்பரிக்க விடுதலை போராட்டத்தை பற்றி கதை. //
இங்கு டிவிடி கிடைத்தால் பார்த்துவிட வேண்டியது தான் ;)

சொன்னது...

//சில படங்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கு என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை. புரிந்து கொள்வதற்கு என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

வாழ்க்கை வாழ்ந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அனுபவம் தான் வாழ்வை கற்று தரும் என்பது என் எண்ணம்
//

ஒரு திரைப்படம் புது பரிமாணத்தையும் வாழ்க்கை முறையையும் காட்டும் போது அது வாழ்வின் புது விஷயங்களை கற்றுத்தருவதாகவே எண்ணுகிறேன்...ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் விடுபடாத சில முடிச்சுகள் அவிழும்போது நாம் புரிந்துகொள்வது நிறைய...கற்றலும் புரிதலும் ஒன்றுடன் ஒன்று இயைந்தது இல்லையா? சரியான புரிதல் இல்லாமல் எதைக் கற்க முடியும்?

சொன்னது...

அழகா எழுதி இருக்க கப்பி. எழுத்து அனுபவம் கூடிக்கிட்டே போகுது. ஒரு நல்ல படத்தை பார்த்தவுடன் அடுத்த 1 மணி நேரத்துக்கு சிலிர்ப்பு இருந்துகிட்டே இருக்கும். இந்த பதிவு படிக்கும்போது அப்படி தோணுது.

புள்ளைங்களா என்ன ஆச்சுப்பா உங்களுக்கெல்லாம்?, உலக சினிமாவையே புரட்டி போட்டுகிட்டு இருந்தா தமிழ் சினிமாவ யாரு கிண்டறது?

தீவாளிக்கு பொறவுதானா தமிழ் விமர்சனமெல்லாம்.

சொன்னது...

//கப்பி,


நல்லா இருக்கு உன்னுடைய பதிவு.
//

மிக்க நன்றி ராம்!

//
சேகுவாரா புத்தகம் படிக்கும் போதே ஒரு சிலிர்ப்பு பிறக்கும். நீ சொன்ன அந்த மோட்டர்சைக்கிள் பற்றிய கதை என்னவென்றால் செகுவாரா'வின் இளமையில் ஒரு மோட்டர் கம்பெனியின் மாடலாக செயல்பட்டார் என புத்தகத்தில் படித்தாக ஞாபகம்.//

அவர் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தார்...மாடலாக இருந்தார் என்பது புது தகவலாக இருக்கிறதே!

சொன்னது...

//நல்லா சொல்லி இருக்க கப்பி...
//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெட்டி ;)

சொன்னது...

//நல்ல பதிவு. //

நன்றி நிர்மல்!

சொன்னது...

ரெண்டு படத்துலயயும் ஹீரோ ஒருவர்தான். கவனித்தீர்களா?

விரிவான பின்னூட்டம் அப்புறம் போடுறேன்.

சொன்னது...

//அழகா எழுதி இருக்க கப்பி. எழுத்து அனுபவம் கூடிக்கிட்டே போகுது. ஒரு நல்ல படத்தை பார்த்தவுடன் அடுத்த 1 மணி நேரத்துக்கு சிலிர்ப்பு இருந்துகிட்டே இருக்கும். இந்த பதிவு படிக்கும்போது அப்படி தோணுது.
//

தன்யனானேன்..மிக்க நன்றி தம்பி!! :)

//புள்ளைங்களா என்ன ஆச்சுப்பா உங்களுக்கெல்லாம்?, உலக சினிமாவையே புரட்டி போட்டுகிட்டு இருந்தா தமிழ் சினிமாவ யாரு கிண்டறது?

தீவாளிக்கு பொறவுதானா தமிழ் விமர்சனமெல்லாம்.
//

தீபாவளி வரட்டும் தமிழ் பட்டாசா கொளுத்திருவோம் ;))

வரலாறு ரிலீசானாலே அது வரலாறு ஆகும் போல!!
ஈ,வெயில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன..
வல்லவனும் ரிலீசாகுதாமே..பார்ப்போம்....

சொன்னது...

//ரெண்டு படத்துலயயும் ஹீரோ ஒருவர்தான். கவனித்தீர்களா?
//

ஆமாங்க பெத்த ராயுடு!
ஹூலியோ, சே இரு கதாபாத்திரங்களிலும் கார்சியா பெர்னால் தான் நடித்துள்ளார்..மெக்ஸிகன் அகாதமி அவார்ட் வாங்கிய நடிகராம்...Amerros Perros-சிலும் கூட இவர் தான் நாயகராம்..அந்த படம் ஆங்கில சப்-டைட்டிலுடன் கிடைக்கவில்லை...தேடிப் பார்க்க வேண்டும்..


//
விரிவான பின்னூட்டம் அப்புறம் போடுறேன்.
//

ஐ யாம் தி வெயிட்டிங் ;)

சொன்னது...

//மாடலாக இருந்தார் என்பது புது தகவலாக இருக்கிறதே!//

இல்லேப்பா அதை பத்தி இன்னும் படிச்சிட்டு வந்து கன்பார்ம் பண்ணுறேன். :-)

சொன்னது...

//இல்லேப்பா அதை பத்தி இன்னும் படிச்சிட்டு வந்து கன்பார்ம் பண்ணுறேன். :-) //

ஓகே ;)

சொன்னது...

bien che!!!!

சொன்னது...

//தீபாவளி வரட்டும் தமிழ் பட்டாசா கொளுத்திருவோம் ;))

வரலாறு ரிலீசானாலே அது வரலாறு ஆகும் போல!!
ஈ,வெயில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன..
வல்லவனும் ரிலீசாகுதாமே..பார்ப்போம்....//

பாத்து கொளுத்துங்கப்பா! தமிழ்மனம் பத்திக்கிற போகுது.

வெயில் பட பாடல் குறித்து ஒரு பதிவு போடணும். பாடல்கள் அருமை.

சொன்னது...

//தீபாவளி வரட்டும் தமிழ் பட்டாசா கொளுத்திருவோம் ;))//

மாண்டிவிடியோல எப்படி கப்பி?

தி.வி.சி.டி அங்கயும் கிடைக்குதா?

சொன்னது...

//bien che!!!! //

gracias toro!! ;)

சொன்னது...

//பாத்து கொளுத்துங்கப்பா! தமிழ்மனம் பத்திக்கிற போகுது.

வெயில் பட பாடல் குறித்து ஒரு பதிவு போடணும். பாடல்கள் அருமை.
//

ஓ..நான் இன்னும் கேக்கலை :(
பதிவு போடுங்க...அப்படியே பாவ்னா போட்டோ போடுங்க...சேச்சின்னு விட்டுடாதீங்க ;))

//மாண்டிவிடியோல எப்படி கப்பி?

தி.வி.சி.டி அங்கயும் கிடைக்குதா//

இல்லைங்க...தியேட்டர் ப்ரிண்ட் இணையத்தில் இருந்து தரவிரக்கம் செஞ்சு பார்க்கனும் ;(

சொன்னது...

Nallaruku..

சொன்னது...

//இந்த முதப் படத்துக்கு ஏன் "உன் அம்மாவும்"ன்னு ஏன் பேர் வச்சாங்க?! படம் எல்லாரும் பாத்தாங்கன்னு பாத்தது - ஆறு வருஷத்துக்கு முன்னாடி. திரும்பிப் பாத்தாத்தான் விஷயம் என்னான்னு தெரியும்! :)
//

ஆறு வருஷத்துக்கு முன்ன ரொம்பத்தான் அப்பாவியா இருந்திருக்கீங்க ;)

//அழகான விளக்கங்கள் இரண்டு படத்துக்கும் கொடுத்திருக்கீங்க.
//

நன்றி மதுரா!