சொந்தக் கதையும் சில புரிதல்களும் சந்தேகங்களும் ...
கையூட்டு (எ) லஞ்சம் இருக்கக் கூடாதுன்றது நம்ம லட்சியங்கள்ல ஒன்னு...
'காசு கொடுக்காம ஒன்னுமே நடக்காது' என்று எல்லாரும்(?!) ஒருமித்த கருத்து கொண்ட வ.போ.அ ல நடந்த சம்பவம் முதல்ல...
எல்.எல்.ஆர் எடுக்க போனபோது போக்குவரத்து விதிகளைப் பத்தி ஒருத்தர் வந்து பேசிட்டு, பரிட்சை வச்சாங்க...எல்லாம் முடிச்சு வெளியே வரும்போது ஒருத்தர் 'கொடி நாள்' கலெக்ஷன் பண்ணிட்டு இருந்தாரு...
எனக்கு பெரிய குழப்பம்..."இது உண்மையாவே கொடி நாள் நிதிக்கு தானா...இல்ல இவனுங்க ஆட்டைய போட்றுவாங்களா"-னு யோசிச்சுட்டு இருக்கும்போதே அவரு என்கிட்ட ஒரு ரசீதை நீட்டினாரு..
நான் மெதுவா என்கிட்ட காசு இல்ல-னு சொன்னவுடனே அவரு "கொடுங்க தம்பி...கொடி நாளுக்கு தானே கேக்கறோம்"-ங்கிறாரு...அதுவும் குறைஞ்சது 30 ரூபாய் தரணுமாம்...இது உண்மையாவே கொடி நாளுக்கா இல்ல லஞ்சமா-னு தெரியாமலே 30 ரூபாய் கொடுத்துட்டு வந்தேன்...
வீட்டுக்கு வந்து என் நண்பனிடம் இதை சொன்னா "அவங்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல..எந்த நாளும் கொடி நாள் தான்"-ன்னு சுகி சிவம் ரேஞ்சுக்கு பேசறான்...
லைசென்ஸ் வாங்றதுக்கு டிரைவிங் ஸ்கூல் கார் ஓட்ட கத்துக்கிட்டு அவங்க மூலமா வாங்கினதால லஞ்சம் எதுவும் கொடுக்கல-ன்னு ஒரு திருப்தி...
("நம்ம சார்பா டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கொடுத்திருப்பாரோ??"
"ச்சீ ச்சீ இருக்காது")
அடுத்தது அடிக்கடி நான் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சம்பவம்...
கல்லூரியில நான்காவது வருடம் படிக்கும் போது நாலு பசங்க ஒன்னா சேர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தோம்...கொஞ்ச நாட்கள் அப்புறம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு ஒருத்தர் வந்தாரு...
"உங்க அப்ளிகேஷன்லாம் வெரிஃபிகேஷனுக்கு ஸ்டேஷன் வந்திருக்கு தம்பி" (ச்சே..ச்சே..எத்தனை 'ஷ')
"அப்படிங்களா...பாத்து அனுப்பிடுங்க..தேங்க்ஸ்ங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் தம்பி..அதுக்கு முன்னாடி சில ஃபார்மாலிட்டீஸ் இருக்குப்பா"
"நாங்க எதுனா கையெழுத்து போடனுங்களா??"
"அதில்லப்பா...உங்க நாலு பேரோட டாகுமெண்ட்ஸ்தான் வந்திருக்கு. இதுக்காக தான் நான் ஸ்டேஷன்ல இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கேன் (அரை கிமீ பாஸூ..) அது ம்ட்டுமில்லாம எஸ்.ஐ கையெழுத்து போட்டதும் நான் தான் பாஸ்போர்ட் ஆபீஸ் கொண்டு போய் கொடுக்கனும்...அதுனால ஃபார்மாலிட்டீஸ்லாம் பாத்து முடிச்சுடுங்க"
(அடப்பாவிகளா லஞ்சம் கொடுக்கறது ஃபார்மாலிட்டியா....)
"என்ன ஃபார்மாலிட்டி சார்"
"ஒருத்தருக்கு 400 ரூபா செலவு ஆகும்பா"
சொல்லி முடிக்கறதுக்குள்ள பக்கத்துல இருந்த 2 பேரு பணத்தை எடுத்துட்டு வர போய்ட்டானுங்க....
நானும் இன்னொருத்தனும் மட்டும் நிக்கறோம்...
"இல்ல சார்..பரவாயில்ல...ஃபார்மாலிட்டி-லாம் கொடுக்கறது இல்ல"
"என்ன புரியாம பேசறீங்க..எல்லாரும் கொடுக்கறது தானே"
"இருக்கட்டும் சார்"
"உங்களுக்காகத்தான் தம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்"
"இல்ல சார்.. கொடுக்கறது இல்ல"
அதுக்குள்ள மத்த 2 பேரும் ஆளுக்கு 300 ரூபாயை எடுத்து நீட்டிட்டாங்க
"அப்போ உங்களுக்குத் தான் லேட்டாகப் போகுது...வர்றேன்"-னு கிளம்பிட்டாரு...
கொடுத்த 2 பேரும் "டேய் நீங்க 2 பேரும் கொடுக்க வேண்டியது தானே...இப்போ உங்க 2 பேரோட சேத்து காசு கொடுத்த எங்களோடதும் நிறுத்தி வச்சுட்டா என்ன பண்றது"-னு முறைக்கறானுங்க..
"அதெல்லாம் கரெக்டா நடந்துப்பாங்க..உங்களோடது முதல்ல வந்துடும் விடுங்கடா"-னு அவனுங்கள தேத்தி அனுப்பியாச்சு...இருந்தாலும் மனசுல ஒரு சின்ன குறுகுறுப்பு...என்ன தான் நடக்கும்னு...
2 வாரம் கழிச்சு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டு விட்டாங்க...அங்க போனா எஸ்.ஐ ஐடி கார்டை வாங்கி பார்த்துட்டு வெரிஃபிகேஷ்னை முடிச்சுட்டு அனுப்பிட்டாரு...ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுவும் இல்ல!!!
பாஸ்போர்ட்டும் 1 மாசத்துல வந்துடுச்சு...காசு கொடுக்காம வேலை ஆகும்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாச்சு
அடுத்தது நான் முழு சுயவுணர்வுடன் லஞ்சம் கொடுத்த கேவலம்....
பொதுவாகவே போக்குவரத்து காவலர்கள் தான் வசூல் ராஜாக்கள்...
என் சித்தப்பா ஒருத்தரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் தான்....இது மாதிரி மடக்கி காசு வாங்கறதுக்கு கேவலமான ஒரு சப்பைக்கட்டு காரணம் சொல்வாரு...
"ஒவ்வொரு தடவையும் நாங்க மடக்கி பிடிச்சு ரூல்ஸ்படி அவனை ஃபைன் கட்ட சொன்னா எவனும் மதிக்க மாட்டான்...நாங்க காசு வாங்கறதால 'இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு பேசாம லைசென்ஸ், இன்சூரன்ஸ் எடுத்துடலாம்'-னு ஒழுங்கா இருப்பாங்க"
லாஜிக் சகிக்கலை....
விஷயத்துக்கு வருவோம்....வண்டி வாங்கின புதுசுல கொஞ்ச நாள் ஆர்.சி புக் வராம இருந்துச்சு... ஒரு நாள் நைட் ஷோ படம் பாத்துட்டு மவுண்ட் ரோட்ல இருந்து வடபழனி ரூம் வரைக்கும் சிக்காம வந்தாச்சு...
வீட்டுக்கு வந்த்தும் ஒருத்தன் ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாப்ல விட சொன்னான்...
வடபழனி சிக்னல்ல கண்டிப்பா நம்ம ஆட்கள் இருப்பாங்க-ன்னு ஒரு குறுக்கு சந்துக்குள்ள போனா அந்த முட்டு சந்துல லைட் எல்லாத்தையும் அணைச்சுட்டு ஜீப்ல இருக்காங்க...
வண்டிக்குள்ள எஸ்.ஐ...வெளிய 3 பி.சி..
முன்னாடி நின்ன ஏட்டு வண்டிய நிறுத்தி டாகுமெண்ட்ஸ் எடுக்க சொன்னாரு...இருந்தாதானே எடுக்கறதுக்கு....
"வண்டி போன வாரம் தான் சார் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கு...டாகுமெண்ட்ஸ் ஊர்ல இருக்கு சார்"
"ஏன் தம்பி, சர்க்கரை-னு கைல எழுதி நக்கினா தித்திக்குமா...வீட்டுல டாகுமெண்ட் வச்சுக்கிட்டு வண்டிய எதுக்கு எடுத்த?? உன் வண்டி தான்னு எப்படி தெரியும்?"
"வண்டி வெளிய எடுக்கறது இல்ல சார்...ஃப்ரெண்டு ஊருக்கு போகனும்கறதால லேட் ஆயிடுச்சேன்னு கொண்டு வந்தோம் சார்..பக்கத்து தெருல தான் சார் வீடு"
"அதெல்லாம் தெரியாதுப்பா..வண்டிய ஓரமா விட்டுட்டு போ...நாளைக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி வண்டிய எடுத்துக்கோ"
இங்க தான் நம்ம அறியாமை தலை விரிச்சு ஆடுது.... வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லைனா கோர்ட்டுக்குத்தான் போகனுமா இல்ல ஸ்பாட் ஃபைன் எதுனா இருக்கா?? ...ரூல்ஸ் எதுவும் தெரியாம அவர்ட்ட என்ன பேசறது...
"சாரி சார்...இனிமே வண்டி எடுக்க மாட்டோம் சார்"
"அதெல்லாம் பேசிட்டு இருக்காதப்பா..வண்டிய விட்டுட்டு போ"
"சார் ஸ்பாட் ஃபைன் எதுனா இருந்தா.."
"சார்...இவங்க ஃபைன் கட்டறாங்களாம்...சாரைப் போய் பாருங்கப்பா"
மனசுக்குள்ள ஃபைன் கட்ட உண்மையாவே ஏதோ ரூல் இருக்கனுமே-னு நினைச்சுக்கிட்டே எஸ்.ஐ பக்கத்துல போய் நின்னோம்..
"200 ரூபாய் எடுங்கப்பா"
"200 ரூபாயா"
"இவங்க வேலைக்கு ஆக மாட்டாங்க ..வண்டி சாவிய கொடுத்துட்டு போங்கப்பா"
ஏட்டு எங்களிடம் பக்கத்து வண்டி காரரை காட்டி "இதோ இவரும் 200 ரூபா கொடுத்துட்டு தானே போறாரு....இல்லனா வண்டிய விட்டுட்டு போங்கப்பா"
இன்னைக்கு கொள்கைக்கு விரோதமா நடக்க வேண்டி இருக்கேன்னு ஃபீல் பண்ணிகிட்டே 100 ரூபாய் எடுத்து
"அவ்ளோதான் சார் இருக்கு"-ன்னு நீட்டினேன்...
வண்டிய விட்டுட்டு போகலாமா-னு யோசிக்க கூட இல்ல...
"இன்னும் 50 ரூபா கொடுப்பா"
"ஊருக்கு போறதுக்கு காசு இல்ல சார்"
"சரி சரி பாத்து போ"
"தாங்க்ஸ் சார்"
உச்சகட்ட கேவலம்...மனசாட்சி ரத்தக்கண்ணீர் விட்டு அழுவுது...
லஞ்சம் கொடுக்கறதை கேவலம்னு பேசிட்டு அதையே செய்துவிட்டு நிற்கும் மகா கேவலம்...
சத்தியமா ரொம்ப ஃபீல் பண்ணினேன்..நம்புங்க...
அடிப்படையா வண்டி ஓட்றவன் தெரிஞ்சுக்க வேண்டியது...வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லனா கோர்ட்டுக்குத் தான் போகனுமா..இல்ல சட்டப்படியான ஸ்பாட் ஃபைன் எதுனா உண்டா...அதுக்கூட தெரியல..
பாஸ்போர்ட் விஷயத்துல கொடுக்க முடியாது-ன்னு சொன்ன என்னால இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியல..
இந்த சம்பவங்க்ளில் இருந்து என் அறிவுக்கெட்டிய விஷயங்கள்:
>> லஞ்சம் கேட்டு நாம முடியாது-ன்னு சொன்னாலும் வேலை நடக்கும்...என்ன கொஞ்சம் தாமதம் ஆகலாம்
>> நம் மேல் எந்த தப்பும் இல்லாத போது நம்மால் தெளிவாக இருக்க முடிகிறது
>> லஞ்சம் வாங்க, கொடுக்க எல்லாருமே ஏதாவது justification வச்சிருக்காங்க.
>> லஞசம் கொடுக்கறோம்-னு தெரியாமலேயே பல இடங்களில் நாம் அந்த இழி செயலை செய்து கொண்டிருக்கிறோம்
>> லஞ்சம் வாங்குபவர்கள் கொடுக்கத் த்யாராக இருக்கிறார்கள் and vice versa...
>> அடிப்படையான விஷயங்களில் கூட நம் விழிப்புணர்ச்சி அதள பாதாளத்தில் தான் இருக்கிறது.
>> தனிமனித ஒழுக்கம் தான் இது மாதிரி இழி செயல்கள் ஒழிய ஒரே வழி (அந்நியன் பட ஒன் லைனோ??)
இதுக்கு மேல ஒன்னும் சொல்லத் தோணல...ஒரே பீலிங்ஸூ...
பி.கு:
1. தலைப்பு மட்டும் கையூட்டுனு வச்சுட்டு மத்த இடத்துல லஞ்சம்-ன் எழுதினது ஏன்-னு தெரியல
2. சொன்ன எல்லா சம்பவங்களிலும் காவல் துறையே வந்ததுக்கு நான் பொறுப்பில்ல...இதுல எந்த உள்குத்தும் இல்ல..
கையூட்ட்ட்ட்டுடுடுடு!!!!!!!
கப்பி | Kappi
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
உண்மை தான். தவறு நம் பக்கம் இருக்கும் போதும், வேறு வழி இல்லாத போதும் இது போன்று லஞ்சம் கொடுக்கும்படி ஆகி விடுகின்றது. எனக்கும் இது போன்ற சம்பவங்கள் உள்ளது. என்னை பொருத்தவரை வ.போ.து. தான் லஞ்சம் அதிகம். அதுக்கு அடுத்து மாநில் அரசு, அதன் பிறகு தான் காவல்துறை. இதில் மக்கள் அதிகம் பாதிக்கபடுவது மாநில அரசு அலுவலகங்களில் தான். ஒரு கையெழுத்து போடுறதுக்கு அவங்க அடிக்கிற கூத்து இருக்கே. பல பதிவுகள் போடலாம்.
//வேறு வழி இல்லாத போதும்//
பல சமயங்களில் "வேறு வழி" இருந்தாலும் போக வேண்டாம் என்ற எண்ணம் பலரிடையே இருக்கிறது
//ஒரு கையெழுத்து போடுறதுக்கு அவங்க அடிக்கிற கூத்து இருக்கே//
ஆம் நாகை சிவா...
அது மாதிரி அவங்க அடிக்கிற கூத்தை அவங்க தவறு என்றே உணருவதில்லை என்பது தான் இன்னும் கொடுமையான விஷயம்..
பதிவில் சொல்ல மறந்தது...என் நண்பன் ஒரு முறை போக்குவரத்து காவலரிடம் 5 ரூபாய் எடுத்து கொடுத்திருக்கான்... கைல அதுக்கு மேல காசு இல்ல....கிடைச்ச வரைக்கும் டீ செலவுக்கு ஆச்சுன்னு அவரும் அதை வாங்கிட்டு இவனை அனுப்பிட்டாரு...
லெவலுக்கு ஏற்ற மாதிரி தான் பணம் வாங்கறதும்...
உங்க கருத்து? Post a Comment