ப்ளஸ்-2 கவிதைகள்

இந்த பதிவில் இடப்போகும் கவிதைகள் நான் பள்ளிக்காலத்தில் எழுதியவை. அவை பற்றி நானே மறந்திருந்த நிலையில் இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்கையில் அந்த பழைய கவிதைப் புத்தகம் கிடைத்தது. இப்போது படித்துப் பார்க்கையில் 'சின்னப் புள்ள தனமாக"த் தான் இருக்கிறது. ஆனால் மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் மனனம் செய்விக்காமல் லெமூரியா-வில் ஆரம்பித்துப் பல தகவல்களைச் சொன்னதோடு தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை வாசிக்கத் தந்த என் தமிழ் ஐயா அருள்ராஜ் தான் நினைவுக்கு வருகிறார்.

நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கல்லூரியில் எங்கள் துறையின் மாத இதழில் எனக்குத் தோன்றுவதை கவிதை என்ற பெயரில் எழுதி வந்தேன். அந்த இதழின் பொறுப்பும் எங்களிடமே இருந்ததால் (உயிர் நண்பன் தான் எடிட்டர்) எந்த கவிதையும் நிராகரிக்கப்பட்டதும் இல்லை. இதில் எனக்கே ஆச்சரியமான விஷயம் சில கவிதைகளுக்குப் பாராட்டுக்கள் வந்தது தான்.

கல்லூரி முடிந்தபின் வாசிப்பு அதிகமானதும் தான் கவிதை எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. சுயமதீப்பிட்டிலேயே என்னுடைய கவிதைகள் பாவப்பட்ட நிலையில் இருந்ததால் கவிதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.

கீழே உள்ள் கவிதைகள் அனைத்தும் நான் 11, 12-ஆம் வகுப்புகளில் படித்த போது எழுதியவை. இப்போது அவற்றைப் படிக்கும்போது பல கவிதைகள் ஏற்கனவே எங்கேயோ படித்து வார்த்தைகளை மட்டும் மாற்றி எழுதியிருப்பது போல் தோன்றுகிறது(அப்போது அப்படி தோன்றியதில்லை!!).

நாற்பது பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருந்தாலும் அவற்றில் தேறியதாக நான் கருதுவதை மட்டும் இங்கு இடுகிறேன்.


கற்றவன் ஒதுங்குகிறான்
கல்லாதவன் பதுங்குகிறான்
அரசியல்வாதியைக் கண்டு!


பதிவில் இடலாம் என்று தைரியம் தந்த இந்த கவிதை(?) பத்தாவது பக்கத்திலதான் கிடைத்தது.

ஒரு நாள் தமிழ் வகுப்பில் ஐயா பத்து நிமிடங்கள் கொடுத்து அதற்குள் நான்கு வரியில் ஒரு கவிதை எழுத சொன்னார். அப்போது நான் எழுதியது கீழே.இதை அப்போது எழுதியபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியும் பெருமையும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

எந்தப் பாம்பு கடித்ததோ..
வானில் எங்கும் நீலம்!

வாயில் நுரை தள்ளியதோ..
அங்கே வெண்மேகம்!


அதே போல் பெரும்பாலான சமயங்களில் சமூக,அரசியல் சார்ந்த கருத்துக்களையே கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன்.

அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியும்
மாணவனின் பாடப் புத்தகமும்
ஒன்றுதான்!
இரண்டுமே பல சமயங்களில்
மறக்கப்படுகின்றன!


எல்லா கவிதைகளுமே வார்த்தைகளை வரிகளாக உடைத்துப்போட்டு எழுதியவையாகவே இருக்கின்றன.

குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஒரு கவிதையின் பகுதி....

குழலினிது யாழினிது வேண்டாம்!
இனியாவது குழந்தைகளை
இனிமையாய் வளர்ப்போம்!


இதையெல்லாம் விட வாக்குமூல கவிதை ஒன்று இருக்கிறது... எனக்கே இப்போது படிக்கையில் சிரிப்பு வருகிறது...பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பத்தில் இதை எழுதி வைத்திருக்கிறேன்...எந்த சூழ்நிலையில் எழுதினேன் என நினைவில்லை..

கற்பனை வறண்டு போகவில்லை
கவிமிகு சொல்லுக்குப் பஞ்சமில்லை
எண்ணும் மனதிலும் குழப்பமில்லை
ஆயினும் என்ன செய்வது
எனக்கு எழுத வரவில்லை!!


இதற்குப் பிறகும் இருபது பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். பல கவிதைகள் கப்பித் தனமாக இருக்கின்றன. ஒரு காதல் கவிதை கூட இல்லை.

இந்த பதிவில் நான் கவிதையென குறிப்பிட்டுள்ள அனைத்தையுமே அப்போது எழுதியதில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வார்த்தைகளுடன் அதே வடிவத்துடன் இங்கு இட்டிருக்கிறேன்.இவை எந்த இலக்கணத்தைக் கொண்டும் எழுதியவை அல்ல. தோன்றிய கருத்துக்களை, வார்த்தைகளை உடைத்துப் போட்டு கவிதை என்று ஆர்வக் கோளாறினால் எழுதி வைத்ததாகவே கருதுகிறேன்.

இந்த கவிதைகளை எழுதியதற்கும் அதற்கென ஒரு பதிவு இட்டதற்க்கும் என்னை நானே மன்னித்துக் கொள்கிறேன்.5 பின்னூட்டங்கள்:

சொன்னது...

---இந்த கவிதைகளை எழுதியதற்கும் அதற்கென ஒரு பதிவு இட்டதற்க்கும் என்னை நானே மன்னித்துக் கொள்கிறேன்.-----

மற்ற கவிதைகளையும் இந்த மாதிரி கலக்கல் கருத்துக்களுடன் இடுங்க சார் :-))

சொன்னது...

வாங்க பாலா..

சொல்லிட்டீங்கல்ல....எல்லா கவிதைகளையும் பதிவுல ஏத்திடுவோம்....

சொன்னது...

ஒழுங்கா நல்ல புள்ளையா அடக்கமா எழுதறத விட்டுட்டு இப்படி கவித எழுதனா இப்படி தான் ஆகும்...ஒரே ஒரு பின்னூட்டம் :((

ஊர்காரர்(பாலராஜன்கீதா) ஒருத்தர் எப்பவும் வந்து தவறாம் பின்னூட்டம் போடுவாரு...அவரு கூட எட்டிப் பாக்கல...

பாஸ்டன் பாலா...நல்லா இருங்க...நல்லாவே இருங்க...

சொன்னது...

உள்ளேன் அய்யா :-)))

நான் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி(இப்போது மேல்நிலை)யில் படித்தேன்.
நீங்கள் ?

//இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்கையில் அந்த பழைய கவிதைப் புத்தகம் கிடைத்தது.//

எதையெல்லாம் மான்டிவிடியோவிற்குக் கொண்டு செல்லலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா ?

சொன்னது...

பாலராஜன்,
நான் விக்டோரியா-ங்க..ரங்கசாமி குளம் பக்கத்துல இருக்குமே அந்த பள்ளி...

/எதையெல்லாம் மான்டிவிடியோவிற்குக் கொண்டு செல்லலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா ? //

:)) ஆம்...