என் இனியத் தமிழ் மக்களே
உங்கள் பாசத்துக்குரிய கப்பி பய இன்று முதல் உருகுவேயிலிருந்து...
வரும்போது சொல்லாம வந்துட்டேன்...கோவிச்சுக்காதீங்க..
கிட்டத்தட்ட 45 மணி நேரமா உட்கார்ந்தே இருப்பதால் பயங்கர களைப்பு...என் பயணக் கட்டுரையை பார்ட் பார்ட்டா பொறுமையா அப்புறமா எழுதறேன்...கவலைப்படாதீங்க...
இங்க வேற ஸ்பானிஷ் கீ போர்ட் கொடுத்துட்டாங்க...தடவி தடவி அடிக்க வேண்டியிருக்கு...இங்க செட்டில் ஆனதுக்கப்புறம் என் சோகக் கதைய ஆரம்பிக்கறேன்..
உருகுவே - வேட்டிய உருவுமா??
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
புரளி!!! ('சினிக்கூத்து' பதிவு)
புரோட்டா வாங்கிக் கொடுத்து புரளி கேக்கற இந்த காலத்துல தானா வந்து காதுல விழுந்த மேட்டரு...
உங்க கிட்ட சொல்லாம இரண்டு நாளா ஒழுங்கான தூக்கம் இல்ல...
கர்நாடகாவுல பெங்களூரிலிருந்து 150 கி.மீ-ல காற்றாலை ஒன்னு இருக்கு. அதுல நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான ராட்சத காற்றாலை விசிறி ஒன்னு இருக்கு (ஒரு விசிறிக்கே ஒரு கோடி ஆகுமாம்...விசிறிகள் கவனிக்க.)
அந்த விசிறில 'R.S.Surya' என்று எழுதி இருந்ததை 'Surya Jothika' என்று மாத்திட்டாங்களாம். இது அந்த ஏரியால வேலை பார்க்கிற நம்பத்தகுந்த வ்ட்டாரம் சொன்ன த்கவல்.
இந்த பதிவினால் ஏற்படப் போகும் நன்மைகள் பற்றி தெரியாமல் "யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன..இதையெல்லாம் ஒரு பதிவா போடனுமா" என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவினால் ஆன பயன்...
1.சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம். வெடி வெச்சு கொண்டாடலாம்.
2.சூர்யாவையோ ஜோதிகாவையோ ஒரு தலையா காதலிச்ச யாராவது தூக்க மருந்தாலோ தூக்கு கயிராலோ தங்கள் காதலை அமரக் காதல் ஆக்கலாம்.. கடைக் காரர்களுக்கு விற்பனை அதிகரிப்பதுடன் மக்கள் தொகையும் குறையும்.
3. மேற்சொன்னவர்கள் மற்றும் ரசிகர்கள் என திரிபவர்கள் மனம் மாறி தங்கள் பொழப்பைப் பார்க்கப் போகலாம்.
4. ஏதாவது பத்திரிகை நிருபர் இதைப் படித்துவிட்டு தானே கண்டுபிடித்த செய்தியாக தன் பத்திரிகையில் வெளியிடலாம். இதனால் பல லட்சம் வாசகர்கள் பயனடையலாம்.
5. இந்த பதிவிற்கு அடிக் கணக்கு (ஹிட் கவுண்ட்!!!) அதிகமாகலாம்.
6. இதைப் படித்து இம்ப்ரெஸ் ஆகிய ஆண்கள் சூர்யா அளவிற்கு காற்றாலை விசிறி இல்லாவிட்டாலும் தங்கள் வீட்டு டேபிள் ஃபேனுக்கு தங்கள் காதலி (அ) மணைவியின் பெயரை வைக்கலாம்.
இப்படியெல்லாம் காரணம் சொன்னாலும் மனசாட்சி உள்ள இருந்து கத்துவது நிற்க மாட்டேங்குது..."போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைச்சு உருப்படற வழியப் பாருங்கப்பு...பொழப்பப் பாக்காம புரளி பேசிட்டு திரியறானுவ"
கப்பி | Kappi 6 பின்னூட்டங்கள்
வகை சினிமா
ப்ளஸ்-2 கவிதைகள்
இந்த பதிவில் இடப்போகும் கவிதைகள் நான் பள்ளிக்காலத்தில் எழுதியவை. அவை பற்றி நானே மறந்திருந்த நிலையில் இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்கையில் அந்த பழைய கவிதைப் புத்தகம் கிடைத்தது. இப்போது படித்துப் பார்க்கையில் 'சின்னப் புள்ள தனமாக"த் தான் இருக்கிறது. ஆனால் மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் வெறும் பாடப் புத்தகத்தை மட்டும் மனனம் செய்விக்காமல் லெமூரியா-வில் ஆரம்பித்துப் பல தகவல்களைச் சொன்னதோடு தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்களை வாசிக்கத் தந்த என் தமிழ் ஐயா அருள்ராஜ் தான் நினைவுக்கு வருகிறார்.
நான் கவிதைகள் எழுதுவதை நிறுத்தி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கல்லூரியில் எங்கள் துறையின் மாத இதழில் எனக்குத் தோன்றுவதை கவிதை என்ற பெயரில் எழுதி வந்தேன். அந்த இதழின் பொறுப்பும் எங்களிடமே இருந்ததால் (உயிர் நண்பன் தான் எடிட்டர்) எந்த கவிதையும் நிராகரிக்கப்பட்டதும் இல்லை. இதில் எனக்கே ஆச்சரியமான விஷயம் சில கவிதைகளுக்குப் பாராட்டுக்கள் வந்தது தான்.
கல்லூரி முடிந்தபின் வாசிப்பு அதிகமானதும் தான் கவிதை எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. சுயமதீப்பிட்டிலேயே என்னுடைய கவிதைகள் பாவப்பட்ட நிலையில் இருந்ததால் கவிதை எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்.
கீழே உள்ள் கவிதைகள் அனைத்தும் நான் 11, 12-ஆம் வகுப்புகளில் படித்த போது எழுதியவை. இப்போது அவற்றைப் படிக்கும்போது பல கவிதைகள் ஏற்கனவே எங்கேயோ படித்து வார்த்தைகளை மட்டும் மாற்றி எழுதியிருப்பது போல் தோன்றுகிறது(அப்போது அப்படி தோன்றியதில்லை!!).
நாற்பது பக்கங்களுக்கு மேல் எழுதி வைத்திருந்தாலும் அவற்றில் தேறியதாக நான் கருதுவதை மட்டும் இங்கு இடுகிறேன்.
கற்றவன் ஒதுங்குகிறான்
கல்லாதவன் பதுங்குகிறான்
அரசியல்வாதியைக் கண்டு!
பதிவில் இடலாம் என்று தைரியம் தந்த இந்த கவிதை(?) பத்தாவது பக்கத்திலதான் கிடைத்தது.
ஒரு நாள் தமிழ் வகுப்பில் ஐயா பத்து நிமிடங்கள் கொடுத்து அதற்குள் நான்கு வரியில் ஒரு கவிதை எழுத சொன்னார். அப்போது நான் எழுதியது கீழே.இதை அப்போது எழுதியபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியும் பெருமையும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
எந்தப் பாம்பு கடித்ததோ..
வானில் எங்கும் நீலம்!
வாயில் நுரை தள்ளியதோ..
அங்கே வெண்மேகம்!
அதே போல் பெரும்பாலான சமயங்களில் சமூக,அரசியல் சார்ந்த கருத்துக்களையே கவிதை என்ற பெயரில் எழுதி வைத்திருக்கிறேன்.
அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியும்
மாணவனின் பாடப் புத்தகமும்
ஒன்றுதான்!
இரண்டுமே பல சமயங்களில்
மறக்கப்படுகின்றன!
எல்லா கவிதைகளுமே வார்த்தைகளை வரிகளாக உடைத்துப்போட்டு எழுதியவையாகவே இருக்கின்றன.
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஒரு கவிதையின் பகுதி....
குழலினிது யாழினிது வேண்டாம்!
இனியாவது குழந்தைகளை
இனிமையாய் வளர்ப்போம்!
இதையெல்லாம் விட வாக்குமூல கவிதை ஒன்று இருக்கிறது... எனக்கே இப்போது படிக்கையில் சிரிப்பு வருகிறது...பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பத்தில் இதை எழுதி வைத்திருக்கிறேன்...எந்த சூழ்நிலையில் எழுதினேன் என நினைவில்லை..
கற்பனை வறண்டு போகவில்லை
கவிமிகு சொல்லுக்குப் பஞ்சமில்லை
எண்ணும் மனதிலும் குழப்பமில்லை
ஆயினும் என்ன செய்வது
எனக்கு எழுத வரவில்லை!!
இதற்குப் பிறகும் இருபது பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். பல கவிதைகள் கப்பித் தனமாக இருக்கின்றன. ஒரு காதல் கவிதை கூட இல்லை.
இந்த பதிவில் நான் கவிதையென குறிப்பிட்டுள்ள அனைத்தையுமே அப்போது எழுதியதில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே வார்த்தைகளுடன் அதே வடிவத்துடன் இங்கு இட்டிருக்கிறேன்.இவை எந்த இலக்கணத்தைக் கொண்டும் எழுதியவை அல்ல. தோன்றிய கருத்துக்களை, வார்த்தைகளை உடைத்துப் போட்டு கவிதை என்று ஆர்வக் கோளாறினால் எழுதி வைத்ததாகவே கருதுகிறேன்.
இந்த கவிதைகளை எழுதியதற்கும் அதற்கென ஒரு பதிவு இட்டதற்க்கும் என்னை நானே மன்னித்துக் கொள்கிறேன்.
கப்பி | Kappi 5 பின்னூட்டங்கள்
வகை கவித..
உருகுவே - வேட்டிய உருவுவேன்
ஊரு பேரே பயமுறுத்துது...
அடுத்த வாரம் உருகுவே போறேன்..ஒரு ஆறு மாசத்துக்கு மாண்டிவிடியோல இருந்து தான் தமிழ்ச் சேவை...
உருகுவேயில் தமிழ்ப் பதிவர்கள் யாராவது உள்ளனரா?? தெரிந்தால் சொல்லுங்கள்..
இந்தப் பதிவை அர்ஜெண்டினாவிலிருந்து பார்த்திருக்கிறார்கள்...உருகுவேயில் இருந்து ஹிட் இல்லை...
அப்புறம் எந்த கட்சிக்காவது தென் அமெரிக்கப் பிரதிநிதி தேவைனா சொல்லுங்க.... ஆஃபரைப் பொறுத்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து வாங்கிய பணம் தீரும்வரை கட்சியின் கொள்கைக்காகப் போராடுவேன்....
அங்க போனதும் எவனாவது ஒரு டாக்ஸிகாரன் "ஸ்பானிஷ் தெரியாத நீயெல்லாம் எதுக்கு இங்க வந்த?"-னு கேக்காம இருக்கனும். அது தான் இப்போதைக்கு ஒரே கவலை!!
கப்பி | Kappi 9 பின்னூட்டங்கள்
வகை உருகுவே, சொந்தக் கதை
கையூட்ட்ட்ட்டுடுடுடு!!!!!!!
சொந்தக் கதையும் சில புரிதல்களும் சந்தேகங்களும் ...
கையூட்டு (எ) லஞ்சம் இருக்கக் கூடாதுன்றது நம்ம லட்சியங்கள்ல ஒன்னு...
'காசு கொடுக்காம ஒன்னுமே நடக்காது' என்று எல்லாரும்(?!) ஒருமித்த கருத்து கொண்ட வ.போ.அ ல நடந்த சம்பவம் முதல்ல...
எல்.எல்.ஆர் எடுக்க போனபோது போக்குவரத்து விதிகளைப் பத்தி ஒருத்தர் வந்து பேசிட்டு, பரிட்சை வச்சாங்க...எல்லாம் முடிச்சு வெளியே வரும்போது ஒருத்தர் 'கொடி நாள்' கலெக்ஷன் பண்ணிட்டு இருந்தாரு...
எனக்கு பெரிய குழப்பம்..."இது உண்மையாவே கொடி நாள் நிதிக்கு தானா...இல்ல இவனுங்க ஆட்டைய போட்றுவாங்களா"-னு யோசிச்சுட்டு இருக்கும்போதே அவரு என்கிட்ட ஒரு ரசீதை நீட்டினாரு..
நான் மெதுவா என்கிட்ட காசு இல்ல-னு சொன்னவுடனே அவரு "கொடுங்க தம்பி...கொடி நாளுக்கு தானே கேக்கறோம்"-ங்கிறாரு...அதுவும் குறைஞ்சது 30 ரூபாய் தரணுமாம்...இது உண்மையாவே கொடி நாளுக்கா இல்ல லஞ்சமா-னு தெரியாமலே 30 ரூபாய் கொடுத்துட்டு வந்தேன்...
வீட்டுக்கு வந்து என் நண்பனிடம் இதை சொன்னா "அவங்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல..எந்த நாளும் கொடி நாள் தான்"-ன்னு சுகி சிவம் ரேஞ்சுக்கு பேசறான்...
லைசென்ஸ் வாங்றதுக்கு டிரைவிங் ஸ்கூல் கார் ஓட்ட கத்துக்கிட்டு அவங்க மூலமா வாங்கினதால லஞ்சம் எதுவும் கொடுக்கல-ன்னு ஒரு திருப்தி...
("நம்ம சார்பா டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கொடுத்திருப்பாரோ??"
"ச்சீ ச்சீ இருக்காது")
அடுத்தது அடிக்கடி நான் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சம்பவம்...
கல்லூரியில நான்காவது வருடம் படிக்கும் போது நாலு பசங்க ஒன்னா சேர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தோம்...கொஞ்ச நாட்கள் அப்புறம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து ஏட்டு ஒருத்தர் வந்தாரு...
"உங்க அப்ளிகேஷன்லாம் வெரிஃபிகேஷனுக்கு ஸ்டேஷன் வந்திருக்கு தம்பி" (ச்சே..ச்சே..எத்தனை 'ஷ')
"அப்படிங்களா...பாத்து அனுப்பிடுங்க..தேங்க்ஸ்ங்க"
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன் தம்பி..அதுக்கு முன்னாடி சில ஃபார்மாலிட்டீஸ் இருக்குப்பா"
"நாங்க எதுனா கையெழுத்து போடனுங்களா??"
"அதில்லப்பா...உங்க நாலு பேரோட டாகுமெண்ட்ஸ்தான் வந்திருக்கு. இதுக்காக தான் நான் ஸ்டேஷன்ல இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கேன் (அரை கிமீ பாஸூ..) அது ம்ட்டுமில்லாம எஸ்.ஐ கையெழுத்து போட்டதும் நான் தான் பாஸ்போர்ட் ஆபீஸ் கொண்டு போய் கொடுக்கனும்...அதுனால ஃபார்மாலிட்டீஸ்லாம் பாத்து முடிச்சுடுங்க"
(அடப்பாவிகளா லஞ்சம் கொடுக்கறது ஃபார்மாலிட்டியா....)
"என்ன ஃபார்மாலிட்டி சார்"
"ஒருத்தருக்கு 400 ரூபா செலவு ஆகும்பா"
சொல்லி முடிக்கறதுக்குள்ள பக்கத்துல இருந்த 2 பேரு பணத்தை எடுத்துட்டு வர போய்ட்டானுங்க....
நானும் இன்னொருத்தனும் மட்டும் நிக்கறோம்...
"இல்ல சார்..பரவாயில்ல...ஃபார்மாலிட்டி-லாம் கொடுக்கறது இல்ல"
"என்ன புரியாம பேசறீங்க..எல்லாரும் கொடுக்கறது தானே"
"இருக்கட்டும் சார்"
"உங்களுக்காகத்தான் தம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கேன்"
"இல்ல சார்.. கொடுக்கறது இல்ல"
அதுக்குள்ள மத்த 2 பேரும் ஆளுக்கு 300 ரூபாயை எடுத்து நீட்டிட்டாங்க
"அப்போ உங்களுக்குத் தான் லேட்டாகப் போகுது...வர்றேன்"-னு கிளம்பிட்டாரு...
கொடுத்த 2 பேரும் "டேய் நீங்க 2 பேரும் கொடுக்க வேண்டியது தானே...இப்போ உங்க 2 பேரோட சேத்து காசு கொடுத்த எங்களோடதும் நிறுத்தி வச்சுட்டா என்ன பண்றது"-னு முறைக்கறானுங்க..
"அதெல்லாம் கரெக்டா நடந்துப்பாங்க..உங்களோடது முதல்ல வந்துடும் விடுங்கடா"-னு அவனுங்கள தேத்தி அனுப்பியாச்சு...இருந்தாலும் மனசுல ஒரு சின்ன குறுகுறுப்பு...என்ன தான் நடக்கும்னு...
2 வாரம் கழிச்சு ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டு விட்டாங்க...அங்க போனா எஸ்.ஐ ஐடி கார்டை வாங்கி பார்த்துட்டு வெரிஃபிகேஷ்னை முடிச்சுட்டு அனுப்பிட்டாரு...ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுவும் இல்ல!!!
பாஸ்போர்ட்டும் 1 மாசத்துல வந்துடுச்சு...காசு கொடுக்காம வேலை ஆகும்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டாச்சு
அடுத்தது நான் முழு சுயவுணர்வுடன் லஞ்சம் கொடுத்த கேவலம்....
பொதுவாகவே போக்குவரத்து காவலர்கள் தான் வசூல் ராஜாக்கள்...
என் சித்தப்பா ஒருத்தரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் தான்....இது மாதிரி மடக்கி காசு வாங்கறதுக்கு கேவலமான ஒரு சப்பைக்கட்டு காரணம் சொல்வாரு...
"ஒவ்வொரு தடவையும் நாங்க மடக்கி பிடிச்சு ரூல்ஸ்படி அவனை ஃபைன் கட்ட சொன்னா எவனும் மதிக்க மாட்டான்...நாங்க காசு வாங்கறதால 'இவனுங்களுக்கு கொடுக்கறதுக்கு பேசாம லைசென்ஸ், இன்சூரன்ஸ் எடுத்துடலாம்'-னு ஒழுங்கா இருப்பாங்க"
லாஜிக் சகிக்கலை....
விஷயத்துக்கு வருவோம்....வண்டி வாங்கின புதுசுல கொஞ்ச நாள் ஆர்.சி புக் வராம இருந்துச்சு... ஒரு நாள் நைட் ஷோ படம் பாத்துட்டு மவுண்ட் ரோட்ல இருந்து வடபழனி ரூம் வரைக்கும் சிக்காம வந்தாச்சு...
வீட்டுக்கு வந்த்தும் ஒருத்தன் ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாப்ல விட சொன்னான்...
வடபழனி சிக்னல்ல கண்டிப்பா நம்ம ஆட்கள் இருப்பாங்க-ன்னு ஒரு குறுக்கு சந்துக்குள்ள போனா அந்த முட்டு சந்துல லைட் எல்லாத்தையும் அணைச்சுட்டு ஜீப்ல இருக்காங்க...
வண்டிக்குள்ள எஸ்.ஐ...வெளிய 3 பி.சி..
முன்னாடி நின்ன ஏட்டு வண்டிய நிறுத்தி டாகுமெண்ட்ஸ் எடுக்க சொன்னாரு...இருந்தாதானே எடுக்கறதுக்கு....
"வண்டி போன வாரம் தான் சார் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கு...டாகுமெண்ட்ஸ் ஊர்ல இருக்கு சார்"
"ஏன் தம்பி, சர்க்கரை-னு கைல எழுதி நக்கினா தித்திக்குமா...வீட்டுல டாகுமெண்ட் வச்சுக்கிட்டு வண்டிய எதுக்கு எடுத்த?? உன் வண்டி தான்னு எப்படி தெரியும்?"
"வண்டி வெளிய எடுக்கறது இல்ல சார்...ஃப்ரெண்டு ஊருக்கு போகனும்கறதால லேட் ஆயிடுச்சேன்னு கொண்டு வந்தோம் சார்..பக்கத்து தெருல தான் சார் வீடு"
"அதெல்லாம் தெரியாதுப்பா..வண்டிய ஓரமா விட்டுட்டு போ...நாளைக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி வண்டிய எடுத்துக்கோ"
இங்க தான் நம்ம அறியாமை தலை விரிச்சு ஆடுது.... வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லைனா கோர்ட்டுக்குத்தான் போகனுமா இல்ல ஸ்பாட் ஃபைன் எதுனா இருக்கா?? ...ரூல்ஸ் எதுவும் தெரியாம அவர்ட்ட என்ன பேசறது...
"சாரி சார்...இனிமே வண்டி எடுக்க மாட்டோம் சார்"
"அதெல்லாம் பேசிட்டு இருக்காதப்பா..வண்டிய விட்டுட்டு போ"
"சார் ஸ்பாட் ஃபைன் எதுனா இருந்தா.."
"சார்...இவங்க ஃபைன் கட்டறாங்களாம்...சாரைப் போய் பாருங்கப்பா"
மனசுக்குள்ள ஃபைன் கட்ட உண்மையாவே ஏதோ ரூல் இருக்கனுமே-னு நினைச்சுக்கிட்டே எஸ்.ஐ பக்கத்துல போய் நின்னோம்..
"200 ரூபாய் எடுங்கப்பா"
"200 ரூபாயா"
"இவங்க வேலைக்கு ஆக மாட்டாங்க ..வண்டி சாவிய கொடுத்துட்டு போங்கப்பா"
ஏட்டு எங்களிடம் பக்கத்து வண்டி காரரை காட்டி "இதோ இவரும் 200 ரூபா கொடுத்துட்டு தானே போறாரு....இல்லனா வண்டிய விட்டுட்டு போங்கப்பா"
இன்னைக்கு கொள்கைக்கு விரோதமா நடக்க வேண்டி இருக்கேன்னு ஃபீல் பண்ணிகிட்டே 100 ரூபாய் எடுத்து
"அவ்ளோதான் சார் இருக்கு"-ன்னு நீட்டினேன்...
வண்டிய விட்டுட்டு போகலாமா-னு யோசிக்க கூட இல்ல...
"இன்னும் 50 ரூபா கொடுப்பா"
"ஊருக்கு போறதுக்கு காசு இல்ல சார்"
"சரி சரி பாத்து போ"
"தாங்க்ஸ் சார்"
உச்சகட்ட கேவலம்...மனசாட்சி ரத்தக்கண்ணீர் விட்டு அழுவுது...
லஞ்சம் கொடுக்கறதை கேவலம்னு பேசிட்டு அதையே செய்துவிட்டு நிற்கும் மகா கேவலம்...
சத்தியமா ரொம்ப ஃபீல் பண்ணினேன்..நம்புங்க...
அடிப்படையா வண்டி ஓட்றவன் தெரிஞ்சுக்க வேண்டியது...வண்டில டாகுமெண்ட்ஸ் எதுவும் இல்லனா கோர்ட்டுக்குத் தான் போகனுமா..இல்ல சட்டப்படியான ஸ்பாட் ஃபைன் எதுனா உண்டா...அதுக்கூட தெரியல..
பாஸ்போர்ட் விஷயத்துல கொடுக்க முடியாது-ன்னு சொன்ன என்னால இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியல..
இந்த சம்பவங்க்ளில் இருந்து என் அறிவுக்கெட்டிய விஷயங்கள்:
>> லஞ்சம் கேட்டு நாம முடியாது-ன்னு சொன்னாலும் வேலை நடக்கும்...என்ன கொஞ்சம் தாமதம் ஆகலாம்
>> நம் மேல் எந்த தப்பும் இல்லாத போது நம்மால் தெளிவாக இருக்க முடிகிறது
>> லஞ்சம் வாங்க, கொடுக்க எல்லாருமே ஏதாவது justification வச்சிருக்காங்க.
>> லஞசம் கொடுக்கறோம்-னு தெரியாமலேயே பல இடங்களில் நாம் அந்த இழி செயலை செய்து கொண்டிருக்கிறோம்
>> லஞ்சம் வாங்குபவர்கள் கொடுக்கத் த்யாராக இருக்கிறார்கள் and vice versa...
>> அடிப்படையான விஷயங்களில் கூட நம் விழிப்புணர்ச்சி அதள பாதாளத்தில் தான் இருக்கிறது.
>> தனிமனித ஒழுக்கம் தான் இது மாதிரி இழி செயல்கள் ஒழிய ஒரே வழி (அந்நியன் பட ஒன் லைனோ??)
இதுக்கு மேல ஒன்னும் சொல்லத் தோணல...ஒரே பீலிங்ஸூ...
பி.கு:
1. தலைப்பு மட்டும் கையூட்டுனு வச்சுட்டு மத்த இடத்துல லஞ்சம்-ன் எழுதினது ஏன்-னு தெரியல
2. சொன்ன எல்லா சம்பவங்களிலும் காவல் துறையே வந்ததுக்கு நான் பொறுப்பில்ல...இதுல எந்த உள்குத்தும் இல்ல..
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
"இந்தி தெரியாத நீயெல்லாம்...."
மொழிப் பிரச்சனையால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஆத்மாவின் கூக்குரல்...
தமிழையே மெட்ராஸ் தமிழ்,மதுரை தமிழ், எதுலயும் சேராத தமிழ்-னு எல்லாத்தையும் கலந்து பேசறவன் நான்...
மதுரைல காலேஜ் படிக்கும்போது 'மெட்ராஸ் பாசை பேசிட்டு திரியறான்'-வாங்க...லீவ்ல காஞ்சிபுரம் வந்தா இஙக இருக்கவனுங்க 'மதுர பாஷை நல்லா கத்துக்கிட்டியே மச்சி'-னு வெறுப்பேத்துவானுங்க....இவனுங்க நடுவுல மாட்டிக்கிட்டு மதுரை தமிழுக்கும் மெட்ராஸ் தமிழுக்கும் மாறி மாறி தவ்விகிட்டு இருந்தேன்..
நம்ம கூட்டத்துல வேற 'ஒவ்வொரு தமிழுக்கும்' ஒரு பையன் இருப்பான்...இவனுங்களுக்கு ந்டுவுல பெரிய identity crisis வ்ர்ற நிலைக்கே போயிட்டேன்...அதுக்கப்புறம் எல்லாத் தமிழையும் mix பண்ணி ஆளுக்கு ஏத்த மாதிரி பேச பழகிட்டேன்...
இதுக்கு நடுவுல ஃப்ரெஞ்ச்,ஜெர்மன் -னு ஆர்வக் கோளாறுல தத்தக்கா பித்த்க்கா-னு கத்துக்கிட்ட மொழிகளும் உண்டு...
ஆனா பிரச்சனை வந்தது இந்தியால தான்...
ஸ்கூல்ல ஒன்பதாம் கிளாஸ் வரைக்கும் ஹிந்தி கத்துக்கொடுத்தாங்க.... இந்த 'தக்ஷின் பாரத்......சபா' வோட புக்கையே text book-ஆ கொடுத்து சொல்லித் தந்தாங்க...அவங்க கத்துக் கொடுத்த கணக்கு படி ப்ராத்மிக், மத்திமா(மத்த பேரு-லாம் மறந்து போச்சு!!) மாதிரி 5-வ்து லெவல் வரைக்கும் படிச்சாச்சு...
அந்த திமிர்ல இந்தி தெரியும்-னு சொல்லிக்கிட்டு திரிஞ்சுட்டு இருந்தேன்....
காலேஜ்லயும் இந்தி படத்துக்கெல்லாம் போனா நாம தான் translator.... படத்துல எதுவும் புரியலன்னாலும் நாமளே ஏதாவது டயலாக் சொல்லி சமாளிச்சுக்கலாம்..ஏன்னா கூட வர்றவங்க இன்னும் நம்மல நம்பிட்டுதான் இருப்பாய்ங்க...
காலேஜ் முடிச்சு மெட்ராஸ் வந்தப்புறமும் மெலொடி,ஈகா-னு போய் நம்ம இந்தி அறிவை வளர்த்துக்கிட்டிருந்தேன்....
இந்தி புலமைக்கு வந்துச்சு ஒரு சவால்...ஆபீஸ்ல இருந்து '2 மாசம் டெல்லிக்கு போய் குப்பை கொட்டுடா'-னு தொரத்திட்டாங்க...
கூட வந்த 3 பேருல ஒருத்தன் உண்மையாவே இந்தி நல்லா பேசுவான்...ஒருத்தன் என்ன மாதிரி..ஆனா படிக்கற காலத்துல எல்லாத்தையும் நல்லா மனப்பாடம் செஞ்சு வச்சுருந்தான்...
இன்னொருத்தர் சுத்தம்..அவருக்கு தெரிஞ்ச ஒரே மொழி மதுர தமிளு தான்...(ஒரு தடவை மனுஷன் தனியா டீக்கடைக்கு போய் 'ஆப் கோ ச்சாய்'-னு கேட்டு 10 நிமிஷம் வெயிட் பண்ணிட்டு அவன் இவரை கண்டுக்காம டீயே குடிக்காம வந்தாரு..)
கிதர்,கித்னா,கஹா,ரொட்டி, ச்சாவல் சாஹியே-னு உயிர் வாழத் தேவையான அளவு இந்தியை வச்சுக்கிட்டு maintain பண்ணிக்கிட்டு இருந்தேன்...
போகப் போக இந்தில பேசற confidence எக்குத்தப்பா அதிகமாயிடுச்சு... ஆட்டோ பேரம் பேசற வேலையே ஏத்துக்கிட்டாச்சு... எல்லா ஆட்டோலயும் மீட்டர் இருக்கும்..பெரும்பாலான ஆட்டோகாரங்க மீட்டர்லயே வருவாங்க...அதுனால ஆட்டோ புடிக்கறது ஈஸியா போயிட்டு இருந்தது...
வழக்கமா நொய்டா-ல இருந்து கன்னாட் ப்ளேஸ்-க்கு 70 ரூபா வாங்குவாங்க...ஒரு நாள் ஒரு ஆட்டோகாரன் மீட்டர்ல வர முடியாதுன்னுட்டான்...
"சாட்(60) ருப்யே சாஹியே"-னான்...அப்போ தான் மூளைக்குள்ள தூங்கிட்டிருந்த இந்தி அறிவு வெளிய வந்து சாட்-னா அறுபதா எண்பதா-னு பட்டிமன்றம் நடத்துச்சு...அவன் 80 ரூபா கேட்டு ஏமாத்த பாக்கறான்னு மண்டைக்குள்ள ஒரு பல்பு...நான் உடனே நமக்கு பழக்கப்பட்ட நம்பர் 'சத்த்ர்'(70)னேன்...
கூட வந்த இந்தி தெரிஞ்ச பய இத கேட்டு நீ பேரம் பேசினது போதும்னு அவன் பேச ஆரம்பிச்சான்..அதுக்குள்ள ஆட்டோ காரனும் முழிச்சுக்கிட்டு எழுபது ரூபாய்க்கு கம்மியா வர முடியாதுன்னுட்டான்...
'சரி..புதுசா 2 வார்த்தை கத்துக்கிட்டதுக்கு 10 ரூபாய்'னு மனசை தேத்திக்கிட்டேன்...
ஆனா அத விட பெரிய அசிங்கம் காத்துட்டிருந்தது அப்போ தெரியாது...
ஒரு வாரம் கழிச்சு கரோல் பாக் போக கிளம்பினோம்..2 பேரு முன்னாடியே அங்க போய் வெயிட் பண்ணிட்டிருந்தாங்க...
ஆட்டோல வழக்கம் போல நானே பேரம் பேசி கிளம்பியாச்சு... ஆட்டோல போகும்போதே அவனுங்க போன் பண்ணி 'Bikanirwala' -ன்ற ஸ்வீட் கடை முன்னாடி நிக்கறதா சொன்னாங்க...
ஆட்டோ சத்தத்துல அவனுங்க என்ன சொல்றாங்க-னு கேக்காம 'bikanwala' போகனும்-னு ஆட்டோகாரன்-ட சொன்னேன்...உடனே அவன் டென்ஷனா திரும்பினான்...
"அது bikanwala இல்ல...bikanirwala...நீ என்ன மெட்ராஸா?? இந்தி ஒழுங்கா தெரியாத நீயெல்லாம் இந்தியனா??"-னான் (சத்தியமா அவன் பேசினது புரிஞ்சுது)
வந்துச்சு கோபம்..."இந்தி தெரிஞ்சாதான் இந்தியனா...உனக்கு தமிழ் தெரியுமா...இங்க இருக்க இவ்வளவு இந்தி தெரிஞ்சா போதும்.."-னு எனக்கு தெரிஞ்ச இந்தில ஆட்டோல இருந்து இறங்குற வரை கத்திட்டு இருந்தேன்...(அத அவன் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை-ன்றது வேற விஷயம்)
'இப்ப என்னடா சொல்ல வர்ற?'-னு நீங்க கேக்கலாம்...
'நீ அசிங்கப்பட்டதுக்கு என்ன பண்றது'-னு உங்களுக்கு தோனலாம்...
ஆனா அந்த ஆட்டோகாரன் அப்படி பேசக் காரணம், இந்த சம்பவத்தோட impact, மொழி தெரியாத ஊரில் மனிதர்கள் படும் பாடு-னு பல sensitive issues இருக்கு...
அதனால moral of the story-ய நீங்களே பின்னூட்டத்துல போடுங்க...
கப்பி | Kappi 47 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், சொந்தக் கதை, பொது
அதிமுக செய்த தவறுகள்
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னமே திமுக தான் ஜெயிக்கும் என ஒருமித்த கருத்து நிலவுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது...
அதற்குள் முதல்வர் கலைஞருக்கு கடிதம் எல்லாம் வந்துவிட்டது...
அதிமுக-வின் தோல்விக்கு அல்லது திமுக-வின் (கூட்டணியின்?) வெற்றிக்கு காரணங்கள் என்ன?? அதிமுக சறுக்கியது எங்கே?...
2001-2004 அரசு
2001-2004 வரை அதிமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வென்றால் திரும்பவும் அதே போன்ற நிலை வராது என்பதற்கான நிச்சயமற்ற நிலையே நடுநிலையாள்ர்களும் கூட திமுக கூட்டணியை ஆதரிக்க வைத்திருக்கலாம்.
இந்த அரசின் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூட 2004-க்கு முந்தைய அரசை மறக்கத் த்யாராக இல்லை.
கூட்டணி
மதிமுக, விசி கூட்டணி எதிர்பார்த்த அளவு வோட்டு வாங்க உதவவில்லை. தலித் வோட்டுகள் சிதறின.
தென்மாவட்டங்களில் மதிமுக-வின் வோட்டு வங்கியும் போதவில்லை.மக்களிடையே வைகோ மேல் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரசாரம்
வைகோ தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பே பிரசாரத்தைத் துவங்கினாலும் கடைசி நேரத்தில் reinforce செய்யத் தவறிவிட்டார்.
அதே போல் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக பிரசாரம் செய்யாததும் தொண்டர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மாறன் குடும்பத்தைப் சுற்றியே வியூகம் அமைத்ததும் மக்களிடையே சலசலப்பை உண்டாக்கினாலும் அவை வோட்டுகளாக மாறவில்லை.
அதே போல் என்ன தான் சன் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் ஜெயா டிவியை விட சன் டிவியைத் தான் அதிகம் பார்க்கிறார்கள் என்ற முகத்திலறையும் உண்மை....
இலவசங்களை முதலில் நையாண்டி பேசிவிட்டு பின்னர் தானும் அறிவித்தது தோல்வி பயமாகச் சித்தரிக்கப்பட்டது.
'பிரசாரத்தின் போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் ஏன் ஏற்கனவே செயல்படுத்தவில்லை' என்ற கேள்விக்கும் அதிரடியான பதில் இல்லை.
நடிகர்களை வைத்து பிரசாரம் செய்ததும் பயனளித்ததாகத் தெரியவில்லை.
'கருத்துக்கணிப்புகளில் ஜெயிக்கற கட்சிக்கு வோட்டு' என்று திமுக கூட்டணி proactive-ஆக பிரசாரம் செய்ய அதிமுக அப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் வழிமுறை எதுவும் பின்பற்றவில்லை.
மத்திய அரசுடனான உறவு
மத்திய அரசுடன் சூமூகமான உறவு இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது தாங்களே சொல்லிக்கொண்டது மக்களை யோசிக்க வைத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் இருந்தால் மத்திய அரசின் உதவிகள் நேரடியாகத் தமிழகத்துக்கு வரும் என்ற மாயையை உருவாக்கவே இந்த விஷயம் பயன்பட்டது.
அரசின் செயல்பாடு
சட்டமன்றம் ஆளுங்கட்சியின் செயற்குழு கூட்டம் போல் நடந்தது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மற்றும் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களின் செயல்பாடும் ஏமாற்றத்தியே அளித்தன.
மக்களுக்கு உதவக்கூடிய பல நல்ல திட்டங்கள் அரசு கொண்டுவந்தாலும் முந்தைய திமுக அரசின் திட்டங்களைக் கிடப்பில் போட்டது, அரசுப் பணியாளரிகள் வேலை நீக்கம், TASMAC, இது போல் பல விஷயங்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது.
அரசு மாற்றம்
மக்களிடையே ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவு. இதை அதிமுக-வின் தவறு என குறிப்பிட முடியாவிட்டலும் இந்த அரசு மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தால் ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் யோசிக்க மாட்டார்கள்.
இது போக பல காரணங்கள் உள்ளன...சசிகலா குடும்பம், அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவாக இல்லாதது, பல விஷயங்களில் அரசு கொண்ட சார்புநிலை...இது போல் பல...
இந்த தேர்தலை திமுக கூட்டணியின் வெற்றியாகக் கொள்ளாமல் அதிமுக-வின் தோல்வியாகக் காண்பதே மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள உதவும்.
கப்பி | Kappi 3 பின்னூட்டங்கள்
வகை பொது
ஜூவி ஆவி...திமுக கையில் சாவி...
திமுக கூட்டணி 207..
அதிமுக கூட்டணி 26..
பாஜக 1..
ஏற்கனவே ஜூ.வி-யின் கருத்துக்கணிப்புக்கு வைகோ தேவையான அளவு பப்ளிசிட்டி கொடுத்ததால் இந்த கணிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது...
எந்த கூட்டணிக்கும் க்ளீன் ஸ்வீப் கிடைக்காது என்று ஒருமித்த கருத்து பரவி வந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜூ.வி கருத்துக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 207 இடங்களில் முன்னணி எனக் கூறியுள்ளது...
disclaimer-ல் இருபது தொகுதிகள் வரை ரிசல்ட் மாறலாம் என்கிறார்கள்...
திமுக கூட்டணிக்கும் அமோக வெற்றி வாய்ப்பைக் கொடுத்தாலும் திமுக(117) தனித்து ஆட்சி அமைப்பது முடியாது என்றே கணித்திருக்கிறார்கள்..
பல தொகுதிகளில் நூலிழை முன்னணி என்றே இந்த கணிப்பில் குறிப்பிட்டாலும் திமுக-விற்கு இது 'லாஸ்ட் மினிட் அட்வான்டேஜை' தரும்...
அதிமுக ஆட்சிமுறை குறித்து அதிருப்தி அலை இல்லை என்றும், திமுக முன்னணிக்கு மக்கள் ஆட்சிமாற்றத்தை விரும்புவதே திமுக முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது...2004 தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் மீதான கசப்பு நீங்காததும் காரணம்....
நாடாளுமன்ற தொகுதி வாரியாக வெளியாகியுள்ள இந்த கணிப்பு 2004 தேர்தல் போன்ற pattern-னே திரும்ப வரும் என்கிறது...இந்த 40-ல் அதிமுக கூட்டணி எந்த தொகுதியிலும் அது உள்ளடக்கிய அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னணியில் இல்லை...
சென்னையில் ராயபுரம், ஆர்.கே.நகர்,ஆலந்தூர் தவிர மற்ற தொகுதிகளில் திமுக முன்ன்ணி என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை...ஆனால் பல தலைகளுக்கு இந்த கணிப்பு 'ஆப்பு' என் கூறியிருக்கிறது...
முக்கியமாக, விஜயகாந்த்...கட்சியில் அவர் மட்டுமாவது ஜெயிப்பார் என பரவலாக் கருதி வந்த நிலையில் கேப்டன் விருத்தாசலத்தில் இரண்டாவது இடம்!!!திமுக வோட்டைப் பிரிப்பார் என மற்ற கணிப்புகள் சொல்ல ஜூவி அவர் பிரிக்கப்போவது விடுதலை சிறுத்தைகள்,அதிமுக வோட்டுகளை என்கிறது...பன்ருட்டியாருக்கும் இரண்டாவ்து இடமே...
அதிமுக-விற்கு முன்னணி என்று குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் பலவும் புதுமுகங்கள் நிற்கும் தொகுதியே...பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என்றே கணிக்கிறது...
இடைத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளில் கூட கும்மிடிப்பூண்டியை மட்டுமே தக்க வைக்க முடிந்திருக்கிறது...காஞ்சியில் பாமக ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது...
தளியில் பாஜக வெல்லவும் அதன் வேட்பாளரே காரணம் என்கிறது கணிப்பு...
திமுக-விற்கு 132-ல் 117 தவிர , காங்கிரஸ் 48-ல் 44, பாமக 31-ல் 27, சி.பி.எம் 13-ல் 12, சி.பி.ஐ 10-ல் 7 என இந்த முன்னணியில் கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது...
அதே நேரத்தில், அதிமுக 188-ல் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது...மதிமுக-வும் 35-ல் நான்கே தொகுதிகள் தான்...மதிமுக,விடுதலை சிறுத்தைகளுடனான கூட்டணி அதிமுக-விற்கு உதவியதாகத் தெரியவில்லை...
இவர்களில் 10 பேர் தனிக்கட்சி ஆட்சி என்றும் 5 பேர் கூட்டணி ஆட்சி என்றும் கணித்திள்ளனர்..
ஆனந்த விகடனில் வெளியாகியிள்ள வாசகர் கணிப்பிலும் 15 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் திமுக-வே வெல்லும் என கணித்துள்ளனர்.இவர்களிலும் பெரும்பாலான வாசகர்கள் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது...
இந்த வாசக்ர்கள் 2004-ல் திமுக ஆதரவாக 40-0 என கணித்தவர்கள் எனக் கொண்டாலும் ஜூ.வி-யின் கணிப்பும், நக்கீரனின் கணிப்பும்(206-28) குமுதம் ரிப்போர்டர்(145-80) கணிப்பும் கூட திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது...
திமுக கூட்டணி வென்றாலும் திமுக தனித்து ஆட்சி அமைக்க இய்லாது என்றே தோன்றுகிறது...
தமிழ்கம் கூட்டணி ஆட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது!!!
கப்பி | Kappi 1 பின்னூட்டம்
வகை பொது
பாம்ம்ம்ம்....பீம்ம்ம்....
'நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று...மதுரை வந்து சேந்துப்புட்டேன் இன்று' - என background intro song மனதுக்குள் ஓட கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.... தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடுதியில் கழித்த முதல் இரவு.....
தியாகராசர் பொறியியற் கல்லூரி....திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துல இருக்க Govt. Aided College.....
மிதமான ragging கலாசாரம் உள்ள கல்லூரி ( 1980s-ல rag பண்ணதுக்காக final year பையனை first year பையன் வெட்டி கொன்னது தவிர குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லை!!! )...
hostel வாழ்க்கை பத்தி கேக்கவே வேண்டாம்..... என்னைப் பொறுத்தவரை day scholars-ஆக கல்லூரியில் படிக்க நேர்ந்தவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள்.....
எல்லா கல்லூரிகளையும் போல் even semester வந்தா ஒரே ஆட்டம் தான்....college day, sports day, culturals day, hostel day,block day...அப்புறம் final year-னா extra-வா 3 மாடிக்கும் ஒவ்வொரு wing day....
இந்த எல்லா days-க்கும், மத்த விழாக்களுக்கும், tour-களுக்கும் பொதுவானது தான் இந்த 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
பெரும்பாலும் எல்லா கல்லூரிகளிலும் 'சல புல' இருக்கும்...அந்த கல்லூரிக்கென்று தனியாக ஒரு பாட்டும் இருக்கும்.....அப்படி TCE-க்கு கிடைத்த அமர பாடல் தான் 'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்'...
'பாம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்' போடுவதற்கு சத்தமாக கத்தினால் மட்டும் போதாது..... எல்லோரும் rhythmic-காக கத்த வேண்டும்....
அனைவரும் வட்டமாக நின்று கொள்ள நடுவில் உள்ளவன் பெருங்குரலெடுத்து ஆரம்பிக்க வேண்டும்...
ந.உ: ஏஏஏ...பாம்ம்ம்ம் பீம்ம்ம் டய்யாங் டக்கர.... கொய்யா மாரி...
குழு:பம்..பம்..பம்..
ந.உ:அப்துல் ரஹீம்...
குழு:பம்..பம்..பம்..
ந.உ.: ரங்காச்சாரி....
குழு:பம்..பம்..பம்.. (அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி...ஒரு 3 4 தடவை repeat பண்ணனும்...)
இதற்குப்பின் 'சல புல' போட வேண்டும்....
'சல புல' பற்றி தெரியாதவர்களுக்காக...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
ந.உ: சல புல சல புல கும்த்தலக்கா....
குழு: ஊ...ஆ...ஊ..ஆ...
இதையே ராகம், தாளம் எல்லாம் மாற்றி பாட வேண்டும்....
புதுப்பேட்டை 'ஒரு நாளில்' melody, remix(composer dream!!) போல் வேகத்தை ஏற்றி இறக்கி கத்த வேண்டும்...இதற்கான முழு பொறுப்பும் நடுவில் உள்ளவனிடமே இருக்கும்...அவன் வேகத்திற்கு ஏற்றவாறு மற்ற்வர்களும் 'ஊ ஆ' வை மாற்றி பாட வேண்டும்....
இந்த அப்துல் ரஹீம்,ரங்காச்சாரி யாரென்று எவனுக்கும் தெரியாது.....பல ஆய்வுகளுக்கு பிறகு அவர்கள் hostel-இன் முதல் வார்டன்களாகத்தான் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தோம்...
இந்த 'பாம் பீம்' மொழி, இனம், டிபார்ட்மெண்ட் அனைத்தையும் கடந்தது....யார் 'பாம் பீம்' போட்டாலும் அதில் பங்கேற்பது பெருமையாக நினைக்கப்பட்டது....
'கண்ட நாள் முதல்' படத்துல லைலா சொல்வாளே அது போல "சந்தோஷம், துக்கம், சேர்வு, பிரிவு, சோர்வு, புத்துணர்ச்சி"-னு எல்லாத்துக்கும் இந்த 'பாம்..பீம்' தான்....
last working day அன்று....
எல்லா department பசங்களும் ஒன்னா சேந்து main block-ல கல்லூரியே அதிர போட்ட அந்த 'பாம்..பீம்'....
ப்ரின்சிபால் வந்து 'போதும் கிளம்புங்க'-னு கிளப்பி விடும் வரையில் போட்ட அந்த 'பாம்..பீம்'....
இதுக்குப் பின் எப்போது 'பாம்..பீம்' போட முடியுமோ என தொண்டை கிழிய அன்று போட்ட 'பாம்..பீம்'....
கடைசி 'பாம்..பீம்' முடிந்ததும் அனைவரையும் சூழ்ந்த அந்த பேரமைதி.......
'பாம் பீம்' பல நினைவுகளை முடிச்சிடும் கயிறாக இருக்கிறது......
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை