சிறுவர்களின் உலகம் - 1 (Innocent Voices)

கடந்த வாரங்களில் பார்த்த சில திரைப்படங்கள் குறித்து:

(Voces Inocentes) Innocent Voices

போர் மக்களின் வாழ்க்கையை சிதைக்கிறது. நாளை குறித்தான கனவுகளை பொய்யாக்குகிறது. அடுத்த நொடி உயிரோடிருப்போமா என்ற அச்சத்தையும் உயிரோடிருந்தாலும் துப்பாக்கி குண்டுகளுக்கிடையே நிம்மதியைத் தொலைத்து வாழும் நிர்கதியை தருகிறது. போர் ஆண்/பெண், சிறுவர்/பெரியவர் என்ற பேதமின்றி யாவரையும் தன் கோரக்கரங்களால் இறுக்குகிறது. உள்நாட்டுப் போர்கள் சாமான்யர்களை நேரடியாகத் தாக்கி உறவுகளையும் உடைமைகளையும் பறித்து அவர்களின் எதி்ர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

எண்பதுகளில் எல் சல்வதோரில்(El Salvador) இராணுவத்திற்கும் கொரில்லா படையினருக்கும் இடையில் நடந்த உள்நாட்டுப் போரினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் Voces Inocentes (Innocent Voices). பதினொரு வயது சிறுவனான சாவா(Chava)வின் தந்தை போரின் காரணமாக குடும்பத்தை நிராதரவாக விட்டு அமெரிக்கா சென்றுவிடுகிறார். போரினால் அக்கிராமமே சீரழிந்து போயிருக்கின்றது. பன்னிரண்டு வயதான சிறுவர்கள் கட்டாயமாக இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் கொரில்லா படையினரும் சிறுவர்களை போரில் ஈடுபடுத்துகின்றனர். சாவா இராணுவத்திடம் இருந்து தப்பித்தானா அல்லது போர்முனையில் நிறுத்தப்பட்டானா என்பதை மிகச் சிறப்பாகத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.





சாவாவின் கிராமம் இராணுவ முகாமுக்கும் கொரில்லா படையினரின் வசமுள்ள பகுதிகளுக்கும் இடையில் இருக்கின்றது. இரவுபகல் பாராமல் இரு தரப்புக்குமிடையே போர் தொடர்கிறது. இப்போரினால் இருதரப்பு வீரர்கள் மட்டுமின்றி கிராமவாசிகளும் உயிரிழக்கின்றனர். பொதுமக்களிடமிருந்து உணவுப் பண்டங்களும் பணமும் இராணுவத்தால் பறிக்கப்படுகின்றன. இளம்பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். கொரில்லாவுக்கு உதவுவதாக சந்தேகப்படும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். பன்னிரண்டு வயதான சிறுவர்கள் கட்டாய இரானுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வர மறுக்கும் சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு போர்முனையில் நிறுத்தப்படுகிறார்கள்.

போரின் அச்சுறுத்தலுக்கும் குடும்ப வறுமைக்கும் அப்பாற்பட்டு சாவாவின் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் தாய் கெல்லாவிற்கு(Kella) உதவியாய் பகுதிநேரமாக பேருந்தில் வேலை செய்கிறான். தான் வளர்ந்தபின் தாயையும் தமக்கையையும் எவ்வித குறையுமின்றி பார்த்துக்கொள்ளப்போவதாய் தாயிடம் சத்தியம் செய்கிறான். தன் அக்காவுடன் சண்டையிட்டு விளையாடுகிறான். பள்ளியில் புதிதாக சேர்ந்த சிறுமியின்பால் ஈர்க்கப்படுகிறான். அவளுடன் பேசவும் தயங்கி பின் அவளுடன் நட்பாகிறான். அவனுடைய குதூகலத்தை போரோ அல்லது குடிமக்களைத் துன்புறுத்தும் இராணுவமோ சிதைக்கமுடியவில்லை.





கெல்லாவின் சகோதரன் கொரில்லா படையில் இராணுவத்திற்கு எதிராகப் போரிடுகிறான். அவன் கொடுத்த ரேடியோவில் புரட்சிப்பாடல்களைக் கேட்டபடியிருக்கிறான் சாவா. பன்னிரண்டு வயதான சாவாவின் தோழர்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர். பதினொரு வயதான சாவாவை இராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்றத் துடிக்கிறாள் கெல்லா. இதனிடையே இராணுவத்தை எதிர்த்து கொரில்லா படையில் சேர முடிவெடுக்கும் சாவா நண்பர்களுடன் காட்டிற்குள் செல்கிறான். ஆனால் அங்கு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து தப்பும் சாவா தன் தாயிடம் திரும்பி வருகிறான். கெல்லா அவனை ஒரு ஏஜெண்ட் மூலமாக அமெரிக்காவிற்கு தப்பிக்க வைக்கிறாள். போரின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறான் பதினொரு வயது சிறுவனான சாவா.

இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஆஸ்கர் டொர்ரெஸ்ஸின் (Oscar Torres) சிறுவயது அனுபவமே திரைப்படமாக்கப்பட்டுள்ளது. போர் சாதாரண மக்களின் வாழ்க்கையை குறிப்பாக சிறுவர்களின் உலகை எவ்வாறு சிதைக்கிறது என்பதை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சாவா பதின்ம வயதுக்கே உண்டான குதூகலத்துடன் ஒவ்வொரு நொடியையும் ருசிப்பது அழகாக படமாக்கப்பட்டுள்ளது. தன் தந்தை பிரிந்து சென்றதும் தாயை அரவணைப்பதிலும், புதிதாக பள்ளியில் சேர்ந்த சிறுமியின் பால் ஈர்க்கப்பட்டு அவளுடன் பேசவும் கூச்சப்படுவதிலும் பேருந்தில் வேலை செய்யும் காட்சிகளும் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.





இராணுவத்திடமிருந்து தப்பிக்க சிறுவர்கள் அனைவரும் வீட்டுக் கூரைகளின் மேல் படுத்தபடி ஒளிந்திருப்பதை மேலிருந்தவாறாகக் காட்டும் காட்சி போரின் கொடூரத்தை உணர்த்துகிறது. இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட சாவாவின் நண்பன் அவர்களையே தாக்கும் காட்சி போர் மனித மனங்களை எவ்வாறு சிதைக்கிறது என்பதற்கான காட்டு.

சாவா-வாக நடித்துள்ள கார்லோஸ் (Carlos Padilla) இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான். கெல்லாவாக நடித்துள்ள லியோனர் வரெலா (Leonar Varella)வும் சிறப்பாக நடித்திருக்கிறார். லூயி மண்டோக்கி (Luis Mandoki) இயக்கியுள்ள இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.



15 பின்னூட்டங்கள்:

சொன்னது...

\\போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்த பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\\

நெஞ்சை நெகிழவைக்கும் உண்மை வரிகள்....

சொன்னது...

நோட் பண்ணிக்கிட்டேன் ;)

\\இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\\

;(

சொன்னது...

திவ்யா & கோபிநாத்

_/\_

சொன்னது...

_/\_ ??????

சொன்னது...

இந்த நிமிடமும் எங்கோ ஒரு சிறுவனோ சிறுமியோ அவர்களின் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு போர் முனையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்
//

இந்த நிமிடம், நமக்கு சாவு வரும் என்று சற்றும் எதிர்பாராத மனிதர்கள் பலர், விபத்திலோ, அல்லை கொலை, கொள்ளையிலோ, இறந்தி கொண்டு இருக்கிறார்கள்! என்ன செய்ய!!!! வாழ்க்கைக்கே விடை இல்லாத போது, சாவுக்கு தேடி என்ன பயன்!

சொன்னது...

நல்லதொரு விமர்சனம். ஆம், போரின் கோரப்பிடியில் இந்த தலைமுறை சிக்கினால் அது ஆபத்து, அதே அடுத்த தலைமுறைன்னா பேரழிவு இல்லியா?

சொன்னது...

:(((


:))) Nice Review

சொன்னது...

சூப்பர் கண்ணா! போர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே வலிமிகுந்தவை.

சொன்னது...

A very hard truth this is!!! I would like to invite you to check my last post which is based on a similar thing....

சொன்னது...

விமர்சனம் ரொம்ப நல்லாருக்குப்பா. வாழ்த்துகள்.

சொன்னது...

/போர்முனையிலுள்ள எல்லா சிறுவர்களாலும் சாவாவைப் போல் அதன் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடிவதில்லை/
என்பதுதான் கொடூரமானது.
அறிமுகத்திற்கு நன்றி

சொன்னது...

Dreamzz

வாழ்க்கையே புரிந்துகொள்ளவியலாதொரு விடையைத் தேடிச் செல்லும் ஒரு நெடும் பயணம் தானே :))


இளா

நன்றி!! :)

ஜி

நன்றி மக்கா!!

தம்பி

//போர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே வலிமிகுந்தவை.//

அதே!

நன்றி தம்பியண்ணன்!

சொன்னது...

சதீஷ்

தங்கள் கவிதை அருமை!! பகிர்வுக்கு நன்றி!!


கைப்புள்ள

நன்றி தல! :)


dj

நன்றி!! _/\_

சொன்னது...

சிறுவர்களின் உலகம் என்ற வரிசையில் நீங்கள் எழுதும் எல்லா படங்களையும் பார்க்கப் போகிறேன். இது போல் பல்வேறு கருக்களில் நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தினால் உதவியாக இருக்கும். ஒரு விமர்சகனின் தீவிரத்துடன் படங்களைக் குதறாமல் அதில் உள்ள நல்ல அம்சங்களை விவரித்து படத்தின் மேல் விருப்பம் வருவது போல் எழுதுவது நல்லா இருக்கு. நன்றி.

சொன்னது...

ரவிசங்கர்

//படங்களைக் குதறாமல்//

அதுக்குத்தான் குருவிலாம் இருக்கே..அவ்வ்வ்வ் :))

இத்தொடரில் என்னைக் கவர்ந்த சிறந்த படங்களைக் குறித்து மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன்..அதனால குறைகள் இருந்தாலும் எனக்கு தெரியாம போயிருக்கும்..தெரிந்தாலும் சொல்லாம விட்டிருப்பேனாயிருக்கும்..ஆனால் அவை இப்படங்களின் தரத்தையும் தாக்கத்தையும் எந்தவிதத்திலும் குறைத்துவிடாது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்தான் இவை.

மிக்க நன்றி தல! :)