அம்மாவின் புகைப்படம்

அம்மாவின் அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அழுக்கேறியிருந்தது. முன் எப்போதோ ஏதோவொரு பண்டிகை நாளில் வைக்கப்பட்ட சந்தனத்தின் கறை சட்டங்களில் படிந்திருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்தபோது அவளுக்கு வயது 22. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அட்டையில் வரையப்பட்ட நீல வானத்தின் முன் நின்றுகொண்டிருப்பாள். அருகில் ஒரு மேடையில் பூச்செடி வைக்கப்பட்டிருக்கும். ப்ளாஸ்டிக் பூச்செடியாக இருக்கலாம். அதே நாளில் அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த புகைப்படம் தான் பிடிக்கும். என் அக்காவைக் கருவுற்றிருந்த மூன்றாம் மாதத்தில் எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறாள். பிறந்த மூன்றாம் நாளே ஜுரத்தில் வலிப்பு வந்து என் அக்கா இறந்தாள்.


அப்பாவுடன் சண்டையிட்ட நாட்களில் கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். ஒரு தீபாவளி நாளில் ஏற்பட்ட சண்டையின் உச்சகட்டத்தில் அப்பா அந்த புகைப்படத்தை வீசி எறிந்ததில் கண்ணாடி உடைந்து அறையெங்கும் சிதறியது. அடிவாங்கி களைத்திருந்தவள் ஆவேசம் கொண்டது போல் எழுந்துவந்து கண்ணாடித் துகள்களை பெருக்கிக் கூட்டினாள். அப்பா எப்போதும்போல் வெளியே நின்று புகைக்கத் தொடங்கினார். கண்ணாடித் துகள்களை தெருவோரம் கொட்டிவிட்டு வாசலில் நின்றிருந்த அப்பாவை ரெளத்திரப் பார்வை பார்த்துவிட்டு புகைப்படத்தை சுவற்றில் மாட்டி அறைக்குள் சென்றவள் அன்று மாலை வரை வெளியில் வரவில்லை. மாலை அப்பா அந்த புகைப்படத்திற்கு புதிதாக கரும்பச்சையில் சட்டம் மாட்டிவந்தார்.

நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களது அம்மாக்களின் இளவயது புகைப்படங்கள் எங்காவது இருக்கிறதா என்று என் கண்கள் துழாவும். தினகர் வீட்டில் அவன் அம்மா புகைப்படம் இருக்கும். ஆனால் அது அவன் பிறந்தபிறகு எடுத்ததாக இருக்கவேண்டும். சிறிது வயதானவராகத் தெரிவார். மற்ற நண்பர்கள் வீடுகளில் பார்த்ததில்லை. ஒரு முறை துரையின் அம்மாவைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர்கள் அப்பா வீட்டுப் பரணில் பத்திரமாக இருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவின் புகைப்படத்தின் பிரதி ஊரில் பாட்டி வீட்டுக் கூடத்திலும் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் இருந்ததை விட சிறிது வெளிறிப்போய் இருக்கும். தாய்மாமாவைக் கட்டிகொண்டு பக்கத்து வீட்டிலேயே இருக்கும் பெரியம்மாவின் புகைப்படமோ திருமணமே ஆகாமல் பெற்றோருடனே தங்கிவிட்ட சித்தியின் புகைப்படமோ அங்கு நான் பார்த்ததில்லை.

சித்தப்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மூன்றில் மட்டும்தான் அம்மா இருப்பாள். தாலி கட்டும்போது எடுத்திருந்த புகைப்படத்தில் அம்மாவின் கால் மட்டும் தெரியும். மற்றொரு புகைப்படத்தில் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றபடி ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பாள். மூன்றாவது எல்லோரும் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் எடுக்க எல்லோரும் நின்றபோது அம்மாவைக் காணவில்லை. நானும் மாமாவும் அவளைத் தேடிச் சென்றோம். பின்னறையில் வேலையாட்களுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தவளை அழைத்துவந்து எடுத்த அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாயிருப்பாள்.

சின்ன மாமாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா அவளிடம் "உங்கம்மாவைப் பாருடா...தலையெல்லாம் நரைச்சுப்போய் கிழவி மாதிரி இருக்கா" என்று கிண்டலடித்தார். நான் "உங்களுக்கு மட்டும் நரைக்கலையா?" என்று அவருடன் சண்டையை ஆரம்பித்தேன். அவள் சிரித்தபடி பார்த்திருந்தாள்.

மாமாவிற்கு பெண் குழந்தை பிறந்தபோது அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். குழந்தையை விதவிதமாகப் படம் பிடித்துவிட்டு பின்னர் எல்லோரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் படம்பிடித்துக்கொண்டோம். எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மா தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. பெரியம்மா சித்தியுடன் ஒன்று, அப்பாவுடனும் என்னுடனும் ஒன்று, எல்லோரும் சேர்ந்து ஒன்று என்று மூன்றே புகைப்படங்களுக்குத்தான் வந்து நின்றாள். தனியாக ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. எல்லோரும் கேட்டும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகும் கூட அவள் தனியாக எந்த புகைப்படமும் எடுக்கவிட்டதில்லை. அவளுக்குத் தெரியாமல் பக்கவாட்டில் புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் நேருக்கு நேராக எடுக்கவிடுவதில்லை.

இன்று எப்படியாவது சமாதானப்படுத்தி அவளை ஒரு புகைப்படம் எடுத்தே தீரவேண்டும். இந்த புகைப்படத்தில் இருப்பதுபோல நிற்கவைத்து எடுக்க வேண்டும். வெளியில் நீல வான பின்னணியில். இதில் இருப்பதைப் போலவே. அதற்கு சம்மதிக்கவில்லையென்றால் வீட்டினுள்ளே வைத்தாவது ஒன்று எடுத்துவிட வேண்டும்.

"அந்த போட்டோவைக் கையில வச்சுட்டு என்னடா பண்ற?" காபி ஆற்றியபடியே அருகில் வந்தமர்ந்தாள் அம்மா.

"ஒன்னுமில்ல..சும்மாதாம்மா உன் போட்டோவை பார்த்துட்டிருக்கேன்..ஒரு போட்டோ எடுக்கறேன்..திரும்பு". பக்கத்திலிருந்த கேமராவைக் கையில் எடுத்தேன்.

"ஒன்னும் வேண்டாம் அதை இப்படி கொடுத்துட்டு காபியைக் குடி".

சிரித்தபடி கேமராவை வாங்கி தூர வைத்துவிட்டு தலையில் தட்டினாள். மறுபேச்சின்றி காபி கோப்பையை வாங்கி குடிக்கத் தொடங்கினேன்.



17 பின்னூட்டங்கள்:

சொன்னது...

அம்மான்னா அம்மாதான்!
தயை செய்து அம்மாவை அவள் என்று எழுதுவதை மாற்றிக் கொள்ளுங்கள்.

சொன்னது...

அருமை...;)

சொன்னது...

நல்லா இருக்கு.

சொன்னது...

nalla pathivu..

சொன்னது...

//தயை செய்து அம்மாவை அவள் என்று எழுதுவதை மாற்றிக் கொள்ளுங்கள்./

aarambichaanga...
yappa thamizhan, mariyadhai manasila irundhu varadhu.. varthai maathina ethum maaridathu :P

சொன்னது...

//நான் "உங்களுக்கு மட்டும் நரைக்கலையா?" என்று அவருடன் சண்டையை ஆரம்பித்தேன். அவள் சிரித்தபடி பார்த்திருந்தாள். //

paasakaara payapulla..

சொன்னது...

வாங்க தமிழன்

//தயை செய்து அம்மாவை அவள் என்று எழுதுவதை மாற்றிக் கொள்ளுங்கள்.//

ஹி ஹி..அப்பாவை 'அவன்' என்று ஒருமையில் எழுத ஒப்புவதில்லை...ஒருவேளை அம்மாவுடன் இருக்கும் நெருக்கம் காரணமாக இருக்குமெனத் தோன்றுகிறது :)

ட்ரீம்ஸ் சொல்றதும் பாயிண்ட் தான் :)


கோபிநாத்ஜி

நன்றி அண்ணாத்த :))

சொன்னது...

ரவிசங்கர்

நன்றி _/\_ :)


ட்ரீம்ஸு

நன்னி மக்கா நன்னி :))

சொன்னது...

nice once

சொன்னது...

நல்லாயிருக்கு'ப்பா... :)

சொன்னது...

மக்கா அம்மாவ அழகா சொல்லீருக்கீங்க.

அம்மாவுக்கும் பையனுக்கும்தான் நெருக்கம் அதிகமா இருக்கும்.

சொன்னது...

நிர்மல்

நன்றி :)

ராம்

டாங்கிஸ் அண்ணாத்த :)


ஜேகே

நன்றி மக்கா :)

சொன்னது...

அழகான பதிவு கப்பி!

\அப்பாவை ரெளத்திரப் பார்வை பார்த்துவிட்டு புகைப்படத்தை சுவற்றில் மாட்டி அறைக்குள் சென்றவள் \\

ரெளத்திர பார்வைனா....கோபமான பார்வையா?? இல்ல வெறுப்பான பார்வையா?
வார்த்தை புதிதாக இருந்தது, அதான் அர்த்தம் தெரிந்துக்கொள்ள ஆர்வம்!

ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீங்க, கட்டுரை நடையில் இருந்தாலும் ......படிக்க சுவாரஸ்யமாக இருந்தது!!

சொன்னது...

அம்மா... பையன்... ஒரு போட்டோ.... இதை மூணையும் சேர்த்து ஒரு அழகான நடையிலே இயல்பான கதைச் சொல்லி அசத்திட்டே போ கப்பி...

இன்னொன்னும் சொல்லணும்... உன்னோட கதைகள்ல்ல பெரும்பாலும் மிகவும் நுண்ணிய உணர்வுகளைப் படம் பிடிப்பதாகவே உன் எழுத்துக்கள் அமையுது.. அதைச் சொல்லுற பாங்குல்ல தொடர்ந்து ஜெயிக்குறப்பா... தொடரட்டும் உன் சிறுகதைப் பதிவுகள்

சொன்னது...

நல்ல கதைப்பா கப்பி. கதைன்னு சொல்றதை விடக் கோர்வையா சில காட்சிகளைப் பாத்தேன்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும்.

//இன்னொன்னும் சொல்லணும்... உன்னோட கதைகள்ல்ல பெரும்பாலும் மிகவும் நுண்ணிய உணர்வுகளைப் படம் பிடிப்பதாகவே உன் எழுத்துக்கள் அமையுது.. அதைச் சொல்லுற பாங்குல்ல தொடர்ந்து ஜெயிக்குறப்பா... தொடரட்டும் உன் சிறுகதைப் பதிவுகள்//

டபுள் ரிப்பீட்டே...எழுத்துச் சிற்பி உணர்வு கதை வேங்கை கப்பி வாழ்க.

சொன்னது...

திவ்யா

நன்றி! :)


தேவ்

உங்க பாராட்டு ஊக்கமளிக்கிறது..நன்றிண்ணே :)

கைப்ஸ்

நேத்து சாட்ல பாதில எஸ் ஆனது தப்புதான்...எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம் தல :))

நன்றி _/\_ :)

சொன்னது...

The greates word in the world is
"mother". I have lot of feelings
when i read this chapter.

May be all mothers are dont like to
take the photo. sure, she can like to take the photo with his son.
ask her to take the photo with u...