?! - பிப்ரவரி

எல்லா சனிக்கிழமைகளையும் போலத்தான் சென்ற வாரமும் சோம்பலாக விடிந்தது. போர்வைக்கு வெளியே கைநீட்டி அலைபேசியை எடுத்து நேரம் பார்ப்பதற்குள்ளாகவே கைவிரல்கள் விறைக்க ஆரம்பித்தன. மீண்டும் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு இரண்டு நாட்களுக்கு என்னென்ன திரைப்படம் பார்க்கலாமென்றும் ஆன்லைனில் யார் இருப்பார்கள் என்றும் கிரிக்கெட் விளையாட அழைத்தால் நண்பர்கள் வருவார்களா என்றும் எண்ணியபடி எந்த தடயமுமின்றி மற்றுமொரு வாரமும் கடந்துபோனதை அசைபோட்டபடியிருந்தேன்.

நீண்ட நாட்களாக தொடர்பிலில்லாத நண்பன் ஒருவனிடமிருந்து ஜிடாக் அரட்டைக்கான அழைப்பு எழுந்து உட்கார வைத்தது. அவனுடன் கல்லூரி முடிந்து ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் ஒன்றாக சுற்றியவர்கள். அவன் திருவள்ளூர். விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் ஒன்றாகத்தான் வருவோம். ஏனோ இடையில் இத்தனை வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. எங்களுக்குள் பொதுவான நண்பர்களிடம் பேசும்போது அவனைப் பற்றி விசாரித்திருக்கிறேன். எப்போதாவது ஓர்குட்டில் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்றே பல நண்பர்களுடனான தொடர்பு குறைந்துவருகிறது. ஓர்குட் இருக்கவே பலரின் பெயர்களாவது மறக்காமல் இருக்கிறது.

ஜிடாக் அழைப்பை ஏற்றதும் உடனே பேசினான். கடந்த மாதமே டல்லாஸ் வந்திருக்கிறான். நான் இங்கு இருக்கிறேன் என்பதை தற்செயலாக ஓர்குட்டில் பார்த்திருக்கிறான். ஓர்குட் பக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஊர்ப்பெயரை டல்லாஸ் என்று மாற்றியிருந்தேன். (இன்னும் ப்ளாக்கர் பக்கத்தில் கூட மாற்றவில்லை. சோம்பல்தான். வேறேன்ன). உடனே தொலைபேசி எண்ணை வாங்கி அழைத்தேன். நான் தங்கியிருக்கும் ஏரியாவிலேயே தான் இருந்திருக்கிறான். முகவரி தந்ததும் உடனே கிளம்பிவந்தான்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு. இருவருமே கல்லூரி நாட்களிலிருந்து ரொம்பவும் மாறிவிடவில்லை என்பது அவன் வந்ததுமே தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏழெட்டு வருடக் கதையைப் பேசியபடி இருந்தோம். விடுதி நாள் விழாவின் போது எடுக்கப்பட்ட நிகழ்படத்தில்(4 சிடிகளில்) அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்தையெல்லாம் பார்த்துவிட்டு "இப்படியாடா இருந்தோம்" என்றான் சிரித்தபடி. விடுதி வாழ்க்கையின் மகிழ்வான தருணங்கள், நண்பர்களிடையான சண்டைகள், மன வருத்தங்கள், எதிர்கொண்ட சவால்கள், குடும்பம், நண்பர்களின் திருமணம், பணி மாற்றங்கள் என பேசப்பேச பேசுவதற்கான விஷயம் இன்னும் நிறையவே மீதமிருந்தது. அந்த வாரமே சியாட்டலுக்குச் சென்றுவிட்டான். இதன்பின் அவனை எப்போது சந்திப்பேனோ ஆனால் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வாரயிறுதி மறக்கமுடியாத ஒன்றாகிப் போனது.

***********************************

புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கொடுத்த சுட்டி

Machines 'to match man by 2029' - பிபிசி செய்திக் கட்டுரை


நமக்கெல்லாம் இது எச்சரிக்கை மணி! கி.பி 2029-ல் மெஷின்கள் பதிவெழுதும். சண்டையிடும். மொக்கை போடும். இப்போதே போட்டிக்குத் தயாராகிக் கொள்வோம்!!

****************************

சென்ற வாரம் ஓட்டுநர் உரிமத்திற்கான எழுத்துத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். அன்று முதுகில் தட்டி வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள். எனக்கு இடது கண்ணில் லேசான பார்வைக் குறை உண்டு. ஆனால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லையாதலால் கண்ணாடி அணியாமல் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறேன். கண்பார்வை சோதனையின் போது 'Vision Tester'ல் படிக்கச் சொன்னார். இரண்டு கண்களையும் அதில் பொறுத்திப் பார்த்ததில் மூன்று வரிசைகளில் இருந்ததில் எனக்கு இடது வரிசை காலியாகவே தெரிந்தது. நடுவிலும் வலதுபக்கத்திலும் உள்ள எண்களைப் படித்துக் காட்டினேன். இடது வரிசையில் இருப்பதையும் படிக்கச் சொன்னார். 'இடது வரிசையில் எண்கள் எதுவுமில்லையே' என நான் கேட்க, ஒரு துண்டுச்சீட்டைத் தந்து இடது வரிசையில் ஏதாவது தெரிந்தால் எழுதிக்கொடு இல்லையென்றால் மருத்துவரைப் பார்த்துவிட்டு வா என்று கலாய்த்துவிட்டு அடுத்தவரைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

ஓரளவு தெரிந்த கண் மொத்தமாக ஃப்யூஸ் போய்விட்ட அதிர்ச்சியில் மீண்டும் பார்த்தால் இடது வரிசை காலியாகவே தெரிந்தது. என் மேலிருந்த நம்பிக்கையில் இடது வரிசை காலியாகத் தான் இருக்க வேண்டுமென அந்த அலுவலர் பார்க்காத சமயத்தில் இடது கண் துவாரத்தில் வலது கண்ணைப் பொருத்திப் பார்த்தால் அதிர்ச்சி. இடது வரிசையில் எண்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குத் தெரியவில்லை. இந்தளவுக்கு கண் ஃப்யூஸ் போயிருக்கும் என எதிர்பார்க்கவேயில்லை. வலது கண்ணில் பார்த்து எண்களை மனப்பாடம் செய்துகொண்டு பின்னர் இரண்டு கண்களாலும் படிப்பது போல நடித்து எண்களை எழுதிக்கொடுத்து தப்பித்தேன். உரிமம் வாங்கப்போகும்போது இன்னொருமுறை எப்படியாவது ஏமாற்றவேண்டும். அல்லது அதற்குள் ஒரு சோடாபுட்டியை மாட்டவேண்டும்.

*****************************

எச்ச ஆண்டுகளை(Leap Year) ஒழிக்கவேண்டும். ஒரு நாள் கூடுதலாக வேலை பார்ப்பது பெரும் கொடுமை.

****************************

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலிகள். பள்ளி நாட்களில் ஓசியில் வார இதழ்கள் படிக்கத்தந்து சுஜாதா என்ற பெயரை அறிமுகப்படுத்திய பக்கத்து கடைக்காரரின் சிரைக்காத முகமும், மாவட்ட நூலகத்தில் சுஜாதாவின் புத்தகங்களைத் தேடித்தேடி படித்த நாட்களும், டிவி தொடர்களாக வந்த அவரது நாவல்களும், அறிவியல் கட்டுரைகளும், கற்றதும் பெற்றதும், வேலையில் சேர்ந்தபிறகு வாங்கிக்குவித்த அவரின் புத்தகங்களும், அவரது ஆளுமை குறித்தான பிரமிப்பும் அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும், சினிமாவிற்காக அவர் செய்துகொண்ட சமரசங்களும், நண்பர்களுடனான பல விவாதங்களும் இன்னும் பலவும் நினைவுகளாக நிழலாடுகின்றன.

வாழ்க நின் புகழ்!

*************************

இந்த மாத ?! தத்துவம்

"Everyone is indeed crazy, but the craziest are the ones who don't know they are crazy"

- Paulo Coelho (Veronika decides to die நாவலில்)



அம்மாவின் புகைப்படம்

அம்மாவின் அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அழுக்கேறியிருந்தது. முன் எப்போதோ ஏதோவொரு பண்டிகை நாளில் வைக்கப்பட்ட சந்தனத்தின் கறை சட்டங்களில் படிந்திருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்தபோது அவளுக்கு வயது 22. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அட்டையில் வரையப்பட்ட நீல வானத்தின் முன் நின்றுகொண்டிருப்பாள். அருகில் ஒரு மேடையில் பூச்செடி வைக்கப்பட்டிருக்கும். ப்ளாஸ்டிக் பூச்செடியாக இருக்கலாம். அதே நாளில் அப்பாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த புகைப்படம் தான் பிடிக்கும். என் அக்காவைக் கருவுற்றிருந்த மூன்றாம் மாதத்தில் எடுத்த படம் என்று சொல்லியிருக்கிறாள். பிறந்த மூன்றாம் நாளே ஜுரத்தில் வலிப்பு வந்து என் அக்கா இறந்தாள்.


அப்பாவுடன் சண்டையிட்ட நாட்களில் கண்கள் கலங்க அந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். ஒரு தீபாவளி நாளில் ஏற்பட்ட சண்டையின் உச்சகட்டத்தில் அப்பா அந்த புகைப்படத்தை வீசி எறிந்ததில் கண்ணாடி உடைந்து அறையெங்கும் சிதறியது. அடிவாங்கி களைத்திருந்தவள் ஆவேசம் கொண்டது போல் எழுந்துவந்து கண்ணாடித் துகள்களை பெருக்கிக் கூட்டினாள். அப்பா எப்போதும்போல் வெளியே நின்று புகைக்கத் தொடங்கினார். கண்ணாடித் துகள்களை தெருவோரம் கொட்டிவிட்டு வாசலில் நின்றிருந்த அப்பாவை ரெளத்திரப் பார்வை பார்த்துவிட்டு புகைப்படத்தை சுவற்றில் மாட்டி அறைக்குள் சென்றவள் அன்று மாலை வரை வெளியில் வரவில்லை. மாலை அப்பா அந்த புகைப்படத்திற்கு புதிதாக கரும்பச்சையில் சட்டம் மாட்டிவந்தார்.

நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களது அம்மாக்களின் இளவயது புகைப்படங்கள் எங்காவது இருக்கிறதா என்று என் கண்கள் துழாவும். தினகர் வீட்டில் அவன் அம்மா புகைப்படம் இருக்கும். ஆனால் அது அவன் பிறந்தபிறகு எடுத்ததாக இருக்கவேண்டும். சிறிது வயதானவராகத் தெரிவார். மற்ற நண்பர்கள் வீடுகளில் பார்த்ததில்லை. ஒரு முறை துரையின் அம்மாவைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் வீட்டில் ஆறு பெண்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அவர்கள் அப்பா வீட்டுப் பரணில் பத்திரமாக இருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவின் புகைப்படத்தின் பிரதி ஊரில் பாட்டி வீட்டுக் கூடத்திலும் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். எங்கள் வீட்டில் இருந்ததை விட சிறிது வெளிறிப்போய் இருக்கும். தாய்மாமாவைக் கட்டிகொண்டு பக்கத்து வீட்டிலேயே இருக்கும் பெரியம்மாவின் புகைப்படமோ திருமணமே ஆகாமல் பெற்றோருடனே தங்கிவிட்ட சித்தியின் புகைப்படமோ அங்கு நான் பார்த்ததில்லை.

சித்தப்பாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மூன்றில் மட்டும்தான் அம்மா இருப்பாள். தாலி கட்டும்போது எடுத்திருந்த புகைப்படத்தில் அம்மாவின் கால் மட்டும் தெரியும். மற்றொரு புகைப்படத்தில் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றபடி ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருப்பாள். மூன்றாவது எல்லோரும் சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் எடுக்க எல்லோரும் நின்றபோது அம்மாவைக் காணவில்லை. நானும் மாமாவும் அவளைத் தேடிச் சென்றோம். பின்னறையில் வேலையாட்களுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தவளை அழைத்துவந்து எடுத்த அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாயிருப்பாள்.

சின்ன மாமாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா அவளிடம் "உங்கம்மாவைப் பாருடா...தலையெல்லாம் நரைச்சுப்போய் கிழவி மாதிரி இருக்கா" என்று கிண்டலடித்தார். நான் "உங்களுக்கு மட்டும் நரைக்கலையா?" என்று அவருடன் சண்டையை ஆரம்பித்தேன். அவள் சிரித்தபடி பார்த்திருந்தாள்.

மாமாவிற்கு பெண் குழந்தை பிறந்தபோது அவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். குழந்தையை விதவிதமாகப் படம் பிடித்துவிட்டு பின்னர் எல்லோரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் படம்பிடித்துக்கொண்டோம். எவ்வளவோ வற்புறுத்தியும் அம்மா தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை. பெரியம்மா சித்தியுடன் ஒன்று, அப்பாவுடனும் என்னுடனும் ஒன்று, எல்லோரும் சேர்ந்து ஒன்று என்று மூன்றே புகைப்படங்களுக்குத்தான் வந்து நின்றாள். தனியாக ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. எல்லோரும் கேட்டும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகும் கூட அவள் தனியாக எந்த புகைப்படமும் எடுக்கவிட்டதில்லை. அவளுக்குத் தெரியாமல் பக்கவாட்டில் புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் நேருக்கு நேராக எடுக்கவிடுவதில்லை.

இன்று எப்படியாவது சமாதானப்படுத்தி அவளை ஒரு புகைப்படம் எடுத்தே தீரவேண்டும். இந்த புகைப்படத்தில் இருப்பதுபோல நிற்கவைத்து எடுக்க வேண்டும். வெளியில் நீல வான பின்னணியில். இதில் இருப்பதைப் போலவே. அதற்கு சம்மதிக்கவில்லையென்றால் வீட்டினுள்ளே வைத்தாவது ஒன்று எடுத்துவிட வேண்டும்.

"அந்த போட்டோவைக் கையில வச்சுட்டு என்னடா பண்ற?" காபி ஆற்றியபடியே அருகில் வந்தமர்ந்தாள் அம்மா.

"ஒன்னுமில்ல..சும்மாதாம்மா உன் போட்டோவை பார்த்துட்டிருக்கேன்..ஒரு போட்டோ எடுக்கறேன்..திரும்பு". பக்கத்திலிருந்த கேமராவைக் கையில் எடுத்தேன்.

"ஒன்னும் வேண்டாம் அதை இப்படி கொடுத்துட்டு காபியைக் குடி".

சிரித்தபடி கேமராவை வாங்கி தூர வைத்துவிட்டு தலையில் தட்டினாள். மறுபேச்சின்றி காபி கோப்பையை வாங்கி குடிக்கத் தொடங்கினேன்.



புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்

சரித்திர நாயகன்
புர்ர்ர்ரட்சி புதல்வன்
டர்ரு டான்ஸர்
ஏழரையாவது அதிசயம்
சோதனை நாயகன்
நடன சூறாவ'லி'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
சாம் ஆண்டர்சன் நடித்த 'யாருக்கு யாரோ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!!

படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் பாடல் காட்சிகள்:






சாம் ஆண்டர்சன் ஓர்குட் குழுமம் - http://www.orkut.com/Community.aspx?cmm=43224008



டேய்..யாருடா நீங்கல்லாம்?? எங்கயிருந்துடா நடிக்க வர்றீங்க??? உங்களுக்கெலலாம் மனசாட்சியே இல்லையா??? நீங்க எடுத்ததை ஒருமுறையாவது திரும்ப பார்ப்பீங்களாடா??? படத்தைப் பார்க்கறவங்க நெலமையை யோசிக்கவே மாட்டீங்களா?? நல்லா இருங்கடே!!



?! - ஜனவரி

இரண்டு வாரங்களாக ஜோதா அக்பர் (Jodhaa Akbar) பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக சிறிது ஏமாற்றி வந்த ரஹ்மான் Back to form. இன் லம்ஹோ(In Lamho) பாடலில் மதுஸ்ரீ சொக்க வைக்கிறார். சுஃபி இசையில் ரஹ்மானின் பாடல்கள் எப்போதுமே அட்டகாசமாக இருக்கும். இந்த படத்தில் க்வாஜா மேரே க்வாஜா(Khwaja Mere Khwaja) பாடல். ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஜாவேத் அலி பாடியிருக்கும் Jashn-E-Baharaa அருமையான மெலடி. Azeem-O-Shaan Shehansha பாடல் அதிரவைக்கிறது. Mann Mohana பாடல் இன்னொரு இனிமையான் மெலடி. Jashn-E-Bahara பாடலுக்கான Instrumentalலில் புல்லாங்குழல் மனதை வருடுகிறது. Khwaja பாடலுக்கான Instrumental அருமை. பிப்ரவரி 15 திரைப்படம் வெளியாகிறது.



*******************************

http://isaipuyal-arrahman.blogspot.com - 'ரோஜா'வில் ஆரம்பித்து 'அழகிய தமிழ் மகன்' வரை ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் கிடைக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இளமைக்காலம், விளம்பரப்படங்களில் பணியாற்றியது குறித்தான குறிப்புகளும் அவர் வாங்கிய விருதுகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தனி பக்கங்களில் படம் குறித்த தகவல்களுடன் பாடல்களைத் தந்திருப்பது சிறப்பு. பாடல்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

*******************************

சமையலில் கற்றுக்கொண்ட மூன்று முக்கிய பாடங்கள்

* நாம் சமைப்பதை கேவலமாக இருப்பதாக நாமே சொல்லிவிடக் கூடாது
* நாம் சமைப்பது தான் சிறந்தது என்று பெருமிதம் கொள்ள வேண்டும்
* சாப்பிடும்போது நாக்கு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட வேண்டும்

மூன்றாவது அதிமுக்கியமானது

சமையலில் ஓரளவு தேறிவிட்டேன் என்றே சொல்லவேண்டும். உருகுவேயில் இருந்தபோது நான்கைந்து வகைகள் மட்டுமே தெரியும். இப்போது புதிது புதிதாக முயற்சித்து எது செய்தாலும் சாப்பிடக்கூடிய அளவிலாவது வந்துவிடுகிறது. அறையில் நால்வருமே நன்றாக சமையல் செய்வதால் தினம் தினம் விருந்து தான்.

*******************************

நடுங்க வைக்கும் குளிரில் கலிபோர்னியாவின் சான் டியகோ(San Diego)வில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு சென்றிருந்தோம். தண்ணீரில் நனையக்கூடிய ஒரு விளையாட்டிற்கு நாங்கள் தயங்கிக்கொண்டே சென்றோம். தன் தாத்தாவுடன் வந்திருந்த சுட்டிப்பெண் 'எனக்கு குளிரவில்லை. முழுதாக நனைய வேண்டும்' என்று கூறியபடியே குதூகலத்துடன் எங்கள் அருகில் அமர்ந்தாள். அந்த வண்டி நகரவும் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம். குளிரில் உடல் நடுங்கினாலும் அதை முகத்தில் காட்டாமல் 'எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயமே இல்லை' என்று உற்சாகமூட்டினாள். பாதி தூரம் கடந்ததும் 'என்னால் இதற்கு மேல் குளிர் தாங்க முடியாது' என்று புன்னகைத்தபடியே தன் தாத்தாவை அணைத்து அவர் மடியில் படுத்துக்கொண்ட அந்த சிறுமியின் முகத்தை இன்னும் சில நாட்களுக்கு மறக்க முடியாது.

*******************************

சென்ற மாதம் மயாமி சென்றிருந்தபோது தங்கியிருந்த நண்பரின் வீடு இன்னும் பயமுறுத்தியபடி இருக்கிறது. கேரளா போல் இருந்த அந்த பகுதியில் அவர் ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வீட்டுக்கு சொந்தக்காரர் நடுத்தர வயதான அர்ஜெண்டின பெண்மணியாம். நாங்கள் சென்றபோது அவர் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் மூன்று பூனைகள் வளர்க்கிறார். இரண்டு கருப்பு பூனைகள் வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. பார்வைக் குறையுள்ள கிழட்டு வெள்ளைப் பூனை வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு காதும் கேட்காதாம். பார்க்கும்போதே பயமாகத்தான் இருந்தது. இரவு உறங்கும்போது ஹாலில் இருந்த பூனை காலையில் கட்டிலுக்கு அடியில் எப்படி வந்ததென இன்னும் தெரியவில்லை. கதவு மூடியபடிதான் இருந்தது.

அந்த பெண் வீடு முழுக்க கலைப்பொருட்கள் வாங்கி அடுக்கிவைத்திருக்கிறார். வெண்கல சிலைகள், அழகிய வேலைப்பாட்டுடனான திரைச்சீலைகள், மரத்தினாலான மேசை நாற்காலிகள், சிறிய பலிங்கு சிலைகள் என வீடு முழுக்க நிரப்பியிருக்கிறார். மின்விசிறியில் ஏலியன் முகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஸ்பானிஷ் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைத்திருந்தார். சுவரில் அங்கங்கே மிருகவதை எதிர்த்து வாசகங்கள். இந்த பொருட்களையெல்லாம் குறைவான விலையிலோ அல்லது இலவசமாக கிடைக்கும்போதோ தான் வாங்கி வருவார் என நண்பர் சொன்னார். அந்த வீட்டைப் பார்க்கும்போது ஒரு சேட்டு வீடு போன்றோ பேய் பங்களா போன்றோ அல்லது நாடக கம்பெனி போன்றோ தான் தோன்றியது.


*******************************

தாய் குரங்கைக் கொன்றுவிட்டு அதன் குட்டியை காப்பாற்றும் சிறுத்தை!!




*******************************

இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ வெள்ளி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு இரவு 12 வரை, உறங்கும் நேரம் தவிர, தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க யோசித்திருக்கிறேன். முற்றிவிட்டது. இல்லையென்றாலும் பார்த்து முடிக்கையில் முற்றிவிடும்.

*******************************

இந்த மாத ?! தத்துவம்

Forrest Gump திரைப்படத்திலிருந்து...

"Life is like a box of chocolates. You never know what you're gonna get."


*******************************