எழுதியதில் பிடித்தது - 2007

சர்வேசன் >> சிவிஆர் >>


It does not matter how slowly you go so long as you do not stop

-Confucius




சென்ற ஆண்டு எழுதிய மொத்த இடுகைகள் -

இந்த பதிவில் - 34

சங்கத்தில் - 8

கீத்துக்கொட்டாயில் - 7


எழுதிய பிறகு "ஏன் எழுதினோம்" என்று தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு. அப்படியான பதிவுகள் தொடர்ந்து எழுதுவதற்கே ஒவ்வாமையையும் அயர்ச்சியையும் ஏற்படுத்திவிடுவதால் பெரும்பாலும் தவிர்க்க முயல்வேன். அப்படியும் மொக்கைகளுக்கு குறைவில்லாமல் தான் இருக்கிறது.

திரைப்படம் குறித்தான பதிவுகள் விமர்சனம் என்பதை விட அத்திரைப்படம் குறித்தான அறிமுகப் பதிவாகவேயிருக்கும். மோசமான திரைப்படங்களைப் பார்த்து கடுப்பாகி மொக்கை என விமர்சனம் எழுதுவதை விட நல்ல படங்களைப் பரிந்துரைப்பது எளிதாக இருக்கிறது.

சென்ற ஆண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். என்னளவில் திருப்திகரமாகவே இருந்தன. நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் சட்டியிலும் இல்லை. அகப்பையிலும் வரவில்லை. (என்னால் கவிதை எழுத முடியாதென்பதை எப்போதோ உணர்ந்துகொண்டேன்)

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொசுவத்தி சுத்துவது பொழுதுபோக்கு. கொசுவத்தி பதிவுகள்
நிறையவே இருக்கும். நிகழ்காலத்தை மறக்க கடந்த காலத்தை மனதில் ஓட்டிப்பார்ப்பது ஒருவித போதைதான்.

சங்கத்தில் எழுதிய பதிவுகளும் இங்கு எழுதிய சில பதிவுகளும் கிச்சுக்கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதியவை.

சென்ற வருடம் நிறைய ஊர் சுற்றினாலும் பாணதீர்த்தம்-குற்றாலம் குறித்தும் பழவேற்காடு குறித்தும் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

மற்றபடி மொக்கைகள் நிறையவே இருக்கும். பிடித்த, 'பிடித்த' வீடியோக்களை இட்டிருக்கிறேன். 'ஃபீலிங்க்ஸு' என ஓவராக பொங்கியிருக்கிறேன். குறிப்பிடும்படி ஒன்றுமில்லை.


சங்கத்தில் அட்லாஸ் ஆனதும் நிரந்தர சிங்கமானதும்(சிங்கம் சும்மாவே இருந்தாலும்) பெருமை. சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவுகளுக்கான பரிந்துரையில் பாஸ்டன் பாலா இடம் கொடுத்தது மிகப் பெரிய அங்கீகாரம்.


வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதிவிடுவது என்று நல்ல மூடில் இருக்கும்போதெல்லாம் முடிவெடுத்தாலும் தொடர்ந்து கடைபிடிப்பதில்லை. மனசாட்சி "சரக்கு அவ்வளவுதான்டா சோம்பேறி" என்று கூவுவதை ஸ்மைலி போட்டு மழுப்பிவிடுகிறேன். மேலே கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவத்தை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கலாம்.




பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம், ஆப்புக்கு ஆப்பு என இத்தொடரில் எழுத அழைத்த அண்ணன் சிவிஆருக்கு பிடித்த பதிவு - இராஜேந்திரன் கதை



நான் அழைக்கும் ஐவர் (மன்னிச்சிருங்க மக்கா :D)

கைப்ஸ்
இராம்
ஜி
தம்பி
இளா



One Hundred Years of Solitude

Love in the time of Cholera, Of Love and Other Demons நாவல்களை வாசித்த நாட்களிலிருந்தே மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude (நூற்றாண்டு காலத் தனிமை) நாவலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த இரு நாவல்களும், இணையத்தில் படித்திருந்த மார்க்வெஸ்ஸின் கட்டுரைகளும், நூற்றாண்டு கால தனிமை நாவல் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்த நாவலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சென்னையில் அலுவலகத்தில் நடந்த ஒரு சிறிய புத்தக கண்காட்சியில் வாங்கிய நான்கு புத்தகங்களில் இரண்டு மார்க்வெஸ் எழுதியது. One Hundred Years of Solitude மற்றும் மார்க்வெஸ்ஸின் சிறுகதை தொகுப்பு. முதலில் கையில் எடுத்தது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை. இந்த பதிவு அந்த புத்தகம் குறித்த என்னளவினால் ஆன குறிப்பே. அதைக் குறித்த முழுமையான பதிவை எழுதிவிட முடியுமெனத் தோன்றவில்லை.


இந்த நாவல் கற்பனை நகரமான மகந்தோ(Macondo) என்ற நகரில் வாழ்ந்த பொயந்தியா(Buendia) வம்சாவளியினரின் கதை. நூறாண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் மகந்தோ நகரின் வளர்ச்சி, வீழ்ச்சி, கொண்டாட்டங்கள், துக்கங்கள், காலச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறாமலிருந்தவைகள் என அந்நகருடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளை பொயந்தியா குடும்பத்தினர் வாயிலாக சொல்லியிருக்கிறார் மார்க்வெஸ். ஹோசே ஆர்காதியோ பொயந்தியா(Jose Arcadio Buendia)வும் அவன் குழுவினரும் மகந்தோ நகரை நிர்மானித்து அங்கு வாழ்கிறார்கள். அவன் மனைவி உர்சுலா(Ursula). பொயந்தியா எப்போதும் கற்பனையில் வாழும் மனிதன். எப்போதாவது மகந்தோவிற்கு வரும் நாடோடிகளே அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்பு. நாடோடிகள் கொண்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளாலும் கருவிகளாலும் ஈர்க்கப்படும் பொயந்தியா அவர்களுடன் நட்புகொள்கிறான். உர்சுலா குடும்பத்தினை தன் கட்டுப்பாட்டுள் வைத்திருப்பவள். அவளுக்குத் தெரியாமல் அந்த குடும்பத்திலோ மகந்தோ நகரிலோ எதுவும் நடப்பதில்லை. அவர்களது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை இந்த நாவல் மூலம் சொல்கிறார் மார்க்வெஸ்.


பொயந்தியா தம்பதியினரின் மகன் ஆரெலியனோ பொயந்தியா (Aureliano Buendia) அரசாங்கத்திற்கெதிராக போரில் இறங்குகிறான். பதினெட்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறான். மற்றொரு மகன் ஹோசே ஆர்காதியோ(Jose Arcadio) நாடோடிகளுடன் சென்றுவிடுகிறான். அவர்களின் மகள் அமராண்தா(Amaranta) காதலை நிராகரித்துவிட்டு மணமாகாமல் இருக்கிறாள். ஹோசே ஆர்காதியோவின் மகன் ஆர்காதியோ, ஆர்காதியோவின் மகள் ரெமெதியோ(Remedios), மகன் ஆர்காதியோ செகுந்தோ(Arcadio Secundo), அவனது மனைவி பெர்னாண்டா(Fernanda), இவர்களது பிள்ளைகள் என நாவல் முழுக்க கதாபாத்திரங்களால் நிரம்பிவழிகிறது.


ஒரே குடும்பத்தினராயினும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணாதிசியங்கள். உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரங்களும் அவர்களின் செய்கைகளும் அதை மார்க்வெஸ் விவரிக்கும் விதமும் நம்மை ஆச்சரியப்படுத்தும். குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தும் ஒவ்வொருவரும் தன்னளவில் தனிமையிலேயே இருக்கின்றனர். அந்த நூற்றாண்டு காலத் தனிமையின் கதையே இந்த நாவல்.


இறந்துபோனவர்கள் தாகத்துடன் நடமாடுவது, இறந்தவர்களுடன் நேருக்கு நேராக பேசுவது, நாடோடிகளின் கண்டுபிடிப்புகள், மஞ்சள் பட்டாம்பூச்சிகள் புடைசூழ வரும் கதாபாத்திரம், வீட்டினுள் நிர்வாணமாக அலைந்துகொண்டிருக்கும் ரெமெதியோஸ் என்ற அழகி, பார்வை மங்கிவிட்ட பிறகும் தன் பிற உணர்ச்சிகள் மூலம் அனைத்தையும் பார்த்து வரும் உர்சுலா, ஐந்து வருடங்கள் தொடர்ந்து பெய்யும் மழை, பல தலைமுறைகளாக வீட்டை ஆக்கிரமிக்கும் எறும்புகள், எதிலும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத சோபியா(Sofia), வீட்டில் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று செய்யும் பெர்னாண்டா, வாலுடன் பிறக்கும் குழந்தை, வெள்ளியை உருக்கி மீண்டும் மீண்டும் மீன்கள் செய்யும் கலோனல் ஆரெலியெனோ, புத்தகங்களில் மூழ்கியிருக்கும் இன்னொரு தலைமுறை ஆரெலியெனோ, பொயந்தியா குடும்பத்தினரின் நூற்றாண்டு கால வாழ்வை முன்னமே கணித்து எழுதிய நாடோடி என நாவல் முழுக்க நம்மை மயக்கச் செய்யும் எழுத்து. 'மேஜிக்கல் ரியலிசம்' குறித்து எனக்கு தெளிவான புரிதல் கிடையாது என்ற போதிலும் இந்த நாவலில் அதை பொருத்திப் பார்க்க முடிந்தது.


இந்த நாவலைப் படித்து முடிக்க ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பல பக்கங்களை மீண்டும் மீண்டும் படித்தேன். மீண்டும் மீண்டும் அவற்றைப் படிப்பதே சுகானுபவமாக இருந்தது. குறிப்பாக பெர்னாண்டாவின் எண்ணவோட்டமாக இரண்டு பக்கங்களுக்கு மேல் முற்றுப்புள்ளி இல்லாமல் செல்லும் ஒரு பகுதியை நான்கைந்து முறை வாசித்து மகிழ்ந்தேன். வாசிக்கையில் இந்நாவலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் வெறுமையையும் விட்டுச் சென்றிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த நாவலை படித்து முடிக்கவே முடியாதென்று கருதி ஒரு வாரம் படிக்காமல் இருந்தேன். இப்போது படித்து முடித்ததும் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தோன்றுகிறது.


ஆரெலியெனோக்களும், ஆர்காதியோகளும் ரெமெதியோக்களும் நிறைந்திருக்கும் இந்நாவலில் பெயர்கள் குழம்பும் சமயங்களில் நாவலின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் பொயந்தியா வம்சாவளியினரின் பட்டியலை அடிக்கடி பார்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. மகந்தோவின் வாயிலாக மார்க்வெஸ் காலச் சுழற்சியில் பல மாற்றங்களையடைந்து அனைத்தும் ஆரம்ப நிலையையே அடைந்துவிடுவதைக் குறிப்பிடுகிறார். மகந்தோவை எந்த நாட்டோடும் நாகரீகத்தோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.


மார்க்வெஸ்ஸின் மாஸ்டர் பீஸ்-ஆகப் போற்றப்படும் இந்நாவலை பல தளங்களிலும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு சாதாரண வாசகன் என்ற நிலையிலேயே எனது புரிதல்கள் அமைந்திருககிறது. இந்நாவல் குறித்தான கட்டுரைகளைப் படித்த பின் மறுவாசிப்பில் எனது புரிதல்கள் விரிவடையலாம். பின்னாட்களிலும் இந்த புத்தகத்தைக் கையில் எடுக்கும் பொழுதெல்லாம் மாயவித்தைகளைக் காணும் சிறுவனின் மனநிலையில் இருப்பேன் என்றே தோன்றுகிறது.



மொக்கை தொடர் (அ) மனம் பிறழ்தல் (அ) வெளங்கிரும்

ராகவன் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அவரது மனைவி கயல்விழியாக நடித்தவர் கமலினி முகர்ஜி. கமலினி நடித்திருக்கும் 'கோதாவரி' என்ற தெலுங்கு படம் நன்றாக இருக்கும். நன்றாக இருக்குமென நினைத்து நாம் பார்க்கும் பல படங்கள் சொதப்புவதும் மொக்கை படம் பார்க்கும் மனநிலையோடு இருக்கும் போது நல்ல படங்கள் சிக்குவதும் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற தத்துவத்தை உணர்த்துகின்றன. தத்துவவாதி அத்தனை பேரும் தண்ணியடிக்க மாட்டார்கள். ஆனால் தண்ணியடிக்கும் அத்தனை பேரும் தத்துவம் சொல்லாமல் இருந்ததில்லை. ஒரு படத்தில் 'இல்லை இல்லை' என பஞ்சப்பாட்டு பாடும் தன் மனைவியிடம் 'இல்லைன்னு சொல்லாதே! எல்லாமே காலியா இருக்கு'ன்னு சொல்லுன்னாராம் கலைவாணர். கலைவாணர் அரங்கம் சென்னை அண்ணா சாலையில் இருக்கிறது. சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடித்தால், சிக்னலில் வண்டியை கோட்டின் முன்னாலேயே நிறுத்தினால், பச்சை விளக்கு எரிந்த பிறகு வண்டியெடுத்தால், ஹெல்மெட் அணிந்தால், இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்பினால், ஓவர்டேக் செய்யும் வண்டிக்கு வழிவிட்டால், சாலையைக் கடப்பவருக்காக வண்டியை நிறுத்தினால், இன்ஷூரன்ஸ், ஆர்.சி அத்தனையும் பக்காவாக வைத்திருந்தால், டிராபிக் போலிஸ் பணம் வாங்குவதற்கான வாய்ப்பே கொடுக்காவிட்டால் உங்களை மடையன் என்று கூறிவிடுவார்கள். என் மாமா சிறுவயதில் என்னை 'மாங்கா மடையன்' என்று தான் கூப்பிடுவார். மடையனுக்கு மாங்காய் எப்படி அடைமொழியாக வர முடியும்? 'எப்படா முடியும்' என்று ஒவ்வொரு வாரம் ஆரம்பிக்கும்போதும் தோன்றுவதும் முடியும்போது எப்படி முடிந்தது என்று தெரியாமலே போவதும் பெரிய காமெடி. காமெடி கஷ்டப்பட்டு எழுதினா வராது.இஷ்டப்பட்டு எழுதினா தான் வரும். வரும் வரும்னு ரொம்ப நாளா பில்டப் கொடுத்திட்டிருக்க 'பீமா' பொங்கலுக்கு வந்துடும் போல. பொங்கலுக்கு தாத்தா பாட்டி ஊருக்குப் போய் நாலு நாள் சுகமா இருந்து சில பல வருடங்கள் ஆச்சு. சில பல வருடங்கள் கழித்து இந்த பதிவை படிச்சா இம்புட்டு மொக்கையா போட்டிருக்கோம்னு சிரிப்பா வரும். இப்பவே அப்படித்தான் இருக்கு. அப்படி இப்படின்னு இருபது வரிக்கு எழுதியாச்சு. அடுத்து என்ன எழுதலாம்னு காபியே குடிச்சிகிட்டே யோசிச்சிட்டிருக்கேன். சென்னைல காபிக்கு சிறந்த இடம் எது? அ) சரவண பவன். ஆ) வசந்த பவன் இ) அடையார் சங்கீதா. இங்க போனா வாய்க்கு நல்லா சாப்பாடு கிடைக்கும். ஆனா பர்ஸுக்கு நல்லதில்லையே. எது நல்லது எது கெட்டதுன்னு தீர்மானிக்கறது யாரு? ஒருத்தனுக்கு நல்லதா இருக்கறது இன்னொருத்தனுக்கு கெட்டதாயிடுது. கெட்டுப் போன பால்ல தான் கல்யாணங்களில் காபி போடுவாங்கன்னு நினைக்கறேன். கல்யாணத்துக்கெல்லாம் போனா ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தா ஜாலியா பொழுது போகும். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டிருக்க பெருசுங்க, இந்த மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லேயர் பவுடர் அடிச்சுட்டு வர ஆண்ட்டிஸ், என்னிக்குமில்லாம அன்னிக்கு மட்டும் பக்காவா டிரெஸ் பண்ணி செண்ட் அடிச்சுட்டு வர மாம்ஸ்ங்க, கல்யாண மண்டபத்தை கிரவுண்டாக்கி விளையாடற பொடிசுங்க, கக்கத்துல கேஷ்-பேக் வச்சிட்டு திரியற பொண்ணு/மாப்பிள்ளையோட மாமா/சித்தப்பா, வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள பக்கத்து இலையை எடுத்துப்போடறவங்க, பின்னாடி சேரைப் புடிச்சுகிட்டு அடுத்த பந்திக்கு இடம் போடறவர், தாம்பூலம் கொடுக்கற தாத்தா. தாத்தா இறந்து பத்து வருடம் ஆகிறது. அவர் இறந்த போது என் அப்பாவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து நான் அழுதேன். அவர் இறந்தது அப்போது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அதிர்ச்சியும் பரபரப்பும் உண்டாக்கவேண்டுமென இந்த செய்தி சேனல்கள் செய்யும் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. எந்த சேனலை திருப்பினாலும் ஒரே நிகழ்ச்சி வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு அரங்கங்களில் ஒளிபரப்பாகிறது. ஆனால் அத்தனையும் பார்க்க ஆளிருக்கிறது. நண்பர் ஒருவருக்கு 'அசத்த போவது யாரு' ஒரு வாரம் பார்க்கவில்லையென்றாலும் தூக்கம் வராது. புலம்ப ஆரம்பித்துவிடுவார். புலம்பல் பார்ட்டிகளிடம் பெரும்பாலும் கோபம் வருவதில்லை. யார் எவ்வளவு புலம்பினாலும் 'ம்' கொட்டிக் கேட்டுக்கொண்டு 'விடுங்க. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்'ன்னு அறிவுரை சொல்வது பழக்கமாகிவிட்டது. பழக்கவழக்கங்களை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடிவதில்லை. 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் 'ஏ ஆத்தா' பாடலை மலைக்கோட்டையில் ரீமிக்ஸ் செய்திருந்தது ஓரளவு நன்றாகவேயிருந்தது. ஆனால் ரீமிக்ஸ் என்றாலே நடுவில் ஆங்கில ராப் சேர்த்துவிடுவதும் பழைய பாடலை மொத்தமாக சொதப்புவதும் கடி. வார இதழ்களில் கடி ஜோக் என்ற வகை போய் இப்போதெல்லாம் ஜோக் என்றாலே கடி மட்டும் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. 'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்கிறார் வள்ளுவர். கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நேரில் பார்த்ததில்லை. பார்க்காத இடங்களென்றால் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. ஆங்கிலத்தில் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல்கள் இணையத்தில் பரவலாகக் கிடைத்தாலும் IMDb-யின் டாப்-250ல் உள்ள திரைப்படங்களை நம்பலாம். வகைப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். 'Lahe Raho Munnabhai' ஒரு நேரத்தில் நகைச்சுவை திரைப்படங்களில் டாப்-10ல் இருந்தது. நம்மாட்கள் குத்தியிருப்பார்கள். கத்தி குத்து வாங்கிய நண்பனின் கதையை எழுதலாம் என யோசித்தேன். அவன் கத்திக்குத்து வாங்கியதற்கான காரணம் எனக்கே மொக்கையாகப்பட்டதால் எழுதவில்லை. எழுத வேண்டுமென நினைத்து எழுதாமல் விடுகின்ற விஷயங்கள் நிறைய. நிறைய விஷயங்கள் எனக்கு புரிவதேயில்லை. அருஞ்சொற்பொருளுடன் யாராவது விளக்கினால்தான் மண்டையில் ஏறுகிறது. உச்சிவெயில் மண்டையைப் பிளக்க மட்டையாடிய நாட்களைப் போலில்லை. இப்போது ஒரு ஓவர் பெளலிங் போட்டாலே மூச்சு வாங்குகிறது. மூச்சு விடாம மொக்கை போடறதுக்கு மட்டும் என்றைக்குமே சலிக்கவில்லை. சலிப்படைந்த எதையும் தொடருவதற்கும் மனம் ஒப்புவதில்லை. தொடரை தொடர புரட்சி போட்டோகிராபர் சிவிஆரையும், ஒரு வாரம் முழுக்க பதிவு போட்டு டயர்டாகி இப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகியிருக்கும் நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களையும் அப்ஸ்காண்ட் ஆன அண்ணாச்சி இராயல் அவர்களையும் பணிவன்புடன் அழைக்கிறேன். வெளங்கிரும்.



டிடி - 1 & டிடி - 2(மெட்ரோ)

"ஆணா பொண்ணா பொறந்தது
அது தான் இங்க முதல் சேதி
ஆணா பொறந்தா சிரிப்பு என்ன - அட
பெண்ணா பொறந்தா வெறுப்பு என்ன
"


ஸ்ரீவித்யா அந்த காலத்துல தூர்தர்ஷன்ல பாடுவாங்களே பார்த்திருக்கீங்களா? இந்த பாட்டு மெட்டு நல்லா ஞாபகம் இருக்கு. இன்னொரு பாட்டுக்கு ராஜீவ் வருவார். அந்த பாடல் நடுவில் வரும் வரிகள்

"இவ பொண்ணா பொறந்ததாலே
பல பொறுப்பு வந்தது மேலே
"

ஆனா இந்த பாட்டோட ஆரம்பம், மெட்டு சுத்தமா மறந்துபோச்சு. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

இன்று பேச்சுவாக்கில் இந்த பாடல்கள் பற்றிய நினைவுகள் வந்ததும் தூர்தர்ஷன் பற்றி கொசுவத்தி சுத்தல் தான்... மக்கள்ஸ் யாராவது ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருப்பீங்க..இருந்தாலும் நானும் என் பங்குக்கு சுத்தறேன் :))

தோட்டத்துல இருந்த ஆண்டெனாவை இந்தப் பக்கமும் அந்த பக்கமும் திருப்பி "இப்ப தெரியுதா? தெரியுதா? இப்ப?" ன்னு ஊருக்கே கேட்கற மாதிரி கத்த, ஆண்டெனா குத்துமதிப்பாக ஏதோவொரு திசையில இருக்கும்போது "அப்படியே விடு. நல்லா தெரியுது"ன்னு உள்ளருந்து குரல் வர, "அட தெரியுதாம்ல"ன்னு அவசரமா ஓடும்போது ஆண்டெனாவை ஆட்டி விட்டு படம் மறுபடியும் தெரியாமப் போக, இப்ப மறுபடியும் ஆண்டெனாவை ஒரு சுத்து சுத்தி படம் குத்துமதிப்பா தெரியற மாதிரி வச்சிட்டு, கம்பியை இறுக்கி கட்டிட்டு ஓடிவந்து எந்த நிகழ்ச்சி போட்டாலும் 'பெப்பரப்பே'ன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்த காலம் கண் முன்னாடி ப்ளாஷ் அடிச்சுட்டு போகுது. சொல்லி வைத்தாற்போல் சுவாரசியமான நிகழ்ச்சி ஏதாவது ஒளிபரப்பாகும்போது காற்றில் ஆண்டெனா திரும்பியிருக்கும். ஆண்டெனா எந்த பக்கம் பார்க்குதோ அந்த பக்கம் தான் மெட்ராஸ் இருக்குன்னு ஒவ்வொரு தடவையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.



ஞாயித்துக்கிழமை ஏழே காலுக்கு ரங்கோலில ஆரம்பிக்கும். பழைய, புதிய ஹிந்தி பாடல்கள். ராஜ் கபூர், கிஷோர் குமார்ன்னு பழசுல ஆரம்பிச்சு முடிக்கும்போது புது பாடல்கள் ஒளிபரப்புவாங்க. ஒன்பது மணிக்கு ராமாயணம், மகாபாரதம். நடுவில் ராமானந்த சாகர், காலச் சக்கரம் எல்லாம் பேசுவாங்க. சந்திரகாந்தா மறக்க முடியுமா? டைட்டில் பாட்டு சூப்பரா இருக்கும். அப்புறம் க்ரூர் சிங்..யக்கூஊஉ. :))


பத்து மணிக்கு மிலிந்த் சோமன் நடிச்ச ஒரு விஞ்ஞானத் தொடர் ஒளிபரப்பாகும். பெயர் மறந்துபோச்சு.அப்புறம் ஜங்கிள் புக். டைட்டில் பாட்டு அப்படியே ஞாபகம் இருக்கு.




ஒரு மணிக்கு காதுகேளாதோருக்கான செய்திகள். அதைக் கத்துக்கிற ஆர்வம் கொஞ்ச நாள் இருந்தது. இப்ப குவிஜு டைம். நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி காட்டினா அதுக்கு என்ன அர்த்தம்?


பிற்பகல் மாநில மொழி திரைப்படங்கள். ஆங்கில அகர வரிசையில். தமிழ் படம் எப்படா வரும்னு எல்லா மொழி படங்களையும் ஒன்னு விடாம சப்-டைட்டிலோடு சப்பு கொட்டிட்டு பார்த்திருப்போம். தமிழ் படம் ஒளிபரப்பற அன்னைக்கு தொடர்ச்சியா ரெண்டு படம். கொண்டாட்டம் தான். மாலை தமிழ் படம் எதுனா அரதப்பழசான படமாயிருக்கும். மணாளனே மங்கையின் பாக்கியத்தை பத்தாவது முறையா போட்டாலும் விடாமப் பார்ப்போம்ல :))

வாரநாட்களில் மாலையில் 5 மணிக்கு ஆரம்பித்து கார்ட்டூன் போடுவாங்க. அப்புறம் வரிசையா மனைமாட்சி, நல்வாழ்வு, பல்சுவை நிகழ்ச்சி, சிறுவர் பூங்கா, வயலும் வாழ்வும். 6.55க்கு முன்னோட்டம், காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு. காவல் துறை கட்டுப்பாட்டு அறை, எழும்பூர், சென்னை-600008.

7 மணிக்கும் 8.30க்கும் செய்திகள். ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபாலன், நிரஞ்சன். கடைசியா கண்ணாத்தாள் ஞாபகம் இருக்கு.

7.05க்கு சில நாடகங்கள் ஞாபகம் இருக்கு. விழுதுகள், எஸ்.வி. சேகரோட வண்ணக் கோலங்கள், விவேக்கின் மேல் மாடி காலி, கே.பாலசந்தரோட நாடகம் ஏதோ. அப்புறம் படையப்பால 'கிக்கு ஏறுதே' பாட்டுல வருவாரே, ரவி ராகவேந்தரா, அவரோட நாடகம் ஒன்னு. வாத்தியார்-னு பட்டபெயரோட ஒரு நடிகர்-இயக்குனர் இருப்பாரே. அப்புறம் கிரேசி மோகன் ரெண்டு சீரியல் பண்ணினாருன்னு நினைக்கறேன்.

செவ்வாய்க்கிழமை 7.30க்கு டிடி செட்ல போட்ட நாடகம். அப்பவே செம மொக்கையா இருக்கும். அதுல வழுக்கைத் தலையோட ஒருத்தர் எல்லா வாரமும் வருவார். அவர் பேரும் மறந்துபோச்சு.

புதன்கிழமை சித்ரஹார். காம்பியரருக்காகவே பார்த்த நிகழ்ச்சி. இதுல முழுக்க புதுப்பாடலகள் தான். 'சாப்பிட வாங்க' நிகழ்ச்சியில வசந்த் அண்ட் கோ ஓனர் கோட்சூட்டோட வந்து சுடச்சுட ருசிச்சு சாப்பிடுவார். அப்புறம் ஒரு குக்கரோ மிக்ஸியோ பரிசு கொடுத்துட்டு போஸ் கொடுப்பார்.

வியாழக்கிழமை எதிரொலி போட்டு மொக்கை போடுவாங்க. நடராஜன், கண்ணன்னு நிலைய இயக்குனர்கள் வந்து ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் சொல்வாங்க. ஞாயித்துக்கிழமை ஒளிபரப்பப்படும் படமும் சொல்லிட்டு போவாங்க.

வெள்ளிக்கிழமை ஊரே எதிர்பார்க்கும் 'ஒலியும் ஒளியும்'. ஒரு வாரம்கூட பார்க்காம விட்டதுல்ல.

ஒன்பது மணிக்கு மேல டப்பிங் நாடகங்கள். சாந்தி, ஜுனூன், கானூன், சுவாபிமான், வக்த்ன்னு மெகா சீரியல்களின் தாத்தாக்கள். சுரபின்னு ஒரு நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு ஊரா சுத்திக்காட்டுவாங்க. தொகுப்பாளினி டிவி சீரியல் நடிகை. ஒன்னு ரெண்டு திரைப்படத்துல கூட நடிச்சாங்கன்னு நினைக்கறேன்.

சனிக்கிழமை காலைல ஏதோ விஞ்ஞான நிகழ்ச்சியெல்லாம் போடுவாங்க. சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.

இப்போது வரும் 'கனா காணும் காலங்கள்'க்கெல்லாம் சீனியர் 'ஸ்கூல் டேஸ்'. பள்ளி மாணவர்கள் வைத்து எடுக்கப்பட்ட சீரியல். செம ஜாலியா இருக்கும். மிகவும் விரும்பிப் பார்த்த தொடர்.

பண்டிகை நாட்கள்ல சிறப்பு நிகழ்ச்சிகள்னா அது தூர்தர்ஷன் தான். செவ்வாய்க்கிழமை நாடகத்துக்கு போட்ட செட்டையே இன்னும் கொஞ்சம் மாற்றி ரெடி பண்ணிடுவாங்க. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொலைபேசியில் அழைத்து பதில் சொல்லனும். வரிசையா ஒரு பத்து பேர் போனோடு உக்காந்திருப்பாங்க. அதுக்கப்புறம் குலுக்கல். அதுக்கப்புறம் வெற்றி பெற்றவர்கள் 'இயக்குனர், சென்னை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை' என்ற முகவரிக்கு ஒரு கடுதாசி போடனும். அதுக்கப்புறம் பரிசு அனுப்புவாங்க.

ஒரு வருடப்பிறப்பிற்கு சந்திரபோஸ் நடத்திய ஒரு மெல்லிசை நிகழ்ச்சி தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே மாதிரி நகைச்சுவை நாடகங்களும் அடிக்கடி மறுஒளிபரப்பு செய்யப்படும்.

ஒரு தீபாவளிக்கு சிம்ரன் பேட்டி பார்த்துட்டே கரப்பான்பூச்சி வரைஞ்சதை ஏற்கனவே சொல்லியிருக்கேன் :D

பட்டிமன்றங்களில் தமிழறிஞர்கள் அருமையா பேசுவாங்க. அவ்வை நடராசன், அறிவொளி, தா.கு. பாலசுப்ரமணியம் இப்படி பலபேர்.கம்பன் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள், தமிழ் கவியரங்கங்கள் வாரவாரம் ஒளிபரப்பாகும்.

தலைவர் வர்ற போலியோ விளம்பரம் ஞாபகம் இருக்கா? எப்படா அதை ஒளிபரப்புவாங்கன்னு காத்துட்டிருந்தது ஞாபகமிருக்கும். இதுமாதிரி பாடல்கள் நிறைய ஒளிபரப்புவாங்க. 'மிலே சுர் மேரா துமாரா' யாருக்கும் மறந்திருக்காது.



(இந்த வீடியோவை பிடிச்சுட்டு யூடியூப்புக்குள்ள போனா ஒரு சுரங்கமே இருக்கு;))

தடங்கலுக்கு வருந்துகிறோம். டிடி-2க்கு மாத்தறதுக்காக இதோட நிறுத்திடறேன். பின்னூட்டத்துல விட்டதை தொடருவோம் :))

டிடி மெட்ரோ:


காஞ்சிபுரத்துல டிடி மெட்ரோ தெரியும். ஆனா தாத்தா ஊருல தெரியாது. விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது நண்பர்களை டிடி-2 தெரியாதான்னு கலாய்ச்சிருக்கேன். டிடி-2ல் பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான். அதுவும் எல்லாமே டப்பிங் தொடர்களாகத் தான் இருக்கும்.

மாலையில் டக் டேல்ஸ், ஹீ-மேன், சூப்பர் மேன், டிடி'ஸ் காமெடி ஷோ,டிஸ்னியின் மற்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வெகு சில சீரியல்கள் தான் ஞாபகம் இருக்கு. ஸ்ரீமான் - ஸ்ரீமதி விடாமல் பார்த்த நகைச்சுவைத் தொடர். செம ஜாலியா இருக்கும். அதே மாதிரி படோஸன் - அடுத்த வீட்டுப் பெண் சீரியல். கலக்கலா இருக்கும்.

சூப்பர் ஹிட் போட்டி - பாடல்களை வரிசைப்படுத்தும் நிகழ்ச்சி. கொஞ்சநாள் அழகான தொகுப்பாளினி வந்தாங்க. அப்புறம் காமெடி நாடகம் போட்டு இடையில் பாடல்கள் ஒளிபரப்பினார்கள்.

Fugitive - The Most Wantedன்னு ஒரு நிகழ்ச்சி. உண்மைச் சம்பவங்கள், குற்றங்களைப் பற்றிய துப்பறியும் தொடர். கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரே வரதட்சணை வழக்குல கைதான ஞாபகம்.

சீ ஹாக்ஸ்-னு கப்பல் படையை வச்சு ஒரு சீரியல் நல்லாயிருக்கும். மாதவன் நடிச்சது. மத்த சீரியல் பெயரெல்லாம் மறந்துபோச்சு.

எங்க வீட்டுல இருந்த ஈ.சி.(EC) டி.வி கிட்டத்தட்ட 12-13 வருஷத்துக்கு இருந்தது. கேபிள் இணைப்பு கொடுத்த பின்னும் பொதிகை நிகழ்ச்சிகள் பார்த்து வந்திருக்கிறேன். மற்ற தனியார் சேனல்கள் வந்த பின்னாலும் பொதிகை நிகழ்ச்சிகளின் தரம் எப்போதும் மேலே தான். BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் இப்போதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. நான் போன் போட்டு பங்கேற்றிருக்கும் ஒரே நிகழ்ச்சி அது. ஆனா தப்பா தான் பதில் சொன்னேன் :))

தூர்தர்ஷன் மூஜிக் 'டொண்ட டொண்ட டொண்டடொய்ங்ங்ங்'ன்னு பேக்ரவுண்ட்ல ஓட கொசுவத்தி சுத்தியாச்சு. நீங்களும் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பற்றி் சொல்லுங்களேன். :))