"அதான் நீ வரவேயில்லையே அப்புறம் என்னடா?"ன்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது. எந்த சந்திப்பா இருந்தாலும் போகனும்னு திட்டம் போட்டு கடைசி நேரத்துல அது காலாவதியாச்சுன்னா அதுக்கு ஒரு மொக்கை போடறது எங்க பயக்க வயக்கம்..சாரி..பழக்க வழக்கம்.
போன வாரம் ஒரு நாள் ஆப்பீஸ்ல படுபயங்கரமா ஆணிபுடுங்கிட்டிருக்கும்போது சின்ன தல போன் போட்டு சந்திப்பைப் பத்தி சொன்னதும் "அவர் சென்னைக்கு வந்து ரெண்டு நாள் போட்ட மொக்கைக்கெல்லாம் பழிவாங்க நேரம் கிடைச்சுடுச்சுடா கப்பி"ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே "கண்டிப்பா வரேண்ணே..எனக்கு பெங்களூரு 'ஃபுல்'லா சுத்தி காட்டனும்"னு வாக்குறுதி கொடுத்தேன். வாங்கினேன்.
ஆனா கடைசி நேரத்துல "மகனே ஒரு கோடி ரூபா கொடுத்தாக்கூட ஆறு மணி அஞ்சு நிமிஷத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது... ஆறேகாலுக்கெல்லாம் வூட்டுக்குள்ள போய் பூந்துக்கோ"ன்னு கவுண்டர் டோன்ல எங்கப்பாரு ஆர்டர் போட்டுட்டதால பெங்களூரு ப்ளான் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போட்டாச்சு.
ஊருக்கு போய் ரெண்டு நாளா பாத்தி கட்டி சாப்பிட்டதுல டயர்டாகி இன்னைக்கு ஆபிசுக்கும் அப்பீட் விட்டாச்சு. மதியம் ரூமுக்கு வந்து பதிவுகளையெல்லாம் பார்த்தாதான் தெரியுது பல நல்ல விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறேன். சமோசா, வெள்ளரியிலிருந்து புகைப்படக்கலை குறித்த பகிர்வுகள், குழந்தைகளுடன் சந்திப்பு, கல்வெட்டின் பலூன் விளையாட்டு என அசத்தியிருக்காங்க.
"ச்சே நாமளும் பெரிய போட்டோகிராபர் ஆகியிருக்கலாமே"ன்னு மோட்டுவாயைத் தடவிக்கிட்டே விட்டத்தை வெறிச்சுட்டிருந்தேன். கைல மொபைலு. சோனி எரிக்ஸன் கம்பெனியே சங்கத்து சார்பா எனக்கும் தேவுக்கும் ஸ்பான்சர் பண்ணது. கை தானா கவரை ஓப்பன் பண்ண "கச்சக்..கச்சக்..கச்சக்" (எத்தன நாளுக்குத்தான் 'க்ளிக்'க்குன்னே படமெடுக்கறது...பிறவிக்கலைஞன்லாம் இப்படி வித்தியாசமாத்தான் படமெடுக்கனும் :D) அந்த போட்டோ தான் கீழே இருக்கறது.
இந்த போட்டோவையெல்லாம் பார்த்து என் நண்பனுக்கு ரத்தக்கண்ணீரே வந்துடுச்சு. "எங்ககூடவே தானேடா இருந்த...ஏன்டா நீ மட்டும் இப்படி ஆயிட்டே?"ன்னு ஒரே பாராட்டு மழை தான். நீங்களும் பாராட்டலாம்..ஹி ஹி..
அடுத்த வாரம் கண்டிப்பா பெங்களூரு வருவேன். ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொடுக்க ஆவலாய் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் ;)
போகாத ஊருக்கு! - பெங்களூரு சந்திப்பு
கப்பி | Kappi 12 பின்னூட்டங்கள்
வகை மொக்கையே தான்
Apocalypto
திரைப்படத்தில் ஒரு வன்முறைக் காட்சியை மூன்று வகைகளில் எடுக்கலாம். மேலோட்டமாக காட்டிவிட்டு அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடலாம். கொஞ்சம் ரத்தத்துடன் கொடூரமாகக் காட்டலாம். அல்லது மூன்றாவதாக மெல் கிப்சனைப் போல காட்டலாம். உதாரணத்திற்கு ஒரு சிறுத்தை மனிதனைத் தாக்கும் காட்சியில் சிறுத்தை பாய்வதைப் போல் காட்டுவது முதல் வகை. சிறுத்தையுடன் மனிதன் சண்டை போடுவது போல் காட்டி கையிலோ காலிலோ அடிபட்டு சிறிது ரத்தத்தையும் காட்டுவது இரண்டாவது வகை. 'மெல் கிப்சன்' வகையில் சிறுத்தை நேராக அந்த மனிதனின் முகத்தைக் கவ்வி தாக்க ஆரம்பிக்கும். அவன் முகத்தை சிறுத்தை கடித்துச் சின்னாபின்னமாவது முழுதாகக் காட்டப்படும். :))
மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனப் பழங்குடியினரைப் பற்றிய திரைப்படம் அபோகலிப்டோ (Apocalypto). மாயன் இனம் அழிந்த காலகட்டத்திற்கு சற்றுமுன்னர் புனையப்பட்ட கற்பனைக் கதை. காட்டில் மிருகங்களை வேட்டையாடி வாழும் கதாநாயகனின்(ஜாகுவார் பா) கிராமத்தை நகரிலிருந்து வரும் மாயன் இன வீரர்கள் தாக்குகிறார்கள். அங்கிருக்கும் அனைவரையும் அடிமைபடுத்துகிறார்கள். கதாநாயகன் தன் கர்ப்பினி மனைவியையும் குழந்தையையும் ஒரு குழியில் இறக்கி காப்பாற்றுகிறான். மற்றவர்களைக் காப்பாற்ற முயலும்போது அவனும் சிக்கிக்கொள்கிறான்.
மாய இனக் கடவுளான குகுல்கனுக்கு நரபலி கொடுக்கப்பதற்காகக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் அரச குடும்பத்தினரின் முன்னிலையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பலியிடப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக விற்கப்படுகிறாகள். கதாநாயகனை பலிபீடத்தில் படுக்க வைக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கடவுள் குகுல்கன் திருப்தியடைந்துவிட்டதாகவும் கதாநாயகனையும் மற்றவர்களையும் விடுதலை செய்துவிடுமாறும் பூசாரிகள் கூறிவிடுகிறார்கள்.
ஆனால் இவர்களைக் கொணர்ந்த வீரர்கள் ஒரு மைதானத்தில் இவர்களை ஓடவிட்டு ஈட்டியெறிந்தும் வில் அம்புகளாலும் கொல்கிறார்கள். அவர்களிடமிருந்து கதாநாயகன் காட்டினுள் தப்பிச்செல்கிறான். தப்பிக்கும்போது தலைவனின் மகனைக் கொன்றுவிடுகிறான். இதனால் ஆத்திரம் கொண்டு அவனைத் துரத்துகிறார்கள்.
பின் தொடர்ந்து வரும் வீரர்களை ஒவ்வொருவராகத் திட்டமிட்டுக் கொன்று இறுதியில் தன் கிராமத்திற்கு வந்து சேர்ந்து தன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றுகிறான். படத்தின் முடிவில் ஐரோப்பியர்கள் கப்பலில் வருகிறார்கள். அவர்களைத் தொலைவிலிருந்து பார்க்கும் கதாநாயகனின் மனைவி அவர்களிடம் செல்லலாமா எனக் கேட்கிறாள். கதாநாயகன் அதை மறுத்து தன் குடியை மீண்டும் எழுச்சிபெறச் செய்வதாகச் சொல்லி காட்டிற்குள் அழைத்துச் செல்வதாய் படம் முடிகின்றது.
மாயன் மொழியில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மாயன் இன மக்களின் வாழ்வுமுறையையும் அவர்கள் சடங்குகளையும் (வரலாற்றுச் சான்றுகள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும்) சிறப்பாகப் பதிவு செய்கிறது. சிறப்பான பின்னணி இசையும் அடர்ந்த காடுகளில் அநாயசமாக சுழன்றுவரும் படப்பதிவும் படத்திற்குப் பெரும்பலம். அதிலும் கதாநாயகன் அருவியிலிருந்து குதித்துத் தப்பிக்கும் ஒரு காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் ரத்தவாடை சிறிது அதிகம்தான் என்றாலும் கதை நடந்த காலகட்டத்தையும் கதையின் கருவையும் வைத்துப் பார்க்கும்போது குற்றம் சொல்ல முடியவில்லை. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே காட்டுப்பன்றியின் வயிற்றைக் கிழித்து உறுப்புகளை எடுப்பதும், அடிமைகளைப் பலியிடும்போது நெஞ்சைக் கீறி இதயத்தை எடுப்பதும் தலையைக் கொய்வதும், ஆரம்பத்தில் சொன்ன சிறுத்தை தாக்குதலும் கொஞ்சம் அதிகம் தான்.
அடிமைகளை அழைத்துச் செல்லும் வழியில் கிராமங்களில் மக்கள் நோய்வாய்பட்டு இறந்துகிடக்கிறார்கள். பயிர்கள் விளையாமல் பட்டினிச் சாவுகள் நடக்கின்றன. காட்டை அழித்து சுண்ணாம்பு சுரங்கங்கள் உருவாகின்றன. கட்டிடங்கள் எழுப்புவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. அடிமைகள் வியாபாரம் நடக்கின்றது. பொதுமக்கள் நோய்வாய்பட்டிருக்கின்றனர். ஏழ்மையில் இருக்கின்றனர். அதே நேரம் அரச குடும்பத்தினர் சகல வசதிகளுடன் ஆரோக்கியமாய் இருக்கின்றனர். பலியிடும் பூசாரி மக்களைத் தன் பேச்சால் உணர்ச்சிவசப்பட வைக்கிறான். அரசனுக்கு நெருக்கமாய் இருக்கிறான். சூரிய கிரகணத்தைத் தனக்கு சாதகமாக்கி கடவுள் திருப்தியடைந்துவிட்டதாகப் பொய்யுரைக்கிறான். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை வீரர்கள் தங்கள் விளையாட்டுப் பொருட்களாக கொன்று குவிக்கிறார்கள். இவ்வாறு மாயன் சமூகத்தில் நிகழ்ந்த அத்தனை அவலங்களையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன். இது மாயன் சமூகத்திற்கு மட்டுமல்லாது எல்லா நாகரீகங்களும் அழிவதற்கும் காரணிகளாய் இருந்தவை. இன்றும் சமூகத்தின் சீர்கேடுகளுக்குக் காரணமாய் இருப்பவை.
நமக்குப் புரியாத மொழியில் பேசினாலும் காட்சியமைப்பினாலும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாலும் ஒன்றி பார்க்கமுடிகிறது. காட்சிகளின் நேர்த்தியும் படமாக்கப்பட்ட விதமும் பிரமிக்க வைக்கின்றன. வன்முறையை சிறிது குறைத்திருந்தால் சிறந்த ஆக்ஷன் திரைப்படமாக இருந்திருக்கும். ஆனால் அது மெல் கிப்சன் படமாய் இருந்திருக்காது.
கப்பி | Kappi 24 பின்னூட்டங்கள்
வகை சினிமா