வெளியாவதற்கு பல மாதங்கள் முன்னரே பரபரப்பைக் கிளப்பிய ப்ரவீன் காந்தின் துள்ளல் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. முக்கியமாக தி.நகர் கிருஷ்ணவேணி, சைதை ராஜ், விருகம்பாக்கம் தேவி கருமாரி, கே.கே.நகர் விஜயா போன்ற உலகப் புகழ் பெற்ற திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகின்றது.
ரட்சகன், ஜோடி, ஸ்டார் என பல வெற்றிப்படங்களை இயக்கிய ப்ரவீன்காந்த் முதன்முறையாக கதாநாயகனாக களத்தில் குதித்திருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கிய படங்களில் கொலைவெறி கதாபாத்திரங்களை ஏற்று பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர்.
இவர் இயக்கிய ரட்சகன் திரைப்படத்தால்தான் ஜென்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் லட்சாதிபதி ஆனார் என்பது குறிப்படத்தக்கது. ஜோடி ஒரு டப்பா படம் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம். ஸ்டார் திரைபடம் அவரது திரைவாழ்வில் மற்றுமொரு மைல்கல்லாக இருந்தது என்றால் மிகையாகாது. பாலகிருஷ்னா- சிம்ரன் நடித்து 'ஓ போடு' என்று தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட தெலுகு படத்தின் தழுவல் தான் ஸ்டார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் புரளி கிளம்பியது. இந்த படத்தில் ப்ரவீன்காந்தின் உணர்ச்சிமிக்க நடிப்பை பிரசாந்த் பாராட்டியுள்ளார்.
வழக்கமாக ஏ.ஆர்.ரகுமான் இந்தி படத்திற்கு போட்ட மெட்டுக்கள் தமிழுக்கு கொண்டுவர பிரவீன் காந்தின் முந்தைய படங்களே காரணம். ஆனால் இந்த முறை 'இன்னிசை இடி' தினா துள்ளல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் எந்த எஃப்.எம் சேனலிலும் வராதது பலருக்கு நிம்மதியைத் தந்துள்ளது.
சின்ன கலைவாணர் விவேக் ஒத்தை ஆளாக படத்தைக் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே.
படத்தில் டூயட் காட்சிகளில் ப்ரவீன் காந்தின் ரொமான்டிக் லுக் 'மேட்டுக்குடி' கவுண்டமணிக்கு இணையாக இருக்குமென படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே தெரிகிறது.
இந்த திரைப்படம் பலதரப்பட்ட மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'Youngஅ Aரியா உள்ளே வாங்க' என்ற படு மொக்கையான டேக்லைனுடன் வெளியடப்படும் இந்த திரைப்படம் தன் திரைவாழ்வில் திருப்புமுனையாக இருக்குமென ப்ரவீன் காந்த் பேட்டியளித்துள்ளார்.
'சென்னையில் கடந்த இரண்டு வாரமாக மழை பெய்யுது. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சொல்லியிருக்காங்க. மழைக்கு தியேட்டர் பக்கம் ஒதுங்கறவங்களை நம்பித்தான் இந்த படத்தை ரிலீஸ் பண்றோம்" என சென்னை வட்டார விநியோகஸ்தர் தெரிவித்தார்.
'அகில உலக ப்ரவீன்காந்த் ரசிகர் மன்றம்' சார்பாக தமிழகமெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ரித்தீஷ் (எ) முகவை குமார் நடித்த 'கானல் நீர்' திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம் விரைவில் வெளியாகும்.
துள்ளல் - இன்று முதல்!!
கப்பி | Kappi 33 பின்னூட்டங்கள்
இதெல்லாம் பெருமையா?
பாஸ்டன் பாலா நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்களை பட்டியலிட அழைத்திருக்கிறார். சிறு வயதில் கின்னஸ் சாதனைகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தொடர்ந்து தலைகீழாக நிற்க முயன்றதையும் வீட்டு வாசலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததையும் அப்பா தடுத்திருக்காவிட்டால் அதை இங்கே பட்டியலிட்டிருக்கலாம். 12 வயதில் தெரு டீமிற்காக கிரிக்கெட் பால் மேட்சில் முதன்முதலாக களமிறங்கியபோது டெண்டுல்கரை விட சிறு வயதில் இந்திய அணியில் இடம்பெறும் கனவு மெய்ப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. அப்படி அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தெரு கிரிக்கெட்டோடு நின்றுவிட்டது.
"இத்தனை நாளாக எழுதிக்கொண்டிருப்பதே பெருமை தான்", "பாபா கூப்பிட்டதே பெருமைதான்"[இரண்டுமே உண்மைதானே :D] என்று வழக்கமான ஜல்லி அடித்தால் எழுதும்போதே பேக்ஸ்பேஸ் பட்டனை விரல்கள் தேடுகின்றன.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெருமைபட்டுக் கொள்ளும் அல்ப மனம்தான். ஆனால் "இதெல்லாம் பெருமையா? கடமைடா" என மனசாட்சி குரல் கொடுத்து கால்களை தரைக்கு கொண்டுவந்துவிடுகிறது. மனசாட்சி அமைதியாய் இருக்கும் சமயங்களில் கண்கள் அக்கம்பக்கம் பார்த்து மனசாட்சியின் வேலையை செய்துவிடுகின்றன. நம்மை பற்றி அடுத்தவர் சொல்லும் பெருமையான விஷயங்களை ஆட்டோகிராப் நோட்டிலும் ஆர்க்குட் டெஸ்டிமோனியல்களிலும் தேடினால் எல்லாம் உள்குத்து மேட்டராக இருக்கும். :))
எதையெல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறோம் என யோசித்ததில் பட்டென நினைவுக்கு வந்தவைகளில் சில கீழே:
1. பள்ளியில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் முதலாக வந்ததை விடவும் "நல்லா படிக்கிறான். ஆனா ரொம்ப திமிர். எதிர்த்து எதிர்த்து பேசறான்" என பள்ளி முதல்வர் அப்பாவிடம் போட்டுக் கொடுத்தது தான் பெருமையாக இருக்கிறது. மனதில் பட்டதை நேராக சொல்லிவிடுவது நமக்கு சரியென பட்டாலும் பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் "அதற்காகவெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது" என எதுவாக இருந்தாலும் மழுப்பாமல் நேருக்கு நேர் சொல்லிவிடுவதை பெருமையாகவே கருதுகிறேன்.
2. கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே இரண்டாம் வருடம் படிக்கும் ஊர்க்கார நண்பனை சந்திக்க தனியாக இரண்டாம் ஆண்டிற்கான பிளாக்கில் அவன் அறைக்கு சென்றேன். அறை முழுதும் இருட்டு. கம்ப்யூட்டரில் "Dumb and Dumberer" படம் ஓடிக்கொண்டிருந்தது. திரை வெளிச்சத்தில் அவனைக் கண்டுபிடித்து அவன் அருகில் அமர்ந்தேன். படம் முடிந்து அறைக்கதவைத் திறந்தால் உள்ளே கிட்டத்தட்ட இருபது சீனியர்கள். "டேய் ஃபர்ஸ்ட் இயராடா நீ" என ஒருவன் கேட்க அதற்குள் என் ஊர்ஸ் புண்ணியத்தில் ராகிங்கிலிருந்து தப்பியது பெரிய சாதனை. ஆனால் அதற்கு அடுத்த வாரமே மொத்தமாக மாட்டினோம் :))
"நீயெல்லாம் எதுக்குய்யா இங்க வந்தே? காஞ்சிபுரத்துல மீனாட்சி காலேஜ்லயே படிக்க வேண்டியதுதானே" என முதல் வருடமே முதல்வரிடம் பாராட்டை வாங்கினேன். இரண்டாம் ஆண்டில் துறைக்கு கூடுதல் உதவி செயலாளர், மூன்றாம் ஆண்டு உதவி செயலாளர், இறுதி ஆண்டில் செயலாளர் என ரொம்பப் பொறுப்பாக பொறுப்புகளையெல்லாம் வாங்கிக்கொண்டு டிபார்ட்மெண்ட் அசோசியேஷனுக்கு வேலை பார்த்தது அப்போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது யோசித்தால் சில சமயம் காமெடியாக இருக்கிறது. ["காலேஜ்லயே பசங்கள்ல நீ தாண்டா டாப்பர்" என நண்பர்கள் ஏற்றிவிடுவார்கள். ஒரு முறைகூட முழுதாக மூன்று மணி நேரம் பரிட்சை எழுதியிருக்காத நான் பையன்களில் டாப்பர்.எனக்கு முன்னால் நிறைய மாணவிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் சோப்பு போட்டு மார்க் எடுத்தவர்கள் :)))].
3. அரை மணி நேர அவகாசத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துவிட்டு ஒன்றரை மணி நேரம் டெக்னிகலாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கதையையும் பொன்னியின் செல்வனையும் சுஜாதா சிறுகதைகளளயும் தமிழ் இலக்கிய சூழல் பற்றியும்[அப்படின்னா என்னன்னு இப்ப வரைக்கும் தெரியாது :D] பேசிவிட்டு வேலை வாங்கியது சாதனை. "சும்மா கூப்பிட்டு கதையடிச்சு கலாய்க்கறானுங்கடா. அடுத்த கம்பெனி எப்போ வரும்" என புலம்பியபடி ஹாஸ்டலில் இங்கிலிபீசு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது செலக்ட் ஆகிவிட்டதாக சொன்னார்கள். "பார்த்தவுடனே அவிங்களுக்கு அண்ணனோட அருமை தெரிஞ்சிருக்கும்டா மாப்ள" என பெருமைபட்டுக் கொண்டேன்.அந்த ஆணியை இன்னும் பிடுங்கிக்கொண்டிருப்பது சோதனை :))
4. எப்போதும் ஊர்சுற்ற தயாராகவே இருக்கும் மனநிலை. செல்லும் இடம் குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போரடித்தால் எங்காவது கிளம்பும் ஒத்த அலைவரிசையுடைய நண்பர்கள். டிபன் சாப்பிட ஐம்பது கிலோமீட்டர் பைக்கில் சென்ற அனுபவங்கள் உண்டு. எங்கு போகிறோம் என்பது முக்கியமல்ல. எங்காவது பயணம் செய்வதே எல்லாருக்கும் குறிக்கோளாக இருக்கும். உடலும் எந்த சொகுசையும் எதிர்பார்க்காது. நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்வது தற்பெருமை கொள்ள இன்னுமொரு காரணம்.
5. "நட்புக்கு கூட கற்புகள் உண்டு" என மொக்கையான வரிகள் வந்தாலும் "ஜல்சா பண்ணுங்கடா" பாட்டை திரும்பத் திரும்ப கேட்பதற்கு காரணம் நட்புக்கு மரியாதை :). சுற்றமும் நட்பும் நாடுவது பெருமை. "ஊருக்கு வந்தா வீட்டுலயே இருக்க மாட்டான். பிரெண்ட் வீட்டுக்கு எங்கயாவது போயிடுவான்" என அப்பா பக்கத்து வீட்டுக்காரருடன் கதைப்பதைக் கேட்டுக்கொண்டே வண்டியெடுத்துக்கொண்டு நண்பன் வீட்டிற்கு கிளம்பிச்செல்வது சுகம். சிறுசிறு சண்டைகள்[like III 'C' vs III'A' ;)] தவிர யாருடனும் இதுவரை பெரிதாகப் பகைத்துக்கொண்டதில்லை. என்னை நம்பி பலர் அவர்களின் சொந்த விஷயங்களில் அறிவுரை கேட்பதும் புலம்புவதும் அவர்களைத் தேற்றுவதிலும் ஒரு சிறிய மன நிறைவு. நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பது பெருமைதானே :)
6. சகிப்புத்தன்மை என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. அலைவரிசை ஒத்துவராதவராய் இருந்தாலும் அவரிடம் முகம் சுளிக்காமல் பழக முடியும். அதை மற்றவரிடம் சொல்லியும் பெருமைபட்டுக்கொள்வேன். "எப்படிடா இவனுங்க கூடல்லாம் வேலை பாக்கற?" என என் அலுவலக நண்பர்களைத் தற்செயலாக சந்தித்த நண்பன் கேட்டபோது என் அம்மா நினைவுக்கு வந்தாள். எல்லோருக்கும் நல்லவராய் இருக்க யாராலும் முடியாது என்று சொல்வது பொய்யென அவளைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.
7. "அவனா ரொம்ப நல்ல பையனாச்சே. அமைதியான பையன்" என சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் வாங்கிவைத்திருப்பது பெருமை. எதுவாக இருந்தாலும் ஏரியாவுக்கு வெளியே எல்லா பிரச்சனைகளையும் முடித்துவிட்டு நல்ல பையனாக ஏரியாவுக்குள் வருவேன். கல்லூரியில் படிக்கும்போது அப்பா சொன்ன டயலாக் " நீ மதுரைல ராத்திரி ஃபுல்லா கூட சுத்திட்டிருப்ப. அதையெல்லாம் நான் வந்து பார்க்க போறதில்ல. ஆனா ஊருக்கு வந்தா ஒழுங்கா பத்து மணிக்கு வீடு வந்து சேரு". அதை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்க ஏரியாவுக்கு போனா நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல பையன் :)
8. மூன்று வயதில் இரண்டு சவரன் செயினுக்கு பதில் பிளாஸ்டிக் குப்பியை பண்டமாற்று முறையில் மாற்றி 'சொப்பு அண்ணனுக்கு' பெருத்த லாபம் சம்பாதித்துக் கொடுத்தேன். இப்போதும் யார் எதை சொன்னாலும் நம்பிவிடுவேன். "வெளுத்ததெல்லாம் பால், பொங்குவதெல்லாம் பீர்" என்று சொல்லும் கோஷ்டி. பலமுறை பிளாஷ்பேக்கில் நண்பர்கள் கதை சொல்லும்போதுதான் உண்மையில் நடந்ததே தெரியும். நல்ல முகங்களை மட்டும் பார்த்து ஆறாவது முகத்தை பார்க்காததால் பலமுறை நொந்துபோயிருக்கிறேன். இது போல் பலமுறை பல்பு வாங்கியிருந்தாலும் "பேசிக்காவே நான் நல்லவன்டா" என பெருமைபட்டுக்கொள்ளலாம்.
பெருமை பேச ஆரம்பித்து எங்கேங்கோ போய் எப்படியோ எட்டு தேர்த்தியாகிவிட்டது. மூச்சு முட்டுது. கதவைத் தொறங்கப்பா :)). இதெல்லாம் பெருமையா என யாரும் காமெடி கீமெடி பண்ணிடக் கூடாது. ஏன்னா பேசிக்கலி நான் நல்லவன் :))
அடுத்து எழுத நான் அழைக்கும் எட்டு பேர்
1. சின்ன தல இராயல்ஜி
2. விவ்ஸ் இளா
3. அனுபவ சித்தர் தம்பி
4. கதாசிரியர் வினையூக்கி
5. புல்லட் டிரெயின் மகேந்திரன். பெ
6. பெருசு
7. சந்தோஷ்
8. தெகா
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
இத்துடன் இப்பகுதி இனிதே நிறைவடைகிறது!! :)
கப்பி | Kappi 27 பின்னூட்டங்கள்
வகை சொந்தக் கதை
The Last King of Scotland
இரண்டு காரணங்களுக்காக இன்னும் சில நாட்களுக்கு இந்த திரைப்படத்தை மறக்க முடியாது. ஒன்று ஃபாரஸ்ட் வைட்டேகரின்(Forrest Whitaker) நடிப்பு. இரண்டாவது திரையரங்குக்கு சென்றபோது நேரவிருந்த விபத்து. எதிரில் வந்த மாநகரப் பேருந்தை கவனிக்காமல் ஒரு காரை ஓவர்டேக் செய்ய முயன்று நூலிழையில் காருக்கும் பேருந்துக்கும் இடையில் வண்டியை சொருகி உயிர் தப்பினோம். இல்லையெனில் அந்த புத்தம்புதிய பேருந்துக்கு முதல் போணி நாங்களாகத்தான் இருந்திருப்போம் :)
படத்தில் கதைசொல்லியாக லாரன்ஸ் காரிகன் என்ற கற்பனை கதாபாத்திரம்.ஸ்காட்லாண்டில் மருத்துவப் படிப்பு முடித்ததும் புது அனுபங்களுக்காக உகாண்டாவிற்கு செல்வதில் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கிராமத்தில் பணிபுரியும் ஆங்கிலேய மருத்துவருக்கு உதவியாளராக வேலையில் சேர்கிறார். அந்த காலகட்டத்தில் தான் இடி அமீன் முந்தைய அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியமைக்கிறார். தெருவெங்கும் மக்கள் கூடி நின்று பெரும் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் இடி அமீனுக்கு பெரும் வரவேற்பளிக்கின்றனர். இடி அமீன் உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு செல்லும் காரிகன் காரிகன் இடி அமீனீன் மேடைப் பேச்சால் ஈர்க்கப்படுகிறார்.
கப்பி | Kappi 16 பின்னூட்டங்கள்
வகை சினிமா
வெயில் கொஞ்சம் அதிகம் தான்
"போன வருசத்தை விட இந்த வருசம் வெயில் அதிகம்பா" இந்த அரதப்பழசான மொக்கையான டயலாக்கை இன்னும் எத்தனை வருசம் தான் சொல்லிட்டு இருப்பாங்களோ தெரியல. இவங்க இந்த டயலாக் சொல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்து வருசத்துக்கு அரை டிகிரி வெயில் கூடியிருந்தாலும் இந்நேரத்துக்கு 100-200 டிகிரியை தொட்டிருக்கனும்.
வெயில் காலத்துல மக்கள் பண்ற அழிச்சாட்டியத்துக்கு அளவேயில்லாம போயிட்டிருக்கு. படத்துல பாருங்க.
தலைவர் சிக்னலுக்கு முப்பதடி முன்னாடியே வண்டியை நிழல்ல நிப்பாட்டிட்டாரு. பின்னாடி வேன்காரன் சங்கு ஊதற மாதிரி ஹாரன் அடிச்சாலும் அண்ணாத்தை வெயில்ல நிக்க மாட்டாராம். பச்சை விளக்கு போடற வரைக்கும் நிழல்லயே தான் இருப்பாராம். சிக்னல் இருக்கறதே 30 செகண்ட். இவங்க பண்ற ரவுசுல நாலு வண்டி கூட சிக்னலை தாண்ட முடியாது. அண்ணே இப்படி கஷ்டப்பட்டு எதுக்குண்ணே வண்டி ஓட்டறீங்க? வெயில் அதிகமா இருந்தத உடம்போட சேர்த்து ஒரு குடை கட்டிக்கவேண்டியதுதானே இல்லைனா குடை பிடிக்கறதுக்கு ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வச்சுக்க வேண்டியது தானே பாஸு?
இதுல ஹெல்மெட் போட இவங்க கொடுக்கற பில்டப் இருக்கே..ஒரு மங்கி கேப்பை போட்டு இல்ல இரு கலர் கர்ச்சீப்பை கட்டி அதுக்கு மேல இதைக் கவுத்துட்டு...யப்ப்ப்பப்பா.முந்தாநாள் டிவில ஒரு அக்கா "எங்களுக்கு வெயில்ல ஹெல்மெட் போட்டா முடியெல்லாம் சிக்கலாயிடும்ங்க. மெயிண்டெயின் பண்ண கஷ்டம்"ன்னு 'கோதாவரி' கமலினி முகர்ஜி டயலாக்கெல்லாம் பேசிட்டிருக்காங்க. இன்னொருத்தரு "முடியெல்லாம் கொட்டி போயிரும்ங்க"ன்னு ஃபீல் பண்றாரு. அண்ணனுக்கு ஏற்கனவே பாதி தலைமுடி கொட்டி லோ பீம்ல ஹெட்லைட் எரிஞ்சுட்டிருக்கு. இதுக்கு மேல முடி கொட்டி என்ன ஆகப்போகுது? தலைமுடி கொட்டறதைப் பத்தி நினைக்கறவங்க தலையைப் பத்தி நினைக்க மாட்டறாங்க.
இவங்க தொல்லையெல்லாம் தாண்டி தவிச்ச வாய்க்கு இளநீர் குடிப்போம்னு வண்டியை நிறுத்தினா அங்கேயும் அவிப்பு. கண்ணுக்கு முன்னாடியே ஒருத்தருக்கு 12 ரூபாய்க்கு கொடுக்கற இளநீரை நாம போய் கேட்டதும் 15 ரூபாய் சொல்லுது இளநீர் விக்கற அக்கா. அவங்களுக்கு மட்டும் பண்ணிரெண்டு ரூபாயான்னு கேட்டா சூம்பிப் போன இளநீரை எடுத்து இதுதான் 12 ரூபாய்க்கு வரும்னு கலாய்க்குது. எங்க ஏரியால 13 ரூபாய்க்கு விக்கறாங்களேன்னு சொன்னா ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டி "கூடவே வர்றேன். எனக்கும் மொத்தமா வாங்கி கொடுத்துட்டு போ கண்ணு"ன்னு லந்து வேற. பைக் தானாவே பொட்டிக்கடைல் தண்ணி பாக்கெட் தேடியும் ஜூஸ் கடையில சூஸ் என்ற பேருல ஜில் தண்ணி குடிக்கவுமே போய் நிக்குது.
"இப்படி தாகத்தை தணிச்சே சம்பாதிச்ச சொத்தெல்லாம் இழந்துடுவோம் போலிருக்கேடா"ன்னு நண்பன்கிட்ட கேட்டா விழுந்து விழுந்து சிரிக்கிறான். "மாப்ள, நானெல்லாம் நயா பைசா செலவு பண்ணமாட்டேன். காலைல பதினொரு மணிக்கு முன்ன தாகம் எடுத்தாலோ நாலு மணிக்கு மேல தாகம் எடுத்தாலோ ஏதாவது ஓட்டலுக்கு போய் உட்கார்ந்து நாலு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு மீல்ஸ் இருக்கான்னு கேட்பேன். அவன் இல்லைம்பான். நான் எழுந்து வந்துடுவேன். இடைப்பட்ட அந்த மூணு மணி நேரம் தான் எப்படியாவது மேனேஜ் பண்ணனும்"ன்னு ஐடியா தர்றான்.
பீச்செல்லாம் போனா வண்டி நிறுத்த இடம் தேடியே தாவு தீர்ந்துடுது. வெயில்ல இருந்து தப்பிக்க ஒரே சரணாலயம் தியேட்டர் தான். அதனால தான் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'நினைத்தாலே', 'திரு ரங்கா'ன்னு பல மொக்கைகள் பல வாரமா ஓடுது. ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்னு தியேட்டருக்கு வந்தா ஒரு கூல்டிரிங்க்ஸ் பாட்டில் அம்பது ரூபாய் சொல்வானுங்க. அதுல அதிகபட்ச விலை 35 போட்டிருக்கும். கேட்டா "எல்லா தியேட்டர்லயும் இப்படித்தான் சார்"ன்னு அடுத்தவன் முதுகை காட்டுவாங்க. அவனுங்க கிட்ட அரை மணி நேரம் சண்டை போட்டு தொண்டை எரிய தியேட்டருக்குள்ள போன அந்த படத்தைப் பார்த்து வயிறெரிய ஆரம்பிச்சுடுது.
ஆபிஸ்ல கூட இருக்கவனுங்க ஏதோ சில்வர் ஃபேனோடவே பொறந்தவன் மாதிரி பில்டப் கொடுப்பானுங்க. நாக்குக்கு ருசியா காரமா ஆந்திரா மெஸ் போலாம்டான்னு கூப்பிட்டா "நோ யார்..ரொம்ப ஹாட் யார்"ன்னு பீட்டர் விட்டுட்டு இத்துப்போன கேண்டின்ல உப்பில்லாத சாப்பாட்டை திம்பாங்க. ஆண்டிக்குட்டைல அரை டவுசர் போட்டு திரிஞ்சதை 'கூலா' மறந்துடுவானுங்க.
லீவ்ல ரூம்ல ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா அங்கேயும் கொலவெறி கும்பல் காத்துட்டிருக்கும். வீடு முழுக்க ஜன்னல் வச்சிருப்பாங்க. ஆனா தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு, மேல்கிழக்கு, கீழ்மேற்குன்னு எந்த பக்கம் காத்தடிச்சாலும் வீட்டுக்குள்ள காத்தே வராத மாதிரி வாஸ்து பார்த்து கட்டியிருப்பாங்க.
ஹூம்..என்னவோ போங்க..ஒரே புலம்பல்ஸா இருக்கு...இந்த வருசம் வெயில் கொஞ்சம் அதிகம் தான் :)))
கப்பி | Kappi 36 பின்னூட்டங்கள்