உள்வாங்கிய கடல்

"சந்துரு சந்துரு"

நெரிசலான ரங்கநாதன் தெருவில் யாரோ என்னை அழைப்பது கேட்டுத் திரும்பினேன். ரயில் நிலையத்திலிருந்து திருவிழாக் கூட்டம் போல வந்த மக்களிடையே தெரிந்த முகம் எதுவும் சட்டென அடையாளம் தெரியவில்லை. மீண்டும் சந்துரு என்ற குரல் வந்த திசையில் கூர்ந்து பார்த்தபோது குமார் சித்தப்பா வந்துகொண்டிருந்தார். கட்டம் போட்ட கசங்கிய அரைக்கை சட்டை. நைந்து பழசாகிப் போயிருந்த கால்சட்டை. கலைந்த தலை. லேசான தாடி. முதலில் பார்த்தபோது அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துப் போயிருந்தார். குமார் சித்தப்பாவைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.

"சந்துரு எப்படிப்பா இருக்க? அம்மா அப்பா செளக்கியமா?"

"நல்ல செளக்கியம் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? சித்தி? குழந்தை?"

"நமக்கென்ன குறைச்சல்..வா அப்படியே டீ குடிச்சுக்கிட்டு பேசுவோம். என்ன இந்த பக்கம்?"

என் கையிலிருந்த 'உறுபசி' நாவலை வாங்கிப் புரட்டியபடியே அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார். சிறுவயதில் விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் வாசித்த ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் பாக்கெட் நாவல்களும் ஓஷோ நூல்களும் நினைவுக்கு வந்தன.

குமார் சித்தப்பா அப்பாவின் தூரத்து சித்தப்பாவின் மகன். ப்ளஸ் டூ-வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் படிப்பைத் தொடராமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர் ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்தபோது சொன்னார்கள். அதற்குப்பின் அவரை சந்திக்கவில்லை.

"போனவாட்டி ஊருக்கு போனப்ப நீங்க மெட்ராஸுக்கு வந்துட்டதா சொன்னாங்க"

"ஆமா சந்துரு...போன வருஷம் கரும்பு போட்டு எல்லாம் போயிடுச்சு. ஆலைல அவனுங்க ஆர்டர் தர்றதுக்குள்ள எல்லாம் காஞ்சுபோச்சு. அடுத்த போகத்துக்கு கெணத்துலயும் தண்ணியில்ல. லோன் போட்டிருந்தேன். அதான் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டு வந்துட்டேன்.இங்க வந்தும் ஆறு மாசமாச்சு"

குமார் சித்தப்பாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் பல வருடங்களாக சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் அப்பாவின் 10 ஏக்கர் நிலம் பாகம் பிரிக்காதவரை குமார் தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். எப்போதும் ஏதாவது வேலை செய்தபடியே தான் இருப்பார். இல்லையெனில் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பார். குமார் சித்தப்பாவுக்கு திருமணம் ஆனதும் இரண்டு வருடங்களுக்கு முன் பாகம் பிரித்தார்கள். வீடு தவிர மற்ற நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு குமார் சித்தப்பாவுக்கு நாலு ஏக்கரும் கிணறும் கிடைத்தது. பாகம் பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டு உறவினர்கள் சேர்ந்து பஞ்சாயத்து செய்ய வேண்டியிருந்தது. வீடு மட்டும் இன்னும் தாத்தாவின் பேரிலேயே இருந்தது. ரவி சித்தப்பாவும் ஜீவா சித்தப்பாவும் அப்போதே நிலத்தை குத்தகைக்கு விட்டார்கள். அதற்குப் பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அவர்கள் பெற்றோரைப் பார்த்துச் செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

"இப்ப எங்க இருக்கீங்க?"

"திருநீர்மலைல இருக்கேன் சந்துரு. அங்கருந்து பல்லாவரம் வந்து டிரெயினைப் புடிச்சு வரணும். அங்கயே ஒரு ரூமுக்கு ஆயிரத்து இரநூறு வாடகை கொடுக்கறேன். வாங்கற சம்பளத்துல பாதி அதுலயே போயிடுது"

"ஹ்ம்ம்..சித்தி எப்படியிருக்காங்க?"

"நல்லாருக்காப்பா. அங்க பக்கத்துல ஒரு காண்வெண்ட்ல டீச்சரா வேலைக்கு போறா. ரெண்டாயித்து ஐநூறு கொடுக்கறாங்க. ஏதோ செலவுக்கு ஆகுதுல்ல. ஜனனியை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்த்தா இன்னும் செலவு அதிகமாயிடும்"

"ஜனனி பார்த்தே ரொம்ப நாளாச்சு. நல்லா பேசறாளா"

"நல்ல வாயாடி. அவகிட்ட பேசி தப்பிக்க முடியாது. ஒடம்புக்குதான் அடிக்கடி முடியாம போயிடுது. ஊருக்கு போய் வந்தா ஒரு வாரம் ஜுரத்துல படுத்துடுவா"

"தாத்தா பாட்டி எப்படியிருக்காங்க? ரெண்டு மாசம் முன்ன போனப்ப பார்த்தேன்.தாத்தா ரொம்ப இளைச்சுப் போயிருந்தாரு"

"ஆமா சந்துரு. அடிக்கடி போய் பாத்துக்க முடியறதில்ல. ரெண்டு மூனுவாரத்துக்கு ஒரு முறை போய் பாத்துட்டு வரேன். வாங்கற சம்பளம் மாச செலவுக்கும் லோன் அடைக்கவுமே போயிடுது. இதுல அடிக்கடி போய் பாத்துக்க முடியுமா? அப்பாவுக்கு என்னோட வந்து இருக்கனும்னு ஆசை.ஆனா நாங்க இருக்கறது ஒரு ரூம். இதுல எங்க அவங்களை கூட்டினு வர முடியும்". குரல் லேசாக கம்மியது.

"தாத்தா சொனனாரு"

"அம்மாவுக்கும் லேசா கண்ணுல பொறை விழுந்துடுச்சு. ரவியண்ணன் அம்மாவை மட்டும் கூட்டிட்டு போய் ஆப்பரெஷன் பண்றேன்னு சொல்லுது. அண்ணிக்கும் அப்பாவுக்கும் ஆகாது. அவர் வந்தா எதுனா சண்டை போடுவார்னு அவரைக் கூப்பிடக்கூடாதுனு ஒத்தக்கால்ல நிக்கறாங்க. ரவியண்ணன் அவங்கள மீறி எதுவும் செய்யாது. ஜீவாண்ணன் பத்தி உனக்கே தெரியும். என்னிக்குமே அதுக்கு அவ்ளோ பாசம் கெடையாது. காசு கொடுக்கறேன். நீயே எங்கயாவது பார்த்துக்கோனு போன் பண்ணி சொல்லுச்சாம். அம்மா அழுவறாங்க. ஜீவாண்ண்ன் அப்பாட்ட பேசறதேயில்ல. வீடு எழுதி தரலன்னு கோவம்"

"ஜீவா சித்தப்பா எப்பவும் அப்படித்தானே. பாட்டி ரவி சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கலாமே. சித்திக்கு தாத்தா கூட தானே ஆவாது"

"அம்மா அப்பாவை உட்டுட்டு வர முடியுமா? ஆப்பரேஷன்னா ஒரு வாரமவது ஆவும். ஒரு நாள் ரெண்டு நாள்னா அப்பா அண்டைல பக்கத்துல சாப்பிடலாம். ஒரு வாரம்னா முடியாதுல்ல. எனக்கு ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சுக்கனும்னு இருக்கு. ஆனா வசதியில்ல. சித்தியும் கூட சொல்லி சொல்லி அழுவறா"

"போனவாட்டியே தாத்தா ரொம்ப எளைச்சுபோயிருந்தார். கண்பார்வையும் குறைஞ்சுபோச்சு"
வேறென்ன சொல்வதெனத் தெரியாமல் காலியான டீ டம்ளரை உழட்டிக்கொண்டிருந்தேன்.

"சரி விடு. ஆவறது ஆகட்டும். அவங்க காலமும் முடிஞ்சுப்போச்சு. அம்மாவுக்கு இப்ப ஆப்பரேஷன் பண்ணாலும் ஒடம்பு தாங்காது. அப்பாவுக்கும் இன்னும் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ. போற போக்குல போகட்டும்..சில சமயம் ஊருக்கே போயிடலாம்னு இருக்கும்..ஆனா அங்க போய் மட்டும் என்ன பண்றது சொல்லு? இங்கயாவது ரெண்டு பேர் சம்பாத்யம் இருக்கு. அடுத்த வருசம் ஜனனி ஸ்கூல்ல சேக்கனும். சரி எனக்கு ஷிப்ட் டைம் ஆச்சு. அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பேட்டால புடிச்சிடுவாங்க. மொதல்ல வேற வேலை தேடனும். நம்ம கோடி வீட்டு சுகுமார் சூளமேட்டுல இருக்கான். அவன்ட்ட சொல்லிவச்சிருக்கேன். ஒரு கடைல வேலைக்கு சொல்லியிருக்கானாம். சரி நான் கெளம்பறேன். வீட்டு பக்கம் வா சந்துரு. அண்ணன் அண்ணிய கேட்டதா சொல்லு. வீட்டுக்கு வா. பாப்போம் சந்துரு"

என்று என் பதிலுக்கும் காத்திராமல் கூட்ட நெரிசலில் கலந்து தொலைந்து போனார். அவர் வைத்துச் சென்ற காலி டீ டம்ளரை ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன.



சில புகைப்படங்கள்