Gandhi - My Father

"நான் மோகன்தாஸ் காந்தியின் மகன் இல்லை. மோகன்தாஸ் காந்திதான் என் அப்பா" - குடிபோதையில் தகராறு செய்வதால் தன்னைக் கைது செய்ய வரும் போலீஸிடம் ஹரிலால் காந்தி சொல்லும் இந்த வசனம் தான் காந்தி-மை ஃபாதர் திரைப்படம். மோகன்தாஸ் காந்திக்கும் அவரின் மூத்த மகனான ஹரிலாலுக்குமான உறவைச் சொல்லும் திரைப்படம்.

தந்தையைப் போலவே பாரிஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவோடிருக்கும் ஹரிலாலை தன் கொள்கைகளைப் பரீட்சித்துப் பார்க்க தன் முதல் தொண்டனாக அடையாளம் காண்கிறார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுகிறார் ஹரிலால். தந்தையின் பேச்சை மறுத்துப் பேசாத தனயனாக ஆங்கில அரசுக்கு எதிராக சட்ட மறுப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறார். ஆனாலும் பாரிஸ்டர் ஆக வேண்டுமென்ற தன் கனவை தன் தாய் கஸ்தூரிபா மூலமாகவும் தானாகவும் காந்தியிடம் தெரிவிக்கிறார். ஆனாலும் ஹரிலால் பாரிஸ்டர் ஆவதற்கான கல்வித்தகுதி இல்லாதவர் எனக் கருதும் காந்தி அவரைத் தன்னுடனேயே அகிம்சை போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். தன் நண்பர் மூலம் பாரிஸ்டர் படிக்கக் கிடைக்கும் ஸ்காலர்ஷிப்பையும் மற்றொரு இளைஞருக்கு கொடுத்துவிடுகிறார். இதனால் ஹரிலாலுக்கும் காந்திக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது.




தன் மனைவியுடன் இந்தியா திரும்பும் ஹரிலால் துணி வியாபாரம் செய்கிறான். இங்கு வந்து படித்தும் அவனால் பரிட்சையில் தேற முடியவில்லை. ஏழ்மையும் தோல்வியும் அவனை மதுவிற்கு அடிமையாக்குகிறது. காந்தி அந்நிய துணிகளை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது இங்கிலாந்திலிருந்து துணிகளை வரவழைத்து அவற்றை விற்கவும் முடியாமல் நஷ்டப்படுகிறான் ஹரிலால்.

ஹரிலாலின் மனைவி அவனைப் பிரிந்து காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறாள். அங்கு இறந்துவிடுகிறாள். கஸ்தூரிபா ஹரிலாலை சமாதானப்படுத்துகிறார். அவன் மீண்டும் காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுகிறான். சிறிது நாட்களில் மீண்டும் பெற்றோரை விட்டு விலகுகிறான். இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறான். கஸ்தூரிபாவும் காந்தியும் அவனை சந்தித்துப் பேசுகிறார்கள். மீண்டும் இந்து மதத்திற்கு மாறுகிறான். வியாபாரத்தையெல்லாம் விட்டுவிட்டு நாடோடியாகிறான். குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் சுற்றித் திரிகிறான். இறுதியில் காந்தி இறந்து ஐந்து மாதங்கள் கழித்து பம்பாயில் அநாதையாக இறக்கிறான் ஹரிலால்.

மோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மகனுக்குமான உறவைச் சொல்லும் இந்த் படத்தில் காந்தி என்னும் ஆளுமையைத் தாண்டி அவரை ஒரு சாதாரண தந்தையாகக் காட்டியிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தன் கொள்கைகளிலும் முடிவுகளிலும் உறுதியாக இருக்கும் காந்தி ஹரிலாலின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லை. தன் மகனை தன் முதல் தொண்டனாகக் கண்டு பெருமிதம் கொள்ளும் காந்தி அவனுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றி வைப்பதில் கவனம் கொள்ளவில்லை.





அதே நேரத்தில் ஹரிதாஸ் ஒரு குழப்பவாதியாகவே இருக்கிறார். தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவே பெற்றோரிடமிருந்து பிரிந்துவந்து துணி வியாபாரம் செய்து நஷ்டப்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். மனைவியுடன் சண்டையிடுகிறார். பொது இடங்களில் காந்தியை அவதூறாகப் பேசுகிறார். மீண்டும் பெற்றோருடன் சேர்கிறார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் அவர்களிடமிருந்து விலகுகிறார். இவ்வாறாக ஹரிலால் ஒரு குழப்பவாதியாகவே தெரிகிறார்.

இருவருக்குமிடையே கஸ்தூரிபா. தன் மகனுக்காக ஆரம்பத்திலிருந்தே காந்தியுடன் சண்டைபோடும் கஸ்தூரிபா இறுதியில் அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டதை எண்ணிக் கலங்குகிறார். தன் மகன்கள் அவர்களின் விருப்பப்படியான வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென காந்தியுடன் விவாதிக்கிறார் கஸ்தூரிபா. ஆனாலும் கணவனின் சொல்லையும் மீற முடியாமல் மகனின் நிலையைக் கண்டு தவிக்கிறார். இறுதியில் தந்தைக்கும் மகனுக்குமான பிணக்கைத் தீர்க்கமுடியாமல் வருந்துகிறார்.

ஹரிலாலின் மனைவி குலாப் கணவனின் பேச்சைத் தட்டாத சராசரி மனைவியாக இருக்கிறார். ஏழ்மையிலும் குடும்பத்தை சரியாக நிர்வகிக்கிறார். ஹரிலால் குடித்துவிட்டு சண்டைபோடும் வேளைகளில் அடங்கிச் செல்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிலாலைப் பிரிந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு இறந்துவிடுகிறார்.



தேர்ந்த நடிப்பு படத்தின் பெரும்பலம். குலாப்'பாக பூமிகா நிறைவாக நடித்திருக்கிறார். பாந்தமான முகமும் சோகம் இழையோடும் கண்களும் அந்த கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகிறது.மோகன்தாஸ் காந்தியாக தர்ஷன் ஜரிவாலா திறம்பட நடித்திருக்கிறார். இளமைக் கால காந்தியாக சிறிது உடல்வாகாக இருப்பதுபோல் தோன்றினாலும் வயதான காந்தியாக அருமையாக நடித்திருக்கிறார். வயதுக்கேற்ற பாடி லேங்குவேஜ் பெரும்பலம். ஆனால் ஒப்பனையில் காது பெரிதாக ஓட்டப்பட்டது பல காட்சிகளில் கண்ணை உறுத்துகிறது

கஸ்தூரிபாயாக ஷெவாலி சா. அவரின் கண்களே உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. பாசத்தில் தவிக்கும்போதும், கணவர் மேல் கோபம் கொள்ளும்போதும் ஹரிலால் குடித்துவிட்டு வரும்போது அவனை வெறுக்கும்போதும் சிறப்பாக செய்திருக்கிறார். அக்ஷ்ய் கண்ணா ஹரிலாலாக அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை உள்வாங்கி ஹரிலாலைக் கண்முன் நிறுத்துகிறார். குறிப்பாக, தந்தையிடம் பாரிஸ்டர் ஆகும் ஆசையை சொல்லும் காட்சி, விரக்தியின் உட்சத்தில் திருவிழா கூட்டத்தின் நடுவில் வெறி கொண்டு தன் இயலாமையை உரக்க அறிவிக்கும் காட்சி, மனைவி இறந்ததும் அழும் காட்சி, ரயிலில் தன் பெற்றோரை சந்தித்து 'காந்தி மகாத்மா ஆவதற்கு கஸ்தூரிபா தான் காரணம். கஸ்தூரிபா வாழ்க!" என கோஷமிடும் காட்சி என படம் முழுக்க தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது வருடக்கதையை மூன்று மணி நேரத் திரைப்படமாக்க் கொண்டுவந்த இயக்குனர் பெரோஸ்கானைப் பாராட்ட வேண்டும். தேர்ந்த காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் வசனங்கள் குறிப்பிடும்படியில்லை. ஒரு சாதாரண படத்திற்க்கான வசனங்கள் போலவே இருந்தது ஏமாற்றம். அனில் கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். தலைவர்களைப் புனிதபிம்பமாக்கி கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக்கும் சமுதாயத்தில் தந்தையாக வெற்றியடையாதவராக, குடும்பத்தை திருபதிப்படுத்தாதவராக மோகன்தாஸ் காந்தியை திரையில் காண்பித்திருப்பது பாராட்டுக்குரியது.

படம் நிறைய யோசிக்க வைக்கும். தேசத்தைப் பற்றியும் ஹரிலால் பற்றியும் காந்தியைப் பற்றியும் உஙகள் தந்தையைப் பற்றியும்.



கட்டிப்புடி வைத்தியம்



ராஜேந்திரன் கதை

ராஜேந்திரன் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு வயது 31. பணம் கையாடல் செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்கியபோது அவனுக்கு வயது 37. வீட்டிற்கு மூத்தமகனான ராஜேந்திரன் விவசாயம் பார்த்தபடியே தான் படித்தான். பத்தாம் வகுப்பில் ஃபெயிலான போதும் அவன் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவன் தாய் மாமன் நடேசனின் அறிவுரையால் செய்யாறில் டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினான். பின்னர் பேருக்கு ப்ளஸ் டூ முடித்துவிட்டு நடேசனின் மகளை திருமணம் செய்துகொண்டு ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவனை கூட்டுறவு வங்கித் தேர்வு எழுத வைத்ததும் அவன் மாமா தான்.

சொந்தமாக நிலமிருந்ததால் அரசாங்க உத்தியோகத்திற்குப் போக வேண்டுமென்ற எண்ணமெல்லாம் ராஜேந்திரனுக்கு இல்லை. இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு தம்பிகள் சென்னையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் ஆறேழு ஏக்கர் வரும். அதை வைத்து விவசாயம் பார்த்தபடி இருந்துவிடலாம் என்றுதான் இருந்தான். நடேசன் அவனை வலுக்கட்டாயமாக பரிட்சை எழுதவைத்து கட்சியில் ஆளைப் பிடித்து செய்யாறிலேயே கூட்டுறவு வங்கியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

அவனுடன் கிளார்க்காக வேலை பார்க்கும் செல்வமும் மேற்பார்வையாளர் குமரேசனும் ராஜேந்திரனுக்கு நண்பர்களாயினர். அக்கம்பக்கம் கிராமத்து மக்கள் விவசாயக்கடன் வாங்குவதற்காக வரும்போது அவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தான். அதனால் வங்கிக்கு வரும் விவசாயிகளிடையே நல்ல பெயர். ஆரம்பத்தில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்தவன் சிறுசிறு பணத்தட்டுப்பாடு வரும்போது கை நீட்ட ஆரம்பித்தான். விதிகளை மீறி கடன் கொடுப்பது, பணம் வாங்கிக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்வது என இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர். மூவரும் சரிசமமாகப் பிரித்துக்கொண்டனர். எப்போதாவது வரும் ஆடிட்டருக்கும் கணிசமான தொகை செல்லும். இதைப்போலவே எல்லா வங்கிகளுமே நடப்பதைப் பார்த்த ராஜேந்திரனுக்கு கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்வும் அவனை விட்டுப்போனது.

ஊரிலிருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தான். தன் பெயரிலும் மனைவி பெயரிலும் நிலம் வாங்கிப்போட்டான். தன் தம்பிக்கு தடபுடலாகத் திருமணம் செய்துவைத்தான். சொந்தத்தில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தான். கோயிலுக்கு திருவிழாவின் போதெல்லாம் கல்வெட்டில் பெயர் வருமளவு பணம் கொடுத்தான். இப்படி ஊருக்குள் நல்ல பெயர் எடுத்து அந்த வட்டாரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலை ஆனான்.

ஓரிரு வருடங்களுக்கு முன் கடன் தொகை கட்டமுடியாமல் போன ஒருவனது வீட்டை ஜப்தி செய்தார்கள். அவன் கோர்ட்டில் கேஸ் போட்டான். அதனால் பழைய கணக்குகளை நோண்டத் தொடங்கினார்கள். இதை முன்னமே அறிந்துகொண்ட செல்வம் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து தன் வேலையைக் காப்பாற்றிக் கொண்டான். குமரேசனும் ராஜேந்திரனும் சிக்கிக் கொண்டார்கள். தன்னை நேர்மையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தால் வங்கியின் மேலாளர் இவர்கள் மட்டுமே தவறு செய்ததாக தலைமை அலுவலகத்துக்கு எழுதிக் கொடுத்தார். இருவரின் வேலையும் பறிக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

இருவரின் மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குமரேசன் தன் நண்பர்கள் மூலம் பணம் செலவு செய்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிட்டான். இப்படியொரு வழியிருப்பது தெரியாமல் ராஜேந்திரன் தனியாக சிக்கினான். தனியாக வழக்கறிஞரைப் பிடித்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறான்.

துறையில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக தன் கையிலிருந்த பணத்தையெல்ல்லாம் கொடுத்தான். ஆனால் யாருக்கு கொடுத்தால் வேலை ஆகுமென்ற நெளிவு சுளிவு தெரியாததால் பணம் செலவானதுதான் மிச்சம். அவன் மேலான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

ராஜேந்திரனின் மனைவி சுந்தரி அவனுக்கு வேலை போனதிலிருந்து இளைத்துப் போய்விட்டாள். அவளது நகைகளை வங்கியில் அடமானம் வைத்துத்தான் வேலைக்காக செலவு செய்தான். அவளுக்கு பணம் செலவாவதை விட எப்படியாவது மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டால் போதும் என்றே எண்ணினாள். வீட்டின் பின்கட்டில் ஒட்டடை படிந்துகிடந்த தையல் மிஷினை தூசு தட்டினாள்.

ராஜேந்திரனுக்கு ஒரு மகன். ஒரு மகள். மகன் ஆறாம் வகுப்பும் மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பத்து ரேங்குக்குள் வரும் மகன் இப்போது சில பாடங்களில் பெயிலாவது சுந்தரிக்குக் கவலையைக் கூட்டியது.

நடேசன் ராஜேந்திரனிடம் வீணாக இப்படி செலவு செய்யாமல் ஊரில் விவசாயத்தை ஒழுங்காக கவனிக்கும்படி அறிவுரை கூறினார். "வேலையில்லாம ஊருக்கு வந்தா ஒருத்தனும் மதிக்க மாட்டான்" என்று சொல்லிவிட்டான் ராஜேந்திரன். அவர் தான் அடிக்கடி சுந்தரிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

தங்கள் வீட்டின் பின்புறம் மந்தரிக்கப்பட்ட எலுமிச்சை பழம், மிளகாய் இருந்ததாயும் அதனால் தான் தன் குடுமபத்திற்குக் கேடு வருவதாயும் ராஜேந்திரன் பணம் கையாடல் செய்திருக்கமாட்டான் என்றும் அவனது தாய் சொல்லிவருகிறாள். மாலை வேளைகளில் திண்ணையில் அமர்ந்து "யார் தான் செய்யல? அவனுக்கு மட்டும் ஏனிப்படி" என்று புலம்புவது அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

ராஜேந்திரனின் அக்கா கணவர்களுக்கு உள்ளூர சந்தோஷம் தான். வேலையிலிருந்தபோது அவன் தங்களை மதிக்காததாயும் இப்போதும் அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டதாகவும் தண்ணியடிக்கும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ராஜேந்திரனிடம் கடன் வாங்கிய சிலர் தானாக வந்து திருப்பிக்கொடுத்தார்கள். சிலர் அவன் சென்று கேட்டும் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். ராஜேந்திரனும் இப்போது கடன் வாங்கப் பழகிவிட்டான். ஆரம்பத்தில் தன் மதிப்பு போய்விடும் என்று எதையாவது விற்று செலவு செய்துகொண்டிருந்தவன் இப்போது கடன் வாங்கத் தயங்குவதில்லை. நிலத்தை மட்டும் விற்கக்கூடாது என்ற முடிவில் இருக்கிறான். காலையிலும் மாலையிலும் சைக்கிளில் ஊருக்கு சென்று விவசாயம் செய்துகொண்டிருக்கிறான்.

சென்ற வாரம் வட்டச் செயலாளர் மூலமாக சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்துப் பேசினான். எழுபத்தைந்தாயிரம் இருந்தால் வேலை வாங்கிடலாம் என்று அவர் சொன்னதும் கையோடு கொண்டுபோயிருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்துவிட்டு இந்த மாதக் கடைசிக்குள் மொத்த பணத்தையும் தருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் கணக்குப்படி, வேலையை திரும்பப் பெறுவதற்காக நேற்று வரை இரண்டு லட்சத்து பதினெட்டாயிரம் செலவு செய்திருக்கிறான்.

இன்னும் ஆறு மாதம் கழித்து இன்னொருவருக்கு லஞ்சம் கொடுக்க செய்யாறில் தான் கட்டிய வீட்டை விற்க ஏற்பாடு செய்வான். அப்போது சுந்தரியின் பிடிவாதத்தால் அந்த வீட்டை விற்காமல் அடமானம் வைத்து லஞ்சம் கொடுப்பான். இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவ்வாறு செலவு செய்துவிட்டு வேலை திரும்பக் கிடைக்காது என்ற உண்மை தெரிந்ததும் ஊரில் நிலத்தை விற்று கடனையெல்லாம் அடைத்துவிட்டு செய்யாறில் உயர்நிலை பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை வைப்பான். அவன் கூட்டுறவு வங்கியில் வேலை செய்ததையோ அவர்களுக்கு சொந்தமாக நிலமிருந்ததையோ அவன் மகனும் மகளும் மறந்துவிடுவார்கள்.



'தல'க்குப் பக்காவாகப் பொருந்தும் கிரீடம்

கிரீடம் படம் பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆயிற்று. ஆனால் இப்போது இந்த படம் குறித்து எழுதக் காரணம் காயத்ரியின் இந்த பதிவு மற்றும் அலுவலகத்தில் எனக்கும் நண்பருக்கும் தொடர்ந்து நடக்கும் வாக்குவாதங்கள். காயத்ரியின் பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என ஆரம்பித்து கொஞ்சம் நீண்டுவிட்டதால் இன்னும் கொஞ்சம் சேர்த்து பதிவாக்கிவிட்டேன்.

நான் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாததற்குக் காரணம் படம் எனக்கு ரொம்பவே படம் பிடித்திருந்தது. விமர்சனம் ஒரு'தல'பட்சமாகிவிடும் என்பதால் தான்.(இங்க ஒன்னு சொல்லிக்கறேன்..நான் அஜீத் ரசிகன் இல்ல..ஒன்றே சூரியன்..ஒருவரே சூப்பர் ஸ்டார் :)) சில காட்சிகள் சொதப்பலாக இருந்தது உண்மைதான். இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியும் இழுவை தான். ஆனால் படம் அவ்வளவு மொக்கையா என்ன?? ஒரு வேளை நிறைய தமிழ் படங்கள் பார்த்து எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டதா அல்லது இந்த படம் மொக்கை என்பவர்கள் சிலப்பல வருடங்களாக தமிழ் படங்களே பார்ப்பதில்லையா என சந்தேகம் வருகிறது.

சிட்டிசனுக்கு பிறகு அஜீத் படம் என்றாலே மொக்கையாக இருக்குமென ஒரு பொதுக்கருத்து உண்டாகிவிட்டது. அவரும் அதை ஓரளவு காப்பாற்றி வருகிறார் :). ஆனால் கிரீடம் படத்தை ஒரு முறை கூட முழுதாக பார்க்கவே முடியாது என்பதுபோல் சொல்வதுதான் வருத்தமாக இருக்கிறது. கிரீடம் படம் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துப் போகும் படமெல்லாம் கிடையாது. அது ஒரு சாதாரண தமிழ் படம் தான். அதில் என்ன தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்த படம்னு மட்டுமில்ல உலகத்துல எந்த படமாயிருந்தாலும் 'கேவலமாயிருக்கும், நமக்கு பிடிக்கவே பிடிக்காது' ன்னு முன்முடிவோட பார்த்தா எந்த படமுமே பிடிக்காது. சிவாஜி படம் கூட போர் அடிச்சிடும் ;)

ஒருவேளை அஜீத் என்பதால் மட்டும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா? நேற்று பேசிக்கொண்டிருக்கும்போது "வரலாறுக்கு அப்புறம் ஆழ்வார் இல்லாம இந்த படம் வந்திருந்தா இன்னும் நல்லா ஓடியிருக்கும்" என்று என் நண்பன் சொன்னான். அது ஒருவகையில் உண்மைதான். ஆழ்வார், பரமசிவன், திருப்பதி போன்ற படங்கள் அஜீத்தை காமெடியனாக்கிவிட்டன.

காயத்ரி படத்தின் ஆரம்பத்தில் ராஜ்கிரணின் கனவே காமெடியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஏன் இது போல் கனவு காணும் பெற்றோர்கள் இல்லையா? உன் கையால ஊசி போட்டுக்கனும்டான்னு சொல்லி டாக்டருக்கு படிக்க வைக்கிற பெற்றோர்கள் இல்லையா? அதற்காக ராஜ்கிரணின் கதாபாத்திரம் யதார்த்தமானது, முழுமையா வடிவமைக்கப்பட்டிருக்கிறதுன்னு நான் சொல்ல வரல. ஏன்னா இப்ப எந்த ஹெட் கான்ஸ்டபிளும் இந்த மாதிரி இனாவானா(ஆமா இப்ப இப்படி இருந்தா இதான் சொல்வாங்க) கிடையாது. ஆனால் அந்த காட்சி காமெடியானது வருத்தம் தருகிறது.

ஹீரோவுக்கு அறிமுகப்பாடல் என்பது இப்ப எல்லா படத்துலயும் தான் வருது. பி.வாசு பையன் கூட டிரெயிலர்லயே பாட்டு பாடிட்டுதான் அறிமுகமாவறான். நடிக்கத் தெரிந்த, திறமையுள்ள அஜீத்தாவது இதை மாத்தக்கூடாதான்னு கேட்டீங்கன்னா அதுக்கு பதிலை கடைசில சொல்றேன்.

என் நண்பர் அஜீத் படத்துல "எப்பவும் சொங்கி மாதிரியே இருக்கான். சோகமாவே இருக்கான்.."ன்னு சொன்னார். ஊருக்குள்ள வேலை தேடிட்டிருக்க மூத்த பசங்க எல்லாமே எப்பவுமே அப்படித்தான் இருப்பாங்க. இதை அஜீத் தெரிஞ்சுதான் நடிச்சாருன்னு வக்காலத்து வாங்க வரல. ஆனா படத்தோட கேரக்டருக்கு ஒன்றி போகலையா என்ன?? தெரிஞ்சோ தெரியாமலோ அஜீத் நடிப்பு அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி தானே இருந்தது?

த்ரிஷா புள்ளையார் இல்லனா பெயிலாகறது எந்தளவு லாஜிக் இல்லையோ அதே மாதிரி தான் அஜீத் திருநள்ளாறு போனா நல்ல படம் வரும்னு நம்பறதும் :)).

வேலையில்லாம நாலு நண்பர்களோட சுத்திட்டிருந்தாலும் சரி, ரவுடியாயிருந்தாலும் சரி, ஏழை பணக்காரனாயிருந்தாலும் சரி ஹீரோ-ஹீரோயினி கடைசில சேருவாங்க. இதுதானே எல்லா தமிழ் படத்துலயும் நடக்குது. இந்த படத்துல கடைசில ஊர்ல ரவுடின்னு பேரு வாங்கனவனுக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொன்னது யதார்த்தமா தெரியலையா?

படத்துல நூறு இருநூறு ரவுடிகளை ஒத்தை ஆளா ஒரே அருவாளால வெட்டி சாய்க்காமல் ஒரே ஒரு ரவுடி கூட மட்டும் மோதறதே பாதி பேருக்கு பிடிக்கல போலிருக்கு :)).

படத்துல காமெடிக்கு தனி டிராக் இல்லாம திரைக்கதையோட ஒன்றி நல்லாத்தானே இருக்கு? இல்ல இப்பல்லாம் நான் தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டேனா?? சந்தானம், விவேக் இரண்டு பேருமே தனியாக டிராக் இல்லாமல், டிரேட் மார்க் பஞ்ச் டயலாக்குகளுடன் நல்லாத்தானே செஞ்சிருந்தாங்க?

சரண்யாவைத் தவிர யாருமே நன்றாகவே நடித்திருந்தார்கள். சரண்யா தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். 'கனவெல்லாம்' பாட்டிலும் அஜீத்தை பரீட்சைக்கு பஸ் ஏற்றிவிடும்போதும், அஜீத்தை ஜெயிலில் அடிக்க வரும்போதும் ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருபபாரே. அந்த பாட்டே காமெடியானபிறகு வேறென்ன சொல்வது.

அஜீத் ரெட்டாகவோ பரமசிவனாகவோ வராததுதான் ஆறுதல் அளிக்கிறதா? அவர் நடிப்பு? பல இடங்களில் அசத்தியிருந்தாரே? ஜெயிலில் த்ரிஷா அப்பா கல்யாணத்தை நிறுத்தியது பற்றி ராஜ்கிரண் அஜீத்திடம் சொல்லும்போது அஜீத்தின் கண்ணசைவு இன்னும் எனக்கு மறக்கவில்லை. :)

கடைசியில் குற்றவாளிகள் லிஸ்டில் அஜீத் போட்டோவை ஒட்டுவதுதான் படத்தின் சிறந்த காமெடி காட்சியாக என் நண்பர் சொன்னார். இறுதியில் ஹீரோ ஜெயிக்காவிட்டால் மக்களுக்கு அது காமெடியாகிவிடுகிறது. "இதே மாதிரி தானே வரதன் ரவுடியாயிருப்பான்"ன்னு நம்மாளு யாரோ தான் விமர்சனப் பதிவுல எழுதி இருந்தாரு. இது ஏன் சிலருக்கு மட்டும் காமெடியாகிறது?

இப்போது படத்தில் கிளைமாக்ஸ் மாற்றியிருக்கிறார்களாம். கடைசியில் மீண்டும் கனவெல்லாம் பாடலை போட்டு அஜீத் எஸ்.ஐ ஆக, ராஜ்கிரன் சல்யூட் அடிப்பாராம். இப்போது யார் மேல் தவறு? முதலில் அஜீத் தோற்றதுபோல் காண்பித்த இயக்குனர் மீதா? தல தோற்க்ககூடாது என்று சவுண்ட் விட்ட ரசிகர்கள் மீதா? அல்லது "என்னய்யா ஹீரோ ஜெயிக்கல..என்ன படம் இது" என்று குறைபட்டுக்கொள்ளும் பொதுஜனம் மீதா??

என்னைப் பொறுத்தவரை, கிளைமாக்ஸ் மாற்றப்படுவதற்கு முன் இந்த படம் 'தல'க்கு பக்காவாக பொருந்தும் கிரீடம் தான்.

இது இயல்பான படமா, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு வட்டத்துக்கு கொண்டுபோகுதா என்பதையெல்லாம் விட்டுவிடலாம்....ஆனால் இது மொக்கை படமே கிடையாது. கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் ஒருமுறையாவது பார்க்கலாம். இந்த படம் பிடிக்காதவர்கள் என்னிடம் சொல்லுங்கள். ஒரு லிஸ்ட் தருகிறேன். எல்லாமே தமிழ் படங்கள்தான். அந்த படங்களையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் இந்த படம் பாருங்கள். ஒருவேளை பிடிக்கலாம்.