?! - 2010

ப்லாக்கர் கடவுச்சொல்லே கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் "2010-ல் ஒரு பதிவாவது போடப்பா" என மேற்சென்று இடித்த தல கைப்ஸ் பொருட்டு :-)

பதிவு மட்டுமின்றி ஜிடாக், பேஸ்புக், ஆர்குட் என சகலவிதமான லெளகீகங்களிலிருந்தும் விலகியே இருக்க நேர்ந்தது. வேலை ஒரு காரணமென்றால், வாங்கி மூன்று வருடமான லேப்டாப் உள்ளே அழுக்காகிக் கிடக்குமென மழையில் நனைத்து கழுவியது இன்னொரு காரணம். டிவிட்டரில் மட்டும் தலைமறைவாய் மற்றவர்களின் கீச்சுகளைப் படித்து பொழுதைப் போக்கியாயிற்று. அவ்வப்போது ரிட்டீவிட்டியும் புலம்பியும் அரிதாக படித்ததை பகிர்ந்தும் மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து சொச்சம் டிவீட்டுகள் மட்டுமே அடித்திருப்பதிலேயே எத்தனை ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பது வெள்ளிடை மலை. பலமுறை பதிவெழுதும் எண்ணம் எழுதும்போதெல்லாம் நான்கு வரிகளுக்கு மேல் கார்பரேட்டர் அடைத்து நின்றுவிட்டது. இனியேனும் ஏதாவது தேறுகிறதாவெனப் பார்க்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான சோம்பலும் சிறுது சோர்வுமாய் கழிந்த 2010-ல் ரிவைண்ட் ஓட்டியதில் சில குறிப்புகள் இங்கே.

*********************************************

தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு ஊரில் தனியாக இருந்த பாட்டி சென்ற ஆண்டு இறுதியில் காஞ்சிக்கு வந்துவிட்டார். வாரத்திற்கு ஒரு முறையாவது ஊருக்குப் போகவேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர், பொங்கல் முடிந்ததும் கிராமத்து வீட்டில் பூஜை செய்ய சென்று அன்றிரவே அங்கு இறந்தார். அறுபது ஆண்டுகள் தான் வாழ்ந்த வீட்டிலேயே அவர் மரணித்தது நெகிழச் செய்தது. 'வயசான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம போயிட்டாங்க' என்று உறவினர்கள் சொன்னது ஆறுதலா எனத் தெரியவில்லை. அவர் இருந்தவரை ஆண்டுக்கு சில முறையாவது அங்கு சென்று திண்ணையிலும் சமையல்கட்டு படியிலும் வாசலிலும் அமர்ந்தபடி சிறு வயது நினைவுகளை அசைபோடுவது இனி வாய்க்கப் போவதில்லை.

*********************************************

ஏப்ரலில் நண்பனின் திருமணத்திற்காக மதுரை பயணம். பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் வழக்கமாக ஒரே மாதிரி ஜிங்குச்சா சட்டையை அணிந்து கொண்டு மண்டபத்தில் அலப்பறை செய்து 'யாருடா இவங்க' என வந்திருந்த மேன்மக்களை முறைக்கச் செய்தோம். திருநகரில் கல்யாணம் முடிந்ததும் கல்லூரிக்கு ஒரு விசிட். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு. கவுண்டர் கடையும் சுஷ்மிதாவும் அப்படியே இருந்தன. எப்படியும் ஹாஸ்டலுக்குள் விடமாட்டார்களென கல்லூரிக்கு வண்டியை விட்டோம். மூன்றாவது மாடியில் நாங்கள் குப்பை கொட்டிய வகுப்பறைகளில் மாணவச் செல்வங்கள் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தது இன்ப அதிர்ச்சி. நாங்கள் படித்த காலத்தில் மொத்த ஹாஸ்டலுக்கும் ஒரு பத்து கம்ப்யூட்டர் மட்டுமே இருந்திருக்கும். அதிலும் ஆடோ ஆடென்று விளையாடியது போக பகலிரவாக பல படங்கள் ஓடியதெல்லாம் தலைக்கு மேல் கொசுவத்தியாய் சுற்ற ஆரம்பித்தது. 'அரியர் வச்ச மக்குப் பசங்களா' இருக்குமோவென இளைய தலைமுறை எட்டிப் பார்த்ததும் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம். கீழே வந்து சில ஆசிரியர்களை சந்தித்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி. லெக்சரர் ஒருவர் எங்களையும் எங்கள் சட்டைகளையும் பார்த்து 'இன்னும் அப்படியேத்தான் திரியறீங்களாப்பா?!" எனக் கேட்டது நிச்சயமாய் எங்களுக்கான சர்ட்டிபிகேட் தான்.

*********************************************

கர்நாடகாவிலிருக்கும் கோவில்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி அம்மா சென்ற வருடமே கேட்டிருந்தார். இந்த வருடம் அழைத்துச் செல்ல முடிந்தது. ஷிமோகாவில் ஆரம்பித்து அப்படியே நூல் பிடித்தாற் போல் கீழிறங்கி கோவில் கோவிலாக சென்று வந்தோம். ஒவ்வொரு கோவிலுக்குள் செல்லும்போதும் அவர்களில் முகத்தில் தோன்றிய ஆனந்தமும் வெளியே வரும்போது இருந்த திருப்தியையும் பார்ப்பதற்காகவே வாயிலில் அமர்ந்து காத்திருந்தேன். கிட்டத்தட்ட 30 கோவில்களுக்கு மேல் சென்று கடைசியாக மைசூரை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பினோம். இத்தனை கோவில்களுக்கு சென்ற பின்னும் விட்டுப் போன சில கோவில்கள் குறித்து அவர் வருந்தியதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.

*********************************************

'நானூத்தி தொண்ணூத்தொம்பொது ரூபா பக்கிட்டி ஒன்னு கொடுப்பா' என கரைவேட்டி (கடைக்காரரை தட்டிக் ) கேட்பதை வேடிக்கைப் பார்த்தபடியே கே.எப்.சியில் பர்கரை உள்ளே தள்ளும் போதும் சரி, ராமச்சந்திராவில் அப்பா ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தபோது கேண்டினில் காலத்தைக் கழித்தபோதும் சரி, ராமச்சந்திரா மாணவிகளே அதிகம் தென்பட்டனர். மாணவச் செல்வங்கள் இப்படி வெளியே சுற்றாமல் படிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார்கள் போல.

*********************************************

கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்களும் அதை விடக் கொஞ்சமாக திரைப்படங்களும் பார்த்ததில் இந்த ஆண்டு மண்டைக் குடைச்சல் சிறிது குறைவே. கடைசியாக வாங்கிய பல்பு 'அய்யனார்'. இன்றிரவு வாங்கப் போகும் பல்பு மமஅ. சில புத்தகங்கள் டீடோடலரிடம் கிடைத்த ஸ்மிர்னாஃப் போல என் கையில் சிக்கின. இப்போது bookandborrow.com வழியாக ஓசியில் புரட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பி Guy de Maupassant என்பவரின் தலையணை சைஸ் புத்தகத்தை ஓசியில் கொடுத்தவரின் நிலையை நினைத்து கையைப் பிசைந்துகொண்டிருப்பது லேட்டஸ்ட்.

********************************************

நண்பனின் தம்பி ரூமுக்கு வந்ததிலிருந்து அட்வைஸ் என்ற பெயரில் நாங்கள் மூன்று பேர் மொக்கை போட்டதிலும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகனுக்கு மொட்டை பாட்டை லூப்பில் ஓடவிட்டு கேட்க வைத்ததிலும் தம்பி ரூமை விட்டே எஸ்ஸானான். பள்ளி மாணவர்கள் 'அங்கிள்' என்று கூப்பிட்ட காலம் தாண்டி கல்லூரி மாணவர்களே 'அங்கிள்' என கூப்பிட ஆரம்பிக்கும் காலத்தில் நாங்கள்லாம் யூத்து என்ற பீத்திக் கொண்டிருந்தாலும் நண்பர்களின் தம்பிகளோ வேலைக்கு சேரும் ஃபிரெஷர்களோ வேறு மாணவர்களோ சிக்கினால் அட்வைஸ் என்ற பெயரில் அரை மணி நேரம் அறுவையைப் போடும்போது நமக்கே லேசாக சந்தேகம் வந்துவிடுகிறது.

*********************************************

சிலபல காலமாக சுசுயிஸம் பயின்று வருகிறேன்.

'சும்மா இருப்பதே சுகம்'

**********************************************

புத்தாண்டு வாழ்த்துகள்!