?!

சில வருடங்களுக்கு முன் பெண்களுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று சொல்லி எல்லோர் வீட்டிலும் வாங்கிக் கொடுத்தார்கள். பச்சை நிறத்தைத் தேர்ந்தெடுக்க பச்சை புடவை ஸ்டாக் ஏராளமாக நின்றது காரணமா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை. இந்த முறை சித்தி விட்டிற்குச் சென்றபோது அம்மாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொடுத்தார்கள். காரணம் கேட்டதற்கு இந்த வருடம் பெண்கள் தத்தம் அக்காவிற்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமாம். அப்போது தான் குடும்பத்திற்கு நல்லது நடக்குமாம். என் அம்மாவிடம் பெரியம்மாவிற்கு மறக்காமல் புடவை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.

"இவங்கள தவுஸண்ட் பெரியார்ஸ் வந்தாலும் திருத்தமுடியாதுடா"ன்னு விவேக் டயலாக் தான் ஞாபகம் வந்தது.

****************

தீபாவளி அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் எதையுமே பார்க்கவில்லை. எல்லா நடிகநடிகைகளும் எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள் போல. விளம்பரங்களைப் பார்க்கும்போதே கடியாக இருந்தது. பள்ளிக்காலத்தில் தூர்தர்ஷனில் வந்த சிறப்பு நிகழ்ச்சிகளை அசைபோட்டுக் கொண்டே கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தீபாவளிக்கு டிடியில் சிம்ரன் பேட்டி போட்டிருந்தார்கள். 'நேருக்கு நேர்' ரிலீஸான சமயம் என்று நினைக்கிறேன். அடுத்த நாள் பயாலஜி ரெகார்ட் நோட் சப்மிட் செய்ய வேண்டியிருந்தது. அன்று சிம்ரன் பேட்டியைப் பார்த்துக்கொண்டே வரைந்த கரப்பான்பூச்சிதான் இதுவரை நான் வரைந்ததிலேயே அழகாக இருந்தது.

*****************

வோல்வோ பேருந்து விட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அதில் பயணம் செய்யவில்லையே என்ற கவலை இரண்டு வாரங்கள் முன்புதான் தீர்ந்தது. அதற்கு முன் சிலமுறை நொடிப்பொழுதுகளில் பேருந்தை தவறவிட்டிருக்கிறேன். அன்றும் ஓடிப்போய் தான் ஏறினேன்.

தொப்பி போட்ட டிரைவர் கண்டக்டரை ஏற்கனவே வெளியில் இருந்து பார்த்திருந்தாலும் அப்போது பார்க்கையில் சிரிப்பு வரத்தான் செயதது. டிவிடி ப்ளேயரில் பாட்டு போடுகிறார்கள். பயணம் செய்பவர்கள் வோல்வோ பற்றியும் புது டீலக்ஸ் பேருந்துகளைப் பற்றியும் கருத்து சொல்லியபடியே பயணிக்கிறார்கள். சாலையில் இருவரில் ஒருவராவது பேருந்தை திரும்பிப் பார்க்கிறார்கள்.

டிரைவர் அருகில் ரியர் வ்யூ LCD எப்படியிருக்கிறதென பார்க்க கிட்டவில்லை. கிண்டி-வேளச்சேரிக்கு 18 ரூபாய் கொஞ்சமில்ல ரொம்பவே அதிகம்தான். தூரமான இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் வசதியாக இருக்கும்.

*****************

அலுவலகத்தில் டீ குடிக்கப் பட்டாளமாகச் செல்லும்போது நண்பன் புதிதாக சேர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து கண்டதும் காதலாகிவிட்டான். அவளிடம் காதலைச் சொல்ல அவனுக்கு நான் சொல்லிக் கொடுத்த டயலாக்

"நீ விரும்பற பையனைவிட, உன்னை விரும்பற பையனைவிட, நீ என்னை விரும்பினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்"

பசங்க அடிக்க வந்துட்டாங்க.

****************

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.

- நல்லசிவம் (அன்பே சிவம் - கமல்ஹாசன்)




அதே நம்பிக்கையில் (இந்த டயலாக்லாம் எனக்கே ரொம்ப ஓவராத்தான் இருக்கு :D) இப்போது அமெரிக்க வாசம். சிலப்பல தீர்மானங்களோட இருக்கேன். அதில் முக்கியமானது கீத்துக்கொட்டாய், சங்கம், தேன் கிண்ணம், கப்பி நான்கிலும் வாரத்திற்கு ஒவ்வொரு பதிவாவது இடுவது. எவ்வளவோ பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டோமா :))