"மாப்பிள்ள வாள மீனு பழவேற்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு வெளாங்கு மீனு மீஞ்சூரு தானுங்கோ"
பல மாதங்களாகவே பழவேற்காட்டிற்கு செல்லலாமென கிளம்பும் போதெல்லாம் ஏற்கனவே இது போன்ற சில இடங்களுக்குச் சென்று 'பல்ப்' வாங்கியது நினைவுக்கு வந்து தள்ளிப்போட்டுவிடுவோம். ஏரியில் தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகமும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பழவேற்காட்டிற்கு பிரிந்து செல்லும் சாலை மோசமாக இருந்தால் அதில் பைக் ஓட்டவேண்டுமே என்ற தயக்கமுமே காரணம். இந்த இரண்டு பயத்திற்குமே மூல காரணம் தடா அருவிதான். நாங்கள் சென்னையிலிருந்து பைக்கில் சென்றபோது தடாவில் தண்ணீரும் இல்லை. சாலையும் படுமோசம். அன்று பைக் வாய்விட்டு அழுதது எங்களுக்கே கேட்டது. :))
புது திரைப்படம் எதுவும் வெளியாகாத, அறையில் புதிதாக சிடி எதுவும் சிக்காத, டிவியில் கிரிக்கெட் மேட்ச் போடாத இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஒரு வார இறுதிநாளில் 'பல்ப்' வாங்கினாலும் பரவாயில்லையென நானும் என் நண்பனும் பழவேற்காட்டிற்குக் கிளம்பினோம்.
பழவேற்காடு ஏரி சென்னைக்கு வடக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலை - 5 எண்ணூர் சாலையிலிருந்து பிரியுமிடத்தில் நேராக எண்ணூர் சாலையில் சென்று மீஞ்சூர் வழியாக பழவேற்காடு சென்றடையலாம். அல்லது தேசிய நெடுஞ்சாலையிலேயே பொன்னேரி வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ தூரத்தில் பழவேற்காட்டை அடையலாம். மீஞ்சூர் வழியாக சாலை மிகவும் மோசமாக இருக்குமென கேள்விப்பட்டதால் தங்க நாற்கரச் சாலையிலேயே வண்டியை விரட்டினோம்.
நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவது எப்போதுமே சுகம் தான். அதிலும் நகரின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிவிட்டு நெடுஞ்சாலைகளில் முகத்திலறையும் பேய்க்காற்றுடன் ஓட்டும்போது ஏற்படும் சுகம் அலாதியானது. எப்போதாவது நம்மை தாண்டிச் செல்லும் கார்களைத் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் வேகத்தில் நமக்குப் பிறகுதான். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பிடித்த பாடலைகளை கேட்டுக்கொண்டு சென்றால் வண்டி ஓட்டும் களைப்பே தெரியாது. அங்கங்கே விபத்தில் அடிபட்டு நசுங்கிக் கிடக்கும் வண்டிகளைப் பார்க்கும்போது மட்டும் உயிர் பயம் எட்டிப்பார்க்கும் :)
பொன்னேரி வரை சாலை நன்றாகவே இருந்தது. என் அப்பா முதன்முதலில் வேலைக்கு சேர்ந்தது பொன்னேரியில்தான். திருமணமான்பின் தான் காஞ்சிபுரத்திற்கு மாற்றல் வாங்கி வந்தார். அவர் வேலை செயதபோது ஊர் எப்படி இருந்திருக்குமென எண்ணியபடியே பொன்னேரியைக் கடந்தோம். பொன்னேரியிலிருந்து பழவேற்காடு 20 கி.மீ. இப்போது சாலையை அகலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒரு நான்கைந்து கிலோமீட்டர்களுக்கு சாலை மோசமாக இருந்தது. போக்குவரத்து அதிகமில்லை. பழவேற்காட்டை நெருங்கும்போதே ஒரு சிறிய ஏரி வறண்டு கிடந்தது வயிற்றில் புளியைக் கரைத்தது. தேடி வந்த ஏரி இதுவாகயிருந்தால் அப்படியே ஒரு யூ-டர்ன் போட்டு திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே ஊருக்குள் சென்றோம்.
பழவேற்காடு சிறிய கிராமம் தான். ஊருக்குள் நுழைந்ததுமே டாஸ்மாக் அன்புடன் வரவேற்றது. ரேஷன் கடை இல்லாத ஊரிலெல்லாம் கூட டாஸ்மாக் இருக்கிறது. அதைக் கடந்ததும் கடைத்தெரு. பக்கத்திலேயே மீன் மார்க்கெட். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு கடைக்காரரிடமே ஏரிக்கு வழி கேட்டோம். அந்த தெருவின் கடைசியில் ஏரி ஆரம்பிப்பதாக சொன்னார்.
பைக்கை பார்க் செய்துவிட்டு ஏரியை நோட்டம் விடும்போதே ஒரு படகுக்காரர் எங்களிடம் வந்து நானூறு ரூபாய்க்கு ஏரி கடலுடன் சேரும் இடத்திற்கு(6 கி.மீ) அழைத்துச் செல்வதாகச் சொன்னார். இரண்டு பேருக்கு நானூறு ரூபாய் அதிகமென நானும் என் நண்பனும் பேரத்தை ஆரம்பித்தோம். எத்தனை பேராக இருந்தாலும் நானூறுதான் என அவர் சொல்ல, பேரம் பேசுதலின் அடிப்படை விதியை உபயோகித்தோம். [வேறென்ன பாதி விலைக்கு கேட்பது தான்:)]. 'உஙகளை ஏமாத்தி சம்பாதிக்க மாட்டோம் சார்..இங்க யாரை வேணும்னாலும் கேளுங்க..வாடகை போட்டு(boat), டீசல் செலவுக்கெல்லாம் இருநூறுக்கு கட்டாது சார்' என்றார். 'உங்களை ஏமாத்தி' டயலாக்கை வைத்து இதுவரை எத்தனை பேர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்ற கணக்கு சட்டென மனதில் தோன்றியது. இறுதியில் முந்நூறு ரூபாய்க்கு பேரம் பேசி போட்டில் ஏறினோம்.
அண்ணன் படகு ஓட்டின ஒரு மணி நேரமும் இதே போஸ் தான் :)
ஏரி எவ்வளவு ஆழமென அவரிடம் கேட்டுக்கொண்டே அந்த பக்கம் திரும்பினால் நட்டநடு ஏரியில் நின்றபடி ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த பகுதியில் அதிகபட்சம் ஐந்தடி ஆழம் தான் இருக்குமாம். ஏரி உள்ளே செல்லச் செல்ல ஆழம் அதிகமாகுமாம். மிதமான காற்று முகத்தைவருட கடலை நோக்கிப் போனோம். ஏறத்தாழ அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு மணல் திட்டில் இறக்கிவிட்டார். மணல் திட்டிற்கு அந்தப் பக்கம் கடல். கடற்கரையில் காலார நடந்தோம். இடப்பக்கம் கடல், வலப்பக்கம் ஏரி என நன்றாக இருந்தது. கடல் அலைகள் குறைவாக அமைதியாகவே இருந்தது. காற்று பக்கவாட்டிலிருந்து வீசியதால் அலைகள் உருவாக்கம் பார்க்க அழகாகயிருந்தது. குடும்பத்துடன் வருபவர்கள் அங்கு இளைப்பாறி உணவருந்த ஏற்றவாறு அந்த மணல் திட்டில் சிறு குடிசைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அரைமணி நேரம் கடற்கரையில் உலாவிவிட்டு திரும்பிவிட்டோம்.
60 கி.மீ நீளமுள்ள பழவேற்காடு ஏரியை ஒட்டி பல கிராமங்கள் இருப்பதாகவும் சிறுசிறு தீவுகளிலும் மக்கள் வசிப்பதாகவும் படகோட்டி சொன்னார். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பறவைகள் நிறைய வருமாம். திரும்ப வரும்போதே எதிரில் வந்த படகுக்காரர் பேருந்தில் சுற்றுலா பயணிகள் வந்து இறங்கியிருப்பதாகச் சொல்ல இவருக்கு சந்தோஷம்."வர்றவங்க எப்பவும் ரெண்டு மூணு அவர் பீச்சுல இருப்பாங்க..குளிச்சுட்டு சாப்பிட்டுத்தான் கிளம்புவாங்க..நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க..டூரிஸ்ட் வந்துருக்காங்களாம்..போனவுடனே அடுத்த டிரிப் வந்துடுவேன்" என்றார்.
மணி ஒன்றரை தான் ஆகியிருந்தது. ஒரு மணி நேரத்தில் சென்னைக்கே வந்து சாப்பிடலாம் என வண்டியை விரட்டி வடபழனி 'நம்ம வீட்டில்' அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு ரூமுக்கு வந்து கட்டையைச் சாய்த்தோம். செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் செல்வதற்கு வேறெந்த இடமும் இல்லாமலிருக்கும் இன்னொரு நாள் மீண்டும் சென்று வரலாம்.
வீடியோ அலைபேசி கேம்ரால எடுத்தது. எடுக்கும்போது பார்க்க நல்லாத்தான் இருந்தது..இப்ப பார்க்க காமெடி ஆயிடுச்சுல்ல? :)))