வெள்ளி, ஜூலை 12, 2013

'ஓடு'காலி

சென்ற ஆண்டு ஆரம்பத்திலிருந்து தான் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு 3-4 கி.மீ ஓட ஆரம்பித்திருந்தேன். அதுவும் முறையாக கிடையாது.  ஒரு வாரம் ஒழுங்காக ஓடியிருந்தால் அடுத்த இரண்டு வாரங்கள் அம்பேல். எல்லோரும் சந்திக்கும் சவால்கள்தான்:

"நைட்டு லேட்டாத்தானே தூங்கினோம், நாளைக்கு ஓடலாம்"

 "நேத்தே எக்ஸ்ட்ரா பத்து நிமிஷம் ஓடியாச்சு. நாளைக்கும் சேர்த்து ஓடிக்கலாம். இன்னிக்கு லீவு உட்றலாம்"

"நைட்ஷோ படத்துக்கு போவனுமே"

 "இன்னிக்கு ஆபிசுக்கு சீக்கிரம் போகனுமே"

 "லைட்டா ஜூரம் வர்றா மாதிரியிருக்குல்ல, ஜலதோஷமோ?"

 "லைட்டா கணுக்கால் வலிக்குதே"

"இன்னைக்கு அன்னையர் தினம்ல?!"


படுக்கையிலிருந்து எழுந்திருப்பதே சவால். Obviously. ஆனாலும் போனில் Runkeeper  நிறுவிக்கொண்டு நானும் ரன்னர் என்று பெருமை பீத்தலை மட்டும் அப்போதே ஆரம்பித்துவிட்டேன்.

வேலை பார்க்கும் நிறுவனம் சென்ற செப்டம்பரில் நடத்திய Charity Run தான் நான் கலந்துகொண்ட முதல் ஓட்டம். தூரம் அதிகமில்லை. 5 கி.மீ தான். அது ஓடிய சூட்டோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு நண்பர்களையும் (டெனிஸ், பகவதி) கூட்டணி சேர்த்துக்கொண்டு Wipro Chennai Marathon-ல் 10K-விற்கு பதிவு செய்தாகிவிட்டது. அவ்வப்போது எட்டிப்பார்க்கும் டிவிட்டரிலும் #twitrunners (அண்ணன் @yathirigan, @jmr_chn முதலியோர்) தூண்டுதலாக இருந்தனர்.

ஆரம்பத்தில் கிலோமீட்டருக்கு 6'30" தான் என்னுடைய வேகம். டெனிஸும் பகவதியும் இன்னும் தொப்பை வளர்க்காத, 25 தாண்டாத இளஞ்சிங்கங்கள். அதிலும் டெனிஸ் பள்ளிக்காலத்திலிருந்தே short distance runner. அவர்கள் இருவரும் 55  நிமிடம் என டார்கெட் வைக்க நான் 65-ல் இருந்தேன். ஒழுங்காக பயிற்சி எடுக்க திட்டமிட்டதோடு சரி. 2 வாரம் ஒழுங்காக ஓடி பயிற்சி செய்திருப்பேன். திரும்பவும் 'பழைய குருடி கதவைத் திறடி'. அப்படியும் சென்னை மாரத்தானில் 10 கிலோமீட்டரை 63 நிமிடத்தில் முடித்தேன். மக்களோடு ஓடும்போது ஒரு வேகம் வந்துவிடுகிறது. ஓட்டத்தின் இரண்டாம் பாதியில் நாக்கு தொங்கினாலும் ஓரளவு சமாளித்துவிட்டேன்.

அந்த தைரியத்தில் பாண்டிச்சேரி ஆரோவில் மாரத்தான் 10K-விற்கும் பயிற்சியில்லாமல் ஓடிவிடலாம் என நினைத்தது முட்டாள்தனம். சென்னை மாரத்தான் ஐஐடி வளாகத்தில் சமமான சாலையில். ஆரோவில்லில் கடினமான பாதை. அதிலும் ஓட்டத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் தவறான பாதையில் ஓடிவிட்டோம். பயிற்சியில்லாதது மட்டுமில்லாமல் ஆரம்பத்திலேயே அதிக வேகத்தில் ஓடியதால் பாதியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிட்டது. கால் தசை வலிக்க ஆரம்பித்தது. கடைசி நான்கு கிலோமீட்டர்கள் கிட்டத்தட்ட Run/Walk தான். 64 நிமிடங்களில் முடித்திருந்தேன். முடிந்தவுடன் கொடுத்த பொங்கல் வடையில் வலியெல்லாம் பறந்தது.

'பாடின வாயும் ஓடின காலும் நிக்காது' என்பதால் அடுத்தது "குவாட்டரைத் தூக்கறோம், ஹாஃப்பைத் தாக்கறோம்" என்று முடிவெடுத்து ஜூலை Dream Runners Half Marathon-க்கு பதிந்து வைத்தேன். ஆரோவில்லில் வாங்கிய அடி நன்றாக நினைவில் இருந்ததால் சரியான பயிற்சி எடுக்கும் முடிவில் இருந்தேன். இணையத்தில் Running Tips என்று எங்கெல்லாம் எழுதியிருக்கிறதோ அங்கெல்லாம் படித்தேன். படித்தேன், அஷ்டே.

மே மாதம் டெனிஸ் எங்கள் வீட்டருகே குடிவந்தான். மூன்று பேரும் சேர்ந்து Runkeeper.com-லிருந்த ஒரு Beginner Plan-ஐத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். 5 கிலோமீட்டரில் ஆரம்பித்து வாரநாட்களில் 8 கிலோமீட்டர் வரையிலும் வாரயிறுதியில் நீண்டதூர ஓட்டமாகவும் இருந்தது. ஒவ்வொரு வாரமும் படிப்படியாக ஓடவேண்டிய தூரம் அதிகரித்தது.  ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. மூவரும் இரண்டு வாரங்களுக்கு விடாமல் ஓடினோம். பின்னர் பகவதி பெங்களூருக்கு மாற்றலாகி சென்றான். டெனிஸுக்கு வேலைப்பளு அதிகமானாதால் பயிற்சிக்கு வருவதை நிறுத்தினான். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத துரைசிங்கமாய் தனியாளாய் பயிற்சியைத் தொடர்ந்தேன். மே மாதம் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது ஓடியிருப்பேன்.

கத்தரி வெயில் கழிந்ததும், கவர்னர் ரோசய்யா அளவுக்கு இல்லையென்றாலும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது கல்யாணம் காதுகுத்துகளுக்கு  சென்று விழாவை சிறப்பிக்க வேண்டியிருந்தது. ஜூனில் Runkeeper Training Plan-ல் 50% கூட ஓடியிருக்கமாட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 17 கிமீ. ஓடினேன். இரண்டு மணி நேரம் எடுத்தது. இரண்டரை மணி நேரத்தில் அரை மாரத்தான் முடித்துவிடலாம் என நம்பிக்கை வந்தது.

Race Day. லேசான தூறலுடன் அட்டகாசமான வானிலை. "என்ன..காத்துதான் வரல!". பெசன்ட் நகரில் ஆரம்பித்து மெரினா வரை சென்று திரும்ப வேண்டும். முதல் மூன்று கிலோமீட்டருக்கு நானும் பகவதியும் ஒன்றாக ஓடினோம். அதற்குள் அவனுக்கு தண்ணீர் தாகமெடுக்க வேகத்தைக் குறைத்துக்கொண்டான். நான் ஒரே சீரான வேகத்தில் ஓடி முதல் Aid Station-ஐ அடைந்தேன். அயர்ச்சியோ தாகமோ இல்லையென்பதால் தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கி கையில் வைத்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன். பட்டினப்பாக்கத்தில் ஒரு டிராபிக் போலீஸ் "Good try! Good Try!" என கைதட்டி உத்வேகம் தந்தார். புகைப்படக்காரர்கள் எல்லோருக்கும் போஸ் கொடுத்துக்கொண்டே ஓடினேன். நான்கைந்து போட்டோ தேறியிருக்கிறது :D.

சாந்தோமை தாண்டும்போது முதலிடத்தில் ஓடியவர் யு-டர்ன் அடித்து ரிடர்ன் வந்துகொண்டிருந்தார். பின்னால் ஒரு 300 மீட்டரில் இரண்டாவது வீரர். எதிரில் ஓடி வருபவர்களுக்கு தம்ஸ்-அப் காட்டிக்கொண்டே நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன். பயிற்சியின்போது டயர்டாகும்போதெல்லாம் 1 முதல் 20 வரை தொடர்ந்து 20 முறை எண்ணி முடிக்கும்வரை விடாமல் ஓடவேண்டுமென ஓடுவேன். அதேபோல் எண்ணிக்கையை ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் முன்னால் ஓடும் சிலர் நடக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் எனக்கும் நடக்க தோன்றியபடியிருந்தது. ஆனாலும் ஐ.ஜி அலுவலகம் தாண்டும்வரை நிற்கக் கூடாதென சிறிது வேகத்தைக் குறைத்து ஓடினேன். ஐ.ஜி அலுவலகம் தாண்டியதும் 100 மீட்டர் நடந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். எதிரில் டெனிஸ் வந்துகொண்டிருந்தான். 12 கி.மீட்டரில் (73 நிமிடத்தில்) யு-டர்ன் அடித்து திரும்ப வரும்போது காந்தி சிலையருகே யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். எங்கேயோ கேட்ட குரல்! கல்லூரி நண்பன் விநாயக். 'மாப்ள!..வா! வா! சீக்கிரம் வா!' என கத்திக்கொண்டே ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிறிது தூரத்தில் யாத்ரீகன் தம்பதி சமேதராய்.

16 கி.மீட்டர் தாண்டியதும் 'இன்னும் ஐந்தே கிலோமீட்டர், நாம் தினம் ஓடும் தூரம்தான்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் கால் நகரவில்லை. லீலா பேலஸ் ஓட்டலைத் தாண்டியதும் சிறிது தூரம் நடந்தேன். அடையாறு பாலம் வரை நிற்காமல் ஓடவேண்டும் என மீண்டும் ஓட ஆரம்பித்தவன் ஒரு அரை கிலோமீட்டரிலேயே அடுத்த Aid Station கண்ணில் தென்பட்டதும் ஓடுவதை நிறுத்திவிட்டேன். "இதுக்கு மேல் ஓடாமல் நடந்தே முடிச்சா எவ்ளோ நேரமாகும்?" என சிந்தனை வேறு. "மவனே இவ்ளோ தூரம் ஓடிட்டோம்..ஓடி முடிக்கறோம்..நெஞ்சேஏஏஏ எழுஊஊஊ"ன்னு எனக்கு நானே மோட்டிவேஷன் பாட்டெல்லாம் பாடி ஓடிக்கொண்டிருந்தேன். மீண்டும் நிற்கலாமா என யோசித்தவனை ஒவர்டேக் செய்த ஒரு தாத்தா அடையாறு பாலம் தாண்டி கொண்டு வந்து சேர்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். இன்னும் 2 கிலோமீட்டர்கள். "கடைசி 500 மீட்டர் நல்லா வேகமா ஓடறோம். அதனால இப்ப கொஞ்சம் நடந்துக்கலாம்" என்று ஒரு 100 மீட்டர் நடந்தேன். மீண்டும் ஓட ஆரம்பித்து கடைசி Aid Station-ஐக் கடந்தேன். ஓடுபவர்களின் முகங்களில் தண்ணீர் பீய்ச்சியடித்து உதவிக்கொண்டிருந்தவர் என் மேல் தண்ணீர் பீய்ச்சயபடியே ஐந்தாறு அடி உடன் ஓடிவந்தார். ஒவ்வொரு Aid Station-லும் சிறுவர்களும் பெரியவர்களுமாய் பெரிதும் உதவினர். Hats off! Hats off to the organizers!!

கடைசி கிலோமீட்டர் வேகமாக ஓடவேண்டும் என்ற எண்ணம் பலிக்கவில்லை. கணுக்காலில் லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதனால் மிக மெதுவாகவே ஓடினேன். கடைசி 150 மீட்டர் கிரவுண்டுக்குள் நுழைந்ததும் வேகத்தைக் கூட்டி எல்லைக் கோட்டை 02:24:46-ல் கடந்தேன். "சாதிச்சிட்டோம்டா தம்பி!!"!


"ஆகஸ்ட்ல ஐதராபாத்ல ஓடறேன். அக்டோபர் கோயமுத்தூர்ல கூப்டுருக்காங்க! டிசம்பர்ல சென்னைல மாரத்தான்! அடுத்த பிப்ரவரி எங்க இருப்பேன்ன்னு எனக்கே தெரியாது! ஐயாம் வெர்ர்ரி பிஸி"



வெள்ளி, டிசம்பர் 31, 2010

?! - 2010

ப்லாக்கர் கடவுச்சொல்லே கிட்டத்தட்ட மறந்துபோன நிலையில் "2010-ல் ஒரு பதிவாவது போடப்பா" என மேற்சென்று இடித்த தல கைப்ஸ் பொருட்டு :-)

பதிவு மட்டுமின்றி ஜிடாக், பேஸ்புக், ஆர்குட் என சகலவிதமான லெளகீகங்களிலிருந்தும் விலகியே இருக்க நேர்ந்தது. வேலை ஒரு காரணமென்றால், வாங்கி மூன்று வருடமான லேப்டாப் உள்ளே அழுக்காகிக் கிடக்குமென மழையில் நனைத்து கழுவியது இன்னொரு காரணம். டிவிட்டரில் மட்டும் தலைமறைவாய் மற்றவர்களின் கீச்சுகளைப் படித்து பொழுதைப் போக்கியாயிற்று. அவ்வப்போது ரிட்டீவிட்டியும் புலம்பியும் அரிதாக படித்ததை பகிர்ந்தும் மூன்று ஆண்டுகளில் ஆயிரத்து சொச்சம் டிவீட்டுகள் மட்டுமே அடித்திருப்பதிலேயே எத்தனை ஆக்டிவ்வாக இருக்கிறேன் என்பது வெள்ளிடை மலை. பலமுறை பதிவெழுதும் எண்ணம் எழுதும்போதெல்லாம் நான்கு வரிகளுக்கு மேல் கார்பரேட்டர் அடைத்து நின்றுவிட்டது. இனியேனும் ஏதாவது தேறுகிறதாவெனப் பார்க்க வேண்டும். வழக்கத்திற்கு அதிகமான சோம்பலும் சிறுது சோர்வுமாய் கழிந்த 2010-ல் ரிவைண்ட் ஓட்டியதில் சில குறிப்புகள் இங்கே.

*********************************************

தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு ஊரில் தனியாக இருந்த பாட்டி சென்ற ஆண்டு இறுதியில் காஞ்சிக்கு வந்துவிட்டார். வாரத்திற்கு ஒரு முறையாவது ஊருக்குப் போகவேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தவர், பொங்கல் முடிந்ததும் கிராமத்து வீட்டில் பூஜை செய்ய சென்று அன்றிரவே அங்கு இறந்தார். அறுபது ஆண்டுகள் தான் வாழ்ந்த வீட்டிலேயே அவர் மரணித்தது நெகிழச் செய்தது. 'வயசான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம போயிட்டாங்க' என்று உறவினர்கள் சொன்னது ஆறுதலா எனத் தெரியவில்லை. அவர் இருந்தவரை ஆண்டுக்கு சில முறையாவது அங்கு சென்று திண்ணையிலும் சமையல்கட்டு படியிலும் வாசலிலும் அமர்ந்தபடி சிறு வயது நினைவுகளை அசைபோடுவது இனி வாய்க்கப் போவதில்லை.

*********************************************

ஏப்ரலில் நண்பனின் திருமணத்திற்காக மதுரை பயணம். பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் வழக்கமாக ஒரே மாதிரி ஜிங்குச்சா சட்டையை அணிந்து கொண்டு மண்டபத்தில் அலப்பறை செய்து 'யாருடா இவங்க' என வந்திருந்த மேன்மக்களை முறைக்கச் செய்தோம். திருநகரில் கல்யாணம் முடிந்ததும் கல்லூரிக்கு ஒரு விசிட். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு. கவுண்டர் கடையும் சுஷ்மிதாவும் அப்படியே இருந்தன. எப்படியும் ஹாஸ்டலுக்குள் விடமாட்டார்களென கல்லூரிக்கு வண்டியை விட்டோம். மூன்றாவது மாடியில் நாங்கள் குப்பை கொட்டிய வகுப்பறைகளில் மாணவச் செல்வங்கள் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தது இன்ப அதிர்ச்சி. நாங்கள் படித்த காலத்தில் மொத்த ஹாஸ்டலுக்கும் ஒரு பத்து கம்ப்யூட்டர் மட்டுமே இருந்திருக்கும். அதிலும் ஆடோ ஆடென்று விளையாடியது போக பகலிரவாக பல படங்கள் ஓடியதெல்லாம் தலைக்கு மேல் கொசுவத்தியாய் சுற்ற ஆரம்பித்தது. 'அரியர் வச்ச மக்குப் பசங்களா' இருக்குமோவென இளைய தலைமுறை எட்டிப் பார்த்ததும் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம். கீழே வந்து சில ஆசிரியர்களை சந்தித்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி. லெக்சரர் ஒருவர் எங்களையும் எங்கள் சட்டைகளையும் பார்த்து 'இன்னும் அப்படியேத்தான் திரியறீங்களாப்பா?!" எனக் கேட்டது நிச்சயமாய் எங்களுக்கான சர்ட்டிபிகேட் தான்.

*********************************************

கர்நாடகாவிலிருக்கும் கோவில்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி அம்மா சென்ற வருடமே கேட்டிருந்தார். இந்த வருடம் அழைத்துச் செல்ல முடிந்தது. ஷிமோகாவில் ஆரம்பித்து அப்படியே நூல் பிடித்தாற் போல் கீழிறங்கி கோவில் கோவிலாக சென்று வந்தோம். ஒவ்வொரு கோவிலுக்குள் செல்லும்போதும் அவர்களில் முகத்தில் தோன்றிய ஆனந்தமும் வெளியே வரும்போது இருந்த திருப்தியையும் பார்ப்பதற்காகவே வாயிலில் அமர்ந்து காத்திருந்தேன். கிட்டத்தட்ட 30 கோவில்களுக்கு மேல் சென்று கடைசியாக மைசூரை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பினோம். இத்தனை கோவில்களுக்கு சென்ற பின்னும் விட்டுப் போன சில கோவில்கள் குறித்து அவர் வருந்தியதற்கான காரணம் இன்னும் புரியவில்லை.

*********************************************

'நானூத்தி தொண்ணூத்தொம்பொது ரூபா பக்கிட்டி ஒன்னு கொடுப்பா' என கரைவேட்டி (கடைக்காரரை தட்டிக் ) கேட்பதை வேடிக்கைப் பார்த்தபடியே கே.எப்.சியில் பர்கரை உள்ளே தள்ளும் போதும் சரி, ராமச்சந்திராவில் அப்பா ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தபோது கேண்டினில் காலத்தைக் கழித்தபோதும் சரி, ராமச்சந்திரா மாணவிகளே அதிகம் தென்பட்டனர். மாணவச் செல்வங்கள் இப்படி வெளியே சுற்றாமல் படிப்பிலேயே காலத்தை ஓட்டுகிறார்கள் போல.

*********************************************

கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்களும் அதை விடக் கொஞ்சமாக திரைப்படங்களும் பார்த்ததில் இந்த ஆண்டு மண்டைக் குடைச்சல் சிறிது குறைவே. கடைசியாக வாங்கிய பல்பு 'அய்யனார்'. இன்றிரவு வாங்கப் போகும் பல்பு மமஅ. சில புத்தகங்கள் டீடோடலரிடம் கிடைத்த ஸ்மிர்னாஃப் போல என் கையில் சிக்கின. இப்போது bookandborrow.com வழியாக ஓசியில் புரட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை நம்பி Guy de Maupassant என்பவரின் தலையணை சைஸ் புத்தகத்தை ஓசியில் கொடுத்தவரின் நிலையை நினைத்து கையைப் பிசைந்துகொண்டிருப்பது லேட்டஸ்ட்.

********************************************

நண்பனின் தம்பி ரூமுக்கு வந்ததிலிருந்து அட்வைஸ் என்ற பெயரில் நாங்கள் மூன்று பேர் மொக்கை போட்டதிலும் ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகனுக்கு மொட்டை பாட்டை லூப்பில் ஓடவிட்டு கேட்க வைத்ததிலும் தம்பி ரூமை விட்டே எஸ்ஸானான். பள்ளி மாணவர்கள் 'அங்கிள்' என்று கூப்பிட்ட காலம் தாண்டி கல்லூரி மாணவர்களே 'அங்கிள்' என கூப்பிட ஆரம்பிக்கும் காலத்தில் நாங்கள்லாம் யூத்து என்ற பீத்திக் கொண்டிருந்தாலும் நண்பர்களின் தம்பிகளோ வேலைக்கு சேரும் ஃபிரெஷர்களோ வேறு மாணவர்களோ சிக்கினால் அட்வைஸ் என்ற பெயரில் அரை மணி நேரம் அறுவையைப் போடும்போது நமக்கே லேசாக சந்தேகம் வந்துவிடுகிறது.

*********************************************

சிலபல காலமாக சுசுயிஸம் பயின்று வருகிறேன்.

'சும்மா இருப்பதே சுகம்'

**********************************************

புத்தாண்டு வாழ்த்துகள்!



செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

?! தொடர்கிறது

காஞ்சிபுரத்தில் டீக்கடை, ஸ்டேஷனரி, கசாப்பு கடை என அத்தனை கடை போர்டுகளிலும் சிநேகா ஆலூக்காஸ் ஜூவல்லரிக்காக சிரித்துக்கொண்டிருக்கிறார். சேட்டன்கள் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் கடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காஞ்சியில் கடை திறப்புவிழாவிற்கு ஸ்ரீதேவி வந்தபோது அந்த ஏரியாவில் வரலாறு காணாத டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது. கேரளாவிலோ கல்ஃபிலோ தங்கவயல் சிக்கிவிட்டது போல. ஒரு முறை திருநெல்வேலி ஆலூக்காஸில் நண்பன் திருமணத்திற்கு கோல்ட் பிளேட்டட் படம் வாங்க சென்றிருந்தோம். இரண்டு நிமிடத்தில் நாங்கள் தேர்வு செய்த பொருளுக்கு பில் போட, கிரெடிட் கார்ட் மூலம் பணம் கட்டியதால், அவர்களுக்கு முக்கால் மணி நேரம் ஆனது. சேட்டன்களின் தங்கத்தின் தரத்தை நாம் சோதிப்பதைவிட கிரெடிட் கார்டையும் நம் பொறுமையையும் அவர்கள் நிறையவே சோதிக்கிறார்கள்.

சிநேகா ஆலூக்காஸ் விளம்பரத்தில் வருகிறாரே 'ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே' விளம்பரம் இப்போது வருவதில்லையா?

சிநேகாவுக்கு வந்த எஸ்.எம்.எஸ் பற்றி சென்ற வார ஜூவியில் கவர் ஸ்டோரி வந்திருந்தது. அதற்கு முந்தைய வார ஆ.வி.யில் 'கோவா' பட விளம்பரத்திற்காக காமெடியென நினைத்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டார்கள் போல.

****

டாடா கோல்ட் ப்ளஸ் நிறுவனத்தினர் பெண்கள் சுய உதவி குழுக்களை டார்கெட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் சென்று தங்கத்தின் தரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என வீடியோவுடன் விளக்கிவிட்டு மாதத்திற்கு இருநூற்றைம்பது, ஐநூறு என சீட்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

****

சில மாதங்களுக்கு முன் ஜூவியில் செங்கல்பட்டு ஏரியாவில் மண்ணுளி பாம்பைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்குகிறார்கள் என கட்டுரை வந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவாசி அருகிலுள்ள மாமா ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கும் 'மண்ணுளி பாம்பு' வியாபாரம் கன ஜோராக நடக்கிறதாம். பாம்பைத் தேடி மலை மலையாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். பாம்பின் தரத்திற்கு(?!) ஏற்றவார் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கிறார்களாம். தனக்கு தெரிந்த ஒருவர் ஒரு லட்சம் வாங்கியதாக மாமா சொன்னார்.

பாம்பு பிடித்துக் கொடுத்து பணம் பார்க்கலாமென்றால் அந்த பாம்பின் லவ்வர் வந்து பழி வாங்குமோ என்ற பயம் தடுக்கிறது.

****

அலுவலக கேண்டீனில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் அந்த 'சஃபாரி சூப்பர்வைஸர்' ஓட்டல் தனிக்காட்டு ராஜாவாக கல்லா கட்டிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் 'சாம்பார் இட்லி' ஓட்டலும் உள்ளே வந்ததில் இவர்கள் கடையில் கூட்டம் குறைந்துவிட்டது.

சென்ற வாரம் ஒருநாள் மதியம் 'சாம்பார் இட்லி' ஓட்டலில் 'சஃபாரி ஓட்டல்' சூப்பர்வைஸர் மஃப்டியில் கட்டம் போட்ட சட்டையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை 'என்ன பாஸ் நேத்து மதியம் அங்க டெஸ்டிங்கா?' எனக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவர் 'பார்த்துட்டீங்களா' என சிரித்தார். 'சாம்பார் இட்லி' சாப்பாடு எப்படியிருந்ததெனக் கேட்டதற்கு 'கொஞ்சம் உப்பு கம்மி..நம்ம ஓட்டல் அளவுக்கு வராது..அதை நான் சொல்லக்கூடாது' என்றார்.

'அதான் சொல்லிட்டீங்களே' என நினைத்துக்கொண்டேன்.

****

'ஹீரோவோண்டா அச்சீவர்' என்றால் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. வெறுவமனே 'ஹீரோவோண்டா' என்றாலும் 'ஹீரோவோண்டால?' என்று துணைக் கேள்வி எழும். 'இந்த மாடல் இப்ப வர்றதில்லீங்க.நிறுத்திட்டாங்க' என்று அதன் வரலாறு கூற வேண்டியிருக்கும். அந்த காலத்தில் ஆம்பிஷன் என 135சிசி மாடல் இருந்தது ஞாபகமிருக்கிறதா? சிபிஸி உற்பத்தியை சிறிது காலம் நிறுத்தியிருந்தபோது ஆம்பிஷனை 150சிசிக்கு மாற்றி சிலப்பல மாற்றங்கள் செய்து அச்சீவராக வெளியிட்டார்கள். ஹோண்டா யூனிகார்னுக்கும் அச்சீவருக்கும் ஒரே இஞ்சின். அடுத்த வருடமே சிபீஸி மாடலை திரும்பவும் உற்பத்தி செய்ய ஆரம்பித்ததும் இதை நிறுத்திவிட்டார்கள். இப்போது சென்னையில் என் பைக்கையும் சேர்த்து முந்நூத்தி சொச்சம் அச்சீவர்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

2005-ல் பைக் வாங்கிய பிறகு ஒரே ஒரு முறை காப்பீடு புதுப்பித்திருந்தேன். அப்போதே ஓரிஜினல் பாலிசி டாக்குமெண்ட்ஸை தொலைத்திருந்தேன். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வண்டி ஓரங்கட்டப்பட்டது. மார்ச் மாதம் ஊர் திரும்பியதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொலைத்த டாக்குமெண்ட்ஸை தேடுவதில் பயனில்லையென காப்பீடு இல்லாமலே காலத்தை ஓட்டினேன். 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாமல் ஓடிப் பழகிய வண்டி டிராபிக் போலீஸை பார்த்தால் தன்னாலே வேகம் குறைத்து வலது லேனுக்கு சென்றது.

சென்ற மாதம் ஒருமுறை திருவான்மியூரில் டிராபிக் போலீஸ் நிறுத்தி 'டாக்குமெண்ட்ஸ்' கேட்டார். இல்லையென சொல்லாமல் வண்டியை ஓரங்கட்டி சீட்டுக்கடியிலிருந்து 'டாக்குமெண்ட்ஸ்' எடுப்பதாய் பாவனை செய்துகொண்டிருந்தேன். அதற்குள் அவர் மேலும் இரண்டு வண்டிகளை நிறுத்தியிருந்தார். இரண்டு நிமிடம் கழித்து அப்பாவியாக முகத்தை மாற்ற முயற்சித்துக் கொண்டே 'சார் டாக்குமெண்ட்ஸ் சீட்டுக்கடியில இருக்கு. லாக் ஸ்ட்ரக் ஆயிடுச்சு..தொறக்க முடியல' என்றேன். ஏற இறங்க பார்த்தவர் 'டாக்குமெண்ட்ஸ் உண்மையாவே இருக்கா?' என்றார். 'இருக்கு சார்..சீட்டு தான் தொறக்க முடியல' என அவர் கண் முன்னே மீண்டும் திறக்க முயற்சிப்பது போல் சாவியை வெளியே எடுத்தேன். அவருக்கு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். கிளம்ப சொல்லிவிட்டார். நூறோ இருநூறோ தப்பியதென நன்றி சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினேன்.

ஒவ்வொரு முறையும் இதுபோல் அதிர்ஷ்டம் துணைக்கு வராதென சென்ற வாரம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சென்றேன். 'பழைய பாலிசி பேப்பர்ஸ் இல்லாம எடுக்க முடியாது' என தீர்க்கமாக சொன்ன -'James Hadley Chase' நாவலை டேபிள் நடுவிலும் மற்ற கோப்புகளை மூலையிலும் வைத்திருந்த - அலுவலரிடம் 'சார் வீடு மாறும்போது தொலைஞ்சுடுச்சு சார்..புது வண்டி சார்..' என ஏதேதோ பேசி ஒருவழியாக இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். ஆனால் அதன் பின்னும் என் சோம்பேறிதனத்தால் பாலிசி பேப்பர்கள் நகல் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறேன்.

தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் தாண்டியதும் சந்தோசபுரம் என்று ஒரு ஏரியா இருக்கிறது. அங்கே கடைகளோ வீடுகளோ இல்லாமல் காலியாக இருக்கும். டிராபிக் கொஞ்சம் வேகமாக நகரும். பெரும்பாலும் அந்த இடத்தில் டிராபிக் போலீஸ் நின்று வேகமாக வருபவர்களைப் பிடிப்பார்கள். நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இருநூறு மீட்டர் முன்னால் ஒரு டிராபிக் பேட்ரோல் வண்டி நின்றுகொண்டிருந்தது. மெதுவாக வலது லேனுக்கு மாறினேன். டிராபிக் கான்ஸ்டபிள் ரோட்டோரம் நின்றிருப்பது தெரிந்தது. முன்னால் சென்ற வாகனங்கள் வேகத்தைக் குறைத்தன. வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதா என எட்டிப் பார்த்தபோது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. 'அப்படியே யூ அடிச்சிருவோமா' என யோசித்துக்கொண்டிருக்கும்போதே நூறு மீட்டர் நெருங்கிவிட்டேன். 'இன்னைக்கு கெளம்பும்போது நாய் குறுக்க வந்துச்சே அதனால இருக்குமோ' என எண்ணியபடி வேகத்தை சிறிது கூட்டினேன். போலீஸ் வாகனத்துக்கு இன்னும் ஐம்பது அடிகளே இருந்தது. யாரையும் நிறுத்தி வைத்திருக்கவில்லை.'நாமதான் மொத போணி போல' என்று நெருங்கியபோது அந்த டிராபிக் கான்ஸ்டபிள் சுவரோரம் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்தார்.



திங்கள், ஜனவரி 26, 2009

D70

எந்த நேரமும் கொட்டிவிடும் போலிருந்த மழை மேகங்களிருந்து காத்துக்கொள்ள ரெக்ஸின் ரெயின் கோட் அணிந்திருந்தான் அவன். வரிசையாக வந்த இரண்டு D70 சொகுசு பேருந்துகளில் ஏறாமல் பத்து நொடிகளுக்கொரு முறை கைக்கடிகாரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். நிறுத்தத்தில் அவனைச் சுற்றி தினம் காலை எட்டரை மணிக்கு எந்த பேருந்து நிறுத்தத்திலும் காணக்கூடிய முகங்கள். கண்ணுக்குத் தெரியாத மாயக்கயிற்றால் தொங்கிக் கொண்டிருக்கும் பயணிகளைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு 'சாதாரண பேருந்து' ஊர்ந்து வந்து நின்றது. தோள் பையை பக்கவாட்டில் தள்ளிக்கொண்டு கூட்டத்தை நெருக்கியடித்து ஏறி உள்ளே நகர்ந்தான். சாய்ந்துகொள்ள கம்பி கிடைக்குமா என்று அவன் கண்கள் துழாவின. அவன் நின்ற இடத்திலிருந்து நான்காவது கம்பியில் ஒரு பக்கம் காலுக்கடியில் பெரிய பையுடன் இளைஞன் ஒருவன் செல்போன் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக்கொண்டு சாய்ந்திருந்தான். அந்த கம்பியைக் குறிவைத்து இவன் உள்ளே நகர்ந்தான். முன்னால் ஏறிய கைப்பை ஆசாமி ஒருவரும் அந்த கம்பியை நோக்கி வருவதைக் கண்டு அவசரமாக நகர்ந்து கம்பியில் சாய்ந்துகொண்டான். சட்டைப் பையிலிருந்த சில்லரையை எடுத்து அருகில் நின்றவரிடம் 'மூனரை ஒன்னு.பாஸ் பண்ணுங்க சார்' என்றபடி கொடுத்துவிட்டு தோள்பையை சரிசெய்துகொண்டான். அது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரின் முகத்தை உரசுவதுபோல் அசைந்ததில் அவரின் தூக்கம் கலைந்தது.


வடபழனி பேருந்து நிறுத்ததில் ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேருந்துகளைக் கடந்து முன்னால் சென்று நிறுத்தினார் ஓட்டுனர். நிறுத்தத்திலிருந்து மக்கள் ஓடிவருவதை ஜன்னல் வழியாக குனிந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை நேரத்தை சரிபார்த்துக்கொண்டான். வெளியே மேகமூட்டமாக இருந்தாலும் பேருந்தினுள் கூட்டநெரிசலில் வெக்கையாக இருந்தது. சட்டையில் ஒரு பட்டனைக் கழட்டிவிட்டுக்கொண்டான். அருகிலிருந்த இளைஞன் இரண்டு நாளில் திரும்பிவருவதாக யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்தவர் மீண்டும் தூக்கத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர் ஜன்னல் கம்பியில் கை வைத்து வெளியே வெறித்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

இவன் மீண்டும் பேருந்தினுள் பார்வையை செலுத்தினான். பின்பக்கம் கடைசி படியில் கட்டம் போட்ட சட்டையில் நின்றிருந்தவன் தெரிந்த முகம் போல் தெரிந்தது. ஒருவேளை செல்வமாக இருக்குமோ. முகத்தைப் பார்க்க முன்பக்கம் சாய்ந்தான். பார்வைக் கோட்டில் நின்றிருந்த முப்பத்தைந்து வயது பெண்மணி அவளைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மாராப்பை சரிசெய்தாள். அவளுக்குப் பின்னாலிருந்த நபர் இவனைப் பார்த்து புன்னகைப்பதுபோல் இவனுக்குத் தோன்றியது.

படியில் நின்றிருப்பது செல்வமாகத் தான் இருக்கவேண்டும். வடபழனியில் ஏறியிருக்கலாம். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின் அவனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை எண்ணும்போது அவனுக்கு கைகள் லேசாக நடுங்கின. மீண்டும் ஒரு முறை பின்பக்கம் திரும்பிப் பார்த்தான். நீலநிற கட்டம் போட்ட சட்டை மட்டுமே தெரிந்தது. ஒரு கை தனியாக பேருந்துக்கு வெளியே காற்றில் அசைந்தபடி இருந்தது. எத்தனை முயன்றும் முகம் தெரியவில்லை.

செல்வம் அவனது கல்லூரித் தோழன். தோழனாக இருந்தவன். அவனை முதன்முதலாக சொர்க்கம் ஒயின்ஸ் கூட்டிச் சென்றதும் தங்கரீகல் தியேட்டரினுள் அழைத்துச் சென்றதும் செல்வம்தான். அவர்கள் வகுப்பில் படித்த சாந்தியை இவன் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்தான். ஒரு சனிக்கிழமை மாலை வழக்கம்போல் சொர்க்கம் ஒயின்ஸில் பீர் குடித்துவிட்டு சாந்தியின் கதையை செல்வத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த சாந்தியின் அண்ணன் இதைக் கேட்டுவிட்டு இவனை அடிக்க வந்தான். குறுக்கே பாய்ந்த செல்வம் சாந்தியின் அண்ணனையும் அவனுடன் வந்தவர்களையும் அடித்து துவைத்து இவனைக் காப்பாற்றினான். இதைக் கேள்விபட்ட சாந்தி செல்வத்திடம் காதல்வயப்பட்டாள். இவன் ஒருதலைக் காதலை அறிந்த செல்வம் இவனிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சாந்தியின் காதலை ஏற்றுக்கொண்டான். அன்றுடன் இவன் செல்வத்துடன் தொடர்பை துண்டித்துக்கொண்டான். சொர்க்கம் ஒயின்ஸுக்கும் தங்கரீகலுக்கும் தனியாகவே சென்றுவந்தான். அடுத்த வருடமே வேலை தேடி சென்னைக்கு வந்தவன் இன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வத்தைப் பார்க்கிறான்.

கல்லூரி நாட்களை அசைபோட்டுக்கொண்டிருந்தவன் கூட்டத்தின் இரைச்சலில் நினைவுக்கு வந்தான். திரும்பிப்பார்த்தபோது படியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக ஓடும் பேருந்திலிருந்து குதித்துக் கொண்டிருந்தார்கள். படியில் நின்றிருந்த ஒருவன் ஓடும்பேருந்திலிருந்து விழுந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள். ஓட்டுனர் விழுந்தவனின் தாயை திட்டியபடி பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். சில பயணிகள் இறங்கி விழுந்தவனை நோக்கி ஓடினர். சிலர் கடிகாரத்தைப் பார்த்தபடி பின்னால் வந்த ஆட்டோக்களை கைகாட்டி நிறுத்திக்கொண்டிருந்தனர். அவன் பேருந்திலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி நடந்தான். விழுந்தவனின் உடலில் பின்னால் வந்த அம்பாசிடர் கார் ஏறியிருந்தது. முகம் காருக்கு அடியில் மறைந்திருந்தது. நீலநிற சட்டை முழுதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியேறி ஒரு ஷேர் ஆட்டோவை மறித்து ஏறி அங்கிருந்து சென்றான்.

அன்றைக்குப் பிறகு அவன் நள்ளிரவுகளில் விழித்துக் கொண்டு விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதாக அவன் மனைவி சொன்னாள். தான் இறந்துவிட்டால் அழக்கூடாதென்று தன்னிடம் சொன்னதாக அவனது எட்டு வயது மகள் தன் தாயிடம் சொல்லி அழுதாள். அன்றைக்குப் பிறகு என்றுமே அவன் D70 பேருந்தில் பயணிக்கவில்லை. அவன் யாரென்று தனக்கு தெரியாதென்றும் அவனைப் போல் ஆயிரம் பேரை பார்த்திருப்பதாகவும் அப்பேருந்தின் நடத்துனர் சொன்னார்.



திங்கள், நவம்பர் 17, 2008

பாட்டுத் தலைவன் பாடினால்

"யார் பாடினது தல? செம காமெடியா இருக்கு?"

அறை நண்பரின் செல்போனில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" யார் குரலிலோ ரெக்கார்ட் செய்யப்பட்டு பாடிக்கொண்டிருந்தது.

"நீ பாடினது தாண்டா வெண்று. உன் குரலை நீயே கேட்டுப் பார்.எங்க கஷ்டம் புரியும்"

"அட நான் பாடினதுதானா..நான் சும்மா பாடும்போது ரெகார்ட் பண்ணிட்டீங்க போல..அதான் சரியா வரல..அடுத்தமுறை சொல்லிட்டு பண்ணுங்க..இன்னும் பெட்டரா பெர்பார்மன்ஸ் கொடுக்கறேன்" என்றபடி அறையிலிருந்து ஓடி அடிவாங்காமல் தப்பித்தேன்.


சிறுவயதில் இருந்தே பொதுவில் பாடுவதற்கு கூச்சப்பட்டதில்லை. குரலைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைபட்டதில்லை. கேட்பவர்களின் காதுகள் குறித்தும் அக்கறை கொண்டதில்லை. 'ரொம்ப ஒன்னும் மோசமில்லை' என்று என்னை நானே தேற்றிக்கொண்டுவிடுவேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏதோ ஒரு விழாவின் போது ஆர்வக்கோளாறினால் பாடுகிறேன் பேர்வழி என்று மேடையேறிவிட்டேன். நான் மட்டுமில்லாமல் இன்னொரு நண்பனும் சேர்ந்து பலிகடாவானான். மின்னலே படத்தின் 'ஏ அழகிய தீயே' - 7ஜி ரெயின்போ காலனியில் "ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா"விற்கு எந்த விதத்திலும் குறையாமல். பாடும்போதே ஆடியன்ஸில் பலர் பெல்டை உருவி தூக்குப் போட்டுக் கொண்டார்கள். ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் அசராமல் பாடி(?) முடித்துவிட்டுதான் இறங்கினோம். அதன்பின் பொதுவில் பாடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கேற்ப, மன்னிக்க, ஆடியன்ஸுக்கு ஏற்ப அவ்வப்போது கொலை முயற்சியில் இறங்கியபடிதான் இருக்கிறேன்.


பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது சதாசிவம் என்றொரு சீனியர் இருந்தார். எங்களுக்கு மூன்று வருடங்கள் சீனியர். (அவருடைய தங்கை எங்களுக்கு ஒரு வருடம் ஜூனியர்..அவள் பெயர் மறந்துவிட்டது. உயிர் நண்பனுக்கு தொலைபேச வேண்டிய நேரம்) அவருக்கு அப்போதே நல்ல குரல்வளம். பாட்டு போட்டிகளிலும் ஆண்டு விழாக்களிலும் வருடாவருடம் பாடுவார். ஆனால் ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப பாடுவார். "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தால் "செந்தமிழ் தேன்மொழியாள்" வரும்போது எல்லோரும் கைதட்டி தாளம் போட ஆரம்பித்திருப்பார்கள்.





அதேபோல் கல்லூரியில் சீனியர் ஒருவர். எஸ்.பி.பி குரலில் பட்டையைக் கிளப்புவார். 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை கரோகே பின்னணியுடன் அருமையாகப் பாடுவார். இந்த பாடலை வைத்தே பல போட்டிகளில் பரிசுகளையும் கைத்தட்டல்களையும் அள்ளியவர்.


கல்லூரி மூன்றாம் ஆண்டில் விடுதி அறையில் "பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்" பாடலைப் பாடிக்கொண்டிருந்த நண்பனும் அந்த பாடல் பிடிக்காமல் போன இன்னொரு நண்பனும் சண்டை போட்டுக்கொண்டு சில நாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்தார்கள்.


உருகுவேயில் இருந்தபோது உடன் பணிபுரிந்த சஞ்சீவ் கோஷால் சிறந்த பாடகன். கோஷால் என்று பெயர் வைத்தாலே குரல்வளம் பொங்கி வருமோ. கிஷோர் குமார், முகேஷ், முகமத் ரஃபி பாடிய பழைய இந்தி பாடல்களை பாடும்போதே உருகிவிடுவான். நிச்சலனமான பொழுதுகளில் அவன் பாடல்கள் துணையிருந்தன. பத்திருபது இந்திய குடும்பங்களே இருந்த ஊரில் மாதமொரு முறையாவது என்னைப் போன்ற சாப்பாட்டுக்கு அல்லாடும் ஜீவன்களைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போடுவார்கள். அப்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு இவன் பாடல்கள்தான் தாலாட்டு. தமிழில் பாட வேறு யாரும் முன்வராமல் நானே ஏதாவதொரு பாடலைப் பாட ஆரம்பித்தால் முடிக்கும் முன்னரே நேரமாகிவிட்டதென பாதி பேர் கிளம்பியிருப்பார்கள்.




என் சிறுவயதில் பூர்வீக ஊரில் கோவில் திருவிழா நாட்களில் மெத்தை வீட்டு தாத்தா(ஊரில் முதன்முதலில் மச்சு வைத்து வீடு கட்டியவர்; அப்பாவின் சித்தப்பா) கம்பீரக் குரலில் பஜனைகளில் பாடுவார். எழுபது வயதானாலும் அவர் குரலில் சிறிதும் பிசிறு தட்டாது. இரண்டே தெருக்கள் உள்ள அந்த ஊரில் அவர் கைகளைப் பிடித்தபடி பாடிக்கொண்டே நடந்த நாட்கள் நினைவிலிருக்கின்றன.

அப்பாவிற்கு நல்ல குரல்வளம் உண்டு. ஜாலியான மூடில் இருக்கும்போது டி.எம்.எஸ் பாடல்களை ரசித்துப் பாடுவார். 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' அவரின் ஆல்-டைம் ஃபேவரைட். சிறுவயதில் ஞாயிறு மாலைகளில் அவர் பழைய பாடல்களைப் பாட, மேசையில் நான் தாளம் தட்டியபடி பின்பாட்டு பாடுவேன்.


சில வருடங்கள் முன்வரை வீட்டில் தினமும் காலை பூஜை செய்து பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். கோவில்களுக்கு செல்லும் போதெல்லாமும் பூஜைகள் முடிந்ததும் பாடுவார். சுத்துவட்டாரத்தில் ஓரளவு பிரசித்தம். இவர் பாடத் தயங்கும் வேளைகளில் மற்றவர்கள் வற்புறுத்தி பாட வைப்பார்கள். அந்த சமயங்களில் பாட ஆரம்பித்தபின் இவரை நிறுத்துவது கடினம். யாராவது "தாஸு, போதும் மங்களம் பாடுப்பா" என்று குரல் கொடுப்பார்கள். அதன்பிறகும் ஒன்றிரண்டு பாடல்களுக்குப் பிறகே மங்களம் பாடி முடிப்பார். நன்றாக பாடுவதில் அவருக்கு எப்போதும் சிறிது கர்வம் உண்டு.


கடந்த சில வருடங்களாகவே அவர் பாடுவது குறைந்துவிட்டது. எப்போதாவது தொலைக்காட்சியில் அவர் விருப்பப் பாடல்கள் ஒளிபரப்பானால் அதனோடு சேர்ந்து மனதுக்குள் பாடிக்கொள்கிறார். குரலை உயர்த்திப் பாடும்போது குரல் உடைந்துவிடுவதால் பாடுவதில் தயக்கம். "முன்ன மாதிரி பாட முடியல..வயசாயிடுச்சு". ஊருக்கு வந்தவுடன் அப்பாவைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும்.



செவ்வாய், அக்டோபர் 21, 2008

டெஸ்குடா(ஆ)ப்பு & Vanilla Mood

சென்ற வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஃப்ளோரிடா சென்றபோது மயாமி அருகிலுள்ள West Palm Beach என்ற கடற்கரை நகரில் எடுத்த புகைப்படம் இது. கடந்த பத்து மாதங்களாக இதுதான் டெஸ்க்டாப்பில் இருக்கிறது.





நாங்கள் பக்கித்தனமாக டவுசரில் திரிந்துகொண்டிருக்க ஊரில் ஜாக்கிங் செய்பவன் கூட கோட் சூட் போட்டுக்கொண்டிருந்த படுராயலான ஊர். சாலைகளில் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் குறைந்து கார்கள் இல்லை. அங்கிருந்த ஒரு கேக் கடையின் வரிசையில் கூட ஏதோ கேட் வாக்கிற்கு வந்தது போல் மேக்கப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவேளை சாப்பாட்டுக்கு சொத்தையே எழுதிக் கேட்ட மெனுவைப் பார்த்ததும் வண்டியைக் கிளப்பி எஸ்ஸானோம்.

கீழேயுள்ள புகைப்படமும் அங்கு எடுத்ததுதான்.




ஆயில்யன் அண்ணாச்சியின் கட்டளைக்கிணங்க! :))


***


Vanilla Mood என்ற ஜப்பானிய குழுவினரின் இசைத் தொகுப்புகளை கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அட்டகாசமா இருக்கு. நீங்களூம் கேட்டுப் பாருங்க.




***



வெள்ளி, அக்டோபர் 17, 2008

சினிமா - தொடர்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்பதோ முதலில் பார்த்த திரைப்படமோ நினைவிலில்லை. ஆனால் சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தது மிகவும் குறைவு. அப்பா/அம்மாவிற்கு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. (அப்பா கடைசியாக தியேட்டரில் பார்த்த திரைப்படம் 'பூவே உனக்காக'. அம்மா 'பூவே உனக்காக'விற்குப் பிறகு 'சிவாஜி' பார்த்தார்). அக்காக்களோ சித்தியோ மாமாவோ ஊருக்கு வரும்போது அழைத்துச் செல்வார்கள்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். வெகு அரிதாக அப்பா வீடியோ கேசட்/பிளேயர் வாங்கி வந்து படம் பார்த்ததுண்டு. சிறு வயதில் கோடை விடுமுறைகளில் தாத்தா வீட்டிற்கு செல்லும்போது தூர்தர்ஷனின் ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்களை 40-50 பேர் மத்தியில் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து பார்த்த நாட்கள் நினைவிலிருக்கிறது. கூடம் நிரம்பி நின்றுகொண்டே படம் பார்ப்பார்கள். கோடை விடுமுறையிலோ பண்டிகை நாட்களிலோ தாத்தா வீட்டில் அக்கா/சித்தி என்று கூட்டம் சேர்ந்துவிட்டால் வண்டி கட்டிக்கொண்டு வந்தவாசிக்கு வந்து படம் பார்ப்போம்.

சில போலீஸ் படங்களைப் பார்த்து போலீஸாக வேண்டுமென விரும்பியிருக்கிறேன்.

நினைவு தெரிந்து முதன்முதலில் வரிசையில் அடித்து பிடித்து 'மன்னன்' ரேஞ்சுக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்த திரைப்படம் 'உழைப்பாளி'.

நினைவு தெரிந்து முதன்முதலில் முதல் நாள் பார்த்த திரைப்படம் - எஜமான்

முதன்முதலில் எழுதிவைத்து மனப்பாடம் செய்த பாடல் - 'வந்தேன்டா பால்க்காரன்'



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா. வரத் தயங்கிய நண்பர்களை நச்சரித்து அழைத்துச் சென்று வெகுவாக ரசித்த திரைப்படம்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம்கொண்டான்.

நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம். வித்யாசாகர் எப்போ ஃபார்முக்கு திரும்புவார்?


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நினைவு தெரிந்து அரங்கில் பார்த்து பாதித்த முதல் படம் - சேது. நண்பர்கள் பத்து பேருடன் படத்திற்குச் சென்று முதல் பாதி ஆட்டமும் பாட்டமுமாய்ப் பார்த்து இரண்டாம் பாதியில் பேச்சின்றி வெளியில் வந்த நினைவிருக்கிறது. வீட்டிற்கு செல்லும்வரை யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

படம் வெளியான நான்காவது நாளில் ஐம்பதே பேர் இருந்த அரங்கில் பார்த்த - அன்பே சிவம்

தளபதி, அஞ்சலி.

சமீபமாக வந்த திரைப்படங்களில் சித்திரம் பேசுதடி, சுப்ரமணியபுரம்.

இன்னும் நிறைய. பட்டியல் நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட பார்க்கிற எல்லா நல்ல படமும் ஏதோ ஒரு வகையில தாக்கத்தான் செய்யுது.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?


பல படங்களின் ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு காட்சியமைப்புகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். முன்னதுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஜீவா.
பின்னதுக்கு H.ஸ்ரீதர்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கையில் அகப்படும் - கருப்பு பூனையில் ஆரம்பித்து கட்டுரைகள் வரை பாரபட்சமின்றி - அத்தனையும்.


7. தமிழ்ச்சினிமா இசை?

எந்நேரமும். எல்லாவித மனநிலைக்கும்.



8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தூர்தர்ஷனில் மாநில மொழித் திரைப்படங்களும் வெள்ளி/சனிக்கிழமை இந்தி திரைப்படங்களும் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து மொழி பேதமின்றி. நண்பர்களின்/வலைப்பதிவுகளின் பரிந்துரைகளை தவறாமல் பார்ப்பதுண்டு.

அதிகம் தாக்கிய உலகமொழிப் படங்களின் பட்டியல் தாக்கிய தமிழ்ப்படங்களின் பட்டியலைப் போலவே நீளும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'உலக சினிமா' 100 திரைப்படங்களின் பட்டியல் மதி அவர்களின் இந்த பதிவில் இருக்கிறது - உலக சினிமா - எஸ்.ராமகிருஷ்ணன். இதன் அசல் பதிவு அல்வாசிட்டியில் காணலை. இங்கே


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தமிழ்ச்சினிமாவில் வேலை பார்க்கும்/பார்த்த சிலரைப் பர்சனலாகத் தெரியும். அவ்வளவே.

பள்ளி/கல்லூரிக் காலங்களில் - ஏன் இப்போதும் கூட ஒரு திரைப்படத்திலாவது ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற ஆசை உண்டு :D


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


நான் புதிதாக வெளியாகும் தமிழ்ப்படங்களைப் பார்ப்பது சமீபகாலமாக குறைந்துவிட்டது. பழைய படங்களும் வேற்றுமொழிப்படங்களும் உள்ள வரை பிழைப்பு ஓடும்.

தமிழ்நாட்டில் ஓராண்டில் 2011-ல் முதலமைச்சருக்கான போட்டி குறையும். சினிமா மற்றுமின்றி அதுசார்ந்த ஏனைய துறைகளிலும் பின்னடைவு ஏற்படும். சிலர் நிம்மதியாய் இருப்பார்கள். பலர் நிம்மதி இழப்பார்கள். குடும்பத்தில் பிரச்சனை நேரிடலாம். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும். கடன் தொல்லை குறையும். மாமூல் வாழ்க்கை பாதிக்கும். அலுவலக வேலைகளில் இடர்கள் நேரிடலாம். நிண்ட தூர பயணங்கள் அதிகரிக்கும். நடுப்பக்கங்கள் காலியாகும்..ச்சே ராசிபலன் டோன் வந்துடுச்சே.


அழைத்த தம்பியண்ணனுக்கும் ஜிரா அண்ணாச்சிக்கும் நன்றிகள்!


நான் அழைப்பவர்கள்:

நாமக்கல் சிபி
வினையூக்கி
சவுண்ட் பார்ட்டி உதய்
யாத்ரீகன்
தேவ்