என் புத்தக அலமாரியில்..

நன்றி: Sivabalan


கிரிக்கெட்டாக இருந்தாலும் புத்தகமாக இருந்தாலும் ஓசி காஜி அடிக்கற சுகமே தனி தான். கடந்த ஓரிரு வருடங்களாகத் தான் நானாக புத்தகங்கள் வாங்கி சேகரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

கோடை விடுமுறைகளில் சொந்த கிராமத்திற்குச் செல்லும் போது என் ஒன்று விட்ட சித்தப்பா அறிமுகப்படுத்திய ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்கள்தான் என் முதல் வாசிப்பனுபவம். அவர் ஒரு பாலகுமாரன் ரசிகர். அவர் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களை படித்து முடிப்பதற்குள் விடுமுறை கழிந்துவிடும். ஓஷோவை வாசிக்கத் தந்தவரும் இவரே.

முதன்முதலில் நூல்கம் சென்றது மழைக்கு ஒதுங்குவதற்குத் தான். எதற்காகவோ என் அப்பா என்னைத் திட்ட சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டேன். சற்று நேரத்தில் தூரல் வலுத்து மழை பெய்ய அருகிலிருந்த மாவட்ட கிளை நூலகத்தில் நுழைந்தேன். அதன் பின்னர் தான் நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்ப நாட்களில் நூலகம் எனக்கு அந்நியமாகவே இருந்தது. தினசரிகளையும் வாரப் பத்திரிகைகளையும் படித்துவிட்டு கிளம்பிவிடுவேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்ல தயக்கமாகவே இருந்த்து. அந்த தயக்கம் கலைய சில மாதங்கள் ஆனது.

தேவன், புதுமைப்பித்தன்,தி.ஜா, ஜெயகாந்தன்,பிரபஞ்சன் எனப் பல எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்தது அந்த நூலகம் தான். அந்த நூலகத்தில் இருந்து படித்த புத்தகங்களின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டுப் புத்தகம் இப்போது வீட்டுப் பரணில் எங்காவது இருக்க வேண்டும்.

கல்லூரி நாட்களில் பெரும்பாலும் ஆங்கில "Best Seller" நாவல்களும் கவிதைப் புத்தகங்களுமே வாசிக்க உவப்பாயிருந்தன. பெரும்பாலும் ஓசி புத்தகங்கள் தான். சென்னை வந்தபின் British Library துணை இருந்தது.

எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியவர் என் பெரியப்பா. என் பெரியப்பா வீட்டில் இருந்து எடுத்து வந்த திருக்குறளும்(மு.வ) பள்ளியில் பரிசாகக் கிடைத்த பாரதியார் கவிதைகளும் தான் முதலில் எனக்கே எனக்காக கிடைத்த புத்தகங்கள்.

இப்போது சென்னையில் என் அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் 50-60 புத்தகங்களில் சட்டென நினைவுக்கு வருபவை:

சுஜாதா:

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 1
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2
ஸ்ரீரங்கத்து சிறுகதைகள்
கற்றதும் பெற்றதும்
புறநானூறு - ஒரு எளிய அறிமுகம்

கல்கி:

பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
அலை ஓசை

சுந்தர ராமசாமி:

ஜே.ஜே. சில குறிப்புகள்
ஒரு புளியமரத்தின் கதை
காகங்கள் - சிறுகதை தொகுப்பு

எஸ். ராமகிருஷ்ணன்:

உபபாண்டவம்
நெடுங்குருதி
துணையெழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்

ஜெயமோகன்:

விஷ்ணுபுரம்
கொற்றவை
ஜெயமோகன் குறுநாவல்கள்

வைரமுத்து:

வைரமுத்து கவிதைகள்
தண்ணீர் தேசம்

நாளை மற்றொரு நாளே - ஜி. நாகராஜன்
காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

ஷெல்டன்,ஆர்ச்சர்,ஃபோர்சிய்த்களை தவிர்த்து ஆங்கில நாவல்களில் குறிப்பிடும்படியாக:

The Idiot - Fyodor Dostoevsky
To Kill A Mocking Bird - Harper Lee

இவையல்லாமல் கம்பெனியில் வருடாவருடம் தரும் சலுகையை பயன்படுத்தி கணிப்பொறியியல் புத்தகங்களும் :).

இங்கே மாண்டிவிடியோவில் ஆங்கிலப் புத்தகம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. வாங்க தேடிக் கொண்டிருப்பவை:

Crime and Punishment :Fyodor Dostoevsky
The Motorcycle Diaries - Che Guevera

பி.கு: மகேந்திரன், தலைப்பை மாற்றிவிட்டேன் :)



பேருந்து பயணங்களில்...

சில்லறை இல்லையென சிடுசிடுக்கும் நடத்துனரில் ஆரம்பித்து பொதுவான விஷயங்கள் எல்லாப் பயணங்களிலும் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் ஒரு புது அனுபவத்தைத் தருகிறது.

கல்லூரியில் படித்த நாட்களில் காஞ்சி-மதுரை இடையேயான பேருந்து பயணம் அலாதியானது. இரவு முழுவதுமான பயணத்தில் இரண்டு மூன்று இடங்களில் டீ அருந்த நிறுத்துவார்கள். முக்கியமாக விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு மோட்டலில் எல்லாப் பேருந்துகளும் நின்று செல்லும். முதலில் 'சூர்யா' என்ற பெயரில் சூரியனைக் கொண்டிருந்த அந்த மோட்டலின் பெயர்ப்பலகை ஆட்சி மாற்றத்துக்கேற்ப 'JJ' என்ற பெயரில் பச்சை நிறத்துக்கு மாறியது. இப்போது என்ன பெயரில் இருக்கிறதோ தெரியவில்லை. எந்த நேரம் சென்றாலும் குறைந்தது நான்கைந்து பேருந்துகளாவது அங்கு நின்றுகொண்டிருக்கும். அங்கு கண்டிப்பாக நிறுத்திச் செல்ல வேண்டும் என மேலதிகாரியிடமிருந்து வாய்மொழி ஆணை இருப்பதாக ஒரு நடத்துனர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மோட்டல்களில் இருந்து கிளம்பும் வேளைகளில் பயணிகளில் எவராவது ஒருவர் காணாம்ல போயிருப்பார். அவர் வந்து சேரும் அந்த ஓரிரு நிமிடங்களில் பயணிகள் அனைவரின் சகிப்புத்தன்மையும் தெரிந்துவிடும். இரவு முழுவதுமான பயணத்தினால் அடுத்த நாள் வகுப்புக்குச் சென்றதாய நினைவில்லை.

அதன் பின்னர் சென்னையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வாரம் ஒருமுறையாவது காஞ்சிபுரத்திற்குப் பயணம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் பல்வேறு மனிதர்களைக் காணமுடியும். அதிலும் கூட்ட நெரிசல் மிகுந்த நாட்களில் உட்கார இடம் பிடிக்க எத்தனிக்கும் நேரங்களில் ஒரு சராசரி மனிதனிடம் காணப்படும் வேகம் என்னைப் பல நேரங்களில் யோசிக்க வைத்திருக்கிறது. கையில் கிடைத்ததை ஜன்னல் வழியாக சீட்டில் எறிந்துவிட்டு இருக்கைக்கு பட்டா போடுவது நம் பண்பாடாகிவிட்டது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது.

படியில் நின்று பயணம் செய்பவனது கண்கள் அவன் மணமானதைக் காட்டிக் கொடுக்கின்றன.
தொங்கியபடி பயணம் செய்பவன் உள்ளே இருப்பவர்களை நகரச் சொல்வதும் உள்ளே நிற்க இடம் கிடைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த கம்பியை விட்டு அகல முடியாமல் அப்படியே நிற்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து "எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க" என்று கமெண்ட் அடித்த நாற்பது வயது மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டு கண்கள் மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில் தான்.

அழகான இள வயது மகளுடன் பயணம் செய்யும் தந்தையின் அவஸ்தைகளையும், கண்கள் உள்ளடங்கிய முதியவரின் தனிமையையும் இந்தப் பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

மீதி சில்லறை தராமல் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கித் தரும் நடத்துனர் பயணிகளுக்கு வில்லனாகவே தெரிவார். ஒவ்வொரு முறை நடத்துனர் தன்னைக் கடந்து செல்லும் போதும் டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் நம் பயணத்தை சுவாரசியமாக்குவார்கள்.

ஜன்னலோர இருக்கை கிடைக்காத நாட்களில் ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் பொறாமைக்குள்ளாகிறார்கள். அத்தகைய பயணங்களில் அவர்கள் ஜன்னலை மூடினால் அவர்கள் மேல் கோபம் வருவதை தவிர்க்கமுடிவதில்லை.

ஒவ்வொரு பயணத்தின் போதும் யாராவது ஒருவரின் பயணம் அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் தாண்டி நீள்கிறது. முன்பின் சென்றிராத ஊர்களுக்குச் செல்லும் போது இறங்க வேண்டிய நிறுத்தத்தை வந்துவிட்டதா எனத் திரும்பத் திரும்பக் கேட்பதும், இருந்தும் அந்த நிறுத்தத்தை இறங்காமல் விட்டுவிடுவதும் வழக்கமாகிவிட்டது.

மழைக்காலங்களில் பேருந்து பயணங்கள் நீண்டவையாக இருக்கின்றன. ஜன்னல் திரைகள் இறக்கிவிடப்பட்ட பின் பேருந்தினுள் சிறைபட்டுவிட்டது போன்ற அச்சம் எழுகிறது.

எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நாளும் பேருந்து பயணங்களும் அது தரும் அனுபவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.



வினையே உயிர் - 2006 USA - TCE Alumni Meet




Message from TCE principal Dr. V. Abhaikumar:

Dear Alumni,

Greetings to you, your family and your friends.

The vision of our founder Philanthropist Shri Karumuttu Thiagarajan
Chettiar has been our guiding spirit throughout the 50 years of
professional service. The Chairman of the College is Dr. (Mrs.) Radha
Thiagarajan, (former Vice-Chancellor of Alagappa University) and the
Vice-Chairman and Correspondent of the college is Mr. Karumuttu T.
Kannan,

The college has made rapid strides in the areas of Teaching &
Learning, Research and Development, Industry Interaction,
Infrastructure Development and Student related activities.

Our college is planning to organize its Golden Jubilee celebrations
during 2007-08. In commemorating the golden jubilee event, we are
organizing a get together of alumni residing in USA one in east and
another in west. The main objective of the get together is to gather a
feed back from the alumni in the areas of Teaching and Learning
processes, Research & Development, Infrastructure development and
Industry institute partnership.

Date: Aug 26th 2006
Venue: Newark Hilton

Date: Sept. 3rd 2006
Venue: Santa Clara Hilton

Hilton Newark Penn Station Gateway Center -
Raymond Blvd,
Newark, New Jersey,
United States 07102-5107
Tel: +1-973-622-5000

Tentative Agenda:

3:00 PM - 4:00 PM: Social Networking
4:00 PM - 4:15 PM: Welcome Note by Dr. V.Abhai Kumar
4:15 PM - 4:45 PM: Vice-Chairman & Correspondent Address
4:45 PM - 5:30 PM: Keynote Address by Eminent Speaker
5:30 PM - 5:45 PM: Q&A with the Keynote Speaker
5:45 PM - 6:15 PM: Break
6:15 PM - 7:30 PM: Pay It Forward - Breakout sessions
7:30 PM - 8:30 PM: Working Dinner Session plus Summary of Breakout Sessions
8:30 PM - 9:00 PM: Action Items, Next Steps

It would be a great honour, if you could participate in the meeting
and give your valuable suggestions. On behalf of Thiagarajar College
of Engineering, we cordially invite you for the get together.

It would be helpful, if you could kindly confirm your participation by
way of sending a reply to :

principal@tce.edu (or)
mpal@spikesource.com(West) (or)
manian_s@yahoo.com (East) (or)
bala.pitchandi@gmail.com.

Kindly redirect this mail to your friends residing in USA.

Looking forward to your positive response.

Thanks and regards,

Dr. V. Abhaikumar,
Principal,
TCE.



உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி!!



படத்துல இருக்கறது தான் உருகுவேயின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி. சிறுத்தை வாயில் இருந்து நீர் விழுவது தெரிகிறதா??





இதுக்குப் பேரு 'Leyenda del Puma'. Legend of Puma. இந்த சிறுத்தை சிலைக்கு பின்புறம் பாறைகளுக்கு நடுவில் ஒரு நீருற்று இருக்கிறது. அதை சிறுத்தை வாய் வழியாக பைபாஸ் போட்டு பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

மாண்டிவிடியோவில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் 'மினாஸ்' என்ற நகரம். இந்த இடத்தில் தான் இந்த நீரூற்று இருக்கிறது. இங்கு தான் சிறு குன்றுகளையாவது பார்க்கமுடிகிறது. மற்றபடி உருகுவே முழுதும் சம்வெளிப் பிரதேசம் தான்.

இது சிறுத்தைகள் நடமாடும் பகுதி. நம்ம கண்ணுல தான் ஒன்னு கூட படல.

இந்த ஊற்று ஆறாகப் பாய்வதற்கு முன் அங்கேயே 'Salus' என்ற ப்ராண்டில் பாட்டிலில் அடைத்துவிடுகிறார்கள். அருகிலேயே 'Patricia' பீர் ஃபாக்டரியும் உள்ளது.

**************************************************

இன்னொரு காமெடி...

நம்ம ரூம்மேட் கலக்கறாரு. வங்கிக் கணக்கு தொடங்க ஒரு படிவம் கொடுத்தாங்க. ஸ்பானிஷ்ல தான். ஒரு டெம்ப்ளேட்டைப் பார்த்து கட்டங்களை நிரப்பிட்டு வந்தவர் 'Marital status' -ல Single தானே போடனும்னு கேட்டாரு.

"யோவ்..உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதேய்யா" என்று கேட்டதற்கு பதில்...

"என் வொய்ஃப் விஜயவாடா-ல தானே இருக்கா...இங்க நான் தனியா தானே வந்திருக்கேன்"

இது எப்படி இருக்கு!!!



பின்நவீனத்துவக் கனவு

இன்று விடிகாலை 7 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. காரணம் காலையில் வந்த கனவு. நம்ம கனவில் வழக்கமா வருபவர்கள் ;-) வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறதென்றே புரியாதவாறு ஒரு கனவு.

**********************************************

தியேட்டரில் ஏதோ ஒரு செல்வராகவன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாசர் கிரிக்கெட் கோச். தனுஷ் ஒரு பந்தை அடிக்காமல் மிஸ் செய்துவிடுகிறார். உடனே நாசர் கோபமாக "பேட்ட ஒழுங்கா புடிடா பேமானி" என்று தனுஷைத் திட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் தனுஷைப் பார்த்து சிரிக்கின்றனர்.

அடுத்த காட்சி - ஒரு ஆற்றங்கரையில் நாசர் தனுஷுக்கு அறிவுரைகள் கூறுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு ஆங்கிளில் இருந்து படமாக்கப்பட்டிருக்கிறது. ஆற்றின் மறு பக்கத்தில் இருந்து ஒரு ஷாட் அருமையாக இருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள்.

"தமிழ்நாடு,ஆந்திரா, பாலிவுட் எல்லாத்துக்கும் பொதுவா ஒரு விஷயம் இருக்கு. ரஜினி, சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்(?!) யாரும் அவ்வளவு சீக்கிரத்துல பேசமாட்டாங்க" என்கிறார் நாசர்.

உடனே தனுஷ் திரும்பி நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார்.

**********************************************

உடன் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் இந்தியா திரும்பிச் செல்கிறான். நீளமாக முடி வளர்த்திருந்தவன் ஒட்ட முடி வெட்டிக்கொண்டு வந்தான். காரணம் கேட்டதற்கு "தென்னாப்ரிக்கா வழியா போறேன். பேகேஜ் லிமிட் 60 கிலோ தான்....அதான் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியுமென பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

**********************************************

சத்யராஜும் கவுண்டமணியும் சைக்கிள் ரிக்ஷாவில் வந்துகொண்டிருக்கிறார்கள். பின்னால் விவேக் ஒரு வேனின் டாப்பில் அமர்ந்து வருகிறார். மைக்கில் யாருக்கும் புரியாத மொழியில் ஏதோ பேசிக் கொண்டு வருகிறார். யாரும் அவரை கவனிப்பது போல் தெரியவில்லை.

வேனில் இருந்து இறங்கிய விவேக் சீட்டாடச் செல்கிறார். குறைந்தது ஐநூறு ரூபாய் கட்டி ஆட வேண்டும். விவேக் தொடர்ந்து ஜெயித்து ஐநூறு ஐநூறாக அள்ளுகிறார்.

**********************************************

நான் காஞ்சிபுரத்தில் என் வீட்டில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறேன். அமிதாப்புடனும் அபிஷேக் பச்சனுடனும். நான்காவது கை - ஒரு பெண் யாரென்று தெரியவில்லை. அவர்களுடன் வந்தவள். அபிஷேக் பச்சன் சீட்டை வெளியில் காட்டிய்வாறே ஆடுகிறார். அமிதாப் ஈஸியாக ரம்மி சேர்த்துவிட்டார்.

ஆட்டம் முடிந்ததும் அமிதாப் "எனக்கு வயசாகிடுச்சு. என் விக் முடி கூட கொட்ட ஆரம்பிச்சாச்சு. இப்போ தான் என் முதுமையை நான் உணர்கிறேன்" என்கிறார். அவர்கள் கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள்.

**********************************************

தெருமுனையில் என் அப்பா வந்துகொண்டிருக்கிறார். என் அம்மா என்னிடம் "இப்போதெல்லாம் இவர் தெருல அக்கம்பக்கம் எல்லார்கிட்டயும் பயங்கரமா சண்டை போட்றாரு..என்ன-ன்னு கேளுடா" என்கிறார்.

"சமுதாய சீர்திருத்தத்துக்கு தானேம்மா சண்டை போடறாரு. நல்லது தான்" என்கிறேன் நான்.

என் அப்பா எங்கள் வீட்டைத் தாண்டிச் சென்று பக்கத்துவீட்டுக் காரருடன் சண்டையை ஆரம்பிக்கிறார்.

**********************************************

"சாலைப் பணியாளர் பிரச்சனைக்குத் தீர்வு வந்தால் பாமக்-வுடன் உறவு வைத்துக் கொள்வீர்களா?" - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்திடம் கேள்வி கேட்கப் படுகிறது.

"என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லவன் சார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோசமா இருக்கனும்னு தான் சார் சினிமாவை விட்டுட்டு வந்தேன். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைச்சா கூட்டணிக்குத் தயார் சார்" என்கிறார் கேப்டன்.

உடனே ஜிமெயிலில் அவர் இன்பாக்சில் 43 பழைய மடல்கள் 'Unread'-ஆக மாறுகின்றன. இதைக் கண்ட விஜயகாந்த் "இல்லை சார்..எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வோம். இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது" என்றவுடன் அவை மீண்டும் படிக்கப்பட்டவையாக மாறுகின்றன.

பத்திரிகையாளர் கூட்டம் முடிந்ததும் கேப்டன் ஒவ்வொன்றாக பழைய மடல்களைத் திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.

**********************************************

அவ்வளவு தான்ங்க...இதுக்குள்ள விழிப்பு வந்துடுச்சு...ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வந்த கனவு. பாதி புரிந்தது. பாதி என்னவென்றே புரியவில்லை.

புரிஞ்சவங்க விளக்கம் சொல்லுங்கப்பு!!!!



முகமில்லாத காதலி!

எனக்கு
முகமில்லாத காதலி
ஒருத்தி இருக்கிறாள்!

அவளுக்குப்
பல முகங்களைப்
பொருத்திப் பார்த்தேன்!

ஆனால்
உன் முகம்தான்
அழகாகப் பொருந்துகிறது!

இதை அவளிடம்
நான் சொன்ன இரவு
கனவுகளால்
நீண்டிருந்தது!

நாம்
பேசிக் கொண்டிருக்கும்
வேளைகளில்
அவள் தனியே விலகிச்
சென்றுவிடுகிறாள்!

நீ என்னைப் பார்த்துப்
புன்னகைக்கும்
தருணங்களில் அதைக்
கவனியாதவள் போல்
தலை திருப்பிக்கொள்கிறாள்!

என் காதலை
உன்னிடம் சொல்லும்
அந்த நாளில்
அவள்
மரித்துப் போவாள்!

உனக்கு நான்
எழுதும் காதல்கடிதம்
அவளுக்கான
இரங்கற்பா!

நம் இல்லறம்
அவளுக்கு நாம்
செலுத்தும்
அஞ்சலி!



உருகுவே குடியரசு தினம்!

ஜூலை 18 -

இன்று "Jura de la constitucion" - அதாவது உருகுவேயின் குடியரசு தினம். 1830-ஆம் ஆண்டு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்.


பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் அமெரிக்கா முழுதும் சுதந்திரப் போராட்டங்கள் துவங்கியது. இதன் பின் உருகுவே பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவின் பகுதியாக இருந்தது, பின்னர் 1825-இல் மீண்டும் ஒரு புரட்சி ஆரம்பித்து ஆகஸ்ட் 28,1828-இல் தனி சுதந்திர நாடாக உருவானது.

ஹோசெ கெர்வாசியோ ஆர்த்திகாஸ் (Jose Gervasio Artegas) என்ற இராணுவ அதிகாரி இந்த போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். அவருடைய மக்களாட்சி குறித்த கொள்கைகள் தென் அமெரிக்கா தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் சீரான வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. நிலையான அரசாலும் முன்னேறிய சமூக அமைப்பாலும் "தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்றும் அழைக்கப்பட்டது.

இதன்பின் 1973-இல் தொடங்கி 11 வருடங்கள் இராணுவ ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன்பின் 1984-இல் மீண்டும் மக்களாட்சி நிறுவப்பட்டது.

பொருளாதாரத்தில் விவசாய ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கிறது. பிரேசிலும் அர்ஜெண்டினாவும் தான் முக்கிய இறக்குமதியாளர்கள்.அண்டை நாடுகளான இவற்றுடன் எந்த சுணக்கமும் இல்லை. மாடு மற்றும் பன்றி மாமிச உணவுத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் தொகை மொத்தமே முப்பத்தி நான்கு லட்சம் தான். கல்வியறிவு 98%.

மக்களிடையே சமுதாய விழிப்புணர்ச்சி இருக்கிறது. நட்புடன் பழகும் மக்கள்.

ஓட்டுப்பதிவு 90% மேல் இருக்குமாம். யாருக்கும் வோட்டளிக்க விரும்பவில்லையெனில் ஓட்டுச் சீட்டில் அதையும் பதிவு செய்யலாம். அரசு சலுகைகள் பெறும்போது வோட்டளித்துள்ளாரா எனப் பார்த்த பின்பே வழங்கப்படும். அப்படி வோட்டளிக்காவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பொது இடங்களில் புகை பிடிப்பதை அரசு தடை செய்திருக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்திய நாடு. இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார்கள். இப்போதெல்லாம் தகுதிச் சுற்றிலேயே தேறுவதில்லை.

உருகுவே பற்றிய தகவல்களுக்கு:

விக்கிபீடியா
http://www.uruwashi.org
http://fromuruguay.blogspot.com



பரத்

இந்த இடுகையின் ஒன்லைன் - இது என் நண்பனின் ஒருதலைக் காதல் கதை. அதுவும் தோற்றுப்போன காதல். தறுதலையின் ஒரு தலைக் காதல் என அவனைக் கிண்டல் செய்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. காலப் போக்கில் அவனை கிண்டல் செய்வது நின்று அவனைத் தேற்ற முடியாமல் வருந்திய நாட்களும் தான்...

பரத்..என் பள்ளித் தோழன்....அவன் கதை தான் இது.

ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது அரக்க பறக்க சைக்கிள்ல வேக வேகமா வந்தான். வந்து இறங்கும்போதே "ஃப்ரெண்டு..அவளை மறுபடியும் பாத்துட்டேன்டா.. க்ரெக்டா ஒரு வருஷம் கழிச்சு" என்றான்.

எங்களுக்கு யாரை சொல்கிறான் என ஒன்றும் விளங்கவில்லை..ஒரு வருடம் ஞாபகம் இருக்கும் அளவு யாருடா அது என்று எங்களுக்கு பயங்கர குழப்பம்.

"இப்போ குமரகோட்டத்துல இருந்து வர்றேன்டா...அங்க தான் அவளைப் பாத்தேன்"

காஞ்சிபுரத்த்தில் குமரக்கோட்டம் என்ற பெரிய முருகன் கோவில் இருக்கிறது. அங்கு வருடா வருடம் 7 நாட்கள் சஷ்டி பூஜைகள் நடக்கும். அப்போது மக்கள் கோவிலை 108 முறை சுற்றுவார்கள். நம் பசங்களும் பக்திமானாக மாறி சுற்றிவருவார்கள். அதிலும் வெள்ளி,சனி, ஞாயிறுகளில் பக்திவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

இவன் அங்கு தான் அவளைப் பார்த்திருக்கிறான்.

"ஃப்ரெண்டு..கரெக்டா போன வருஷம் இதே சஷ்டி அப்போ குமரகோட்டத்துல தான் அவளைப் பாத்தேன். அதுக்கு அப்புறம் ஒரு வருஷம் அவளை பாக்கவே இல்ல...இப்போ மறுபடியும் இன்னைக்கு பாத்தேன். இதுல இருந்தே தெரியல ஏதோ இருக்குன்னு"

"டேய்...நாம சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய் இருக்கலாம்..அதுக்காக இப்படி கேடு கெட்டத்தனமா யோசிக்காத"

"இல்லடா..எதுக்கு கரெக்டா ஒரு வருஷம் கழிச்சு அதே கோயில்ல பாக்கனும்? நான் சீரியஸா ட்ரை பண்ணப் போறேன்"

இதுக்கு மேல் இவனிடம் பேசி புரிய வைக்க முடியாதென நாங்கள் விட்டுவிட்டோம். எப்படியும் ஒரு வாரத்தில் தெளிந்துவிடுவான் என்று தான் நினைத்தோம். ஆனால் அவன் தீவிரமாகவே இறங்கிவிட்டான்.

அதற்குள் நண்பர்கள் விவரங்கள் சேர்த்துவிட்டார்கள். அவள் பெயர் கிருத்திகாவா கீர்த்தனாவா என்று நினைவில்லை. கிருத்திகா என்றே வைத்துக் கொள்வோம்.

அவள் ஒரு பெண்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவள் ஏரியா பையனுடன் சேர்ந்து அவளைச் சில இடங்களில் பார்த்தத்தாகவும் கூறினர். இருந்தாலும் பரத் மனம் தளராமல் இருந்தான்.


தினமும் பள்ளி முடிந்ததும் அவள் வரும் வழியில் ஒரு முச்சந்தியில் காத்திருப்பான். பின் அவள் பின்னாலேயே அவள் வீடு வரை சைக்கிளில் செல்வான். அவள் வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. பாலாற்றைத் தாண்டி தினமும் ஐந்து கிலோமீட்ட்ர் அவள் பின்னால் செல்வான்.

அவளுடன் சுற்றிக்கொண்டிருந்ததாக சொல்லப்பட்டவன் பரத் முன்பு படித்த பள்ளியில் ஒன்றாகப் படித்த்வன். பெயர் பிரபு. பரத் அவனுடன் தன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான்.

தினமும் அவள் பின்னால் சுற்றுவது அல்லது பிரபுவுடன் இருப்பது என பரத் எங்களுடன் இருக்கும் நேரம் குறைந்துபோனது. நாங்கள் அவளைப் பற்றி ஏதாவது கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவான் இல்லாவிடில் கிளம்பிச் சென்றுவிடுவான்.

அவளின் வீட்டிற்கு எங்கள் வீட்டைத் தாண்டி தான் செல்ல வேண்டும். சில நாட்கள் மாலையில் அவள் வீடு வரை சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வான். அவன் வருகை அதிகமாகவே என் அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது. அவள் பின்னால் இவன் செல்வதையும் அம்மா பார்த்திருக்க் வேண்டும்.

"என்னடா..அவன் தினம் எங்கே போய் வர்றான்?? என்ன பண்றான்?" என்று என்னிடமே கேட்டார்கள். நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் ஏதோ உளறி சமாளித்தேன்.

ஒரு மூன்று மாதங்களுக்கு இதே கதை தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் அவன் வீட்டிற்கு அடுத்த தெருவில் வந்து கொண்டிருந்த போது நான்கு பேர் சேர்ந்து பரத்தை அடித்துப் போட்டு போய்விட்டனர். அவர்கள் யாரென அவனுக்கு அடையாளமும் தெரியவில்லை. வீட்டில் நண்பனின் பைக்கில் விழுந்துவிட்டதாகப் பொய் சொன்னான். அவளுடைய சித்தப்பாவின் வேலையாக இருக்குமென எங்களுக்கு சந்தேகம்.

அதன்பின் ஒரு நாள் பிரபு பரத்திடம் வந்து அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்துவிடுமாறும் அவள் வீட்டில் எல்லாம் தெரிந்துவிட்டதாகவும் சொன்னான். இருந்தாலும் இவன் அவள் பின் செல்வதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது தினகர் வேகவேகமாக வந்து பரத் தன் கையைக் கிழித்துக் கொண்டதாகவும் ரத்தம் அதிகமாக வீணாகி மருத்துவமனையில் இருப்பதாகவும் சொன்னான்.

நாங்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு சென்றால் அவன் சிரித்துக் கொண்டே "ஒன்னும் இல்ல ஃப்ரெண்டு..நீங்க கிளம்புங்க..ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று காரணத்தைச் சொல்லாமல் எங்களை அனுப்பிவிட்டான். அவன் அம்மா உடனிருந்ததால் எங்களால் விவரமாக ஏதும் கேட்க முடியவில்லை.

காரணத்தை தினகர் சொன்னான். அதற்கு முன் தினம் அவள் பரத்திடம் பேசி இருக்கிறாள். தன் பின்னால் வருவதை நிறுத்திவிடுமாறும் தனக்கு இதில் சற்றும் விருப்பம் இல்லையென்றும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். பரத் அப்போதே அழுததாகவும் அவனைத் தேற்றி வீட்டில் விட்டதாகவும் தினகர் சொன்னான். வீட்டிற்குச் சென்றதும் இதுபோல் செய்து கொண்டிருக்கிறான். அவனை அறைய வேண்டும் போல் ஆத்திரம் வந்தது.

சாதாரண நாட்களிலேயே வீட்டிற்குச் சென்று அவனனப் பார்க்க முடியாது. அவன் உள்ளே இருக்கும்போதே இல்லையென சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்போது வாய்ப்பே இல்லை. அவனாக வந்தால் தான் உண்டு.அவன் தேறி வரக் காத்திருந்தோம்.

ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வந்தான். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது அவனிடம் பேசினோம்.

"இதை ஒழுங்கா இதோட விடுடா..ஆரம்பத்துல இருந்து இத தான் சொல்லிட்டு இருக்கோம். இப்ப்வாவது காது கொடுத்துக் கேளு பரத்..எல்லாம் சினிமால நடக்கிற மாதிரி ஈஸியா நடக்காதுடா...இங்க பாரு"

பரத் தலையை நிமிர்த்தி எங்கள் பேச்சை நிறுத்தினான்.

"விடு ஃப்ரெண்டு, நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் எனக்கு மூளைல எதுவும் ஏறாது. அதே மாதிரி நீங்க என் கூடவே இருந்தாலும் நான் படற அவஸ்தை உங்களுக்கு புரியாது"

சொல்லிக்கொண்டே கிளம்பிச் சென்றுவிட்டான்.

இதற்குப் பின் அவன் பேசுவது குறைந்து போனது. முன் போல் விளையாட வருவதோ ஊர் சுற்றுவதோ குறைந்துபோனது. பள்ளி முடிந்ததும் காஞ்சியிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்தான். தண்ணியும் தம்மும் அதிகமானது. காலப் போக்கில் ஓரளவு தேறி வந்தாலும் பேச்சில் ஒரு சோகம் எப்போதும் இருந்தது. அவன் காதலிக்க ஆரம்பித்தபோது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்த எங்களால் அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசக் கூட முடியவில்லை.

இன்றும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சில நேரங்களில் அவளைப் பற்றி புலம்புவதாக நண்பர்கள் சொல்கின்றனர். இப்போது அவள் என்ன செய்கிறாள், எங்கு இருக்கிறாள் என எங்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அவனிடம் கேட்கும் தைரியம் எங்கள் யாருக்கும் இல்லை.



அந்த இரவு

நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்த நாட்கள். டீயும் சிகரெட்டுமே வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பகல் பொழுதுகளில் நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதும் ஏற்படும் அமைதி சுயவிரக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கும். தனிமை மனதைக் கவ்வும். மதிய நேரங்களில் பசி மயக்கமும் அரைத் தூக்கமும் என் பொழுதைக் கழிக்க உதவிய காலம் அது.

ஒரு நாள் இரவு 11 மணிக்கு பி.எஸ்.என்.எல்-இல் வேலை செய்து கொண்டிருந்த நண்பன் சைட்டுக்கு கிளம்பினான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த என்னைப் பார்த்து "இங்க அசோக் நகர் சைட் தான்....கூட வர்றியா மக்கா....அரை மணி நேரத்துல வந்துறலாம்" என்றான். எவ்வளவு நேரம் தான் இருட்டை வெறித்துப் பார்த்து படுத்திருப்பது என நானும் கிளம்பினேன்.

உதயம் அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு சைட்டுக்குச் சென்றோம். அங்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அவனுடைய சைட் மேனேஜரும் வரவில்லை. அவர்களை நொந்துகொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போது போலிஸ் பேட்ரோல் ஜீப் வந்து எங்கள் அருகில் நின்றது.

"இங்க எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க"

- முன்னால் அமர்ந்திருந்த எஸ்.ஐ கேட்டார்.

"பி.எஸ்.என். எல் ஸ்விட்ச் சைட் சார்..ஆளுங்க இன்னும் வரல..வெயிட் பண்ணிட்டு இருக்கோம்"

"ஐடி கார்டை காட்டு"

என் நண்பன் தன் கார்டை எடுத்துக் காட்டினான்,. நான் கல்லூரி ஐடி கார்டாவது காட்டலாம் என பேண்டைத் துழாவினால் அதுவும் இல்லை. கார்ட் பர்ஸில் இருக்கிறது. பர்ஸ் வேறு பேண்டில் இருக்கிறது.

"காலேஜ் ஐடி கார்ட் வீட்டுல இருக்கு சார். நான் இப்பதான் வேலை தேடிட்டு இருக்கேன்"

"லைசென்ஸ் வச்சுருக்கியா"

"என் ஃப்ரண்டு தான் சார்..ஒன்னா தான் தங்கி இருக்கோம்..துணைக்கு கூட்டிட்டு வந்தேன் சார்" - இது என் நண்பன்.

"இருப்பா..எதுனா ஐடெண்டிபிகேஷனுக்கு வேணும்ல"

"இல்ல சார்..எல்லாமே வேற ஒரு பேண்டல இருக்கு"

"சரி ஜீப்ல ஏறு"

"சார் இல்ல சார்...இப்ப நான் போய் வேணா எடுத்துட்டு வந்துடறேன் சார்"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ஜீப்ல ஏறு. முத்து இவரை ஜீப்ல ஏத்து. நீ ஐடிகார்டை எடுத்துட்டு வந்து ஸ்டேஷன்ல காட்டிட்டு வந்து கூட்டிட்டு போ"

'பணம் வேணும்னா கேட்டு வாங்கிட்டுப் போகாம எதுக்கு இப்படி உயிர வாங்கறாங்க' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே ஜீப்பில் இருந்து இறங்கிய கான்ஸ்டபிள் என்னை தள்ளிக்கொண்டே ஜீப்பில் ஏற்றிவிட்டார்.

ஜீப்பில் இந்தப் பக்கம் கஞ்சா குடிக்கி, இந்த பக்கம் பிக் பாக்கெட். என் நண்பன் எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே ஜீப்பைக் கிளப்பிவிட்டார்கள்.

அந்த ஏரியா மொத்தமும் சுற்றிவிட்டு எஸ்.ஐ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டார். அவர் வீடாக இருக்கவேண்டும்.

ஸ்டேஷனுக்குச் சென்றதும் மற்ற இருவரிடமும் ஒரு கையெழுத்தையும் கைநாட்டையும் வாங்கிக்கொண்டு செல்லில் அடைத்துவிட்டார்கள். நான் வாசல் அருகிலேயே சுவரோடு ஒட்டி நின்றுகொண்டிருந்தேன்.

ஏட்டிடம் "சார், இப்போதான் சார் வேலை தேடிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஐடி கார்டை இப்போ கொண்டுவந்துடுவான் சார்" என்று கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஏட்டும் பாவப்பட்டு மூலையில் இருந்த பெஞ்சில் உட்காரச் சொன்னார். பத்து நிமிடத்தில் என் நண்பன் வீட்டிற்குச் சென்று என் கல்லூரி ஐடி கார்டை எடுத்து வந்துவிட்டான். அதை வாங்கிப் பார்த்த ஏட்டு திரும்பி என்னைப் பார்த்துவிட்டு விட்டத்தைப் பார்த்து ஏதோ யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

"எதுக்கும் எஸ். ஐ ஐயா வந்துடட்டும். ஏன்னா அவரைக் கேக்காம உன்னை அனுப்பிட்டா என் பேரு ரிப்பேராயிடும்..புதுசா வந்த் ஆளு வேற"

"காலைல இண்டர்வ்யூ வேற இருக்கு சார்"

"அதெல்லாம் கரெக்டுப்பா..ஆனா அவரு மூனு பேர் ஏத்தியாந்ததுல ஒருத்தன் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது? இப்ப வந்துடுவாரு வெயிட் பண்ணு" என்றபடியே அவர் சீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டார்.நண்பனை வெளியே காக்க வைத்துவிட்டார்கள்.

மணி இரண்டு. எஸ்.ஐ இன்னும் வந்த பாடில்லை. இப்படி வந்து உட்கார்ந்திருப்பதற்கு தெரிந்தால் வீட்டில் என்ன நடக்கும் என நினைக்கும்போதே தலை சுற்றியது. நண்பர்கள் ஓட்டுவதற்கு இன்னொரு விஷயம் கிடைத்துவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதோ. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. ஒரு வேளை என் மேல் தான் தப்போ என முதல்முறையாக எனக்கு என் மேலிருந்த நம்பிக்கை தளர்ச்சியடைந்தது.

சிறிது நேரம் கழித்து என்னுடன் ஏற்றிவரப்பட்ட தாடி ஒருவன் ஏட்டைக் கூப்பிட்டான். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டார்கள். "இந்த அறிவு அங்கேயே வந்துருக்கனும்..சரி கிளம்பு" என செல்லைத் திறந்து அவனை அனுப்பிவிட்டார். சீட்டிற்கு வந்ததும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்.

அவன் வெளியே சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் உள்ளே வரும்போதே பர்ஸைக் கையில் கொண்டுவந்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாதவர் போல ஏட்டு அவனை வெளியே காத்திருக்குமாறு அனுப்பிவிட்டார். அன்றைய தேவை பூர்த்தியாகிவிட்டது போலும். ஏதோ அழுக்கேறிய கோப்பை எடுத்து புரட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆளாளுக்கு சேர் டேபிள்களை இழுத்துப் போட்டு உறங்க ஆரம்பித்து விட்டார்கள். மூன்று மணி நேரம் ஸ்டேஷன் சுவற்றையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்.

சரியாக ஐந்தரை மணிக்கு எஸ்.ஐ வந்து சேர்ந்தார். அலாரம் வைத்து பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது அவர் கண்களில் தெரிந்தது,

உள்ளே வரும்போதே பெஞ்சில் நான் அமர்ந்திருப்பதைக் கண்டவர் "இன்னும் ஏன்யா இவனை உட்கார வச்சிருங்கீங்க" என என்னை அப்போதே அவர் போகச் சொல்லி நானாக இங்கு இருக்கும் தோரணையில் கேட்டார்.

"இல்ல சார்..நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணோம்...சரி நீ கிளம்புப்பா..சார் ஐடி கார்ட் பாக்கறீங்களா சார்" - ஏட்டு அவர் டேபிளில் இருந்த என் கார்டை எடுத்து வந்து காட்டினார்.

அதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார். ஏட்டும் என்னிடம் கார்டை கொடுத்துவிட்டு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவர் பின்னாலேயே சென்றுவிட்டார்.

ஒருவ்ழியாக வெளியே விட்டார்களே என நானும் என் நண்பனுமாக வீடு திரும்பினோம். ஒரு பெட்டி கேஸோ எய்ட்டியோ போடாமல் விட்டது என் நல்ல நேரம்.

அன்று என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதால் சினிமாவில் வருவது போல் வாழ்க்கையில் பெரிய மாற்றமோ பாதிப்போ ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு மன வேதனை இருந்து கொண்டு தானிருக்கிறது.

ஜீப்பில் ஏற்றும்போதோ இல்லை ஸ்டேஷனுக்கு சென்ற பிறகோ திருவல்லிகேணியில் எஸ்.ஐயாக இருந்த என் மாமாவின் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கலாம். அதுவும் கூட தோன்றவில்லை. ஒருவேளை ஒரு வேலையில் இருந்திருந்தால் தைரியமாக் சொல்லி இருந்திருப்பேன். அப்போதும் இதை முதலிலே சொல்லியிருக்கலாமே என ஒப்புக்குச் சொல்லிவிட்டு அனுப்பியிருப்பார்கள்.

இந்த விஷயமும் என் நண்பர்கள் நான்கைந்து பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன இருந்தாலும் ஸ்டேஷனில் ஒரு இரவைக் கழித்தவன் எனத் கொஞ்சம் கேவலமாகத் தான் பார்ப்பார்கள். இல்லாவிட்டாலும் எனக்கு அப்படித் தோன்றும். தோன்றி இருக்கிறது.

இத்தனை நாட்கள் கழித்து உங்களிடம் கொட்டிவிட்டேன். நீங்களும் இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.



நாகை சிவாவின் கட்டளைக்கிணங்க!!

சீறும் புலி நாகை சிவாவின் ஆணையை(ஏலேய்! கப்பி,
உன் காலை கொஞ்சம் காட்டு.....)
ஏற்று அன்புத் தம்பி என் காலைக் காட்டுகிறேன்...



அப்பாடா..அண்ணன் ஆசையை நிறைவேத்தின அப்புறம் தான் நிம்மதியா இருக்கு..



"ஒரு புளியமரத்தின் கதை"யிலிருந்து

"...என்னுடைய பங்கு செலுத்தப்படுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாதவாறு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதானது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருந்த சமயம் அது. இதன் விளைவுதானோ என்னவோ, நண்பர்களுடன் நானும் தாமு சம்பவத்தின் விளைவுகளிலும், அது சம்பவமான செய்திகளிலும் மிகுந்த அக்கறை செலுத்தலானேன். மாலை வேளைகளில் பஜார் ஓரங்களில் நின்று கூடிக்கூடிப் பேசும் குழுக்களில் நானும் வேண்டாத விருந்தாளியாக ஒண்டிக்கொண்டேன். என் மீது அங்கு கவிந்த பெரியவர்களின் அலட்சியப் பார்வையை அப்பொழுது அவ்வளவாக எனக்கு பொருட்படுத்தத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுக்கு எட்டாத செய்திகளைச் சேகரித்து அவர்களுக்கு அவற்றை முதலில் அறிவிப்பவனாய் இருக்கவேண்டுமென்றே அப்பொழுது ஆசைப்பட்டேன். இது போன்ற விவகாரங்களைப் பேசும்போது பெரியவர்களுக்கு ஏற்படும் முகபாவங்களைக் கூர்ந்து கவனித்து நானும் முடிந்த வரையிலும் அம்முகபாவங்களை என் முகத்திலும் மிளிர விட்டுக் கொண்டேன். அவர்களுடைய வார்த்தைச் சேர்க்கைகளையும் அபிப்ராயங்களையும் என்னுடைய சரக்குப் போலவே எங்கும் பிரஸ்தாபித்துக் கொண்டு சென்றேன். ஒரு பொறுப்புள்ள மனிதனாகவும், சீரழியும் நிலைமைகளுக்குக் கவலைப்படுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டியது எனக்கு அந்த வயசில் ஏதோ ஒருவிதத்தில் தேவையாக இருந்தது.

இதனால் தாமுவுக்கும் காதருக்கும் ஏற்பட்ட விரோதத்தின் பூர்விக வரலாற்றையும், அதையொட்டி அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்பட்டிருந்த உரசல்களையும் பலர் வாய்மூலமாகவும் சிறுகச்சிறுகச் சேகரித்துக் கொண்டு வந்தேன். அன்றாட சேகரங்களை, பின்கட்டில் பெரிய மனிதனாய் அமர்ந்து என் சகோதரிகள் முன்னால் அவிழ்க்கையில் என்னை அறியாமலே கொஞ்சம் மிகைப்படுத்தியே அவிழ்த்துக் கொண்டு சென்றேன். வீர சாகசங்களை சோடைதட்டிப் போகாமல் சேர்த்தும் சரிக்கட்டியும் சொல்லலானேன். ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்ததாயும், இருந்த்தாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.

இப்பொழுது பல வருடங்களுக்குப் பின்னால் அந்தக் கதையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்தக் கதையயையெல்லாம் உங்களுக்குச் சொல்கிறபோதும் அந்த மனோபாவத்திலிருந்து அல்லது பலஹீனத்திலிருந்து, பூரண விடுதலை தேடிக் கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலக வழக்கைக் கற்பனைக்குள் வகைப்படுத்துவது சாத்தியமற்ற காரியமாக இருக்க, கற்பனைக்குள் உலகத்தைத் திணித்துத் திருப்தி தேடிக்கொள்வதே நாம் செய்யக்கூடியதாய் இருக்கிறது. கடைசி வரையிலும் நம் முயற்சிகள் அனைத்தும் செருப்புக்குக் காலை வெட்டுகிற காரியமாகத்தான் இருக்கும் போலும்...."

- சுந்தர ராமசாமி, ஒரு புளியமரத்தின் கதை.



மரணம்! - சிறுகதை

'என்ன எழவுடா இது...மனுஷனுக்கு ஒரு மரியாதை இல்லாம போயிடுச்சு... நாளைக்கு காலைல கல்கத்தா போறதுக்கு இப்போ 8 மணிக்கு சொல்றானுங்க..விவஸ்தை கெட்டவனுங்க' எனப் புலம்பிக் கொண்டே தெரு முனையில் இருக்கும் ஆட்டோ
ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்திருந்தேன்.

"காலைல அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும்"

இருந்த 2 ஆட்டோ காரர்களும் தங்கள் பார்வையிலேயே யார் போவது என முடிவு செய்து
கொண்டதும் ஒருவர் "போலாம் சார்..காலைல வீட்டாண்ட வந்துடறேன்" என்றார்.

"எவ்ளோ கேக்கறீங்க"

"கொடுங்க சார்..காலைல எழுந்து வரணும். 180 கொடுங்க"

"வடபழனில இருந்து ஏர்போர்ட் போக 180 ரூபாயா?? டாக்ஸியே இத விட கம்மியா வருமே"

"காலங்காத்தால சார்..ரிடர்ன் வரும்போது காலியா தான் வரனும்..150 கொடுங்க...பகல்லயே 120க்கு போறோம்"

"சரி காலைல கரெக்டா அஞ்சு மணிக்கு வந்துடுங்க'" என உறுதி செய்துவிட்டு என் பேரம் பேசும் திறமையை நொந்தபடியே வீடு திரும்பினேன்.

காலையில் ஆட்டோகாரரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பத்து நிமிடம் காக்க வைத்து அரக்க பறக்கக் கிளம்பினேன்.

மார்கழி மாத குளிர் லேசாக நடுங்க வைத்தது. டிரைவர் டிராபிக் அற்ற அதிகாலை சாலையில் ஆட்டோவை விரட்டிக் கொண்டிருந்தார். வெறிச்சோடிய சாலைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு சீக்கிரம் ஊர் திரும்ப முடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்போர்ட் உள்ளே நுழைந்தவுடன் "சார், மயக்கம் வர மாதிரி இருக்கு...ஒரு நிமிஷம் இருங்க" என்றப்டியே டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்..

"என்னங்க..ப்ரஷர் இருக்கா?? என்ன பண்ணுது"

"தெரில சார்..ப்ரஷர்லாம் இல்ல...மயக்கமா வருது..ஒன்னும் இல்ல சார் ஒரு ரெண்டு நிமிஷம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சீட்டில் சரிந்து விழுந்தார்.

'என்னடா வம்பாப் போச்சே'னு நினைச்சுக்கிட்டே கண்கள் சொருகிக்கிடந்தவரை .தட்டி எழுப்பினால் ஒரு அசைவும் இல்லை.தோளைப் பிடித்து உலுக்கினால் தலை சரிந்தது.

அதுக்குள்ள ஏர்போர்ட் டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டிரைவர் இருவர் வந்தனர்.

"என்ன சார் ஆச்சு"

"தெரியலீங்க..நல்லா ஓட்டிட்டு வந்தாரு. உள்ள வந்ததும் மயக்கமா வருதுன்னு ஓரங்கட்டினாரு...அப்படியே சரிஞ்சுட்டாரு"

"உயிரோடதாம்பா இருக்காரு" இன்னொருத்தர் டிரைவரை செக் பண்ணி சர்டிபிகேட் கொடுத்தார்.

"இங்க ஏர்போர்ட் உள்ள டாக்டர் இருப்பாங்களா?"

"தெரியல சார். மெடிக்கல் ஷாப் ஒன்னு இருக்கு"

"கண்டிப்பா டாக்டர் இருக்கனும்ங்க"

அதற்குள் இன்னொரு ஆட்டோகாரர் எங்களைப் பார்த்து நிறுத்தினார்.

"என்னாச்சு?"

"திடீர்னு மயங்கி விழுந்துட்டாரு"

"எந்த ஏரியா ஆட்டோ?"

"வடபழனிங்க..குமரன் காலனி..இஙக உள்ள யாருனா டாக்டர் இருப்பாங்களா? இல்ல பக்கத்துல எதுனா ஆஸ்பிடல் இருக்கா? நீங்க இந்த ஆட்டோவ ஓட்டிட்டு வர்றீங்களா?"

"தெரியல சார்..உள்ள சவாரி வெயிட்டிங்..போகனும் சார்" சொல்லிக்கொண்டே ஆட்டோவை எடுத்து கிளம்பிட்டான்.

"உங்களுக்கு எப்ப சார் ப்ளைட்டு?"

"ஆறரைக்குங்க...இன்னும் 40 நிமிஷம் இருக்கு"

"நீங்க உள்ள போய் டாக்டர் யாருனா இருக்காங்களா விசாரிங்க சார்..நாங்க இவரைப் பாத்துக்கறோம்".

மூன்று பேருமாக சேர்ந்து டிரைவரைத் தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்தோம். பையைத் தூக்கிட்டுப் போறதா இல்ல அங்கயே போட்டுட்டுப் போறதானு ஒரு செகண்ட் யோசிச்சு அவங்களையே பாத்துக்க சொல்லிட்டு குறுக்கால ஏர்போர்ட் உள்ளே ஓடினேன்.

'ப்ளைட்ட விட்டுட்டா ஆபிஸ்ல என்னடா பதில் சொல்லுவே?'னு உள்ள இருந்து பட்சி கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுச்சு.

மெடிக்கல் ஷாப்பில் வெளியே விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கண்ணாடிக் கதவின் வழியே பார்த்தால் உள்ளே ஒருவர் இழுத்து போர்த்து தூங்கிக் கொண்டிருந்தார். கதவைத் தட்டி அவரை எழுப்பி இங்கு டாக்டர் இருப்பாரா எனக் கேட்டதற்கு அந்த கட்டிடத்தின் மறுமுனையைக் காட்டிவிட்டு மீண்டும் அவர் கனவை கன்ட்டினியூ பண்ண போயிட்டார்.

அவர் கைக்காட்டின இடத்துக்கு ஓடினா அங்க யாரும் இல்ல. டாக்டர் பேரைப் போட்டு ஒரு போர்ட் மட்டும் இருக்கு. உள்ளே யாரும் இருக்க மாதிரி தெரியலை. இன்னைக்கு நமக்கு ஆப்படிக்கற முடிவோட் தான் எல்லாரும் கிளம்பியிருக்காங்க-னு நொந்துகிட்டே திரும்பினா பின்னாடி ஒரு செக்யூரிட்டி முறைச்சு பாத்துட்டு நிக்கறாரு.

"ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டாரு. இங்க டாக்டர் இல்லையா??"

"இருந்தா இங்க தான் இருப்பாரு..நீங்க ஏர்போர்ட் மேனேஜரைப் போய் பாருங்க' னு மறுபடி எதிர் மூலைக்கு கையைக் காட்டினார். நல்ல வேளையாக மேனேஜர் அவர் அலுவலகத்தில் இருந்தார்.

"சார் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்துட்டார். டாக்டர் அங்க ரூம்ல இல்ல"

"என்ன ஆச்சு?? டிரைவர் இப்ப எங்க இருக்காரு.."

"அங்க எண்ட்ரன்ஸ்ல இருக்காரு சார்..ப்ரஷ்ரா இருக்கும்னு நினைக்கறேன்"

"அங்க யாருனா இருக்காங்களா?"

"டாக்ஸி டிரைவர் ரெண்டு பேர் இருக்காங்க"

"அப்ப ஒன்னு பண்ணுங்க...அவங்களை ஓட்ட சொல்லி எப்படியாவது ஆட்டோவை இங்க கொண்டுவந்துடுங்க..ஏன்னா டாக்டர் அஙக வந்து மறுபடி அவரை இங்க கொண்டு வரதுக்கு லேட் ஆகும். நேரா அங்க டாக்டர் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டா சீக்கிரம் ட்ரீட் பண்ணலாம்'"

அடப்பாவிகளா இன்னைக்கு ஆட்டோவும் ஓட்ட வச்சுடுவாங்க போல-னு நினைச்சுக்கிட்டே மறுபடி இங்க ஓடி வந்தேன்.

அங்கே இன்னொரு ஆட்டோ காரர் வண்டிய நிறுத்தி டாக்ஸிகாரங்க கிட்ட பேசிட்டு இருந்தார்.

"உள்ள டாக்டர் இருக்காருங்க...இவரை அங்கேயே கூட்டிட்டு வரச் சொன்னாங்க..நீங்க இந்த வண்டியை ஒட்டிட்டு வர்றீங்களா" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே "என் வண்டியை இங்க நிறுத்திட்டு போனா ஃபைன் போட்ருவாங்க சார்" என்றபடியே அவன் ஆட்டோவை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டான்.

அதுக்குள்ள அந்த டாக்ஸி டிரைவர்ல ஒருத்தர் அவரே ஒட்டறேன்னு வண்டியக் கிளப்பினார். இருக்கிற பிரச்சனை போதும் ஆட்டோவையும் கொண்டு போய் எங்கயாவது முட்டிடக் கூடாதுனு நினைச்சுக்கிட்டே பையைத் தூக்கிட்டு மறுபடி குறுக்கு வழில ஓடினேன்.

சொன்ன மாதிரியே ஏர்போர்ட் மேனேஜர் டாக்டரோட காத்துக்கிட்டிருந்தார். ஆட்டோவில் இருந்து டிரைவரைப் பிடித்து இறக்கு அங்க கீழேயே சுவரோரம் படுக்க வைத்ததும் டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார்.

"இவர் எந்த ஏரியாங்க?"

"வடபழனி சார்"

"எப்படியாவது அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியுமா?'

"என் ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்றேன் சார். எங்க வீட்டு பக்கத்து ஸ்டாண்ட் தான்" என்றபடி என் நண்பனை அழைத்து நிலைமையை விளக்கி அங்கு தகவல் சொல்லும்படி கூறினேன்.

"உங்களுக்கு எந்த ஃப்ளைட்?? லேட் ஆகிடப்போது"

"6.30 சார்..இன்னும் 20 நிமிஷம் இருக்கு"

"நீங்க கிளம்புங்க..இனி நாங்க பாத்துக்கறோம்"

நான் அந்த டாக்ஸி டிரைவர்களிடம் திரும்பி "ரொம்ப தாங்க்ஸ் பாஸ்..இவருக்கு ஆட்டோ பணம் தரனும்" என்றபடியே பர்ஸை எடுத்தேன்.

"இருக்கட்டும் சார். நல்லவேளை ஏர்போர்ட் உள்ளே வந்து மயங்கினார். வர்ற வழில GST ரோட்டிலேயே மயங்கியிருந்தா ஒன்னுமே பண்ணி இருக்க முடியாது...மேனேஜர்ட்ட கொடுத்துடுங்க..அவர் கொடுத்துடுவார்" என்றார் டாக்ஸி.

நான் இருநூறு ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்தபடியே மீண்டும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.

மேனேஜர் என்னுடனேயே வந்து வரிசையில் நிற்காமல் நேரத்துக்கு செக்-இன் செய்ய உதவினார்.

நல்ல்படியா அவரை டாக்டர்ட்ட சேர்த்துட்டு நேரத்துக்கு ஃப்ளைட் பிடிச்சாச்சுன்னு திருப்தியுடன் கிளம்பினேன்.

கல்கத்தா சென்றதும் அங்கு வேலை பளுவில் இந்த சம்பவத்தை மறந்தாகிவிட்டது. இடையில் ஒரு முறை ந்ண்பனிடம் செல்லில் பேசும் போது அவனிடம் கேட்டதற்கு அவனுக்கும் அவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

இருபது நாள் கழித்து திரும்பி வந்தேன். வீட்டிற்கு வந்து இறங்கும் போதே ஆட்டோ ஸ்டாண்டைப் பார்த்தேன். யாரும் இல்லை.

அனறு மாலை ஸ்டாண்டில் பேரம் பேசிய போது இருந்த இன்னொருவர் இருந்தார். போய் விசாரிக்கலாம் என சென்றேன்.

"அன்னைக்கு ஏர்போர்ட்ல மயங்கி விழுந்தாரே..அவர் இப்போ எப்படி இருக்கார்?"

"நீங்க தானே சார் அன்னைக்கு ஏர்போர்ட் சவாரி போனது?"

"ஆமாங்க..அன்னைக்கு நைட் கேக்க வந்தப்போ நீங்க கூட இருந்தீங்களே"

"ஆமா சார்..அவன் இறந்துட்டான் சார்"

"என்னங்க சொல்றீங்க"

"ஆமா சார்..உங்கள செவ்வாய் கிழமை உட்டுட்டு வந்தான்ல..அதுக்கு அடுத்த சனிக்கிழமை செத்துட்டான் சார்"

"எப்படிங்க..என்னாச்சு?"

"ஹார்ட் அட்டாக்ங்க..ரெண்டாவது அட்டாக்..அன்னைக்கு உங்க ப்ரண்ட் வந்து சொன்னதும் போய் கூட்டியாந்தோம். அதுக்கப்புறம் ரெண்டு நாள் பெட்ல இருந்துட்டு வீட்டுக்கு வந்தான். வந்தும் வண்டி எடுக்கல..அதுக்குள்ள இன்னொரு அட்டாக்...மொத அட்டாக் வந்தப்புறமும் அலைச்சல் குறைக்கல...ரெண்டு பொட்டைப் ப்ள்ளளங்க வேற சார்...உடம்பு ஒத்துக்கலன்னா வேலைய குறைச்சுக்கனும்..அதுக்கப்புறம் தானே சார் பணம்..அன்னைக்கு கூட மொதல்ல நான் தான் வரேன்னேன். அவனா தான் போறேன்னான்.."

"என்னங்க...சரியாயிட்டிருப்பாரு..வந்து பாக்கலாம்னு வந்தேங்க..இன்னைக்கு தான் ஊருல இருந்து வந்தேன்'

"நீங்க இல்லைனா அன்னைக்கே போய் சேர்ந்திருப்பான் சார்...ரொம்ப தாஙக்ஸ் சார் அன்னைக்கு அவனை பத்திரமா டாக்டர்ட்ட சேர்த்து விட்டதுக்கு"

நான் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வீடு நோக்கி நடந்தேன்.